மறுபுறம் தூங்கி எழுந்த ஷாத்விக்கோ தன் அன்னையை தேடிக்கொண்டு வெளியே வந்தான்.
வெளியே வந்தவன் நேரே கிச்சனை நோக்கி செல்ல
“மாமா அத்தை இப்போ தான் குளிக்க போனாங்க” என்ற மஹதியின் குரல் தடைசெய்ய
“ஓ அப்படியா…” என்றபடியே அவர்களருகே வந்து அமர்ந்து கொண்டான் ஷாத்விக்.
“குடிக்க ஏதாவது எடுத்துட்டு வரட்டுமா அண்ணா?” என்று வினயாஸ்ரீ கேட்க
“ம்ம் லைட்டா பசிக்கிது தான். அம்மா வரட்டும். அத்தை எங்க?” என்று விசாரிக்க
“அம்மாவும் மாமாவும் அக்காவுக்கு சாப்பாடு எடுத்துட்டு ஹாஸ்பிடல் போயிருக்காங்க.”என்று கூற குளித்து முடித்து உடைமாற்றி வெளியே வந்திருந்தார் இந்திராணி.
அவனை அழைத்து சாப்பிட வைத்தவர் மீண்டும் அவனை ரெஸ்ட் எடுக்க சொல்ல ஷாத்விக்கோ
“அம்மா உன்கிட்ட கொஞ்சம் பேசனும்.” என்று கூற இருவரும் வீட்டின் பின்புறம் சென்றனர்.
“என்ன விஷயம் சொல்லு?” என்று இந்திராணி கேட்க
“உன்னை எப்படி என்னை பெத்தவரு உஷார் பண்ணாரு?” என்று ஷாத்விக் சீரியஸாக கேட்க இந்திராணிக்கு தான் அவன் கேட்டது சுத்தமாக புரியவில்லை.
“என்னடா பண்ணாரு அவரு?” என்று அவனிடமே அவர் மறுகேள்வி கேட்க
“அதை விடு. உன் மருமக எப்படி இருக்கா? டாக்டர் என்ன சொன்னாரு?” என்று கேட்க இப்போது இந்திராணியோ அவனை முறைத்தபடி
“நீ அவளை பார்க்க போனதானே அக்கறை உள்ளவனாக இருந்தா அங்கேயே விசாரிச்சிட்டு வரவேண்டியது தானே?” என்று கேட்க
“மருமகளும் மாமியாரும் என்னை கேள்வி கேட்கிறதயே முழுநேர வேலையா செய்றீங்க போல?” என்று ஷாத்விக் அலுத்துக்கொள்ள
“ஆமா அப்படி தான். அதுல உனக்கென்ன பிரச்சினை?” என்று இந்திராணி கேட்க
“பதில் சொல்லாமல் கேள்வியா கேட்குறீங்கல்ல அது தான் பிரச்சினை. டாக்டர் என்ன சொன்னாரு சொல்லும்மா.” என்று ஷாத்விக் கேட்க பவதாரிணி சொன்னதையே மீண்டும் சொன்னார் இந்திராணி.
“வேற ஏதும் பிரச்சினையில்லையே?” என்றவனின் குரலில் சிறு பதற்றம் பரவியிருந்தது.
“அதெல்லாம் எதுவுமில்லை. நாளைக்கு காலையில தான் ஆப்பரேஷன் எப்போனு டாக்டர் சொல்வார்.” என்று இந்திராணி சொல்ல
“நாளைக்கு நான் உன்னை ஹாஸ்பிடல் அழைச்சிட்டு போறேன். அவ கார் இருக்கு தானே அதுலயே போகலாம்.” என்று ஷாத்விக் கூற
“இவ்வளவு அக்கறை உள்ளவன் ஏன்டா அவ அர்த்த ராத்திரியில போகும் போது அமைதியாக இருந்த?” என்று இந்திராணி கேட்க
“மத்தவங்க தான் புரியாமல் பேசுறாங்கனா நான் இருந்த நெலமையை கண்ணால பார்த்த பிறகும் மனசாட்சியில்லாமல் இப்படியொரு கேள்வியை கேட்குற?” என்று ஷாத்விக் புலம்ப
“நீ ஏதோ சொன்னதால தானே அந்த புள்ள கோவிச்சிக்கிட்டு அர்த்தராத்திரினு கூட பார்க்காமல் கிளம்பி வந்தா. நீ வாய மூடிக்கிட்டு சும்மா இருந்திருந்தா இவ்வளோ பிரச்சினை நடந்திருக்குமா?” என்று இந்திராணி கேட்க
“ஏதோ கோவத்த யாரு கிட்ட காட்டுறதுனு தெரியாமல் நாலு வார்த்தை அதிகமா பேசிட்டேன். அதுக்கு அப்படி என்னை பொளந்துட்டு கிளம்பி வந்திருவாளா?”என்று ஷாத்விக் தன் பக்கமே நியாயம் என்பதைபோல் பேச
