Loading

ஷாத்விக் சமுத்ரா வீட்டிற்கு செல்லும் வழியில் பவனிடமிருந்து அழைப்பு வந்தது.

அழைப்பை எடுத்ததுமே

“ஷாத்விக் நான் கேள்விபட்டதெல்லாம் உண்மையா?”என்று பரபரப்பாக கேட்க ஷாத்விக் 

“நீ என்ன கேள்விப்பட்ட?” என்று ஷாத்விக் கூலாக கேட்க

“ஊருல உனக்கும் சமுத்ராவுக்கும் மேரேஜ் முடிஞ்சிருச்சுனு சொன்னாங்க” என்று தயக்கத்துடன் கூற

“ஆமா உண்மை தான். இப்போ என்ன அதுக்கு?” என்று ஷாத்விக் பதில் சொல்ல

“என்ன பேசுற நீ? நான் அவளை விரும்புறேன்.” என்று பவன் சொல்ல

“சரி. அவ உன்னை விரும்புறாளா?” என்று கேட்க

“அது அது அது… அவ பதில்..”என்று பவன் இழுக்க

“ஐயா ராசா இப்போவாவது உண்மையை சொல்லு. நீ விரும்புறதை அவளுக்கு சொன்னியா? இல்லை இத்தன நாள் எனக்கு காதுல பூ சுத்துனியா?” என்று கேட்க ஷாத்விக் கேட்க

“அது அது நான்.” என்று இழுக்க

“டேய் நான் எதுவும் சொல்லமாட்டேன்டா‌. நடந்ததை சொல்லு” என்று கேட்க

“நான் இன்னும் ப்ரபோஸ் கூட பண்ணல” என்று சொன்னவனின் குரலில் சுருதி குறைந்திருந்தது.

“அப்போ இத்தனை நாளா எம்டி ப்லிம் ரோல்ல படம் ஓட்டியிருக்க? ஆனா ஒரு மனுஷன் நம்புறான்னா இஷ்டத்துக்கு அடிச்சிவிடுவீங்களாடா?” என்று ஷாத்விக் போனிலேயே பவனை வறுத்தெடுக்க

“அது அது.‌ நான்.. உன் தொந்தரவு தாங்கமுடியாமல் அப்படி பொய் சொன்னேன்.” என்று பவன் பழியை ஷாத்விக் மீதே திருப்ப

“ஆமாண்டா நான் தான் அவளை லவ் பண்ணுனு கால்ல விழுந்து கெஞ்சி உன்னை தொந்தரவு செஞ்சேன். ஏதாவது சொல்லிடபோறேன் பாத்துக்கோ.” என்று மீண்டும் வறுத்தெடுக்க தொடங்க

“நெஜமாவே உனக்கும் சமுத்ராவுக்கும் மேரேஜ் முடிஞ்சிடுச்சா?” என்று பவன் தன் கேள்விக்கான பதிலிலேயே மும்முரமாக இருக்க

“ஆமா…” என்று ஷாத்விக் பவனின் கேள்விக்கான பதிலை கூற மறுபுறம் இப்போது அமைதியே நிலவியது.

“என்னை மன்னிச்சிடு பவன். எல்லாமே திடீர்னு நடந்துடுச்சு. ஆனா இனி சமுத்ராவோட வாழ்க்கையில் நான் மட்டும் தான்‌.” என்றவன் வேறு ஏதும் பேசாது அழைப்பை துண்டித்துவிட்டான்.

அழைப்பை துண்டித்தவனுக்கு தான் சொன்னதன் அர்த்தம் பெரிதாக மூளைக்குள் பதியவில்லை. அப்படி பதிந்திருந்தால் தன்னுடைய மனநிலையை சரியாக அறிந்திருப்பான் ஷாத்விக்.

சமுத்ராவின் வீட்டிற்கு அவன் வந்தபோது அங்கு அனைவரும் அவனுக்காகவே காத்திருந்தனர்.

அமராவதி முகம் நிறைய மகிழ்ச்சியுடன் ஷாத்விக்கை வரவேற்க அவனுக்கு தான் குற்றவுணர்ச்சியாக இருந்தது.

