Loading

தங்கள் வீட்டு வாசலில் ஆட்டோ வந்து நின்ற சத்தம் கேட்டதும், வெளியே வந்து, அங்கே தன்னுடைய தாயும், தங்கையும் ஆட்டோவில் இருந்து இறங்குவதைப் பார்த்தவுடன்,”ம்மா! யாது!” என்று குதூகலித்த மகளைக் கண்டதுமே,

 

“யக்ஷிம்மா!” எனத் தன் மூத்த மகளை உச்சி முகர்ந்து கொண்டிருந்தார் மீனா.

 

அந்தச் சமயத்தில், வீட்டினுள் இருந்து அற்புதனும், அவனது பெற்றோரும் வாசலுக்கு வந்து விட்டனர்.

 

“வாங்க அத்தை, வா யாது!” என்று அவர்களை வரவேற்றான் யக்ஷித்ராவின் கணவன்.

 

“வணக்கம் மாப்பிள்ளை” – மீனா.

 

“நல்லா இருக்கீங்களா சம்பந்தி! யாதவி ம்மா! எப்படிடா இருக்கே?” என்று அவ்விருவரையும் நலம் விசாரித்தார்கள் அகத்தினியன் மற்றும் கீரவாஹினி.

 

“நாங்க நல்லா இருக்கோம் சம்பந்தி. நீங்க எல்லாரும் எப்படி இருக்கீங்க?” என அவர்களது நலனையும் கேட்டுத் தெரிந்து கொண்டார் மீனா.

 

“ரெண்டு பேரும் வீட்டுக்குள்ளே வந்து உட்காருங்க” என்று யக்ஷித்ராவின் புகுந்த வீட்டு ஆட்கள் அவளது தாய் மற்றும் தங்கையை வீட்டினுள் அனுமதித்து அமரவும் வைத்தனர்.

 

“இது என்னக் கையில் இவ்வளவு பாத்திரம் கொண்டு வந்து இருக்கீங்க?” என்று அவர்களிடம் வினவினார் அகத்தினியன்.

 

“உங்க எல்லாருக்கும் ஸ்வீட்ஸ், காரம் எல்லாம் செஞ்சுக் கொண்டு வந்திருக்கோம் மாமா” என்று அவருக்குப் பதில் சொன்னாள் யாதவி.

 

“ஓஹ்ஹோ! அப்படியா விஷயம்?” என்று அவளிடம் கேட்டுச் சிரித்தார் அற்புதனுடைய தந்தை.

 

“ஆமாம் மாமா” என்றாள் யக்ஷித்ராவின் தங்கை.

 

அவர்கள் பேசிக் கொண்டிருந்த சமயத்தில், இருவருக்கும் குடிக்கக் குளிர்பானங்களை எடுத்து வர எழுந்த தன் மனைவியிடம்,”நீ உட்கார்ந்து பேசிட்டு இரு. நான் கொண்டு வர்றேன்” என்று அவளைப் பழையபடியே அமரச் செய்து விட்டு அங்கேயிருந்து அகன்றான் அற்புதன்.

 

தன்னுடைய மனைவியின் பிறந்த வீட்டாரைத் தானே உபசரிக்க எண்ணினான் போலும்! அதனால், தன் தாயையும் தன்னுடன் வர விடவில்லை அவன்.

 

இரண்டு தம்ளர்களில் குளிர்பானங்களை நிறைத்து, அத்துடன் தங்கள் வீட்டில் செய்து வைத்திருந்த இனிப்பு மற்றும் காரப் பலகாரங்களை இரு தட்டுகளில் அடுக்கிக் கொண்டு வந்து மீனா மற்றும் யாதவியிடம் தந்தான் அற்புதன்.

 

அதைக் கண்டு,”நீங்களுமா?” என்றார் மீனா.

 

“ஆமாம் சம்பந்தி. இவங்க கல்யாணத்துக்கு அப்பறம் இன்னைக்குத் தான், நீங்க ரெண்டு பேரும் இந்த வீட்டுக்கு வந்திருக்கீங்க! அப்போ, நாங்க உங்களை நல்லா கவனிக்க வேண்டாமா? தட்டை வாங்கிக்கோங்க” என்று அவர்களுக்கு வலியுறுத்தினார் கீரவாஹினி.

 

எனவே, தங்கள் வீட்டு மருமகனின் உபசரிப்பைக் கண்களால் மெச்சி விட்டு, அவனிடமிருந்தவற்றைப் பெற்றுக் கொண்டார்கள் மீனா மற்றும் யாதவி.

