Loading

 

துப்பாக்கி குண்டு வந்த திசையை கண்ட வசுந்தரா அதிர்வில் நிலைகுலைந்து இருக்க, ஜிஷ்ணு ஆத்திரத்தின் மறு  உருவமாக நகுலனை எரித்துக் கொண்டிருந்தான்.

இகழ்ச்சி புன்னகையை வெளிப்படுத்திய நகுலன், “இன்னும் எத்தனை தடவை ரெண்டு பேரும் என்கிட்ட இருந்து தப்பிக்க போறீங்க? உங்களை சுத்தி என் ஆளுங்க தான் இருக்காங்க. அவங்ககிட்ட இருந்து தப்பிச்சாலும் என் தோட்டாவுக்கு பதில் சொல்லி தான் ஆகணும்.” என்றவரின் புன்னகை சிரிப்பாக மலர்ந்தது.

திகைப்பில் இருந்து மீளாத வசுந்தரா, தன் வளர்ப்புத் தந்தையின் இந்த அவதாரத்தில் அவரை வெறித்திருக்க, அவரோ இப்போது நெருப்பாய் அவளை முறைத்தார்.

அந்நேரம், ஜிஷ்ணுவின் பின்னிருந்து ஒரு கால் அவனை எட்டி மிதிக்க எதிர்பாராத இந்த தாக்குதலில் அவன் முன்னே சென்று விழுந்தான்.

அங்கு நிச்சயமாக கௌரவை இருவருமே எதிர்பார்த்து இருக்கவில்லை.

கௌரவ் நகுலனை நோக்கி வெற்றி நகை புரிய, அதற்கு லேசாக தலையசைத்தவர், வசுந்தரா முன்பு வந்து அவளை பளாரென அறைந்தார்.

“உன்ன படிக்க ஊருக்கு அனுப்புனா, கண்ட நாயோட ஊர் மேஞ்சுட்டு இருக்க. அப்பவே உன்ன கண்ட துண்டமா வெட்டி போட்டு இருக்கணும். என் முட்டாள் அண்ணனால நீ இவளோ நாள் உயிரோட இருந்துட்டு இருக்க. அந்த ஆளுக்கு கொஞ்சம் கூட ஜாதி மேல பற்று இல்ல. எல்லாரையும் காப்பாத்துறேன். எல்லாருக்கும் நல்லது பண்றேன்னு லூசுத்தனமா பினாத்திட்டு இருந்தான்.

காலம் காலமா ஊர் மக்களும் நம்ம குடும்பமும் காப்பாத்தி வர்ற கௌரவத்தை இப்ப இருக்குற பொம்பள பிள்ளைங்க காதல்ன்ற பேர்ல நாசமாக்குதுங்க.” என கோபத்துடன் பொரிந்தவர், துப்பாக்கியை அவள் வயிற்றில் வைத்து அழுத்தினார்.

இத்தனைக்கும் நகுலன் மெத்த படித்தவர். சென்னையில் பிரபல கணினி நிறுவனம் ஒன்றை நிறுவி அந்த தொழிலில் வெற்றியை சுகிப்பவர். அங்கு இருந்து கொண்டே, வெள்ளைப்பாளையம் மக்களை ஆட்டுவிப்பவர். பண பலமும், அண்ணனின் பதவி பலமும் சேர்ந்து அவரை மிருகமாக மாற்றியது. அம்மிருக முகத்தை கவனமாக யாரிடமும் காட்டாமல் மறைத்து முகமூடி அணிந்து வாழ்பவர்.

படித்த படிப்பிற்கு சற்றும் சம்பந்தமில்லாது, உடலில் ஓடும் இரத்தம் அனைவருக்கும் சிவப்பானது என்றும் உணராது, ஜாதி வேறுபாட்டை தலையில் ஏற்றி, அவர் விருப்பப்படி காதல் கொண்ட இளஞ்சோடிகளின் பெற்றோர்கள் மனதில் விஷத்தை தீட்டுபவர். 

குழந்தை இல்லாத காரணத்தால், அண்ணனின் குழந்தையை தத்து எடுத்துக் கொண்டாலும், அவளை வளர்க்கும் முழு பொறுப்பும் அவரின் மனைவிக்கே உரியது. அவரை மீறி அவளுள் ஜாதி அமிலத்தை ஊற்றிட முடியவில்லை.

கணவனின் அரக்க குணத்தில் மனம் வெந்தே நோய் வாய்ப்பட்டு இறந்து போனதை ஏனோ வசுந்தரா அறியாமல் போனாள்.

அந்நேரம், இங்கு அவரின் தமையனும் ஊர் பெண்களை காணாது தவித்து, நடவடிக்கை எடுக்க முயல, அவரை அடக்குவதற்காகவே வசுந்தராவை ஊருக்கு அனுப்பி வைத்தார்.

தன் பெண்ணிற்காக, சிறிது காலம் பொறுமை காப்பார் என எண்ணிய நகுலனின் எண்ணம் நிறைவேறியது. ஆனால் அவள் ஜிஷ்ணுவின் மீது கொண்ட நேசம் அவரை வெறிப்பிடிக்க வைத்தது.