ஒரு நாள் இரவில் பல சம்பவங்கள் நடந்தேறியிருக்க அதன் எதிர்வினையால் அவனும் சில விஷயங்களில் அசாதாரணமாக நடந்திருக்கிறான். இது அவனுக்கும் சமுத்ராவுக்குமிடையிலான பிரச்சினை என்றபோதிலும் கோபத்தில் தன் அத்தையின் உணர்வுகளை புறக்கணித்துவிட்டான் ஷாத்விக்.

இத்தனை நடந்தபின்பும் கூட அமராவதி எதை பற்றியும் நினையாது தன்னை இன்முகத்துடன் வரவேற்றதே அவனின் குற்றவுணர்ச்சிக்கு பிரதான காரணமாகயிருந்தது.

“என்ன ஷாத்விக் வாசல்லயே நிற்கிற? உள்ள வா.” என்று அழைத்ததோடு அவனை உள்ளே அழைத்து வந்து அமரவைத்தவர்

“இரு டீ போட்டு எடுத்துட்டு வரேன்.” என்று கூறி அமராவதி உள்ளே செல்லமுயல அவரை தடுத்தவன்

“அத்த சாப்பிட ஏதும் இருக்குமா?” என்று கேட்க அங்கிருந்த அமராவதி மற்றும் இந்திராணியும் அவனை அதிர்ச்சியுடன் பார்க்க

“இதோ எடுத்துட்டு வாரேன்.” என்று உள்ளே ஓடியவர் கையில் உணவு தட்டுடன் வர அதனை காண்பதற்காகவே தவமிருந்தவனை போல் தட்டை வாங்கிக்கொண்டு உணவை அள்ளி வாயில் திணிக்கத்தொடங்கினான்.

அவன் உண்ணும் வேகம் கண்டு பெரியவர்கள் குழப்பத்தோடு பார்க்க அவனுக்கு புரையேற ஏற்கனவே கையோடு எடுத்து வந்திருந்த தண்ணீர் போத்தலை திறந்து கொடுத்தார்‌ அமராவதி. அதை அருந்தியவன் மீண்டும் காணததை கண்டது போல் உண்ண ஆரம்பிக்க

“மெதுவா ஷாத்விக். மறுபடியும் அடைச்சிக்க போகுது.” என்று அமராவதி அறிவுறுத்த அதையெல்லாம் அவன் அந்த தட்டை முழுதாக காலி செய்யும் வரை கண்டுகொண்டதாக தெரியவில்லை.

சாப்பிட்டு முடிந்து தலைநிமிர்ந்தவனை மொத்தகுடும்பமும் குறுகுறுவென பார்க்க அப்போது தான் ஷாத்விக்கிற்கு சூழலே புரிந்தது.

“பசி மயக்கத்துல சுத்தி உள்ளவங்கள கவனிக்காம விட்டுட்டோமோ.” என்று மனதில் நினைக்க அவனின் வயிறோ சம்பந்தமில்லாமல் கத்தத்தொடங்கியது.

“என்ன வயிறு அன்வான்டட்டா கத்துது”என்று எண்ணியவனுக்கு வயிற்றினுள் திணிக்கப்பட்ட அனைத்தும் மேலெழும் உணர்வு வர விரைந்து பாத்ரூமை நோக்கி ஓடினான் ஷாத்விக்.

இப்போது இந்திராணியோ

“என்னடா ஆச்சு?” என்ற பயத்தோடு கேட்டபடியே அவன் பின்னாலேயே செல்ல அதற்குள் பாத்ரூமிற்குள் விரைந்தவன் வயிற்றிலிருந்த அனைத்தையும் வாய்வழியே வெளியேற்றிவிட்டான்.

அனைத்தையும் வெளியேற்றியதும் பாத்ரூமிலிருந்து வெளியே வந்தவனிடம்

“என்னடா ஆச்சு? காலையில இருந்து ஏதும் சாப்பிட்டியா இல்லையா?” என்று கவலையோடு கேட்க

“வர்ற அவசரத்துல ஏதும் சாப்பிட முடியல. ஹைவேல வந்ததால பஸ்ஸை எங்கேயும் இடையில நிறுத்தல”என்று ஷாத்விக் கூற

“ஒரு நாளைக்கு உன்னை கவனிச்சிக்க முடியலயா உன்னால? சாப்பிடாமல் வெறும் வயித்தோட இருந்ததுமில்லாம கேஸ் நெறஞ்ச வயித்தோடு அவ்வளவு சாப்பிட்டா இப்படி தான் வாய் வழியா வரும். நீ இரு நான் குடிக்க ஏதாவது எடுத்துட்டு வரேன்.” என்றவர் வெளியே வந்து ஷாத்விக் குடிப்பதற்கு பால் எடுத்துவந்தார்.

