16ஆம் நாள் காரியம் நல்லபடியாக முடிய உறவுக்காரர்களும் மெதுவாக கலைந்து சென்றனர்.
அவ்வீட்டாட்கள் மட்டும் இருக்க மஹதி பதட்டத்துடன் தன் அன்னையே தேடி வந்தாள்.
“அம்மா அக்காவை காணோம்மா.” என்று கூற அமராவதியோ
“அவ உள்ளே தான் இருப்பா. இல்லைனா சிக்னல் கிடைக்கலனு தோட்டத்து பக்கம் போயிருப்பா.” என்று அமராவதி பதில் கூறிவிட்டு தன் வேலையை தொடர
“ஐயோ அம்மா அக்கா லக்கேஜ் எதையும் காணோம். வெளியில நின்ன காரையும் காணோம்.” என்று கூற
“என்னடி சொல்லுற?” என்று அமராவதி சிறு பதட்டத்துடன் கேட்க
“ஆமாம்மா. மாமா காரியம் முடிஞ்சதுக்கு பிறகு அக்காவை நான் பார்க்கவே இல்லை.” என்று மஹதி கூற அமராவதிக்கு தான் எதுவும் புரியவில்லை.
“அவ அப்படி சொல்லாமல் எங்கேயும் போகமாட்டாளேடி” என்று கூற அப்போது அவரின் போன் அடித்தது.
அதை எடுத்தவள்
“சமுத்ரா தான் பேசுறா.” என்று அவர் அழைப்பை எடுக்க
“அம்மா ஆபிஸ்ல ஒரு முக்கியமான வேலை. அதான் சொல்லாமல் கிளம்பவேண்டியதா போச்சு. நீங்க கொஞ்ச நாள் அத்தை கூட இருந்துட்டு வாங்க.” என்றவள் சட்டென்று அழைப்பை துண்டித்து விட்டாள்.
அழைப்பு துண்டிக்கப்பட்டதும்
“அக்கா எங்கம்மா?” என்று மஹதி விசாரிக்க சமுத்ரா சொன்னதை அப்படியே மஹதியிடம் ஒப்புவித்தார் அமராவதி.
“அம்மா… அக்கா முகம் இந்த கொஞ்சநாளாகவே சரியில்லை.”என்று மஹதி யோசனையுடனேயே கூற
“என்ன சொல்லுற மஹி?” என்று அமராவதி குழப்பத்துடன் கேட்க
“ஆமாம்மா. அக்கா முகத்துல ஏதோ ஒரு இறுக்கம் இருந்ததை கவனிச்சேன். அக்கா எதையுமே லேசுல வெளிக்காட்டமாட்டா. மாமாவோட இழப்புல தான் இப்படி இருக்கானு நெனச்சேன். இப்போ கிளம்பி போனத பார்த்தா வேற ஏதோ விஷயம் இருக்கு போல.” என்று மஹதி தன் சந்தேகத்தை சொல்ல
“நீ என்னடி புதுசா குழப்புற? நீ சொல்லுற மாதிரியெல்லாம் இருக்காது. அவ ஏதோ அவசரம்னு தான் போயிருப்பா.” என்று அமராவதி தனக்கும் சேர்த்து சமாதானம் சொல்லிக்கொள்ள மஹதியின் மனம் தான் அதனை ஒப்புக்கொள்ளவில்லை.
மஹதி மெதுவாக விஷயத்தை ஷாத்விக்கிற்கு தெரிவித்தான். அவனுக்கு சமுத்ராவின் செயல் சற்று கோபத்தை கொடுத்த போதிலும் மஹதியின் சந்தேகம் அவனுக்கு ஏதோ நெருடலாக இருந்தது.
