அத்தியாயம் 24 ❤
மஹிமாவின் உள்ளக் கிடங்கில் இருந்த விஷயத்தை ஶ்ரீதேவி மூலம் வெளிக் கொண்டு வந்து, அதை அவளிடம் பகிர்ந்த அத்தருணம் மஹிமாவிற்கு ஏனோ சற்று நிதானத்தை வரவழைத்து இருந்தது.
இத்துடன் தனது கடந்த காலம் தந்த கசப்பான தருணங்களை அவளிடம் கூறிய பிறகு , உள்ளத்தில் மீண்டும் கார்த்திக்கின் மீதான கோபம் துளிர்த்தது.
இருந்தாலும் இதற்கு மேல் அவனிடம் தான் எந்த வித ரசாபாசமும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று நினைத்து விட்டாள்.
” லேட் ஆச்சு. வா தூங்கலாம் ” என்று தோழியிடம் கூறினாள் மஹிமா.
” ம் . ஓகே மஹி. இன்னொரு நாள் இதைப் பத்தி பேசலாம் ” என்று அவளும் உறங்கச் சென்றாள்.
அடுத்த நாள் காலையில் , எழுந்த மஹிமாவின் முகத்தில் சோர்வின் சாயல் இருந்தது.அதைக் கருத்தில் கொள்ளாமல் வலம் வர நினைத்தாள்.
விரைவாக கிளம்பி ஶ்ரீதேவியிடம் ,
‘ இன்று தான் சீக்கிரம் வகுப்பிற்கு செல்கிறேன் ‘ என்று மட்டும் உரைத்து விட்டு கிளம்பி விட்டாள்.
ஶ்ரீதேவியும் , ‘ நேற்றைய நிகழ்வால் மனம் சஞ்சலப்பட்டுக் கொண்டு இருக்கிறாள் ‘ என புரிந்து கொண்டு அவளை அனுப்பி வைத்தாள்.
அந்நேரம் பார்த்து தீக்ஷிதா தன் மையிட்ட விழிகளால் ஒரு முக்கியமான நபரைத் தேடிக் கொண்டு இருந்தாள்.
அதைக் கவனித்த மஹிமா அவளிடம் பேசும் மனநிலையில் இல்லாததால் , அவளைக் கடந்து செல்ல யத்தனித்தவளை ,
“மஹிமா ! ஒரு நிமிஷம் ”
மென்மையான குரலில் அழைத்தாள் தீக்ஷிதா.
அவள் தன்னை அழைத்ததுக் கேட்கவும் அதை விழி விரித்துப் பார்த்து ,
“என்ன?” என்று வினவினாள்.
” கார்த்திக்கை இன்னும் காணோம்.உங்களுக்கு அவன் ஏன் வரலனுத் தெரியுமா ? ” என்று கேட்டவளின் குரலில் நக்கலின் தொனி.
அது மஹிமாவிற்கு தெரியாமல் இருக்குமா ? தீக்ஷிதாவின் முகத்தை சில நொடிகள் ஆராய்ந்தாள்.
அதில் குழப்பிப் போன தீக்ஷிதா ,
“என்ன மஹிமா ? என்னோட முகத்தில் என்னத் தெரியுது?”
” அதுவா ! , நீ தானே கார்த்திக்கிட்ட ப்ரபோஸ் – லாம் செய்த ? ” கேள்வியில் அவளது முகம் யோசனையாய் மாறியது.
” ஆமாம்.அதுக்கு என்ன ? ” என்றாள் மஹிமாவைக் கூர்ந்து கவனித்தபடி.
” அப்பறம் நீ விரும்புற கார்த்திக் எங்க இருப்பான் ? என்ன செய்வான் ?
ஏன் லேட் – னு கூட தெரிஞ்சுக்காம இருக்கியே ? அதைதான் என்னனு பார்த்தேன் ? ” எனத் தடாலடியாக அவளிடம் விளக்கிக் கூறியவளின் கூற்றைக் கேட்டதும் ,
முகத்தில் நொடியில் உருவான எள்ளும் , கொள்ளும் வெடிப்பது போலான மாறுதலைக் கஷ்டப்பட்டு மறைத்துக் கொண்டாள்.
