Loading

ரிஷி, சஞ்சுவை அவன் மகன் என்று கூறியதும் மொத்த குடும்பமும் அதிர்ந்து நின்றது என்றால், மீராவிற்கு தலையே சுற்றியது.

பின்னே மூன்று வருடமாய் தனக்கென்று இருக்கும் ஒரே சொந்தமாய், மொத்த அன்பையும் கொட்டி, பெற்ற மகன் போல் வளர்த்தவளாயிற்றே இன்று எவனோ ஒருவன் வந்து, அவனை சொந்தம் கொண்டாடினால்…?

உத்ரா அதிர்ந்து, துருவை ‘இவன் சொல்வது உண்மையா’ என்ற ரீதியில் பார்க்க, துருவின் லேசாய் தலையசைத்து ‘ஆம்’ என்றான்.

ரிஷி, துருவின் சட்டையை பிடித்து, “என் பையனை ஏண்டா என்கிட்டே இருந்து மறைச்சு வச்ச? உனக்கு தெரியும் தான இவன் என் பையன்னு…

உனக்கு தெரிஞ்சுருக்கும் என்னை பழிவாங்குறதுக்காக வேணும்னே என் பையனை என் கண்ணுல காட்டாம விட்டுட்ட” என்று பேசிக்கொண்டே போக,

துருவ் ஆத்திரத்துடன் “என்னடா உன் பையன் உன் பையன்னு சொல்லிக்கிட்டு இருக்க… உன்னை நம்பி வந்த பொண்ணை ஏமாத்தி, வயித்துல குழந்தையோட துரத்தி விட்டுட்டு, இப்போ உன் பையன்னா என்னடா அர்த்தம்.

உன்னால அந்த பொண்ணு செத்துட்டாடா… இந்த பையனையும் சேர்த்து கொன்னுருப்பாள் அந்த காஞ்சனா. மீரா மட்டும் இல்லன்னா இந்நேரம் இவனும் உயிரோட இருந்துருக்க மாட்டான். நானும் குற்ற உணர்ச்சியோடயே இருந்துருப்பேன் கடைசி வரைக்கும்…” என்று குரல் நடுங்க கர்ஜித்தவன்,

“உனக்கும் இவனுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. அவனை என்கிட்ட குடுத்துட்டு போயிடு…” என்றான் மிரட்டலாக.

ரிஷி, “என்னடா ஏதேதோ கதை விடுற. என் பையனுக்கும் எனக்கு சம்பந்தம் இல்லைன்னு நீ எப்படிடா சொல்லலாம்?

இவனை வச்சு, என்னை பழிவாங்கவா. அதான் நீ தெளிவா இந்த குடும்பத்துக்கிட்ட கொண்டு வந்து இவனை சேர்த்துட்டியா.” என்று சண்டைக்கு வர,

“இங்க பாரு ரிஷி இப்போ கூட நீ உன் பையன்ற பாசத்துல வந்து கேட்டுருந்தா நானே இவனை உங்கிட்ட ஒப்படைச்சுருப்பேன்.

ஆனால், நீ பாசத்துனால வரல. இவன் இந்நேரம் ஏதோ ஒரு அநாதை ஆஸ்ரமத்துல வளர்ந்துருந்தா நீ கண்டுக்க கூட மாட்ட.

இங்க இவன் இருக்குறனாள வேணும்னே பண்ற. இப்போ அவனை அம்மாவா வளர்க்குறது மீரா தான். அவள் கிட்ட அவனை குடுத்துட்டு கிளம்பு. இல்ல உயிரோட இங்க இருந்து நீ வெளிய போகமாட்ட…” என்று பல்லைக்கடித்து கொண்டு துருவ் உறுமியதில் அவன் நடுங்கி விட்டான்.

உத்ராவுக்கு தெளிவாக எதுவும் புரியவில்லை என்றாலும், ரிஷியிடம் சஞ்சு வளரக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள்.

ரிஷியிடம் இருந்து சஞ்சுவை கையில் வாங்கிக் கொண்டு, “துருவ் சொன்னது உனக்கு கேட்கலையா ரிஷி… நீ தான் வளர்ப்பு சரி இல்லாமல் கெட்டு நாசமா போய்ட்ட, ஆனால் இவனை கண்டிப்பா நான் அப்டி விடமாட்டேன். போ இங்க இருந்து…” என்று கண்டிப்பாய் கூற,

அவன் அவளை முறைத்து விட்டு, “இவனை எப்படி உன்கிட்ட இருந்து வாங்கணும்னு எனக்கு தெரியும்…” என்று விட்டு வெளியில் சென்றான்.