 

“உன்னோட காலேஜ் லைஃப் எல்லாம் எப்படி போகுது ம்மா?”என்று தன் மனைவியின் தங்கையிடம் விசாரித்தான் அற்புதன்.

 

“அதெல்லாம் நல்லா போயிட்டு இருக்கு மாமா” என அவனுக்குப் பதில் சொன்னாள் இளையவள்.

 

அவர்கள் இருவருடனும் அமர்ந்து கொண்ட யக்ஷித்ராவோ, அவர்களிடம் ஒரு வார்த்தைக் கூடப் பேசவில்லை. ஆனால், தன் தாய் மற்றும் தங்கையையும் சிலாகித்துப் போய்ப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

 

அவ்விருவரும் என்றைக்காவது ஒருநாள் தன்னுடைய புகுந்த வீட்டிற்கு வருவார்களா? என்ற ஏக்கத்துடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டு இருந்திருந்தவள், இப்போது தனது தாயும், தங்கையும் இங்கே வந்து அனைவருடனும் ஒன்றி விட்டதைப் பார்க்கும் போது, மிகவும் ஆனந்தத்தைத் தருவித்தது யக்ஷித்ராவிற்கு.

 

எப்போதும் போலவே, இப்பொழுதும் தன் மனைவியின் உணர்வுகளைப் புரிந்து கொண்டதால் தான், அவளை எங்கேயும் நகர விடாமல் பார்த்துக் கொண்டான் அற்புதன்.

 

“சரி. அவங்களை உன் ரூமுக்குக் கூப்பிட்டுட்டுப் போய் ரெஸ்ட் எடுக்க வை யக்ஷிம்மா” என்று தன் மருமகளிடம் அறிவுறுத்தினார் கீரவாஹினி.

 

ஏனென்றால், அவளுக்குத் தன்னுடைய பிறந்த வீட்டாருடன் நன்றாக நேரம் கழிக்க வேண்டும் என்ற ஆசை இருக்குமல்லவா? அதனால் தான், அவ்வாறு சொன்னார்.

 

உடனே,”சரிங்க அத்தை” என்று அவரிடம் கூறி விட்டுத் தன் அன்னை மற்றும் தங்கையையும் அழைத்துக் கொண்டு அறைக்குப் போய் விட்டாள் யக்ஷித்ரா.

 

அவர்கள் மூவரும் உள்ளே போனதும், தனது மகனைக் கூப்பிட்டு,”மதியத்துக்கு நான்வெஜ் எடுப்போம் அற்புதா. நீ கடைக்குப் போய் வாங்கிட்டு வர்றியா?” என்றார் கீரவாஹினி.

 

“சரிம்மா. என்ன வாங்கிட்டு வர்றது?” எனத் தன் அன்னையிடம் வினவினான் அற்புதன்.

 

“அவங்களுக்கு என்னப் பிடிக்கும்னு தெரியலையே! நீ யக்ஷிகிட்டே கேட்டுட்டு வர்றியா?” என்று அவனிடம் கேட்கவும்,

 

“சரிம்மா. நான் போய்க் கேட்டுட்டு வரேன்” என்று அவரிடம் கூறி விட்டுத் தன் மனைவி மற்றும் அவளது குடும்பம் இருந்த அறைக்கு வெளியே நின்று,”யக்ஷூ” என்று குரல் கொடுத்தான் அற்புதன்.

 

அப்போது தான், தன் தாயின் மடியில் தலை வைத்துப் படுத்திருந்த யக்ஷித்ராவோ, அவனது அழைப்பைக் கேட்டதும்,

 

“இதோ வர்றேன் ங்க” என்று எழுந்து கணவனிடம் போனாள் யக்ஷித்ரா.

 

“உன்னை டிஸ்டர்ப் பண்ணதுக்கு சாரி ம்மா. மதியத்துக்குக் கறி எடுத்து சமைக்கலாம்னு அம்மா முடிவு பண்ணி இருக்காங்க. அதான், அத்தைக்கும், யாதுவுக்கும் என்னப் பிடிக்கும்னு சொல்றியா?” என்று தன்னிடம் கேட்டவனைப் பார்த்துப் புன்னகைத்தவளோ,

 

“எது வேணும்னாலும் வாங்குங்க‌. அவங்க சாப்பிடுவாங்க” என்றாள் அவனது மனைவி.

 

“எதுக்கும் அவங்களோட விருப்பத்தைக் கேட்டுச் சொல்லு ம்மா. ப்ளீஸ்!” என்று அவளிடம் வேண்டவும்,

 

“இருங்க” என்றவள், உள்ளே சென்று தன் அன்னை, தங்கையிடம் விஷயத்தைத் தெரிவித்தாள் யக்ஷித்ரா.

