Loading

        அலைப்பேசி ஒலியில் அறைத் தூக்கத்தில் அதனை எடுத்து காதில் வைத்த கதிரவன் அதிரனின் அழுகுரல் கேட்டு நன்றாக விழித்துக் கொண்டான்.

 

     “வெல்லக்கட்டி என்ன டா ஆச்சு? ஏன் அழற? அழகி எங்க?”

 

     கதிரின் கேள்விகள் எதற்கும் பதில் கூறாது அதி அழுதுக் கொண்டே இருக்க, கதிருக்கு பதற்றம் கூடியது.

 

    “வெல்லக்கட்டி கதிர் சொன்னா கேப்பான்ல. கண்ணை துடை.” என்று பதற்றத்திலும் நிதானமாக கதிர் கூற, அதி அவன் கூறியதை தலையாட்டி ஆமோதித்து அப்படியே செய்தான்.

 

     “கண்ணை துடைச்சியா?”

 

     “ம்ம்”

 

     “ம்ம் குட் பாய். இப்ப சொல்லு என்னாச்சு?”

 

    “அழகி…. அழகி….”

 

    “ம்ம் அழகி…”

 

     “அழகி எந்திரிக்கவே இல்லை. நான் எழுப்பிக்கிட்டே இருக்கேன் எந்திரிக்கவே இல்லை. எனக்கு பயமாயிருக்கு ஹீரோ. நீ வரியா?”

 

    “என்ன? சரி நீ பயப்படாம அழாம இரு. இதோ வந்துட்றேன். பயப்படாம இரு சரியா? நான் அங்க வந்துட்றேன்.” என்று பதறி எழுந்த கதிர் அவசர அவசரமாக மகிழுந்தின் சாவியை எடுத்துக் கொண்டு மேலே இருந்து கீழே ஓடி வந்தான். 

 

       எதிரே வந்த மிருதுளா “டேய் என்னாச்சு? காலைலயே இந்த ஓட்டம் ஓட்ற? மராத்தான்ல எதுவும் கலந்துக்க போறியா என்ன?” என்று நேரமறியாது வம்பிழுக்க, அவளை கிஞ்சுத்தும் பொருட்படுத்தாது வெளியே வந்து மகிழுந்தை கிளப்பிக் கொண்டு அழகியின் வீட்டிற்கு விரைந்தான்.

 

       கதிர் மகிழுந்தை விட்டு இறங்கியதும் மகிழுந்தின் ஒலியில் வெளியே வந்த அதிரன் ஓடி வந்து அவன் காலை கட்டிக் கொண்டான்.

 

      அதிரன் தேம்பியவாறே “ஹீரோ அழகி இன்னும் எந்திரிக்கவே இல்லை. உடம்பெல்லாம் சுடுது.” என்று கூற,

      

     அவனை தூக்கிய கதிர் அவனின் கண்ணீர் துடைத்து, “ஒன்னும் இல்ல டா. அதான் நான் வந்துட்டேன்ல அழாத. நாம போய் அழகிய பார்க்கலாம்.” என்று அவனுக்கு சமாதானம் உரைத்தாலும் அவனுள்ளம் அழகிக்கு என்னானதோ என்று பதறிக் கொண்டிருந்தது.

 

     வேகமாக உள்ளே வந்து அழகியின் அறைக்குள் நுழைந்த கதிருக்கு களைத்த முகமாய் துவண்டு கட்டிலில் கிடந்த அழகியை கண்டதும் உயிரே போனது போல் ஆயிற்று. 

 

    கை கால் நடுங்க மெதுவாக அவளை நெருங்கியவன் அவளது கைத் தொட, அனலாய் தகித்தது. 

 

    “அழகி” என்று அவன் அழைக்கும்போதே அவனது குரல் உடைந்து கண்களில் கண்ணீர் கோர்த்துக் கொள்ள, அதிரனை ஒருமுறை பார்த்தவன் தன்னை நிதானித்துக் கொண்டான்.

 

    “அதி இறங்கு அம்மாவுக்கு ரொம்ப காய்ச்சல் அடிக்குது அதான் எந்திரிக்க மாட்டேங்குறா. ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போலாம்.” என்றவாறு அவனை கீழே இறக்கி விட, அதிரனும் அமைதியாக நின்று கொண்டான்.