“இதை குடிச்சிட்டு கொஞ்ச நேரம் படுத்து எழும்பு. கொஞ்சம் நேரம் கழிச்சு சாப்பிடலாம்.” என்று கூறிவிட்டு இந்திராணி வெளியே வர அவரிடம் அமராவதி விசாரிக்கும் முன்பே பரசுராமர்

“என்னாச்சு அவனுக்கு?” என்று கேட்க

“காலையில இருந்து வயித்தை காயப்போட்டதால வந்த வென. குடிக்க பால் மட்டும் குடுத்திருக்கேன். கொஞ்சம் நேரம் கழிச்சு சாப்பாடு கொடுக்குறேன்.” என்று கூற

“எதுக்கும் ஒருக்கா டாக்டர்ட காட்டிடுவோமா அண்ணி?” என்று அமராவதி கவலையுடனேயே கேட்க

“இது வழமையாக வர்றது தான். இதனால தான் இவனை எங்கேயும் அனுப்ப எனக்கு பயம். வேலை வந்துட்டா வயித்தை காயப்போட்டுட்டு வருத்தத்தை இழுத்துக்கிறதே இவன் பொழப்பா போச்சு. இதுல பயப்பட எதுவும் இல்லை. நாளைக்கு காலையில சரியாகிருவான்.” என்று இந்திராணி சமாதானம் கூற அமராவதிக்கு தான் அந்த சமாதானம் கிடைக்கவில்லை.

“நீ போய் ஹாஸ்பிடல் கிளம்புறதுக்கான வேலையை பாரு. நைட்டு நீ தங்குறியா இல்லை நான் தங்கட்டுமா?” என்று இந்திராணி கேட்க

“நான் தங்குறேன் அண்ணி. ஷாத்விக்கிற்கு நீங்க பக்கத்துல இருந்தா தான் சௌகரியமாக இருக்கும்.” என்று அமராவதி கூற

“சரி நீ அவரு கூட ஹாஸ்பிடல் கிளம்பு. நான் நாளைக்கு காலையில போய் புள்ளைய பார்க்குறேன்.” என்று கூறியவர் இருவரையும் அனுப்பி வைத்ததும் அடுப்படிக்குள் நுழைய அப்போது தான் பயணக்களைப்பில் உறங்கிய மஹதியும் வினயாஸ்ரீயும் எழுந்து வந்தனர்.

மறுபுறம் மருத்துவமனை வந்து சேர்ந்தனர் அமராவதியும் பரசுராமரும்.

இருவரும் உள்ளே வர சமுத்ராவின் விழிகளோ அவர்களை கடந்து சென்று யாரையோ தேட அதை கண்டு கொண்ட அமராவதி

“யார தேடுற சமுத்ரா?” என்று கேட்க அவள் தன் தேடுதலை நிறுத்தாது

“இரண்டு பேரும் தனியாவா வந்தீங்க?” என்று பொதுவாக கேட்க அமராவதியோ அவளின் விழி தேடலுக்கான பதிலை மட்டும் கூறினார்.

“ஆமா. ஷாத்விக்கிற்கு கொஞ்சம் உடம்பு முடியல. அதான் இந்திரா அத்தை வீட்டுலயே தங்கிட்டாங்க” என்று கூற சமுத்ராவின் நாவோ எந்தவித தாமதமும் இன்றி அடுத்த கேள்வியை கேட்டது.

“ஏன் என்னாச்சு? நீங்க வரும் போது அழைச்சிட்டு வந்திருக்கலாமே. இங்க டாக்டர்கிட்ட காட்டியிருக்கலாமே.” என்று கரிசனத்துடன் கூற அமராவதி இந்திராணி கூறியதை மீண்டும் சமுத்ராவுக்கும் கூறினார்.

“ஆனா எதுக்கும் ஒரு தடவை டாக்டர்கிட்ட காமிக்கிறது நல்லது.” என்று சமுத்ரா சுருதி குறைந்த குரலில் கூற அதனை பெரியவர்கள் கவனித்த போதிலும் எதுவும் கூறவில்லை.