சஞ்சு இந்த கலவரத்தில் பயந்து அழுது கொண்டிருக்க, உத்ரா, அவனை கலங்கிய விழிகளுடன் பார்த்து,

துருவிடம், “இவன் இவன் என் அண்ணன் மகனா… என் கூடவே இருந்துருக்கான் எனக்கு தெரியவே இல்ல.” என்று சஞ்சுவை கண்ணீருடன் கட்டி அணைத்து முத்தமிட்டாள்.

அர்ஜுனும், “நான் சொன்னேன்ல அன்னைக்கே… அவன் உன்னை மாதிரியே பண்றான்னு.” என்று அவனை தூக்கி,

“இவன் அப்படியே இவன் அத்தை மாதிரி போல” என்று கொஞ்சுகையில், அஜயும், விதுவும் அருகில் வந்து, அவர்களும் அவர்களின் ரத்த சொந்தத்தை கொஞ்சினர்.

விது “எனக்கும் இவனை பார்க்கையில எல்லாம், எங்கேயோ பார்த்த மாதிரி இருந்துச்சு…” என்று பெருமையாய் கூற, மொத்த குடும்பமும், சஞ்சுவை அன்புடன் தாங்கியது.

அவன் தான் அனைவரையும் மிரண்டு பார்த்து கொண்டிருந்தான், ‘என்ன இவனுங்க திடீர்னு பாச மழையை பொழியிறானுங்க’ என்று.

இவர்களை பார்த்துக் கொண்டிருந்த உத்ராவிற்கு அப்பொழுது தான் ஒரு விஷயம் உறைத்தது, துருவ் ஏன் சஞ்சுவிடம் மட்டும் பாசம் காட்டினான் என்று.

அவனிடம் “இதை ஏன் என்கிட்டே சொல்லல துருவ். இவன் ரிஷி பையன்னு.” என்று கேள்வியாய் கேட்க,

துருவ் மௌனமே காத்தான்.

“சஞ்சு அம்மாவுக்கு என்ன ஆச்சு? இதுக்கும் காஞ்சனாவுக்கும் என்ன சம்பந்தம்” என்று மீண்டும் கேட்க, அவனிடம் மீண்டும் மௌனம்.

உத்ராவிற்கு சலிப்பாக இருந்தது.

பின், அவள் மீராவை பார்க்க, அவளும் அமைதியாய் நின்று கொண்டிருப்பதைப் பார்த்து கடுப்புடன், “ப்ச்” என்று உள்ளே செல்லப் போக,

மீரா, “உத்ரா” என்று அழைத்தாள்..

உத்ரா அவளை என்னவெனப் பார்க்க,

மீரா, “சஞ்சு உன் அண்ணன் பையன்னு நிஜமா எனக்கு தெரியாது. அன்னைக்கு…” என்று மூன்று வருடத்திற்கு முன்னால் சென்றவள், அவளுக்கு தெரிந்ததை சொல்ல ஆரம்பித்தாள்.

அர்ஜுன், மீராவிடம் காதலை சொன்னதும், ஆகாயத்தில் மிதந்து கொண்டிருந்தவள், கோவிலிலேயே சிறிது நேரத்தை கடத்தி விட்டு இருட்டிய பிறகு தான், ஆஷ்ரமம் கிளம்பினாள்.

அப்பொழுது, ஒரு பெண் குழந்தையுடன் ஓடி வருவதையும், அவளை 4 தடியர்கள் துரத்துவதையும் கண்டவள், ஒன்றும் புரியாமல் அவர்கள் பின்னே செல்ல, அப்பொழுது அந்த பெண், அவசரமாய் அவள் கையில் இருந்த குழந்தையை அங்கிருந்த கோவில் வாசலில் வைத்து விட்டு, ஓடினாள்.

கையில் குழந்தை இருப்பது போலவே, ஒரு துணியை சுற்றிக் கொண்டு அவள் ஓட, அவர்கள் அவளை துரத்த, மீரா, அழுது கொண்டிருந்த அந்த குழந்தையை தூக்கிக் கொண்டு அவர்கள் பின்னே சென்றாள்.