 

     ஒரு நிமிடம் கதிர் அழகியின் முகத்தையே பார்த்திருந்தான். அவன் மனம் அவள் இருக்கும் நிலையை காண சகியாமல் துடித்துக் கொண்டிருந்தது. இரு கைகளாலும் அவளது கன்னத்தை தாங்கி பிடித்தவனை அவளின் உடல் சூடு சுட, அவன் விழிகளிலிருந்து இருதுளி நீர் அவளது முகத்தில் பட்டது. மென்மையாக அவளது பிறைநுதலில் முத்தமிட்டவன் இரு கைகளிலும் அவளை அள்ளிக் கொண்டான். 

 

     அதுவரை அமைதியாக நின்று பார்த்துக் கொண்டிருந்த அதிரன் ஓடிச்சென்று கதவை திறுந்து விட்டு வெளியே வந்து மகிழுந்தின் கதவையும் திறந்து விட்டான். கதிர் அழகியை மகிழுந்தில் கிடத்தியதும் அதிரன் உள்ளே ஏறி அழகியின் தலையை தூக்கி தன் மடியில் வைத்துக் கொள்ள, அதனை கண்ட கதிர், கலங்கிய கண்களை துடைத்துக் கொண்டு மகிழுந்தை கிளப்பி மருத்துவமனைக்கு விரைந்தான்.

 

     மருத்துவமனையை அடைந்ததும் அழகியை கையில் ஏந்திக் கொண்டே மருத்தவரின் அறைக்கே கதிர் சென்று மருத்தவரும் பதறி கொண்டு அழகியை சோதனை செய்தார்.

 

    சோதனை செய்தவர் கலைந்த தலையோடும் கசங்கிய உடையோடும் கலங்கிய கண்களோடும் ஒரு கையில் அதிரனை பிடித்து கொண்டு நின்ற கதிரை கண்டு மென்னகைப் புரிந்தார்.

 

   “மிஸ்டர்…” என்று அவர் இழுக்க, கதிர் தன் பெயரை உரைக்க, “மிஸ்டர் கதிரவன்! இவங்களுக்கு ஒன்னும் இல்லை. ஃபீவர் கொஞ்சம் ஹெவியா இருக்கு அவ்வளோ தான். வீக்கா இருக்குறதுனால அவங்களால இந்த காய்ச்சல தாங்க முடியல அவ்வளோ தான். நான் ஊசி போட்டு ட்ரிப்ஸ் போட சொல்றேன். ஈவ்னிங்குள்ள அவங்க நார்மலாகிடுவாங்க. டேப்லட்ஸ் எழுதி தரேன் அதை மட்டும் ஒரு மூனு நாளைக்கு குடுங்க போதும்.” என்று அவர் கூறவும் தான் கதிர் முகத்தில் சற்றே நிம்மதி பரவியது.

 

    “வைஃப் மேல அவ்வளோ லவ்வா? ரொம்ப பதறிட்டீங்க. முதல்ல நீங்க ரிலாக்ஸாகுங்க. பாருங்க உங்கள பார்த்து உங்க பையனும் பயந்து நிக்கிறான்.” என்று கதிரின் தோளை தட்டி கொடுத்த மருத்துவர் செவிலியை அழைத்து அழகிக்கு ட்ரிப்ஸ் போட சொல்லிவிட்டு செல்ல, கதிர் அதிரனை தூக்கி கொண்டான்.

 

    “அதி பயந்துட்டியா டா?”

 

    “பயமா இருந்துச்சு ஆனா என் ஹீரோவ பார்த்ததுக்கு அப்புறம் போயிடுச்சு.” என்று அதி புன்னகைக்க, கதிர் அவன் கன்னத்தில் முத்தமிட்டு அணைத்துக் கொண்டான். அவன் கண்கள் கலங்கியது.

 

   அழகியை வேறோரு அறைக்கு மாற்றியிருக்க, கதிர் அடிக்கடி வெளியூர் செல்வதனால் தன் மகிழுந்தில் எப்பொழுதும் வைத்திருக்கும் பேஸ்டை கொண்டு பல் துலக்கி விட்டு அதிரனை அழைத்துக் கொண்டு கேண்டினுக்கு சென்றான். இருவரும் காபி அருந்திவிட்டு அறைக்கு திரும்பவும் நிரஞ்சன் அங்கு வரவும் சரியாக இருந்தது.

