Loading

ஜிஷ்ணு தர்மனின் விழிகள் பலமாக அவளைத் தாக்க, அவளது விழி வீச்சோ பலவீனத்துடன் அவனைத் தவிர்த்தது.

“லேட் பண்ணாம, இன்னைக்கே ப்ரொசீஜர் ஸ்டார்ட் பண்ணிடு. இது நம்ம கைல இருக்குறது நமக்கும் சேஃப் இல்ல. இதுக்கும் சேஃப் இல்ல” என்று ஆதாரங்களை கண் காட்டி ஜிஷ்ணு கூற, தலையை ஆட்டியவள், அதனை ஒரு முறை பார்வை இட்டாள்.

ஆனால், அமைச்சருக்கு எதிரான ஆதாரங்களில் ஜிஷ்ணுவின் பெயரும் சேர்ந்தே தான் அடிபடும். அவனும் இத்தனை வருடம் உடன் இருந்திருக்கிறான் அல்லவா! அதில் ஒரு கணம் அவனை நிமிர்ந்து பார்த்து விட்டு, மீண்டும் ஆதாரங்களில் புதைந்தாள்.

அப்போது குமரன் தான், “தர்மா நீ சொன்ன மாதிரி எல்லாமே செஞ்சாச்சு. எஸ். பி ஆபிஸ்ல இருக்குற நம்ம ஆளுங்களை வச்சு மேற்கொண்டு மூவ் பண்ணலாம். இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர்றதுக்கு நம்மகிட்ட இருக்குற ஆதாரமே போதும். அட்லீஸ்ட் இனிமேவாவது கேவலம் ஜாதியை காரணம் காட்டி பொண்ணுங்க இறக்கக்கூடாது.” என்றவனின் வார்த்தைகளில், ராதிகாவின் எண்ணமே நிறைந்திருக்க, மற்ற இருவருக்கும் அவள் நினைவே வந்தது.

நீர் நிறைந்த விழிகளை சிமிட்டிக்கொண்ட குமரன், “மீடியாவுக்கு தகவல் சொல்லியாச்சு தர்மா. இந்த மினிஸ்டர் தான் விடாம கால் பண்றான். அவனுக்கு என்ன பதில் சொல்ல…?” என்று வினவ,

“அவனுக்குலாம் பதில் சொல்ற அளவு அவன் ஒர்த் இல்ல. அவனை அரெஸ்ட் பண்ண போலீஸ் வரும் போது அவனே தெரிஞ்சுக்குவான். எதுக்கும் பிரச்சனை எதுவும் வராம இருக்க, ஊரை சுத்தி போலீஸ் ப்ரொடெக்ஷன் ரெடி பண்ணு.” என்றதில், அவன் வசுந்தராவை தயக்கத்துடன் பார்த்து விட்டு நகர எத்தனிக்க, “குமரா” என்று அழைத்தாள்.

அதில் நின்றவன் விழி விரித்து அவளைப் பார்க்க, அவளோ “எனக்கு தெரியும்” என்றாள் மொட்டையாக.

என்ன தெரியும் என்று புரியாமல் பார்த்தவனிடம், “ராதியை ரேப் பண்ணி தான் கொலை பண்ணி இருக்காங்கன்னு எனக்கு அப்பவே தெரியும்” என்றாள் இறுக்கத்துடன்.

அக்கூற்றில் ஆடவர்கள் இருவரும் குழப்பமாக ஏறிட, “அவள் கிணத்துல விழுந்து இறந்ததை என்னால நம்ப முடியாம குழம்பி போயிருந்தப்ப, அவள் உடம்புல இருந்த காயத்தை பார்த்தேன்.

அப்பவே அவளுக்கு ஏதோ தப்பா தான் நடந்து இருக்குன்னு புரிஞ்சுக்கிட்டேன். இதை பத்தி அவள் வீட்ல சொன்னா, என்ன நினைப்பாங்கன்னு தெரியல. அவளோட அந்த நிலமைக்கு யாரு காரணம்ன்னும் புரியல. ஊர்ல எல்லாரும் நீயும் அவளும் தான் காதலிக்கிறீங்கன்னு சொன்னாங்க.

ஆனா என்னால அதை நம்ப முடியல. எனக்கு நம்பத் தகுந்த ப்ரெண்ட்ஸ் நீங்க மட்டும் தான். அதனால தான் அந்த ராத்திரி நேரத்துலையும், ஊர்ல யார் என்ன தப்பா சொன்னாலும், நீங்க ஹெல்ப் பண்ணுவீங்கன்னு உங்களை தேடி வந்தேன்.” என்றவள் நொடி நேரத்திற்குள் ஜிஷ்ணுவை ஒரு முறை பார்த்து விட்டு மறுபுறம் திரும்பிக் கொள்ள, குமரனுக்கும் அவள் நிலமை புரிந்தது.

“ஆனா, அங்க நடந்த விஷயமும், உன் பிரெண்டு நடந்துகிட்ட விதமும் என்னை ரொம்ப குழப்பிடுச்சு. என்கிட்ட இருந்து எதையோ மறைக்கிறீங்கன்னு நினைச்சப்ப எனக்கு கோபம் மட்டும் தான் வந்துச்சு . அந்த நேரத்தில ராதியை தவிர வேற எந்த எண்ணமும் என் மண்டைல ஓடல.

ஒருவகைல அவளோட இறப்பை மறைக்கிறதுக்கும், உன் ப்ரெண்டுக்கும் ஏதோ பொலிட்டிகள் சம்பந்தம் இருக்குன்னு தப்பா நினைச்சேன் தான். ஆனா எந்த சூழ்நிலைலையும் அவளோட உடல் காயத்துக்கும் உங்களுக்கும் சம்பந்தம் இருக்குன்னு நான் சொன்னதும் இல்ல நினைச்சதும் இல்ல.

நான் நினைச்சிருந்தா, அப்ப இருந்த என்னோட சந்தேகத்தை வச்சு, அப்பவே அந்த பழியை உன்மேல என்னால போட்டுருக்க முடியும். ஆனா, என்னால உன்னை தப்பா நினைக்க முடியாது குமரா.” என்றவளின் நம்பிக்கை கண்டு அவனின் காயங்கள் மொத்தமாக மறைந்தது.

கூடவே, ஜிஷ்ணுவையும் அவன் பார்வை வதைக்க, அவன் இருவரையும் பாராமல் தலையை திருப்பிக்கொண்டான்.

ஆனாலும் உள்ளுக்குள் ஒரு வேதனை ஓடியது. அந்நிலையிலும் தன்னுடைய ஆதரவைத் தேடி அவள் வந்ததை உணர்ந்து கொள்ளாமல் போனதோடு, குழப்பத்தில் அவள் பேசிய வார்த்தைகளுக்கு சளைக்காமல் தானும் பேசியது தவறோ என்றே தோன்றியது.

குமரன் பதில் பேச வரும் முன்னே, ஜிஷ்ணு தொண்டையை கணைத்து, “நீ வீட்டுக்கு போ வக்கீலு. மீடியா வர்ற நேரத்துல நீ இங்க இருந்தா சரி வராது.” எனக் கூற,

இத்தனை நேரமும், அடக்கி வைத்திருந்த விழி நீர் இதோ அதோவேன வெளிவர தயாராக இருந்தது வசுந்தராவிற்கு.

