Loading

“சூப்பர்! அதுக்கப்புறம் என்ன நடந்தது?” என்று மனைவியிடம் உண்மையான ஆர்வத்துடன் வினவினான் அற்புதன்.

 

“அப்பறம் என்ன? அவ சொன்னதை செயலில் செய்ய ஆரம்பிச்சுட்டேன் ங்க. எங்க அப்பாகிட்டே இருந்து நானும், யாதுவும் ஏற்கனவே விலகித் தான் இருந்தோம். இப்போ எதையுமே கண்டுக்காமல் விட்டுட்டோம். அதனால் ஒரு நல்லது நடந்துச்சு” என்று கூறி நிறுத்தினாள் யக்ஷித்ரா.

 

“என்னது?” என்றவனது ஆவலைக் கண்டு புன்னகை செய்தவாறே,

 

“ஏதாவது கோபமாக வீட்டுக்கு வர்றப்போ எல்லாம் எங்க அம்மாவைத் தேவையில்லாமல் திட்டி, அன்னைக்கு மட்டும் அவங்களைத் தள்ளி வச்சிட்டா மாதிரி எங்க ரெண்டு பேரை மட்டும் சமைக்கச் சொல்லுவாரே? அது நின்னுருச்சு” என்கவும்,

 

“பார்றா! அதோட அத்தைக்கு நிம்மதியாக இருந்திருக்குமே?” என்று அவளிடம் விசாரித்தான் அற்புதன்.

 

“க்கும்! எங்களுக்குத் தான் நிம்மதியாக இருந்துச்சு! அவங்களுக்கு அது வேலை தானே?” என்றாள் யக்ஷித்ரா.

 

“ஆமால்ல! அப்பறம் எப்படி சமாளிச்சாங்க?” 

 

“ஏதாவது சிம்பிளாக செஞ்சு வச்சிருவாங்க. அதை எதுவும் சொல்லாமல் சாப்பிட்ருவார்” 

 

“ஓஹ்! நல்லது. அப்போ இருந்து எல்லாமே சுமூகமாக நடக்க ஆரம்பிச்சுருச்சு. அப்படித் தானே?” என்று முகம் மலரக் கேட்டான் அற்புதன்.

 

“எல்லாமே ஓகே தான் ங்க. ஆனால், இந்த டெஸ்ட்டில் இருந்து மட்டும் எங்களால் தப்பிக்கவே முடியலை” என்று கூறித் தன் சோகத்தை வெளிப்படுத்தினாள் யக்ஷித்ரா.

 

“அச்சோ!” என்று மனைவிக்காக வருத்தப்பட்டவனிடம்,

 

“ம்ஹ்ம். எனக்குப் பழகிப் போச்சு ங்க. ஆனால், யாது தான், அதையெல்லாம் தாங்க முடியாமல் அடிக்கடி டெஸ்ட் எழுதாமல் டிமிக்கி கொடுத்துடுவா” என்று அவனிடம் கூறினாள் அவனது மனைவி.

 

“அப்பறம் உங்கப்பா உன் தங்கச்சியை எதுவும் கண்டிக்க மாட்டாரா?” 

 

“அவர் சொல்லி சொல்லி சோர்வாகி ‘போ’ – ன்னு விட்டுருவார்” என்றதும், 

 

தன்னுடைய இதழ்களில் புன்னகை நெளிய விட்டுக் கொண்டே,

“அப்பறம்?” என்றான் அற்புதன்.

 

“பன்னிரெண்டாம் கிளாஸில் ரெக்கார்ட் வேலை நிறைய இருக்கும்ல்ல? அதுவும் பயோமேத்ஸ் குரூப்பில் இன்னும் அதிகமாகவே இருந்துச்சு. கையெல்லாம் கழண்டு போச்சு! அதை அப்பப்போ எழுதி முடிங்கன்னு டீச்சர்ஸ் சொல்லிட்டே இருப்பாங்க” என்று தன் கணவனிடம் சொன்னாள் யக்ஷித்ரா.

 

“ஐயையோ!” என்று அவன் அதைக் கேட்டதும் அலறவும்,

 

“அதை ஒரு பக்கம் எழுதிக்கிட்டு, இடையிடையே எக்ஸாம்ஸ்ஸையும் எழுதிட்டு சுத்திக்கிட்டு இருந்தோம் ங்க” என்றவளிடம்,

 

“வேறெந்த சந்தோஷமான விஷயங்கள் எதுவும் நடக்கலையா ம்மா?” என்று அவளிடம் வினவினான் அற்புதன்.