“இப்போ ரெஸ்ட் எடுக்கட்டும். நாளைக்கு வரும்போது அழைச்சிட்டு வாரேன்.” என்று பரசுராமர் உறுதிமொழி கொடுக்க அப்போது தான் அமைதியானாள் சமுத்ரா.

சற்று நேரம் பேசிவிட்டு மாலதியை அழைத்துக்கொண்டு பரசுராமர் கிளம்ப மெதுவாக சமுத்ராவிடம் பேச்சுகொடுக்கத்தொடங்கினர் அமராவதி.

“ஷாத்விக் ஹாஸ்பிடல் வந்தானா?” என்று கேட்க ஆமென்று தலையை மட்டும் ஆட்டினாள் சமுத்ரா.

“உனக்கு உடம்புக்கு முடியலனு சாப்பாட்டை கூட மறந்து வந்திருக்கான்.” என்று அமராவதி கூற சமுத்ராவிடம் எந்த எதிர்வினையும் இல்லை.

“என்ன தான் கோவம்னாலும் உனக்கு ஒன்னுன்னா பதறி ஓடி வந்திருக்கான்.” என்று அமராவதி ஏதோ சொல்ல முயற்சிக்க சமுத்ராவோ நேரடியாகவே அந்த பேச்சை கத்தரித்துவிட்டாள்.

“என் முடிவுல எந்த மாற்றமும் இல்லை. இந்த கல்யாணம் சட்டரீதியாகவும் சம்பிரதாய ரீதியாகவும் செல்லுபடியாகாது.” என்று சமுத்ரா கூற அமராவதிக்கு தான் ஆற்றாமையால் தாங்கமுடியவில்லை.

“என்ன பேசுற நீ? நீ இல்லைனா நடந்த எதுவும் இல்லைனு ஆகிடுமா? அவன் ஊர் முன்னாடி உனக்கு தாலி கட்டியிருக்கான். அதை உன்னால இல்லைனு சொல்லமுடியுமா?” என்ற அமராவதி நடந்தது தெரியாமல் பேச, வெற்று புன்னகையுடன்

“அது இருந்தா தானே சொல்லமுடியாது?” என்று சமுத்ரா கேட்க இப்போது அமராவதிக்கு உள்ளம் பதறியது.

“சமுத்ரா அவசரப்பட்டு ஏதாவது செய்திடாத.” என்று அவள் ஏற்கெனவே தாலியை கழற்றி கொடுத்தது தெரியாமல் அவள் அப்படி ஏதாவது செய்துவிடுவாளோ என்ற பயத்தில் அமராவதி பேச

“நான் சொன்ன முடிவில் எந்த மாற்றமும் இல்லை. அதுக்கு எது தடையாக இருந்தாலும் அதை தூக்கி வீசவும் தயங்கமாட்டேன்.” என்றுமட்டும் கூறிய சமுத்ரா வேறு எதுவும் கூறவில்லை.

சமுத்ராவின் பேச்சு ஏதேவொருவகையில் அமராவதியை உறுத்த மெதுவாக சமுத்ராவின் கழுத்தை ஆராய்ந்தார் அமராவதி.

அதை கவனித்த சமுத்ரா விரக்தி புன்னகையை சிந்தியபடியே

“நீங்க தேடுறதை உரியவர்கிட்டயே கொடுத்திட்டேன்.” என்று அவருக்கான பதிலை கூற இப்போது அதிர்ந்துதான் போனார் அமராவதி.

“என்ன காரியம் செஞ்சிருக்க சமுத்ரா? இது உன் மாமா அத்தைக்கு தெரிஞ்சா என்ன நெனைப்பாங்க? உனக்கு யாரை பத்தியுமே கவலையில்லையா? சே நீ புரிஞ்சி நடந்துப்பனு நெனச்சேன். இப்போ உன் அவசர முடிவால எல்லாத்தையும் கெடுத்துட்டு வந்து நிற்கிற. இந்த கல்யாணத்துல அதிகம் பாதிக்கப்பட்டவனே புரிஞ்சி நடந்துக்கிறான். ஆனா நீ…சே…” என்று அமராவதி பேசிக்கொண்டே போக சமுத்ரா இறுகிப்போய் அமர்ந்திருந்தாள்.

