Loading

16 – வலுசாறு இடையினில் 

 

இங்கே நங்கையின் வீட்டில் நிச்சயம் நடக்கும் செய்தி வர்மணை தாமதமாகவே எட்டியது. 

 

அதுவும் மேலூர் சம்பந்தம் என்று தெரிந்ததும் இது யாருடைய வேலையாக இருக்கும் என்று யோசித்தான். 

 

வேல்முருகன் வர்மனை காண வந்தான்.

 

“மாப்ள.. என் தங்கச்சிய கட்டுவீரு-ன்னு பாத்தா என்ன தான் பண்றீங்க?”, என நேரடியாக விஷயத்திற்கு வந்தான். 

 

“என் தங்கச்சி உங்களுக்கு ஒடனே சரின்னு சொல்லிட்டா.. உங்க தங்கச்சி அப்புடியா? ஒரு பார்வ கூட பாக்க மாட்டேங்கறா..”, வர்மன் அவனை அணைத்து அருகில் அமர கூறினான். 

 

“அதுலாம் என் தங்கச்சி மனசுல நீங்க தான் எடம் புடிக்கணும்..”

 

“துண்டு போட்டு எடம் புடிக்க அது பஸ்  சீட் இல்ல பங்காளி.. தமிழு புள்ளைய பத்தி நமக்கு தெரியாதா? எதையும் வெளிய சொல்லாம மனசுல மறுகிட்டு கெடக்கும்.. அந்த இரத்தினம் தான் முன்னாடி நிக்கறான் இந்த சம்பந்தத்துக்கு..”, என பேசியபடி வட்டி அங்கே வந்தான். 

 

“அவனுக்கு அவளோ தைரியம் இல்ல மாப்ள.. இதுக்கு பின்னாடி செங்கல்வராயன் தான் இருக்கணும்..”, என கூறி முடிக்கும் முன் இளவேணி அங்கே வந்து நின்றாள். 

 

“மாமா .. என் சிங்க மாமா .. எப்படி இருக்கீங்க?”, என தாவணியை சுழற்றியபடி வந்து நின்று கேட்டாள். 

 

“நான் எப்டி இருந்தா உனக்கு என்ன? எதுக்கு இங்க வந்த?”, என வர்மன் அவளிடம் கோபமாக கேட்டான். 

 

“உங்க காதலிக்கு அங்க நிச்சயம் நடக்குதே அதான் நீங்க எப்புடி இருக்கீங்கன்னு பாத்துட்டு போலாம்னு வந்தேன்”, என நக்கலாக கூறினாள். 

 

“இங்கரு புள்ள .. வயசுக்கு தக்கன பேசி நடந்துக்க இல்ல செவுழு அந்துரும்”, என வர்மன் சீறினான். 

 

“ஹாஹாஹா .. இவ்ளோ நடந்த அப்பறம் கூட என் சிங்க மாமனுக்கு இந்த வீராப்பு போகல .. என் வயசு பதினெட்டு.. எல்லாம் கல்யாணம் பண்ற வயசு தான்.. உங்களுக்கு தான் வயசு கூடிக்கிட்டே போகுது.. கால காலத்துல கல்யாணம் பண்ணி நாலு புள்ளைய பெத்தா தானே நம்ம ஒடம்புல தெம்பு இருக்கறப்போவே அதுங்களுக்கு ஒரு கல்யாணம் காட்சி பண்ணி பாக்க முடியும்”, என பெரிய மனுஷி போல பேசி கொண்டு இருந்தாள். 

 

“இந்தா புள்ள.. கொறைய பேசு”, என வேல்முருகனும்  அதட்டினான் அவளை. 

 

“வேல்முருகன் .. வினிதாவ காட்டிக்க போறவரு.. நீங்க எல்லாம் கூட்டுன்னு எனக்கும் என் அப்பாருக்கும் எப்பவோ தெரியும்… அடுத்து என்ன பண்ண போறீங்க என் சிங்க மாமா?”, என இளவேணி புன்னகைத்தபடி வர்மன் முகத்திற்கு நேராக வந்து நின்று கேட்டாள். 

