விடியலில் தான் கதிரவன் கண்ணசந்தான். அவன் கண்ணசருவதற்காகவே காத்திருந்தது போல அழகி மெல்ல எழுந்து குளித்து முடித்து வந்தாள்.
சிந்தனைகளோடு கழிந்த இரவு தந்த மனச்சோர்விற்கு அந்த விடியற்காலை குளியல் மிகவும் இதமாக இருந்தது. அவளது மனமும் சற்று லேசாகியிருந்தது.
எப்படியும் தன்னை இன்று பணிக்கு செல்ல கதிர் அனுமதிக்க மாட்டான். ராம்குமாரும் மூன்று நாட்கள் கழித்து பணிக்கு வா போதுமென்று கண்டிப்புடன் கூறியிருந்தான். ஆதலால் என்ன செய்வது என்று யோசித்த அழகி அதிரனை பள்ளிக்கூடத்திற்கு அனுப்ப வேண்டும் என்பதனால் அவனுக்கு பிடித்த உணவுகளை சமைக்கலாம் என்று அறைவிட்டு வெளியே வந்தாள்.
கூடத்தில் படுத்திருந்த கதிரை கண்டதும் அவளது கால்கள் அவனை நோக்கி எட்டு வைத்தன. மெல்ல அவனருகே அமர்ந்தவள் அவனது உறக்கத்தைக் கலைக்கா வண்ணம் பிறைநுதலில் முத்தமிட்டு கேசத்தைக் கோதியபடி அவனையே பார்த்திருந்தாள். பின் மெல்ல எழுந்து அடுக்களைக்குள் நுழைந்தாள்.
அதிரனுக்கு நெய் சோறும் முட்டைக்குழம்பும் என்றால் அலாதி பிரியம். அன்று அதனை செய்ய முடிவெடுத்த அழகி முட்டையை வேக வைத்து விட்டு நெய் சோற்றுக்கு தேங்காயை உடைத்து திருகி கெட்டியான பால் எடுத்தாள். பின் தேவையான வெங்காயம், தக்காளியை நறுக்கி வைத்து விட்டு நெய் சோற்றுக்கு தாளிக்கத் தொடங்கினாள்.
அந்த தாளிப்பின் மணம் அதிரனையும் கதிரவனையும் உறக்கத்திலிருந்து எழ வைத்தது. காலையே நல்ல மணத்தினால் கண் விழித்த இருவரும் நேரே அடுக்களைக்குத் தான் வந்தனர்.
“ஹா அழகி ஸ்மெல் சூப்பரா இருக்கு! என்ன பண்ற?” என்ற அதிரனின் குரலில் திரும்பியவள் கதிரும் அங்கு நிற்பதைக் கண்டு புன்னகைத்தாள்.
“உனக்கு பிடிச்ச நெய் சோறும் முட்டைக்குழம்பும்.”
“ஹை ஜாலி!”, கைத்தட்டி குதித்த அதிரனை கண்டு பெரியவர்கள் இருவருமே இதழ் மலர்ந்தனர்.
“ஆமா நாம எப்படி நம்ம வீட்டுக்கு வந்தோம்?”, அப்பொழுது தான் அதனையே கவனித்த அதிரன் வினவ, மற்ற இருவரும் நமட்டு சிரிப்பு சிரித்தனர்.
“நைட்டு நீ தூங்குனதுக்கு அப்புறம் தான் வந்தோம் அதி!” என்றாள் அழகி.
“அச்சச்சோ அப்போ கவி பாப்பாவுக்கு நான் இங்க வந்தது தெரியாதா? எழுந்ததும் அழுவாளே! நான் போய் அவளுக்கு கால் பண்ணிட்டு வரேன்.” என்ற அதிரனை தடுத்து தூக்கி கொண்ட கதிர்,
“அதெல்லாம் தேவையில்ல வெல்லக்கட்டி! மிருதுளா அத்தை அவளை பார்த்துப்பாங்க. நீ இப்ப ஸ்கூலுக்கு கிளம்பணும்ல வா நாம போய் பிரஷ் பண்ணிட்டு குளிச்சுட்டு வரலாம்.” என்றான்.
“அப்ப ஓகே! எங்கக்கூட தான் இருக்க போறீங்களா ஹீரோ?” என்று விழி விரித்து ஆவலாய் வினவியவனை கண்டு அழகாக சிரித்த கதிர், “ஆமா இன்னும் ரெண்டு நாளைக்கு இங்க தான் இருக்க போறேன்.” என்றதும் அவனது கன்னத்தில் முத்தம் பதித்தான் அதிரன்.
