Loading

 

அத்தியாயம் 2

 

வீட்டிற்குள் வந்த மயூரனைக் கண்டதும், “என்ன மச்சான், தலைகீழா தொங்கி காதலுக்காக சாகசம் பண்ணியாமே!” என்றான் அவனுடன் தங்கியிருக்கும் பாஸ்கர்.

 

கேட்டவனை முறைத்தபடி உள்ளே நுழைந்தவன், நீள்சாய்விருக்கையில் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டான்.

 

“டேய் பாஸ்கி, ஏன் டா நீ வேற அவனை டென்ஷன் பண்ற?” என்று கேட்ட மற்றொரு நண்பனான கிஷோர், மயூரனிடம் திரும்பி, “என்னடா ஆச்சு?” என்றான்.

 

“ப்ச், எப்பவும் போல தான்! ராட்சஸி, லவ் டார்ச்சர் பண்ணிட்டு இருக்கா!” என்ற மயூரனோ, திடீரென்று நினைவு வந்தவனாக கண்களை திறந்து, “ஆமா, இது எப்படி உங்களுக்கு தெரியும்?” என்று கேட்க, பாஸ்கரோ, “லைவ் ரிலே, கொஞ்சம் டிலே மச்சான்.” என்று அவன் அலைபேசியில் இருந்த காணொளியைக் காட்டினான்.

 

அவன் தொங்கிய காட்சி படமாக ஓட, அதைக் கையில் வாங்கிப் பார்த்தவன், “யாருடா வீடியோ எடுத்தது?” என்று வினவ, “நம்ம முருக்ஸ் அங்க தான வேலை பார்க்குறான். அவன் தான் எடுத்து அனுப்புனான்.” என்றான் பாஸ்கர்.

 

மயூரனோ அலைபேசியையே உறுத்து விழித்திருக்க, அதைக் கண்ட கிஷோரோ, “இவ்ளோ கஷ்டப்பட்டு ஏன் டா அங்க வேலை செய்யணும்?” என்று கேட்டான்.

 

“ப்ச், எல்லாம் என் நேரம்!” என்றபடி மயூரன் தன்னறைக்கு எழுந்து செல்ல, “க்கும், அழகா அம்சமா ஒரு பொண்ணு வந்து லவ் பண்றேன்னு சொல்றா. அதை ஏத்துக்கிட்டு செட்டிலாகுறதை விட்டுட்டு, வீணா கஷ்டப்பட்டுட்டு இருக்கான்.” என்ற பாஸ்கரின் குரல் அவனைப் பின்தொடர, அதைக் கேட்க விரும்பாமல், கதவை டம்மென்று அடித்து சாத்தினான் மயூரன்.

 

“இந்த அடி எனக்கு விழ வேண்டியது! ஜஸ்ட் மிஸ்ஸு!” என்று பாஸ்கர் கூற, “அவனைப் பத்தி தான் தெரியும்ல. அப்பறம் ஏன் டா வீணா சீண்டுற?” என்றான் கிஷோர்.

 

“க்கும், அவன் என் மாமா பொண்ணு பாரு! அதான் சீண்டுறேன்.” என்று நொடித்த பாஸ்கரோ, “அவனுக்கு ஒரு நல்ல ஃபியூச்சர் கிடைக்கும்போது, அதை ஏத்துக்காம இருக்கானேன்னு ஆதங்கம் தான் கிஷோரு. உன்னை விட அவனை எனக்கு நல்லா தெரியும். இப்படியே விட்டா, அவனோட வாழ்க்கையை பத்தி யோசிக்கவே மாட்டான்.” என்று அவன் பேசுவது கதவை அடைத்தாலும் மயூரனுக்கு கேட்டுக் கொண்டு தான் இருந்தது.

 

நண்பனின் அக்கறை சக்கரையாக இனித்தாலும், மனமோ அதில் சமாதானம் அடையாமல் பின்னோக்கி செல்ல முயல, அதைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயன்றான் மயூரன்.

 

அவன் முயற்சி வெற்றியும் பெறாமல் தோல்வியும் அடையாமல் போனது தான் விந்தை. ஏனெனில், இப்போது அவன் மனம், இத்தனைக்கும் காரணமானவள் காதலை சொல்லிய நிமிடத்திற்கு பயணப்பட்டது.

