17
மிதிலா, ரகுநந்தனின் நட்பு தொடர்ந்து ஒரு வருடங்கள் கடந்திருந்தன. கோடை விடுமுறையின் போது, ரகுநந்தனின் பாட்டி சிவகாமிக்கு உடல்நலக் குறைவால், அவர்களின் சொந்த ஊருக்கு குடும்பத்தோடு சென்றிருந்தனர்.
அவரின் இறுதி நேரம் நெருங்கி விட்டதை உணர்ந்து, சாகும் போது தன் சொந்த மண்ணில் இறக்க வேண்டும் என்று அடம்பிடித்து தங்கள் சொந்த ஊருக்கு சென்றார் சிவகாமி.
அப்பொழுது விடுமுறை என்பதாலும் ரகுநந்தனும் தன் தங்கை, தம்பியோடு போக வேண்டிய சூழல்.
மிதிலாவிடம் இதனைப் பற்றி கூற, “திரும்ப எப்ப வருவ ராம்?” என கண்ணைக் கசக்கினாள் மிதிலா.
“சீக்கிரம் வந்துருவேன் ஜானு. பாட்டிக்கு உடம்பு முடியல, அதான்…” என்றவன்,
“போய்ட்டு வரேன் ஜானு” என விடைபெற்றான்.
அதே நேரத்தில் சுந்தரேசனுக்கு அரசாங்க பணி கிடைத்திட, உடனே அங்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
மிதிலாவிற்கு பள்ளி மாற்றல், வீடு மாற்றம் செய்ய வேண்டும் என்று அடுத்தடுத்த வேலைகள் அவசர கதியில் நடக்க, ரகுநந்தனின் பாட்டியோ தங்கள் சொந்த ஊரிலே தன் இன்னுயிரை ஈர்த்தார்.
அவருக்கு சடங்குகள், கருமாதி என நாட்களும் இறக்கை கட்டி பறந்தது.
தாங்கள் தங்கி இருந்த வீட்டை காலி செய்யும் போது மிதிலாவின் மனமோ ரகுநந்தனின் இல்லத்தின் மேல் தான் இருந்தது.
அரசாங்க பணி என்பதால், திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு குக்கிராமம் ஒன்றில் அவருக்கு வேலை கிடைத்திருந்தது.
பதினைந்து வருடத்திற்கு முன் என்பதால், செல்போன் வந்திருந்த நிலையிலும் அவர்களின் இல்லத்தில் லேண்ட் லைன் தான் பயன்படுத்தப்பட்டு வந்தது.
திடீரென்ற இடம் மாற்றம், குட்டி மிதிலாவிற்கு மன வருத்தத்தை உண்டாக்க தன் ராமனிடம் எவ்வாறு பேசுவது எனத் தெரியாமல் தவித்தாள்.
கடைசி நொடி வரை தன் ராமனின் வரவை எதிர்ப்பார்த்து, அவன் இல்லத்தை கண்ணீரோடு பார்த்தவாறே கோயம்பத்தூரில் இருந்து விடைகொடுத்து சென்றாள் மிதிலா.
ரகுநந்தன் தன் குடும்பத்தோடு திரும்ப வரும் போது அவனின் ஜானுவின் வீட்டில் அப்போது வேறொரு குடும்பம் தான் வசிப்பதைக் கண்டான்.
அந்த வயதில் அவனால் முடிந்த மட்டும் சுந்தரேசன் குடும்பத்தை பற்றி விசாரிக்க, அவர்கள் சென்ற ஊர் பற்றி அங்கிருந்த ஒருவருக்கும் சரியாக தெரியாமல் இருந்த சூழ்நிலையில் அவனின் ஜானகியை எப்படி கண்டுபிடிப்பது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தான்.
அதன்பின் அவனும் குடும்பத்தோடு சென்னைக்கு இடம் மாற்றம் ஆகிவிட, நாட்கள் அதன் போக்கில் நகரத் தொடங்கின.
அவர்கள் பிரிந்த இந்த பதினான்கு ஆண்டுகளில் ரகுநந்தனுக்கு ஜானகியின் மேல் உள்ள காதல் வளரத் தொடங்கியது.
