Loading

ஆவியற்ற என்னுள் உன்னாலும்

வாழ முடியாது என்று உரக்கச் சொன்னாலும் என்னை உருக்குலைத்து நசித்ததேனோ?

 

வாழ்விடம் தொலைத்து நிலைபெற இயலுமா?

 

நானும் மனமும்…

 

நிரண்யாவின் வீட்டில் பல பூஜைகள் நிகழ்ந்தது. அதில் அவள் கலந்து கொள்ள முடியாது என்று மறுத்தாலும் அவளின் அன்னை விடுவதாய் இல்லை.

 

அன்று இறுதிக் கட்டமாம். ஒரு கோவிலுக்கு அழைத்துச் செல்லப் பட்டாள். கோவிலுக்கு வெளியில் நின்று கோவிலை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். விழிகளுக்கு கீழ் கருப்பு வளையம். உடல் மெலிந்து மெலிந்து நலிந்து போயிருந்தது. தலைப் பரட்டையுடன் இருந்தது. அவளின் அன்னையை அருகில் நெருங்கவும் விடவில்லை‌. மொத்தமாக மொழியாக மாறியிருந்தாள். மொழியின் ஆதிக்கம் அவளின் ஒவ்வொரு நகர்விலும் இருந்தது. ஒவ்வொரு அணுவிலும் இருந்தது. கண்ணாடி பார்த்து தன் முகத்தையே காயப் படுத்திக் கொண்டாள் பல நேரங்களில். சில நேரங்களில் தன் முகத்தைத் தீவிரமாக ஆராய்ச்சி செய்தாள். 

 

இப்பொழுது கோவிலை வெறித்துப் பார்த்தாள். மூளையில் உள்ள நியூரான்களுக்குள் மின்சாரம் பாய்ந்தது போல் இருந்தது. அதன் விளைவு கருவிழிப் பாவைகள் இடமும் வலமுமாக அலைந்து திரிந்தது.

 

இந்தக் கோயில் பேய் ஓட்டுவதில் பெயர்போன கோவில். உள்ளே பல அலறல். அவை மனிதனின் அலறலா இல்லை பேய்களின் அலறலா என்று அந்த கடவுளுக்குத்தான் வெளிச்சம்.

 

என்னை விட்டுவிடுங்கள் என்னை விட்டுவிடுங்கள் என்று கெஞ்சல்கள். பின் அதுவே ஓலங்களாக மாறியிருந்தது.

 

ஒரு மரத்தில் ஒரு லட்சம் ஆணிகள் அடிக்கப்பட்டிருந்தது. அந்த மரத்திற்கு ஒரு கதை. ஓட்டிய பேய்கள் அனைத்தையும் அம்மரத்தில் ஆணி வைத்து அடித்திருப்பதாக ஒரு நம்பிக்கை. மரம் முழுக்க மஞ்சள் பூசப்பட்டிருந்தது. சில யந்திரங்களும் அடக்கம். 

 

சிலர் துவண்டு விழுந்திருந்தனர்.  அவர்களைத் தாங்கிப் பிடித்திருந்தனர் சிலர். உடுக்கை ஒலி செவிப்பறையைப் பிளக்க, மனதில் கிலியைத் தோற்றுவித்தது. பேயில்லை என்று உறுதியுடன் கூறித் திரிபவன் வந்தாலும் பயந்து விடுவான்.

 

“நிரண்யா.. உள்ள வா.. போகலாம்” என்று கீதன் அழைக்க, அவள் உள்ளே வர மறுத்தாள். கைகள் நடுங்கியது. கால்கள் ஓரிடத்தில் பசைப்போட்டு ஒட்டிக் கொண்டது.

 

“எதுக்கு என்னை இங்க கூட்டிட்டு வந்தீங்க” என்று அவனைப் பிடித்துத் தள்ளினாள்.

 

அவன் இதை எதிர்பார்க்கவில்லை. கீழே சென்று விழுந்தவன், அவனின் நிலை உணர்வதற்குள், நிரண்யா ஓடினாள். நொடிகள் கடப்பதற்குள் விழி தொடும் தூரம் ஓடி விட்டாள். அவன் விக்கித்துப் போய் நின்றான். சுயநினைவு பெற்று அவனும் ஓடினான். அந்த வீதியில் இருந்த சிலர் அவனுக்கு உதவினர். ஒருவழியாக அவளைப் பிடித்து மீண்டும் கோவிலுக்கு அருகில் அழைத்து வர, பலம் முழுவதையும் திரட்டி அவள் எதிர்த்தாள்.

 

“நிரண்யா.. அடம் பிடிக்காத.. கோவில்தான்.  இங்க போனால் உன்னோட மனசு அமைதியாகும்” என்று மன்றாடினான் கீதன்.