 

*****

 

“எப்போ நாம மிங்கில் ஆகலாம் மய்யூ…ரன்?” என்று அவள் சாதாரணமாக வினவ, அதைக் கேட்டுக் கொண்டிருந்தவனுக்கு தான் பயத்திலும் பதற்றத்திலும் வியர்க்க துவங்கியது.

 

அவளோ சொல்லிவிட்டு சென்றுவிட, இவன் தான், “ஹையோ வேலைக்கு சேர்ந்ததும், இதென்ன புது பிரச்சனை?” என்று முனகிக் கொண்டிருந்தான்.

 

அதே இடத்தில் நின்றவனை தோளில் தட்டிய கோபிநாத்தின் உதவியாளர் அசோகன், “என்னப்பா, இங்கேயே நிக்கிற? ஆமா, துவா பாப்பா கிளம்பிடுச்சா?” என்று வினவினார்.

 

அவனோ பதிலின்றி தலையை மட்டும் ஆட்டினான்.

 

“ஹ்ம்ம், அது ஒரு விளையாட்டு பொண்ணு பா. ஏதாவது அதிரடியா கலாட்டாவா பேசும், தவிர மனசுல ஒன்னும் வச்சுக்காது.” என்று நடந்தது தெரியாமல் அவளுக்கு பாராட்டு பத்திரம் வாசித்தார் அசோகன்.

 

அதைக் கேட்டவனோ, ‘ஓஹ், இதுவும் அது மாதிரி தான் போல.’ என்று சற்று ஆசுவாசப்பட்டான்.

 

அது விளையாட்டல்ல, வினை என்று அவன் அடுத்த நாளே புரிந்தும் கொண்டான்.

 

*****

 

மறுநாள் அவசர அவசரமாக அவன் கிளம்பிக் கொண்டிருக்க, அலைபேசியில் செய்திகள் வந்த வண்ணம் இருந்தன.

 

‘இந்த நேரத்துல யாரு இவ்ளோ மெசேஜ் பண்ணியிருக்காங்க?’ என்று எண்ணியபடி அதை திறந்து பார்த்தவனுக்கு சிரமம் கொடுக்காமல், “ஹாய் மய்யூ…ரன்!” என்று முதல் செய்தியிலேயே யாரென்று வெளிப்படுத்தி இருந்தாள் துவாரகா.

 

‘ஹையோ!’ என்று இவன் தலையில் கை வைக்கும் வேளையில் மீண்டும் செய்திகள் குவிந்த வண்ணம் இருந்தன.

 

“நீங்க இன்னைக்கு எந்த கலர் டிரெஸ் போடப் போறீங்க?”

 

“ஹே மேன், என்ன ரிப்ளை பண்ண மாட்டிங்குறீங்க?”

 

“என்னை ரொம்ப வெயிட் பண்ண வச்சா, உங்களுக்கு தான் தொல்லை!”

 

“உஃப், சரி நான் இன்னைக்கு ஆலிவ் கிரீன் கலர்ல டிரெஸ் போடப் போறேன். நீங்களும் அதே கலர்ல போட்டுட்டு வாங்க… இல்ல வரணும்! ஓகேவா?”

 

இப்படி பல செய்திகள் வந்திருந்தன.

 

‘இதெல்லாம் பார்த்தா, விளையாட்டுக்கு பண்ற மாதிரி இல்லையே!’ என்று மயூரன் குழப்பத்துடனே கண்ணாடியை பார்க்க, அதில் அவன் பிம்பம் எலுமிச்சை மஞ்சள் நிற சட்டையில் தெரிந்தது.

 

ஒரு பெருமூச்சுடன் அப்படியே அலுவலகத்திற்கு கிளம்பினான்.

 

*****

 

கோபிநாத் மகளையே பார்த்துக் கொண்டிருக்க, அவளோ நல்ல பிள்ளையாக சாப்பாட்டில் மட்டுமே கவனத்தை கொண்டிருந்தாள்.

 

“துவா, நீ நல்லா தான இருக்க?” என்று அவர் வினவ, “ஏன், எனக்கென்ன? ஐ’ம் பெர்ஃபெக்ட்லி ஆல்ரைட்!” என்று கூறினாலும், இப்போதும் கவனம் அந்த சோலா பூரியில் மட்டுமே!

 

“இல்ல, எப்பவும் இவ்ளோ சீக்கிரம் கண்ணைக் கூட திறக்க மாட்டியே! இன்னைக்கு இப்படி டிப்டாப்பா கிளம்பி சாப்பிட வந்துருக்கியா, அதான் எனக்கு சந்தேகமா இருக்கு.” என்று கோபிநாத் கூற, இப்போது தான் தட்டிலிருந்து பார்வையை தந்தையின் முகத்திற்கு உயர்த்தி, அவரை முறைத்தாள்.

