Loading

அழகியை பார்த்துக் கொண்டிருந்த கதிருக்கு அவளின் முகபாவம் கண்டு அடுத்து எதையும் கேட்க விரும்பவில்லை என்று கூறிட நா துடிதுடித்தாலும் மனம்விட்டு பேச விழைபவளை தடுக்கவியலாது தவிக்கும் நெஞ்சோடு அமர்ந்திருந்தான். நிமிடங்களாய் நீடித்த மௌனத்தை தொண்டையை கணைத்து கலைத்த அழகி நிமிர்ந்து அமர்ந்தாள். ஆனால் அவனை பார்க்காது மழையையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவளின் கணைப்பு அவள் வலியை விழுங்கிய ஒலியாகவே அவனுக்குத் தோன்றியது.

“அங்க கதவ திறந்தது ஹவுஸ் ஓனரோட பொண்ணு. அவள பார்த்தது அதிர்ச்சி இல்ல அவள அப்படி ஒரு கோலத்துல பார்த்தது தான் அதிர்ச்சி. அதை எப்படி சொல்றதுனு தெரியல.” சற்றே இடைவெளிவிட்டு மீண்டும் தொடர்ந்தாள்.

“ஒரு பொண்ணு செக்ஸ்லேர்ந்து பாதில எழுந்து வந்தா என்ன கோலத்துல இருப்பாளோ அந்த கோலத்துல இருந்தா. என்னனு கேக்குறத்துக்குள்ள உள்ளேர்ந்து ஒரு குரல் எனக்கு ரொம்ப பரிட்சியமாண ஒரு குரல் அவளை வரசொல்லி கூப்பிட்டது எனக்கு இன்னும் அதிர்ச்சியா இருந்தது. என்னை பார்த்ததும் உள்ளேர்ந்து கூப்பிட்ட குரல கேட்டதும் அவ முகம் திகிலடஞ்சுருச்சு. எனக்கும் திகிலாதான் இருந்தது. உடனே அவள தள்ளிவிட்டு உள்ள ஓடி போனா அவ ரூம்ல அவர் இருந்தார். என்னை பார்த்ததும் அவசர அவசரமா பெட்ஷீட்ட உடம்புல சுத்திக்கிட்டு அழகி அது வந்துனு தடுமாறுனார். எனக்கு அழுகை, ஆத்திரம் எல்லாம் ஒரே நேரத்துல வந்துடுச்சு. அங்க நிக்க முடியல காலெல்லாம் நடுங்குச்சு. விறுவிறுனு வெளில வந்தா அந்த பொண்ணு அதே இடத்துல சாவியோட நின்னுட்ருந்தா. என்னை பார்த்த அவ கண்ணுல ஒரு பயம் தெரிஞ்சுச்சு. அவள ஓங்கி ஒரு அறை விட்டுவிட்டு சாவிய பிடுங்கிட்டு விறுவிறுனு வீட்டுக்கு வந்து கதவ திறந்து அப்படியே உக்கார்ந்துட்டேன். அஞ்சு நிமிஷத்துல அவரும் வந்தார். எனக்கு அவர பார்க்கவே பிடிக்கல. அழகி அது வந்து ஏதோ தெரியாமனு ஆரம்பிச்சார். எனக்கு எங்கேர்ந்து அவ்ளோ கோவம் வந்துச்சுனு தெரில. படார்னு எந்திரிச்சு அவரை அறைஞ்சுட்டேன். அவர் நான் அப்படி செய்வேன்னு எதிர் பார்க்கல போல அவர் அதிர்ச்சியாகி என்னையே பார்த்துட்ருந்தார். என்னது தெரியாமயா? தெரியாம செய்ற காரியமா இது? அதுவும் சின்ன பொண்ணு கூட? னு அவரு சட்டைய பிடிச்சு உலுக்கி எடுத்துட்டேன். கொஞ்ச நேரம் என்னை பேச விட்டவரு சட்டுனு என் கால பிடிச்சு மன்னிச்சுரு அழகி ஏதோ சபலத்துல தப்பு பண்ணிட்டோம்னு மன்னிப்பு கேட்டாரு. ஏனோ எனக்கு மனசு சமாதானமாகல. எதுவும் பேசாம ரூம்குள்ள போய் கதவ சாத்திட்டேன். அப்புறம் கொஞ்ச நேரம் கதவ திறக்க சொல்லி தட்டினாரு நான் திறக்கலங்கவும் வண்டிய எடுத்துட்டு வெளிய போய்ட்டாரு.”

