Loading

அத்தியாயம்  20 ❤

காலையில் தனது சமையலை முடித்து மஹிமாவை எழுப்பலாம் என்று அவளது அறைக்குச் சென்றாள் சுவர்ணலதா.

ஆனால் அவர் வருவதற்கு முன்பாகவே மஹிமா குளித்து முடித்து உடை மாற்றி தயாராகி நின்று கொண்டு இருப்பதைப் பார்த்தார்.

தாயை நோக்கி முறுவல் அளித்து விட்டு தனது கைப்பையை தோளில் மாட்டிக் கொண்டாள்.

அதைப் பார்த்து வியந்த சுவர்ணலதா ,

” ஏய் மஹி ! எப்படி இவ்ளோ சீக்கிரம் எழுந்த  ? நான் வந்து எழுப்பி விட்ருப்பேன்ல. இன்னும் காலேஜ் போக டைம் இருக்கு ” என்று அவளருகில் வர,

மஹிமா  ” இல்லம்மா. நான்  இப்போவே காலேஜ் கிளம்பறேன்”  தனது கைக் கடிகாரத்தை எடுத்து அணிந்து கொண்டாள்.

சுவர்ணலதா ” காஃபி கூட குடிக்கல. சாப்பிட்டு போ ” அவளை உணவுண்ண அழைத்தார்.

மஹிமா ” வேண்டாம்மா.  கேன்டின்ல சாப்பிட்டுக்கறேன்.நான் இப்போ இங்க இருந்து கிளம்புனா போதும்” பதட்டப்பட,

சுவர்ணலதாவிற்கு அப்போது தான் புரிந்தது.ராமநாதன் வீட்டில் இருப்பது தான் மகளின் பதட்டத்திற்கு காரணம்,

பெருமூச்சுடன் ” சாப்பாடு மட்டுமாவது சாப்பிட்டுப்போ.இந்த அம்மாவுக்காக ! ”  அவளிடம் இறைஞ்ச,

அதை மறுக்க வழியில்லாமல் ,

” சரிம்மா.இங்கயே குடுத்து விடறீங்களா  ? ” 

“சரி ” என்று கீழிறங்கி வந்தார்.

அங்கு சோபாவில் நேற்று இரவு அணிந்த

கோட், சூட்டுடன்  இரு கைகளாலும் தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்து இருந்த ராமநாதன் மனைவியைப் பார்த்ததும்,

”  சுவர்ணா ஒரு காஃபி கொண்டு வா ” என்று அவரை விரட்டினார்.

சுவர்ணலதா சமையலறைக்குச் சென்று காபி கலக்கிக் கொண்டே , 

‘இவரு இரண்டு நாள் கழிச்சு தான் வருவேன்னு சொன்னாரு.திடுதிப்புனு நைட்டு வந்து நிக்குறாரு ! ” என்ற யோசனையுடன் கோப்பையை எடுத்துக் கொண்டு கணவரிடம் கொண்டு சென்றார்.

அதை வாங்கி பருகியவர்,

“இன்னைக்கு ஆஃபீஸ் போகனும். சீக்கிரம் என்னோட பர்ஸனல் லேப்டாப் , கிரீன் கலர் ஃபைல் என் ரூம்ல டேபிள் மேல இருக்கும். அதையும்  எடுத்து வை. நான் குளிச்சுட்டு வர்றேன் ” கோப்பையை அவரிடம் கொடுத்து விட்டு நகர்ந்தார்.

அவர் குளிக்கச் சென்றதும் அவரது அறைக்குப் போய் அனைத்தையும் எடுத்து வைத்து விட்டு மஹிமாவிற்கு உணவு கொண்டு சென்றார்.

மஹிமா அவ்வுணவை வேகமாக உண்ண ,

சுவர்ணலதா ” உங்க அப்பா அவசரமா ஆபிஸூக்கு கிளம்பிட்டு இருக்காரு.நீ நிதானமா சாப்பிடு ”  தண்ணீர் தம்ளரை அருகில் வைத்து விட்டு சென்றார்.

ஆனால் மஹிமாவோ உணவை விழுங்கி விட்டு மொபைலை சார்ஜரில் இருந்து எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள்.

சுவர்ணலதாவிடம் ” அம்மா போய்ட்டு வர்றேன் ”   தனது இரு சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு கல்லூரிக்குச் சென்றாள்.

