Loading

        நீர் சொட்ட சொட்ட வீட்டிற்குள் நுழைந்த அழகி கூடத்திலிருந்த இருக்கையில் பொத்தென்று அமர்ந்தாள். கதிர் உதிர்த்த சொற்கள் ஒவ்வொன்றும் அவளுக்கு பேய் அடித்தாற்போன்று இருந்தது. அவன் தந்த அதிர்விலிருந்து அவளால் மீள முடியவில்லை. மீளவும் அவள் முயலவில்லை. அவளது மூளை வேலை நிறுத்தம் செய்திருந்தது. அவனின் சொற்கள் மட்டுமே விடாது அவளது செவியில் ஒலித்துக் கொண்டிருந்தது. எப்படி அவனால் தன் மேல் இவ்வளவு அன்பு செலுத்த முடிகிறது என்கிற ஆச்சர்யம் ஒருபுறம் தலைத்தூக்கினால் மறுபுறம் அந்த அன்பிற்கு தான் தகுதியானவளா என்கிற அச்சம் தலைவிரித்தாட அவள் சிலையாய் சமைந்து விட்டாள்.

 

      “அழகி பசிக்குது சாப்பிட எதாவது குடு.” என்று அதி அவளிடம் வந்து நிற்பது கூட அவளது கவனத்தில் பதியவில்லை. அதிரன் அழகி! அழகி! என சத்தமாக ஏலம் போட்டும் அவள் செவியில் ஏறவில்லை. அவளை அவன் தொட்டு உலுக்கிய பின்தான் அதிரன் அவளது பார்வைக்கு புலப்பட்டான். 

 

     அதிரனை கண்டதும் அதுவரை சிலையாய் சமைந்திருந்தவளின் கண்ணீர் அணை உடைப்பெடுக்க, பசியில் நிற்கும் பிஞ்சை கட்டிக்கொண்டு கதறிவிட்டாள். அதிரன் அவளின் கதறலில் பயந்து விட்டான். அவனுக்கும் அழுகை முட்டிக் கொண்டு வர, தழுதழுத்தக் குரலில்,

 

    “அழகி! அழுகாத எனக்கும் அழுக வருது.” என்று அவன் கூற, மேலும் ஊற்றெடுத்த அழுகையை அடிக்கி விழுங்கியவள்,

 

    “ஒன்னுமில்ல டா தங்கம்! நான் இருக்கேன்ல. நான் அழல பாரு.” என்று கண்களை துடைத்துக் கொண்டு புன்னகைக்க முயன்றுக் கொண்டே அவனது கண்ணீரையும் துடைத்து நெற்றியில் முத்தமிட்டாள்.

 

    “பயந்துட்டியா டா தங்கம்! பயப்படாத நான் ஏதோ ஞாபகத்துல… சரி விடு இனிமே அதி குட்டிய இப்படி பயமுறுத்த மாட்டேன். பசிக்குதுனு சொன்னல்ல வா தீனி தரேன். அதை சாப்பிட்டு இரு. அதுக்குள்ள நான் அதிக்கு குழிபணியாரம் செய்து தரேன் சரியா!” 

 

    “ஹை குழிபணியாரம்! ஜாலி! ஜாலி! யூ ஆர் தி பெஸ்ட் அழகி!” என்று அழகாய் சிரித்த அதிரன் அவளது கன்னத்தில் முத்தமிட, அவள் உதட்டைக் கடித்து அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டு அவன் சாப்பிட கடலை மிட்டாயை எடுத்துக் கொடுத்து விட்டு பணியாரம் செய்யத் துவங்கினாள்.

 

     அதிரனுக்கு இனிப்பு பணியாரத்தை விட காரப் பணியாரமே பிடிக்கும் என்பதால் அதுவே செய்து அவனுக்கு ஊட்டி விட்டவள் தான் உண்ணாது அவனை படிக்கக் கூறி விட்டு அறைக்குள் சென்று கதவடைத்துக் கொண்டாள்.

 

       அதிரனுக்காக கட்டுப்படுத்தி வைத்திருந்த கண்ணீர் அனைத்தும் கட்டுடைத்து கரைமீற தரையில் தொப்பென்று விழுந்து கரைந்துத் தீர்த்தாள். 

 

    அன்று மாலை அவளின் கடந்த காலத்தை நினைவு கூர்ந்ததை விட கதிர் உன்னை பற்றி அனைத்தும் அறிந்த பின்தான் உன்மீது பன்மடங்காய் காதல் அதிகரித்தது என்று கூறியது அவளுக்கு சொல்லொணா வலியை கொடுத்தது. தனது கடந்தக்காலத்தை பற்றி கிஞ்சித்தும் கவலைக்கொள்ளாத அவனது காதலை ஏற்க அவளது வைராக்கியம் இன்னும் தடைப்போட்டுக் கொண்டே இருந்தது. பெரும் பாரம் தலையில் ஏறியது போன்றிருந்தது. அவனது முடிவை தெள்ளென அவன் உரைத்து விட்டான். இனி தான் என்ன முடிவெடுப்பது என்று அறியாது குழம்பித் தவித்தாள். 