இருப்பினும் மகளின் குணம் பற்றி நன்கு அறிந்தவர், நேரம் வரும் வரை கவனமாக காத்திருந்தார்.

நகுலனை உணர்ச்சி துடைத்த முகத்துடன் பார்த்தவள், “ராதியோட சாவுக்கு நீ தான காரணம்?” எனக் கேட்டாள்.

அவளிடம் இருந்து மரியாதை தேய்ந்தத்தில் கடுப்பானவர், “ஆமா, நான் தான் காரணம். இந்த தர்மா பயல ஒட்டு மொத்தமா அடக்கி, உன்ன அவன்கிட்ட இருந்து பிரிக்கணும்ன்னு முடிவு பண்ணேன். அப்ப தான், அவ குமரன் கூட பேசுறது தெரிஞ்சு, இத பெரிய பிரச்சனையா மாத்த முடிவு பண்ணேன்.

ராதிகாவோட அப்பன் நான் என்ன சொன்னாலும் கேட்பான். அத எனக்கு சாதகமா பயன்படுத்திக்கிட்டேன்” என இளிவாய் அவர் இதழ் விரிக்க, அவள் குரல் நடுங்க, “அவள… அவள ரேப் பண்ணினது” என கேட்டு முடிக்கும் முன்,

“அன்னைக்கு அவ குமரனை பார்க்க தோப்புல நின்னுட்டு இருந்ததை பார்த்து, நான் தான் அவளை அங்கேயே கருவறுக்கணும்ன்னு அவளை போட்டு தள்ள ஆள் அனுப்பினேன். அந்த நேரத்துல தர்மாவும் உன் கூட தான கொஞ்சிட்டு இருந்தான். இத வச்சு அவன் மேல பழி போட நினைச்சேன். ஆனா அவனுங்க, குடி போதைல வேலைய காட்டிட்டானுங்க.

அப்பவும், என் பிளான் சொதப்பாம தர்மாவே அங்க வந்துட்டான். அதை வச்சு அவனை லாக் பண்ணலாம்ன்னு நினைச்சா, அந்த ராதிகா நாய் கடைசி வரை அவன் பேர சொல்லவே இல்ல. அப்பறம் அவளோட அப்பாவே, என் திட்டப்படி அவளை கிணத்துல போட்டுட்டு பழியை குமரன் மேல போட சொன்னதுல, எனக்கு வேலை மிச்சமாகிடுச்சு.

அதுலயும் தர்மா உனக்கு போன் பண்ணது தெரியவே கூடாதுன்னு, நீ அவனை கொஞ்சிட்டு பாத்ரூம் போன நேரத்தில உன் போன்ல செட்டிங்ஸ் – அ மாத்தி வைக்க வச்சேன்.

அது மட்டும் இல்ல. அப்பறமும் அவன் உனக்கு கால் பண்ண நோட்டிஃபிகேஷன் வராத படி, நீ ஷாக்ல இருக்கும் போது எல்லாத்தையும் டெலிட் பண்ணேன். எனக்கு உன்னை பத்தி நல்லா தெரியும். கோபம் வந்தா யார் என்னன்னு பாக்காம கோபத்தை காட்டிட்டு தான் யோசிப்பன்னு. அதுலயும் இந்த விஷயத்துல நீ லேசா கோபத்தை காட்டுனாலே அவன் உன்கூட சண்டை போடுவான்னு நான் கணிச்சேன். ஆனா நான் கணிச்சதை விட, எல்லா பிளானும் சிறப்பா இருந்துச்சு” என்றவர் எதையோ சாதித்த பெருமையில் கத்தி சிரித்தார்.

வசுந்தராவிற்கு சீற்றம் சூறாவளியாக சுற்றியது.

அவரோ, சட்டென பாவனையை மாற்றி, “ஆனா, அந்த தர்மா பைய, அமைச்சரை கைக்குள்ள போட்டுக்கிட்டு எம். எல். ஏ ஆகி என் கோபத்தை இன்னும் அதிகப்படுத்திட்டான்.

அவனை கொலை பண்ண தான் அன்னைக்கு காட்டுக்கு ஆள் அனுப்பினேன். ஆனா நீ, வெட்கமே இல்லாம, அவனை காப்பாத்தி விட்டுட்ட. இதுல மறுபடியும் முடிஞ்ச உறவை புதுப்பிக்க வேற பாக்குற இல்ல…? 

எல்லாத்துக்கும் மேல என் அண்ணங்காரன், நீ இந்த பயலை தான் கல்யாணம் பண்ணுவேன்னு சொன்னதை கேட்டு, நானே மாப்ள கேக்க போறேன்னு உளறிட்டு இருந்தான். உயிரோட இருந்தா தான கேட்பான்? அதான் உங்களை போடுறதுக்கு முன்னாடி அவன போட முயற்சி பண்ணுனேன். அதையும் இவன் ஒன்னும் இல்லாம ஆக்கிட்டான்.

உங்க ஆட்டம் இத்தோட முடிஞ்சுது. இங்கேயே ரெண்டு பேரும் பொணமா தான் கிடக்க போறீங்க…” என்றார் வஞ்சத்துடன்.

