Loading

“நாம அவங்களுக்கு ஏதாவது சாப்பிட ஸ்நாக்ஸ் செஞ்சி எடுத்துட்டுப் போகலாமா டி?” என்று தன் மகளிடம் கேட்டார் மீனா.

 

“ம்ம். எடுத்துட்டுப் போகலாம் மா. அக்காவுக்குப் பிடிச்சது எல்லாம் நமக்குத் தெரியும். மாமாவுக்கும், அவங்க அப்பா, அம்மாவுக்கும் என்னென்ன பிடிக்கும்ன்னு அக்காவுக்குக் கால் செஞ்சுக் கேட்கவா?” என்றாள் யாதவி.

 

“சரி” என்றதும், யக்ஷித்ராவிற்கு அழைப்பு விடுக்க, அவளோ வேலையில் பிஸியாக இருந்ததால், பிறகு அழைப்பதாக தங்கைக்குக் குறுஞ்செய்தி அனுப்பி வைத்து விட்டாள்.

 

அதைப் பார்த்தவுடன்,”அவ வொர்க்கில் பிஸியாக இருக்காளாம். அப்பறமாக கூப்பிட்றதாக மெசேஜ் அனுப்பி இருக்கா” எனத் தாயிடம் உரைத்தாள் இளையவள்.

 

மீனா,“ம்ஹ்ம். நாம அவளுக்குச் சாயந்தரம் கால் பண்ணி இருக்கனுமோ? அப்போ தானே, வீட்டுக்குப் போவா?” என்கவும்

 

“ஆமாம் மா. நாம அவசரப்பட்டு அவளுக்குக் கால் பண்ணிட்டு இருக்கோம். இனிமேல் அக்கா ஃப்ரீயாக இருக்கிற நேரத்தைப் பார்த்து தான் கூப்பிடனும்” என்று தன்னுடைய அன்னையிடம் கூறி விட்டாள் யாதவி.

 

அதனால், இரண்டு நாட்களுக்குப் பின்னர் வரப் போகும் ஞாயிற்றுக்கிழமை தன்னுடைய மகளின் புகுந்த வீட்டிற்குச் செல்லப் போவதால், யக்ஷித்ராவிற்குப் பிடித்த தின்பண்டங்களை வீட்டிலேயே செய்து கொண்டு போவதற்காகத் தேவையான செய்முறைப் பொருட்களைக் கடைக்குப் போய் வாங்கி வந்து வைத்து விட்டார்கள் தாயும், மகளும்.

 

தன்னுடைய அலுவலகப் பணி நேரம் முடிவடைந்து விட்டதால், தோழி நேஹாவிடம் விடைபெற்றுக் கொண்டு வீட்டிற்குச் சென்றாள் யக்ஷித்ரா.

 

அதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகத் தான், அவளுடைய கணவன் வேலைக்குப் போயிருந்தான்.

 

“என்ன அத்தை எல்லா பொருட்களையும் வாங்கிட்டு வந்து வச்சிட்டாரா?” என்று தன் மாமியாரிடம் வினவினாள் யக்ஷித்ரா.

 

“இல்லை ம்மா. அவன் அதை மறந்துட்டான். தூங்கி எழுந்ததும் சாப்பிட்டுட்டு ஆஃபீஸூக்குப் போயாச்சு‌. நாளைக்குத் தான் வாங்கிட்டு வரச் சொல்லி ஞாபகப்படுத்தனும்” என்று அவளிடம் சொன்னார் கீரவாஹினி.

 

“அதை எதுக்கு அவன் வாங்கிட்டு வர்ற வரைக்கும் வெயிட் பண்ணனும் மா. அந்த லிஸ்ட்டைக் கொடு. நான் கடைக்குப் போயிட்டு வர்றேன்” என்று அந்தப் பொருட்களை வாங்கி வரத், தான் முன் வந்தார் அகத்தினியன்.

 

அவர் கூறுவதும் சரியென்று தோன்றி விடவும், தன் மகன் மறந்து வைத்து விட்டுப் போயிருந்த குறிப்புத் தாளை அவரிடம் கொடுத்துக் கடைத்தெருவுக்கு அனுப்பி வைத்தார் அவரது மனைவி.