 

“இதெல்லாம் எதுக்குன்னுக் கேட்டாலும் நீங்க யாரும் கேட்கப் போறதில்லை. அதனால், சிக்கனே போதும்” என்று மகளிடம் சொல்லி விட்டார் மீனா.

 

“யாது! உனக்கு ஃபிஷ் பிடிக்குமே? வாங்கச் சொல்லவா?” என்றவளிடம்,

 

“உன் இஷ்டம் க்கா” என்று தமக்கையிடம் கூறி விட்டாள் யாதவி.

 

அதை வெளியே இருந்த தன் கணவனிடம் பகிர்ந்து கொண்டாள் யக்ஷித்ரா.

 

“ஓகே ம்மா. நான் கடைக்குப் போயிட்டு வந்துடறேன்” என்று அவளை அனுப்பி விட்டுத் தாயிடம் சென்று மனைவியின் பதிலைச் சொன்னான் அற்புதன்.

 

“அப்போ போய் வாங்கிட்டு வந்துரு” என அவனை அனுப்பி வைத்தார் கீரவாஹினி.

 

தனது அன்னையின் மடியில் மீண்டும் தஞ்சம் அடைந்து விட்டாள் யக்ஷித்ரா.

 

“இந்த ஒருநாளைக்கு இவ்வளவு சிரமம் எடுத்துக்கனுமா?” என்று அவளிடம் கேட்டார் மீனா.

 

“நான் சொன்னா எங்கே கேட்கிறாங்க ம்மா? விடுங்க” என்றாள் அவரது மகள்.

 

“அக்கா! நீ நிம்மதியாக இருக்கிற தானே?” என்று தமக்கையிடம் வினவினாள் யாதவி.

 

அவளது இந்த திடீர் கேள்வியில் திகைத்துப் போய் அவளை ஏறிட்டவளோ,”ஏன் திடீர்னு இப்படி கேட்கிறடி?” என்று அவளிடம் கேட்டாள் யக்ஷித்ரா.

 

“அங்கே இருந்த வரைக்கும் நமக்கு நிம்மதியே கிடைக்கலையே? என்னை விடவும் நீ தான் ரொம்ப மனசளவுல கஷ்டப்பட்ட! அதுக்கப்புறம் கல்யாணம் ஆகி இங்கே வந்துட்ட. இவ்வளவு நாளும் நாங்க இங்கே வந்தது இல்லை. ஆனால் இன்னைக்கு வந்திருக்கோம். அதுவும் இல்லாமல் உன்னோட முகத்தில் ஒரு தெளிவு தெரியுது! அதனால் தான், நான் அப்படி கேட்டேன்” என்று விளக்கிக் கூறினாள் அவளது தங்கை.

 

“அக்கா! நீ நிம்மதியாக இருக்கிற தானே?” என்று தமக்கையிடம் வினவினாள் யாதவி.

 

அவளது இந்த திடீர் கேள்வியில் திகைத்துப் போய் அவளை ஏறிட்டவளோ,”ஏன் திடீர்னு இப்படி கேட்கிறடி?” என்று அவளிடம் கேட்டாள் யக்ஷித்ரா.

 

“அங்கே இருந்த வரைக்கும் நமக்கு நிம்மதியே கிடைக்கலையே? என்னை விடவும் நீ தான் ரொம்ப மனசளவுல கஷ்டப்பட்ட! அதுக்கப்புறம் கல்யாணம் ஆகி இங்கே வந்துட்ட. இவ்வளவு நாளும் நாங்க இங்கே வந்தது இல்லை. ஆனால் இன்னைக்கு வந்திருக்கோம். அதுவும் இல்லாமல் உன்னோட முகத்தில் ஒரு தெளிவு தெரியுது! அதனால் தான், நான் அப்படி கேட்டேன்” என்று விளக்கிக் கூறினாள் அவளது தங்கை.

 

“ம்ஹ்ம். இதை நானும் உன்கிட்ட கேட்கனும்னு நினைச்சேன் டா‌. அதுக்குள்ளே இவளே கேட்டுட்டா. நீ சந்தோஷமாக இருக்கிற தானே?” என்கவும்,

 

“நான் மனசளவுல ரொம்பவே மாறிட்டேன்! அது இப்போ எல்லாம் எனக்கே தெரியுது ம்மா. அவர், அத்தை, மாமா என்னை நல்லா பார்த்துக்கிறாங்க! அதுவும் என் புருஷன் தான் எனக்கு இந்தத் தெளிவைத் கொண்டு வந்தார். அவ்வளவு பாசிட்டிவ் ஆகப் பேசுவார்! நான் இவ்வளவு நாளாக இவங்க மூனு பேர் கிட்டேயும் தள்ளி நின்னது தப்புன்னுப் புரிஞ்சுக்கிட்டேன்!” என்று அவர்கள் இருவரிடமும் அனைத்தையும் மறைக்காமல் ஒப்புவித்தாள் யக்ஷித்ரா.

