Loading

 

 

 

 

 

காலையில் யாமினி சற்று தெளிவுடன் திருமணத்திற்கு கிளம்பினாள். அவளுக்கென்று இல்லை என்றாலும் யுவன் நன்றாக இருப்பான். அது போதும். அவளுக்கென ஒருவன் நிச்சயமாக பிறந்திருப்பான். அவன் வரும் வரை தனது மனதை வேறு யாரிடமும் கொடுத்து விடாமல் பாதுகாக்க முடிவு செய்தாள்.

 

தெளிவான முகத்துடன் கிளம்பி வந்த மகளை பார்த்து மாதவனுக்கு நிம்மதியாக இருந்தது. எங்கே தன் மகளின் மனம் நோக தானும் ஒரு காரணமோ என்று கவலைப்பட்டார். இனி அவளுக்கு பிடிக்காத எதையும் செய்ய கூடாது என்று உறுதி எடுத்துக் கொண்டார்.

 

திருமண மஹால் நிறைய முக்கியமான ஆட்களால் நிரம்பி வழிந்தது. சத்தயனுக்கும் ரகுநாதனுக்கும் உதவியாக மாதவன் சென்று விட யாமினியும் மீனாவும் அர்ச்சனாவுக்கும் பத்மினிக்கும் உதவ வந்தனர்.

 

எல்லாவற்றையும் மறந்து யாமினி புன்னகை முகமாக இருப்பதே அர்ச்சனாவுக்கு போதுமானதாக இருந்தது. திருமண வேலைகள் தடபுடலாக நடக்க எங்கும் பேச்சுக்குரல் கேட்டுக் கொண்டிருந்தது.

 

ஆராதனா தன் அறையில் அமர்ந்து நகைகளை சரி பார்த்துக் கொண்டிருந்தாள். முகத்தின் அலங்காரத்தை சரி செய்து கொண்டிருக்க யாரோ கதவை திறந்து உள்ளே இருந்த எல்லோரையும் அழைத்தனர். ஆராதனாவை தனியாக விட்டு விட்டு எல்லோரும் வெளியே சென்று விட சங்கவி உள்ளே வந்தாள்.

 

“போதும் டி அலங்காரம்… நடக்காத கல்யாணத்துக்கு அலங்கரிச்சு என்ன செய்ய போற?” என்று கேட்டுக் கொண்டே உள்ளே வந்தவளை ஆராதனா திரும்பி பார்த்தாள்.

 

திமிராக வந்து அங்கிருந்த நாற்காலியில் சங்கவி அமர “உன்ன யாரு இங்க வர சொன்னது? மரியாதையா வெளிய போயிடு. நல்ல மூட்ல இருக்கேன். அத கெடுக்காத” என்றாள் ஆரா.

 

“என்ன நல்ல மூட்டா? ஓஓ… யுவன கட்டிக்குற கனவா….? அது நடக்காது பேபி.. தூக்கத்துல இருந்து எந்திரி”

 

“சரி நான் எந்திரிச்சுக்குறேன். நீ இங்க இருந்து கிளம்பு”

 

“அட.. முதல்ல இங்க எதுக்கு வந்தேன் னு கேளு பேபி”

 

“வேற எதுக்கு? உன் வயித்தெறிச்சல கொட்ட தான்”

 

“ச்சே ச்சே… இல்ல.. நீ கனவு கலைஞ்சு எழுந்து அழுறத பார்க்க”

 

“ஓஹோ…”

 

“இந்தா… இது தான் உன் மேரேஜ்க்கு என்னோட கிஃப்ட்”

 

சங்கவி மேசையில் தூக்கி போட்ட காகித உறையை ஆரா திரும்பியும் பார்க்கவில்லை.

 

“வந்த வேலை முடிஞ்சதுனா கிளம்பு” என்று ஆராதனா சர்வ சாதாரணமாக கூறினாள்.

 

“என்ன துரத்துறதுக்கு முன்னாடி அது என்ன னு பாரு பேபி”

 

“முடியலடா சாமி.. சரியான கொசு தொல்லை” என்று சத்தமாகவே கூறி விட்டு அந்த உறையை எடுத்து தலை கீழாக கொட்டினாள் ஆரா.

