Loading

தன் கணவனுக்குத் தன் மேல் அன்பு, காதல் எல்லாம் இருக்கிறது தான்!

 

ஆனால், அவன் இந்தளவிற்குத் தன்னைப் பார்த்துக் கொள்ள நினைக்கிறானே? என்று தான் அவனைப் பிரம்மிப்புடன் ஏறிட்டாள் யக்ஷித்ரா.

 

அதற்கு ஈடாக, அவனுக்குத் தான், எதுவுமே செய்து விடவே இல்லையே? பிறகு ஏன் இந்தக் கரிசனம் மற்றும் காதல் அவனுக்குத் தன் மேல் வந்திருக்கிறது? என்பதை எல்லாம் அவனது விழிகளைப் பார்த்துக் கொண்டே தான் யோசித்துக் கொண்டிருந்தாள்.

 

அதைக் கண்ட அவளது கணவனோ,”ஹேய்! என்னம்மா? ஏன் அமைதியாகிட்டே?” என்று அவளிடம் கேட்டான் அற்புதன்.

 

“நமக்கு அரேன்ட்ஜ் மேரேஜ் தானே நடந்திருக்கு‌. அப்படியிருக்கும் போது உங்களுக்கு எப்படி என் மேல் இவ்வளவு காதல், அன்பு வந்திருக்கு?” என்றவளிடம்,

 

“என் பொண்டாட்டி மேல் அன்பு, காதல் எல்லாம் வர்றதுக்கு அது லவ் மேரேஜ் ஆகத் தான் இருக்கனுமா? பெரியவங்கப் பார்த்து, பண்ணி வச்சக் கல்யாணமாக இருந்தாலும், ஒருத்தரையொருத்தர் புரிஞ்சிக்கிட்டாலே போதும்! எல்லாம் தானாகவே வந்துரும் மா” என்று விளக்கிக் கூறி அவருக்குப் புரிய வைத்தான் அவளது கணவன்.

 

“ஓஹ்ஹோ! எனக்கு இதெல்லாம் தெரிய மாட்டேங்குது ங்க‌. நானும் உங்களை மாதிரி எல்லாத்தையும் உடனே புரிஞ்சுக்கிட்டு அதுக்குத் தீர்வும் கண்டுபிடிக்கிற ஆளாக இருக்கும்!” என்று தன்னிடம் சொன்னவளைக் கண்டு அதிசயித்தாலும்,

 

உடனே,”நீ என்னை மாதிரி மாறனும்னு தயவு செஞ்சு நினைக்காதே. இயற்கையாகவே உனக்குள்ளே வர்ற மாற்றங்களை ஏத்துக்கோ! அது போதும்” எனத் தன்னுடைய மனைவிக்கு அறிவுரை வழங்கினான் அற்புதன்.

 

“சரிங்க” என்று அவனுக்குத் தெளிவான பதிலைக் கொடுத்தாள் யக்ஷித்ரா.

 

“இப்போ நாம வெளியே போய் அப்பா, அம்மா கூடப் பேசுவோம்” என்று கணவனும், மனைவியும் அவர்களது அறையிலிருந்து வெளியே வந்தனர்.

 

“என்ன விஷயத்தைச் சொல்லியாச்சா?” என்று மருமகளிடம் விசாரித்தார் கீரவாஹினி.

 

“சொல்லிட்டேன் அத்தை” என்றாள் யக்ஷித்ரா.

 

“அவங்களுக்கு வேற ஏதாவது பொருள் வாங்கி வைக்கனும்னா அவன்கிட்ட சொல்லும்மா. அவன் தூங்கி எழுந்து வந்ததும் வாங்கிட்டு வரட்டும்” என்று அவளுக்கு அறிவுறுத்தினார் அகத்தினியன்.

 

“அம்மாவும், யாதவியும் அவ்வளவாக எதுவும் சாப்பிட மாட்டாங்க மாமா. நம்ம வீட்டில் இருக்கிறதே போதும்” என்று அவரிடம் தெரிவிக்கவும்,

 

கீரவாஹினி,“அப்படி எல்லாம் விட முடியாது” என்றவரோ,

 

“பத்து மணிக்கு மேலே தான் கடையைத் திறப்பாங்க. அப்போ நான் சொல்றதை எல்லாம் வாங்கிட்டு வந்துருடா” என்று மகனுக்கு உத்தரவிட்டார்.