 

இருப்பினும், எதுவும் சொல்லவில்லை.

 

கோபிநாத்தின் அதிர்ச்சி மேலும் தொடர்ந்தது. காரணம், மகள் அவருடனே அலுவலகத்திற்கு அல்லவா வருகிறாள்!

 

“துவா ம்மா, இனி எது செய்றதா இருந்தாலும், அப்பா கிட்ட சொல்லிட்டு பண்ணு மா. வயசாகுது வேறல.” என்று அவர் கூற, “ப்பா, நல்ல மூட்ல இருக்கேன். அதை ஸ்பாயில் பண்ணாதீங்க.” என்று சிணுங்கினாள் துவாரகா.

 

அவளின் மனநிலையை உருக்குலைக்கவே அங்கொருவன் அவள் உள்ளே நுழையும்போதே அவள் முன் காட்சியளித்தான்.

 

மின்தூக்கியில் நின்றிருந்த துவாரகாவின் விழிகளோ, அவளுக்கு முன்னிருந்தவனின் சட்டையையே வெறித்தன.

 

அவன் மயூரன் என்று சொல்லித் தெரிய வேண்டுமோ?

 

அவளின் துளைக்கும் பார்வையை அவனும் உணர்ந்து தான் இருந்தான். ஆனால், பேச்சு மட்டும் அவளின் தந்தையுடன் இருந்தது.

 

‘இவருக்கிட்ட பேசிட்டே எப்படியாவது எஸ்கேப்பாகிடனும்.’ என்று மயூரன் நினைக்க, துவாரகா இருக்கும் வரை அது நிகழுமா?

 

மின்தூக்கியிலிருந்து வெளியே வரும் வேளையில், எதிரே குளம்பியை எடுத்துக் கொண்டு பணியாளர் ஒருவர் வர, இது தான் சமயம் என்று, தந்தையுடன் பேசியபடி நடந்து கொண்டிருந்த மயூரனின் மீது அந்த பணியாளரை மோதச் செய்தாள் துவாரகா.

 

விளைவு, அவனின் இளமஞ்சள் சட்டையில் திட்டுத்திட்டாக குளம்பிக் கரை படிந்தது.

 

“துவா ம்மா, என்ன இது?” என்று கோபிநாத் கேட்கும்போதே, “அச்சோ, சாரி சாரி, என் கால் ஸ்லிப்பாகி, அவரை தள்ளிவிடப் போய்… ஹையோ, என்ன இது கரையாகிடுச்சே. ரியலி சாரி மயூரன்!” என்று ஏகப்பட்ட மன்னிப்புகளை அடுக்கினாள்.

 

தெரியாமல் நடந்ததாக மன்னிப்பு கேட்பவளிடம் வேறு என்ன சொல்வது என்று தெரியாமல், “இட்ஸ் ஓகே மேம்.” என்றான் மயூரன்.

 

எனினும், அவனுக்கு தெரிந்தே தான் இருந்தது, இது அவள் தெரிந்தே செய்தது என்பது!

 

அவன் அங்கிருந்து நகரும் சமயம், “மயூரன், நில்லுங்க. இப்படியேவா வேலை செய்யப் போறீங்க?” என்று துவாரகா வினவ, அவனோ தன் சட்டையிலிருந்த கரையை ஒரு பார்வை பார்த்துவிட்டு, “அது… கிளீன் பண்ணிடுவேன் மேம்.” என்றான்.

 

அத்தனை நேரம் தன்னால் தானோ என்ற குற்றவுணர்வில் இருந்த அந்த பணியாளரோ, “சோப்பு வச்சு அழுத்தி தேய்ச்சு துவைச்சா தான் தம்பி கரை போகும்.” என்றார்.

 

மயூரன் எதுவும் கூறும் முன்பே, “இது என்னோட தப்பு தான் மயூரன். நீங்க என்னோட வாங்க, நான் உங்களுக்கு இப்போவே புது ஷர்ட் வாங்கி தரேன். பிளீஸ்.” என்றாள்.

 

அவன் எவ்வளவோ மறுப்பு கூற முயன்ற போதும், அவள் ஏதேதோ பேசி அவனை இழுத்துக் கொண்டு அருகிலிருக்கும் பிரேண்டட் கடைக்கு அழைத்துச் சென்று விட்டாள்.