இருவரையும் சிறு சிரிப்போடு பார்த்திருந்தவள் கதிரின் அம்மா அங்கிருக்கையில் அதிரன் மிருதுளாவிற்கு அழைக்க இருந்ததை தடுத்ததற்கு கண்களால் கதிருக்கு நன்றி நவில்ந்தாள். அவனோ வசீகரமாய் புன்னகைத்து வைக்க, பெண்ணவள் சட்டென்று திரும்பிக் கொண்டாள்.
அவன் சற்று சத்தமாக சிரித்தபடியே அதிரனோடு செல்ல, அழகி நாக்கை கடித்துக் கொண்டு சமையலில் கவனமானாள்.
இருவரும் குளித்து விட்டு கிளம்பி வரவும் அழகி சமையலை முடிக்கவும் சரியாக இருந்தது.
“அதி குட்டிக்கு காலைல சாப்பிட என்ன வேணும்?” என்று இருவருக்கும் தயாராய் வைத்திருந்த காபியை தந்துக் கொண்டே அழகி வினவினாள்.
“பொடி தோசை.” என பட்டென்று பதிலளித்த அதிரனை கண்டு சற்றே முகம் சுனங்கினாள்.
“மாவில்ல தங்கம். நாளைக்கு கண்டிப்பா பொடி தோசை செஞ்சு தரேன். இப்ப பாஸ்தா இருக்கு செஞ்சு தரட்டுமா?”
“சரி அழகி! பாஸ்தா ஓகே தான். நான் போய் என் புக்ஸெல்லாம் எடுத்து வைக்கிறேன்.” என்று அதிரன் அங்கிருந்து நகர்ந்தான்.
“பாஸ்தா நான் செய்யட்டுமா?”, கதிர் வினவினான்.
“தெரியுமா?”
“நீ நான் கேக்குறத மட்டும் எடுத்து குடு போதும்.” என்றவன் பதிலுக்குக் காத்திருக்காது காபிக் கோப்பையோடு அடுக்களைக்குள் நுழைந்தான்.
அவளும் அவன் எப்படி செய்ய போகிறான் என்கிற ஆவலோடு உள்ளே நுழைந்தாள்.
“முதல்ல காபி குடிப்போம். அப்புறம் ஆரம்பிப்போம்.” என்றவன் அவளுக்கான கோப்பையை எடுத்து அவளிடம் நீட்ட, மறுக்காது வாங்கிக் கொண்டாள்.
“நைட் தூங்கலயா மா?”
“இல்லை தூக்கம் வரல.”
“சாரி மா. அவங்க திடீர்னு வருவாங்கனு எனக்கு தெரியல.”
“நீ எதுக்கு சாரி கேக்குற? அவங்க வந்ததால இல்லை. அவங்களுக்கு விஷயம் தெரிஞ்சுடுச்சுனு தோணுது.”
“எனக்கும் அப்படித்தான் தோணுது. நான் சொல்றது வேற அவங்களா தெரிஞ்சுக்கிறது வேற. இது கொஞ்சம் சிக்கல் தான். பட் நான் பார்த்துக்குறேன். நீ ரொம்ப குழப்பிக்காத.”
“அது மட்டும் தூக்கம் வராததுக்கு காரணம் இல்ல.” என்றவளை வேறென்ன என்று புருவம் நெரித்துப் பார்த்தான்.
“அதிய லீகலா தத்தெடுக்க முடிவு பண்ணி நேத்ரா அக்கா மூலமா அந்த வேலைய பார்த்துக்கிட்டு இருந்தேன். ஏன்னா நாளைக்கு அதிய சொந்தம் கொண்டாடி யாரும் வரக்கூடாதில்ல. அப்படி வந்தா அவன் ஹெல்த்துக்கு அது நல்லதில்ல. இப்ப அந்த வேலை கிட்டத்தட்ட முடிஞ்சுருச்சு. உன்னையும் லீகல் கார்டியனா சேர்க்கணும் அதுக்கு உன் டாக்குமென்ட்ஸ் சிலது வேணும்.”
“அதுக்கென்ன தாராளமா தரேன்.” என்று கதிர் முகம் மலர்ந்தான்.