 

“ஓகே ம்மா” எனவும்,

 

“நொறுக்குத்தீனி மட்டும் இப்போ வாங்கி வைக்கலாம். மத்தப் பழம், இனிப்பு இதையெல்லாம் அவங்க வர்றதுக்கு முதல் நாள் வாங்கிடலாம். சரியா?” எனக் கூறி விட்டு, தன் சம்பந்திக்கும், அவரது இளைய மகளுக்கும் என்னென்ன பிடிக்கும் என்று கேட்டு அவற்றை ஒரு தாளில் எழுதி அதை மகனிடம் ஒப்படைத்து விட்டார் கீரவாஹினி.

 

அவனுடைய பணி நேரம் முந்தைய நாள் மாலை முதல் அடுத்த நாள் அதிகாலை வரை தானே? அது மட்டுமில்லாமல், தன்னுடைய மனைவியின் குறுந்தகவலைக் கண்டதும் துரிதமாக வீட்டிற்கு வந்திருந்தான் அற்புதன்.

 

அதுவும், இங்கே வந்ததுமே, யக்ஷித்ராவின் தாய் மற்றும் தங்கையின் வரவு, அதற்குப் பிறகு, மனைவிக்கு ஒரு சிலவற்றைச் சொல்லித் தெளிவுபடுத்தியதால் மிகவும் சோர்வாக இருப்பதைப் போல உணர்ந்ததால்,

 

 தன் நெற்றியை மென்மையாக நீவி விட்டுக் கொண்டு,”வேற ஏதாவது இருக்கா?” என்று மூவரிடமும் பொதுவாக வினவியனின் நிலையை அப்போது தான் புரிந்து கொண்டார்கள் அவனது குடும்பத்தினர்.

 

அவனுடைய வேலை நேரம் மாறியதில் இருந்து, தாங்களும் அந்த நேரத்திற்கு எழுந்து வந்து அற்புதன் மறுத்தாலும் கூட அவனுக்குத் தேவையானதை செய்து கொடுத்து விட்டுத் தான், தாங்கள் உறங்கச் செல்வார்கள்.

 

இன்றைக்கும் கூட, அவனது வரவிற்காகத் தான் காத்திருந்தனர். 

 

அந்தச் சமயத்தில் தான், யக்ஷித்ரா உறங்காமல் இருப்பாள் என்பதை முன்னரே அறிந்திருந்த மீனாவும், யாதவியும் அவளுக்குத் தயங்காமல் செல்பேசியில் அழைத்து தங்களது வருகையை அவளுக்கு அறிவித்து இருந்தார்கள்.

 

இப்போது, அவனும், தாங்களும் கட்டாயமாக உறக்கத்தை மேற்கொள்ள வேண்டும் என்பதை அவனது குடும்ப உறுப்பினர்கள் புரிந்து கொண்டனர்.

 

அதனால்,”அச்சோ! நீ இப்போ தான், வேலை முடிஞ்சு வந்திருக்கிற! அதைக் கூடப் புரிஞ்சுக்காமல் நாங்கப் பாட்டுக்கு நிறைய பேசிட்டே போயிட்டோம்! சாரிடா. நீயும், யக்ஷியும் போய்த் தூங்குங்க” என்றார் அகத்தினியன்.

 

“பரவாயில்லை ப்பா. நானும் வேலை முடிஞ்சு வந்தால் தூங்கத் தான் சரியாக இருக்கு. உங்க கூட எல்லாம் பேசவே முடியலைன்னு ஃபீல் பண்ணிட்டு இருந்தேன். அந்தக் கவலை இப்போ சரி ஆகிடுச்சு” என்று அவரிடம் கூறி விட்டுத் தன் மனைவியுடன் உறங்கப் போய் விட்டான் அற்புதன்.

 

மகனையும், மருமகளையும் அனுப்பி வைத்து விட்டதும், இதற்கு மேல் தாங்கள் இருவருக்கும் உறக்கம் வராது என்பதை உணர்ந்து,”நீங்க காஃபி குடிக்கிறீங்களா?” என்று தன் கணவனிடம் வினவினார் கீரவாஹினி.

 

“காஃபி குடிக்கனும்ன்னு தான் தோனுது. பால் இருக்கா ம்மா?” எனக் கேட்டார் அகத்தினியன்.