அவனும் தந்தையை இழந்த துக்கத்திலிருந்ததால் சமுத்ராவின் ஒதுக்கத்தை பெரிதாக கவனிக்கவில்லை. இப்போது அமைதியாக யோசித்தவனுக்கு ஏதோ நடந்திருக்கிறதென்று புரிந்தது. எதையும் சட்டென்று உதறிவிட்டு செல்பவள் சமுத்ரா அல்ல என்று ஷாத்விக் நன்றாக அறிவான். அதோடு மனதின் காயத்தை தன் ஒதுக்கத்தால் காட்டுவது அவளின் வழக்கமென்று இத்தனை நாளில் அறிந்திருந்தான் ஷாத்விக். ஆனால் இதுவே தொடர்கதையானால் சமுத்ரா எந்த சந்தர்ப்பத்திலும் தன் மனதிலுள்ள மனகசப்புகளை தனக்கு தெரியப்படுத்தமாட்டாளென்று எண்ணியவன் இம்முறை அவளிடம் நேருக்கு நேர் விசாரித்து சரி செய்திட வேண்டுமென்று உறுதியெடுத்துக்கொண்டான்.
ஷாத்விக்கிற்கும் புது தொழிலுக்கான வேலைகள் இருந்ததால் அமராவதியை இந்திராணியின் துணைக்கு அமர்த்திவிட்டு மஹதி வினயாஸ்ரீ மற்றும் மாலதியை அழைத்துக்கொண்டு ஊருக்கு கிளம்பினான்.
அவர்கள் வீட்டுக்கு வந்தபோது வீடு திறந்திருக்க சமுத்ரா வீட்டில் இருக்கிறாளென்று எண்ணியவர்கள் வீட்டிற்குள் வர அவளோ டீவியை அலறவிட்டபடியே தன் மடியிலிருந்த லாப்டாப்பை வெறித்து பார்த்துக்கொண்டிருந்தாள்.
வீட்டிற்குள் வந்தவர்களுக்கு ஏதோ தீப்பிடிக்கும் வாசம் வர மாலதியோ விரைந்து கிச்சனுக்குள் நுழைந்து பார்க்க அங்கு பாலோ பொங்கி வடிந்துகொண்டிருந்தது.
விரைந்து அடுப்பை அணைத்தவர்
“என்ன சமுத்ரா பாலை அடுப்புல வச்சதை கவனிக்கலயா?” வெளியே வந்தபடி கேட்க சமுத்ராவின் காதில் எதுவும் விழுந்ததாக தெரியவில்லை.
ஷாத்விக்கின் சந்தேகம் இப்போது உறுதியாக, ஓடிக்கொண்டிருந்த டீவியை அணைத்தான். அப்போதும் சமுத்ரா தன் சிந்தனையிலிருந்து மீளாதிருக்க ஷாத்விக்
“சித்தி நீங்க உள்ள போங்க.” என்றவன் மற்றவர்களையும் உள்ளே போகச் சொல்ல அவர்கள் தத்தமது அறைகளுக்கு சென்றனர்.
சமுத்ரா அருகே அமர்ந்தவன் மெதுவாக அவளின் கையை பற்ற அப்போதும் அவளிடம் எந்தவித எதிரொலியும் இல்லை.
மெதுவாக அவளை ஷாத்விக் உலுக்க சுயம் மீண்டாள் சமுத்ரா.
ஏதோ உறக்கத்திலிருந்து விழித்தவளை போல் பேந்த பேந்த விழித்தவளுக்கு அப்போது தான் தன் அருகே அமர்ந்திருந்த ஷாத்விக் தெரிந்தான்.
“நீங்க நீங்க…” என்றவளின் வார்த்தைகள் தந்தியடிக்க
“என்னாச்சு?”என்று மெல்லிய குரலில் ஷாத்விக் கேட்க சொல்லத்துடித்த நாவை கட்டுப்படுத்தியவள் தன்னை சமன்படுத்திக்கொண்டு
“ஆபிஸ் டென்ஷன். நீங்க எப்போ வந்தீங்க? மத்தவங்களும் வந்திருக்காங்களா?”என்று சமுத்ரா ஏதோ கடமைக்காக கேட்க
“அவங்க உள்ள போயிட்டாங்க. நீ எதுக்கு திடீர்னு கிளம்பி வந்த?”என்று ஷாத்விக் கேட்க
“ஆபிஸில் சின்ன பிரச்சினை. அதான் கிளம்பி வரவேண்டியதாப்போச்சு.” என்று சமுத்ரா அதே சமாளிப்பான பதிலை கூற ஷாத்விக்கிற்கு அது பொய் என்று நன்றாகவே தெரியும்.