அவள் நகர்வதாக தெரியவில்லை என அறிந்த ஜிஷ்ணு, “உன்ன தான் சொல்றேன். காதுல விழுகல? கிளம்பு!” எரிச்சலை வரவழைத்துக் கடிந்தான்.

அவளோ திரும்பி அவனை ஒரு முறை அர்த்தத்துடன் பார்த்து விட்டு, குனிந்து எதையோ கண் காட்ட, அப்போது தான் அவனும் கண்டான்.

அவளது உள்ளங்கை அவனது கைச்சிறைக்குள் இறுக்கமாக சிறைபட்டு இருப்பதை!

அதனைக் கண்டும் உடனே கரத்தை விலக்க மனம் வராமல், நிதானமாகவே விலகி நின்றதில், மறுநொடி அவனை தாண்டி விறுவிறுவென நடக்கத் தொடங்கினாள்.

பரத்தும் அர்ச்சனாவும் செய்வதறியாமல் அவள் பின்னே தொடர, குமரன் தான், அவள ஏன்டா போக சொன்ன என்ற ரீதியில் பாவமாக பார்த்தான்.

இத்தனை வருடமும் பிரிவில் வாடிய உள்ளம் தான். ஆனால், இப்பிரிவு கோபத்தை கொடுக்கவில்லை அவனுக்கு. மாறாக, வலித்தது. அவளிடம் அப்போதே பொறுமையாக புரிய வைத்து இருக்கலாமோ என்ற தாமத ஞானம் அவனை உருக்க, சோர்வுடன் காரின் பக்கவாட்டில் நெற்றியை முட்டினான்.

அப்போது தான் காரினுள் இருந்த வசுந்தராவின் கைப்பை அவன் கண்ணில் பட்டது. காரை தாறுமாறாக ஓட்டியதில், உள்ளே இருந்த பொருட்கள் சிதறி இருக்க, கதவைத் திறந்து அதனைக் கையில் எடுத்தான்.

அதை எடுக்கும் போதே, ஒரு பத்திரிக்கை கீழே விழ, நெற்றி சுருங்க அதனை குனிந்து எடுத்தவனுக்கு விழிகள் விரிந்தது.

அவளின் பிறந்தநாள் அன்று ஜிஷ்ணு பரிசளித்த பத்திரிக்கை தான் அது.  ஆனால், அவன் கொடுத்தது போல புத்தம் புதிதாக இல்லை.

இத்தனை வருட அவளின் அணைப்பில் லேசாக கசங்கி இருந்தது. அவன் எழுதி இருந்த “ஓடிப் போலாமா பேப்” என்ற வாசகம், அவளது கண்ணீர் துளிகளில் சிறிதாக அழிந்து இருந்தது.

அதன் நிலையே கூறியது பெண்ணவளின் ஐந்து வருட காயத்தை.

அதிலிருந்து கண்ணை எடுக்காமல், கைப்பையை எடுத்து குமரனிடம் கொடுத்திட, அவன் வேகமாக ஓடி சென்று வசுந்தராவிடம் கொடுத்தான்.

அதனை வாங்கியவள், ஏதோ தோன்ற கைப்பையை சோதித்து கலவரமானாள்.

“பேக் கார்ல தான இருந்துச்சு?” என பதற்றத்துடன் கேட்டவள், விரைந்து காரின் அருகில் சென்று காரினுள் எங்கெங்கோ தேடினாள்.

அவளைக் கண்டதுமே, அப்பத்திரிக்கையை பின்னால் மறைத்த ஜிஷ்ணு, “என்ன தேடுற?” என்று கம்பீரம் மறையாமல் வினவ,

பார்வையை காரினுள் செலுத்தியபடி, “அது உனக்கு தேவை இல்லாதது.” என்றாள் வீராப்பாக.

இதழோரம் நக்கல் நகை பூத்தவன், “நீ தேடிட்டு இருக்கிறது என் கார்ல வக்கீலு. சும்மா சும்மா என் கார தொட்டு பார்த்தா என் காருக்கு பிடிக்காது…” என்றபடி, காரில் அவள் கை பட்ட இடத்தை தட்டி விட்டு, ஊதி விட்டான். தூசி படாமல் பாதுக்காக்கிறானாமாம்.

அவனை சூடான மூச்சுடன் முறைத்து வைத்தவள், அவன் மீதிருந்த கோபத்தில், காரை எட்டி உதைத்தாள்.

“ஏய்… எம். எல். ஏ காருடி. அதுல கால் வச்சா என் மேல வச்ச மாதிரி. உன்ன உள்ள தூக்கி போட்டுடுவேன்.” என்றான் சிரிப்பை உதட்டுக்குள் மறைத்தபடி.

“ஓ… காரும் நீயும் ஒண்ணு தானா?” சற்றே இளக்காரமாகக் கேட்டவள், மொத்த பலத்தையும் கொண்டு வந்து மீண்டும் அக்காரில் ஓங்கி ஏத்த, கார் உடைந்ததோ இல்லையோ, அவள் காலினுள் உண்டியல் சத்தம் கேட்டது.

“அய்யோ அம்மா…” என காலை பிடித்துக் கொண்டவளை, கையைக் கட்டிக்கொண்டு கேலியாக பார்த்தவன், “என் கார் என்னை மாதிரி. குடுத்ததை திருப்பி குடுத்துடும் வக்கீலு…” என்றான் ரகசியமாக.

அவள் அளிக்கும் முத்தத்தை எண்ணி ஆடவனின் கண்களில் ரசனை வழிந்தோட, அவள் கண்களோ வலியை அப்பட்டமாக காட்டியது.

தான் கொடுத்த காயத்தை திருப்பி எனக்கு கொடுக்கும் முயற்சியா? என்ற எண்ணத்தில் நலிந்தவள், இறுகிய முகத்துடன் திரும்ப, அடுத்த கணம், பாவையின் மொத்த மேனியையும் தன் கைக்குள் அடக்கி இருந்தான் ஜிஷ்ணு.
 
நொடியில் பெண்ணவளின் தேகம் சிலிர்க்க, நிமிர்ந்து அவனை திகைப்பாய் பார்த்தாள்.

அவளது மொத்த இடையும் அவன் விரல்களுக்குள் அடக்கமாகி இருக்க, அவனின் வெப்ப மூச்சு அவள் இதழ்களில் உரசியது.

மெல்ல வசுந்தராவின் அதரத்தின் அருகில் வந்தவன், “கீழ கல்லு இருக்கு விழுந்துறாம போ. உனக்கு சேதாரம் ஆனாலும் என் ஆதாரத்துக்கு எந்த சேதாரமும் வரக் கூடாது…” என குரலில் கண்டிப்பும், இதழ்களில் அவளறியா சிறு புன்னகையுடனும் அவன் கூற,

சட்டென அவனிடம் இருந்து விலகியவளுக்கு ஏமாற்றம் நெஞ்சை நிறைத்தது.

முதலிலும், தன்னை விட அரசியல் தான் முக்கியம் எனக் கூறி இருக்கிறான் தான். அவள் கோபப்பட்டாலும் சமாதானம் என்று இறங்கிவிட மாட்டான் தான். அவளுமே அவனைப் போன்றே இருந்ததில், அந்த ஏமாற்றங்கள் அவளை பாதிக்கவில்லை. ஆனால், இப்போது ஏனோ அடுத்தடுத்த நேர்ந்த அதிர்ச்சியிலும், மன உளைச்சளிலும் ஆடவனின் சிறு வார்த்தை கூட, அவளை பிழிந்து எடுத்தது.