“யார் இங்க பொணமா இருக்க போறான்னு கூடிய சீக்கிரம் தெரியும் டா…” ஜிஷ்ணு கட்டையை வைத்து ஓங்கி நகுலனின் தலையில் அடிக்க, அதில் தடுமாறியவர், கீழே விழ போக, கௌரவ் அவரை பிடித்துக் கொண்டான்.

கூடவே, ஜிஷ்ணுவின் பார்வையில் மிரட்சி ஏற்பட்டாலும், எப்படியும் நகுலன் அவனை தீர்த்து கட்டிவிடுவார் என்று உறுதியாக நம்பியவன், அவனை அடிக்க போக, அடுத்த நொடி ஜிஷ்ணு அவனை சப்பென அறைந்திருந்தான்.

“துரோகி, கூடவே இருந்துட்டு எனக்கே துரோகம் பண்றியா?” என மீண்டும் அடித்திட, அதற்குள் நகுலனின் ஆட்கள் அவனை சுற்றி வளைத்தனர்.

அனைவரையும் அடித்து துவைத்தவனை, நகுலன் துப்பாக்கியால் குறி வைக்க, வசுந்தரா அதனை தட்டி விட்டாள்.

“என்னை மீறி அவனை நீ ஒண்ணும் பண்ண முடியாது. நீ எல்லாம் மனுஷனா? ஒரு பொண்ணை சீரழிக்க நீயே ஆள் அனுப்பி இருக்க ச்சே…! இதுக்கு பேர் கௌரவம்ன்னு நீயா முடிவு பண்ணிக்கிட்டு, அப்பாவி பொண்ணுங்களை கொன்னுருக்க! கேவலம் உனக்கு பொண்ணா வளர்ந்தேன் பாரு என் புத்தியை தான் செருப்பால அடிக்கணும்.

அங்க சுத்தி இங்க சுத்தி, கூட பிறந்த அண்ணனையே கொலை பண்ண பார்த்துட்டல்ல… இதுக்குல்லாம் உன்ன சும்மா விடுவேன்னு நினைக்காத. நானே விட்டாலும், அவன் உன்ன கண்ட துண்டமா வெட்டி இங்கயே மிருகத்துக்கு இரையா போட தான் போறான். அதை நான் பார்க்க தான் போறேன்.” என்றாள் கர்வமாக.

அவருக்கோ கோபம் கொழுந்து விட்டு எரிந்தது. “பாரு பாரு… அவன் என்னை கொல்றதை இல்ல. நான் அவனை கொல்றத…” என்றவர், கௌரவிற்கு கண்ணை காட்ட, அவன் வசுந்தராவின் கையை பற்றி இழுத்து செல்ல முற்பட்டான்.

“அடிங்க… என் கையை பிடிக்கிற அளவு உனக்கு தைரியம் வந்துடுச்சா?” எனக் கடிந்தவள், முட்டியால் அவன் அடி வயிற்றிலேயே குத்த, அவனோ சுருண்டு விழுந்தான்.

வசுந்தராவின் மீதிருந்த ஈர்ப்பினால், அவள் அறியாமல் அவளையே சுற்றி வந்த கௌரவ், ஜிஷ்ணுவிற்கும் அவளுக்கும் ஏற்கனவே பழக்கம் இருக்கிறது என்று அறிந்து கொதித்தான். அவளை கொலை செய்யாமல் வைத்திருக்கவும் இதுவே காரணம் என்று அறிந்தவனுக்கு, சினம் பீறிட்டு எழ, அந்நேரம் தான், நகுலன் அவனை கைக்குள் போட்டுக்கொண்டு, ஜிஷ்ணுவின் நடவடிக்கையை கண்காணிக்க ஆரம்பித்தார்.

கும்பல் கும்பலாக இத்தனை ஆட்களை ஜிஷ்ணுவும் எதிர்பார்க்கவில்லை. நல்லவேளையாக சிறிது நேரத்திலேயே அவனின் ஆட்களும் வந்து விட, அங்கு ஒரு போரே மூண்டது போல இரத்தக் களறியாக காட்சியளித்தது.

சிறிது நேரத்திற்கு பிறகே, அவன் மூளைக்கு உறைத்தது வசுந்தரா அங்கு இல்லை என. கூடவே நகுலனும், கௌரவ்வும் இல்லாது போக, இதயத்தில் சுளீரென ஒரு மின்னல் தாக்கியது.

விறுவிறுவென அவளை தேடிச் செல்ல, “ஜிஷு!” என்ற அவளின் அழைப்பு மட்டுமே மலையில் எதிரொலித்தது. அந்த சத்தத்தை வைத்து அவன் ஓடிட, நகுலன் ஏற்கனவே அவளுக்கு அடிபட்டிருந்த கையை முறித்தார். அதில் அவளால் எதிர்க்க இயலாமல், வலியில் கத்திட, அவளை நோக்கி ஆவேசத்துடன் ஓடி வந்த ஜிஷ்ணுவின் இடுப்பில் கம்பி கொண்டு அடித்தான் கௌரவ்.