 

அதைக் கேட்டவுடன், மீனா மற்றும் மாதவியின் விழிகளில் நிம்மதி பரவிற்று. எங்கே தங்கள் வீட்டுப்பெண் இப்படியே எதன் மீதும் பற்று இல்லாமல் இருந்து விடுவாளோ என்று அவர்கள் இருவரும் பயந்து இருந்தார்கள்.

 

“இந்த மாற்றத்தைத் தான் நாங்க உங்கிட்ட இருந்து எதிர்பார்த்தோம் மா” என்று அவளிடம் கூறி விட்டு மெல்லிய புன்னகையை உதிர்த்தார் மீனா.

 

“உங்களுக்கும் தாங்க்ஸ்” என்று தங்கள் இருவரையும் பார்த்துக் கூறியவளைப் புரியாமல் பார்த்தனர் அவளது தாய் மற்றும் தங்கை.

 

“எதுக்கு?” என்ற கேள்வியை எழுப்பியதும்,

 

“நீங்க ரெண்டு பேரும் இங்கே வந்ததுக்குத் தான்!” என்று பளிச்சென்று பதிலைச் சொன்னாள் யக்ஷித்ரா.

 

“அடியேய்! இதுக்கெல்லாம் தாங்க்ஸ் சொல்றப் பார்த்தியா?” என அவளது முதுகில் வலிக்காமல் அடித்தார் மீனா.

 

“ஆமாம். உன்னோட முடியலை க்கா!” என்று அவளிடம் கூறிச் சலித்துக் கொண்டாள் யாதவி.

 

“நீங்க என்னச் சொன்னாலும் நான் இதுக்கு உங்களுக்குத் தாங்க்ஸ் சொல்லித் தான் ஆகனும்!” என்றாள் யக்ஷித்ரா.

 

“ஹேய்! நமக்குள்ளே அதெல்லாம் எதுக்குடா?” என்று மகளைச் சமாதானப்படுத்தினார் அவளது அன்னை.

 

“எனக்குச் சொல்லனும்னு தோனுச்சு ம்மா. அதான்!” என்றவளோ,

 

அப்போது தான், ஞாபகம் வந்தவளக,”அவர் வந்துட்டார் போல ம்மா. எங்கிட்ட மூச்சே விடாமல் அவங்களே எல்லா வேலையையும் பார்த்துருவாங்க! நானும் போய்ச் சமையலுக்கு ஹெல்ப் பண்றேன். நீங்க தூங்கனும்னா கூடப் படுத்துக்கோங்க” என்று தன் அன்னையிடம் தெரிவித்து விட்டுத் தங்கையிடம்,”நீ டிவி பாக்கனும்னா வந்து பாரு. இல்லைன்னா சிஸ்டமில் ஏதாவது வீடியோ பாரு” என்று வலியுறுத்தி விட்டு வெளியேறினாள் யக்ஷித்ரா.

 

அவள் நினைத்ததைப் போலவே தான், அவர்களது உரையாடலில் குறுக்கிடாமல், இங்கே அசைவ வகையறாக்களை வாங்கி வந்து தாயிடம் கொடுத்து விட்டு அவருக்குச் சமையலில் உதவினான் அற்புதன்.

 

“நான் நினைச்ச மாதிரி தான் பண்ணிட்டு இருக்கீங்க!” என்று தன் கணவன் மற்றும் மாமியாரிடம் கூறிக் கொண்டே அவர்கள் அருகில் போய் உட்கார்ந்து கொண்டுத் தானும் வேலையைப் பங்கிட்டுக் கொண்டாள்.

 

“நீ இங்கே வரக் கூடாதுன்னு தான் உன்னை அவங்க கூட உள்ளே அனுப்பி வச்சோம். அப்படியும் நீ வந்து வேலை பார்த்துட்டு இருந்தால் எப்படி?” என்று அவளைக் கடிந்து கொண்டார் கீரவாஹினி.