எப்போதும் போன்றே, அதனை உள்ளுக்குள் மறைத்தவள், அவனை திமிராக முறைத்து விட்டு அங்கிருந்து சென்று விட்டாள்.

அவள் செல்லும் வரை, அத்திசையையே வெறித்தவனுக்கு தன் மீதே கோபம் எழுந்தது.

வீராப்பாக, வக்கீல் யூனிஃபார்மை அவள் முன் எரித்து, அவளைப் பிரிய முடிவு செய்து விட்டான் தான். ஆனால், அவள் சென்றதும் வெகுவாய் உடைந்து போனான். எத்தனையோ முறை, அந்த மலை மீது ஏறி உச்சியில் நின்று கொண்டு அவளின் நினைவில் தவித்திருக்கிறான்.

அவளது உரசல்களுக்கு தேகம் அலைபாய, ஜிஷு எனக் கொஞ்சி அழைக்கும் அவள் குரலுக்கு செவிகள் இரண்டும் தவமிருக்க, திமிராய் தன்னை அவள் பார்க்கும் பார்வைக்காக அவன் விழிகள் யாசிக்க, மொத்தத்தில் அவளது நேசத்தை அவனது நெஞ்சம் முழுதும் தேடி தேடி களைத்து போனது.

அவளின்றி சுவாசிக்க முடியாது என்று அறிந்தவன் தான். ஆனால், அவளுக்குள்ளேயே அவனின் உயிரும் தொலைந்து விட்டதை அவள் பிரிவில் தான் உணர்ந்தான். எங்கே, அவளை பார்த்து விட்டால், மனம் வெட்கமின்றி அவளின் பின் சென்று விடுமோ என பயந்தவன், ஐந்து வருடங்களாய் அவளைப் பார்க்காமல் தன்னை அடக்கிக்கொண்டான்.

அதன் பிறகு அவளை பார்த்தது, அறிவழகனை கொன்ற வழக்கில் அவனுக்கு எதிராய் கோர்ட்டில் வாதாடும் போது தான். ஏற்கனவே அவளின் கம்பீரத்தில் கரைந்தவன் தான். இப்போதோ மொத்தமாக அவளிடமே தொலைந்து போனான்.

இருப்பினும், அவள் விட்டு சென்ற வார்த்தையின் வடுக்கள் அவனுள் ஆறாது போக, அக்கோபத்தை காட்டியாவது அவளுடன் பேச வேண்டும் என்ற ஆவலில் அவளை வம்பிழுக்கவும் செய்தான். சில நேரம் விஷத்தை கக்கவும் செய்தான்.

பின், யோசிக்க நேரமில்லாது அனைவரும் அவரவர் வேலையில் புதைந்தனர். குமரன் ஒவ்வொரு முறை வசுந்தராவை பற்றி பேச வரும் போதும் அதனை தவிர்த்து விட்டான்.

வசுந்தராவும், ஜிஷ்ணு கொடுத்த ஆதாரங்களை வைத்து, நீலகண்டனுக்கு எதிராகவும், மேலும் சில அரசியல் தலைவர்களுக்கு எதிராகவும் வழக்கு தொடுக்க, பெண்களுக்கு ஏற்பட்ட அநீதியும், அதில் கன்னிமனூருக்கும் அங்குள்ள ஆண்களின் மீது ஏற்பட்ட பழியும் வெளியில் வந்து, அனைவர்க்கும் அதிர்ச்சியைக் கொடுத்தது.

நீலகண்டனும், வசுந்தராவை கொலை செய்து விட முயற்சி செய்தார் தான். ஆனால், முயற்சி மட்டுமே செய்ய முடிந்தது. ஜிஷ்ணுவின் பாதுகாப்பு நிழலில் இருந்தவள் மீது சிறு துரும்பையும் ஏவிட இயலவில்லை அவரால். கூடவே, அவர் மீது தொடுக்கப்பட்ட வழக்கால், அவர் பல் பிடுங்கிய பாம்பாக அடங்கி விட தான் முடிந்தது. கட்சியும் அவரை உடனே பதவியை விட்டு விலக்க, நிலைகுலைந்து போனார்.

இதற்கிடைப்பட்ட நாட்களில் வசுந்தராவும் ஜிஷ்ணுவும் சந்திப்பதே அரிதாகி இருந்தது.

கௌரவ் செய்த துரோகத்திற்கு, நகுலனின் கொலைப் பழியை அவன் மீது போட்டிருந்தான் ஜிஷ்ணு.

அவன் அழுது கதறியும் ஜிஷ்ணு மனம் இரங்கவில்லை. அவன் கை வைக்க நினைத்தது அவனின் உயிரானவளின் மீது அல்லவா!

அன்று நீலகண்டன் சம்பந்தப்பட்ட வழக்கு விசாரணைக்கு வர, ஜிஷ்ணுவும் அங்கு வந்திருந்தான். நீலகண்டனின் தீப்பார்வையை அசட்டையாக ஒதுக்கியவன், வசுந்தராவை பார்க்க, அவள் அர்ச்சனாவிடமும் பரத்திடமும் ஏதோ பேசிய படி, வாதாட தயாராகி கொண்டிருந்தாள்.

இன்று நடக்கவிருக்கும் வழக்கு வெற்றி அடைந்தால், நிச்சயம் ஜிஷ்ணுவிற்கும் தண்டனை உண்டு. அவள் வெகுநாள் எதிர்பார்த்த ஒன்றாகிற்றே இது… என எண்ணும் போதே, அவனுக்கு புன்னகை தான் வந்தது.

வழக்கு தொடங்கி, முடிக்கும் வரையிலும் வசுந்தராவின் வாதங்கள் அனைத்திலும் மெய்மறந்திருந்தவன், குழப்பத்துடன் அமர்ந்திருந்தான்.

ஏனெனில், அவள் கூறிய ஆதாரங்கள் ஒன்றில் கூட ஜிஷ்ணுவின் பெயர் அடிபடவில்லை. அந்த அளவு, அவன் திரட்டிய ஆதாரங்களில் இருந்து, அவனின் பெயரை நாசுக்காக தவிர்த்து வேறொரு ஆதாரங்களை தயார் செய்து இருக்கிறாள்.

வழக்கு முடிந்து, நீலகண்டனுக்கும் மற்ற அரசியல் தலைவர்களுக்கும் தண்டனை அறிவிக்கப்பட, இவை அனைத்தையும் கண்டுபிடித்த ஜிஷ்ணுவிற்கு பாராட்டு மழை குவிந்தது. வசுந்தரா தான், அவனைப் பற்றி மீடியாவில் தெரிவித்து இருக்க, அனைத்து செய்தி ஊடகங்களிலும் அவன் முகமே மின்னியது.

கூடவே, தன் கட்சி பெயர் அடிபட்டுவிடுமோ என்ற பயத்தில் முதலமைச்சர் அவனை அழைத்து, அனைவர் முன்பும் பாராட்டிட, பிரதமரின் உத்தரவில், நீலகண்டனின் அமைச்சர் பதவிக்கு அவனையே தேர்ந்தெடுத்து இருந்தார்.