 

“இல்லை. இது கோவில் இல்லை. நான் உள்ளே வர மாட்டேன். இங்க சுடு தண்ணியை என் மேல் கொட்டுவாங்க. அடிப்பாங்க. என்னை ஆணியில் அடிப்பாங்க. வலிக்கும். வரமாட்டேன்” என்று அழுதாள். அவை அனைத்தையும் கேட்ட கீதன் திடுக்கிட்டான். பூஜை என்றும், இந்த கோவிலுக்கு அழைத்து வந்தால் அவளின் பித்து குணமாகிவிடும் என்று சாமியார் கூறியதால் அவளை இங்கு அழைத்து வந்தது. இப்படியெல்லாம் இங்கு கொடுமைகள் நிகழும் என்பது அவனுக்கு புதிய செய்தி. அப்படியெல்லாம் இருக்காது. நிரண்யா கூறுவதெல்லாம் அவள் மனதின் கற்பனைகள் என்றே எண்ணினான் அவன். உள்ளே சென்று பார்க்கலாம் என்றுதான் உள்ளே சென்றான். ஒருவேளை நிரண்யா கூறியதுபோல் கொடுமைகள் பல இருந்தால், அவளை அழைத்துச் சென்று விட வேண்டும் என்று நினைத்திருந்தான். நிரண்யாவின் அன்னை பேயோட்டப் போவதாக கூறியிருந்தாலும், இதுவரை அவளின் உடலை எவ்விதத்திலும் வருந்த செய்யவில்லை அந்த சாமியார். 

 

 

முதலில் பேயோட்டுவதைப் பற்றிய தற்கால புரிதல் சரியா என்று பார்க்கலாம்.

பேயோட்டுவது வேத காலத்தில் இருந்தே பின்பற்றப்பட்ட நடைமுறை ஆகும்.  பகவத் கீதையின் 3 ஆவது, 7 ஆவது மற்றும் 8 ஆவது அத்தியாயங்களை வாசித்து அதன் பலனை மாண்டவர்களுக்கு மனதளவில் அர்ப்பணிப்பது அவர்களை ஆவி நிலையிலிருந்து விடுபட உதவுமாம். இது இந்து தர்மம்.  

 

அதர்வண வேதத்தில் மாந்த்ரீகம் மற்றும் மருத்துவம் தொடர்பான இரகசியங்களைக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ள சடங்குகளில் பல சடங்குகள் பேய்களையும் தீய சக்திகளையும் விரட்டுவதற்கானவையே ஆகும். இந்த நம்பிக்கைகள் குறிப்பாக மேற்கு வங்கம், ஒரிசா மற்றும் தென் மாநிலங்களான கேரளா போன்றவற்றில் வலுவானதாகவும் நடைமுறையிலும் உள்ளன.

 

வேத மற்றும் தந்திர மரபுகள் ஆகிய இரண்டிலும் பயன்படுத்தப்படும் மந்திரம் மற்றும் யக்ஞம் ஆகிய இரண்டு முறைகளே பேயோட்டும் அடிப்படை முறைகளாகும். யக்ஞம் என்பது யாகம் வளர்த்து மந்திரங்கள் மனனம் செய்வது. அதாவது மனதிற்குள் உருட்டிக் கொள்வது. அது நம் நாடியில் சலனம் ஏற்படுத்தி புது உணர்வுகளை தருகிறது. 

 

அதையே வாய்விட்டு வேத கோஷமாகப் பண்ணினால், அர்த்தம் புரியாவிட்டாலும் அதன் கம்பீரமே கேட்கிறவர்களுக்கெல்லாம் ஒரு திவ்ய ஆனந்தத்தைத் தருமாம். 

 

இந்த முறைகளே பேயோட்டுவது என்பதாகும். ஆனால் இதில் ஆவியை விரட்டுவதாகக் கூறி, குறிப்பிட்ட ஆத்மாவை துன்புறுத்துவது எந்த நூற்றாண்டில் சேர்ந்தவை என்று தெரியவில்லை. இப்பொழுதெல்லாம் பேயோட்டுவது என்ற வார்த்தையைக் கேட்டாலே, அடித்து துன்புறுத்துவதுதான் நினைவில் வருகிறது. அப்படி ஒரு மாய பிம்பம் உருவாக்கப்பட்டுவிட்டது. 

 

பலத்த சிந்தனையுடன் உள்ளே சென்றான் கீதன். அங்கு சென்று பார்த்தவன் அதிர்ந்தான். ஏனெனில் நிரண்யா கூறிய அனைத்தும் உண்மை என்று உணர்த்தியது அச்சூழல்.