 

“நான் ஆஃபீஸில் இருக்கும் போதே, என் தங்கச்சிக் கால் பண்ணி இருந்தா, அப்போ பேச முடியலை. இப்போ போய்ப் பேசிட்டு வர்றேன் அத்தை” என்றவுடன்,

 

“நீ போய்ப் பேசு. நான் காஃபி கொண்டு வரேன்” என்றார் கீரவாஹினி.

 

“வேண்டாம் அத்தை. நான் ஃபோன் பேசி முடிச்சிடறேன், மாமாவும் வந்துரட்டும். மூனு பேரும் சேர்ந்து பேசிட்டே காஃபியைக் குடிக்கலாம்” என்று அவரிடம் சொல்லி விட்டு அறைக்குள் நுழைந்து கொண்டு தங்கைக்குக் கைப்பேசியில் அழைத்தவுடன்,

 

மறுமுனையில் இருந்து,“அக்கா!” என்ற குரல் கேட்டதும்,

 

“என்ன யாது? ஏதாவது முக்கியமான விஷயம் சொல்லக் கால் செஞ்சியா? சாரிம்மா. வேலை அதிகமாக இருந்துச்சு. அதான், உன் ஃபோன் காலை அட்டெண்ட் செய்ய முடியலை” என்று தன் நிலையை அவளுக்குச் சொல்லிப் புரிய வைக்க எத்தனித்தாள் யக்ஷித்ரா.

 

“ஐயோ அக்கா! நானே உன் வேலை நேரத்தில் கால் செய்துட்டேன்னு ஃபீல் பண்ணிட்டு இருந்தேன். நீ எனக்குச் சமாதானம் சொல்லிட்டு இருக்கிற!” என்று அவளிடம் கூறிப் புன்னகையுடன் கூறியவளிடம்,

 

“சரி. எதுக்குக் கால் பண்ணுன?” என்றதும், அவளிடம் விஷயத்தைப் பகிர்ந்தாள் யாதவி.

 

“இந்த ஏற்பாடு தான் இங்கேயும் நடக்குது!” என்று சொல்லிச் சலித்துக் கொள்ளவும்,

 

“ஹாஹா! எங்களுக்குப் பிடிச்சப் பலகாரம் எல்லாம் தான் உனக்கு நல்லா தெரிஞ்சு இருக்குமே?” என்றாள் அவளது தங்கை.

 

“ஆமாம். நான் அதைச் சொன்னதும், அதுக்கான பொருட்களை எல்லாம் வாங்கியும் வச்சிட்டாங்க” என்று நடந்ததை விவரித்தாள் யக்ஷித்ரா.

 

“செம்ம, செம்ம!” என்றவளோ,

 

“நீ இப்போ எனக்குப் பதில் சொல்லு. அங்கே இருக்கிறவங்களுக்கு என்னச் சாப்பிடப் பிடிக்கும்?” என்று தமக்கையிடம் வினவினாள் யாதவி.

 

அவளிடம் தன்னுடைய கணவன், மாமனார் மற்றும் மாமியாருக்கும் 

பிடித்த வகை திண்பண்டங்களை சொல்லி முடித்து விட்டு,”நீயும், அம்மாவும் ரொம்ப மெனக்கெடாதீங்க யாது! நான் இங்கேயும் அதைத் தான் சொன்னேன். இவங்க என் பேச்சைக் கேட்கவே மாட்டேங்குறாங்க. நீங்களாவது நான் சொல்றதைக் கேளுங்க!” என்று தங்கையிடம் கெஞ்சவும்,

 

“அதெல்லாம் முடியாது அக்கா. நீ சொல்றதை அவங்களே கேட்கலை. நாங்க மட்டும் கேட்ருவோமா என்ன?” என்று கூறிச் சிரித்தாள் இளையவள்.

 

“போடி!” என்று அவளைத் திட்டி விட்டுத் நாயைப் பற்றிய விசாரிப்புகள் முடிந்ததும் அழைப்பைத் துண்டித்து விட்டு ஹாலிற்குப் போனவள்,

 

தான் செல்பேசியில் உரையாடிக் கொண்டிருந்த சமயத்திலேயே பொருட்களை வாங்கி வந்து விட்டார் தன் மாமனார் என்பதை அறிந்தவுடன்,”எதுக்கு மாமா இவ்வளவு வாங்கிட்டு வந்திருக்கீங்க?” என்று அவரிடம் சாப்பாட்டு மேஜையின் மேல் இருந்ததைக் காட்டிக் கேட்டாள் யக்ஷித்ரா.