இன்னும் மூன்று மாதங்களில் தேர்தல் இருக்க, முதலமைச்சரால் ஜிஷ்ணுவை எதிர்க்கவும் இயலவில்லை. அவனை கூடவே வைத்திருக்க முடிவு செய்திருக்க, நீலகண்டன் தான் இதனை அறிந்து,

‘ம்ம்க்கும்… தேரை இழுத்து தெருவுல விட்ட மாதிரி என் பதவியை அவனுக்கு குடுத்து தலைவர் அவருக்கு அவரே ஆப்பு வச்சு கிட்டாரு… விதி வலியது’ என்று தலையில் அடித்துக் கொண்டார்.

இதனை ஜிஷ்ணுவும் எதிர்பார்த்திருக்கவில்லை. திடீரென ஏற்றுக்கொண்ட அமைச்சர் பதவியில் இருந்த சில கோளாறுகளை சரி செய்து, அதில் பொருந்தவே அவனுக்கு ஒரு மாதம் தேவைப்பட்டது.

“மாப்ள… சாரி சாரி மினிஸ்டர் சார்… உங்ககிட்ட இனிமே அப்பாயின்மென்ட் வாங்கிட்டு தான் நாங்க பாக்க வரணும்…” என குமரன் பவ்யமாக கூற, “டேய்!” என்று இடுப்பில் கை வைத்து முறைத்தான் ஜிஷ்ணு.

“சரிங்க மினிஸ்டர் சார்… இப்பவாவது நான் சொல்ல வந்தத காது குடுத்து கேளுங்க. பொது மக்களோட மனுவை ஏத்துக்குறது மட்டும் இல்ல அவங்க குறையை தீர்த்து வைக்கிறதும் உங்க கடமையாக்கும்” என்ற குமரன் கூற்றில், கண்ணோரம் சுருங்க சிரித்தவன்,

“என்ன… உன்னையும் அர்ச்சனாவையும் பத்தி உன் வீட்ல சொல்லி, கல்யாணம் பண்ணி வைக்கணுமா?” ஜிஷ்ணு நக்கலாக கேட்டிருக்க, “ப்ச் அதில்லை…” என ஆரம்பித்தவன் பேந்த பேந்த விழித்தான்.

“இது எப்படி உனக்கு தெரியும்?” குமரன் திகைக்க,

“ஹலோ வக்கீல் அவர்களே… நாங்க மினிஸ்டராக்கும் எல்லா இடத்துலயும் எனக்கு கண்ணு இருக்கு. இப்போலாம் கன்னிமனூர் மலை மேல அடிக்கடி நீ பயணப்படுறதா ஊர் மக்கள் பேசிக்கிறாங்க…” என யோசனையாக தாடையை தடவ,

“என்னது ஊர் மக்களுக்குலாம் தெரிஞ்சுடுச்சா” என்று மேலும் அதிர்ந்து போனான் பாவம்.

“அடப்பாவி… அப்ப நீ உண்மையாவே இத தான் பண்ணிட்டு இருக்கியா?” அவனை வாரி விட்டு சிரிப்பை அடக்கியவனின் குறும்பில் தான் தெளிந்த குமரன்,

“படவா… கொஞ்ச நேரத்துல நான் பயந்தே போய்ட்டேன்.” என்றவன், வெட்கக் குரலில் “ஆமா, உனக்கு எப்படி தெரியும்?” எனக் கேட்க,

“மொச புடிக்கிற நாய் மூஞ்ச பார்த்தா தெரியாதாக்கும். அன்னைக்கு அவ தொடைல கை வச்சதுக்கே ஏதோ உன்னை லிப் டு லிப் கிஸ் அடிச்ச ரேஞ்சுக்கு அசடு வழிஞ்சுட்டு இருந்தியே…” என நக்கலடித்தான்.

“ம்ம்க்கும் லிஸ் டு லிப் கிஸ்ஸு…? இங்க டச்சிங்கே வேலை இல்லயாம்* அவன் வெகுவாக சலித்துக் கொள்ள, ஜிஷ்ணு தான், “அப்போ மலைக்கு போய் என்னடா பண்ணுவீங்க” என்றான் புரியாமல்.

“ம்ம். மேல பிள்ளையார் கோவில்ல ஒரு அர்ச்சனையை போட்டுட்டு திரும்பி வந்துடுவோம். அவ்ளோ தான்… அவ அப்பா மிலிட்டரி ஆபிசராம். அவருகிட்ட பேசி சம்மதம் வாங்குனா தான் லவ்வே சொல்லுவேன்னு சொல்லிட்டு இருக்கா. இன்னும் பத்து நாள்ல, ரிட்டையர் ஆகி ஊருக்கு வர்றாராம். அவரு வர்ற வரை, கால் கடுக்க மலை ஏற வேண்டியது தான்…” என குமரன் சோகமாக கூற, ஜிஷ்ணு வாய் விட்டு சிரித்து விட்டான்.

“இன்னும் பச்சை மண்ணாவே இருக்க மாப்ள நீ…” அவன் தோள் மீது கை போட்டு ஜிஷ்ணு வார,

அதனை தட்டி விட்டவன், “இருந்தாலும் உங்களை மாதிரி எல்லாம் இருக்க முடியாதுப்பா. ரொமான்ஸ் பண்ணுவீங்களாம், உரிமையை காட்டுவீங்களாம் ஆனா லவ்வ மட்டும் சொல்ல மாட்டீங்களாம். இதுல பொசுக்கு பொசுக்கு மாறி மாறி அடிச்சுக்க வேற செஞ்சுக்கங்க…

இப்பலாம் வசுவ பார்க்கவே முடியல தெரியுமா. கேஸ் நடக்குற வரை கூட கொஞ்சம் நல்லா இருந்தா. இப்போல்லாம் எதையோ பறிகொடுத்தவ மாதிரியே இருக்கா. ரொம்ப தாண்டா அவளை நீ தவிக்க விடுற. ஏதோ தெரியாம பேசிட்டா. நீ மட்டும் ஒழுங்காவா பேசி இருக்க. உனக்கும்  பொறுமை கிடையாது. அவளுக்கும் பொறுமை கிடையாது. இதுக்கும் அதுக்கும் சரியா போச்சு. முதல்ல அவளை பாருடா.” என்றான் வருத்தமாக.

இங்கு வசுந்தராவும் தொலைக்காட்சியில் தெரிந்த ஜிஷ்ணுவின் பிம்பத்தை தான் பார்வையால் வருடிக் கொண்டிருந்தாள்.

அவன் அமைச்சரானதில் உள்ளுக்குள் அத்தனை மகிழ்வு எழுந்திட, அன்று மட்டும் மகிழ்ச்சியுடன் சுற்றிக் கொண்டிருந்தாள். பின் மீண்டும் தனக்குள் நத்தையாக சுருண்டிருந்தாள். இப்போது ராஜசேகரும் ஓரளவு உடல்நிலை தேறி இருந்தார்.

அவர் வெட்டுப்பட்ட அன்று தான், தம்பியின் உண்மை முகம் அவருக்கு தெரிந்தது. ஜிஷ்ணுவை மாப்பிள்ளை கேட்க போவதாக நகுலனிடம் கூறியதும் அவர் கோபத்தில் கத்தி, வசுந்தராவை கொன்று விடுவேன் என்றதில் மொத்தமாக ஆடிப் போய் விட்டார். அதில் தான், அவசரமாக ஜிஷ்ணுவை பார்த்து அவர் பேசியது.