“அப்புறம் நான் வெளில வந்து நேரா ஓனர் வீட்டுக்கு போனேன். அங்க அந்த பொண்ணு பயத்துல முகம் வெளிரி உட்கார்ந்துருந்துச்சு. என்னை பார்த்தும் எழுந்தவ என் கையப்புடிச்சி அம்மா அப்பாக்கிட்ட சொல்லிடாதீங்க அக்கானு கெஞ்சுனா. நான் அதெப்படி சொல்லாம இருக்க முடியும் படிக்கிற வயசுல செய்யுற விஷயமா செஞ்சுருக்கீங்கனு திட்டிட்டு எத்தனை நாளா இது நடக்குதுனு கேட்டேன். அதுக்கு அவ அழுதுக்கிட்டே நான் லவ் பண்ண பையன் என்னை ப்ரேக் அப் பண்ணிட்டு போய்ட்டான். அதுலேர்ந்து எனக்கு அந்த ஃபீலிங் வரும்போதெல்லாம் கன்ட்ரோல் பண்ண முடியல. மாமாவுக்கும் என்னை பிடிச்சுருந்துது. அதனால இப்படி பண்ணிட்டோம்னு சொன்னா. அதுவும் ஆறு மாசமானு சொன்னா. மறுபடியும் அவள அறைஞ்சுட்டேன். ஆறு மாசமா திருட்டுத்தனம் பண்ணிட்டு என் கண்ணு முன்னாடி ஒன்னுமே நடக்காத மாதிரி எப்படி ரெண்டு பேரும் சுத்தறீங்கனு நாக்க பிடுங்குற மாதிரி நாலு கேள்வி கேட்டேன். அதுக்கு அவ சாரி அக்கா இனிமே இப்படி நடக்காது அப்பா, அம்மாக்கிட்ட மட்டும் சொல்லிடாதீங்க அக்கா தெரிஞ்சா செத்தே போயிடுவாங்கனு அழுது கெஞ்சுனா. எனக்கு இன்னும் கோவம் தான் வந்துச்சு. எனக்கு அப்போதான் ஸ்ட்ரைக் ஆச்சு. நீ காலேஜ் சேர்ந்தே நாலு மாசம் தான் ஆச்சு அதுக்குள்ள லவ்வு ப்ரேக் அப்புனா ஸ்கூல்லேர்ந்தேவானு கேட்டதுக்கு ஆமானு தலையாட்டுனா. நான் அதிர்ச்சில அப்படியே உட்கார்ந்துட்டேன். அவ சொல்றத கேட்க கேட்க தலையே சுத்துற மாதிரி இருந்துச்சு. மெதுவா எந்திரிச்சு வெளில வந்தா அவ பின்னாடியே அப்பா, அம்மாட்ட சொல்லிடாதீங்க அக்கா ப்ளீஸ்னு கெஞ்சிட்டே வந்தா. நான் திரும்பி ஒரு முறை முறைச்சதுல பயந்து அப்படியே நின்னுட்டா. நான் விறுவிறுனு வீட்டுக்கு வந்துட்டேன்.”