இன்றைய சமூக வலைதளங்கள் மூலமாவது அவளை கண்டறிய முடியுமா என்ற அவனின் தேடலும் தோல்வியை தழுவியது.
அவளின் விருப்ப பாடத்தை எடுத்து படிக்க ஆரம்பித்து, அதில் இன்று பேராசிரியராக உயர்ந்து நிற்கிறான்.
அவன் மூன்று ஆண்டுகளுக்கு முன் கோயம்பத்தூர் மீண்டும் வந்ததற்கு ஒரு காரணம் அவனின் ஜானு அவன் கண்களில் ஒரு முறையேனும் பட்டுவிட மாட்டாளா! என்று தான்.
ஒருமுறை பள்ளியில் நடந்த மாறுவேட போட்டியில் அவளுக்காக அவன் ராமர் வேஷமிட, அவள் சீதா வேடமிட்டாள். அப்பொழுது இருவரையும் ஜோடியாக பள்ளியில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை தவிர அவனிடம் அவனின் ஜானகியை பற்றி எந்தவொரு குறிப்புகளும் இல்லாமல் இருந்தது.
அவள் எங்கு உள்ளாள்? என்ன செய்கிறாள்? ஒருவேளை திருமணம் நடந்திருந்தால்? ஆனால் அதனை அவன் மனம் மறுத்தது.
‘என் ஜானுவால என்னை மறக்க முடியாது, அவ எனக்காக பொறந்தவ. கண்டிப்பா அவ என்னோட சேருவா’ என்ற வார்த்தைகளை தான் அவன் மனதில் உருப்போட்டு கொண்டான்.
மிதிலாவின் வாழ்வும் அதன் போக்கில் நகர, அவள் பருவமெய்திய நாட்களுக்கு பின் தான் அவன் மேல் கொண்ட காதலை உணர ஆரம்பித்தாள்.
அவள் மனதில் அது விருட்சமாய் வேறூன்றத் தொடங்கி இருந்தது. தன் தந்தைக்கு ஓய்வு கிடைத்தவுடன், கோயம்புத்தூரில் தான் வேலை செய்ய விருப்பப்படுவதாக கூற, நறுமுகைக்கும் அங்கேயே ஒரு நல்ல கல்லூரியில் சேர்த்து விடலாம் என்றும் உதிரி தகவலும் கொடுக்க சுந்தரேசனும் பதினான்கு ஆண்டுகளுக்கு பின் கோயம்புத்தூர் மண்ணில் காலடி எடுத்து வைத்தார்.
.
.
.
பழைய நினைவுகளில் அவன் மூழ்கி இருக்க, இதுவரை அவன் கூறிய அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த நறுமுகை,
“என்ன சொல்றதுனு தெரியல சார். அவ என் ராம் வருவார்னு சொல்லும் போதெல்லாம் நானே நிறைய தடவ அவளைத் திட்டி இருக்கேன். இந்த காலத்துல அதுவும் பப்பி லவ்னு கூட இத சொல்ல முடியாது, விவரம் தெரியாத வயசுல ஏற்பட்ட அந்த உறவுக்கு மதிப்பு கொடுத்து என் அக்காவுக்காக அவளோட ராம் காத்திருப்பாங்கனு நினைக்கிறது கானல் நீர் போல தான்னு நினைச்சேன். ஏன், இத சில தடவை அவக் கிட்டயே சொல்லியும் இருக்கேன்”
“ஆனால், நீங்க அவளுக்காக பதினாலு வருஷம் காத்திருந்தது, ஏதோ ஒரு மாதிரி இருக்கு. இதெல்லாம் படத்துலயும், கதைகள்ளயும் தான் நடக்கும்னு நினைச்சுட்டு இருந்தேன். அத டோட்டலா மாத்திட்டீங்க, நீங்களும் உங்க ஜானுவும்” என்றவளைப் பார்த்து புன்னகைத்தவன்,
“என் காதல விட என் ஜானுவோட காதல் புனிதமானது முகி. எனக்காவது அவ கூட பழகுனப்போ விடலை பையன் வயசு, அந்த நேரத்துல அவ மேல உள்ள ஈர்ப்ப என்னால உணர முடிஞ்சுது. ஆனா, என் ஜானு அந்த வயசுல என்னை அவ ராமனா ஏத்துக்கிட்டது மட்டுமில்லாம இன்னவரை அவ என்கூட கற்பனைல வாழ்ற வாழ்க்கை வரை. இந்த மாதிரியான காதல் கிடைக்க நான் தான் கொடுத்து வச்சுருக்கணும், என் ஜானுவோட ராமனா இருக்கணும் எப்பவும்” என்றவன் கண்களில் அவனின் ஜானுவின் மேல் உள்ள காதல் மிளிர்ந்தது.