ராஜசேகருக்கு இப்படி ஆனதே, ஜிஷ்ணுவினாலும், வசுந்தரா அவன் மீது கொண்ட காதலாலும் தான் என கோபத்தில் இருந்த அவளின் தாய் மரகதமும் அதன் பிறகு தான் உண்மையை உணர்ந்து கொண்டார்.

அன்று கணவரின் நிலை அறிந்து துடித்து மருத்துவமனைக்கு வந்தவர், கோபத்தில் வசுந்தராவை கண்டபடி திட்டி விட, அதில் பொறுமையாக இருந்தவள், ஜிஷ்ணுவை பற்றி தவறாக பேசியதில் அங்கு இருக்க பிடிக்காமல் வந்து விட்டாள்.

காலம் அனைவருக்கும் அருமருந்து என்பது உண்மை போல மரகத்திற்கும் அனைத்தும் புரிய, மகளிடமும் நன்முறையில் பேச ஆரம்பித்தார்.

இந்த பிரச்சனை முடிந்ததும், பரத் சென்னைக்கு சென்றிருக்க, அர்ச்சனா மட்டுமே வசுந்தராவுடன் இருந்தாள்.

அன்று நீதிமன்றம் விடுமுறை நாளாக இருக்க, தாமதமாக கண் விழித்த வசுந்தரா, கடமையுடனே தன் தேவைகள் அனைத்தும் செய்து விட்டு, ஜிஷ்ணுவின் நினைவில் உழல அப்போது தான் அவன் பரிசளித்த பத்திரிக்கையை காணவில்லை என்றே உறைத்தது.

“அதை ஹேண்ட் பேக்ல தான வச்சு இருந்தேன். எங்க போச்சு”  என குழம்பியவள், அறையையே இரண்டாக்கி தேடிக் கொண்டிருந்தாள்.

சத்தம் கேட்டு அங்கு வந்த மரகதம், அறையைக் கண்டு திகைத்து, “என்னடி செஞ்சுட்டு இருக்க?” எனக் கேட்க, “ஒன்னும் இல்ல…” என பதிலளித்தவளின் கரங்களும் விழிகளும் தேடலை நிறுத்தவில்லை.

“எதையாவது தொலைச்சுட்டியா?” அவர் குழப்பமாக கேட்க, “ம்ம்” என்றாள்.

“எதை தொலைச்ச? எதையும் பத்தரமா வச்சுக்க மாட்டியா? தொலைச்சதை தொலைச்ச இடத்துல தேடணும். இங்க வந்து ரூமை புரட்டிட்டு இருக்க. சரி சரி சாப்ட வா. அப்பா உங்கிட்ட ஏதோ பேசணுமாம் வர சொன்னாரு…” என்று விட்டு அவர் வெளியில் சென்று விட, அவளின் கரங்கள் தேடலை நிறுத்தி விட்டு அப்படியே நின்றது.

ஏனோ அவ்வார்த்தைகள் அவளுக்கே கூறியது போல இருக்க, ‘தொலைச்சுட்டேன் தான்… திரும்ப கிடைக்காத மாதிரி எல்லாத்தையும் தொலைச்சுட்டேன்..’ என கூறிக் கொண்டவள், ஜன்னல் அருகில் சென்று நிற்க, ஒரு முறை சங்கரை அடிக்க இரவு நேரத்தில் ஜிஷ்ணு அவளை அங்கிருந்து அழைத்தது நினைவு வந்தது. அன்று முதல் தானே, இருவருக்கும் முத்தப் போர் தொடங்கியது.

எதன் அடிப்படையில் தொடங்கி, எவ்வுறவில் நிலைபெற்று, எப்புள்ளியில் முடிந்தது என்று தெரியவில்லை அவளுக்கு. மௌனமான கண்ணீர் கண்கள் வழியே வழிந்தோட, உள்ளுக்குள் புழுங்கி கொண்டிருந்தாள்.  

அப்போது அவளுக்கு அருகில் நிழலாட, முகத்தை ஜன்னல் புறம் புதைத்து, “ப்ச்! நீ போம்மா நான் வரேன்.” என்றாள் சலிப்பாக.

“போய்டவா பேப்…?” கிறங்கடிக்கும் குரல் அருகில் கேட்க, சட்டென திரும்பியவள் அங்கு அவளையே ரசனையாக பார்த்தபடி நின்றிருந்த ஜிஷ்ணுவைக் கண்டு அதிர்ந்தாள்.

அவனை அங்கு சிறிதும் எதிர்பார்க்கவில்லை என்பது அவளின் திகைத்த விழிகளிலேயே உணர்ந்தவன்,
மென்னகையுடன் அவளை நெருங்க, அவளுக்கு கனவென்று தான் தோன்றியது.

“ஜி… ஜிஷு!” என முணுமுணுத்தவள், தன் பிரம்மை என்றெண்ணியே அவனின் கன்னம் பற்ற, அவனோ இதழின் ஈரம் அழுத்த, அவள் உள்ளங்கையில் முத்தம் பதித்தான்.

அந்த ஈரத்தில் தான் நிகழ்விற்கு வந்தவள், விருட்டென கையை எடுத்து பின்னால் நகர, ஜன்னல் கம்பியில் முட்டி நின்றாள்.

“ஏய்… கனவுலாம் இல்லடி. நிஜமா தான் வந்து இருக்கேன்” சிரிப்புடன் அவன் கூற, வசுந்தராவின் கண்கள் இன்னும் அவனை விட்டு அங்கும் இங்கும் நகரவில்லை.

கண்ணை சிமிட்டினால் மறைந்து விடுவானோ என்ற பயமே மனதெங்கும் வியாபித்து இருக்க, அவளின் மனநிலையை உணர்ந்து கொண்டவன், இழுத்து இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.

“சாரி வசு பேப்! உன்ன ரொம்ப கஷ்டப்படுத்திட்டேனா?” எனக் கூறியவனின் குரலில் உண்மையான வருத்தம் வழிந்தோட, அப்போது தான் உண்மை உறைக்க, அவனின் நெஞ்சில் அழுத்தமாக முகத்தைப் புதைத்தாள்.

“நான் தான் சாரி கேட்கணும். என்ன இருந்தாலும் நான் அப்படி பேசியிருக்க கூடாது ஜிஷு. நீ என்னை விட்டுட்டு போய்ட்டீல?” இதைக் கூறும் போதே, தேம்பி தேம்பி அழுதிருந்தாள்.

அவள் அழுகையில் ஆடவன் மனம் வாட, “லூசு பேப்… உன்னை விட்டு என்னால போக முடியாதுடி. எப்படி இருந்தாலும், எல்லா பிரச்ச்சனையும் முடிஞ்சதும், உங்கிட்ட எல்லாத்தையும் சொல்லி, சரிபண்ணலாம்ன்னு தான் நினைச்சு வச்சு இருந்தேன். அதுக்குள்ள என்ன என்னமோ ஆகிடுச்சு.” என பெருமூச்சு விட்டான்.