 

    எவ்வளவு நேரம் போனதென்றே அறியாது குழம்பி தவித்தவள் வெளியே அதிரன் அவளை அழைக்கும் குரல் கேட்டதும் தான் தன்னுணர்வு பெற்று அவசர அவசரமாக ஈர உடையை களைந்து உலர்ந்த உடையை உடுத்திக் கொண்டு வெளியே வந்தாள்.

 

     அதிரனுக்கு இரவு உணவு தயார் செய்து ஊட்டி விட்டவள் தனக்கு ஒரு தோசையை சுட்டெடுத்து அதனை ஒரு வாய் கூட உண்ணாது அப்படியே வைத்து விட்டு அறைக்கு வர, அதிரன் கதிரோடு கைப்பேசியில் உரையாடிக் கொண்டிருப்பதை பார்த்ததும் சத்தமிடாது வந்த வழியே திரும்பி கூடத்திற்கு வந்து அமர்ந்தாள்.

 

     கண்ணீர் அவளது கன்னம் வழியே இறங்க, அதனை அழுந்த துடைத்துவிட்டு தீவிர சிந்தனையில் ஆழ்ந்தாள். கதிரவனை தனக்கும் பிடித்திருக்கிறது என்பதனை அவளது மனம் மறுதலிக்கவில்லை ஆனால் அதனை வெளிப்படுத்த தயங்கியது. அதற்கு அவளது வைராக்கியம் மட்டுமன்றி அவனது அந்தஸ்தும் அவனது அன்னையும் தடையாய் இருந்திட, அவள் முடிவெடுக்க முடியாது தடுமாறினாள். 

 

     அதிரனை கதிர் ஏற்றுக்கொண்டது போல் அவனது வீட்டில் ஏற்றுக் கொள்வார்கள் என்று அவள் எண்ணவில்லை. அதிரனுக்கு முன் தன்னையே அவனது அன்னை ஏற்றுக் கொள்ள மாட்டார் என்பதனை நன்கு அறிந்ததனால் அவளது மனதினை கதிரிடம் வெளிப்படுத்த தயங்கினாள். அதிரனை பற்றி எண்ணியதும் தான் அவன் உறங்கினானா என்ற எண்ணம் வர உடனே அறைக்கு விரைந்தாள்.

 

    நன்கு உறங்கிக் கொண்டிருந்த அதியை கண்டதும் நிம்மதி பெருமூச்சுவிட்டவள் அவனுக்கு நன்கு போர்த்திவிட்டு தானும் அவனருகில் படுத்தாள். அவளுக்கு உறக்கம் வர மறுக்கவே, மீண்டும் கதிரை பற்றிய எண்ணத்தில் ஆழ்ந்தாள். அவனுக்கு என்ன முடிவுரைப்பது என்று குழம்பினாள். எத்துணை சிந்தித்தும் இறுதியில் அவளுக்கு குழப்பமே மிஞ்சிட, இயலாமை தந்த வலியில் அனிச்சையாய் அவள் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. அழுது அழது எப்பொழுது உறக்கம் வந்தது என்றே தெரியாது உறங்கத் தொடங்கினாள்.

 

      காலையில் ஏழு மணிப்போல் எழுந்த அதி எப்பொழுதும் தனக்கு முன்பே எழுந்துவிடும் அழகி இன்னும் தன்னருகில் உறங்கிக் கொண்டிருப்பதை கண்டு அவளை எழுப்பினான்.

 

    “அழகி! எழுந்திரு மணி ஏழாகிடுச்சு. நான் ஸ்கூலுக்கு போகணும். எழுந்திரு அழகி!” என்று அவன் அழைத்தும் அவள் எழாததால் அவளைத் தொட்டு உலுக்கினான்.

 

    “அழகி! அழகி!” என்று அழைத்துக் கொண்டே இருக்க, அவள் எழவேயில்லை.

 

    அவள் எழாததால் பயந்த அதிரன் அப்பொழுது தான் அழகியின் உடல் சூடாக இருப்பதை உணர்ந்தான்.

 

   “அழகி! எழுந்திரு அழகி! எனக்கு பயமாயிருக்கு. உன் உடம்பு வேற சூடா இருக்கு. எழுந்திரு அழகி!” என அதிரன் அவளை உலுக்க, அவளிடம் அசைவே இல்லை.

 

    பயத்தில் அதிரன் அழுது கொண்டே அவளை உலுக்க, அவனின் அழுகை சத்தம் கேட்டும் அழகி எழாதிருந்தாள்.

 

     என்ன செய்வதென்று தெரியாது அழுது கொண்டிருந்த அதிரனின் கண்ணில் அழகியின் கைப்பேசி பட, உடனே அதனை எடுத்தான். அழுதுக் கொண்டே கதிரவனின் எண்ணை தேடி அவனுக்கு அழைத்தான்.

 

     

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்