தன் நண்பனை அணைத்துக் கொண்ட சிரஞ்சீவி, “நானே நீ ஜானுவ தேடி வரும் போது நம்பிக்கை இல்லாம தான் இருந்தேன் டா. இருந்தாலும் உன்கூட துணைக்கு நானும் இருக்கணும் அப்படினு தான் உன்கூட இங்க வந்தேன், என்கிட்ட ஜானுவ பத்தி நீ முழுசா சொன்னது இல்ல தான். ஆனா, பதினாலு வருஷத்துக்கு முன்னாடி பிரிஞ்சு போன ஜானு திரும்ப உன் வாழ்க்கைல கிடைப்பானு நான் நினைக்கல” என்றான்.
“அவ என்மேல வச்ச நம்பிக்கை தான் காரணம் டா. ஆனா, அதே நேரம் என் மேல வெறுப்பையும் சுமந்து நிக்கிறா” என்றவனின் பார்வையில் வலி தெரிந்தது.
“நீங்க தான் ராம்னு அவளுக்கு தெரியும் தான சார்? அப்புறம் ஏன், இன்னும் உங்கமேல கோபத்த காட்றா?” என்றாள் நறுமுகை.
“அவ இன்னும் என்னை கிருஷ்ணனா தான் பார்க்கிறா முகி. உன் அக்காவோட பிடிவாதம் உனக்கு தெரியாது, அவ ஒரு விசயத்த வெறுத்தா அதுல இருந்து கடைசி வரை தன்னை மாத்திக்க மாட்டா. அதே நிலை தான் இப்போ…” என்க,
“உங்கள எப்படி அவ கிருஷ்ணானு நினைக்கிறா, எனக்கு புரியல” என்றாள் குழப்பத்துடன் நறுமுகை.
“இன்னிக்கு இது போதும் முகி. கண்டிப்பா அதப் பத்தி நாளைக்கு சொல்றேன். ஆனா அவ என்னை பதினாலு வருஷம் கழிச்சும் அதே முறைப்போட பார்க்கும் போது….” என்றவன் சொல்ல முடியாமல் தவித்து,
“என் ஜானுவ அப்படி பார்ப்பேனு நான் நினைக்கவே இல்ல. அவளோட அந்த பார்வை, இன்னும் என்னால மறக்க முடியல” என்றான் கண்களை இறுக மூடி.
அவன் கரங்களில் தன் கரங்களால் அழுத்தம் கொடுத்த சிரஞ்சீவி, “சீக்கிரம் எல்லாம் சரியாகிடும் டா” என்றான்.
“சரி, நீங்க ரெண்டு பேரும் கிளம்புங்க. நான் கொஞ்சம் நேரம் இங்க இருந்துட்டு வரேன்” என்றவன், அந்த பூங்காவினுள் நடக்க துவங்க, நறுமுகையும் சிரஞ்சீவியும் அங்கிருந்து கிளம்பினர்.
மிதிலாவும் அப்பொழுது தான் அந்த பூங்காவினுள் வர, எதிரே வந்த தன் தங்கையைக் கண்டவள் “கிளம்பிட்டியா குண்டச்சி” என்றாள்.