அதில் கண்ணில் நீருடன் நிமிர்ந்தவள், “பொய் சொல்லாதடா. நீ தான் என்னை லவ் பண்ணவே இல்லையே!” என்றவளுக்கு அவனுடனான உறவின் பெயர் அறிய ஆர்வம் கொண்டாள்.

“ஓ… நீ மட்டும் அப்படியே லவ்வ சொல்லிட்டு தான் அடுத்த வேலை பார்த்த பாரு…” என முறைத்தவன், நொடியில் அவளது இதழ்களை சுவைத்து விலகி,

“அப்போ இதுக்குலாம் பேர் என்னடி? சும்மா உன்ன யூஸ் பண்ணிட்டு இருந்தேன்னு நினைச்சியா?”கண்டிப்புடன் கேட்டான்.

வெகுநாள் கழித்து மனம் நிறைய அவள் ஏற்ற அவனின் இதழணைப்பில் கண்ணை மூடி அதனை அனுபவித்தவள் அவன் விலகியும் கூட கண்ணைத் திறக்கவில்லை.

அதில் இதழ் விரிய புன்னகைத்தவன், “இப்படியே நின்னுட்டு இருந்த நான் அன்னைக்கு விட்டதை இன்னைக்கு எடுத்துக்குவேன்…” என்றான், அவள் பிறந்த நாள் அன்று நிகழ்ந்த நிகழ்வை மனதில் வைத்து.

அவன் கூறுவது புரிந்து சிவந்தவள், “எடுத்துக்கோ… நான் என்ன வேணாம்ன்னா சொன்னேன்.” அவனின் தோள்களில் கரங்களை மாலையாக்கினாள்.

“மனுஷனை சூடாக்காதடி… நானே அஞ்சு வருஷமா காஞ்சு போயிருக்கேன்.” என்றான் கிறக்கமாக.

“நானும் தான்!” என்றவள், கமறிய குரலுடன் அவனை அணைத்திட, அவன் மென்மையுடன் அவளின் கூந்தலை தடவிக் கொடுத்தான்.

அவன் மென்மையாய் தீண்ட தீண்ட, அவளின் அழுகை அதிகமாகிக் கொண்டே போக,

“பேப்! இப்ப எதுக்கு இந்த அழுகை? என் வசு பேப் எதுக்குமே கலங்க மாட்டாளே! ம்ம்? என்ன ஆச்சுடி? என் மேல இன்னும் கோபமா? என்னை வேணும்ன்னா நாலு அடி அடிடி! பேப்… ஏய் வக்கீலு…” கொஞ்சலாக ஆரம்பித்தவன் மிரட்டலுடன் அவள் முகத்தை நிமிர்த்தினான்.

“என்னமோ தெரில… நீ சாஃப்ட்டா என்ன கட்டி புடிச்சு, தலை கோதி விட்டா அழுகையா வருது. அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி, என் பர்த்டே அப்போ நீ இந்த மாதிரி செஞ்சப்பவும் இப்படி தான் இருந்துச்சு.

உங்கிட்ட நான் ரொம்ப அடிக்ட் ஆகுற மாதிரி… என்ன விட்டு போய்டுவியோன்ற மாதிரி… என் மேல உனக்கு லவ்வே இல்லையோன்னு மனசு முழுக்க ஏமாற்றமே இருக்குற மாதிரி… ரொம்ப அழுகை வந்துச்சு. ஆனா, உங்கிட்ட காட்ட தான் பிடிக்கல. அதை இப்ப மறைக்க முடியலடா! ஐ லவ் யூ ஜிஷு…” எனக் கூறி முடித்தவள், அவன் முகம் எங்கும் முத்த மழை பொழிந்தாள்.

ஆசையுடன் அதனை ஏற்றவன், அவளுக்கும் சில பல முத்தங்களை வாரி வழங்கி விட்டு, அவளை ஆசுவாசப்படுத்தினான்.

அவள் சற்று நிதானமானதும் மெல்ல விலகியவன், “என்னடி ரூமை ரெண்டாக்கி வச்சு இருக்க?” என்று சுற்றும் பார்க்க,

“அதை விடு. என்ன மினிஸ்டர் எங்க வீட்டுக்குலாம் வந்துருக்கீங்க?” என நெற்றி உயர்த்தி திமிருடன் கேட்டாள்.

“எங்க அஞ்சு வருஷத்துல நீ அழு மூஞ்சியா மாறிட்டியோன்னு கொஞ்ச நேரத்துல பயந்தே போய்ட்டேன்டி. இப்ப தான் உயிரே வந்து இருக்கு…” என அவளை வாரியவனை, முறைப்புடன் தோளிலேயே குத்தினாள்.

அதனை விரும்பி வாங்கிக்கொண்டவன், சட்டைக்கு பின்னிருந்து பத்திரிகை ஒன்றை எடுத்து அவளிடம் நீட்டினான். “இதை தான தேடுன” என்ற கேள்வியுடன்.

அதனைக் கண்டதுமே மலர்ந்தவள், “பிராடு அடியாளு… இதை நீ தான் எடுத்து வச்சு இருக்கியா?” என மேலும் அடி கொடுத்தவள், அதனை வாங்கி ஆசையுடன் பிரிக்க,

“அடியேய் இப்ப நான் மினிஸ்டர் தெரியும்ல” என காலரை தூக்கி விட்டுக் கொண்டான்.

“மினிஸ்டர்ன்னா என்ன அடியாள்க்கு எல்லாம் பெரிய அடியாள் அவ்ளோ தான… ஊருக்கே ராஜான்னாலும் எனக்கு நீ அடியாள்தான்டா!” என்றவளை அவன் முறைக்க, அதனை கண்டுகொண்டாள் அது வசுந்தரா அல்லவே.

ஆனால், சில நொடிகளில் அவள் விழிகள் தான் திகைப்புற்றது.

அது அவன் பிறந்த நாளுக்கு கொடுத்த பரிசு பத்திரிகை அல்ல. உண்மையிலேயே அவளுக்கும் அவனுக்கும் இன்னும் பத்து தினங்களில் திருமணம் நடக்க விருப்பதற்கான திருமணப் பத்திரிக்கை.

“ஜிஷு? இது… இதுல டேட் போட்டு இருக்கு?” என விழி விரிக்க, அதனை வெகுவாய் ரசித்தவன், அவள் முன்னே முட்டி இட்டு அமர்ந்து, ஒரு சிறிய நகைப்பெட்டியை நீட்டினான்.

“இந்த அடியாள கல்யாணம் பண்ணிக்கிறியா பேப். நீ இல்லாம நான் ஒண்ணுமே இல்ல. உனக்கு முன்னாடி இந்த பாலிடிக்ஸ், பதவி எல்லாமே வெறும் தூசியா இருக்கு. எனக்கு நீ வேணும்டி. என்னோட கோபமா, சிரிப்பா, அழுகையா, என் காதலா எல்லாமா நீ எனக்கு வேணும். கிடைக்குமா?” தலை சாய்த்து அவன் காதலை ஆத்மார்த்தமாக எடுத்துரைத்திருக்க, அவளுக்கோ விண்ணை வென்ற மகிழ்ச்சி தான்.