அந்த அடியில், அவனுக்கு ஏற்பட்டிருந்த காயத்தில் இருந்து குருதி கொப்பளிக்க, பல்லைக்கடித்து அமர்ந்து விட்டான்.

அவனை நிமிர விடாமல் கௌரவ் மேலும் அடித்திட, வசுந்தராவிற்கு அவனை காக்க வேண்டும் என உடலெல்லாம் பரபரத்தது.

“சித்தப்பா ப்ளீஸ்! உங்களுக்கு என் மேல தான கோபம் அவனை விட்டுடுங்க.” எனக் கெஞ்சியவளுக்கு, அவனின் இரத்தம் கண்டு அழுகை முட்டிக்கொண்டு வர, “டேய்… விடுடா அவனை… ஜிஷு… ஜிஷு…” எனக் கத்தினாள்.

நகுலன் இளக்கார நகையுடன், “என்னமோ அவன் என்னை கொல்ல போறான்னு சொன்ன? இத்தனை வருஷம் என்னை ஆட்டுவிச்சதும் இல்லாம, என்ன என்னமோ செஞ்சு, கன்னிமானூர்ல புதைச்ச பொண்ணுங்களை வெளிய எடுக்க, எனக்கு எதிரா எவ்ளோ சதி செஞ்சு இருக்கான். நான் யாருன்னு தெரியாமையே அவனை அஞ்சு வருஷம் ஓட விட்டேன். இப்ப என்னை வெளிக்காட்டிட்டு அவனை உயிரோட விடுவேன்னு நினைச்சியா? அணு அணுவா உன் முன்னாடியே கொல்றேன். அதுக்கு அப்பறம் உன்ன கொல்றேன்.” எனக் கோபத்தை கக்கியவர், கௌரவிடம் இருந்து கம்பியை வாங்கி, அவனை அடிக்கும் பணியை தான் எடுத்துக் கொண்டார்.

அந்த இடைவெளியை பயன்படுத்திய ஜிஷ்ணுவிற்கு வசுவை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே உள்ளுக்குள் ஓட, அவளை கொலை செய்வேன் என்ற வாசகத்தில் அவன் வெறியானான்.

அவள் கத்தியதில் எங்கிருந்து அவனுக்கு பலம் வந்ததோ அவனே அறியவில்லை.

நொடியில், நகுலனின் கையில் இருந்த கம்பியை தன் கையில் பிடுங்கி, இருவரையும் அடி பின்னி விட்டான். அடி தாளாமல் கௌரவ் மயங்கி விட, நகுலன் அவனை எதிர்க்க முயன்று சிறிது சிறிதாக தோற்றார்.

“ராதியை ரேப் பண்ணுன மீதி ரெண்டு பேர் எங்கடா?” ஜிஷ்ணு எமனாக அவர் முன் நிற்க, எச்சிலை கூட்டி விழுங்கியவர்,

“நீ ரெண்டு பேரை புடிச்சு விசாரிச்சது தெரிஞ்சதுமே, மீதி இருந்த ரெண்டு பேரும் உன் கைல கிடைக்க கூடாதுன்னு கொன்னுட்டேன்” என்றவர் கண்ணிமைக்கும் நொடியில், 

இடையில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து, அவனை நோக்கி சுட, வசுந்தரா அதனை லாவகமாக தட்டி விட்டு துப்பாக்கியை கைப்பற்றிக் கொண்டாள்.

“இனிமே, இந்த ஊர்ல யாரையும் தப்பு பண்ண வைக்க நீ இருக்க மாட்ட…!” என தீர்மானமாகக் கூறியவள், யோசியாமல் அவர் மீது குண்டை இறக்கி இருந்தாள்.

ஜிஷ்ணுவும் இதனை எதிர்பாராமல் திகைக்க, நகுலனின் உயிர் பிரிந்த மறுநொடி, காலை மடித்து அமர்ந்தவள் வேதனையில் கேவினாள்.

சிறு வயதிலிருந்து, தனக்கு எல்லாவற்றிற்கும் முன்னோடியாய் விளங்கும் தந்தையை, தன் கையாலேயே கொலை செய்ய வைத்த விதியை எண்ணி மருகிட, யாரோ வரும் அரவம் கேட்டதில், ஜிஷ்ணு விருட்டென அவள் கையில் இருந்த துப்பாக்கியை பிடுங்கினான்.

அவர்களின் நண்பர்கள் தான் அங்கு நடந்த கலவரத்தை அறிந்து, மலைக்கு ஓடி வந்திருக்க, குண்டு சத்தம் கேட்டு வேகமாக அவர்கள் அருகில் வந்தனர். வந்தவர்கள், இருவரின் ரத்தத்தையும் கண்டு அதிர்ந்திட, குமரன், “டேய்… என்னடா இப்படி அடி பட்டுருக்கு?” எனப் பதறினான்.

“இதை பத்தி பேச நேரம் இல்ல. போன வேலை என்ன ஆச்சு?” ஜிஷ்ணு தலையில் வழிந்த குருதியை துடைத்தபடி கேட்க, “எவிடன்ஸ எடுத்தாச்சு…” என்றான்.