“எனக்கு அழுகை வந்தது. அதுக்கு மேல அந்த கல்யாண வாழ்க்கை வேணுமானு தோனுச்சு. அம்மாகிட்ட சொல்லலாமானு யோசிச்சேன். அப்புறம் அவங்க கஷ்டபடுவாங்களேனு யோசிச்சேன். இப்படியே யோசிச்சு யோசிச்சு என்ன பண்றதுனு தெரியாம தலைய பிடிச்சுக்கிட்டு உட்கார்ந்துருந்துப்ப தான் வெளில போயிருந்த அந்த பொண்ணோட அப்பாவும் அம்மாவும் திரும்பி வந்தத அவங்க கார் சத்தம் வச்சு தெரிஞ்சுக்கிட்டேன். உடனே எந்திரிச்சு போயி அந்த அம்மாவ கூப்பிட்டு நடந்ததெல்லாம் சொல்லி உங்க பொண்ண கண்டிச்சு வைங்க நான் என் புருஷன கண்டிக்கிறேன். ஒரு வாரத்துல வீடு காலி பண்றோம்னு சொல்லிட்டு வந்துட்டேன். அதுக்கப்புறம் அவங்க வீட்ல சண்டை நடக்குற சத்தம் கேட்டுச்சு. சரியா அப்ப தான் அவனும் வந்தான். வந்தவன் அவங்க வீட்ல கேக்குற சத்தத்த கேட்டுட்டு கோவமா உள்ள வந்தவன் அவங்க வீட்ல சொன்னியானு கேட்டான். நானும் ஆமா சொன்னேன்னு சொன்னேன். உடனே அறிவு இருக்காடி உனக்கு சின்ன பொண்ணுடி அவ. அவ ப்யூச்சர் என்னாகும்னு காச்சு மூச்சுனு கத்துனான். நான் ஒரே கேள்விதான் கேட்டேன். ரெண்டு பேரும் சேர்ந்து இருக்கும்போது அவ சின்ன பொண்ணுனு உனக்கு தெரிலயா?னு கேட்டதும் எங்கேர்ந்து தான் அவனுக்கு அவ்ளோ பலம் வந்துச்சுனு தெரில. ஏய்னு என் கழுத்த பிடிச்சான். நானும் அசராம போராடி அவன் கைய தட்டி விட்டேன். அவ ப்யூச்சர யோசிக்கிறியே என் வாழ்க்கை என்னாகும்னு யோசிச்சியா? னு கேட்டதுக்கு தெனாவெட்டா ஒரு பதில் சொன்னான் பாரு. அதை கேட்டு எனக்கு செம்ம ஷாக். அவனோட உண்மையான முகம் அப்பதான் தெரிஞ்சுது. அதுக்கு அழுவுறதா இல்ல என் விதிய நினைச்சு சிரிக்கிறதானே தெரில.”

நிறுத்திய அழகியின் இதழ்கடையோரம் விரக்தி புன்னகை.

“இதெல்லாம் கண்டுக்காம இருந்தா உன் வாழ்க்கை நல்லாருக்கும். நாம சந்தோஷமா குழந்தை பெத்துக்கிட்டு குடும்பமா வாழலாம் இல்லனா உன்னை டிவோர்ஸ் பண்ணிடுவேன்னு சொன்னான். ஷாக்ல கொஞ்ச நேரம் நான் எதும் பேசல. மதன்னு பேர் வச்சா பெரிய இவனா நீ? நீ வெறும் மதன்தான் மன்மதன் இல்ல. ஆமா அதென்ன இதெல்லாம் கண்டுக்காமனு சொல்ற? அப்போ இன்னும் யாராவது இருக்காங்களானு கேட்டேன். அதுக்கு அவன் கொஞ்சம்கூட யோசிக்காம தயங்காம தைரியமா நெஞ்ச நிமிர்த்திக்கிட்டு ஆம்பளன்ற திமிர்ல ஒரு பதில் சொன்னான். ஆமா டி இருக்காங்க. நீ சொன்னாலும் சொல்லிட்டியும் நான் மன்மதன் தான்‌. எனக்கு ஒரு பொம்பள பத்தாது. கடைசி வரைக்கும் ஒருத்தி கூடவே படுக்க முடியாது. என்கூட படிச்சவங்க, என் சீனியர்ஸ், என் ஜூனியர்ஸ், ஊர்ல ஸ்கூல்ல படிச்ச ரெண்டு பிள்ளைங்கனு லிஸ்ட்டு போட்டுட்டு போனான். எனக்கு தலையில இடியே இறங்குன மாதிரி இருந்துச்சு. நான் அப்படியே மடிஞ்சு உட்கார்ந்துட்டேன். கண்ணுல தண்ணி நிக்காம வந்துச்சு. அப்புறம் அவனும் பேசல நானும் பேசல. நான் அவன ஏன்டா என்னை ஏமாத்துனன்ற மாதிரி பார்த்தேன். மெதுவா என்கிட்ட வந்து உட்கார்ந்து என் கையப்பிடிச்சு இங்கபார் அழகி புரிஞ்சுக்கோ. எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும். நீ தான் என் பொண்டாட்டி வேற யாரும் இல்ல இருக்கவும் முடியாது. உனக்கு வேண்டியதெல்லாம் நான் செய்றேன். நாம குழந்தை பெத்துக்கிட்டு சந்தோஷமா வாழலாம். ஆனா நீ என் விஷயத்துல தலையிடக்கூடாது. ஓகேவானு அப்படியே பரிவா கேக்குற மாதிரி கேட்டான் பாரு எனக்கு வந்த கோவத்துக்கு அவன அறைஞ்சு தாலிய கழட்டி அவன் கைல குடுத்துட்டு இப்படி உன்கூட வாழ வேற ஆள பாரு. சீக்கிரம் டிவோர்ஸ் பேப்பர் வீட்டுக்கு வரும்னு சொல்லிட்டு அப்போதைக்கு என் கைக்கு கிடைச்ச என் துணிமணி பொருளெல்லாம் எடுத்துக்கிட்டு வீட்டை விட்டு வந்துட்டேன். அவன் அப்படியே பேயடிச்ச மாதிரி நான் அங்கேர்ந்து வர்ற வரைக்கும் உட்கார்ந்துருந்தான். நான் விறுவிறுனு வீட்ட விட்டு வந்துட்டேன்.”