 

“ஏன் ம்மா?” – அகத்தினியன்.

 

“நிறைய இருக்கே மாமா. அவங்க இவ்வளவு சாப்பிட மாட்டாங்க” 

 

“இதை எல்லாத்தையும் மொத்தமாக ஒரே நாளிலேயே சாப்பிடனும்ன்னு இல்லையே ம்மா? வீட்டுக்குக் கொண்டு போகட்டும்” என்று கூறி அவளைச் சமாதானப்படுத்தினார் அவளது மாமனார்.

 

அதற்குப் பிறகு, தாங்கள் மூவருக்கும் சேர்த்து காஃபி தயாரித்துக் கொண்டு வந்தவரோ,”இதை இத்தோட விடு யக்ஷி” என்று அவளுக்கு உத்தரவிட்டு விட்டார் கீரவாஹினி.

 

அவர் அவ்வாறு கூறிய பிற்பாடு, அவள் அந்த விஷயத்தைப் பற்றிய பேச்சை எடுக்கவே இல்லை.

 

அடுத்த நாள் அதிகாலையில் எப்போதும் போல தன்னுடைய வேலை நேரம் முடிந்தவுடன் தான் வீட்டுக்குள் காலடி எடுத்து வைத்தவனோ, தான் மறந்து போனதை தந்தை வாங்கி வந்திருக்கவும், அதற்கு அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டான் அற்புதன்.

 

“அதெல்லாம் ஒன்னும் இல்லை டா. நான் வீட்டில் சும்மா தான இருக்கேன். அதான், வாங்கிட்டு வந்துட்டேன்” என்றுரைத்து விட்டார் அகத்தினியன்.

 

தனக்கான சிற்றுண்டியும், கொட்டை வடிநீரும் தயாரான பிறகுத் தன்னை அழைக்குமாறு அறிவித்து விட்டு அறைக்குப் போனவனோ, அங்கே தன் வருகையால் மலர்ந்த முகத்துடன் அமர்ந்திருந்த மனைவியைப் பார்த்ததும் மூச்சடைத்துத், திகைத்துப் போய் விட்டான் அற்புதன்.

 

தன்னுடைய இதழ்க்கடையோரம் குறுநகையைத் தவழ விட்டுக் கொண்டே அவனைத் தன்னருகே வந்து உட்காருமாறு சைகை செய்தாள் யக்ஷித்ரா.

 

அதற்கிணங்க, அவனும் தன்னுடைய மனையாளிடம் சென்று அவளருகில் அமர்ந்தான் அற்புதன்.

 

“உங்க வேலை நேரத்தை எப்போ நைட் ஷிஃப்ட்டில் இருந்து டே – டைமுக்கு (day time) மாத்துவாங்க?” என்று அவனிடம் கேட்டு விட்டு ஏக்கப் பெருமூச்சொன்றை வெளியிட்டாள் அவனது மனைவி.

 

அதைக் காதில் வாங்கியவுடன், அவனுக்குத் தூக்கி வாரிப் போட்டது போலானது.

 

“நீ என்னக் கேட்ட?” என்று அவளிடம் மீண்டுமொரு முறை அதைக் கேட்க விழைந்தான் அற்புதன்.

 

“அதான், உங்களுக்கு எப்போ டே – ஷிஃப்ட் மாத்தி விடுவாங்கன்னுக் கேட்டேன் ங்க” என்று அவனிடம் பொறுமையாக வினவினாள் யக்ஷித்ரா.

 

“ஏன் திடீர்னு இப்படி கேட்கிற ம்மா?” என்க,

 

“நான் உங்களை ரொம்ப மிஸ் பண்றேன் ங்க” என்றாள் அவனது மனைவி.

 

அதைக் கேட்ட மாத்திரத்திலேயே மின்சாரம் தாக்கியதைப் போன்ற உணர்வில் அவளை ஏறிட்டுப் பார்த்தான் அற்புதன்.

 

அதில், இப்போது முதல் முறையாகத், தன் கணவனின் முகத்தை ஆழமாக ஆராய்ந்தாள் யக்ஷித்ரா.

 

அவனது வியப்பின் போது விரிந்த விழிகள் யாவும் அவ்வளவு அழகாகத் தெரிந்தது அவளுக்கு.