“சரி… நேரத்தை வீணாக்காம இன்னும் சில விஷயம் பண்ண வேண்டியது இருக்கு…” என்றவன், அடுத்து அடுத்து அவர்கள் செய்ய வேண்டிய காரியத்தை உரைக்க, பரத் பேந்த பேந்த விழித்தான்.

சொன்னதோடு நில்லாமல், இறந்திருந்த நகுலனின் கைக்குட்டையில் அவர் கை ரேகை பதியும் படி எடுத்தவன், மேலும், இறந்த பெண்களின் இறப்பிற்கு காரணமான அவர்களின் தத்தம் பெற்றோர்களுக்கு எதிரான ஆதாரமும் தயார் செய்து, அதனை எஸ். பி அலுவலகத்தில் வைக்க வேண்டும் என உத்தரவிட,
‘மறுபடியும் எஸ். பி ஆபிஸா? ஒரு தடவை போனதுக்கே உயிர் போயிட்டு உயிர் வந்துடுச்சு…’ என்று பரத் மிரண்டான்.

குமரன், “அதெல்லாம் பார்த்துக்கலாம்டா. முதல்ல ரெண்டு பேரும் மலையை விட்டு இறங்குங்க. காயத்துக்கு மருந்து ஆச்சு போடணும்.” என்றிட,

“நீங்க முதல்ல போங்க. நான் இவளை கூட்டிட்டு வரேன்…” என்றவன், வசுந்தராவை பார்த்தபடி கூற, அவள் இப்பொழுதும் அவர்களின் உரையாடலை கவனியாமல் நகுலனை வெறித்திருந்தாள். தீயாய் எரிந்த மனதை அடக்க வழி தெரியாது திணறிக் கொண்டிருந்தவளை கனிவுடன் அவனது பார்வை மொய்த்தது.

கூடவே, கௌரவை அவனின் ஆட்கள் வைத்து தூக்கி செல்ல உத்தரவிட, அதற்கு முன், நகுலனை சுட்ட துப்பாக்கியை கௌரவின் கையில் வைத்து அதில் அவன் கைரேகையை பதிவேற்றினான். அனைத்தும் சில நிமிட நேரங்களில் நடந்து முடிந்திருந்தது.

அதன் பிறகே, வசுந்தராவின் அருகில் சென்ற ஜிஷ்ணு, அவளது துப்பட்டாவை எடுத்து பாதியாக கிழித்து, அவளது கைக்காயத்திற்கு கட்டி விட்டான். மீதியை அவன் தலையில் இருந்து மேலும் இரத்தம் வழியாமல் இருக்க கட்டிக்கொண்டவன், “வசு” என மென்மையுடன் அழைக்க,

“இவனை கொன்னும் என் ஆத்தரம் தீரல ஜிஷு.” என ஆர்ப்பரித்தவளுக்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது.

அவளின் கரத்தை அழுத்தமாக பற்றிக் கொண்டவன், “இவனை மாதிரி ஆளுங்க… அவங்களா திருந்துனா தான் உண்டு வசு. இல்லன்னா போய் சேர வேண்டியது தான். என்ன… உயிரோட விட்டு இருந்தா, உடம்புல இருக்குற ஒவ்வொரு பார்ட்டையும் உயிரோட வெட்டி எடுத்து, இந்த நாய்க்கு வலின்னா என்னன்னு காட்டிருப்பேன்…” என்றவனுக்கு கோபம் கொப்பளித்தது.

அதற்கு அவள் விழி தாழ்த்தி மௌனம் காக்க, அந்த மௌனத்தில் அவளது உள் உணர்வுகளை நிமிடத்தில் கண்டுகொண்டான் அக்கள்ளன்.

நிச்சயம், ஜிஷ்ணு அவனுக்கு சாதாரண தண்டனை தந்திருக்க மாட்டான் தான். அவளுக்கும் அத்தனை வெறி இருந்தாலும், பெற்ற தந்தை போல, தோழன் போல பழகியவரை, சித்ரவதை செய்து பார்க்க அவளுக்கு மனமில்லை. அதனாலேயே ஒரேடியாக நொடியில் சுட்டு விட்டாள்.

அதனை அவனிடம் கூற மனமில்லாமல், கண்ணில் தேங்கி நின்ற கண்ணீருடன் அவனைப் பார்க்க, அவனின் அழுத்தப்பார்வை இன்னும் அவளை கொன்றது.

அப்போது தான், அவனின் காயங்களை கண்டவள், “ஜிஷு… தலைல இருந்து ரத்தம் வருது. வா முதல்ல கீழ போலாம்” என பரபரக்க, “ம்ம்…” என்றவன், வேறேதும் கூறாமல், இறுக்கத்துடன் நடந்தான். ஆனால், அவளது கரங்கள் மட்டும் இன்னும் அவன் கரங்களினுள்ளே தான் சிறைபட்டிருந்தது. அவனின் மனதைப் போல!