இடைவெளிவிட்ட அழகியின் முகத்தில் ஆத்திரம் நிறைத்திருந்தது.

“வெளில வந்தப்புறம் எப்படி வீட்ல சொல்றதுனு தெரில. கஷ்டப்பட்டு படிக்க வச்சு கல்யாணம் பண்ணி குடுத்த மாமா என்ன நினைப்பாங்க இதை தாங்கிப்பாங்களானு யோசிச்சு அழுகையா வந்தது. அம்மாவ நினைச்சு தான் ரொம்ப கவலையா இருந்தது. மெதுவா மனச தேத்திக்கிட்டு நிதர்சனத்த ஏத்துக்கிட்டு கைல லக்கேஜ் நிறைய இருந்ததால டேக்ஸி புக் பண்ணி வீட்டுக்கு போய்ட்டேன். காலைல சந்தோஷமா போன புள்ள சாயுங்காலம் பெட்டியோட வந்து இறங்குனத பார்த்து அம்மா பதறிட்டாங்க. நான் வேகமா அம்மாவ உள்ள கூப்பிட்டு போய் அவங்க மடில படுத்து அழுதுட்டே எல்லாத்தையும் சொன்னேன். அம்மாவால புள்ள வாழ்க்கை இப்படி ஆகிடுச்சேனு தாங்கவே முடில. அவங்களும் அழுதாங்க. அப்புறம் சமாதானம் சொன்னாங்க. காலேஜ் போய்ட்டு வந்த தங்கச்சிக்கு எதுவும் தெரிய வேணாம்னு நானும் அம்மாவும் நார்மலா இருக்குற மாதிரி இருந்தோம். காலைல அம்மா மாமாகிட்ட விஷயத்த சொல்ல மாமாவுக்கும் அதிர்ச்சி தான். உன் அத்தை பேச்சை கேட்டு உன் வாழ்க்கைய கெடுத்துட்டேனேனு மாமா என் கைப்பிடிச்சு கலங்குனாரு. நான் நீங்க என்ன பண்ணுவீங்க என் விதினு சமாதானம் சொன்னேன். இதெல்லாம் பார்த்துக்கிட்டு இருந்த அத்தை அம்மாவ தனியா கூப்பிட்டு போய் என்ன பேசுனாங்கனு தெரில மாமாவும் அத்தையும் கிளம்புன அப்புறம் அம்மா மெதுவா ஆம்பளைங்க அப்படி இப்படி தான் இருப்பாங்க அனுசரிச்சு போமா இப்படி சட்டுனு டைவர்ஸ் அது இதுனு முடிவெடுக்கக் கூடாதுனு அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சாங்க. ஆனா நான் என் முடிவு இது தான்னு உறுதியா இருந்தேன்.”