“அது மட்டும் பத்தாது. நாம ரெண்டு பேரும் இன்னும் ரெண்டு நாள்ல திருச்சிக்கு போய் அந்த வேலைய கையோட முடிஞ்சுட்டு வரணும். உன்னால வர முடியுமா?”
“வர முடியுமாவா? இது தான் எனக்கு முதல் வேலையே. ரெண்டு நாள்ல நாம திருச்சிக்கு கிளம்புறோம்.”
“அப்ப பொட்டிக்?”
“அதை பார்த்துக்க ஆள் இருக்கு. என்னென்ன டாக்குமென்ட்ஸ் வேணும்னு மட்டும் சொல்லு?” என்றவனை நெகிழ்ச்சியாகப் பார்த்தாள்.
அவன் விரும்பும் தொழிலை இரண்டாம் இடத்தில் வைத்து தன்னையும் அதிரனையும் முன்னிலையில் வைக்கிறானே! என்று நெகிழ்ந்து கண்க்கொட்டாது பார்த்திருந்தாள். அவளின் இமைக்காதப் பார்வை கண்டு அந்த குசும்பன் கண்ணடித்து வைக்க, அவள் செல்லமாய் அவனுக்கு இரண்டு அடி வைத்தாள்.
“டைமாச்சு. என்னென்ன வேணும்னு சொல்லு நான் எடுத்து தரேன்.” என்ற அழகியை கண்டு சிரித்த கதிர் தேவையானவற்றை கூற அவள் ஒவ்வொன்றாய் எடுத்து தந்தாள்.
அவன் சமைப்பதை அருகே நின்று ஆர்வமாக பார்த்தவள் அவனது செய்முறையை மனதில் பதிய வைத்துக் கொண்டாள். அவன் இரசித்து சமைப்பதை கண்டவள், “பாஸ்தானா ரொம்ப பிடிக்குமோ?” என்று கேட்டாள்.
“ம்ம் பிடிக்கும். ஆனா அடிக்கடி சாப்பிடுறதில்ல.”
“அதிக்கு சவுத் இந்தியன் ஃபுட்ஸ்தான் ரொம்ப பிடிக்கும்.”
“உனக்கு?”
“எனக்கு பிடிச்சதுனு எதுவுமில்லை.” என்று மெலிதாக இதழ் வளைத்தவளை,
“அது எப்படி பிடிக்காம இருக்கும்?” என்று விடாது கேள்வியில் பிடித்துக் கொண்டான்.
பெருமூச்சு விட்டு “இதுதான்னு இல்ல. கொஞ்சம் ஸ்பைசியா எந்த சாப்பாடுனாலும் பிடிக்கும். அதுக்குனு அதிக காரமா இல்லை. ஓரளவு காரமா சாப்பிடுவேன்.” என்றவளை கண்டு மென்னகைத்தவன்,
“அவ்வளோ தானே! விடு அசத்திடுவோம்.” என்றிட அவளும் புன்னகைத்தாள்.
அவளிடம் பேசிக்கொண்டே அவனும் விரைவாக பாஸ்தாவை செய்து முடிக்க, அதிரனுக்கு ஒரு தட்டில் எடுத்துப் போட்டு கொண்டு போய் அழகி கொடுக்க, அதிரன் அதனை மிகவும் இரசித்து உண்பதைக் கண்டு மற்ற இருவரும் புன்னகைத்தனர்.
அவன் உண்டதும் அவனை பள்ளி வாகணத்தில் தான் ஏற்றிவிட்டு வருவதாக கதிர் கூறவும் சரியென்ற அழகி அடுக்களையை ஒழுங்குப்படுத்தச் சென்றாள்.
அவள் பாத்திரங்களை துலக்கி அனைத்தையும் எடுத்து வைத்து அடுப்பை சுத்தம் செய்து முடிக்கும்பொழுது கதிரும் அதிரனை பள்ளிக்கு அனுப்பி வைத்துவிட்டு வந்திருந்தான்.
வந்தவன் நேராக வந்து அழகியை பின்னிருந்து அணைக்க, அழகி திடுக்கிட்டு திரும்பி கதிரை கண்டு விழித்தாள்.
“என்னாச்சு?”
“ஒன்னும் இல்ல. கொஞ்சம் பயந்துட்டேன்.” என்ற அழகிக்கு படபடப்பு நிற்கவேயில்லை.
“சரி வா நாமளும் சாப்பிடலாம்.” என்றவன் இருவருக்கும் இரண்டு தட்டுகளில் உணவை எடுத்து வைத்துக் கொண்டு கூடத்திற்கு வந்தான்.