வரும் வழியிலேயே உதய்யின் உதவியோடு இதயாவிடம் விசாரித்துவிட்டான். சமுத்ரா தலையிட்டு தீர்க்கவேண்டிய பிரச்சினையென்று எதுவும் இல்லை என்று இதயா உறுதி செய்த பிறகே சமுத்ராவிடம் விசாரித்தான்.
“சரி என்ன பிரச்சனைனு சொல்லு கேட்போம்.”என்று ஷாத்விக் கேட்க இப்போது சமுத்ரா தடுமாறினாள். மறுநொடியே தன்னை சமாளித்துக்கொண்டவள்
“எதுக்கு கேட்குறீங்க?” என்று சமுத்ரா சாதாரணமாக கேட்பதைபோல் கேட்க
“ஏன் கேட்கக்கூடாதா? ஒரு புருஷனா எனக்கு அந்த உரிமை கூட இல்லையா?” என்று இன்னும் நடிக்கிறாளே என்ற கோபத்துடன் ஷாத்விக் கேட்க
“நா எப்பவுமே அந்த உரிமையை யாருக்கும் கொடுத்ததில்லை.”என்றவள் சட்டென்று எழுந்து சென்றுவிட்டாள்.
தன் பொறுமையை மொத்தமாக கைவிட்ட ஷாத்விக்
“பேசிட்டு இருக்கும் போது இப்படி எழுந்து போனா என்ன அர்த்தம் சமுத்ரா?” என்று ஷாத்விக் குரலை உயர்த்த வீட்டிலிருந்த அனைவரின் காதிலும் அது விழுந்த போதிலும் யாரும் நாகரீகம் கருதி அறையிலிருந்து வெளியே வரவில்லை.
தன் நடையை நிறுத்திய சமுத்ரா அவனை திரும்பிப்பாராமலேயே
“இதுக்கு மேல பேச எதுவும் இல்லைனு அர்த்தம்.”என்றவளிடம்
“அப்போ அந்த கிராமத்துல நடந்த விஷயம்?” என்று அவன் வெளிப்படையாகவே கேட்க சமுத்ரா தான் ஒரு நொடி தடுமாறிப்போனாள்.
ஷாத்விக்கும் இதனை சொல்லவேண்டுமென்று நினைக்கவில்லை. காரணமில்லாமல் ஒதுங்கிச்செல்லபவளின் ஒதுக்கத்துக்கான காரணத்தை அறிந்திட அவனுக்கும் வேறு வழி தெரியவில்லை.
தன்னை சமன்படுத்திக்கொண்ட சமுத்ரா
“அது அன்னைக்கு இருந்த சூழ்நிலையால நடந்த தப்பு. மன்னிச்சிருங்க.” என்றவள் ரூமிற்குள் சென்று அடைந்துகொண்டாள்.
ஷாத்விக்கிற்கு தான் கோபம் தலைக்கேறியது. காதலுடன் அரங்கேறிய முதல் கூடலை சூழ்நிலையால் நடந்த தவறென்று சாதாரணமாக சொல்லிவிட்டு செல்பவளின் வார்த்தைகள் அவனின் மனதை பெரிதாக ரணப்படுத்தியிருந்தது. அவளின் வார்த்தைகள் அவனின் நடத்தையை கேவலப்படுத்தவதாக உணர்ந்தான் ஷாத்விக்.
தன் நடத்தையும் காதலும் கேவலப்படுத்தப்பட்டதை நினைத்து பொறுமியவனின் நிதானம் நொடிக்கு நொடி அவனின் கட்டுப்பாட்டை மீறியது. நிச்சயம் வீட்டிலிருந்தால் ஏதாவது நடந்துவிடுமென்று எண்ணியவன் வெளியே கிளம்பினான்.
அறைக்குள் சென்று அறையை பூட்டிக்கொண்ட சமுத்ராவோ கட்டிலில் சரிந்தாள். மனமும் மூளையும் பலதை நினைவூட்டி அவளை வருத்த எந்தவித உணர்வுகளையும் வெளிக்காட்டாது சுவற்றையே வெறித்துக்கொண்டிருந்தாள்.
கண்ணீரால் தன் பாரத்தை குறைத்திடக்கூட அவளுக்கு தெரியவில்லை. அப்படியே நேரம் மட்டும் கடக்க கதவு தட்டும் சத்தத்தில் எழுந்தமர்ந்தாள் சமுத்ரா.