“இப்படியே ஒரு வாரம் போச்சு. அவனோட அப்பா, அம்மா, தம்பினு எல்லாரும் ஒருநாள் வீட்டுக்கு வந்தாங்க. அவங்க அம்மாவும் அப்பாவும் மன்னிப்பு கேட்டு அவன் இனிமே ஒழுங்கா இருப்பான்னு மறுபடியும் அவன் கூட வாழ கூப்பிட்டாங்க. எனக்கு கோவம் தான் வந்துச்சு. நான் எதுவும் பேசல. அம்மா தான் சரினு சொல்லுனு சொல்லிட்டே இருந்தாங்க. அப்போ தான் அவனோட அம்மா ஒரு விஷயம் சொன்னாங்க. ஊர்ல ரெண்டு பேராட பழக்கம் இருந்ததுனு அவன் சொன்னது அவங்களுக்கு முன்னவே தெரிஞ்சுருக்கு. அவனுக்கு அவங்கக்கூட மட்டும்தான் பழக்கம்னு நினைச்சு கல்யாணம் பண்ணி வச்சா எல்லாம் சரியாகும்னு என்னை கல்யாணம் பண்ணி வச்சுருக்காங்க. என் அத்தைக்கும் இந்த விஷயம் தெரியும்னு சொன்னாங்க பாருங்க அங்க தான் நான் உடைஞ்சேன். ஆனாலும் என் முடிவுல நான் உறுதியா இருந்தேன். அவங்க கிட்ட உங்களுக்கு ஒரு பொண்ணு இருந்து உங்க பொண்ணோட புருஷன் உங்க பையன் மாதிரியே இருந்தா அப்பவும் உங்க பொண்ணுக்கிட்ட இத தான் சொல்வீங்களானு கேட்டேன். அவங்களால பதில் சொல்ல முடியல. எழுந்திரிச்சு போய்ட்டாங்க. போகும் முன்ன அவனோட தம்பி நீங்க கேட்ட எதுவுமே தப்பில்ல அண்ணி. நீங்க எடுத்த முடிவு தான் சரி. உங்களுக்கு அவன் வேண்டாம் அண்ணி. எனக்கும் இப்பதான் அவன பத்தி தெரியும் கல்யாணத்துக்கு முன்னாடியே அவன பத்தி தெரிஞ்சுருந்தா நான் இந்த கல்யாணத்தயே நடக்க விட்ருக்க மாட்டேன். இப்படி ஒரு குடும்பத்துல பொறந்தது அசிங்கமா இருக்கு. மன்னிச்சுருங்க அண்ணினு மன்னிப்பு கேட்டான். எனக்கு அவன் ஒருத்தனாவது என்னை புரிஞ்சுக்கிட்டானேனு கொஞ்சம் நிம்மதியாச்சு.”

நிறுத்திய அழகி திரும்பி கதிரை பார்த்து பேச துவங்கினாள்.

“அவங்க வந்துட்டு போனதுலேர்ந்து எங்கம்மா பதட்டமாவே இருந்தாங்க. என் முகத்தை பார்த்து பேசவேயில்ல. நான் என்ன ஏதுனு கேட்டப்ப ரெண்டு நாள் வரைக்கும் ஏதேதோ சொல்லி சமாளிச்சாங்க. மூனாவது நாள் நான் சொன்னாதான் ஆச்சுனு விடாப்பிடியா நிக்கவும் அவங்க சொன்னது தான் என்னை நொறுக்கி போட்டுச்சு.” என்றவள் குரல் கமற மேலே பேசினாள்.

“அவங்களுக்கும் அத்தைக்கு தெரிஞ்ச மாதிரியே விஷயம் தெரிஞ்சுருக்கு. ஆனா என்கிட்ட சொல்லவேயில்ல. எல்லாம் கல்யாணம் ஆனா சரியாகிடும்னு இருந்துருக்காங்க. நான் ஏன்மா இப்படி பண்ணனு கேட்டதுக்கு ஆம்பளைங்க அப்படி இப்படி தான் இருப்பாங்க அழகி. நம்ம ஊர்லயே எத்தனை பேரு அப்படி இருக்காங்க. அதனால தான் எனக்கு பெருசா படல. ஆனா நீ இப்படி ஒரு முடிவுக்கு வருவனு நான் எதிர்பார்க்கவே இல்ல டினு அழுதாங்க. உங்க அப்பாவுக்கும் கல்யாணத்துக்கு முன்ன ஒரு பொண்ணோட தொடர்பு இருந்துச்சு ஆனா கல்யாணத்துக்கு அப்புறம் உங்கப்பா என்னை தவிர யாரையும் பார்க்காம பார்த்துக்கிட்டேன். நீயும் மாப்பிள்ளைய அனுசரிச்சு அவர திருத்தி அவர்கூட வாழலாம் அழகி உன் பிடிவாதத்த விடுடினு கெஞ்சுனாங்க. எனக்கு கோவம் தான் வந்துச்சு. என்னம்மா பேசுற அவன் அவ்வளோ தெனாவெட்டா எப்பவும் நான் அப்படிதான் இருப்பேன்னு சொல்றான் அவன்கூட வாழ சொல்ற. என் முடிவுல நான் மாற மாட்டேன் மா. நான் அவன டிவோர்ஸ் பண்றது பண்றது தான்னு சொன்னேன். அதுக்கு அம்மா அப்போ உன் தங்கச்சி கல்யாணம் நடக்காதுடினு அழுதாங்க. எனக்கு புரில மா நான் டிவோர்ஸ் பண்றதுக்கும் அவ கல்யாணத்துக்கும் என்ன சம்மந்தம்னு கேட்டேன். அதுக்கு அம்மா, உங்க அத்தை நீ வாழா வெட்டியா வீட்ல இருந்தா உன் தங்கச்சிய தான் பையனுக்கு கட்டி வைக்க மாட்டேன்னு சொல்றா. உன் தங்கச்சியும் உன் மாமன் மவனும் காதலிக்கிறாங்க டி. அவங்க விரும்புறது ஊர் பூரா தெரியும்‌. அவங்க கல்யாணம் நடக்கலேனா நீயும் வாழாம வீட்ல வந்து உட்கார்ந்தா உன் தங்கச்சிய யார் கட்டிக்குவானு அழுதாங்க. அப்போ என்னை அவன்கூட சேர்ந்து வாழ சொல்றியா மானு கேட்டேன். தங்கச்சிக்காக டி. எனக்காக டி. நீ நினைச்சா மாப்பிள்ளைய திருத்த முடியும் டி கொஞ்சம் யோசி டினு சொன்னாங்க. நான் எதுவுமே பேசாம ரூமுக்கு போய் கதவு சாத்திக்கிட்டேன்.”