 

உள்ளே நிறைய புகைப்படங்கள் இருந்தது. அதில் யுவனும் சங்கவியும் அரைகுறை உடையுடன் மெத்தையில் படுத்திருந்தனர். அத்தனை படங்களும் அதே மாதிரி இருக்க எல்லாவற்றையும் பார்த்து விட்டு நிமிர்ந்து ஆராதனா சங்கவியை கேள்வியாக பார்த்தாள்.

 

“என்ன பார்க்குற? இது லண்டன்ல எடுத்தது. இங்க உன்ன கல்யாணம் பண்ணிக்குறேன் னு சொல்லிட்டு அங்க என் கூட…. சொல்ல ஷையா இருக்கு பேபி. பட் இதுக்கு மேல அவன உனக்கு விட்டு கொடுக்க நான் தயாரா இல்ல.”

 

“சோ…”

 

“சோ .. இந்த கல்யாணத்த நிறுத்திட்டு இதெல்லாம் கலைச்சுட்டு கிளம்புற வேலைய பாரு”

 

“முடியாது னு சொன்னா?” என்று ஆராதனா திமிராகவே கேட்டாள்.

 

“இப்பவுமா அவன கல்யாணம் பண்ணிக்க ரெடியா இருக்க?”

 

“ஆமா னு சொன்னா?”

 

“ஏய்… பைத்தியமாடி நீ… அவன் என் கூட நைட் சேர் பண்ணிட்டு வந்துருக்கான் னு தெரிஞ்சும் கல்யாணம் பண்ண ரெடியாகுற. இது தான் உன் கலாச்சாரமா?”‌என்று இருந்த போலி சாந்தத்தை உதறி விட்டு சங்கவி கத்தினாள்.

 

ஆராதனாவிற்கு உடனே சிரிப்பு வந்தது.

 

“கலாச்சாரம்? அத பத்தி நீ பேசுறது தான் காமெடி. சரி அப்பவும் இந்த மேரேஜ் நடக்கும் னு சொன்னா என்னடி பண்ணிடுவ?”

 

“இந்த போட்டோவ இங்க இருக்க எல்லாருக்கும் காட்டுவேன்” என்று சங்கவி தலையை நிமிர்த்தி கூறினாள்.

 

வேகமாக சென்று கதவை திறந்த ஆராதனா “போ போய் காட்டு. பட் என்ன டிஸ்டர்ப் பண்ணாத” என்றாள்.

 

ஆராதனாவின் இந்த அமைதி நிலையை சங்கவி சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவள் எதிர் பார்த்து வந்தது வேறு. இங்கு நடந்தது வேறாக இருந்தது.

 

சங்கவிக்கு அடுத்து என்ன பேசுவது என்று தெரியாமல் ஆராவை முறைக்க “என்னடி நின்னுட்ட? போ.. போய் காட்டு.. ஆயிரம் பேர் வெளிய இருப்பாங்க. போய் காட்டி என்ன செய்ய முடியுமோ செய் போ” என்றாள்.

 

சங்கவிக்கு எதுவும் செய்ய முடியாததில் கோபம் தான் வந்தது. ஆராதனாவை எரிப்பதை போல் முறைத்தாள்.

 

“என்ன முறைப்பு? நான் முறைக்கனும் இல்ல இல்ல கோபத்துல உன்ன அறையனும். அது எதையும் நான் செய்ய மாட்டேன். உன்ன பார்த்து சிரிக்குறதா அழுகுறதா னு தெரியல.

 

இந்த நாலு போட்டோவ காட்டிட்டா உடனே அத நம்பிடுவேன் னு எப்படி நினைச்ச? உலகமே இது உண்மைனு சொன்னாலும் ஏன் யுவனே வந்து இதெல்லாம் உண்மை னு சொன்னாலும் நான் அவன சந்தேக பட மாட்டேன்.