 

“சந்நியாசம் போனாலும் நீங்க நினைக்கறது நடக்காது .. கெளம்பு”, என வீரப்பாக கூறிவிட்டு வேறுபக்கம் தள்ளி நின்றான். 

 

“பாக்கறேன் மாமா .. இன்னும் எத்தன நாளைக்கு இந்த வீராப்புன்னுட்டு.. நானும் இதே ஊர்காரி தான்.. “, என வந்து வர்மனை வெறுப்பேற்றிவிட்டு சென்றாள். 

 

“இந்த புள்ளைக்கு ஒரு பாயாசத்த போடணும் மாப்ள.. “, என வேல்முருகன் கூறினான். 

 

“அப்பனும் மகளும் ஊருக்கு போற்றுவாங்க மச்சான்.. வட்டி .. நான் சொன்னது என்ன ஆச்சி?”, என வர்மன் பேச்சை மாற்றினான். 

 

“ரெடி ஆகிட்டு இருக்கு மச்சான்.. சீக்கிரம் முடிஞ்சிடும்”

 

“சீக்கிரம்.. வெரசா செய்ய சொல்லு.. நமக்கு நேரம் கம்மியா இருக்கு”, என கூறிவிட்டு  மேலும் சில மணி நேரங்கள் பேசிவிட்டு அங்கிருந்து அனைவரும் சென்றனர். 

 

அவர்கள் அனைவரும் சென்ற பின் அங்கே இளவேணி வந்து ஒரு மரத்தில் இருந்த மைக் எடுத்து கொண்டு சென்றாள். 

 

“கிறுக்கு பசங்க .. இப்படி பொது எடத்துல  ஒக்காந்து திட்டம் போட்டா யாருக்கு தான் தெரியாது? இந்த ஆள நம்ப முடியாது. மொரடன் .. ஏதாவது செஞ்சி அந்த கல்யாணத்த நிறுத்தினாலும் நிறுத்துவான். அப்பா கிட்ட வெரசா அந்த கல்யாணத்த முடிக்க சொல்லணும். அங்க சம்பாதிச்ச காசு எல்லாம் இங்க வீணா போகுது.. இதுக்கு எல்லாம் வட்டி போட்டு அந்த கெழவி கிட்ட இருக்க சொத்த புடுங்கிடணும்.. எல்லாம் படிக்காத முண்டங்க ..”, என தனக்கு தானே முணுமுணுத்தபடி அங்கிருந்து சென்றாள். 

 

அங்கே நிச்சய வீட்டில் வினிதா அங்கு நடப்பதை ஒரு வித வெறுப்போடும், அவர்களை எல்லாம் மனித கூட்டமா நீங்கள் என்பது போல பார்த்து கொண்டு இருந்தாள். 

 

“இந்தா பொண்ணு.. கல்யாண பொண்ண இந்த பக்கம் ஒக்காரவை.. நீ அந்த பக்கம் போய் நில்லு “, என ஒரு உறவுக்கார பெண்மணி கூறினார். 

 

“ஏன் பொண்ணு கிட்ட இப்படியே பேசினா உங்க குடும்ப ரகசியம் எனக்கு தெரிஞ்சிடுமா பெரியம்மா? இப்படியே பேசுங்க.. பொண்ண எல்லாம் தானிய விடமுடியாது.. நம்ம வழக்கம் இதானே .. என்ன மாமா பேசாம பாத்துட்டு இருக்கீங்க .. சொல்லுங்க..”, என அருகில் இருந்த ஒரு மீசையை உசுப்பி விட்டாள் வினிதா. 

 

“ஆமா மா.. கழுத்துல தாலி ஏறினா மாப்ள வீட்ல விடற வரைக்கும், எங்க ஆளுங்க பொண்ணு கூட துணைக்கு இருக்கறது தான் எங்க ஊரு வழக்கம்.. நீங்க எதுவா இருந்தாலும் இப்படியே பேசுங்க. ராசாத்தி வினிதா அப்படியே பொண்ண ஒட்டி ஒக்காருத்தா.. “, என அவர் கூறிவிட்டு சமையல் வேலையை கவனிக்க சென்றுவிட்டார். 