ஆனாலும், தன் கெத்தை விட்டுக்கொடுக்காமல், சற்று யோசிக்கும் பாவனை புரிந்தவள்,

“ம்ம்… கொஞ்சம் கஷ்டமான கேள்வி தான். ஆனாலும் சரி… பண்ணிக்கிறேன்” என போனால் போகுது என்பது போல தலையாட்ட,

“உன் திமிரு குறையவே குறையாதுலடி…” அவள் உதட்டைப் பற்றி இழுத்தவன், அவளின் கையில் அந்த நகைப்பெட்டியை கொடுத்தான்.

“ஸ்ஸ்… வலிக்குதுடா!” உதட்டை தேய்த்துக் கொண்டவள், அதனை திறந்து பார்க்க, உள்ளே மூக்குத்தி இருந்ததை கண்டு சத்தமாக சிரித்தாள்.

“அடேய்… லவ் பண்ற பொண்ணுக்கு மோதிரம் வாங்கி குடுத்தத கேள்வி பட்டு இருக்கேன் நீ என்னடா மூக்குத்தி வாங்கி குடுத்து இருக்க?” பெண்ணவள் நகைத்ததில், அவளின் மூக்கோடு மூக்கை உரசியவன்,

“முதல் முதல்ல உன்ன போலீஸ் ஸ்டேஷன்ல பாக்கும் போது, உனக்கு மூக்குத்தி போட்டா அழகா இருக்கும்ன்னு யோசிச்சேன். அத தான் இப்ப எக்சிகியூட் பண்ணிட்டேன்” என்றான் உருகலாக.

அதில் நெகிழ்ந்தவள், “அப்பவே என்னை சைட் அடிச்சு இருக்க ராஸ்கல்…?” என அவன் கன்னத்தை கிள்ள, “நீ என்ன சைட் அடிக்கவே இல்ல?” என்றான் இரு புருவதையும் உயர்த்தி.

அவளோ அசடு வழிந்து, வெட்கத்தில் முகத்தை மூடிக் கொண்டாள்.

“என்னடி திடீர்ன்னு வெட்கம்லாம் படுற? நான் எதுவும் ரூம் மாத்தி வந்து பேசிட்டு இருக்கேனா?” என அவன் அவளை கேலி செய்ய, “ச்சி போடா!” என மேலும் வெட்கினாள்.

“ம்ம்ஹும்… இது சரி வராது. உனக்கு எப்படி வெட்கம் வந்துச்சு. இங்க வா செக் பண்ணிடலாம்…” என அவளை நெருங்கி, முத்தங்களை அளித்து, மோகத்தையும் வலுப்பெற செய்தவன், கட்டிலில் அவளுடன் சரிந்தான்.

ஆடவனின் கரங்கள் எல்லை மீற முற்பட, பெண்ணவள் அவனுடன் ஒன்றினாள்.

“பேப்… நோ சொல்லுடி. இல்லன்னா நான் நிறுத்த மாட்டேன் போல” அவன் பாவமாக கூற,

“ம்ம்ஹும்… சொல்ல மாட்டேனே.” என்றாள் குறும்புடன்.

“வேணாம் பேப். அப்பறம் நான் பொறுப்பு இல்ல…” என குறுநகையுடன் எச்சரித்தபடி, அவள் மீது பரவ, “நானும் பொறுப்பு இல்லடா ஜிஷு…” என்றாள் மயக்கத்துடன்.

அவர்களின் மோகத்தை கலைக்கவென்றே அறைக்கதவு டப டப வென தட்டப்பட்ட, வெளியில் குமரன் தான் கத்திக் கொண்டிருந்தான்.

“டேய்… நிச்சயம் பண்றதுக்காக, உன் குடும்பம் என் குடும்பம்ன்னு எல்லாரையும் கூட்டிட்டு வந்துட்டு, நீ உள்ள என்னடா பண்ணிட்டு இருக்க. வசு சீக்கிரம் வா. இல்லன்னா உன் அப்பா ரூமை உடைச்சுட்டு உள்ள வந்துடுவாரு.” என எச்சரித்து விட்டு செல்ல, அதில் பதறி விலகினாள்.

ராஜசேகர் உடல் நிலை சரியாகி வீட்டிற்கு வந்ததுமே திருமண தேதியை குறிக்க வைத்திருந்தான். ஆனால், வசுந்தராவிடம் கூறக் கூடாது என உறுதியாக கூறிவிட அவருக்கு தான் மனம் கேட்கவில்லை. அதனால் தான் அவன் குடும்பத்தினருடன் வரும் முன் தன் மகளிடம் கூறி விடலாம் என அவளை அழைத்து வரக் கூறினார்.

“அடப்பாவி… எல்லாரையும் கூட்டிட்டு வந்துட்டு தான் இங்க கேடித்தனம் பண்ணிட்டு இருக்கியா? ஆமா, பத்திரிக்கைல தேதியே போட்டதுக்கு அப்பறம் எதுக்குடா நிச்சயம்?” எனக் கேட்டாள் வாயைப் பொத்தி சிரித்தபடி.

“ப்ச்… வாடி…” என மீண்டும் அவளை நெஞ்சில் போட்டுக்கொண்டவன்,

“என் அம்மாவும் பாட்டியும் தான் நிச்சயமாச்சு பண்ணனும்ன்னு கூட்டிட்டு வந்துட்டாங்கடி. இல்லன்னா, கல்யாணம் வரைக்கும் உனக்கு சர்ப்ரைஸ் தரலாம்ன்னு நினைச்சேன்.” என்றான் ஃபீல் செய்தபடி.

அவன் முடியை பற்றி ஆட்டியவள்,

“அட கிராதகா. அப்படி ஒரு நினைப்பு வேற இருக்கா உனக்கு? நீ இன்னைக்கு ஊருக்கு வர்றன்னு எனக்கு தெரியும். இன்னைக்கு நீ என்னை தேடி வரலைன்னா, நானே வந்து உன்ன கட்டிப்பிடிச்சு சமாதானம் பண்ணிருப்பேன்.” என சிலுப்பிட,

“நான் இன்னைக்கு வர்றேன்னு உனக்கு எப்படிடி தெரியும்?” என்றான் அமர்த்தலாக.

*உன் ஒவ்வொரு மூவ்மெண்ட்டும் எனக்கு அத்துப்படி அடியாளு. என் அடிமை உன்னை எப்பவும் ஃபாலோ பண்ணட்டு தான் இருப்பான்” என அவள் கண் சிமிட்ட,

“மினிஸ்டரையே வேவு பாக்குறியாடி?” என்று முறைத்தான்.

அதில் அவள் நாக்கைத் துருக்கியதில், அவன் பட்டென புன்னகைத்திட, உரிமையாய் அவன் மீது படுத்திருந்தவள்,

“ஆமா ஜிஷு நான் கேட்கணும்ன்னு நினைச்சேன். அன்னைக்கு இன்ஸ்பெக்டர் சங்கரை உன் வீட்டுக்கு ரெய்டு அனுப்பி விட்டா, அவன் என்ன போன வேகத்துல வெளிய வந்துட்டான்” எனக் கேட்க,

“அதுவா! ஆனானப்பட்ட மினிஸ்டர்க்கு எதிரான ஆதாரத்தையே கைல வச்சு இருந்தேன். அந்த சங்கர் பத்தின கோல்மால்க்கும், ஊழலுக்கும் என்கிட்ட ஆதாரம் இல்லாம இருக்குமா? அதான் அதை காட்டி அவனை ஓட விட்டேன்” என்றான்.