 

அவன் அப்படி சொல்லுறான்னா அதுக்கு பின்னாடி வேற ஒரு காரணம் இருக்கும் னு முழுசா நம்புவேன். ஒரு சப்ப போட்டோவ காட்டி காமெடி பண்ணிட்டு இருக்க.

 

ஒரு விசயம் தெரிஞ்சுக்க எல்லா உறவுகள்ளையும் நம்பிக்கை முக்கியம். நம்மல நம்புறமோ இல்லையோ அடுத்தவங்கள நம்பனும். இந்த விசயத்துல அவன நான் முழுசா நம்புறேன்.

 

அவனே அவன நம்பலனாலும் நான் அவன நம்புவேன். அதுனால இந்த சின்ன பிள்ளை விளையாட்ட எல்லாம் இதோட நிறுத்திட்டு நடைய கட்டு”

 

வாசல் நோக்கி கை காட்டிய ஆரா அப்போது தான் பார்த்தாள். வாசலில் கையை கட்டிக் கொண்டு யுவன் சாய்ந்து நின்று இருந்தான். அவனை பார்த்ததும் ஆராதனா முகமலர புன்னகைத்தாள்.

 

அதே நேரம் அவனை மேலிருந்து கீழ் வரை பார்த்தவள் வாயை பிளந்தாள். இரண்டு கையையும் கன்னத்தில் வைத்து ஆரா வாயை பிளந்து பார்க்க யுவன் உள்ளே வந்தான்.

 

இருவருமே அங்கு நின்றிருந்த சங்கவியை கண்டுகொள்ளவில்லை. ஒருவர் மற்றவரை ரசித்துக் கொண்டிருக்க சங்கவிக்கு கோபம் வந்தது. வேகமாக எதையோ தட்டி விட்டாள். அதில் ஆராவின் ரசனை கலைய திரும்பி அவளை முறைத்தாள்.

 

“ஏய் .. நீங்க கல்யாணத்த நிறுத்திறீங்களா ? இல்ல நான் போய் இதெல்லாம் காட்டி நிறுத்தட்டுமா?” என்று சங்கவி கத்த ஆராதனாவிற்கு சலிப்பாக இருந்தது.

 

“இந்த கொசு தொல்ல இன்னும் போகலையா” என்றவள் வேகமாக அவளது கையை பிடித்து இழுத்துச் சென்று அறைக்கு வெளியே தள்ளினாள்.

 

“போ போய் யாரு கிட்ட வேணா காட்டி கல்யாணத்த நிறுத்து.” என்றவள் கதவை வேகமாக அடைத்து பூட்டி விட்டாள்.

 

ஆராதனா தள்ளிய வேகத்தில் வேகமாக வெளியே வந்து விழுந்த சங்கவி அங்கு போய்க் கொண்டிருந்த யாமினியின் மீது விழுந்து விட்டாள்.

 

“ப்ச்ச்.. பார்த்து வாங்க” என்று கூறிக் கொண்டே பார்த்த யாமினி சங்கவியை பார்த்து விட்டு அதிர்ச்சியானாள்.

 

“ஏய்.. சங்கவி தான நீ? இங்க என்ன பண்ணுற?” என்று கேட்கும் போதே கீழே சிதறிக் கிடந்த படங்களை பார்த்து விட்டாள். அவசரமாக அதை கையில் எடுத்து பார்த்தாள்.

 

அந்த படம் அதிர்ச்சியை கிளப்பிய போதும் உண்மையாக இருக்காது என்றே யாமினிக்கு தோன்றியது.

 

“இங்க கொடு அத.. இந்த கல்யாணத்த நிறுத்தியே ஆகனும். எவ்வளவு தைரியம் இருந்தா என்ன பிடிச்சு தள்ளுவா… அவளுக்கு ஒரு பாடத்த கத்து கொடுத்தே ஆகனும்” என்று சங்கவி கூற யாமினிக்கு ஓரளவு விசயம் புரிந்தது.

 

படங்களை எல்லாம் யாமினி மொத்தமாக எடுத்துக் கொண்டு சுருட்டி பிடித்துக் கொண்டாள்.