 

அஃது மட்டுமில்லாமல், அவனது அந்தக் குறுநகையைத் தான் இவ்வளவு நாளாக கண்டு கொள்ளாமல் இருந்து விட்டோம் என்று தன்னை நொந்து கொண்டாள் யக்ஷித்ரா.

 

“ஹேய்! நான் உன்னைத் தான் கேட்டுட்டு இருக்கேன்? அதுக்குப் பதில் சொல்லாமல் என்னையே பார்த்துட்டு இருந்தால் என்ன அர்த்தம்?” என்றான் அற்புதன்.

 

“க்கும்” என்று தன்னைச் சமாளித்துக் கொண்டு,”நான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சொன்னதை இப்போ தெளிவாகச் சொல்றேன். நான் உங்களை ரொம்ப மிஸ் பண்றேன்! போதுமா?” என்று தன்னிடம் இப்படி அழுத்தமாகச் சொன்ன மனைவியைக் கண்டு வியந்தான் அவளது கணவன்.

 

“அப்படியா?” என்றவனுக்கு உள்ளுக்குள் குளுகுளுவென்று இருந்தது.

 

“ம்ம்” என்று கூறியவளுடைய கன்னங்கள் சிவப்பு நிறத்துடன் ஜொலிக்கவும்,

 

“நான் உன்னோட வெட்கத்தை இப்போ தான் ஆற, அமரப் பார்த்து ரசிக்கிறேன் ம்மா” என்று அவளிடம் தன் ரசனைத் திறனை வெளிப்படுத்தினான் அற்புதன்.

 

அதைக் கேட்டவளுக்கு மேலும் நாணம் வந்து ஒட்டிக் கொண்டது.

 

“நீங்க இன்னும் என் கேள்விக்குப் பதில் சொல்லலை ங்க” என்று தன் காரியத்திலேயே கண்ணாக இருந்தாள் யக்ஷித்ரா.

 

“ம்ஹ்ம். இப்போதைக்கு அதை மாத்த மாட்டாங்க. ஏன்னா, எனக்கு இந்த ஷிஃப்ட்டை மாத்தி ரொம்ப மாசம் ஆகலையே? அதுக்கு இன்னும் நிறைய மாசம் ஆகலாம். அப்படி இல்லைன்னா, இன்னும் ஒரு வருஷத்துக்கு இதுவே கூடத் தொடரலாம். இப்போ எதையும் கன்ஃபார்ம் ஆகச் சொல்ல முடியாது ம்மா” என்று அவளுக்கு விளக்கம் கொடுத்தான் அற்புதன்.

 

“ஓஹ்! ஓகே ங்க” என்றவளுக்குத் தன்னுடைய பதில் மிகுந்த ஏமாற்றத்தைத் தந்துள்ளது என்பதைப் புரிந்து கொண்டதால்,

 

“நான் எதுக்கும் இதைப் பத்தி ஆஃபீஸில் கேட்டுப் பார்க்கிறேன் ம்மா” என்று சொன்னவனுக்கும் கூட, தனது பணி நேரம், இதற்கு முன்பு இருந்ததைப் போலவே மாறி விடாதா? என்ற ஏக்கம் இருந்தது.

 

அதைத் தனக்குள்ளேயே மறைத்துக் கொண்டு,”நீ தூங்கு. நான் ஃப்ரெஷ் ஆகிட்டு வர்றேன்” என்றவனோ, அவள் சிரம் தலையணையை அடைந்ததும், குளியலறைக்குள் புகுந்து விட்டவன்,

 

சில நிமிடங்கள் கடந்ததும், அங்கேயிருந்து வெளியே வந்து மனைவியின் ஆழ்ந்த உறக்கத்தை அனுமானித்தவுடன், தானும் அவளது அருகில் படுத்துக் கொண்டான் அற்புதன்.

 

அப்போது, யக்ஷித்ராவுடைய தலையோ தனது நெஞ்சில் மோதியதும், அது தூக்கக் கலக்கத்தில் அவள் அனிச்சையாகச் செய்த செயல் என்றே எண்ணி அவளது சிலையை வருடிக் கொடுத்துக் கொண்டே உறக்கத்தைத் தழுவினான் அவளது கணவன்.

 

ஆனால், மிகுந்த நாட்களுக்குப் பிறகுத் தானாகவே வலியச் சென்று அவனுடைய அணைப்பில் தஞ்சம் புகுந்து கொண்டிருக்கிறோம் என்பதை அறிந்ததும் மெல்லிய புன்னகையுடன் நித்திரை கொண்டாள் யக்ஷித்ரா.