“எங்க அம்மாவா இப்படி பேசுனதுனு ஆச்சர்யம் ஒருபக்கம்னா அதிர்ச்சி இன்னொரு பக்கம். அடுத்து என்ன செய்றதுன்ற குழப்பம் வேற. அழுதேன் அன்னைக்கு முழுக்க சாப்பிடாம தண்ணிக்கூட குடிக்காம உட்கார்ந்து அழுதேன். நைட்டெல்லாம் தூக்கம் இல்லாம யோசிச்சேன். காலைல எழுந்து வெளிய வரும்போது என் தங்கச்சி என்னை பார்த்த பார்வைல ஒரு கெஞ்சல் ஒரு தவிப்பு இருந்துச்சு. அவளால வாய்விட்டு என்கிட்ட கேட்க முடியல. எல்லாருக்கும் அவங்கவங்க வாழ்க்கை தான் பெருசுனு தோனுச்சு. நேரா அம்மாக்கிட்ட போனேன். என்னால உன் பொண்ணு கல்யாணம் நிக்காதுனு சொன்னதும் அவங்க முகத்துல ஒரு சந்தோஷம். ஆனா அதுக்காக நான் அவன்கூட வாழ போறதில்ல. டிவோர்ஸ் வரைக்கும் நான் இங்க இருக்க பர்மிஷன் குடுங்க. டிவோர்ஸ் ஆனதும் நான் இந்த வீட்லேர்ந்து போயிட்றேன்னு சொன்னேன். அம்மா அழுதாங்க ஏன்டி இப்படிலாம் பேசுற உன் வாழ்க்கைய நீயே பாழாக்கிக்காதனு அழுதாங்க. என்னை பத்தி நீ கவலைப்பட வேண்டாம் நீ உன் பொண்ணு வாழ்க்கைய மட்டும் பாருனு சொல்லிட்டு திரும்பினேன். அப்போ நீ யாருடி நீயும் என் பொண்ணு தானேனு கேட்டாங்க. எனக்கு சிரிப்புதான் வந்தது. அவ செத்து ஒருநாளாச்சுனு சொல்லிட்டு கிளம்பி வேலைக்கு போய்ட்டேன். அம்மா அழுதாங்க. ஆனா எனக்கு சமாதானம் பண்ண தோணல. அப்புறம் ஒரு ஆறு மாசத்துல டிவோர்ஸ் கிடைச்சது. அங்க இருந்த ஆறு மாசமும் நான் தங்குறதுக்கு சாப்பிட்றதுக்குனு பணம் குடுத்தேன். அம்மாக்கிட்டயும் தங்கச்சிக்கிட்டயும் அவங்க எவ்வளோ கெஞ்சியும் பேசவேயில்ல. நான் வீட்ட விட்டு வெளில வர்ற கொஞ்ச நாளைக்கு முன்னாடி தான் அவங்க பேசினதெல்லாம் தப்புனு புரிஞ்சுருக்கும்போல. கிளம்பும்போது எதுவும் பேசாம அழுதாங்க. கையைத்தட்டி கொடுத்துட்டு அதுவரைக்கும் அவங்களுக்காக சேர்த்து வச்சுருந்த எழுபத்திஞ்சாயிரம் பணத்த அவங்க கைல கொடுத்து தங்கச்சி கல்யாண செலவ பார்க்க சொல்லிட்டு வந்துட்டேன். மாமாவ பார்க்க போனேன். பாவம் அவரால அத்தையையும் அவர் பையனையும் மீறி எனக்கு எதுவும் செய்ய முடியல. கலங்கிப் போய் நின்னாரு. நான் பரவால்ல மாமானு சொல்லிட்டு வந்துட்டேன்.”