 

“கொடு யாமினி” என்று கேட்க அவளது கையை பிடித்து இழுத்துக் கொண்டு வேறு பக்கம் சென்றாள். சற்று தூரத்தில் ஒரு அறை இருக்க “உன் போன கொடு” என்று கேட்டாள் யாமினி.

 

“எதுக்கு?”

 

“ப்ச்ச்.. பேச நேரம் இல்ல. கொடு முதல்ல” என்று கூற சங்கவியும் யோசிக்காமல் கொடுத்து விட்டாள். அதை வாங்கிக் கொண்டவள் சங்கவியை பிடித்து அந்த அறைக்குள் தள்ளி விட்டாள்.

 

சங்கவி அந்த அறைக்குள் சென்று விழ வேகமாக அறைக்கதவை வெளியே பூட்டினாள்.

 

“ஏய்.. கதவ திற” என்று சங்கவி கத்த “எவ்வளவு கத்துனாலும் இங்க யாரும் வர மாட்டாங்க. அமைதியா இருந்தா தப்பிச்ச. இல்லனா போலீஸ் கிட்ட போட்டு கொடுத்துருவேன். ஜாக்கிரத” என்று கூறி விட்டு அங்கிருந்து சென்று விட்டாள்.

 

*.*.*.*.*.

 

ஆராதனா கதவை பூட்டி விட்டு திரும்பியதும் யுவன் அவளை இழுத்து அணைத்துக் கொண்டான். ஆராவும் இறுக்கமாக அணைத்துக் கொண்டு “வேட்டி சட்டைல செம்மையா இருக்கடா” என்றாள்.

 

“என் மேல அவ்வளவு நம்பிக்கையா டி?” என்று அவள் முகத்தை மட்டும் விலக்கி கேட்க ஆரா கண் மூடி திறந்து ஆமோதித்தாள்.

 

“ஆமா டா. என்ன விட அதிகமா உன்ன யாரும் நம்ப முடியாது”

 

வார்த்தையை அவள் முழுதாக முடித்ததும் அவசரமாக அவளது இதழில் முத்தம் பதித்தான். முதல் நேரடி முத்தத்தில் உடல் சிலிர்க்க கண்ணை மூடிக் கொண்டு நின்றாள்.

 

பல நிமிடங்கள் கடந்த பின்னும் இருவருக்கும் பிரியும் எண்ணம் வரவில்லை. அவள் மெதுவாக கண் திறந்து பார்க்க யுவனின் கண்கள் மூடி இருந்தது. அதை பார்த்துக் கொண்டே இருக்க அவளது உதடுக்கு தற்காலிக விடுதலை கொடுத்து கண்ணை திறந்தான்.

 

அவளது பார்வையை பார்த்து ரசித்தவன் “நானே அந்த போட்டோ பார்த்துட்டு ஒரு நிமிஷம் பதறிட்டேன் டி. ஆனா நானே என்ன நம்பலனாலும் நீ நம்புவ னு சொன்ன பாரு… தாங்க்ஸ் டி… இந்த நம்பிக்கை போதும் என் வாழ்க்கை முழுசும் நிம்மதியா இருப்பேன்” என்றவன் அவளை அணைத்துக் கொண்டான்.

 

“நம்புவேன் டா. உன்ன நம்பாம வேற யார நம்ப போறேன்”

 

அவளது தலையை விலக்கி முகத்தை பார்த்தவன் “என்ன கல்யாணம் பண்ணிக்கிறியா?” என்று கேட்டான்.

 

“ம்ம்…” என்று ஆரா பலமாக தலையாட்ட மீண்டும் முத்தமிட போனான். நான்கு இதழ்களும் சேரும் நேரம் கதவு தட்டப்பட இருவரும் திடுக்கிட்டு திரும்பினர்.

 

“அட யாருடா அது… நல்ல நேரத்துல கரடி மாதிரி” என்று கடுப்பாக கூறிக் கொண்டே ஆரா கதவை திறக்க செல்ல யுவன் சிரித்தான்.

 

கோபத்தோடு கதவை திறந்தவள் அங்கு நின்றிருந்தவர்களை பார்த்து முழித்தாள். இரண்டு குடும்பத்தினர் மொத்த பேரும் அவர்களை முறைத்துக் கொண்டு நின்று இருந்தனர்.