“அந்த நாலு வார்த்தை நியாயமாக இருந்திருந்தா என் மருமக அப்படி நடந்திருக்கமாட்டாடா.” என்று உன்னை பற்றி நானறிவேன் என்ற ரீதியில் இந்திராணி கூற
“ஆமா பேசுனது தப்பு தான். அதுக்கு மன்னிப்பும் கேட்டுட்டேன். இதுக்கு மேல என்ன செய்யனும்னு சொல்லுற?” என்று ஷாத்விக் கேட்க
“தப்பை சாதாரணமாக செய்துட்டு சீக்கிரம் மன்னிக்கனும்னு எதிர்பார்க்கிறது சரியாடா? உன் வார்த்தைகள் அவளை காயப்படுத்தியிருக்குடா. அந்த காயத்தை அவ மறக்கனும். நீ தான் மறக்கவைக்கனும். அப்போ தான் நீ எதிர்பார்க்கிற மன்னிப்பு உனக்கு கிடைக்கும்.” என்று இந்திராணி கூற
“அவளுக்கு நெலமையை புரியவைப்பனு பார்த்தா எனக்கு கிளாஸ் எடுத்துட்டு இருக்கியேம்மா. அவளே மனசெறங்கி வந்தாலும் நீ ஏத்திவிடுவ போலயே.” என்று ஷாத்விக் அந்த சந்தர்ப்பத்திலும் தன் அன்னையை கேலி செய்ய
“ஆமா ஏத்தி தான் விடுவேன். வீட்டுல அத்தை மகனு என் மருமக இருக்கும் போது வேறொருத்தியை தான் கட்டுவேன்னு பிடிவாதம் பிடிச்சவனுக்கு இது தான் தண்டனை.” என்று இந்திராணி கூற ஷாத்விக்கிடம் மௌனம் மட்டுமே எதிரொலியாக இருந்தது.
“எனக்கு அப்பவே தெரியும். அந்த சாரதா மகளால ஏதாவது குழப்பம் வரும்னு. நீ ஆசப்பட்டியே உங்க அப்பா சொன்னதால தான் அமைதியாக இருந்தேன்.உங்க கல்யாணம் மட்டும் நடந்திருக்காட்டி நம்ம அத்தனை பேர் மானமும் போயிருக்கும்.” என்று இந்திராணி மௌனிகா வசைபாடத்தொடங்க
“அவளை திட்டாதமா. நான் எதிர்பார்த்தபடி எனக்கும் மௌனிகாவுக்கும் கல்யாணம் நடந்திருந்தா அவளை நாம பொணமா தான் பார்த்திருப்போம்.” என்றவனின் நா இப்போது தழுதழுத்தது.
“என்னடா சொல்லுற?”என்று இந்திராணி புரியாமல் கேட்க தனக்கு தெரிந்த அனைத்தையும் கூறினான் ஷாத்விக்.
இந்திராணிக்கும் இந்த செய்தி அதிர்ச்சியாக தான் இருந்தது. ஷாத்விக் கூறியதை போல் ஏதாவது நடந்திருந்தால் என்று நினைத்தவருக்கு அந்த கற்பனையே நடக்க இருந்த விபரீதத்தை உணர்த்தியது.
“இப்போ அந்த பொண்ணு எங்கடா?” என்று கேட்க
“அவ அந்த பையனோட மறுபடியும் பாரினுக்கே போயிட்டா.” என்று கூற
“இன்னும் நீ அந்த பொண்ணையே நெனச்சிட்டு இருக்கியாடா?” என்று இந்திராணி தன் மகனின் மனநிலையை அறிந்துகொள்ளும் நோக்கத்துடன் கேட்க
“என்னோட முதல் காதல் அவ. அவளுக்கு என்மேல அந்த காதல் இல்லாமல் போயிருந்தாலும் நான் நேசிச்ச மொத பொண்ணு அவ.” என்று கூற இந்திராணிக்கோ இப்போது பக்கென்றிருந்தது.
சமுத்ராவும் ஷாத்விக்கும் கூடிய விரைவில் சமாதானமாகிவிடுவார்களென்று எண்ணியிருந்தவரின் நம்பிக்கையில் இடி விழுந்தது போலிருந்தது ஷாத்விக்கின் வார்த்தைகள்.
“வேணாம்னு போனவளையே நெனச்சிட்டு கிடைச்ச இந்த நல்ல வாழ்க்கையை கெடுத்துக்கப்போறியா?” என்று ஆதங்கத்துடன் கேட்டவரை
“இன்னொருத்தரோட மனைவியை மனசுல நெனச்சிட்டு வாழற அளவு நான் மானங்கெட்டவனில்லை. ஆனா மனசுக்குள்ள ஒரு வலி ” என்று கூற இப்போது தான் இந்திராணியின் மனம் சமாதானமடைந்தது.