 

“நைட்டும் வாங்கி வைக்கிறது தானே ங்க? அதெல்லாம் நிறையவே இருக்கு. நம்ம ரெண்டு பேருக்கும் காஃபி போடவா?” என்கவும்,

 

“அப்போ சரிம்மா” என்று மனைவியிடம் கூறி விட,

 

உடனே சமையலறைக்குப் போய் அந்தப் பானத்தை தயாரித்துக் கொண்டு வரவும், அதைத் தங்களுக்குள் உரையாடிய படியே பருகினர் இருவரும்.

 

தங்களுடைய அறைக்குள் நுழைந்த சில மணித்துளிகளிலேயே பெரிய கொட்டாவி ஒன்று விட்டு,”எனக்கு ரொம்ப தூக்கம் வருது யக்ஷூ. நீ ஆஃபீஸூக்குக் கிளம்பினதும் என்னை எழுப்பி விட்றியா? நான் இன்னைக்கு உன்னை டிராப் பண்றேன்” என்று அவளிடம் வினவினான் அற்புதன்.

 

“இருக்கட்டும் ங்க. நீங்கத் தூங்கி ரெஸ்ட் எடுங்க. எனக்குக் கேப் வரும். நான் அதில் ஆஃபீஸூக்குப் போய்க்கிறேன்” என்று அவனிடம் அக்கறையுடன் கூறினாள் யக்ஷித்ரா.

 

“ஓஹ்! அவங்களே வண்டி அனுப்புவாங்கள்ல? ஆனாலும், இன்னைக்கு மட்டுமாவது என் கூட வரலாம்ல ம்மா?” என்று ஏக்கத்துடன் கேட்கவும்,

 

அவனைத் தன்னிடம் இப்படி கெஞ்ச வைப்பது அவளுக்கு என்னவோ போலிருந்தது. 

 

எனவே,”சரிங்க. நான் ஆபீஸில் இன்ஃபார்ம் செய்துட்றேன். நீங்க இப்போ தூங்குங்க ப்ளீஸ்” என்று அவன் கட்டிலில் படுத்ததும், தானும் கணவனுக்கு அருகில் படுத்துக் கொண்டாள் யக்ஷித்ரா.

 

விடியற்காலை வரைக்கும், அந்த இருவருக்கும் நிம்மதியான உறக்கத்தை மேற்கொண்டனர்.

 

அந்தச் சமயத்தில், தங்களுடைய பானமும் தீர்ந்து விடப், பேச்சும் முடிவடைந்து விட்டதாலும், காலை உணவைப் பற்றிய உரையாடலில் இறங்கினார்கள் அற்புதனின் பெற்றோர்.

 

அந்தச் சம்பாஷணை நிறைவடைந்து விட்டதும், என்ன சமைக்க வேண்டும் என்பதை முடிவெடுத்ததும், அதைச் செய்ய சமையலறைக்குப் போய் விட்டார் கீரவாஹினி.

 

அப்போது தன்னால் உறக்கம் கலைந்து எழுந்து அமர்ந்து விட்டாள் யக்ஷித்ரா.

 

ஆனால், அவளது கணவன் இன்னும் துயின்று கொண்டு தான் இருந்தான்.

 

அவனைச் சில நிமிடங்களுக்குக் கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தவளோ, தான் அலுவலகம் கிளம்புவதற்கான நேரம் ஆகி விட்டது புரியவும்,

 

அவனது உறக்கத்தைக் கலைக்காமல் எழுந்து சென்று கிளம்பத் தொடங்கினாள் யக்ஷித்ரா.

 

குளித்து முடித்து உடை மாற்றி விட்டு வெளியே வந்த மருமகளிடம்,”ரெடி ஆகிட்டே வந்துட்டியா ம்மா? சரி. வந்து சாப்பிடு” என அவளை உணவருந்த அழைத்தார் கீரவாஹினி.

 

“அவன் தூங்கிட்டு இருக்கான் தான ம்மா?” என்று தன் மருமகளிடம் வினவினார் அகத்தினியன்.

 

“ஆமாம் மாமா. ஆனால் நான் கிளம்புனதுக்கு அப்பறம் எழுப்பச் சொன்னார். எனக்கு அவரோட தூக்கத்தைக் கெடுக்க விருப்பமில்லை” என்று அவரிடம் தயக்கத்துடன் உரைத்தாள் யக்ஷித்ரா.