நெஞ்சை அழுத்தி படபடக்கும் இதயத்தை நிதானப்படுத்த முயன்றபடி அழகி அவனை பின் தொடர்ந்தாள்.
இருவரும் எதிர் எதிராக அமர்ந்தபடி உண்ண தொடங்கினர். அழகிக்கு இன்னும் படபடப்பு அடிங்கிய பாடில்லை. எதுவும் பேசாது உண்டு கொண்டிருந்த கதிர் அவளது முகத்தைக் கண்டதும் ஏதோ சரியில்லை என்று உணர்ந்தான்.
“என்னாச்சு?”
“ஒன்னுமில்லையே.” என்றவள் பதற்றமானாள்.
“இல்ல. ஏதோ சரியில்ல.”
“அதெல்லாம் இல்ல. நான் நல்லாதான் இருக்கேன். சாப்பிடு கதிர்.” என்றவளை சில கணங்கள் உறுத்து நோக்கினான்.
“பிடிக்கலயா?” என்றவன் கேட்டதும் பதறி துடித்து அவனை பார்த்தாள்.
“இல்லை கட்டிப்பிடிச்சது பிடிக்கலயானு கேட்டேன்.” என்றதும் அவளது விழிகள் குளம் கட்டின. சில கணங்கள் அமைதி காத்தாள்.
“பிடிக்கலனு இல்லை கதிர். பயமாயிருக்கு இதுவும் நிலைக்காம போய்டுமோனு பயமாயிருக்கு.” என்று மெல்லிய குரலில் உரைத்தவளின் குரலில் நடுக்கம் இருந்தது.
எழுந்து அவளருகே சென்றவன் தோளில் கைப்போட்டு அணைத்துக் கொண்டான்.
“அந்த பயம் தேவையில்லாதது டி. நான் உன்னை விட்டு எங்கயும் போக மாட்டேன். உன் வலி என்னனு எனக்கு புரியுது. ஆனா நீ என்கிட்ட முழுசா மனசுவிட்டு பேசி நெருங்கி வந்தாதான் நான் அதுக்கு மருந்து போட்டு மறக்க வைக்க முடியும். இந்த நிமிஷம் உன் மனசுல என்ன இருக்கோ அதை சொல்லு.” என்றவனது நெஞ்சில் தலை சாய்த்துக் கொண்டாள்.
“பழச முழுசா மறக்கணும். எனக்கு உன்னை பிடிக்க ஆரம்பிச்சதுலேர்ந்து அது கொஞ்ச கொஞ்சமா மறந்துக்கிட்டு தான் இருக்கு. ஆனா இப்போ வேறோரு பயம்.” என்றவள் நிறுத்த, “என்ன பயம் டி?” என்று கேட்டான்.
“உங்க அம்மாவுக்கும் அப்பாவுக்கும் நம்ம கல்யாணம் நடக்குறதுல சுத்தமா விருப்பமிருக்காது. அவங்களால மட்டுமில்ல வேற எதுனாலயும் நமக்குள்ள பிரிவு வந்துடக் கூடாதுனு பயமா இருக்கு.” என்றதும் கதிரின் கண்கள் கலங்கின.
“அவ்வளோ லவ் பண்றியா டி என்னை?” என்றவனை நிமிர்ந்து பார்த்தவள் ஆமாமென்று தலையசைத்து மெலிதாக இதழ் வளைக்க, அவனும் இதழ் மலர்ந்தான்.
“அப்புறம் எதுக்குடி பயம்? நம்மக்குள்ள இருக்குற இந்த லவ் நம்மளை என்னைக்கும் பிரிய விடாது. வேற எதுனாலயும் நம்மள பிரிக்கவும் முடியாது. உன் பயத்துக்காக இன்னைக்கு ஒரு ப்ராமிஸ் பண்ணிப்போமா?” என்றவன் கேட்கவும் அவள் என்ன என்பது போல் பார்த்தாள்.
“நமக்குள்ள என்ன சண்டை வந்தாலும் அது அன்னைக்கு நைட்டுக்குள்ள நாம பேசி சரி பண்ணிக்கணும் சரியா?” என்றவன் கை நீட்ட, அவள் புன்னகைத்து அவனது கரத்தில் தனது கரம் சேர்த்தாள்.
“லவ் யூ டி அழகி!” என்ற கதிர் அவளது கன்னத்தில் முத்தமிட, அவள் சிரித்தாள்.