 

“நடந்துச்சே! ஒவ்வொரு முக்கியமான நாளிலேயும் ஃபங்க்ஷன்ஸ் நடத்துவாங்க. அதில் போட்டியெல்லாம் வைப்பாங்க” என்று குதூகலத்துடன் சொன்னாள் யக்ஷித்ரா.

 

“வாவ்!”

 

“ஆமாங்க. என்னென்ன போட்டின்னு உங்களுக்கும் தெரியும் தானே?” என்கவும்,

 

“ம்ம். தெரியும் யக்ஷூ”

 

“நான் பாட்டுப் போட்டி, பேச்சுப் போட்டியில் எல்லாம் கலந்துக்கவே மாட்டேன். அதில் நிவேதிதா தான், கலந்துக்கிட்டுப் பரிசு வாங்கிடுவா” 

 

“உன்னோட கையெழுத்து ரொம்ப நல்லா இருக்குமே! அதனால், கட்டுரைப் போட்டியில் தானே கலந்துக்குவ?” என்று சரியாகக் கணித்து இருந்தான் அற்புதன்.

 

அதைக் கேட்டதும், அவனது மனைவிக்கு இனம் புரியாத சந்தோஷம் ஏற்பட்டது.

 

ஏனென்றால், தன்னுடைய கையெழுத்து முதற்கொண்டு தெரிந்து வைத்திருக்கிறான் தன் கணவன் என்பது அவளுக்குக் கிடைத்த மிகப் பெரிய மகிழ்ச்சி தான்! 

 

“தாங்க்ஸ் ங்க” என்று தனது மனம் நிறைய அவனிடம் நன்றி தெரிவித்தாள் யக்ஷித்ரா.

 

“எதுக்கு?” என்று குழப்பமாக கேட்டான் அற்புதன்.

 

“என்னோட ஒவ்வொரு அசைவையும் நீங்க கவனிச்சுட்டு இருந்து இருக்கீங்க. அப்பறம்… சாரிங்க” என்றவளை,

 

மேலும் குழப்பமடைந்தவனாக,”இது எதுக்கு ம்மா?” என்றான் அவளுடைய மணாளன்.

 

“நான் உங்களோட எந்த அசைவையும் கவனிக்கவே இல்லையே!” என்று குற்ற உணர்வில் கூனிக் குறுகிப் போனாள் யக்ஷித்ரா.

 

“நீ கவனிக்கலைன்னு யார் சொன்னது?” என்று கேட்டு அவளை ஆச்சரியப்படுத்தினான் அற்புதன்.

 

அதைக் கேட்டு அவனை நிமிர்ந்து ஆச்சரியத்துடன் பார்த்தாள் அவனுடைய மனைவி.

 

“என்ன அப்படி பார்க்கிற?” 

 

“நீங்க சும்மா என்னைச் சமாதானம் பண்றதுக்காக இதைச் சொல்றீங்க” என்றவளைக் கனிவுடன் ஏறிட்டவனோ,

 

“ஹேய். அப்படியெல்லாம் இல்லை ம்மா. நீ என்னோட மனநிலைக்கு பொருத்தமாக நடந்துக்குவ” என்று கூறி அவளை மேலும் வியப்படைய வைத்தான் அற்புதன்.

 

“அப்படியா?” என்று அவனிடம் சிறு பிள்ளையைப் போலக் கேட்டாள் யக்ஷித்ரா.

 

“எஸ்! எனக்கு ஆஃபீஸில் நைட் ஷிஃப்ட்ன்னு சொல்லி, அதனால் நான் அனுபவிச்சக் கேலி, கிண்டல் எல்லாத்தையும் உங்கிட்ட சொன்னதுமே, உனக்கு நடந்ததை எல்லாம் சொல்லி என்னை அதிலிருந்து மனசளவுல வெளியே கொண்டு வந்தியே? அதை வச்சுத் தான் சொல்றேன் ம்மா” என்று அவளிடம் ஆதூரத்துடன் சொல்லவும்,

 

“அது மட்டும் தானே ங்க?” என்று வருத்தம் மேலிட கூறினாள் அவனது மனைவி.

 

“அதுவே எனக்குப் போதும் யக்ஷூ. நீ எனக்காகப் பார்க்கிற சின்னச் சின்ன விஷயமும் என்னைப் பொறுத்த வரைக்கும் பெருசு தான்” என் அவளுக்கு வலியுறுத்தினான் அற்புதன்.

 

அத்துடன் கதையைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்து விட்டுக், கணவனும், மனைவியும் அடுத்த வேலையைப் பார்க்கப் போய் விட்டார்கள்.