அறைக்கதவை திறந்தவளிடம்
“ஷாத்விக் தம்பி போலீஸ் ஸ்டேஷன்ல மா.”என்று கூற
“என்ன சொல்லுறீங்க அத்த? அவரு எப்படி போலீஸ் ஸ்டேஷன்ல?”என்று சமுத்ராவும் பதட்டத்துடன் கேட்க
“தெரியலமா. தம்பி போனை வச்சிட்டு போயிருச்சு. அதுல தான் கூப்பிட்டு உடனே வரச் சொன்னாங்க.” என்று கூறியவர் அவர்கள் கூறிய விவரத்தை கூற சமுத்ரா அமரை அழைத்து விஷயத்தை சொல்ல அவனும் என்ன விஷயம் என்று போலீஸ் நிலையத்தில் விசாரித்துவிட்டு மீண்டும் சமுத்ராவுக்கு அழைத்தான்.
“ட்ரைவிங் லைசன் இல்லைனு பைன் கட்ட சொல்லியிருக்காங்க. அங்க ட்ராஃபிக் போலீஸ் கூட ஏதோ வாய்தகராகி போலீஸ் சைட்டையை பிடிச்சிட்டாரு போல. நீங்க கிளம்பி வாங்க. போய் நேரடியாக பேசி அழைச்சிட்டு வந்துடலாம்.” என்று அமர் சொல்ல சமுத்ராவும் தன் கைப்பையோடு விரைந்து கிளம்பி சென்றாள்.
காவல் நிலையத்தில் அமர் பேசி அனைத்தையும் சுமுகமாக முடித்திட மன்னிப்பு கேட்டுவிட்டு மூவரும் வெளியே வந்தனர்.
அமரிடமும் நன்றி கூறிவிட்டு அவனை அனுப்பி வைத்த சமுத்ரா ஷாத்விக்கை பார்க்க அவனோ அங்கில்லை. அமர் கிளம்பியதுமே அவனும் மறுபுறம் கிளம்பியிருந்தான்.
சமுத்ரா அவனை அழைத்தபடியே பின்னால் ஓட ஷாத்விக்கோ அவனின் நடையை நிறுத்துவதாக இல்லை.
“இப்போ நிற்கபோறீங்களா இல்லையா?”என்று சமுத்ரா சற்று சத்தமாகவே கேட்க அங்கு நடந்து சென்ற அனைவரும் திரும்பி பார்த்தபடி செல்வதை கண்ட ஷாத்விக் தன் நடையை நிறுத்தினான்.
அவனருகே ஓடிவந்த சமுத்ராவிடம்
“இப்ப என்ன வேணும் உனக்கு?”
“இப்படி நடந்தே வீட்டுக்கு போற ஐடியாவுல இருக்கீங்களா?”என்று சமுத்ரா கேட்க
“ஏன் உனக்கு ட்ரைவர் வேலை பார்க்கனும்னு சொல்லுறியா?”என்று ஷாத்விக் காட்டத்துடன் கேட்க
“எடுத்துட்டு வந்தது நீங்க. இப்போ ட்ரைவர் வேலை பார்க்கனுமானு கேட்டா சரியா?”என்று சமுத்ரா கேட்க அவள் முன் கையை நீட்டினான் ஷாத்விக்.
போலீஸிடமிருந்து திரும்ப வாங்கியிருந்த வண்டிச்சாவியை ஷாத்விக்கிடம் கொடுத்தாள் சமுத்ரா.
வண்டியை கிளப்பியவன் அவளையும் ஏற்றிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தான்.
வீடு வந்ததும் சமுத்ராவே மாலதியிடம் அனைத்தையும் விளக்க தன் அறைக்குள் நுழைந்த ஷாத்விக் தன் பையுடன் வெளியே வந்தான்.
அவன் பையுடன் வெளியே வந்ததை கண்ட மாலதி
“எங்க தம்பி கிளம்பிட்டீங்க?” என்று கேட்க
“உரிமையில்லாத வீட்டுல எத்தனை நாளைக்கு சித்தி இருக்க முடியும்? அதுக்கு வேற பெயர் சொல்லுறாங்க. நான் கிளம்புறேன் சித்தி.” என்ற ஷாத்விக்கின் வார்த்தைகளுக்கான அர்த்தம் அங்கிருந்த அனைவருக்கும் புரிந்தே இருந்தது.