இன்று கவனமாக வழி தவறாமல் மலையை விட்டு இறங்கியவனுக்கு நீலகண்டன் போன் செய்ய, அவரது அழைப்பை ஏற்க மறுத்தான். குமரன் மலை அடிவாரத்திலேயே மருத்துவர்களையும், ஆம்புலன்ஸையும் வர வைத்திருக்க, மேலும் மலையில் அடிபட்டிருந்த அடியாட்களை மீட்கும் பணியும் நடைபெற்றது.

அவளுக்கு முதலுதவி செய்ய முன் வந்த மருத்துவரை தடுத்தவள், “முதல்ல அவனுக்கு கட்டு போடுங்க. அவனுக்கு தான் ரொம்ப அடி பட்டுருக்கு” என்று அருகில் நின்ற ஜிஷ்ணுவை கை காட்ட, அவன், “முதல்ல அவளுக்கு போடுங்க…” என்றான்.

“ப்ச்… விளையாடாத ஜிஷு. முதல்ல ஃபர்ஸ்ட் எயிட் பண்ண விடு.” என அடிக்குரலில் கடிந்தவள், பின் அவனை வம்பிழுக்கும் நோக்கில்,

“என்ன உன் பாலிடிக்ஸ் வேலைய இங்க காட்டுறியா? நாளைக்கு பேப்பர்ல, கொட்டை எழுத்துல, ‘தனக்கு அடிபட்டதை கூட கருத்தில் கொள்ளாது, உடன் இருக்கும் பெண்ணிற்காக துடித்த எம். எல். ஏ.’ ன்னு நியூஸ் வரணும் அதான…” என நக்கலடித்தாள்.

அவனோ அவளின் நக்கல் குரலுக்கு சற்றும் சளைக்காமல், அவள் காதருகில் குனிந்து, “ம்ம்ஹும்… என் பாலிடிக்ஸை நான் இவ்ளோ சீப்பா காட்ட மாட்டேன் வக்கீலு. என் கூட இருந்த பொண்ணை கூட்டி குடுத்தும், தங்கச்சி மாதிரி நினைச்ச பொண்ணை, ரேப் பண்ணி கொலை பண்ண வைச்சும் தான் என் பாலிடிக்ஸை காட்டுவேன்… உன் தியரி படி…!” நாசூக்காக அவள் தெளித்த வார்த்தைகளை அவள் மீதே அமிலமாக வீசினான்.

உறைந்து நின்ற பாவைக்கு, ஒவ்வொரு அணுவும் வலியில் துடித்தது. காதல் தந்த காயமும், அக்காதலுக்கு தான் தந்த காயமும் அவளை சுக்கு நூறாக கிழிக்க, செய்வதறியாமல் அதிர்ந்திருந்தாள்.

அவளை உறைய வைத்தவனோ, அப்படி ஒரு உரையாடலே தங்களுக்குள் நிகழாதவாறு, தன் காயத்திற்கும் மருந்திட அனுமதித்து, அவளுக்கும் முதலுதவி செய்ய வைத்தான்.

அப்போதும், அவன் கரம் சிறிதும் அவளை விட்டு விலகவில்லை. அவ்வப்பொழுது, அடிபட்டிருந்த அவனின் ஆட்களை, ஆம்புலன்சில் ஏற்ற உதவி செய்தவன், மீண்டும் அவளருகில் வந்து கரத்தை பற்றிக் கொள்ள, இது எதையும் அவள் உணரவில்லை. கொட்டிய வார்த்தைகளை சேகரிக்க இயலாமல், இழந்த நேசத்தை திரும்ப பெற இயலாமல் மருகிக் கொண்டிருந்தாள்.

அவன் நகர்ந்ததும், அவள் மீது ஏக்கப்பார்வை வீசுபவள், அவன் அருகில் வந்ததும் மறுபுறம் திரும்பிக் கொள்ள, இப்படியே நேரமும் நகன்றது.

“அதெப்படி இறந்த பொண்ணுங்களோட அப்பா, அம்மா சம்பந்தப்பட்ட ஆதாரத்தை எடுக்க முடியும்?” மிக முக்கிய சந்தேகத்தை அர்ச்சனா முன் வைக்க,

குமரன் தான், “ஐடியா! நீ என்ன பண்ற… அவங்க வீட்டுக்கு அட்ரஸ் கேக்குற மாதிரி போ! போய் அப்டியே பேச்சு குடுத்து, அவங்க கை ரேகை இருக்குற மாதிரி எதையாவது சுட்டுட்டு வந்துடு.” என்றிட, பரத்தோ ‘ஹப்பாடா… நல்லவேளை இதுலயாவது நம்ம தல தப்பிச்சுச்சு!’ என்று ஆசுவாசமானான்.

அர்ச்சனா, “ஏன் அதை நீங்க போய் செய்ய வேண்டியது தான?” என முறைக்க, “என்ன இருந்தாலும் ஒரு பொண்ணு போய் கேட்டா, ஒரு சாஃப்ட் கார்னர் வரும்ல?” என்றான் நியாயமாக.