ராமநாதன் குளித்துத் தயாராகி வந்தவுடன் உணவுண்ணாமல் ஆபிஸிற்கு கிளம்பிச் சென்று விட்டார்.

சுவர்ணலதா அவரது வழக்கமான நடவடிக்கை தானே  ! என்று தனது எம்ப்ராய்டரி வேலையைப் பார்க்க ஆரம்பித்தார்.

கல்லூரிக்குள் நுழைந்து ஸ்கூட்டியை பார்க் செய்து விட்டு சாவியை எடுத்து  கைப்பையில் போடும் போது ,

” ஹாய் மஹி  ! ” என்ற குரல் அவளைத் திரும்பிப் பார்க்க வைத்தது.

அங்கே கார்த்திக் புன்னகை முகத்துடன் நின்றிருக்க ,
” என்ன இவன் இவ்ளோ சீக்கிரமே காலேஜ் வந்து இருக்கான் ” என்று சிந்திக்க,

“ஹலோ ! என்ன ஆச்சு ? ஃப்ரீஸ் ஆகிட்ட? “

என்று அவளை மறுபடியும் அழைக்க,

மஹிமா ” ஒன்னும் இல்ல. நீங்களும் சீக்கிரம் வந்துட்டிங்க ? “

கார்த்திக் ” நேத்து லீவ் போட்டேன்ல. என்ன நடந்துச்சுனு தெரில. அதான் சீக்கிரம் வந்து , நோட்ஸ் காபி பண்ணலாம்னு நினைச்சேன். நீ ஏன் சீக்கிரமே வந்துட்ட ? “

மஹிமா ” அதே ரீசன் தான் நானும் நேத்து காலேஜ் வரல “

” அப்படியா ! ஏன்? உடம்பு எதும் சரி இல்லையா  ? ”  அக்கறையாக விசாரித்தான்.

“இல்ல ரிலேஷன் வந்தாங்க “

கார்த்திக் ” ஓகே ! ஓகே. நான் காலைல சாப்பிடல இஃப் யூ டோன்ட் மைண்ட். நாம கேன்டின் போகலாமா  ? “

“நான் வீட்லயே சாப்பிட்டேன் கார்த்திக் “

“சும்மா வந்து எனக்கு கம்பெனி குடுக்கலாமே “

மறுக்க முடியாமல் அவனுடன் கேன்டினிற்குச் சென்றாள்.

கேன்டினில் உணவை வாங்கி கார்த்திக் ஒரு இருக்கையில் அமர அவனுக்கு நேரெதிரில் மஹிமா அமர்ந்தாள்.

மஹிமாவிற்குச் சிறு எரிச்சல் ஏற்பட்டது. ஏனெனில் காலையில் சீக்கிரமே கல்லூரிக்கு வந்த காரணமே எந்த தொல்லையும் இல்லாமல் அமைதியான சூழ்நிலையில் மனம் அமைதியாகும் என்பது தான்.

அதில் மண்ணள்ளிப் போடும் வகையில் கார்த்திக் தன்னை அழைத்தது அவளுக்கு அவன் மேல் கோபத்தை ஏற்படுத்தியது.

அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தாள்.

ஆனால் உணவுண்ணும் போது கார்த்திக்கின் கண்கள் மஹிமாவின் மேல் பதிந்தது.

ஆகாய நீல நிற சல்வாரில்

தோளுக்கு கீழே புரளும் கூந்தல்.

அது முகத்தை மறைக்கும் போது அனிச்சையாய் வெண்டைப் பிஞ்சு போல் இருக்கும் விரல்களைக் கொண்டு ஒதுக்கி விட்டுக் கொண்டு இருந்தாள்.

திருத்தப்பட்ட புருவம்.

புருவங்களுக்கு நடுவில் சிகப்பு நிறப் பொட்டு வீற்றிருக்க.

காந்தம் போல் பார்ப்பவரை இழுக்கும் கண்கள்.

செர்ரி நிற உதடுகள்.

இதையெல்லாம் ரசித்துக் கொண்டே  சாப்பிட்டு முடித்தான்.

இது எதையும் கவனிக்காமல் விழிகளைச் சுழற்றி வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்த மஹிமாவின் அருகில் வந்து அமர்ந்தாள் சிவரஞ்சனி.

” ஹாய் சிவா ”  அவளைப் பார்த்து சிரித்தாள்.