அப்பொழுது, ஒரு புதரில் அந்த பெண், அவர்களிடம் மாட்டிக்கொள்ள, அவளை சரமாரியாக வெட்டினர்.

மறைந்திருந்து அதனைப் பார்த்த மீராவிற்கு அழுகையும், பயமும் ஒருங்கே தோன்றியது அந்த பெண்ணை நினைத்து.

அந்த நபர்கள், அந்த துணி சுற்றிய துண்டை கையில் எடுக்கையில் தான் அது குழந்தை இல்ல என்று உணர்ந்து, சிறிது சிறிதாய் செத்து கொண்டிருந்தவளிடம், “குழந்தை எங்க?” என்று  கேட்க அவள் இறந்தே விட்டாள்.

வாயை பொத்திக் கொண்டு மீரா அங்கேயே அழுக, அவர்கள் அந்த குழந்தையையும் கண்டுபிடித்து கொலை செய்ய வேண்டும் என்று பேசிக்கொண்டிருந்ததில், எப்படியாவது குழந்தையை காப்பாற்ற வேண்டும் என்று நினைத்து, அங்கிருந்து ஓடினாள்.

குழந்தை வேறு அப்பொழுது அழுக ஆரம்பிக்கவும், சத்தம் கேட்டு அவர்களும் இவளை துரத்தினர்.

ஆனால் அவள் அவர்களின் கண்ணில் அகப்படாமல், அவனை தூக்கிக் கொண்டு, ஆஸ்ரமம் வந்து அந்த தலைவியிடம் நடந்ததை கூறினாள்.

அவர் போலீசில் குழந்தையை ஒப்படைத்து விடலாம் என்று கூற, அவளும் விடிந்ததும் செல்லலாம் என்று நினைத்து கொண்டாள்.

மறுநாள், குழந்தையை தூக்கிக் கொண்டு காவல் நிலையம் சென்றவள், அங்கு ஒரு போலீஸ் அந்த ரௌடிகளிடம் ‘அந்த குழந்தையை கண்டு பிடித்தாகிவிட்டதா’ என்று கேட்டு கொண்டிருந்ததை கண்டவளுக்கு, அவர்களும் இவர்களுக்கு உடந்தை என்று உணர்ந்து மீண்டும் ஆஸ்ரமமே வந்து விட்டாள்.

என்ன செய்வது ஏது செய்வது என்று புரியாமல் குழம்பி கொண்டிருந்தவளின், மனதில் வேறு ஒரு விஷயமும் அழுத்த, அவளுக்கு மண்டை காய்ந்தது.

இரண்டு நாளில், அந்த ஆஸ்ரமம்க்கே வந்து, போலீசார் குழந்தையைத் தேட ஆரம்பித்தனர்.

அங்கிருந்து, அவர்கள் வந்த நேரம் பின் பக்கமாய் சென்று, அந்த குழந்தையை மறைத்து விட்டு, இந்த குழந்தை யார் கைக்கும் கிடைக்க கூடாது என்று தீவிரமாய் சிந்தித்து கொண்டிருக்கும் போது தான், அவளுக்கு துருவின் கம்பெனியில் இருந்து வேலைக்கு ஆஃபர் லெட்டர் வந்தது. அவள் ஏற்கனவே வேலை பார்த்துக் கொண்டிருந்த கம்பெனி மூலமாக…

அதுவும் இரண்டு நாட்களுக்குள் அங்கிருந்து கிளம்ப வேண்டும் என்றும் இருந்தது…

அதனை பார்த்தவளுக்கு எப்படியும் அங்கு சென்றால் தான் சஞ்சுவை காப்பாற்ற முடியும் என்று நினைத்து, ஆஸ்திரேலியா சென்று விட்டாள்… என்று அவள் அழுதுகொண்டே சொல்லி முடிக்க,

அர்ஜுன், “இதை ஏன் என்கிட்டே சொல்லல மீரா?” என்று அதிர்ச்சியுடன் கேட்க,

அவள், “அவங்க ரொம்ப மோசமானவங்க அர்ஜுன். சஞ்சு என்கிட்டே இருக்கானு தெரிஞ்சா, என்னையும் எப்படியும் உயிரோட விட மாட்டாங்கன்னு எனக்கு புருஞ்சுச்சு. இதை உங்ககிட்ட சொன்னால் எனக்கு ஹெல்ப் பண்றேன்னு நீங்களும் பிரச்சனைல மாட்டிக்குவீங்கன்னு தான் நான் சொல்லல” என்றதும்,

அவனுக்கு தான் ‘எனக்காக யோசித்தா. என்னை விட்டு சென்றாய் முட்டாள் பெண்ணே’ என்று தான் இருந்தது.