 

“கழுத்துல போட்டு இருக்க நகை எல்லாம் நிஜமா தங்கம் தானா இல்ல பித்தலையா ? “, என ஒரு பெண் நங்கையின் நகைகளை கையில தொட்டு பார்த்து கொண்டு இருந்தார். 

 

“நீங்க போட்டு இருக்கறது தங்கம் இல்லயா ?”., வினிதா சிரித்தபடி கேட்டாள். 

 

“என் புருஷன் எனக்கு வாங்கி போட்டது .. அவரு வெளிநாட்டுல இருந்து வாங்கிட்டு வந்தாரு .. இங்க இருக்க தங்கத்த விட மச்சு அதிகம் ..”, என அவர் பெருமையாக பேசிக்கொண்டார். 

 

“இருக்கட்டும்.. ஆனா கொக்கி மாற்ற எடம் வெளுத்து போய் இருக்கு.. பாருங்க அந்த எடம் மட்டும் பித்தளைல குடுத்துட்டான் போல “, என வினிதா கூறியதும் அந்த பெண்மணி அங்கிருந்து எழுந்து சென்று விட்டார். 

 

“ஏன் காமாட்சி .. பொண்ணு கூட இருக்க வேற அமைதியான பொண்ணு யாரும் உனக்கு கிடைக்கலியா ? தொண பொண்ணு இவ்ளோ பேசினா கல்யாண பொண்ணு எவ்ளோ பேசும்-ன்னு ல நினைக்க தோணுது..”, என அறைக்குள் வந்த பெண்களில் மூத்தவர் பேசினார். 

 

“ரெண்டு பேரும் சின்ன வயசுல இருந்து ஒண்ணா தான் இருக்காங்க. அவளும் எங்க பொண்ணு மாதிரி தான். கொஞ்சம் துடுக்கு தனமா பேசுவா ஆனா மனசுல ஒண்ணும் இருக்காது. நீங்க ஒண்ணும் பெருசா எடுத்துக்காதீங்க அக்கா”, என நியாயமாக பேசிவிட்டு கணவன் அருகில் சென்று அடுத்து ஆகிய வேண்டிய காரியத்தை துவக்க கூறினார். 

 

“சரி நேரம் போயிக்கிட்டு இருக்கு.. தட்டு மாத்திக்கலாமா இரத்தினம்?”, என ஏகாம்பரம் பேச்சை தொடங்கினார். 

 

“இரு ஒரு முக்கியமான ஆளு வரணும். அவரு வரமா இந்த விசேஷம் சிறப்பா இருக்காது ஏகாம்பரம். மாப்ளயோட அப்பா உயிரோட இருந்தா எப்டியோ .. அப்டி தான் அவரு இப்போ இந்த குடும்பத்துக்கு.. “, என இரத்தினம் கூறிவிட்டு வாசலை பார்த்தபடி அமர்ந்து இருந்தார். 

 

“மாப்ள வரலியா மச்சான்?”, என கேட்டபடி காமாட்சியின் அண்ணன் வரதன் வந்து அருகில் அமர்ந்து கேட்டார். 

 

“எங்க குடும்ப வழக்கபடி மாப்ள நிச்சயம் பண்றப்போ வரக்கூடாது”, என ஒருவர் கூறினார். 

 

“அதென்னங்க .. பொண்ணு மாப்ள பாத்துக்க வேணாமா? பொண்ணு பாக்கர விசேஷமும் நடத்தல இதுக்கு மாப்ள வந்து இருந்தா நாங்களும் எங்க பொண்ண கட்டிக்க போற பையன பாப்போம் ல”, என வரதன் கேட்டார். 

