
காதல் -21
அரக்கன்..
இந்த வார்த்தையை புத்தகத்தில் தான் படித்து இருக்கிறாள்.. அரக்கன் இப்படி பட்டவன் என அரக்கனுக்கு ஒரு கற்பனை பாத்திரத்தை உருவாக்கி உள்ளாள்.. நேரில் பார்க்கவில்லை என்றாலும் எழுத்துக்களின் மூலம் அந்த வார்த்தையின் அர்த்தம் அவளை பயம் கொள்ள வைத்திருந்தது உண்மையே..
ஆனால் தற்பொழுது நிலைமையே வேறு.. கற்பனையில் இருந்த கதாபாத்திரம் தற்போது அவள் கண் முன்னே.. மிரண்டு போனாள் என்று தான் சொல்ல வேண்டும்.. மெல்லிய மனம் படைத்தவளை அதிர வைத்திருந்தான் மறவன்.
கற்பனைக்கும் எட்டாத காரியத்தை எல்லாம் செய்திருந்தான்.. கொஞ்சம் கூட இரக்கமின்றி அவன் செய்த செயல்.. இவன் அரக்கன் இல்லை அதற்கும் மேல் என்று தான் தோன்ற வைத்தது..
பால்கனி மூலையில் வாடிய கொடியாய் துவண்டு கிடக்க.. அவள் கண் முன் வந்து போனது அவன் செய்த செயல்.
போனை பேசிவிட்டு வந்தவன் நேராக அவள் அருகில் வந்து தனது மொத்த கோபத்தையும் இறக்கி வைத்தான். கழுத்தோடு சேர்த்து அவளை அழுத்தி பிடித்தவன், ” எதுக்காக இத்தனை நாளா நடிச்ச … ” வார்த்தைகளில் உஷ்ணத்தை கூட்டி அவன் கேட்ட விதத்தில் இன்றோடு தன் வாழ்க்கை அவ்வளவு தான் என்னும் அளவிற்கு அவள் யோசித்து விட்டாள்.
அவன் பிடியில் இருந்து தப்ப இயலாமல் தவித்து போனவள், மூச்சிற்கு ஏங்கி கரு விழிகள் மேலே போன சமயம் பார்த்து அப்படியே அவளை விட்டு விட.. பிடிமானம் இன்றி தொம்மென்று கீழே விழுந்தாள்..
அதில் அவள் உடலில் சின்ன சின்ன காயங்கள் ஏற்பட்டு விட.. அதையும் பொருட்படுத்தாமல்.. வலியோடு எழுந்து நின்று தன் பக்கம் உள்ள நியாயத்தை கூறி விட போராடினாள் ..
மீண்டும் தன் சைகையை ஆரம்பிக்கும் பொருட்டு அவள் கைகளை அசைக்க.. அதை காண முடியாமல் அவளது இரு கரங்களையும் அவனது ஒரு கரத்தில் சிறை பிடித்தவன்.. ” இப்படி சைகை பண்ணி இந்த கண்ணால தானே டி என்ன மயக்குன.. இனிமே இந்த நடிப்பு எல்லாம் என்கிட்ட செல்லாது.. எவ்வளவு தைரியம் இருந்தா உண்மை தெரிஞ்சும் என்கூட ஒரே வீட்ல இருந்துருப்ப, அப்போ இவன் என்ன பண்ணிட போறான் அப்படினு இளக்காரம் தானே உனக்கு ” என கைகளை அழுத்த வலியில் முகம் சுளித்தாள்..
” வலிக்குதா… இப்படி தானே என் அம்மாவுக்கு வலிச்சு இருக்கும்.. எப்படி எல்லாம் துடிச்சு இருப்பாங்க ” என மேலும் அவளை வலிக்க செய்யும் படி அவன் முறுக்கி விட.. கை பிசகி வலியில் துடித்து போனாள் பெண்ணவள்.
‘காதல்… போயும் போயும் உன் மேல எனக்கு காதல் வந்திருக்கு பாரு.. இனியும் உன்ன கண் மூடி தனமா காதலிக்க நான் ஒன்னும் மறவன் இல்ல டி… இனிமே பாரு.. ‘ என மனதிற்குள் நினைத்தவன் “ஒவ்வொரு நிமிஷமும் என் அம்மாவுக்கு பண்ண கொடுமைக்கு உன்ன துடிக்க வைப்பேன் ” வேங்கையாக பாய்ந்தவனை தடுக்க முடியாமல் நின்று கொண்டிருந்தாள் சாயாலி..
நிலைமை கை மீறி போவது அவளுக்கு தெரிந்தாலும் .. அவனை தடுக்க முடியாத கட்டத்திற்கு வந்து விட்டதை நன்றாக உணர்ந்து கொண்டாள்.. இனிமேல் அவனே தன்னிடம் கேட்காத வரை தானும் எதுவும் கூறப் போவதில்லை என்று வைராக்கியமாக முடிவெடுத்து கொண்டவள் அவனது கொடுமையை எல்லாம் ஏற்க தயாரானாள்.