 

“நீ இப்படித் தான் சொல்லுவன்னு எனக்கு முன்னாடியே தெரியும்” என்று கூறியது சாட்சாத் அவளுடைய கணவனின் குரல் தான்!

 

அதைக் கேட்டதும், மூவரும் திரும்பிப் பார்த்தார்கள்.

 

அங்கே குளித்துப் புத்துணர்வுடன் தயாராகி வந்திருந்தான் அற்புதன்.

 

அதைக் கண்டவுடன் இவர்களுக்கு ஆச்சரியம் மிகுந்தது.

 

“டேய்! நீ என்னடா இப்படி கிளம்பி வந்து நிற்கிற?” என்றார் அவனது தாய்.

 

“ஆமாம் மா. என்னைக்காவது தான், யக்ஷூவை ஆஃபீஸுக்குக் கொண்டு போய் விட்ற வாய்ப்புக் கிடைக்குது! அதை விட்டுட முடியுமா?” என்று அவருக்குப் பதிலளித்தார் அற்புதன்.

 

“பார்றா!” என்றார் கீரவாஹினி.

 

அவனுடைய இந்தப் பரிமாணத்தால், தன் உள்ளம் குளிர்ந்து போவதை யக்ஷித்ராவால் உணர முடிந்தது.

 

“ம்ஹ்ம். அப்போ நீயும் வந்து உட்கார்ந்து சாப்பிடு. நேரமாச்சு பாரு” என்று அவனையும் உணவுண்ணக் கூப்பிட்டார் அகத்தினியன்.

 

எனவே, டைனிங் டேபிளிற்குச் சென்று அமர்ந்து கொண்டு,”நீ சாப்பிட வரலையா?” என மனைவியையும் அழைத்தான் அற்புதன்.

 

உடனே, தானும் அங்கே போய் நாற்காலியில் உட்கார்ந்து விட்டாள் யக்ஷித்ரா.

 

அவர்கள் இருவரையும் புன்னகையுடன் பார்த்து விட்டு, அவர்களுக்கு உணவைப் பரிமாறினார் கீரவாஹினி.

 

தன் கணவனுடன் இணைந்து காலை உணவை உண்டு முடித்து எழுந்த சென்றவளைப் பின்பற்றித் தானும் போய்க் கையைக் கழுவி விட்டு வந்தான் அற்புதன்.

 

“நாங்கப் போயிட்டு வர்றோம்” என்று அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டார்கள் அவர்களது மகனும், மருமகளும்.

 

இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்து கொண்டிருக்கும் போது,”நீ ஏன் என்னை எழுப்பலை?” என்று மனைவியிடம் வினவினான் அற்புதன்.

 

“நீங்க நல்லா ஆழ்ந்து தூங்கிட்டு இருந்தீங்களா, அது தான், எனக்கு உங்களை எழுப்ப மனசு வரலை” என்று அவனுக்கு விளக்கிக் கூறினாள் யக்ஷித்ரா.

 

“நான் வீட்டில் சொன்னது தான் ம்மா, நானும், நீயும் இப்படி எப்போதாவது தான் நல்லா பேசிட்டு, டைம் ஸ்பெண்ட் பண்ண முடியுது. அப்படியிருக்கும் போது இந்தச் சான்ஸை நான் மிஸ் பண்ண முடியுமா சொல்லு?” 

 

“நானும் தான் இந்த உணர்வை மிஸ் பண்ண விரும்பலை ங்க” என்று தன்னிடம் மெலிதாக உரைத்ததைக் கேட்டதும், அவனுக்குப் புன்னகை முகிழ்த்தது.

 

மனைவியின் அலுவலகத்திற்குச் சென்று வாகனத்தை நிறுத்திய போதிலும் கூட அந்த முறுவல் அவனிடத்தில் இருந்து மறையவே இல்லை.

 

 அவள் வண்டியை விட்டு இறங்கியதும்,”இனிமேல் நமக்குக் கிடைக்கிற எந்த வாய்ப்பையும் விட்டுக் கொடுக்கக் கூடாது! சரியா?” என்றான் அற்புதன்.