 

    “அழகிக்கு என்னாச்சு டா? நீ ஃபோன் பண்ணவும் எனக்கு கையும் ஓடல காலும் ஓடல.” என்று நிரஞ்சன் படபடவென்று கேட்க, கதிர் எதுவும் கூறாது அவனை அணைத்துக் கொண்டான்.

 

    “என்னாச்சு டா?” என்று கேட்டாலும் நிரஞ்சன் அவனது முதுகை தடவி தேற்றினான். சில நொடிகளில் கலங்கிய வண்ணம் அவனிடமிருந்து விலகிய கதிர்,

 

   “ஒன்னும் இல்ல டா. கொஞ்சம் ஹெவி ஃபீவர். நானும் எழுப்ப எழுப்ப எழுந்திரிக்காதவள பார்த்து பயந்துட்டேன். டாக்டர் இது சாதாரண காய்ச்சல்னு சொல்லவும் தான் கொஞ்சம் நிம்மதியாச்சு. ரொம்ப வீக்கா இருக்கா டா. அதான் அவளால இந்த காய்ச்சல தாங்க முடியலனு சொன்னாங்க.” என்றான்.

 

   “இட்ஸ் ஓகே மச்சான். அதான் ஒன்னும் இல்லனு சொல்லிட்டாங்கள்ல.” என்று நிரஞ்சன் அவனது கரம் பிடித்து சமாதானம் கூறினான்.

 

     “அதி குட்டி இங்க வாங்க.” என்று நிரஞ்சன் அதிரனை தூக்கி கொள்ள, நிரஞ்சனும் கதிரும் அழகி இருந்த அறைக்குள் சென்றனர்.

 

    ட்ரிப்ஸ் ஏறி கொண்டிருக்க, அழகி இன்னும் கண் விழிக்காது இருந்தாள். கதிர் அவளருகில் அமர்ந்து அவளின் கரம் பிடித்துக் கொள்ள, நிரஞ்சன் அதிரனோடு அங்கிருந்த இருக்கையில் அமர்ந்துக் கொண்டான். கதிரின் விழிகள் கலங்கிக் கொண்டே இருந்தது.

 

    நிரஞ்சன் தகவல் கூறியிருந்ததால் சக்கரவர்த்தி, ராம்குமார், மிருதுளா, கவி பாப்பா என்று அனைவரும் மருத்துவமனைக்கு வந்தனர். 

 

     “ஏன்டா இதுக்கு தான் காலைல அந்த ஓட்டம் ஓடுனியா? ஒரு வார்த்தை சொல்லிட்டு வந்தா என்னவாம்?” என்று வந்ததும் வராததுமாக மிருதுளா கதிரிடம் ஏறினாள்.

 

    கதிர் அவளை பொருட்படுத்தாது அவளின் கரம் பற்றி அவளை பார்த்தவாறே அமர்ந்திருந்தான். நிரஞ்சன் தான் மிருதுளாவிற்கு சமாதானம் கூறி மருத்துவர் உரைத்ததை உரைத்தான்.

 

    ராம்குமார் அமைதியாக கதிரையே பார்த்திருந்தான். கதிரின் கலக்கமும் அழகியின் கரத்தை விடாது பற்றியிருந்த விதமும் அவன் அவள் மேல் வைத்துள்ள அன்பையும் நேசத்தையும் புரிய வைக்க, ராம்குமாருக்கு மனம் நிம்மதியானது போன்றதொரு உணர்வு. அழகி பற்றிய கவலை காணாமல் போன்றதொரு பிரம்மை. 

 

   “மிருதுளா! ஹாஸ்பிட்டல்ல இவ்வளோ பேர் இருக்க வேண்டாம். கிளம்புங்க. நிரஞ்சன் நீயும் கிளம்பு. மிருதுளா அதிரனையும் கூட்டிட்டு வா.” என்று ராம்குமார் அனைவரையும் கிளப்ப,

 

    “ஏங்க என்னங்க அதுக்குள்ள கிளம்பு கிளம்புங்குறீங்க. அழகிய யார் பார்த்துக்குவா. நீங்க எல்லாரும் வேணா கிளம்புங்க நான் இங்கயே இருக்கேன்.” என்றாள் மிருதுளா.

 

   “அழகிய கதிர் பார்த்துக்குவான். அதி சின்ன புள்ள அவன் ஹாஸ்பிட்டல்ல இருக்க வேணாம் அவனை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போலாம் கிளம்புங்க.” என்ற ராம்குமாரை மிருதுளா ஆச்சர்யமாக பார்த்தாள்.