” என்ன பயமா இருக்கா” என்றதும்…
மெல்லிய புன்னகையை இதழில் படர விட்டவள்.. ” இல்லை ” என்பதாக தலை அசைக்க.. அவளது பதிலில் மேலும் ஆத்திரம் மேலோங்க புன்னகை படர்ந்த இதழ்களை வெறியாக பார்த்தவன்.. அடுத்த நொடி அவ்விதழ்களுக்கு தண்டனை வழங்க ஆரம்பித்தான்.
அடிப்பான் துன்புறுத்துவான் என அவள் நினைத்திருக்க.. அவள் நினைப்பிற்கு மாறாக இதழை அணைத்திருந்தான் கள்வன்
அவன் காதலித்தது அவனுக்கு மட்டுமே தெரியும் என்பதால்.. காதல் இல்லாமல் அத்துமீறி தன்னை நெருங்குகிறான் என நினைத்து அவள் கரம் கொண்டு அவனை நெருங்க விடாமல் தடுக்க பார்க்க… அவன் கொடுத்த இறுக்கத்தில் அவளால் அவனை அசைக்க கூட முடியவில்லை..
கத்தவும் முடியாத சூழலில் தன் இயாலமையை நினைத்து கண்ணீர் மட்டுமே வடிக்க முடிந்தது அவளுக்கு.. இதற்கெல்லாம் அவனுக்கு திருப்பி கொடுக்க வேண்டும் என்ற வெறி அவளுள் உருவானது.
அவளை அடித்து இருந்தால் கூட தாங்கி இருப்பாள்.. ஆனால் அவன் ஆண் என்ற கர்வத்தில் அவளை நெருங்கி அவளது பெண்மையை கலங்கப் படுத்துவது அவளுக்கு கடும் சினத்தை உருவாக்கியது.
அன்று மலை உச்சியில் அவளை நெருங்கியவனுக்கும் இவனுக்கும் என்ன வித்தியாசம் என்று தோன்றியது. அவனும் அவளது அனுமதி இல்லாமல் அவளை எடுத்துக் கொள்ள நினைத்தான். அதே போல இவனும் தன் அனுமதி இல்லாமல் என் இதழை தீண்டுகிறான்.. நினைக்கும் போதே மனம் வெறுப்பானது..
தன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் அவளை வருத்தி விட்டு , அவளிடம் இருந்து விலகினான் மறவன்.
துவண்ட கொடியை போல அப்படியே கீழே சரிந்தவள் முகத்தை மூடி கொண்டு தன் கண்ணீரை அடக்க பார்க்க.. நிதானதிற்க்கு வந்தவன் சாயாலி இருந்த நிலைமையை கண்டு துடித்தாலும் , அவள் செய்த காரியத்திற்கு இது ஒன்றும் பெரிதல்ல என்று தான் தோன்றியது.
தப்பு செய்து விட்டாய் என மனம் எச்சரிக்கை செய்ய.. அதை சட்டை செய்யாதவன்.. ” நாளைக்கு காலையில என்கூட நீ கிளம்பி வர, இனிமே இந்த வீட்ல உனக்கு இடம் கிடையாது ” என்றதும் அவனை நிமிர்ந்து பார்த்தவள்.. ஏதோ கூற வர…
” நாளைக்கு அம்மா இருக்குற வீட்டுக்கு போறோம்… இனிமே உன்னோட வேலை எல்லாம் என் அம்மாவை நல்ல பார்த்துக்கனும்.. என் பழைய அம்மாவை எனக்கு திருப்பி கொடுக்கனும்.. அப்படி நீ பண்ணிட்டா இந்த மறவன் கிட்ட இருந்து நீ தப்பிச்சுட்ட.. இல்லைனா உன் வாழ்க்கையில நரகம்ன்னா என்னனு உனக்கு காட்டுவேன்… ” என கர்ஜித்து விட்டு அறையில் இருந்து மறைந்து போனான் மறவன்.
கண்களை மூடி சுவற்றில் சாய்ந்து அமர்ந்து இருந்தவள் கண் முன்னே சில படங்கள் காட்சியாக ஓடியது. ” என்ன காப்பாத்துங்க… ஐயோ யாராவது இருக்கீங்களா ” என சிந்தாமணி கதறியது இன்னும் அவள் காதில் ஒலிக்க.. காதை மூடிக் கொண்டு கண்களை இறுக்க மூடி அங்கேயே படுத்து விட்டாள்.
**
“என்ன மா காலையிலேயே இந்த பக்கம் … ” என விடியற்காலையில் வீட்டு வாசலில் நிற்கும் தேனுவை உள்ளே அழைத்து சென்றார் மூர்த்தி.
” அது திடீர்னு சாயா நினைப்பு வந்துருச்சு, என்னால வீட்ல இருக்க முடியலை ஐயா , அதான் நான் பிள்ளையை ஒரு எட்டு பார்த்திட்டு போக வந்தேன் ” என்றதும் சிரித்தவர், “சரி உட்காருங்க மா நான் காபி கொண்டு வர சொல்லுறேன் ” என்றதும் அவசரமாக மறுத்தவர்..