“ம்ம்க்கும்… அவங்களே, பெத்த பொண்ணை கூட கொன்னுட்டு ஹாயா இருக்காங்க. இதுல யாரோ ஒருத்தியான என் மேல சாஃப்ட் கார்னர் வருதாக்கும்… என்னை சாவடிக்க பிளான் பண்ணிட்டீங்க!” என மூக்கை சுருக்கி கூறியவள், அவன் திட்டத்தை மேம்படுத்த ரமேஷின் காதலியின் வீட்டுக் கதவை தட்ட எத்தனிக்கும் போதே, குமரன் அவள் கையை பிடித்தான்.

அதில் திடுக்கிட்டவள், “எ… என்ன?” எனக் கேட்க,

“வேணாம்… பரத் போகட்டும்.” என்றதில், அவள் விழித்தாள்.

முகத்தில் இருந்து குறும்பு நீங்கி, வேதனை சாயலில் நின்றிருந்தவனை கண்ணிமைக்காமல் அவள் பார்த்திருக்க, பரத், ‘இப்பவும் பலியாடு நான் தானா?’ என நொந்து உள்ளே செல்ல,

அர்ச்சனா, “நானே போயிருப்பேனே!” என்றாள் மெல்லிய குரலில்.

“அதான் வேணாம்ன்னு சொல்றேன்ல.” என்றவனின் குரலில் நடுக்கம் மேலோங்க, அக்குரல் அவளை என்ன செய்ததோ, “என்ன ஆச்சு குமரா?” என்றாள் அவன் வலியை போக்கும் வேகத்துடன்.

அவளின் அக்கேள்வி குமரனின் இத்தனை வருட ஆதங்கத்தையும், துயரத்தையும் வெளிக்கொணர, யோசியாமல் அவளை அணைத்திருந்தான்.

அர்ச்சனா திகைத்திருக்க, அவனோ நலிந்த குரலில், “ஒரு வகையில ராதி சாவுக்கு நானும் ஒரு காரணம் அர்ச்சு!  அவள் வீட்டை பத்தி தெரிஞ்சும், அவள் கூட பழகுனது என் தப்பு. அதுவும் வசு இல்லாத நேரத்துல அவ கூட பேசுனது இன்னும் தப்பு.

அந்த ஒரு தப்புன்னால, அவளே இல்லாம போய்ட்டா. இப்ப… இப்ப… உன்னையும் இழந்துடுவேனோன்னு பயமா இருக்கு அர்ச்சு. எனக்கு நீ வேணும். எப்ப நீ வசுகிட்ட வேலைக்கு சேர்ந்தியோ அன்னைல இருந்து உன்ன பாக்குறதுக்காகவாவது நான் தினமும் உன் ஆபிஸ்க்கு வந்துடுவேன். உன்ன பாக்காம ஒரு நாள் கூட என்னால ஓட்ட முடியாது அர்ச்சு.

என் மனசு முழுக்க அந்த அளவு நீ தான் நிறைஞ்சு இருக்க. ப்ளீஸ், இன்னொரு தடவை சாவு அது இதுன்னு விளையாட்டுக்கு கூட பேசாத. என்னால… என்னால அதை ஏத்துக்க முடியல!

ஆனா, நிஜமா நான் ராதியை லவ் பண்ணல அர்ச்சு. அவளை என் ப்ரெண்டா மட்டும் தான் பார்த்தேன். ஒவ்வொரு தடவையும் அவளை என் கூட சேர்த்து பேசுறதை கேட்கும் போதும் அவ்ளோ கஷ்டமாருக்கு…” எனத் தன்னை மீறி புலம்பியவனின் அணைப்பு இறுக, தவிப்புடன் வெளிவந்தாலும், அவனது ஒவ்வொரு வார்த்தையும் அவன், அவள் மீது வைத்திருக்கும் நேசத்தை தெளிவாக உரைத்தது.

குமரனின் பேச்சில், அவளுக்கு தான் எதையும் நம்ப இயலாத நிலை. ‘நிஜமாவே நம்ம பின்னாடி சுத்துற அளவு நம்ம அவ்ளோ ஒர்த்தா?’ என சிந்தித்தவளின் நெஞ்சில் அவன் சிம்மாசனமிட்டு அமர்ந்து விட்டான்.

அதற்கு முதலிலேயே அவளறியாமல் அவளுக்கு அவன் மீது சிறு அன்பு பொறி இருக்க, இன்று அது காதலாகி உருப்பெற்றது.

அதே நேரம், அவனின் வேதனை அவளையும் தாக்க, ஆறுதலாக அவன் முதுகை தடவிக் கொடுத்தவள், “ராதிகாவை கொன்னது அவளோட அப்பாவும், மத்தவங்களும் தான். அதுக்கு நீங்க காரணம்ன்னு நினைச்சு மனச ஏன் குழப்பிக்கிறீங்க. உங்களுக்கு அவங்க மேல காதல் இல்லைன்னு, நீங்க ப்ரூவ் பண்ணலாம் தேவை இல்ல. உங்களை சுத்தி இருக்குற எல்லாருக்கும் அது நல்லாவே தெரியும். எனக்கும்…!” என்றவளின் வாசகத்தில் நெகிழ்ந்தவன், அப்போது தான் அவளை விட்டு மெல்ல நகர்ந்தான்.