சிவரஞ்சனி மஹிமாவிடம் தலையசைத்து விட்டு அவளை கண்களாலேயே விழுங்கிக் கொண்டு இருந்த கார்த்திக்கைப் புருவம் உயர்த்தி கண்களாலேயே மிரட்டினாள்.

அவளது வருகையால் ஏற்கனவே கடுப்பில் இருந்த கார்த்திக் அதை மறைத்துக் கொண்டு,

” ஏய் சிவா  ! நீயும் வந்துட்டியா  ! சாப்பட்றியா ? ” என்று அவளிடம் கேட்க,

சிவரஞ்சனி ” இல்லப்பா.நான் ப்ரேக்ஃபாஸ்ட் முடிச்சுட்டு தான் வந்தேன். நீ சாப்பிடு “

கார்த்திக் ஒரு வழியாக சாப்பிட்டு முடிக்க ,

“நீங்க ரெண்டு பேரும் எங்கூட சேர்ந்து சாப்பிடலனாலும் பரவாயில்லை. நான் வாங்கி குடுக்கற சாக்லேட்டை வாங்கிக்கோங்க ”  இரண்டு டெய்ரி மில்க் சாக்லேட்டை அவர்களிடம் நீட்டினான்.

வேண்டாம் எனக் கூறலாம் என்றாலும் அவ்வளவாக மரியாதையாக இருக்காது என்று அதைப் பெற்றுக் கொண்டு நன்றியுரைத்தாள் மஹிமா.

” தாங்கஸ்டா ”   அந்த சாக்லேட்டை அப்போதே பிரித்து சாப்பிட ஆரம்பித்தாள் சிவரஞ்சனி.

அவர்கள் மூவரும் வகுப்பறையை நோக்கி செல்ல கார்த்திக் மஹிமாவுடன் சேர்ந்து நடந்து போக சிவரஞ்சனி தனித்து விடப்பட்டாள்.

பாடவேளை ஆரம்பிக்க தங்களது இருக்கையில் அமர்ந்து அதை கவனிக்க ஆரம்பித்தார்கள்.

மஹிமாவின் அருகில் அமர்ந்திருந்த சக தோழி லேகா ,

மஹிமாவை அழைத்து ,

” நீங்க நேத்து காலேஜ் வரலனு நினைக்குறேன். சோ இந்தாங்க நேத்து எடுத்த லைசன்ஸ் – க்கு நோட்ஸ் “

” ரொம்ப தாங்க்ஸ்ங்க ” அதைப் பார்த்து எழுத  ஆரம்பித்தாள் மஹிமா.

சிவரஞ்சனி வேறு ஒரு தோழியிடம் பேசிக் கொண்டு இருந்தாள்.

திடீரென்று அவள் கார்த்திக்கின் புறம் திரும்பி ,

” ஏய் கார்த்திக். உங்கூட கொஞ்சம் பேசனும்.காலேஜ் முடிஞ்சதும் வெய்ட் பண்ணு ” என்று மட்டும் கூறிவிட்டு திரும்பிக் கொண்டாள்.

இதை கண்டு கொள்ளாமல் மஹிமா வேலை முடிந்ததும் நோட்டை லேகாவிடம் கொடுத்தாள்.

மாலை சிவரஞ்சனி சொன்னது போல் கார்த்திக் அவளுக்காக காத்திருக்க

மஹிமா தனது ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு கிளம்ப ஆயத்தமானாள்.

திடீரென்று அவளது செல்பேசி ஒலிக்க

அதை எடுத்துப் பார்த்தவள் புது நம்பராக தெரிய அட்டெண்ட் செய்து காதில் வைத்தாள்.

” ஹலோ யார்  ? “

மறுபுறம் ” ஹலோ மஹிமா தான  ! நீங்க… நா… அது கார்த்திக் ” ஆண் குரல் கேட்க,
அதற்குப் பிறகு  அழைப்புத் துண்டிக்கப்பட்டது.

‘என்ன இவனா கால் பண்னான் ! இவனே கட் பண்றான்  !  கார்த்திக் பேர வேற சொன்னான் ! அய்யோ  ! இருக்கற டென்ஷன்ல இவனுங்க வேற ! அந்த நம்பர் ராங் கால் போல  !  நினைத்துக் கொண்டு வண்டியை இயக்கி வீட்டிற்குச் சென்றாள்.

                – தொடரும்                               

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்