“அழகுடா நீ!” என அவனை நெட்டி முறித்தவள், சில நொடிகளில் அவன் கன்னத்தில் குத்தினாள்.

“நான் உன் வீட்டு சுவர் ஏறி குதிச்சு வந்தப்ப, கண்ட கண்ட படத்தை எல்லாம் பார்த்துட்டு இருந்த ராஸ்கல்!” என்று முறைக்க,

அவனோ நன்றாக சிரித்து, “நீ சுவர் ஏறி குதிக்கும் போதே உன்ன பார்த்துட்டேன் பேப். உன்ன வெறுப்பேத்த தான் அதை போட்டு விட்டேன்” என மீசை உரச காது மடல்களை சிவக்க வைத்தான்.

“எல்லாம் பிளான் பண்ணி பண்ணிருக்க?” என்றவளுக்கு புன்னகை அரும்பியது.

“ஹே! ஒரு நிமிஷம் இரு…” என்றவள் ஏதோ தோன்ற, பத்திரிக்கையை பிரித்து மீண்டும் ஒரு முறை படித்து விட்டு, “நீ எப்படா டிகிரி வாங்குன?” எனக் கேட்டாள் விழி விரித்து.

அவ்விழிகளில் புதைந்தவன், “காலேஜ் டிஸ்கன்டினியூ பண்ணுன கொஞ்ச நாள்லயே கரெஸ்பாண்டன்ஸ்ல கம்ப்ளீட் பண்ணிட்டேன் பேப். எல்லாம் சரியாகி உன்ன சமாதானம் பண்ணதும், இதை காரணமா வச்சு என்னை கல்யாணம் பண்ணக்க மாட்டேன்னு சொல்லிட்டன்னா…அதான் அதையும் பண்ணிட்டேன்” என்று நேசத்துடன் உரைத்தவனை லேசாக பனித்த விழிகளுடன் பார்த்தவள், அவன் நெற்றியில் அழுந்த முத்தமிட்டாள்.

அந்நேரம், மீண்டும் கதவு தட்டப்பட, “ஜிஷு… இதுக்குமேல வெளிய போகலைன்னா நல்லா இருக்காது. வா!” என்றவளின் அழைப்பை மறுக்காமல் எழுந்தான்.

அவள் கை பற்றியபடியே வெளியில் வர, அங்கு ஜிஷ்ணுவின் பெற்றோரையும் பாட்டியையும் கண்டவள், வேகமாக அவளருகில் சென்று, “அத்தை பாட்டி எப்படி இருக்கீங்க” என்றாள் ஆர்வமாக.

அலமேலு, “ஏன்த்தா உனக்கு தம்பிக்கும் சண்டைன்னா எங்க கூட வந்து பேசி இருக்கலாம்ல, எங்களை கூட பார்க்காம இருந்துட்டியே” என வருத்தப்பட, சோலையம்மாவும், கோபித்துக் கொண்டார்.

அவளுக்கும் வருத்தமாகி விட, கொஞ்சி கெஞ்சி இருவரையும் சமன் செய்தவள், அங்கு நடைபெற்ற இருவரின் நிச்சயதார்த்தத்திலும் மகிழ்வுடன் கலந்து கொண்டாள்.

அர்ச்சனாவின் பெற்றோர் அங்கு வந்திருக்க, ஜிஷ்ணு வீட்டினர் மூலம் குமரனின் திருமணத்திற்கும் வழி வகுத்திருந்தான். அவர்களின் திருமணம் அன்றே குமரன் அர்ச்சனாவின் திருமணமும் நடைபெறவிருக்க, இது வசுந்தராவிற்கு புது செய்தி.

“டேய்… குமரா… இது எப்படா?” என கேட்க,

அவனோ கூச்சத்துடன் நெளிந்தான்.

“ச்சி நெளியாத. கேவலமா இருக்கு.” என்றவள், அர்ச்சனாவை பார்க்க, அவளோ அவனுக்கு மேல நெளிந்து “மேம்… உங்ககிட்ட சொல்லலாம்ன்னு தான் நினைச்சேன். அவரு சொல்லுவாருன்னு தான்…” என்றதில்,

இடுப்பில் கை வைத்து முறைத்தவள், “என் பிரெண்டை கல்யாணம் பண்ணிக்க போற இன்னும் நான் உனக்கு மேமா? ஒழுங்கா அக்கான்னு கூப்டு இல்லன்னா கல்யாணத்தை நிறுத்திடுவேன்.” என மிரட்டிட, அவள் அதற்கும் வெட்கப்பட்டதில், “ரொம்ப கஷ்டம்டா குமரா…” என்றாள் சிரிப்புடன்.

அப்போது தான் அருகில் இருந்த பரத்தை பார்த்தவள், “நீ எப்படா வந்த…? ஆமா கைய ஏன் பின்னாடி மறைச்சு வச்சு இருக்க?” எனக் கேட்டாள்.

அவனோ ஜிஷ்ணுவை பார்த்து மிரண்டபடி, “இல்ல என் கை பின்னாடியே இருக்கட்டும் அது தான் சேஃப்டி…” என்றவன்,

அவள் பார்வை கண்டு, “நீ பாட்டுக்கு உன் ஆளை ஃபாலோ பண்ண என்ன அனுப்பிட்ட. அவரு என்னை கையும் களவுமா பிடிச்சு, என் கையை வளைச்சு புடிச்சுட்டாரு தெரியுமா?” என அவன் பாவமாக கூற,

“அவன் கண்டுபிடிக்கிற அளவு நீ கேவலமா வேவு பார்த்துருக்கன்னு சொல்லு…” என்று தலையில் அடித்துக் கொண்டதில் அங்கு சிரிப்பலை பரவியது.

வசுந்தராவின் பாவனை அனைத்தையும் அமைதியாக தனக்குள் படம் பிடித்த ஜிஷ்ணு தர்மன், அவளின் முதுகுக்கு பின்னால் உரசும் படி நிற்க, அவளோ மெல்ல நகர்ந்து, “ஜிஷு… எல்லாரும் பாக்குறாங்க!” என்றாள் அதட்டலாக.

அவனோ மீண்டும் அவள் பின் வந்து நின்று, அவள் காதோரம் குனிந்து, “மலை ஏறுவோமா பேப்!” என மோகம் தலைக்கேற கேட்க,

செந்நிறமாய் மாறிய கன்னக்கதுப்பை அடக்க வழி தெரியாமல் தடுமாறியவள், “இப்பவே போலாமா அடியாளு” எனக் கிசுகிசுப்பாகக் கேட்டதில், யாரும் அறியாமல் தன்னவளை அங்கிருந்து கடத்திச் சென்றான் வசுவின் அடியாள்.

முற்றும்…
மேகா!

ஹாய் டியர் ஃப்ரெண்ட்ஸ்… கதை முடிஞ்சுது. கதை எப்படி இருந்துச்சு ன்னு கமெண்ட் pannunga drs 😍😍😍 i m waiting… And thank you sooooo much all for ur lovable support … 😍😍😍😍💞💞💞🔥🔥🔥🔥

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
13
+1
103
+1
1
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    3 Comments

    1. Story semma super sis. Keep writing. Athulaum vakeelu adiyaalu dialogue soooooperrrrrrr.