விழிகளிலிருந்து வழிந்த இருதுளி நீரை துடைத்த அழகி மீண்டும் தொடர்ந்தாள். அவன் கண்களும் கலங்கியிருந்தது. அவளறியாது துடைத்துக் கொண்டவன் மேற்கொண்டு அவள் கூறியவைகளை அவளை பார்த்தவாறே கேட்டான்.

“வீட்லேர்ந்து வெளில வந்ததுக்கு அப்புறம் நேரா அதிரனோட அப்பா அம்மா வீட்டுக்கு தான் வந்தேன்‌. அவங்க தான் எனக்கு அடைக்கலம் தந்து ஆறுதல் தந்தாங்க. மெல்ல மெல்ல நான் அந்த விஷயத்துலேர்ந்து வெளில வந்துக்கிட்டுருந்தேன். அவங்களோட கொஞ்சம் நிம்மதியா போயிட்ருந்தது வாழ்க்கை‌. ஆனா அதுவும் நாலு மாசத்துல மொத்தமா போச்சு. ஒருநாள் சாயுங்காலம் அதி, நான், அவனோட அப்பா, அம்மா நாலு பேரும் வெளில போய்ட்டு அப்படியே காவேரி பாலத்துல நின்னுட்ருந்தோம். அப்போ அதியோட அம்மா பானி பூரி கேட்கவும் அவனோட அப்பா அவங்கள கூட்டிக்கிட்டு எதிர்ல இருந்த பானி பூரி கடைக்கு போக ரோட் க்ராஸ் பண்ணும்போது கருப்பு கார் ஒன்னு வந்து மோதி அக்ஸிடென்ட் ஆகிடுச்சு. ரெண்டு பேருமே அங்கயே அதி கண்ணு முன்னாடி இறந்துட்டாங்க. அதுலேர்ந்து அதி கருப்பு கார பார்த்தாலே பயப்பட ஆரம்பிச்சான். அப்புறம் அவங்க இறுதி சடங்கு முடிஞ்ச பின்னாடி அதி அம்மாவோட அண்ணா வந்து அதிய கூட அனுப்ப சொல்லி மிரட்டினாரு. அப்பதான் நேத்ரா அக்கா வந்து அவர்கிட்ட சண்டை போட்டு வெளிய அனுப்பி வச்சாங்க. நேத்ரா அக்கா தெரியும்ல நிரஞ்சனோட ப்ரண்ட். அவங்க அதி அம்மாவுக்கும் ப்ரண்ட். அப்புறம் அவங்கதான் நானும் அதியும் அங்க இருந்தா மறுபடியும் அதியோட வீட்லேர்ந்து வந்து யாராவது பிரச்சனை பண்ணுவாங்கனு அதிக்கும் மாறுதல் வேணும் அவனும் அதிர்ச்சிலேர்ந்து மீளனும்னு சொல்லி என்னையும் அதியையும் கொடைக்கானல் அனுப்பி வச்சாங்க. நிரஞ்சன் மூலமா ராம்குமார் சார்கிட்ட வேலையும் வாங்கி குடுத்தாங்க.” என்றவள் கண்களை அழுந்த துடைத்துக் கொண்டு அவனை பார்த்தாள்.

“அப்போ தான் முடிவு பண்ணேன். இனிமே அதி தான் என் மகன். அவன் தான் என் வாழ்க்கை. ஒரு ஆம்பள இப்படி தான் இருப்பான் அப்படி தான் இருப்பான் எப்படி வேணா இருப்பான்னு இந்த சமூகம் ஒரு கருத்த வச்சுக்கிட்டு பொம்பளைங்கள அடங்கி அனுசரிச்சு போக சொல்லுதோ அந்த கருத்தெல்லாம் உடைச்சு எறியனும்னு முடிவு பண்ணேன். இந்த சமூகத்துக்கு ஒரு ஆம்பள இப்படித்தான் இருக்கணும்னு எடுத்துக்காட்டா அதிரன வளர்க்க முடிவெடுத்தேன். அதையே வைராக்கியமா வளர்த்துக்கிட்டேன். நான் நினைச்சத கண்டிப்பா செஞ்சு முடிப்பேன்னு நம்பிக்கை இருக்கு. அதிரன நல்ல ஆம்பளயா இந்த சமூகத்துக்கு குடுப்பேன். ஆனா இதுல நீ இப்படி என்னை கல்யாணம் பண்ணிக்கனும்னு வருவனு நான் எதிர்பார்க்கவேயில்ல.” என்று இடைவெளி விட்டவள்,