 

அங்கும் அவளே அவனுக்கு தேடித் தேடி ஆலிவ் பச்சை நிறத்தில் சட்டையை எடுத்துக் கொடுக்க, ‘இதுக்கு நானே வீட்டுலயிருந்து போட்டுட்டு வந்துருப்பேன்!’ என்று சலித்துக் கொண்டான்.

 

அவன் சட்டையை வாங்க கைவைக்கும் நேரம், அதை தராமல் தன்பக்கம் அவள் இழுத்த வேகத்தில் சட்டையோடு அவனும் அவளருகே வந்தான்.

 

அந்த நெருக்கத்தில் திடுக்கிட்டு திணறியவன் சுற்றிலும் பார்க்க, அங்கு அவர்களை கவனிக்கும் வகையில் யாருமே இல்லை.

 

அந்த பதற்றம் எல்லாம் அவனுக்கு தான் போலும். அவளோ வெகு இயல்பாக அவனை பார்த்தபடி நின்றாள்.

 

“நீங்க லெமன் எல்லோ கலர் டிரெஸ் போட்டுட்டு வரேன்னு சொல்லியிருந்தா, நானும் அதே கலர்ல போட்டுட்டு வந்துருப்பேன். காஃபி கொட்டி அந்த சட்டை பாழாக வேண்டிய அவசியம் இருந்துருக்காது. இப்படி நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து இந்த கடைக்கு வந்துருக்கவும் வேண்டாம். ஹ்ம்ம், இனிமேலாவது, நான் சொல்றதை கேளுங்க மய்யூ.” என்று கூறியபடி சட்டையை நீட்ட, தலைவிதியை நொந்தபடி வாங்கிக் கொண்டு போனான்.

 

அவன் சட்டையை போட்டுக் கொண்டு வெளியே வர, அவனைச் சுற்றி வந்து பார்த்தவள், “சூப்பர்ல. அது சரி, என் செலக்ஷன் தப்பா போகுமா என்ன?” என்று தன்னைத்தானே அவள் பாராட்டிக் கொள்ள, அவனோ அந்த சட்டைக்கான தொகையை செலுத்த சென்றான்.

 

அங்கிருந்த காசாளரோ, “மேம் ஏற்கனவே பே பண்ணிட்டாங்க சார்.” என்று கூற, மயூரனோ துவாரகாவை பார்த்தான்.

 

“க்கும், ஏற்கனவே, நான் சொன்னதைக் கேட்காதனால தான் இங்க வந்துருக்கோம். திரும்ப, ஏதாவது சீன் க்ரியேட் பண்ணாதீங்க மய்யூ.” என்று அவன் செவிகளில் முணுமுணுத்தவள், கையோடு அவனை அலுவலகத்திற்கும் அழைத்து வந்தாள்.

 

அலுவலகம் வந்ததும், ‘தப்பித்தோம் பிழைத்தோம்’ என்று பணியிடத்தை அடைந்தான் மயூரன்.

 

“ச்சு, சில்லி பாய்! என்கிட்ட இருந்து அவ்ளோ சீக்கிரம் தப்பிச்சுட முடியுமா?” என்று முணுமுணுத்துக் கொண்டே துவாரகா உள்ளே நுழைய, அவளைத் தேடி வந்த அசோகனோ, “துவா ம்மா, உன்னை சார் கூட்டிட்டு வர சொன்னாரு.” என்று விட்டால் ஓடி விடுவாள் என்று எண்ணினாரோ என்னவோ அவளையும் அழைத்துக் கொண்டு கோபிநாத்தின் அறைக்கு சென்றார்.

 

உள்ளே நுழைந்த அசோகனிடம் அலுவலக சம்பந்தப்பட்ட விஷயத்தை பேசி அனுப்பியதும் தான் மகளை பார்த்தார் கோபிநாத்.

 

எப்போதும் இல்லாத வகையில் அப்பார்வை மகளை குற்றம்சாட்டியது.

 

ஆனால், துவாரகாவோ எப்போதும் போலவே, “ப்பா, எதுக்கு இப்படி குறுகுறுன்னு பார்த்துட்டு இருக்கீங்க? எனக்கு நிறைய வேலை இருக்குது. சீக்கிரம் சொல்லுங்க.” என்று அதிகாரமாகவே வினவினாள்.