அவளின் விழிகளை நேராய் பார்த்து, “நிஜமாவா?” எனக் கேட்டதில், ஏற்கனவே அவன் தீண்டலில் சிவந்திருந்த மேனி இன்னும் சிவப்பை பூசி இருக்க, அவ்விடியல் நேர வெளிச்சத்தில், அவளது வெட்க முகம் அழகாக ஒளிர்ந்தது.

“எ… என்ன நிஜமாவா?” உள்ளே சென்ற குரலில் அவள் கேட்க,

அர்ச்சனாவின் கன்னத்தை கைகளில் தாங்கி இருந்தவன், “நிஜமா என்னை நம்புறியா?” எனக் கேட்டான் குறும்பாக.

இதழ்கள் வெட்க புன்னகை பூக்க, மேலும் கீழும் தலையாட்டியவள், “பரத் சார் வந்துட போறாரு… ப்ளீஸ்!” என்றாள் அவனிடம் இருந்து விலக எத்தனித்தபடி.

அவளை மிகவும் சோதிக்காமல், சிறு புன்னகையுடன் அவன் விலகி அவளின் முகத்தையே ரசனையாகப் பார்க்க, அவளும் புன்னகை மாறாமல் கூச்சத்தில் நெளிந்தாள்.

அதன் பின், மற்ற உணர்வுகளை ஒதுக்கி வைத்து, ஜிஷ்ணு கூறிய வேலைகள் அனைத்தும் ஜரூராக நடைபெற, அதே நேரம், பணத்தை சுரண்ட, அவனது கட்சி ஆட்களும் அமைச்சரும் ஊருக்கு எதிராக செய்த திருவிளையாடல்கள் கொண்ட ஆதாரங்களையும் ஜிஷ்ணு ஏற்கனவே சேகரித்து வைத்திருந்தான்.

அதனை குமரன் மூலம் கன்னிமனூருக்கு எடுத்து வர செய்தவன், ஒரு முறை அதனை நன்கு பார்வையிட, அதே நேரம் பரத்தும் சில டாக்குமெண்ட்ஸை வசுந்தராவிடம் கொடுத்தான்.

அதனை அப்படியே அவள் ஜிஷ்ணுவிடம் நீட்டினாள். அது ஜிஷ்ணுவின் வீட்டில் இருந்து அவள் எடுத்த கோப்புகள் தான். அனைத்தும், நீலகண்டனின் சொத்து விவரங்கள்.

அதனை கையில் வாங்கியவன், அதனுடன் சேர்த்து, அவன் வைத்திருந்த ஆதாரங்களையும் அவளிடமே கொடுத்தான்.

அவள் என்னவென்று பார்க்க, “இதுல நீலகண்டன் சம்பந்தப்பட்ட ஆதாரமும், கன்னிமனூரை சிதைக்க அவனுங்க செஞ்ச பிளானும் இருக்கு. இதெல்லாம், அவனுங்களோடவே இருந்து நான் திரட்டுன ஆதாரம். இதை வைச்சு, நீ கேஸ் ஃபைல் பண்ணு. அதுவும் உடனே…!” என உத்தரவிட்டவன்,

அவளின் பார்வை கண்டு, மென் நகையுடன், “இந்த ஆதாரத்தை என்கிட்ட இருந்து கலெக்ட் பண்ண தான என் பின்னாடியே இவ்ளோ நாள் சுத்துன. ம்ம்!” என்று புருவம் உயர்த்தி கேட்க, அதனை வாங்காமல் விழியில் நீர் துளிர்க்க, அவனையே யாசகத்துடன் பார்த்திருந்தாள் வசுந்தரா.

ஏங்கி ஏங்கி நான் கேட்பது
உன்னைதானடா
தூங்கி போனதாய் நடிப்பது
இன்னும் ஏனடா

வாங்கி போன என் இதயத்தின்
நிலைமை என்னடா
தேங்கி போன ஒரு நதீயென
இன்று நானடா ..   

தாங்கி பிடிக்க
உன் தோள்கள் இல்லையே
தன்னந்தனி காட்டில்
எந்தன் காதல் வாட….

சற்று முன்பு பார்த்த
மேகம் மாறி போக
காலம் இன்று காதல்
நெஞ்சை கீறி போக 

தீயோ தென்றலோ அவள்(ன்)
மேகா

ஹாய் டியர் ஃப்ரெண்ட்ஸ்… வெரி சாரி இந்த கதைக்காக எல்லாரையும் ரொம்ப காக்கா வச்சுட்டேன். Maximum நாளைக்கு கடைசி பதிவு வந்துடும் drs… உங்க கமெண்ட் ஸ் எல்லாம் பார்த்து மீ வெரி ஹேப்பி😍😍😍 கொஞ்சம் ஃப்ரீ ஆகிட்டு எல்லாருக்கும் reply பண்றேன் drs 💞💞💞😍😍😍😍 thank you soooo much all for ur lovable cmnts and support💞

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
8
+1
69
+1
5
+1
3

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்