 

“என்ன எல்லாம் ஒன்னா வந்து இருக்கீங்க?” – ஆராதனா.

 

“இம்ரான் சொன்னான். யுவன காணோம் னு சொன்னதும் இங்க தான் இருப்பான் னு.” – அர்ச்சனா.

 

“ஓஹோ.. அதுக்கு வந்தீங்களா. இங்க தான் இருக்கான்”

 

“அடியே… மூகூர்த்தத்துக்கு நேரம் ஆச்சு . மாப்பிள்ளை எங்க னு அங்க ஐயர் கத்திட்டு இருக்கார் டி ” – பத்மினி.

 

“டேய்.. உன்ன அங்க தான இருக்க சொன்னேன்? இங்க என்ன பண்ணுற? ஒழுங்கா மாலைய போட்டுட்டு போய் மேடையில உட்கார்” – அர்ச்சனா.

 

“அட ஆமா.. முகூர்த்த நேரம் முடியுறதுக்குள்ள மேரஜ் பண்ணனும். டேய் வா போகலாம்” – ஆராதனா.

 

“ஆமா ஆமா.. வழிய விடுங்க. கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாம நிக்கிறீங்க? வா டி. போகலாம். ம்மா.. வழிய விடுங்க. தள்ளுங்க ப்பா” என்று அவர்களை தள்ளி விட்டு ஆராவின் கையை பிடித்து யுவன் அழைத்துச் சென்று விட்டான்.

 

பெரியவர்கள் இருவரையும் முறைத்து விட்டு பின்னால் வந்தனர்.

 

முதல் முறையாக மாப்பிள்ளையே பெண்ணை மணமேடைக்கு அழைத்து வரும் காட்சியை பார்த்து சொந்த பந்தங்கள் வாயை பிளக்க நண்பர்கள் கூட்டம் “ஓஹோ….” என்று சந்தோச கூச்சல் போட்டனர்.

 

இருவருமே அவர்களை பார்த்து சிரித்துக் கொண்டே மேடையேறினர். மாலையை வாங்கிய யுவன் அவள் கழுத்தில் போட்டு விட்டான். ஆராவும் அவனுக்கு போட்டு விட இருவரும் ஒன்றாக அமர்ந்தனர்.

 

“ஆமா கல்யாணத்துக்கு அப்புறம் உன்ன எப்படி டா கூப்பிடுறது?” – ஆராதனா

 

“எப்படி தோனுதோ கூப்பிடு. எப்படியும் மரியாதை னு ஒன்னு தர போறது இல்ல” – யுவன்.

 

“உனக்கு மரியாதை எல்லாம் தரனுமா? அதெல்லாம் கிடைக்காது மாப்பிள்ள”

 

“என்ன பா இது… நீங்களே பேசிட்டு இருந்தா நாங்க எதுக்கு இருக்கோம்?” என்று நண்பர் கூட்டத்தில் ஒருவன் கேட்டான்.

 

“அவங்க வருங்காலத்த டிஸ்கஸ் பண்ணுறாங்க. உனக்கு ஏன் டா இந்த பொறாமை?” என்று இம்ரான் கூறினான்.

 

இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே தாலியை யுவன் கையில் கொடுத்தனர்.

 

அதை கையில் வாங்கியவன் அவளை திரும்பி பார்த்தான். அவளும் அவனை பார்த்து இமை மூடித் திறந்தாள். மனம் நிறைய சந்தோசத்துடன் தாலி கட்டி முடித்தான். குங்குமத்தை அவள் நெற்றியில் வைத்து விட்டவன் அவளை தன் புறம் திருப்பி நெற்றியில் முத்தமிட்டான்.

 

நண்பர்கள் கூட்டம் “ஹே…” என்று கத்த பெரியவர்கள் வெட்கத்துடன் தலையிலடித்துக் கொண்டு நகர்ந்தனர். அக்னியை வலம் வந்து அருந்ததி பார்த்து மெட்டி அணிவித்தான்.

 

தொடரும்

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
10
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்