” காபி தண்ணி குடிச்சுட்டு தான் வரேன்.. இன்னும் சாயா எழுந்து வரலையா ” என தயக்கமாக மணியை பார்த்து கொண்டே கேட்டார் தேனு.
மணி காலை ஏழு என காட்ட.. மூர்த்தி மணியை பார்த்துவிட்டு , ” நைட் அவங்க ரெண்டு பேரும் வெளிய போயிட்டு லேட்டா தான் வந்தாங்க மா , அதான் அசதில பிள்ளைங்க உறங்கி இருப்பாங்க ” என மருமகளை விட்டு கொடுக்காமல் பேசினார் மூர்த்தி.
அப்போது குளித்து கிளம்பி இருவரும் பையோடு கீழே இறங்கி வந்தனர். தன் மகளையும் மருமகனையும் கண் குளிர பார்த்து வைத்தார் தேனு.
காலையிலேயே தேனுவை கண்டதும்… என்னவோ ஏதோ என பதறி அடித்து அவர் அருகில் சென்றாள் சாயாலி..
அவளது தவிப்பை பார்த்து.. ” எனக்கு ஒன்னும் இல்ல சாயா மா.. உன்ன பார்க்கனும் போலவே இருந்துச்சு அதான் வந்தேன்… நேத்து தம்பி வந்து வீட்டு பத்திரத்தை நம்ம பேர்ல மாத்தி கொடுத்திட்டு போனாரு மா.. ” என்றதும் அமைதியாக தலை ஆட்டினாள்…
” ஆமா இம்புட்டு காலையில நீங்க எங்க போறீங்க ” என தேனு கேட்க.. அதே கேள்வியை தாங்கி நின்றார் மூர்த்தி.
” அப்பா அது கொஞ்ச நாளைக்கு அவ கூட வெளியூர் போயிட்டு வரேன் ” என முகத்தில் எதையும் காட்டாமல் பேச..
“ஹனிமூன் போறியா டா ” என மூர்த்தி கேட்டதும் வெறுப்பாக ஆம் என்று தலை ஆட்டினான். தேனுவிற்கு அத்தனை மகிழ்ச்சி .. தன் மகள் மகிழ்ச்சியாக வாழ போகிறாள் என்று..
ஆனால் உண்மை அவ்விருவருக்கும் மட்டும் தானே தெரியும். ” என்ன டா இப்படி திடுதிப்புன்னு சொல்லுற, டிக்கெட் எல்லாம் போட்டாச்சா ”
” எல்லாம் ஓகே பா நாங்க போயிட்டு வரோம்” என தேனுவிடம் சிறு தலை அசைப்போடு கிளம்பி விட்டான்..
இருவரிடமும் மௌனமான தலை அசைப்போடு அவளும் கிளம்பி இருந்தாள்.. காரில் ஏறியதில் இருந்து இருவரும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.. பழையதை எல்லாம் நினைத்து பார்த்துக் கொண்டே வந்தாள் சாயா.. அதற்குள் மலை உச்சியில் இருக்கும் வீடும் வந்துவிட.. ” மகாராணி இறங்குங்கனு வேற சொல்லனுமா ” காட்டமாக வந்தது அவன் குரல்.
அதில் திடிகிட்டு வேகமாக காரில் இருந்து இறங்கி.. பையை எடுத்துக் கொண்டு வீட்டிற்குள் சென்றதும்.. முன்பு இருந்த அவர்களது அறைக்கு செல்ல போனவளை தடுத்தவன்..
” பொண்டாட்டிக்கு மட்டும் தான் அந்த ரூம், வீட்டு வேலைக்காரிக்கு கிடையாது ” என்றதும் மனதை தாக்கிய சொற்களை பொருட்படுத்தாமல் அமைதியாக நின்றாள்.
” என் அம்மாவை பார்த்துக்க தான் இங்க கூட்டிட்டு வந்தேன்.. அவங்க கூட தான் நீ தங்கனும், அவங்களை ஏதாவது பண்ணும்னு நினைச்ச ” என மிரட்டி விட்டு அவன் அறைக்குள் புகுந்து விட.. தன் நிலையை எண்ணி நொந்து கொண்டு சிந்தாமணியின் அறைக்குள் நுழைந்தாள்.
அமைதியாக கண் மூடி படுத்திருந்தார் .. அவரை இந்த நிலையில் பார்க்கவே மனம் உறுத்தியது.
” அப்படி ஒரு நாள் வராமலே இருந்துருக்கலாம்ல மா.. ” என கண்ணீர் மல்க அவரது காலடியில் அமர்ந்து அவள் அழ.. அவளது கண்ணீர் துளிகள் அவரது காலில் பட்டு தெறித்தது..
அதில் லேசாக ஆடிய அவரது மேனியை வியப்புடன் பார்த்தாள் சாயாலி..
சனா💖