 

    எப்பொழுதும் அழகியை அதிகம் நெருங்காதே என்று கதிரை எச்சரிக்கும் தன் கணவனா இது என்ற ஆச்சர்யம் அவளுக்கு! அவளின் பார்வையின் அர்த்தம் புரிந்த ராம்குமார் மெலிதாக புன்னகைத்து “என் தங்கச்சி வாழ்க்கை இனி நல்லாருக்கும்.” என்று அர்த்தமாய் கதிரை பார்க்க, மிருதுளா மெலிதாக முறுவலித்து தலையாட்டினாள். 

 

    பின் கதிரை தவிற மற்ற அனைவரும் கிளம்ப, அதிரன் அழகியை ஏக்கமாக பார்த்துக் கொண்டே வர மறுக்க, அதுவரை அழகியையே பார்த்துக் கொண்டிருந்த கதிர்,

 

   “அதி நீ கவி பாப்பாவோட வீட்டுக்கு போய் விளையாடு. அம்மா இன்னும் கொஞ்ச நேரத்துல முழிச்சுடுவாங்க. அம்மா எந்திரிச்சவொடனே நானும் அம்மாவும் வீட்டுக்கு வந்துடுவோம் ஓகே வா.” என்று கூற, அதி மனமே இல்லாமல் சரி என்று தலையசைக்க, அவனது நெற்றியில் முத்தமிட்ட கதிர்,

 

   “அக்கா நீ சாப்பாடுலாம் எதுவும் குடுத்து விட்றாத. நான் இங்கயே பார்த்துக்குறேன். நீ அதிரன பத்திரமா பார்த்துக்கோ.” என்றிட, மிருதுளா சரியென்று கூற விட்டு அனைவரையும் அழைத்துக் கொண்டு வீட்டிற்கு புறப்பட்டாள்.

 

    அவர்கள் அனைவரும் சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் அழகி கண் விழிக்க, கதிர் கண்ணீரோடு அவளை கண்டான்.

 

    தான் இருக்கும் இடத்தையும் கதிரின் கலங்கிய முகத்தையும் கண்ட அழகி மெல்ல நிமிர்ந்து அமர முயல, அவளுக்கு உதவி செய்த கதிர் அவளையே பார்த்திருக்க, அவளோ தலைக் கவிழ, அவளது தாடை பற்றி முகம் நிமிர்த்திய கதிர்,

 

    “ரொம்ப பயமுறுத்திட்ட டி.” என்று கூற, அழகியின் கண்களிலிருந்து கண்ணீர் கன்னங்களில் இறங்கியது.

 

    “சாரி.” என்றாள் மெல்லிய குரலில்!

 

    அவள் எதிர்பாராது அவளை இறுக்கி அணைத்த கதிர், “ரொம்ப பயந்துட்டேன் டி! அதி அழுதுக்கிட்டே என்னை கூப்பிட்டான் தெரியுமா! பாவம் புள்ள பயந்துட்டான். நான் வந்ததுக்கு அப்புறம் தான் கொஞ்சம் தைரியமானான். இன்னொருவாட்டி எங்களை இப்படி பயமுறுத்தாத டி!” என்று கண்ணீர் சிந்தினான். 

 

    எதிர்பாரா அணைப்பினில் திடுக்கிட்ட அழகி, அவன் பேசியதை கேட்டு தானும் அழுதாள். 

 

    சில நொடிகளில் அவளை விட்டு விலகிய கதிர், “நீ எழுந்ததும் டாக்டர் ஏதாவது குடிக்க குடுத்து மாத்திரை தர சொன்னாங்க. இரு காபி வாங்கிட்டு வரேன்.” என்றவன் அவளின் பதிலையும் எதிர்பாராது அவன் காபி வாங்க சென்று விட, அழகி அவன் சென்ற வழியையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் விழிகளிலிருந்து விழிநீர் வழிந்துக் கொண்டிருந்தது.

 

     கதிர் திரும்பி வருவதை பார்த்த அழகி விழிநீரை துடைத்துக் கொண்டு அமர, அவளுக்கு காபியை அருந்தக் கொடுத்த கதிர், அவள் போட வேண்டிய மாத்திரைகளை எடுத்து கொடுத்தான்.