மேலும் , மஹிமா ” ஆர் யூ ஆல்ரைட் ? ” எனவும் கேட்டாள்.
” ஏன் மஹிமா ?” என்று ஆத்திரத்தில் உதடு துடிக்க அவளைப் பார்த்தாள் தீக்ஷிதா.
” இல்லை.கண்ணு எதுவும் தெரியாம இருக்கானு கேட்டேன் ? கார்த்திக் அங்க தான் வந்துட்டு இருக்கான் “என அவளுக்குப் பின்னால் கை காட்டினாள்.
உடனே உள்ளம் படபடக்கத் திரும்பிப் பார்த்த தீக்ஷிதா அவன் தன்னை நோக்கித்தான் வருகிறான் என்ற நப்பாசையில் அங்கேயே நின்றாள்.
ஆனால் கார்த்திக் அவளைத் தாண்டிச் சென்று விட்டான்.அதில் பேஸ்தடித்து இருந்த தீக்ஷிதாவின் முகத்தைப் பரிதாபமாகப் பார்த்தாள் மஹிமா.
அதற்குள் தன் முகத்தை சீர்செய்து கொண்ட தீக்ஷிதா ” ஓகே மஹிமா.க்ளாஸூக்கு டைம் ஆச்சு.பாய் ” என்று விடைபெறுவதாகக் கூறியவளிடம் ,
“சோ சேட் ! (so sad ) ” என்பது போல் ஒரு கிணடல் பார்வை பார்த்து விட்டு ,விலகி நடந்தாள் மஹிமா.
அவளது வாழ்நாளில் இப்போது தீக்ஷிதாவிடம் நடந்து கொண்டது போல் , எவரிடமும் நடந்ததில்லை.ஆனாலும் இப்போது அவளுக்கே ஒரு புத்துணர்ச்சி ஏற்பட்டது.
தீக்ஷிதாவைக் கடந்து சென்ற கார்த்திக்கின் கண்களில் தென்பட்டது மஹிமாவே.
கடந்து செல்ல நினைத்தாலும் விடாது அவளுடன் நடக்கலானான் கார்த்திக்.
தன்னுடன் நடந்து வரும் நிழலிற்குச் சொந்தக்காரன் யாரென்றுத் திரும்பிப் பார்த்தாள்.
அவளையேக் குறும்புடன் நோக்கிக் கொண்டு இருந்த கார்த்திக் காணக் கிடைத்ததும் அவள் எதுவும் கூறாமல் தன் வழியில் வேகமாக நடக்க ஆரம்பித்தாள் மஹிமா.
” க்கும் ” என்ற குரல் செருமல் கேட்டதையும் கூட கவனியாமல் சென்றவளை ,
“மஹிமா ! ” கார்த்திக் மனம் தளராது மஹிமாவின் அலட்சியத்தையும் பொருட்படுத்தாது அவளை அழைத்துப் பார்த்தான்.
அவனுடன் பேசுவதற்குத் தான் தயாராக இல்லை என்று சொல்லாமல் சொல்லுவது போல் அவளது வேக நடை அவனுக்குத் தெரிந்தது.
“ம்ம்.நேத்து நீங்க ஏதோ டென்ஷன்- ல நடந்துக்கிட்டிங்கனு நினைச்சா , இன்ட்டென்ஷனலா நடந்துட்டு இருக்கிங்க போல ?” என அவளிடம் கேட்டான்.
அதற்கும் அவளிடம் பதிலில்லை.சுயமரியாதை இதில் அடிபட்டுப் போனதால் அவளது கரங்களைப் பற்றியவன் ,
“ஹேய் ! உனக்கு என்ன தான் ப்ராப்ளம் ?” என்று முரடன் போல் அவளிடம் நடந்து கொண்டான்.
அவனது எதிர்பாராத இந்த செயலால் திகைத்து விட்டாலும் சமாளித்துக் கொண்ட மஹிமா ,
“கார்த்திக் வாட் இஸ் திஸ் ? லீவ் மை ஹேண்ட் ” வலியை விட அவன் இன்னும் அப்படியேத் தான் இருக்கிறான் என்பது சுட்டெரித்தது உள்ளத்தை.