மதியம் நடந்த சண்டையின் எதிரொலியே இதுவென்று தெரிந்த போதிலும் இந்த இடைவெளியை பெரிதாக விடக் கூடாதென நினைத்தார் மாலதி.
“என்ன தம்பி இப்படி பேசுறீங்க? இது உங்க வீடு. இங்க சமுத்ராவுக்கு என்ன உரிமை இருக்கோ அதே உரிமை உங்களுக்கும் இருக்கு.”என்று மாலதி சொல்ல
“சித்தி என்னை தடுக்காதீங்க. எனக்கு இங்க சில வேலைகள் இருக்கு. அதனால இந்த ஊருல தான் இருப்பேன். ஏதும் தேவைனா கூப்பிடுங்க.” என்றவன் யார் சொல்வதையும் பொருட்படுத்தாது கிளம்பிவிட்டான்.
இத்தனை நடந்தும் கூட சமுத்ரா வாயே திறக்கவில்லை. அனைத்தையுமே அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள்.
“நீ என்ன தான் நெனச்சிட்டு இருக்க சமுத்ரா? நானும் ஏதும் கேட்ககூடாதுனு அமைதியாக இருந்தா நீ உன் இஷ்டத்துக்கு ஏதேதோ செய்திட்டு இருக்க? அந்த தம்பி உனக்காக தான் அவசரமாக இங்க வந்துச்சு. நீ ஏதும் சொல்லாமல் கிளம்பி வந்துட்ட. அந்த தம்பி எல்லாரையும் சமாளிக்க பட்டபாட்டை நான் கண்ணால பார்த்தேன். அந்த தம்பி இன்னமும் என்ன செய்யனும்னு நீ எதிர்பார்க்கிற? அன்னைக்கு அந்த தம்பி ஏதோ சொல்லிருச்சுனு கோவிச்சிட்டு வந்த. ஆனா இன்னைக்கு நீ பேசுனதெல்லாம் சரியா? நீ பேசுன வார்த்தைகள் எனக்கே ஒரு மாதிரி தான் இருந்துச்சு. அந்த தம்பிக்கு எப்படி இருந்திருக்கும்? தயவு செய்து நீ என்ன முடிவுல இருக்கனு சொல்லு.” என்று மாலதி தன் வருத்தத்தை தெரியப்படுத்த சமுத்ராவோ இறுக்கமான முகத்துடன்
“நான் ஏற்கனவே சொன்னது தான். இது உங்க எல்லாரோட சந்தோஷத்துக்காகவும் நடந்த பொம்மை கல்யாணம். இதுக்கு எந்த அர்த்தமும் இல்லை.”என்றவள் தன்னறைக்குள் சென்று அடைந்துகொண்டாள்.
மாலதிக்கு தலையை எங்கு சென்று முட்டிக்கொள்வதென்று தெரியவில்லை. எல்லாம் சரியாகிவிடும் என்று அவர் நினைத்திருக்க இங்க அனைத்தும் தலைகீழாக நடந்துகொண்டிருந்தது. அவருக்குமே யாரிடம் பேசுவதென்று தெரியவில்லை. ஷாத்விக்கிடம் பேசுவதில் நிச்சயம் பலனில்லை என்று அவருக்கு நன்றாகவே தெரியும். நடந்ததை அவரும் பார்த்திருந்தார். இதில் சரிகட்டவேண்டியது சமுத்ராவை தான். ஆனால் அவளிடம் பேசுவது தான் நாட்டின் எல்லையை காக்கும் போராட்டமாக இருந்தது.
பல நேரங்களில் பெருமையாக தெரியும் அவளின் அழுத்தம் அவளின் வாழ்க்கையில் பெரும் இடராக மாறியிருப்பதை கண்டு மனம் நொந்து போனார் மாலதி.
இதை பற்றி இப்போதைக்கு அமராவதிக்கு தெரியப்படுத்தவேண்டாமென்று எண்ணியவர் மீண்டும் ஒருமுறை ஷாத்விக்கிடம் பேச வேண்டுமென்று எண்ணிக்கொண்டார்.