“ம்…” என்றவள், தன் அக்காவை அணைத்துக் கொள்ள “என்ன டி ஆச்சு உனக்கு? பேய், பிசாசு ஏதும் பிடிச்சுருச்சா” என தங்கையின் செயலைக் கண்டு புன்னகைக்க,
“ஆமா… இந்த ராட்சசியால தான்” என அவள் தலையில் தன் தலையை வைத்து இடித்தவள், “சரி, எனக்கு நோட்ஸ் கொஞ்சம் எழுதணும். நீ கொஞ்சம் நேரம் இங்க இருந்துட்டு வா” என்றவள், தங்கள் ப்ளாட்டிற்கு செல்ல,
மிதிலா அந்த பூங்காவினுள் நடை பயின்றாள். அவளைக் கண்டு ஓடிவந்த, சில்வண்டு “உனக்கு வேலை இருக்குனு சொன்ன பொன்வண்டு. வேலை முடிஞ்சுதா?” என்றான்.
“ஓ…” என்றவள், அவனைத் தூக்கி கொள்ள, “இங்க வாயேன்” என அவன் ரகசியம் பேசுவது போல் அழைக்க,
“என்ன டா?” என்றவாறே அவன் முகத்தருகே குனிய, அவள் காதில் “நம்ம கூட ஒருத்தர் பிரண்ட் ஆகறேனு சொன்னாரு. நான் உன்னை கேட்டுட்டு தான் ஓ.கே சொல்லுவேனு சொல்லிட்டேன், ப்ரண்ட் ஆகிக்கலாமா?” என்றான். அவன் கண்கள், அவளின் சம்மதத்தை வேண்டி நின்றன.
“யாரு அந்த ப்ரண்ட், நம்ம கூட ப்ரண்ட்ஸ் ஆக நினைச்சது?” என்றவள் அங்கிருந்த சிமெண்ட் இருக்கையில் அவனை தன் மடியினில் அமர வைத்துக் கொண்டு தானும் அமர்ந்தாள் மிதிலா.
“அதோ, அவரு தான்” என சற்று தூரத்தில் நின்றவாறு அவளையே தன் கண்களால் பருகிய வண்ணம் இருந்த ரகுநந்தனை காண்பிக்க,
‘இன்னும் இந்த பழக்கம் போகலயா உனக்கு?’ என்ற பார்வையில் அவனைப் பார்த்தாள் மிதிலா.
அவனோ, ‘அன்று போல் இன்றும் உன் நண்பர்கள் உன் பேச்சை தான் கேட்கிறார்கள்’ என பதில் பார்வை பார்க்க,
சில்வண்டிடம், “உனக்கு அவர பிடிச்சுருக்கா டா சில்வண்டு?” என்றாள் மிதிலா.
“பாவம் பொன்வண்டு அவரு, நம்மளோட விளையாட அவருக்கும் ஆசை போல. அதான், நம்ம கூட ப்ரண்ட்ஸ் ஆகிக்கலாம்னு சொல்றாரு. நீ ஏன் இத கன்சிடர் பண்ணக் கூடாது?” என கேட்டவனைக் கண்டு புன்னகைத்தவள்,
“ஆனா, எனக்கு அவரு கூட ப்ரண்டா இருக்க பிடிக்கலயே!” என்றாள் மிதிலா முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு.
அவளை அப்படி பார்த்தவன், “சரி விடு பொன்வண்டு. உனக்கு பிடிக்காதத நானும் பண்ண மாட்டேன், அந்த அங்கிள் கிட்ட நான் பக்குவமா எடுத்துச் சொல்லி ஸாரி சொல்லிறேன்” என்க,
அவன் கன்னத்தில் முத்தமொன்றை வைத்தவள், “பக்குவமா எடுத்து சொல்ற அளவுக்கு நீங்க பெரிய மனுஷன் ஆகிட்டீங்களா சார்?” என்றாள் அவன் தலையோடு தன் தலையை உரசி.
“அப்போ இல்லையா பொன்வண்டு?” எனக் கேட்டவனைப் பார்த்து சிரிப்பு தான் வந்தது மிதிலாவிற்கு.
அவனைப் பார்க்கும் போதெல்லாம் அவளின் ராமன் தான் அவளுக்கு நினைவுக்கு வருவான்.
இவனுடன் தோழியான பின் தான் அவள் மனம் கொஞ்சம் இயல்புக்கு மாறி இருந்தது.