 

“ம்ம். சரிங்க” என்றவளுடைய புன்னகையும், பரவசமும் அவனை அசைத்துப் பார்க்கவும்,

 

“ஓகே. நான் கிளம்புறேன் ம்மா” என்று அவளுக்குக் கையசைத்து விட்டுக் வண்டியை இயக்கிக் கொண்டு சென்றான் அவளது கணவன்.

 

அவளும் தன்னுடைய முகிழ்நகை மாறாமல் அலுவலகத்திற்குள் நுழைந்து தனது இடத்திற்குப் போனவுடன்,”ஹாய் யக்ஷி!” என்ற நேஹாவின் குரல் இவளது செவிகளை அடைந்தது.

 

“ஹாய்!” என்று அவளை நோக்கி ஒரு புன்னகையை உதிர்த்தாள் யக்ஷித்ரா.

 

“நீ இன்னைக்கு நம்ம ஆஃபீஸ் கேப் – ல வரலை போலவே?” என்று கேட்டு விட்டு அவளை ஆராய்ச்சியாகப் பார்த்தாள் அவளது தோழி.

 

“ஆமாம் நேஹா. என் ஹஸ்பெண்ட் கூடப் பைக்கில் வந்தேன்” எனவும்,

 

“ஓஹ்! நான் கூட நீ கேப் – ஐ மிஸ் பண்ணிட்டியோன்னு நினைச்சுட்டேன்” என்று கூறிப் புன்னகைத்தவளிடம்,

 

“இல்லை ம்மா. அவர் என்னை டிராப்‌ பண்றேன்னு சொல்லிட்டதால், நான் இன்னைக்குக் கேப் – ல வர மாட்டேன்னு முதல்லயே இன்ஃபார்ம் பண்ணிட்டேன்” என்று அவளிடம் தெரிவித்தாள் யக்ஷித்ரா.

 

“சூப்பர்!” 

 

“நான் இன்னைக்கு இன்னும் ரொம்ப சந்தோஷமான மனநிலையில் இருக்கேன் நேஹா” 

 

“அப்படியா?” எனக் கேட்டதும்,

 

“ஆமாம். என்னோட அம்மாவும், தங்கச்சியும் ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்கு வர்றாங்க” என்று அவளிடம் உற்சாகத்துடன் கூறினாள் யக்ஷித்ரா.

 

“வாவ்! இது இன்னும் செம்ம நியூஸ் ஆச்சே! அந்த நாளை எல்லாரும் நல்லா, சந்தோஷமாக அனுபவிங்க” என்று அவளுக்கு மனதார வாழ்த்து தெரிவித்தாள் நேஹா.

 

அதற்கு அவளிடம் நன்றி கூறி விட்டு வேலையை ஆரம்பித்தாள் யக்ஷித்ரா.

 

இங்கோ, தன் மனைவியை அவளது அலுவலகத்தில் இறக்கி விட்டு விட்டு வந்த அற்புதனுக்கு அசதியில் உடல் வலி எடுத்தது.

 

ஆகவே, தன்னுடைய ஆடைகளைக் களைந்து விட்டுத், தான் உறங்கப் போவதாகச் சொல்லி விட்டு அறைக்குள் போய்ப் படுத்துக் கொண்டான் அற்புதன்.

 

“அவனை ஒரு மணிக்கு மதியச் சாப்பாட்டுக்குத் தான் எழுப்பி விடனும்” என்று தங்களுக்குள் பேசிக் கொண்டனர் அகத்தினியன் மற்றும் கீரவாஹினி.

 

அலுவலகத்தில் செய்து கொண்டிருக்கும் வேலைகளுக்கு இடையே, தன் கணவன் என்னச் செய்கிறான்? என்பதை மாமியாருக்குக் கால் செய்து கேட்டவளுக்கு, 

 

அவன் நித்திரையில் ஆழ்ந்திருப்பதை, அவர் உறுதி செய்து அவளிடம் கூறவும் தான், தனது அலுவலில் கவனத்தைச் செலுத்தினாள் யக்ஷித்ரா.

 

அதன் பின்னர், மதியம் எழுந்து கிளம்பிய அற்புதனுக்கு மதிய உணவைப் பரிமாறி உண்ண வைத்து விட்டு, அவனை மாலையில் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தார் கீரவாஹினி.

 

             – தொடரும் 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்