எதிரியின் முன் அழுவது கோழைத்தனம் அல்லவா ! எனவே எதிர்த்து நிற்க முயன்றவள் , கண்களில் இருந்து ஒரு துளி கண்ணீர் கூட வராமல் அத்துனை சாமர்த்தியமாக மறைத்துக் கொண்டாள்.
” கைய விடுடா ” என்று அவனை ஒருமையில் அழைத்து விட்டாள்.
அதில் ஆவேசம் வந்தவனாக ,
“டோன்ட் கால் மீ டா ” என்று உயர் வேக ரத்த அழுத்தத்தில் கூறினான் கார்த்திக்.
” அப்படி தான்டா சொல்லுவேன்.லீவ் மை ஹேண்ட் ” என்று இவளும் அவனுக்குச்
சரிக்கு சமமாகக் கத்தினாள்.
அப்போது தூரத்தில் இருந்து ஓடி வந்தான் தமிழ்க்குமரன்.
” டேய் கார்த்திக்.கைய விடு.ஏன்டா பொறுமையா இருக்கத் தெரியாதா ?”
அவனது கரத்தில் இருந்து மஹிமாவின் கரத்தைப் பிரித்தெடுத்தான்.
” நீ எப்பவும் திருந்த மாட்ட ” என்ற வார்த்தைகள் மஹிமாவிடம் இருந்து வந்ததும் ,
“ஏய் என்ன நினைச்சுட்டு இருக்க நீ ? உன்ன இங்க தானே பாத்தேன்.அதுக்குள்ள திருந்த மாட்ட , அது இதுனு வாய்க்கு வந்தபடி பேசிட்டு இருக்க ?”
அவனுக்கும் கோபம் வருமல்லவா ! அவனைப் பார்க்கும் போதெல்லாம் வெறுப்பை உமிழும் அப்பெண்ணுக்கும் , தனக்கும் இடையே என்ன தான் பிரச்சினை ? ஏன் தன்னிடம் தீயாய் எரிகிறாள் ? என்பது தெரியாமல் குழம்பிப் போய் இருப்பவனுக்கு இன்று மஹிமாவின் உதாசீனம் மேலும் சினத்தை உருவாக்கியது.
மஹிமா தன் கைகளைத் தட்டி விட்டுக் கொண்டே ,
” அது கூட மறந்து போச்சா ?எங்க உன் ஃப்ரண்ட் சிவரஞ்சனி ? ரெண்டு பேரும் சேர்ந்து தானே சேலஞ்ச் பண்ணிங்க ? இப்ப என்ன சேலஞ்ச் பண்ணி இருக்கிங்க ?” என்று கார்த்திக்கிடம் கேட்டாள்.
“யாரு சிவரஞ்சனி ? என்ன சொல்ற ?” தமிழ்க்குமரனின் கைகளில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ளப் போராடிக் கொண்டே அவளிடம் இதைக் கேட்டான்.
” ம்ம்..! நல்ல நடிகன் டா “
அவனைப் பாராட்டியவள் நடையைக் கட்டினாள் தன் வகுப்பை நோக்கி.
” விடுடா குமரா . இவ என்னப் பேச்சுப் பேசினா தெரியுமா ?” என்று நண்பனிடம் குறைக் கூறினான் கார்த்திக்.
” அந்தப் பொண்ணுக் கிட்ட என்னனு பொறுமையா கேட்டுப் பாருடா ? அதை விட்டுட்டு, இப்படி பண்ற ? நல்லவேளை இன்னும் ஸ்டூடண்ட்ஸ் வர ஸ்டார்ட் பண்ணல இல்லனா இங்க பெரிய பிரச்சனை ஆகி இருக்கும் ”
அவனிடம் பிரச்சினை வேண்டாம் என்ற நோக்கத்தில் பேசினான்.
” என்ன பெருசா பிரச்சினை வரும் ?” எகத்தாளமாகக் கேட்டான்.