“உன்னை மாதிரி பிரிலியண்ட் இங்க யாருமே இல்ல, அவ்ளோ பெரிய ஆளு என் சில்வண்டு” என அவனை கொஞ்ச,
அவனோ “அப்போ, அந்த அங்கிள் கிட்ட நான் சொல்லி புரிய வைக்கவா?” என்றான் அந்த குட்டி ராம்.
“சரி, நீ என்ன சொல்றனு நானும் பார்க்கிறேன்” என்றவள், அவனை தன் மடியில் இருந்து இறக்கி விட,
அவனோ குடுகுடுவென ரகுநந்தனிடம் ஓடினான். அவன் ஓடி வருவதைக் கண்ட ரகுநந்தன், “வாங்க குட்டி ராம் சார்…” என்றவாறே அவனைத் தூக்க,
“சாரி ப்ரண்ட். என் பொன்வண்டுக்கு உங்களோட ப்ரண்ட்சிப் பிடிக்கலயாம், அதுக்காக நீங்க ஒன்னும் ஃபீல் பண்ண வேண்டாம். நான் பொன்வண்டுகிட்ட கொஞ்சம் கொஞ்சமா பேசி ஒத்துக்க வைக்கிறேன். அதுவரை வெய்ட் பண்ணுவியா ப்ரண்ட்?” எனக் கேட்பவனைக் கண்டு,
புன்னகைத்தவன் “உன் பொன்வண்டு சம்மதத்துக்காக எத்தனை வருஷம் வேணும்னாலும் காத்திருப்பேன்” என்றவன், அவன் கன்னத்தில் முத்தமொன்றை வைக்க “நீ கவலப்படாத ப்ரண்ட். பொன்வண்டு ரொம்ப நல்லவ, சீக்கிரம் உன்னை ப்ரண்டா ஏத்துக்குவா” என்றவன் அவனிடமிருந்து இறங்கி மிதிலாவை நோக்கி ஓடினான் சில்வண்டு.
“இன்னமும் நீயும் மாறல, உன் ப்ரண்ட்ஸ்ம் மாறல ஜானு” என ரகுநந்தனின் இதழ்கள் முணுமுணுத்தன.
தன்னிடம் ஓடி வந்த சில்வண்டிடம், “என்ன சார், அவர்கிட்ட பக்குவமா எடுத்து சொல்லிட்டீங்களா?” என்க,
“சொல்லிட்டேன் பொன்வண்டு. அவரும் புரிஞ்சுக்கிட்டாரு” என்க,
“சரி, போய் ஹோம் வொர்க் பண்ணு” என அவனை அனுப்பி வைத்தவள், அந்த பூங்காவினுள் நடக்கத் துவங்கினாள்.
அவளுக்கு இணையாக ரகுநந்தனும் நடை பயில, அவள் அவனைக் கண்டு கொள்ளாமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டே நடந்து செல்ல,
“ஜானு…” என்ற அழைப்பில் அவள் நடை சடென் பிரேக் போட்டது போல் நின்றது.
அவள் எதிரே நின்றவன், “ப்ளீஸ் ஜானு. நான் என்ன தப்பு பண்ணேனு தெரியல, ப்ளீஸ் எந்த தப்பு பண்ணி இருந்தாலும் என்னை மன்னிச்சுரு ஜானு” என்க,
“உங்கள நான் ஏன் சார் மன்னிக்கணும். போங்க, உங்களுக்கு தான் எப்பவும் உங்கள சுத்தி கோபியர் கூட்டம் நிக்குமே! இந்த ஜானுலாம் கண்ணுக்கு தெரிவனா?” என்றவள் அவனைக் கடந்து செல்ல,
அவனோ அதிர்ந்து நின்றிருந்தான். ‘அப்போ அன்னிக்கு நான் விளையாட்டா சொன்னத நீ கேட்டியா ஜானு? அதான் இவ்ளோ கோபமா?’ என மனம் நினைக்க,
“இந்த கிருஷ்ணனுக்கும் ராமனுக்கும் நடுவுல இப்படி மாட்டிக் கொண்டனே!” என நொந்து நூடுல்ஸ் ஆனான்.
Excellent writing