“சரி. நடந்ததை பத்தி யோசிக்காமல் இனி நடக்கப்போறதுக்கு என்ன செய்யனுமோ அதை பாரு.” என்று இந்திராணி கூற
“என்ன நடக்கனும்னு எதிர்பார்க்கிற? நானும் சமுத்ரா சேர்ந்து வாழனும்னா?” என்று ஷாத்விக் கேட்க
“அதுக்கு தானேடா உங்களுக்கு கல்யாணம் செஞ்சு வச்சோம்.” என்று இந்திராணி கூற
“நீங்க செஞ்சு வச்சதுக்காக நாங்க வாழனுமா? எங்க இரண்டு பேர் விருப்பத்தையும் கேட்டீங்களா யாராவது?” என்று கேள்வி கேட்க இந்திராணியின் மனமோ
“என்னடா இவன் மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிக்கிறான்?” என்று புலம்ப
“என்னடா சொல்லுற?” என்று இந்திராணி புரியாமல் கேட்க
“இங்க பாரும்மா. இது அவசர கல்யாணம். நாங்க சேர்ந்து வாழ முடியுமா முடியாதானு நாங்க தான் முடிவு செய்யனும். மூனு மாசம் நானும் அவளும் சேர்ந்து வாழ்ந்து பாக்குறோம். இரண்டு பேருக்கும் சரினா நாங்க சேர்ந்து வாழுறோம். இல்லைனா நாங்க பிரிஞ்சிடுவோம். இன்னும் இந்த கல்யாணத்தை சட்ட ரீதியாக உறுதிப்படுத்தல. மூனு மாசத்துக்கு பிறகு நாங்க சேர்ந்து வாழனும்னு முடிவெடுத்தோம்னா நாங்க இந்த கல்யாணத்தை ரெஜிஸ்டர் செஞ்சுக்கிறோம்.” என்று சாதாரணமாக சொல்ல
“ச்சீ… என்னடா பேசுற நீ? கேட்கவே அசிங்கமா இருக்கு. இதெல்லாம் ஊரு உலகத்துக்கு தெரிஞ்சா நம்மளை தப்பா பேச மாட்டாங்க?” என்று இந்திராணி அருவெறுப்புடன் கூற
“இது ஊரு உலகத்துல இருக்க வழமை தான். இதை இங்கிலீஸ்ல லிவ்-இன்னு சொல்லுவாங்க. இங்க பாருமா இதுல எந்த தப்பும் இல்லை. நாங்க சேர்ந்து வாழறதா இல்லையான்னு மூனு மாசம் வாழ்ந்து பார்த்துட்டு சொல்றோம்னு சொல்றேன் அவ்வளவு தான்.” என்று ஷாத்விக் சொல்ல இந்திராணிக்கு தான் இந்த பேச்சே பிடிக்கவில்லை.
சொல்லப்போனால் ஷாத்விக் இந்த முடிவை எடுத்ததே சமுத்ரா தாலியை கழற்றி கொடுத்தபின்பு தான்.
சமுத்ராவை பற்றி முழுதாக தெரியாதபோதிலும் அவளை பற்றி ஓரளவு கணித்திருந்தான் ஷாத்விக்.
பிடிவாதத்தின் முழு உருவமான சமுத்ரா எந்த காரணத்திற்காகவும் தன் முடிவிலிருந்து மாறாமாட்டாளென்று அவனுக்கு நன்றாகவே தெரியும். அதுவும் அவன் அவளின் சுயகௌரவத்தை தாளித்து எடுத்த பின் சமுத்ரா அவனை முகத்திற்கு நேர் சந்தித்தே பெரிய விஷயம். அப்படியிருக்கும் போது அவளை சமாதானப்படுத்தி உடன் சேர்ந்து வாழ்வதென்பது கனவிலும் நடவாததொன்று. இவையெல்லாம் யோசித்தே ஷாத்விக் இப்படியொரு யோசனையை முன்வைத்திருந்தான்.
அவனுக்கு தெரியும் யார் உதவாவிட்டாலும் தன் அன்னையும் அத்தையும் தன் பக்கம் நிற்பார்களென்று.
அந்த நம்பிக்கையிலே இந்த முடிவை எடுத்திருந்தான் ஷாத்விக்.
“இதுக்கு சமுத்ரா ஒத்துப்பாளா?” என்று இந்திராணி கேட்க
“உன் மகனும் மருமகளும் சந்தோஷமா வாழனும்னு நெனச்சா நீயும் அத்தையும் தான் இது பத்தி அவகிட்ட பேசனும்.” என்று சாதாரணமாக கூற இந்திராணியின் மனமோ வேறு விதமாக கணக்கு போட்டது.