“சரி இப்பவாவது ஒழுங்கா சாப்பிடு.” என்று அவன் அவளுக்கு ஊட்ட, அவள் அவனுக்கு ஊட்ட, என்று இருவரும் உண்டு முடித்தனர்.
அழகி தட்டுகளை கழுவி கொண்டிருக்க, கைக்கழுவி விட்டு அவளது முந்தானையில் கைத்துடைத்த கதிர் அவளை பின்னிருந்து அணைத்தான்.
அவனது அணைப்பில் வித்தியாசத்தை உணர்ந்தவள் மெல்ல நெளிந்தாள்.
“என்ன கதிர்?” மெல்லிய குரலில் அவள் கேட்க,
“கிஸ் வேணும்?” என்றவன் அவளது காதோரம் கிசுகிசுக்க, உடல் கூசி திரும்பிய அழகி அவனது கண்களை பார்த்தாள்.
அவனது காதலும் கெஞ்சலும் ஒருசேர அதில் மிளிர, அவளது இதயம் வேகமாக துடித்தது.
“புரியலயா முத்தம் வேணும்.” அவன் கொஞ்சலாய் கேட்டான்.
“இப்ப தானே கன்னத்துல குடுத்த?”, அவள் திக்கி திணறி கேட்டாள்.
“ப்ச் அது வேற டி. கன்னத்துல நெத்தில தர்றதெல்லாம் அன்புல தர்றது. நான் கேக்குறது லவ்வுல.” என்றவனது விழிகள் அவளது இதழ்களில் பதிய, அவள் உதடுகளை ஈரமாக்கி எச்சிலை கூட்டி விழுங்கினாள்.
அவளது இதயம் தாறுமாறாகத் துடித்துக் கொண்டிருந்தது.
“ப்ளீஸ் டி. ஒன்னே ஒன்னு.” என்றவன் கெஞ்சினான்.
தன்னை விரும்புகிறோம் தானும் அவனை விரும்புகிறோம் என்று அவன் உரிமை எடுக்காது ஒரு முத்தத்திற்கு அவளது அனுமதியை வேண்டி நின்றது அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. தான் எப்பேற்பட்ட ஆணை காதலிக்கிறோம் என்று மகிழ்வுறச் செய்தது. எத்தனை பெயருக்கு இந்த கொடுப்பினை இருக்குமென்று பெருமிதம் கொள்ளச் செய்தது. மனம் நெகிழ்ந்தவள் மெலிதாக புன்னகைத்து தலையசைக்க, அவன் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி. பளிச்சென்று பிரகாசமாக புன்னகைத்தவன் மெல்ல மெல்ல அவளது இதழோடு தன் இதழ் சேர்த்தான்.
மென்மையாக முத்தமிட்டான். அவளை அணைத்துக் கொண்டான். அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. மகிழ்ச்சியாக இருந்தது. அவளது கண்கள் கலங்கின.
அவனது சட்டை ஈரமாவதை உணர்ந்தவன் மெல்ல அவளது முகம் நிமிர்த்தினான். மென்னகைப் புரிந்தாள்.
“காதல் மட்டுமே இருந்த முதல் முத்தம். அதான் சந்தோஷத்துல கொஞ்சம் எமோஷ்னலாகிட்டேன்.” என்றவளை கண்டதும் தான் அவனுக்கு நிம்மதி பெருமூச்சே வந்தது. மென்மையாக சிரித்து அவளை அணைத்துக் கொண்டான்.
“சரி வா நைட்டும் தூங்கல. கொஞ்ச நேரம் தூங்கு.” என்று அவளது தோளணைத்தபடியே படுக்கை அறைக்கு அழைத்துச் சென்று அவளது தலையை தன் மடியில் சாய்த்துக் கொண்டான்.
அவளும் அவனது மடியில் படுக்க, அவன் தலைக்கோதிவிட்ட சுகத்தில் சில நிமிடங்களிலேயே நன்றாக உறங்கிப் போனதிலிருந்தே அவளது மனம் நிம்மதியடைந்திருப்பதை உணர்ந்தான். அவளையே புன்னகையோடு பார்த்திருந்தவன் தானும் மெல்ல உறங்கிப் போனான். இருவரது நிம்மதியான உறக்கத்தை வெகு நாட்கள் கழித்து அனுபவித்துக் கொண்டிருந்தனர்.