 

🌸🌸🌸🌸

 

யக்ஷித்ராவின் பிறந்தகத்தில், தன்னுடைய மகளுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த மீனாவோ,,”நாம வேணும்னா யக்ஷியைப் பார்க்கப் போகலாமா யாது?” என்று அவளிடம் வினவினார்.

 

அதைக் கேட்டுத் திடுக்கிட்டுப் போன இளையவளோ,”என்னம்மா திடீர்னு உங்களுக்கு இப்படி ஒரு யோசனை வருது?” என்றாள்.

 

“அவங்க நம்மளை அங்கே எத்தனை தடவை கூப்பிட்டுக்கிட்டே இருக்காங்க! ஆனால் நாம ஒருமுறை கூட அங்கே போனதே இல்லை தானே?” 

 

“அஃது சரி தான் ம்மா. அப்போ போடலாம்னு சொல்றீங்களா?”

 

“ஆமாம் டி. இதை முதல்ல உங்க அக்காவுக்குக் கால் பண்ணி சொல்லு” என்று அவளுக்கு அறிவுறுத்தினார் மீனா.

 

“இதோ சொல்றேன் ம்மா” என்றவாறு தனது செல்பேசியில் தமக்கைக்கு அழைத்து,”அக்கா!” என்று உற்சாகமாக கத்தினாள் அவளது தங்கை.

 

“ஹேய் யாது! என்னாச்சுடி? ஏன் இப்படி கத்திப் பேசுற?” என்று அவளிடம் வியப்புடன் வினவினாள் யக்ஷித்ரா.

 

“உனக்கு ஒரு சந்தோஷமான விஷயத்தைச் சொல்லப் போறேன் க்கா!” 

 

“என்ன விஷயம்?” என்று அவளிடம் ஆர்வமாக வினவினாள் அவளுடைய தமக்கை.

 

“நானும், அம்மாவும் உங்க எல்லாரையும் பார்க்க அங்கே வரப் போறோம்” என்று விஷயத்தை வெளிப்படுத்தினாள் யாதவி.

 

அதைக் கேட்டதும், யக்ஷித்ராவின் மனதிலிருந்த அனைத்து பாரங்களும் அடியோடு மறைந்து போய் விட்டது எனலாம்!

 

ஏனெனில், அவர்கள் இருவரையும் தன்னுடைய புகுந்த வீட்டிற்கு அவ்வப்போது வந்து செல்லும்படி அவளும், அவளது கணவன் மற்றும் மாமனார், மாமியாரும் பலமுறை சொல்லிப் பார்த்து விட்டார்கள்.

 

ஆனால், யக்ஷித்ராவின் தாயும், தங்கையும் அதைக் கேட்டபாடில்லை. அதனாலேயே அதை அவர்களுடைய விருப்பத்திற்கு விட்டு விட்டனர்.

 

“அக்கா! லைனில் இருக்கிற தானே?” என்று அவளது அமைதியை உணர்ந்து தமக்கையைச் சத்தமாக அழைத்தாள் யாதவி.

 

“ஹாங்! இருக்கேன் டி. நீ இப்போ சொன்னதைக் கேட்டு நான் எவ்வளவு சந்தோஷமாகிட்டேன் தெரியுமா? மத்தவங்க கிட்டே சொன்னா அவங்களும் இதே மாதிரி தான் ரியாக்ட் செய்வாங்க” என்று மிகுதியான ஆனந்தத்துடன் தன் மனதிலிருந்ததை அவளிடம் பகிர்ந்து கொண்டவளோ,

 

உடனே,”இந்த ஐடியா யாருக்குத் தோனுச்சு? அம்மாவுக்கா? உனக்கா?” என்ற தனது சந்தேகத்தைக் கேட்டாள் யக்ஷித்ரா.

 

“அம்மாவுக்குத் தான் தோனுச்சு. அதை எங்கிட்ட சொல்லி உனக்குக் கால் செஞ்சுப்‌ பேச சொன்னாங்க” என்று அவளுக்குப் பதிலளித்தாள் யாதவி.

 

“ஓஹ்ஹோ! அம்மா உன் பக்கத்தில் இருக்காங்களா?”

 

“ஆமாம். அவங்க முன்னாடி இருந்து தான் பேசிட்டு இருக்கேன் க்கா”

 

“அப்போ அவங்ககிட்ட போனைக் கொடு” எனவும்,

 

தன் தாயிடம் அதைச் சொல்லி அவரிடம் கைப்பேசியைத் தந்தாள் யாதவி.