ஊரார் அறிய திருமணம் முடித்துவைத்த பின் அது சட்ட ரீதியாக செல்லுபடியானதா இல்லையா என்பதை இவர்களாக தெரியப்படுத்தும் வரை யாருக்கும் தெரியாது. சமுத்ரா பிடிவாதக்காரி என்ற போதிலும் ஷாத்விக் மீதான அவளின் பிரியம் இவர்களை சேர்த்துவைக்குமென்று நம்பினார். அதோடு ஷாத்விக்கும் விளையாட்டு பிள்ளை தானென்ற போதிலும் சில விஷயங்களில் அவனிடமும் பிடிவாதம் உண்டு. இதுவே இவர்களை இணைக்க போதுமென்று எண்ணியவர் அதற்கு மேல் ஏதும் யோசிக்காது சரியென்றார்.
“சரிடா. நீ சொன்னபடியே இது பத்தி உன் அத்தைகிட்டயும், சமுத்ராகிட்டயும் நானே பேசுறேன். அவ முழுசா குணமானதும் நீங்க தனிக்குடித்தனம் போங்க.” என்று சொல்ல ஷாத்விக்கும் சரியென்றான்.
“சரிம்மா. அவ சரியானதும் மத்ததை பார்த்துக்கலாம். வா உள்ள போகலாம்.” என்று கூறி தன் அன்னையை உள்ளே அழைத்து சென்றான் ஷாத்விக்.
இப்படியோ மூன்று நாட்கள் ஹாஸ்பிடல் வீடென்று நாட்கள் ஓடிட வீடு வந்து சேர்ந்தாள் சமுத்ரா.
குறைந்தது இரு வாரங்கள் ஓய்வு தேவையென்று மருத்துவர் கூறியிருக்க வீட்டிலுள்ள அனைவரும் அவளை மாறி மாறி கவனித்துக் கொண்டனர்.
ஷாத்விக் நேரடியாக அவளுக்கு எந்த உதவியும் செய்யாத போதிலும் ஒரு ஆண்மகனா வீட்டு தேவைகளை கவனித்துக் கொண்டான்.
ஷாத்விக்கின் கவனிப்பு நேரடியாக இல்லாதபோதிலும் சமுத்ராவுக்கு ஆறுதலாக இருந்தது. இத்தனை வருடத்தில் இந்த நாட்களில் தான் ஓய்வையும் அக்கறையையும் எண்ணி மகிழ்ந்திருக்கிறாள்.
எப்போதும் அவளுக்கு சிறு வலியென்றாலும் அமராவதி பெரிதாக பதறிவிடுவார். அதனாலேயே அவள் பல நேரங்களில் வீட்டில் நோயென்று படுக்க விரும்புவதில்லை.
அதிகபட்சம் காய்ச்சலென்றால் ஒரு நாள் மட்டுமே ஓய்வெடுத்துக்கொள்வாள். மறுநாளிலிருந்து அவளின் ஓட்டம் ஆரம்பித்துவிடும்.
இந்த இரு வாரங்களாக ஷாத்விக், இந்திராணியென்று அனைவரும் துணைக்கு இருப்பதால் சமுத்ராவிற்குமே தன் அன்னை பற்றிய கவலை இல்லாதிருந்தது.
இருவாரம் கடந்த நிலையில் மருத்துவ பரிசோதனைக்கு பின் வேலைக்கு செல்வதாய் சமுத்ரா கூற அமராவதி தான் இன்னும் சிலநாள் ஓய்வெடுக்கலாமேயென்று கூறினார்.
என்னதான் உதய்யும் இதயாவும் சமாளித்துவிடுவார்களென்ற நம்பிக்கை இருந்த போதிலும் அவளே நேரடியாக தலையிட்டு கவனிக்கவேண்டிய சில விஷயங்களை அவள் தான் செய்தாக வேண்டும். அதற்காகவே அலுவலகம் செல்லவேண்டுமென்று நினைத்தாள் சமுத்ரா.
“அவ போகட்டும் அத்தை. அதான் டாக்டர் இனி எந்த பிரச்சினையுமில்லைனு சொல்லிட்டாரே.” என்று ஷாத்விக்கும் சமுத்ராவிற்கு சாதகமாக பேச அவனை திரும்பி ஒரு பார்வை பார்த்தாளே தவிர வேறெதும் பேசவில்லை.
அதற்கு பின் சமுத்ராவும் அலுவலகம் செல்ல தொடங்க ஷாத்விக்கும் ஊரிற்கு கிளம்புவதாக சொல்லி கிளம்பிட இந்திராணி மட்டும் சில வேலையை செய்வதற்காக அங்கேயே தங்கிக் கொண்டார்.