” ம்ம். நீ பண்ணிட்டு இருந்தது ஹராஸ்மண்ட் (harassment ) தெரியும்ல. அப்பறம் உனக்கு தான் ப்ராப்ளம் ” எனப் பலவாறு அவனைச் சமாதானம் செய்து வகுப்பறைக்கு இழுத்துச் சென்று விட்டான்.
” காலைலயே மூட் ஆஃப் பண்ணிட்டா ” என்ற முணுமுணுப்புடன் வகுப்பிற்குள் நுழைந்தான் கார்த்திக்.
கார்த்திக் தன்னைத் தாண்டிச் சென்றாலும் அவனிடம் தான் சென்று பேசுவதில் ஏதொரு சங்கடமும் இல்லை தீக்ஷிதாவிற்கு.எனவே அவனுக்காக மற்றைய இடத்தில் அமர்ந்து அவனது வருகையை எதிர்பார்த்து இருந்தவளுக்கு இக்காட்சிக் காணக் கிடைத்தது.
மஹிமாவிடம் கார்த்திக் வலியச் சென்று பேசியதில் காதில் புகை வராத குறையாகப் பார்த்து வயிறு எரிந்தவளுக்கு இக்காட்சிக் கிடைத்ததும் அதை விடுவாளா என்ன?
தீக்ஷிதா போன்றவர்கள் இயற்கையில் நல்லவர்கள் ஆனால் தங்களது பிடிவாத குணத்தாலேயே எதையும் சாதிக்கப் பழகியவர்கள் ஆயிற்றே.எனவே தன் மனம் கவர்ந்தவன் இதில் காயப்பட்டாலும் பரவாயில்லை என்ற எண்ணத்தில் இவ்விஷயத்தை கல்லூரி முதல்வரின் காதுகளுக்குக் கொண்டு சென்றாள்.
இவை எதுவும் தெரியாமல் சற்று நேரம் முன்பு மஹிமாவிடம் நடந்து கொண்டதை நினைத்து வருத்தப்பட்டாலும் அடுத்த நிமிடம் அது அவளாகவே தேடிக் கொண்டது.அவள் தன்னை அலட்சியம் செய்யாமல் இருந்து இருந்தால் இது நிகழ்ந்து இருக்காதே என்று தோள்களைக் குலுக்கிக் கொண்டான்.
” டேய் ! கொஞ்சமாச்சும் ஃபீல் பண்ணுடா” என்று அவனது காதுகளில் ஓதினான் குமரன்.
” நான் எதுக்குடா ஃபீல் பண்ணனும்.நான் ஒழுங்கா தான் பேசிட்டு இருந்தேன்.அவ தான் ஓவரா பண்ணுனா.இருக்கட்டும் விடு.சில் டா” நண்பனைத் தன்னுடன் இயல்பாக பேசச் சொன்னான்.
“இது எங்க போய் முடியப் போகுதோ?”என்று புலம்பியவாறே அவனுடன் பேசிக் கொண்டு இருந்தான் தமிழ்க்குமரன்.
அப்போது அங்கு இருந்த வகுப்பாசிரியரிடம் அனுமதி பெற்று உள்ளே நுழைந்த ஒரு மாணவன், “எக்ஸ்க்யூஸ்மி சார். கார்த்திக் -ன்ற ஸ்டூடண்ட் – யை பிரின்சிபல் கூப்பிட்டார் ” என்ற செய்தியைக் கொண்டு வந்திருந்தான்.
” போச்சுடா ! ” என்று கார்த்திக்கைப் பார்த்துப் பேய் முழி முழித்தான் குமரன்.
“விடுடா ” என்று அலட்சியமாக எழுந்தவன் ,
“யூ மே கோ கார்த்திக் ” அவனுக்கு அனுமதி அளித்த ஆசிரியர் பாடம் நடத்துவதைத் தொடர்ந்தார்.
முதல்வர் அறைக்குள் நுழைந்த கார்த்திக்கை முறைத்தவர்,
“ஏன் கார்த்திக் உங்களுக்கு சண்டை போட வேற இடமே கிடைக்கலையா ?” என்ற கேள்வியை அவனிடம் கேட்டார்.
– தொடரும்