 

    மாத்திரைகளை விழுங்கி விட்டு சற்று நேரம் கண்மூடி படுத்திருந்தாள். ட்ரிப்ஸ் இறங்கி முடிக்கவும் மருத்தவர் அவளை வீட்டிற்கு அழைத்து செல்லலாம் என்று கூற, அழகியும் கதிரும் வீட்டிற்கு புறப்பட தயாராகினர். 

 

    காய்ச்சலில் அவள் கால் நடுங்கியதால் கைத்தாங்கலாக அவளை அழைத்து வந்து மகிழுந்தில் சாய்ந்து அமர வைத்த கதிரவன் மகிழுந்தை கிளப்பி அவளை ஒரு பார்வையும் சாலையை ஒரு பார்வையுமாக பார்த்துக் கொண்டே வீடு வந்து சேர்ந்தான்.

 

    மதியம் போல் வீடு வந்து சேர்ந்த இருவரையும் அவர்களை எதிர்பார்த்து காத்திருந்த மிருதுளாவும் ராம்குமாரும் உள்ளே வர அழைத்து வந்தனர். 

 

    அழகியை கண்டதும் கவியோடு விளையாடிக் கொண்டிருந்த அதிரன் ஓடி வந்து “அம்மா!” என்று அவள் கால்களை கட்டிக் கொள்ள, அழகி அவனது தலை வருடி, “ஒன்னுமில்லை தங்கம்! அம்மா நல்லா இருக்கேன்.” என்றாள்.

 

    அவளை நிமிர்ந்து பார்த்து புன்னகைத்த அதிரன் “ஓகே அம்மா! நீ போய் ரெஸ்ட் எடு!” என்றிட, மிருதுளா கீழே இருந்த ஓர் அறையில் அழகியை தங்க வைக்கலாம் என்று கூற, ராம்குமார் அவள் மேலே உள்ள அறையிலேயே இருக்கட்டும் என்று விட்டான். சக்கரவர்த்திரும் அதனையே கூறினார்.

 

    “அதுக்கில்ல மாமா! அவளே வீக்கா இருக்கா எப்படி படியேறி மேல போவா?” என்று மிருதுளா கேட்க, அதற்கு விடையளிப்பது போல கதிர் அழகியை கைகளில் ஏந்திக் கொள்ள, அழகி அதிர்வாய் கதிரை நோக்க, ராம்குமாரும் சக்கரவர்த்தியும் சிறு புன்னகையோடு தங்கள் வேலையை பார்க்க செல்ல, மிருதுளாவும் புன்னகைத்து “நடக்கட்டும்! நடக்கட்டும்! அவள ரூம்ல விட்டுட்டு நீயும் ப்ரஷ்ஷாகுடா நான் ரெண்டு பேருக்கும் சாப்பாடு எடுத்துட்டு வரேன்.” என்றபடி சென்றாள்.

 

    கதிர் மெல்லிய முறுவலோடு, “போலாமா அழகி?!” என்று கேட்க, அதிர்ச்சி நீங்காது அழகி தலையசைக்க, கதிர் அவளை ஏந்தியவாறு மாடிப்படிகளில் ஏறினான். அழகியோ அறை சென்று சேரும் வரை அவன் முகத்தை விழியகலாது பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

    அவளை கட்டிலில் படுக்க வைத்த கதிர், “மாமாவ சைட் அடிச்சது போதும் டி! கண்ணுக்கு கொஞ்சம் ரெஸ்ட் குடு. அதுக்குள்ள நான் குளிச்சுட்டு வந்துட்றேன். ரெண்டு பேரும் சேர்ந்து சாப்பிடலாம்.” என்று கதிர் கண்சிமிட்ட, அப்பொழுது தான் தன்னிலை உணர்ந்த அழகியின் முகம் குப்பென்று சிவந்து போக, அவள் விழி திருப்பிக் கொண்டாள். அவனோ அதோடு அவளை விடாது அவளது கன்னத்தில் முத்தமிட்டு செல்ல, திடுக்கிட்டு திருதிருவென விழித்த அழகி சில நொடிகளில் வெட்கம் கொண்டு புன்னகைத்து காய்ச்சல் தந்த அயர்ச்சியில் விழி மூடி கொண்டாள். மூடினாலும் விழிகளுக்குள் அவனே வந்து நிற்க, அவளது அதரங்கள் அனிச்சையாக மலர்ந்தன.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்