 

“நீங்க மட்டும் எப்படி இவ்வளவு வேலையைப் பார்த்துட்டு இருப்பீங்க? நானும் உங்களுக்கு ஹெல்ப் பண்ணுவேன் அத்தை!” என்று அவரிடம் கறாராக உரைத்து விட்டாள் யக்ஷித்ரா.

 

அவர்களது வாக்குவாதத்தைப் குறுஞ்சிரிப்புடன் பார்த்து விட்டுத் தன் வேலையைத் தொடர்ந்தான் அற்புதன்.

 

“நானும் காய் நறுக்கவா?” என்று தன்னிடம் கேட்ட அகத்தியனிடம்,

 

“வேண்டாம் ங்க. நாங்கப் பார்த்துக்கிறோம்” என்று அவரிடம் கூறி விட்டார் கீரவாஹினி.

 

வெளியே கேட்ட சம்பாஷணையை அவதானித்துக் கொண்டிருந்த மீனாவிற்கும், யாதவிக்கும் கூட இப்போது மன நிம்மதி இரட்டிப்பாகியது.

 

அவர்கள் வீட்டுப் பெண்ணை அவ்வளவு அனுசரணையாக நடத்துவதைப் பார்த்து யக்ஷித்ராவின் தாய் மற்றும் தங்கைக்கு உள்ளம் நெகிழ்ந்து போனது.

 

அதன் பின்னர், எந்த அசௌகரியத்தையும் உணராமல் அந்த அறைக்குள் தங்கி இருந்தார்கள் மீனா மற்றும் யாதவி.

 

சமையல் நடந்து முடிய சில மணி நேரங்கள் ஆகி விட்டிருந்தது.

 

“ம்மா! யாது! சாப்பிடலாம் வாங்க” என அவர்களை அழைத்துச் சாப்பாட்டு மேஜையில் அமர வைத்தாள் யக்ஷித்ரா.

 

“நீங்களும் உட்கார்ந்து சாப்பிடுங்க” என்று அவளையும், அவளது கணவன், மாமனார், மாமியாரையும் தங்களுடன் அமர்ந்து உணவுண்ணச் சொல்லிக் கேட்டுக் கொண்டார் மீனா.

 

அதனால், அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து மதிய உணவை ருசி பார்த்தனர்.

 

“சாப்பாடு பிரமாதமாக இருக்கு!” என்று தனது பாராட்டுக்களைத் தெரிவித்தாள் யாதவி.

 

“ஆமாம் சம்பந்தி. எல்லாமே வாய்க்கு ருசியாக இருக்கு” என்று தன் மகளுடைய கூற்றை ஆமோதித்துப் பேசினார் மீனா.

 

அதைக் கேட்டதும், அந்த உணவைச் சமைத்த மூவருக்கும் மனம் நிறைந்து போயிற்று.

 

அனைவரும் திருப்தியாகச் சாப்பிட்டு முடித்த கையோடு ஹாலிலேயே கூடி இருந்து விட்டனர்.

 

“இப்படி நீங்க இங்கே அடிக்கடி வந்தால் நல்லா இருக்கும் சம்பந்தி” என்று தனது அபிப்பிராயத்தை யக்ஷித்ராவின் தாயிடம் உரைத்தார் கீரவாஹினி.

 

“ஆமாம். எங்களுக்காக இல்லைன்னாலும் யக்ஷித்ராவுக்காக வந்துட்டுப் போங்க ம்மா” என்றார் அகத்தினியன்.

 

“இனிமேல் கண்டிப்பாக உங்க எல்லாரையும் பார்க்க அடிக்கடி வர்றோம் சம்பந்தி” என அவருக்கு வாக்கு கொடுத்தார் மீனா.

 

“நானும் முடிஞ்ச அளவுக்கு யக்ஷூவை அங்கே அழைச்சிட்டு வர்றேன் அத்தை” என்றுரைத்தான் அற்புதன்.

 

“சரிங்க மாப்பிள்ளை” என்று சொன்னார் அவனது மாமியார்.

 

அதன் பிறகு, நேரம் போனது கூடத் தெரியாமல் அனைவரும் பேசிக் கொண்டிருந்தார்கள்.

 

மாலையில் வீடு திரும்ப வேண்டும் என்பது மீனாவுக்கும், யாதவிக்கும் நினைவிற்கு வந்து விட,”நாங்க வீட்டுக்குக் கிளம்புற நேரம் வந்துருச்சு. ஆட்டோவுக்குக் கால் பண்ணிடவா” என்று அனைவரிடமும் வினவினார் மீனா.

 

அதைக் கேட்டவுடன், யக்ஷித்ராவின் முகம் சுருங்கி விட்டது.

 

        – தொடரும் 

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்