லட்சுமி தவிர மற்றவர்களும் இருவருக்குள்ளும் ஏதோ இருக்கிறது என்று உணர்ந்து கொண்டு, அவள் ரொம்ப கஷ்டப்பட்டிருக்கிறாள் என்று வருந்தினர்.

கருணாகரனை அவள் தலையை தடவி, “எங்க வீட்டு வாரிசை காப்பாத்த நீ உன் உயிரையே பணயம் வச்சுருக்கம்மா.” என்று கும்பிட,

அவள் பதறி “ஐயோ என்னப்பா நீங்க போய் என்கிட்ட…” என்றதில்,

அவர், “சாரி மா. காஞ்சனாவால நான் யாரையுமே நம்புறது இல்லை… அதான் உன்னையும் நம்பாமையே இருந்தேன். என்னை மன்னுச்சுடும்மா” என்று மன்னிப்பு கேட்டார்.

அவள் வந்தது அவருக்கு பிடிக்கவில்லை. அவளிடமும் சரி சஞ்சுவிடமும் சரி அவர் ஒட்டவே இல்லை. அதை தான் இப்போது குறிப்பிட்டார்.

சுஜி விதுனிடம், “டேய் அண்ணா உங்க அப்பாவாடா இது?” என்று விட்டு, சட்டென்று நடப்பதை வீடியோ எடுத்தாள்.

விது பதறி “என்ன பக்கி பண்ற” என்று கேட்க,

  “உங்க அப்பா மன்னிப்பு கேக்குறதுலாம் வரலாற்று சம்பவம் பங்கு. அதை பதிவு செய்ய வேண்டாமா.” என்று அவர் உணர்ச்சிவசப்பட்டுப் பேசுவதை ரெகார்ட் செய்து கொண்டாள்.

விது அவளிடம், “ஹப்பா ஒரு லவ் ஓகே ஆகிடும் போல…” என்று சொன்னதும்,

சுஜி அவனை ஒரு மாதிரியாகப் பார்த்து, “எதை வச்சு இப்படி சொல்ற?” என்று கேட்க,

“அப்பாவுக்கே மீராவை பிடிச்சுருச்சு. அவளும் அர்ஜுனை விட்டுப் போக இதான் காரணம்னு சொல்லிட்டாள்ல. அப்போ ப்ராப்லம் சால்வ்ட்” என்று தோளை குலுக்கினான்.

“இவ்ளோ அப்பாவியா இருக்கியேடா பங்கு. நீ அவள் பேசுனதை கவனிச்சியா…  கோவிலை இருந்து கிளம்புறத்துக்கும்.,சஞ்சு அவள் கைல வர்றதுக்கும் இடைல ஒரு கேப் விட்டாள்..அந்த கேப் தான் அர்ஜுனுக்கு அவள் வைக்க போற ஆப்பு போல…” என்று யோசித்துக் கொண்டே சொல்ல,

விது “அப்போ இன்னும் இவங்க பிளாஷ் பேக். முடியலையா” என்று பாவமாய் கேட்டான்.

  “போன ஜென்மத்துல இதுங்க எல்லாம், ஷோ ரூம்ல வேலை பார்த்துக்குங்க போல. எல்லாத்தையும் இன்ஸ்டால்மெண்ட்லேயே பேசுதுங்க…” என்று தலையில் அடித்து கொள்ள, விது பக்கென்று சிரித்து விட்டான்.

மீராவிடம் உணர்ச்சிப் பூர்வமாக பேசிக்கொண்டிருந்த கருணா திரும்பி விதுனை முறைக்க அவன் பேந்த பேந்த முழித்து

“சுஜி தான்ப்பா வீடியோ எடுத்தாள் நான் இல்ல.” என்று உளறியதில்,

சுஜி “அட பங்கர நாயே… ஒரு கேக் சாப்பிட உன் வீட்டுக்கு வந்ததுக்கு இப்படி கோர்த்து விட்டுட்டியேடா” என்று மிரண்டு கருணாவை பார்க்க, இப்பொழுது அவரின் பார்வை இவள் மேல் விழுந்தது.