 

அடுத்து வந்த நாளிலோ, அவள் எழுந்து புறப்படுவதற்கு முன்பாகவே தயாராகி விட்டிருந்தான் அற்புதன்.

 

அந்தச் செயலில் அவளுக்கு மயிர்க்கூச்செறிந்து போனது.

 

“நான் என்னோட ஆஃபீஸூக்கு இன்ஃபார்ம் பண்ணலை ங்க” என்று அவனிடம் சங்கடத்துடன் உரைத்தாள் யக்ஷித்ரா.

 

“அதனால் என்னம்மா? நான் அதை எதிர்பார்த்துட்டு ரெடி ஆகி வரலை” என்று தன் மனைவியிடம் கூறியவனோ, அவளது அலுவலகம் வண்டியில் அவளை ஏற்றி விட்டு,”இதுக்காகத் தான் எழுந்தேன்” என்று கூறி அவளை வழியனுப்பி வைத்தான் அவளது கணவன்.

 

தன் விலோசனங்களால் அவனது பிம்பத்தைக் களவாடிக் கொண்டு அலுவலகத்திற்குப் பயணமானாள் அவனது மனையாள்.

 

இப்படியாக, அன்றைய தினத்தை அணுஅணுவாய் ரசித்துக் கழி(ளி)த்தனர் அற்புதன் மற்றும் யக்ஷித்ரா.

 

அதன் பிறகு, கீரவாஹினி மற்றும் அவரது மருமகளும், தங்களுடைய கை வண்ணத்தில் சிலபல அருமையான சுவை கொண்ட தின்பண்டங்கள் தாயார் செய்து விட்டார்கள்.

 

அவர்களைப் போலவே, தனது மகள் மற்றும் மருமகனுக்குப் பிடித்தமானவற்றைத் தன் இளைய மகளுடன் இணைந்து சமைத்து முடித்திருந்தார் மீனா.

 

ஞாயிற்றுக்கிழமையின் அதிகாலைப் பொழுது அது! 

 

தாங்கள் இருவரும் கிளம்பிக் கொண்டிருக்கும் போதே தங்களுடைய செல்பேசியில் அழைப்பு விடுத்து விட்டிருந்த யக்ஷித்ராவிடம்,”நாங்க இன்னும் கிளம்பவே இல்லை அக்கா. அங்கே தானே வரப் போறோம்? அதுக்குள்ளே இவ்வளவு கால் பண்ணிட்டு இருக்கிற!” என்று கூறி அவளை அமைதிப்படுத்தினாள் யாதவி.

 

“சாரிடி! நீங்க இங்கே வர்ற வரைக்கும் நான் கால் செய்ய மாட்டேன்” 

 

“ம்ம். இட்ஸ் ஓகே” என்றவளோ, தாயிடம் சென்று,”அக்கா கால் பண்ணி நாம எப்போ வீட்ல இருந்து கிளம்புவோம்னுக் கேட்டா ம்மா”என்றாள் இளையவள்.

 

“பலகாரத்தை எடுத்துட்டுக் கிளம்பிடலாம்” என்று சொல்லி விட்டு அவளையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு சமையலறைக்குப் போய் அங்கேயிருந்த மூடியுடன் கூடிய பாத்திரங்களுக்குள் வீட்டில் சமைத்த தின்பண்டங்களைத் தனித்தனியாகப் போட்டு எடுத்துக் கொண்டார் மீனா.

 

தாங்கள் வீட்டிலிருந்து புறப்பட்டு விட்டதை தமக்கைக்குத் தகவல் தெரிவித்தாள் யாதவி.

 

இங்கோ, தன் தாய் மற்றும் தங்கையின் வருகையை அறிவித்து விட்டு அவர்களது வரவை எதிர்பார்த்துக் கொண்டு இருக்கலானாள் யக்ஷித்ரா.

 

அவர்கள் இருவருக்கும் காலை உணவைச் சுடச்சுட சமைத்து வைத்து விட்டாலும்,

 

மீனாவும், யாதவியும், வந்த பிறகு, மதிய உணவைப் பற்றிக் கேட்டுக் கொள்ளலாம் என்றிருந்தனர்.

 

         – தொடரும் 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்