“நான் என் வைராக்கியத்துலேர்ந்து மாறக்கூடாதுனு உறுதியா தான் இருந்தேன். ஆனா சில நாளா எனக்குள்ள ஒரு தடுமாற்றம் அது நான் போற பாதைக்கும் எனக்கும் நல்லதா கெட்டதானு பெரிய குழப்பம். அதுனால தான் என்னை பத்தி எல்லாமே உன்கிட்ட சொல்லிட்டேன். அதிரன பெத்தது யாரா வேணா இருந்தாலும் இப்ப அவன் என் மகன். அவன ஒருகாலத்துலயும் என்னால விட்டுக்குடுக்க முடியாது. நான் வாழ்க்கையே போயிடுச்சுனு இருந்தப்ப எனக்கு ஒரு பிடிப்ப கொடுத்தவன் அதிரன் தான்‌. அவனுக்காக தான் இந்த வாழ்க்கையே.” என்று கூறி அவனை நேருக்கு நேராக பார்த்தாள்.

“இப்பவும் இதுக்கப்புறமும் கடைசி வரைக்கும் என் வைராக்கியத்த ஏத்துக்கிட்டு அதிரன பிள்ளையா ஏத்துக்கிட்டு உன்னால வாழ முடியுமானு யோசிச்சு முடிவெடு கதிர்.” என்றாள்.

ஒன்றும் கூறாது அவளையே பார்த்திருந்த கதிர், இதழ்கடையோரம் சிறுநகையை உதிர்த்தான். அழகி புருவம் நெரித்து அவனை நோக்கினாள்.

“உன்னை பத்தி எல்லாமே தெரியும். அதுவும் ரொம்ப ரீசன்ட்டா தான். அன்னைக்கு அதிரன் பர்த் டேக்கு காட்டேஜ்க்கு வெளில ஏதோ ஒரு கார பார்த்துட்டு ஒளிஞ்சு நின்னியே. அப்போ உன் முகத்துல அவ்வளோ பயம் இருந்தது. அந்த கார்ல வந்தது யாரு என்னனு விசாரிச்சப்ப தான் அதுல வந்தது அதிரனோட மாமா ஃபேம்லினு தெரிய வந்தது. அப்படியே உன்னை பத்தியும் அதிரன பத்தியும் தெரிஞ்சுக்கிட்டேன். அப்ப தான் உன் மேல இன்னும் லவ் அதிகமாச்சு. அதிரன் உனக்கு மகன்னா எனக்கும் அவன் தான் முதல் மகன். நான் யோசிக்க இதுல எதுவுமே இல்ல. நீ தான் யோசிக்கணும். அவசரமில்ல, நிதானமா யோசிச்சு முடிவெடு எந்த முடிவா இருந்தாலும் நான் உன்கூட எப்பவும் உன் நலன்விரும்பியா இருப்பேன். உன்னையும் அதிரனையும் விட்டுவிட்டு என்னால எங்கயும் போக முடியாது.” என்றவனை அழகி அதிர்ந்து பார்த்துக் கொண்டிருக்க, அவனோ நிதானமாக எழுந்து வெளியே வானத்தை பார்த்தான்.

“மழை விட்ருச்சு. இப்படியே உட்காரம சீக்கிரம் வீட்டுக்கு போ. அதி வெயிட் பண்ணுவான். பை டி செல்லக்குட்டி.” என்றவன் கண்ணடித்துவிட்டு நில்லாமல் வண்டியை கிளப்பிக் கொண்டு செல்ல, அழகிக்குள் புயலடிக்க தொடங்கியது.

பத்து நிமிடம் வரை அங்கேயே, அவன் சென்ற திசையையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்த அழகி இருள தொடங்கவும் தான் தன்னுணர்வு அடைந்து மெல்ல வண்டியை கிளப்பிக் கொண்டு வீட்டிற்குச் சென்றாள்.

 

வருவாள்….

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்