“அய்யயோ இந்த எம்டன் வேற முறைக்கிறாரே” என்று உத்ராவைப் பார்க்க, அவள் துருவை அளந்து கொண்டிருந்தாள்.

அர்ஜுன் காப்பாற்றுவான் என்று அவனைப் பார்க்க, அவன் மீராவை சைட் அடித்து கொண்டிருந்தான்.

அஜயாவது காப்பாற்றுவான் என்று பார்க்க, அவன் சஞ்சுவிடம், “மாமா உனக்கு சாக்கி வாங்கி தரவா வாங்க வாங்க” என்று அவனை கூட்டிக்கொண்டு அங்கிருந்து தலை தெறிக்க வெளியில் ஓடிவிட்டான்.

பிறகென்ன, கிட்ட தட்ட, ஒரு மணி நேரம். 15 நிமிடங்கள், சுஜியை நிற்க வைத்து லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கி விட்டார் கருணாகரன்.

அதையும் ஏதோ முதல் தடவை கேட்பது போல் தலையை ஆட்டி ஆட்டி வாங்கி கொண்டிருந்தாள்.

ஒரு வழியாய் அவர் சோர்வாகி அமர, “அங்கிள் தண்ணீர்” என்று அவள் கேட்டதில், அவர் முறைக்கவும்

“இல்லை அங்கிள் தண்ணி உங்களுக்கு டயர்டா இருப்பீங்கள்ல அதான்…” என்று இளித்து விட்டு சுற்றி முற்றி பார்க்க அங்கு ஒரு ஈ காக்கா கூட இல்லை.

‘என்னை திட்டு வாங்க விட்டுட்டு எல்லாம் எங்க போய் பிளாஷ்பேக் கேட்டுகிட்டு இருக்குதுங்களோ’ என்று வீடு முழுக்க அவர்களைத் தேடினாள்.

மீரா தான், “பாவம் சுஜி. அப்பா ரொம்ப திட்றாங்க அவளை.” என்று பாவப்பட,

அஜய், “இப்போ நம்ம இடைல போனா அந்த திட்டலாம் ஃபார்வர்ட் ஆகி நமக்கு தான் வரும் அண்ணி. சுஜிக்கு எதையும் தாங்கும் இதயம். எவ்ளோ திட்டு வாங்குனாலும், அசராம நிப்பா” என்று சொல்லிக்கொண்டிருக்கையிலேயே, முதுகில் சுள்ளென்று அடி விழுந்தது.

சுஜி தான் அவனை அடித்திருந்தாள்.

“டேய் இன்னைக்கு பார்ட்டி செலிப்ரேட் பண்ணுவீங்களா மாட்டிங்களா. பசிக்குதுடா” என்று பாவமாய் கேட்க,

அவனோ மீராவிடம் “பார்த்தீங்களா? இப்போ கூட, அவர் திட்டுனது அவளுக்கு ஃபீலிங்கா இல்ல… பார்ட்டி செலிப்ரேட் பண்ணலைன்னு தான் வருத்தமா இருக்கு.” என்று கிண்டலடிக்க,

சுஜி தான் “என்னைக்கு உங்க கூட சேர்ந்தேனோ அன்னைக்கே சூடு சொரணை எல்லாம் மூட்டை கட்டி பரணி மேல போட்டுட்டேன்.” என்று விட்டு,

விதுனிடம் “துரோகி. இப்படி சிரிச்சு என்னை மாட்டிவிட்டுட்டியேடா” என மாறி மாறி அவர்கள் பேசிக்கொண்டிருக்க, அர்ஜுன் மீராவையும், உத்ரா துருவையும் தான் பார்த்துக்கொண்டு இருந்தனர்.

இவர்கள் போட்ட மொக்கையில் உத்ரா “அடச்சே சும்மா இருங்க…” என்று கத்தி விட்டு, அர்ஜுனிடம்,

“பங்கு, இவன் ஏதாவது கேள்விக்கு பதில் சொல்லுவானா மாட்டானான்னு கேளு பங்கு…” என்று துருவை காட்டிக் கேட்க, அவன் துருவைப் பார்த்தான்.

துருவ், பதில் சொல்வதற்குள் உத்ராவே, “பதிலை நீயே தேடுன்னு அவன் ஏதாவது டயலாக் அடிச்சான். நான் கடுப்பாகிடுவேன்.” என்று சேர்த்து சொல்ல, துருவ் புன்சிரிப்புடன் அவளருகில் வந்து, நெருங்கி நின்றதில், அவளுக்குத் தான் அடுத்த வார்த்தை வரவேயில்லை.