அவளின் உடல்நிலை அவளின் மனநிலையை இன்னும் மோசமாக்க

“ஆமா நான் யாரையும் புரிஞ்சிக்க மாட்டேன். எனக்கு யாரை பத்தியும் கவலையில்லை. நான் சுயநலம் புடிச்சு தான். மனசாட்சி இல்லாதவ தான். யாரு எக்கேடு கெட்டு போனாலும் எனக்கு கவலையில்லை. போதுமா?” என்றவள் மறுபுறம் திரும்பி படுத்துக்கொள்ள அவளின் கண்ணிலிருந்து கண்ணீர் சப்தமில்லாமல் ஊற்றெடுத்து வழிந்துக்கொண்டிருந்தது.

அவளின் மனமோ ஒரே நேரத்தில் ஏமாற்றம், விரக்தி, வேதனையென்று அனைத்தையும் குத்தகைக்கு வாங்கி கனத்துப்போயிருந்தது.

அறியா வயதில் எதிர்பார்ப்பில்லாமல் மலர்ந்த காதல் இன்று எதிர்பார்ப்புகளை ஏமாற்றங்களாக மாற்றி அவளை வதைத்துக்கொண்டிருந்தது. எத்தனையோ பேர் அவளை என்னென்னமோ சொல்லியிருந்தபோதிலும் அது எதுவும் அவளை இதுவரை இத்தனை தூரம் வேதனைப்படுத்தியதில்லை.

அவளின் காதல் கைகூடாதென்று தெரிந்தபோதிலும் தனக்கு சமாதானம் சொல்லிக்கொண்டாளேயொழிய வருந்தி தயங்கி நிற்க நினைக்கவில்லை. ஆனால் இப்போது அவள் விரும்பிய வாழ்க்கை விதியின் விளையாட்டால் அவளுக்கு கிடைத்த போதிலும் அதனை முழுதாக அனுபவிக்கமுடியாதபடி அதே விதியே சதிசெய்துவிட்டடது.

அவசரமாக நடந்த திருமணமென்ற போதிலும் இருவருக்குமே அதை ஏற்பதற்கு நேரம் தேவை என்பதை சமுத்ரா உணர்ந்தேயிருந்தாள். அவனை விரும்பிய அவளுக்கே நேரம் தேவைப்படும்போது ஷாத்விக்கின் மனநிலையை அறிந்த பின் முடிவெடுக்கலாமென்ற எண்ணத்தோட அவள் ஷாத்விக்கின் அறைக்குள் சென்றாள்.

இந்த சாந்தி முகூர்த்த சடங்கிற்கு கூட அவள் ஒப்புகொண்டதற்கான காரணம் ஷாத்விக்கோடு சில விஷயங்களை மனம் விட்டு பேசுவதற்கே.

ஆனால் இது எதனையும் புரிந்துகொள்ளாது ஷாத்விக் தன் மனத்தாங்கலை சுடுசொற்களாக கொட்டிட அது அவளுள் இருந்த காதலை பதம் பார்த்து விட்டது.

அதுவே இப்போதைய அவளின் செயல்களுக்கான காரணம். ஆனால் அதனையும் கூட யாரும் அவள் பக்கம் நின்று யோசிக்கவில்லை.

உணர்வுகள் எப்போதுமே சிக்கலானவை. மனதின் போக்கிற்கேற்ப மாறக்கூடிய உணர்வுகள் எத்தனை கட்டுப்பாடுடைய மக்களையும் சில நேரங்களில் நிதானமிழக்கச் செய்திடும். அதுவும் காதலுணர்வு அனைத்து உணர்வுகளையும் ஆட்டிப்படைக்கக்கூடிய ப்ரம்மாஸ்திரம். இந்த ப்ரம்மாஸ்திரத்தின் தாக்குதலில் தான் இப்போது சிக்குண்டு இருக்கிறாள் சமுத்ரா.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
8
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். காதலோடு சேர்த்து குடும்ப உறவுகளின் உணர்வுகளை உணர்த்திய தங்களின் எழுத்து நடையும், வசனமும் மிகவும் அசத்தல். இனிமையாக அதே நேரம் அழுத்தமாக அமைந்தது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.