 

“அடேயப்பா, எனக்கு தெரியாம, நம்ம கம்பெனில அப்படியென்ன வேலை உனக்கு இருக்கு?” என்று கோபிநாத் வினவ, “ப்பா, என்னன்னு உங்களுக்கே தெரியாதா?’ என்றவளின் குரல் தேய்ந்து ஒலித்தது. வெட்கமாம்!

 

“எனக்கு தெரியுறது உனக்கு தான் தெரிய மாட்டிங்குது துவா.” என்றவரின் குரல் மர்மமாக ஒலிக்க, அத்தனை நேரம் வெட்கத்தில் தலை குனிந்திருந்த துவாவோ நிமிர்ந்து தந்தையை குழப்பமாக பார்த்தாள்.

 

“ப்பா, என்ன சொல்றீங்க? உங்களுக்கு தெரிஞ்ச எது எனக்கு தெரியல?” என்று அவள் வினவ, “நீ என்ன பண்ணிட்டு இருக்கன்னு புரியலையா துவா ம்மா. மயூரனை ஃபோர்ஸ் பண்ற. ஒரு விதத்துல டாமினேட் பண்ற. இப்படியெல்லாம் பண்ணா எப்படி அவனுக்கு உன்மேல லவ் வரும்? உன்னை விட்டு இருந்து எப்படி ஓடலாம்னு தான் தோணும்!” என்று நிதர்சனத்தை உணர்த்த முயன்றார்.

 

அதை செவி மடுத்தால் தானே!

 

“ப்பா, இன்னும் எந்த காலத்துல இருக்கீங்க? சினிமா, கதை எல்லாத்துலயும் இப்படி தான லவ் பண்ண வைக்குறாங்க. என்ன, அங்க ஹீரோ ஹீரோயின் பின்னாடி சுத்தி லவ் டார்ச்சர் பண்ணுவான். இங்க நான் பண்றேன். அவ்ளோ தான் வித்தியாசம்! ஃப்ரீயா விடுங்கப்பா. மயூரன் தான் உங்க மருமகன்.” என்று கூறிவிட்டு அவள் வெளியேறி விட்டாள்.

 

தான் கூற வருவதை கேட்க கூட செய்யாத மகளை எண்ணி வருத்தமாக தான் இருந்தது கோபிநாத்திற்கு. மேலும், அவளின் எதிர்காலம் குறித்த பயமும் உண்டானது.

 

முதல் முறையாக மகளுக்கு அதிக செல்லம் கொடுத்து விட்டோமோ என்ற கவலையில் ஆழ்ந்தார் கோபிநாத்.

 

*****

 

மதியம் போல மயூரனை தன்னறைக்கு அழைத்த கோபிநாத், முதலில் வேலையைப் பற்றி விசாரிக்க, அதில் ஆசுவாசப்பட்ட மயூரனோ இலகுவாக பதிலளித்தான்.

 

ஆம், எங்கு துவாரகா தன்னிடம் பழகுவதை வைத்து, தன்மீது குற்றம் சுமத்தி விடுவாரோ என்று பயந்தவாறு தானே அறைக்குள் நுழைந்தான்.

 

சில நிமிட பேச்சுக்கு பிறகு, “மயூரன், துவா உங்ககிட்ட நடந்துக்கிட்டதுக்கு நான் சாரி கேட்டுக்குறேன்.” என்று கோபிநாத் கூற, மயூரனோ, “நோ பிராப்ளம் சார். அது ஆக்சிடெண்ட் தான சார். தேவையில்லாததுக்கு நீங்களும் மேமும் எதுக்கு சாரி கேட்குறீங்க?” என்றான்.

 

அவன் எண்ணமெல்லாம், காலையில் மின்தூக்கிக்கு வெளியே நடந்த நிகழ்வுக்கு அவர் தான் மன்னிப்பு கேட்கிறார் என்பது தான். துவா தன்னை சுற்றி வருவதை தந்தையிடம் கூறி விட்டாள் என்று அவன் அறிய வாய்ப்பில்லையே.

 

அவன் கண்களை நேராக பார்த்த கோபிநாத்தோ, “அது ஆக்சிடெண்ட் இல்லன்னு எனக்கும் தெரியும் உங்களுக்கும் தெரியும்.” என்று கூற, அதிர்ச்சியை விட ஆச்சரியமாகவே அவரை நோக்கினான் மயூரன்.

 

தொடரும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
4
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்