“என்னால பதில் சொல்ல முடியாது ஹனி” என கிசுகிசுப்பாக கூறியவன் கிளம்பியே விட்டான்.

உத்ராவிக்கு இன்னும் அவனின் ஸ்பரிசம் அவள் மேல் இருப்பதை போல் உணர, மற்றவர்கள் என்னடா நடக்குது இங்க என்று விழித்தனர்…

அவர்களை கண்ட பிறகு தான் தன்னிலைக்கு வந்தவள்,

அர்ஜுனிடம் “டேய் அவனுக்கு அவ்ளோ திமிரா… இவ்ளோ சொல்லியும் பதில் சொல்லாமல் போறான்… அவனை” என்று துருவ் சென்ற திசையை பார்த்து திட்ட,

அஜய், “பங்கு அவன் போய் அரைமணிநேரம் ஆச்சு…” என்றதில்,

“எனக்கு தெரியாதா” என்று இருக்கும் கோபத்தில் விதுனை சப்பென்று அறைந்து விட்டு சென்றாள்.

அர்ஜுன் மீராவிடம், ஏதோ பேசபோக, மீரா, சஞ்சு அழுகும் சத்தம் கேட்கவும் அங்கிருந்து அவனைப் பாராமல் நகர்ந்து விட்டாள்.

விதுன் கன்னத்தில் கை வைத்துக் கொண்டு, “நான் என்னடா பண்ணுனேன்” என்று பாவமாய் கேட்க,

“அது எனக்கு என்னடா தெரியும்” என்று மீரா மேல் இருக்கும் கோபத்தில் அவன் பங்கிற்கு அவனை அடித்து விட்டு போனான்.

“என்னைய மட்டும் தாண்டா ஈஸியா அடிச்சுடறீங்க…” என்று அவனும் கோபமாக அஜயை பளாரென்று அடித்து விட்டு அங்கிருந்து ஓடி விட்டான்.

அஜய் கடுப்புடன்” டேய்” என்று கத்திக் கொண்டிருக்கையில் சுஜி, “அஜய்” என்று மென்குரலில் அழைத்தாள்.

அவன் என்னவென்று பார்க்க, இவர்களை பார்த்த பிறகு தான், சுஜிக்கும் அஜய் மேல் இருக்கும் உணர்வுக்கு என்ன காரணம் என்று புரிந்தது.

தான் அவனை காதலிக்கிறோமா என்று சிறிது நேரமாய் காற்றில் மிதந்தவள், அவனையே ரசித்துக் கொண்டு, தன்னையறியாமல் அவனை அழைத்து விட்டாள்.

அவன் அவள் முகத்தையே பார்க்கவும், ஏதோ ஒரு உணர்வு எழ அவனைப் பாராமல்,

“அஜய், எனக்கு எனக்கு… நான் உன்னை” என்று திக்கி திணற, அவன் எதுக்கு இப்படி உளறிக்கிட்டு இருக்காள் என்று பார்த்தான்.

அஜய்க்கு அவளை நிச்சயம் பிடிக்கும் என்று நினைத்து, அவனிடம் அவள் உணர்வுகளை மறைக்கவும் முடியாமல்,

“அஜய் இன்னைக்கு இன்னைக்கு நீ எனக்கு ரொம்ப அழகா தெரியுறடா… நான் உன்னை லவ் பண்றேனோனு தோணுது.” என்று அவனைப் பார்க்க முடியாமல் சிவந்து கொண்டு வேறு எங்கோ பார்த்துக் கொண்டு கூற, அவன் கலகலவென சிரிக்கத் தொடங்கினான்.

சுஜி அவனை புரியாமல் பார்க்க,

அவன் “உன் காமெடிக்கு வர வர அளவே இல்லை. உனக்கு கேக் வேணும்னா நேரடியா கேட்க வேண்டியது தான. அதை விட்டுட்டு எனக்கு ஐஸ் வச்சுக்கிட்டு இருக்க” என்று சிரித்தவன்,

மேலும், “ஆனால் உன்னை லவ் பண்றதுக்கு நான் கடைசி வரை சந்நியாசியாவே இருக்கலாம்”  என மேலும் கிண்டல் செய்கிறேன் என்று அவளை காயப்படுத்தி விட்டுச் சென்றான்.