 

நிரண்யா கதறினாள். சிலையாய் சில நிமிடங்கள் நின்றான். அதன்பின் நிரண்யாவின் கையைப் பிடித்துக் கொண்டு வெளியில் வேகமாக வந்தான். அவன் பின்னே ஓடி வந்தார் நிரண்யாவின் அன்னை. வெளியில் வந்ததும் அவளுக்கு அவ்வளவு ஆனந்தம். அவள் விழிகள் சிரித்தது. அழுகையை நிறுத்திவிட்டாள். கீதனை நன்றியுடன் பார்த்தாள். 

 

“மாப்பிள்ளை.. நில்லுங்க. நிரண்யாவை எங்க கூட்டிட்டு போறீங்க” என்று ஓடி வந்தவரை பார்வையால் தடுத்து நிறுத்தினான்.

 

“விடுங்க அவளை. அவ குணமாகணும்” என்று அவர் கெஞ்ச, அவரை முறைத்தான் அவன். 

 

“கூட்டிட்டு போங்க. எனக்கு ஒண்ணும் பிரச்சினை இல்லை. ஆனா அவளை உங்க மகளா மட்டும் கூட்டிட்டு போக சம்மதம்னா கூட்டிட்டு போங்க” என்றான் அழுத்தம் திருத்தமாக. 

 

அவர் புரியாமல் அவனைப் பார்க்க, “நான் சொன்னதுக்கு ஒரே அர்த்தம் தான். திரும்ப விளக்கி சொல்லணும்னு அவசியம் இல்லை” என்று அவரின் பதிலுக்குக் காத்திராமல் அவளை அழைத்துக் கொண்டு சென்றான்.

 

“மாப்பிள்ளை… நீங்க நினைக்கிற மாதிரி கொடுமைப் படுத்த மாட்டாங்க. கொஞ்சம் பயமுறுத்தி பேயோட்டுவாங்க. அவ்ளோதான்” என்று கெஞ்சினார். 

 

மகளுக்கு எப்படியாவது குணமாகிவிட வேண்டும் என்று தன் மகனை கல்லாக்கினார் அவர்.

 

“இப்போ என்னை போலீஸ் ஸ்டேஷன் கொண்டு போய் நீதானே அந்த தீவிரவாதி.. உண்மையை சொல்லுன்னு நாலு அடி அடிச்சா, வலி தாங்காம நானும் ஒத்துக்குவேன். அவ்ளோதான். அதேதான் இங்கேயும் நடக்குது.. போயிடு, போயிடுன்னு கொடுமைப் படுத்தினா, போறேன்னு சொல்லுவாங்க. இல்லை அதிர்ச்சியில் மயங்கி விழுவாங்க. ஏதோ உங்க மனசை வேதனைப் படுத்த வேண்டாமேன்னு இதுக்கு ஒத்துக்கிட்டேன். ஆனால் என்னால் இதுக்கு மேல தாங்க முடியாது. என் மனசாட்சி கேக்குற கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியல” என்று தன் நீண்ட விளக்கத்தை வைத்தான்.

 

தன் மகிழுந்தை நோக்கிச் சென்றவன், அவளை முன்னிருக்கையில் அமர வைத்தான். நிம்மதியாக அமர்ந்தாள் நிரண்யா. அவள் விழிகள் நன்றி நவில்ந்தது அவனிடம்.

 

பின் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்தவன், மகிழுந்தை இயக்கி, நிரண்யாவின் அன்னையின் முன் நிறுத்தினான்‌. எதுவும் பேசாமல் அவர் ஏறிக் கொண்டார்‌.

 

மயான அமைதி நிலவியது அங்கே. மூவரும் மூன்று விதமான மனநிலையில் இருந்தனர். 

 

மனதில் இருந்த பாரம் இறங்கி, மனம் லேசாக உணர்ந்தாள் நிரண்யா. கீதனை கடவுளாகவே பார்த்தாள். அவன் யார்.. ஏன் இதை செய்ய வேண்டும் என்று மூளையின் பக்கங்களை அலசியதில் தலை வலித்தது. அவள் மொழி என்பது மட்டுமே நினைவில் இருந்தது. அவ்வப்பொழுது மூளைக்குள் தோன்றி மறையும் பிம்பங்கள், உரையாடல் என்று மூளை தவித்தது.

 

எதிலிருந்தோ அவளைக் காப்பாற்றிய உணர்வு அவனுக்கு. அவனின் மனசாட்சிக்கும் உரிய வகையில் பதில் அளித்த நிம்மதி.

 

ஆனால் இதில் மனம் தவித்து நின்றது நிரண்யாவின் அன்னை மட்டுமே. தன் மகள் கீதனுடன் வாழ வேண்டும் என்றே அவர் இதை செய்யத் துணிந்தது. ஆனால் கீதனின் இந்த அவதாரத்தில் அதுவே ஆட்டம் கண்டுவிட்டது. 

 

திகையாதே மனமே!

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்