 

மீனா,“ஹலோ யக்ஷி” என்றவுடன்,

 

“ம்மா! எனக்கு இப்போ தான், ரொம்ப ஹேப்பியா இருக்கு! நீங்க ரெண்டு பேரும் எப்போ வர்றீங்க?” என்றாள் அவரது மகள்.

 

“உனக்கும், மாப்பிள்ளைக்கும் எப்போ லீவ் வருதுன்னு சொல்லுங்க. அப்போ வர்றோம்” என்று அவளிடம் வினவினார்.

 

“ஞாயிற்றுக்கிழமையைத் தவிர வேற எந்த நாளும் எங்களுக்கு லீவ் இருக்காது ம்மா” எனத் தாயிடம் சோகமாக உரைத்தாள் யக்ஷித்ரா.

 

“அப்போ அன்னைக்கே வந்துடலாம். நீ முதல்ல அவங்க எல்லாருக்கும் இதைச் சொல்லு” 

 

“ஓகே ம்மா” என்று அவரிடம் உற்சாகத்துடன் கூறி விட்டு அழைப்பை வைத்து விட்டு,

 

முதலில் தன்னுடைய மாமனார் மற்றும் மாமியாரிடம் சென்று, இந்தச் செய்தியைப் பகிர்ந்து கொண்டவுடன்,”உண்மையாகவா? அவங்களே சொன்னாங்களா?” என்று அவ்விருவரும் தங்கள் மருமகளிடம் ஆச்சரியத்துடன் விசாரித்தார்கள்.

 

“ஆமாம் அத்தை, மாமா. இந்த வீட்டுக்கு அவங்க வர்றது உறுதி ஆகிடுச்சு” என்று அவர்களிடம் தெரிவித்தாள் யக்ஷித்ரா.

 

“சூப்பர். அற்புதன்கிட்டே சொல்லிட்டியா ம்மா?” என்றார் அகத்தினியன்.

 

“இன்னும் சொல்லலை மாமா. அவர் வீட்டுக்கு வந்ததுக்கு அப்பறம் தான் இதைப் பத்திப் பேசனும்” எனக் கூறி விட்டு அவள் சென்றதும், 

 

“அங்கே போன நாளில் எல்லாம் நம்மப் பையனை அவங்க எப்படி நல்லா கவனிச்சுக்கிட்டாங்க? அதே போலவே, நாமளும் சம்மந்தியையும், யாதவியையும் நல்லா கவனிக்கனும்” என்று தன் கணவனிடம் கூறினார் கீரவாஹினி.

 

“ஆமாம் மா. அவங்க இங்கே வர்றதே அபூர்வமாக இருக்கே”

 

அற்புதன் வேலைக்குச் சென்ற பிறகு தான், இந்த உரையாடல்கள் நிகழ்ந்திருந்ததால், அவன் இல்லத்திற்கு வந்ததும், அவனிடம் விஷயத்தைச் சொல்லக் காத்திருந்தனர் மூவரும்.

 

அத்தோடு நில்லாமல், தனது செல்பேசியில்,”சீக்கிரம் வீட்டுக்கு வாங்க” என்றதொரு குறிப்பை முன்கூட்டியே அனுப்பி வைத்து விட்டாள் யக்ஷித்ரா.

 

அதைப் பார்த்தவுடன், தன் வரவை எதற்காக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாள்? என்பதை யோசித்துக் கொண்டே வேலையைத் துரிதமாக முடித்தான் அற்புதன்.

 

ஒருவேளை, அவள் தன்னைத் தேடத் தொடங்கி விட்டாளோ? 

 

இருவருடைய மனப் புரிதல்களும், நெருக்கங்களும் அவனை இப்படித் தான் யோசிக்க வைத்தது.

 

ஆனால், அவனது மனைவி கூறப் போகும் விஷயமே வேறு என்று தெரிந்தால் அவனது குதூகலமும், குறுகுறுப்பும் அடங்கிப் போகும் அபாயம் உள்ளது என்பதை மறந்து போனவனோ,

 

பலவித யோசனைகள் மற்றும் எதிர்பார்ப்புகளுடன் தன் வேலை முடிவதற்கு இன்னும் ஒரு மணி நேரம் இருந்தாலும் கூட, அதை விடுப்பாக எடுத்துக் கொண்டு தன் இருசக்கர வாகனத்தில் பயணமாகி வீட்டை அடைந்து அழைப்பு மணியை அழுத்தியவுடன்,

 

தன் கணவனுடைய வருகையை அறிந்து வியப்புடன் கதவைத் திறந்தாள் யக்ஷித்ரா.

 

“ஹாய்!” என்று குறுநகையுடன் அவளை எதிர்கொண்டான் அற்புதன்.

 

             – தொடரும் 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்