அவளுள் ஏதோ ஒன்று உடைய, யாரிடமும் சொல்லாமல் கண்ணீருடன் அங்கிருந்து கிளம்பி விட்டாள்.

வீட்டிற்கு சென்ற துருவிற்கு அங்கிருந்த தனிமை எப்போதும் போல் அவனை வெகுவாய் தாக்கியது.

மேலும், சஞ்சுவை எப்படியாவது, ரிஷியிடம் இருந்து காப்பாற்ற வேண்டும் என்று நினைத்துக் கொண்டு பால்கனியில் நின்றவனுக்கு, லண்டனில் இதே மாதிரி பால்கனியில் நின்று கொண்டு, உத்ரா அவனுக்கு முத்தமிட்டதை நினைத்தான்.

இப்பொழுதே அவனுக்கு அந்த முத்தம் வேண்டும் என்று மனது இம்சை செய்ய,

பின், ‘இப்போதான் அவள் என் உத்ரா இல்லையே. அவளுக்கு எப்போ ஞாபகம் வருதோ அன்னைக்குதான் என் ஹனி எனக்கு திரும்ப கிடைப்பாள்.’ என்று வேதனையுடன் நினைத்தவன், அந்த பனியிலேயே நாற்காலியில் அமர்ந்து உறங்கி விட்டான். கனவிலும் அவனுக்கு அவள் முகம் தான்…

கனவிலேயே அவன் கேட்ட முத்தத்தை உத்ரா அவனுக்கு தருவது போல் இருக்க, அவனுக்குள் நிம்மதி பரவி உறக்கத்திலேயே முறுவலித்தான்.

‘கனவுல மட்டும் தான் வருவியா ஹனி… நிஜத்துல எப்போ எனக்கு குடுப்ப’ என்று உளற,

அவன் அருகில் நிஜத்திலேயே நின்றிருந்த உதி தலையில் அடித்துக் கொண்டு,

“பக்கத்துல நிக்கிற என்னை கனவுல வரதா சொல்றான். இந்த டியூப் லைட்ட நம்ம லவ் பண்ணிருக்கோம்னா நம்ம எவ்ளோ பெரிய டியூப் லைட்டா இருந்துருப்போம்.” என்று ஆச்சர்யமாய் நினைத்துக் கொண்டிருந்தவளுக்கு, சிறிது நேரம் முன்பு திடீரென துருவை பார்க்க வேண்டும் போல் இருந்தது.

அதற்காக அவள் வீட்டில் சுவர் ஏறி குதித்து, துருவ் வீட்டிலும் சுவர் ஏறி குதித்து வந்தாள்.

கூடவே அஜய்யையும், விதுனையும் கூட்டி கொண்டு வர, அவர்களோ ‘தூக்கத்தை கலைத்து அர்த்த ராத்திரியில் சுவர் ஏறி குதிக்க வைத்து விட்டாளே’ என்று புலம்பிக் கொண்டு, ஹால் சோபாவிலேயே ஆளுக்கொரு திசையில் படுத்து விட்டனர்.

பால்கனியில் துருவ் அருகில் அமர்ந்து, அவன் முகத்தையே ரசித்திருந்தவள், அவன் குளிரில் நடுங்குவதைக் கண்டு போர்வையை எடுத்து அவனுக்கு அணைவாய் போர்த்தி விட்டு,

“உன் பொண்டாட்டின்னு நீ வாய் வார்த்தையா தான சொல்ற துருவ். இப்போ உனக்கு நான் உன் ஹனி இல்லை. உத்ரா தான்.

அப்டித்தான் நீ என்னை பார்க்குற. எனக்கு ஒரு விஷயம் தான் புரியவே இல்லை துருவ். உன் உருவத்தை தான நான் மறந்தேன்…

நீ என் மனசுல விட்டுட்டு போன உன் உணர்வுகளை நான் மறக்கலையே.

அது இன்னும் என்கூட தான இருக்கு… நீ எனக்கு சொல்லிக் குடுத்த பிசினெஸ், ஏன் உன் ஆட்டிடியூட் கூட, எனக்குள்ள என் உணர்வுகளுக்குள்ள நிறைஞ்சு இருக்க போய் தான, நான் இவ்ளோ சீக்கிரம் ரெக்கவர் ஆகி, பிசினெஸ்ல இவ்ளோ பெருசா வளர்ந்துருக்கேன்.

நீ ஏன் அப்டி யோசிக்கல துருவ்…? இல்ல யோசிக்க மறுக்குறியா ஹ்ம்ம்?” என்று பெருமூச்சு விட்டவள், மீண்டும் அவன் நெற்றியில் முத்தமிட்டு விட்டு, அவன் அறைக்கு சென்றாள்.

அங்கு அவன் ஏதாவது டைரியில் எழுதி வைத்திருக்கிறானா என்று அறையை உருட்டினாள்.

வெகு நேரம் கப்போர்ட், டிராயர் என்று தேடியவள், “சே! பிளாஷ் பேக்லாம் ஒரு நோட்டு போட்டு எழுதி வச்சா நாங்க எடுத்துட்டு படிச்சுப்போம்ல” என்று சலித்து விட்டுத் திரும்ப, அங்கு துருவ் சுவற்றில் சாய்ந்து கையைக் கட்டி கொண்டு அவளையே பார்த்திருந்ததை கண்டு திகைத்து விட்டாள்.

அவன் என்ன என்று புருவத்தை உயர்த்திக் கேட்க, அதில் திருதிருவென விழித்தவள், பின், ஏதோ ஞாபகம் வந்தது போல்…

“ஹான். இப்படி கேக் சாப்புடாம வந்துடீங்கள்ல அதான், கேக் குடுக்க வந்தேன” என அசடு வலிந்து கொண்டு கூற, அவன் “கேக் எங்க?” என்று நக்கலாய் கேட்டான்..

“கேக்கு! கேக்கு! ஐயோ கேக்குக்கு நான் எங்கடா போவேன்…” என்று மனதில் புலம்பி விட்டு,

“வெளிய அஜய்கிட்ட இருக்கு. இருங்க வாங்கிட்டு வரேன்” என்று வெளியே செல்லப் போக, அவள் கையைப் பிடித்து இழுத்தவன்,

“என் ரூம்ல என்ன தேடிகிட்டு இருந்த?” என்று அழுத்தமாய் கேட்க, அவள் பாவமாய் முகத்தை வைத்து கொண்டு,

“நான் உங்களை தான் தேடிகிட்டு இருந்தேன்…” என்றாள்.

“ஆமா நான் என்ன கப் போர்டுக்குள்ள எல்லாமா இருப்பேன்” என்று சிரிப்பை அடக்கியபடி கேட்க,

உத்ரா, “என்ன சொன்னாலும் கிராஸ் கொஸ்டின் கேக்குறானே” என்று நொந்து கொண்டு இருக்கையிலேயே, தடதடவென ஏதோ சத்தம் கேட்டதில், இருவரும்  வெளியில் சென்று பார்க்க, அங்கு கதவை உடைத்துக் கொண்டு, அடி ஆட்களுடன் வீல் சேரில் இருந்தவனை பார்த்தனர்.

உத்ரா இவன் யாரென்று புரியாமல் துருவைப் பார்க்க, அவன் அவனிடம் “சைதன்யா… எதுக்கு இங்க வந்த?” என்று கடுங்கோபத்தில் கேட்க,

சைதன்யா “பழி தீர்க்க வந்துருக்கேன் வேந்தா… என்னை நடக்க கூட முடியாமல் நடை பிணமா ஆக்குன உன்னை பழி தீர்க்க வந்துருக்கேன்.” என்று ரௌத்திரத்துடன் கூறினான்.

உத்ரா தான் மிரண்டு விட்டாள். “இவன் தான் அந்த சைத்தானா? இவன் இப்படி இருப்பதற்கு காரணம் துருவா…” என்று அதிர்ந்தவள், மனதினுள், ‘இவன் வந்ததுல இருந்து டெய்லி எனக்கு ஷாக்கா குடுக்குறானே… இப்பவே லேசா நெஞ்சு வலிக்கிற மாதிரி இருக்கு’ என்று நெஞ்சைப் பிடித்திருந்தாள்.

உறைதல் தொடரும்!
மேகா!

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
10
+1
47
+1
5
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. விழுந்து விழுந்து சிரிக்கக் கூடிய கதைக்கரு. மனதிலிருக்கும் பாரம் இறங்குவது போன்றதொரு உணர்வை தரும் எழுத்தாளரின் எழுத்து நடையும், நகைச்சுவைத் திறனும் மிகவும் அசத்தல்.