 

“இன்னொரு நாள் பாத்துக்கலாம்.. இப்போ மாப்ள வரமுடியாது.. இன்னொரு நாள் கோவில் ல வச்சி பொண்ணும்  பையனும் பாத்துக்கட்டும்..”, இரத்தினம் கூறினார். 

 

செங்கல்வராயன் தனது வேஷ்டியை ஒரு பக்கம் பிடித்தபடி நங்கையின் வீட்டிற்குள் வந்தார். 

 

ஏகாம்பரம் அவரை பார்த்து விட்டு இரத்தினத்தை பார்க்க அவர் வேறு பக்கம் திரும்பியபடி செங்கல்வாராயனை வரவேற்று சபை நடுவே அமர வைத்தார். 

 

“எல்லாருக்கும் வணக்கம்… நான் தான் மாப்ள அப்பா ஸ்தானத்துல இருந்து இந்த கல்யாணம் நடத்த போறேன்.. ராஜதுரை என்னோட உயிர் நண்பன். அவன் பையன்  கல்யாணத்துல அவன் இடத்துல இருந்து நான் இந்த நல்ல காரியம் பண்றது எனக்கு சந்தோஷமா இருக்கு. பத்திரிக்கை படிச்சிட்டு தட்டு மாத்திக்கலாமா இரத்தினம்?”

 

“பொண்ணுக்கு எவ்ளோ நகை நாட்டு சீர் செனத்தி எல்லாம் செய்வாங்க ? எதுவுமே பேசாம தட்டு மாத்தினா என்ன அர்த்தம்?”, என தேவராயனின் முதல் அத்தை கேட்டார். 

 

“அதுலாம் என் பொண்ணுக்கு நான் நிறக்கவே செய்வேன் மா. எழுவது சவரன் போட்டு, கட்டிலு, பீரோ, சமையல் சாமானம் ல இருந்து எல்லாமே திருப்தியா செஞ்சிடறேன்”, என ஏகாம்பரம் பெருமையாக கூறினார். 

 

“எழுவது சவரனா? ஹாஹா.. என்ன இரத்தினம் எங்க வீட்ட வசதி பத்தி நீ இவங்க கிட்ட சொன்னியா இல்லயா?” , என அவர் சிரித்தபடி கேட்டார். 

 

“மரகதம்.. வசதி ல என்ன இருக்கு? பொண்ணு குணம் தாணு நமக்கு முக்கியம்.. நம்ம வீட்டுக்கு வந்த நம்மல அனுசரிச்சி நடந்துக்குமா இல்லயான்னு பாத்தா போதாதா?”, என  செங்கல்வராயன் கேட்டார். 

 

“வசதிக்கு தகுந்த வளர்ப்பு தான் அண்ணே இருக்கும். அதன் அத முக்கியமா கேக்கறேன். நம்ம குடும்பத்துல எவ்ளோ வசதி, தொழில் நடக்குது. வந்து பணத்த பாத்து பாதை மாறி போயிட்டா என்ன பண்றது? அதான் இவங்க வசதி பத்தி கேக்கறேன்.. ஒரு சூப்பர்மார்க்கெட் இருக்கு அவளோ தான்.. நம்ம அப்படியா? ஊருல பாதி நம்மலோடது .. இங்க வீடே ஆரம்பிக்கும் முன்ன முடிஞ்சி போச்சி.. நம்ம பையன் எப்டி மாமனார் வீட்ல வந்து இருப்பான்.. ?”

 

“மரகதம் .. பொண்ணு தங்கமான பொண்ணு..”, என இரத்தினம் ஆரம்பித்தார். 

 

“தங்கம் என்ன தங்கம்? நெறத்த பாருங்க .. நம்ம பையன் செக்க செவெல் ன்னு இருக்கான்.. உங்களுக்கு இங்க அப்டி என்ன பிடிச்சது ?” ,என தனது இளைய சகோதரனிடம் கேட்டார் மரகதம். 

 

“செங்கல்வராயன் சொன்ன பெரியண்ணன் எப்டி பதில் சொல்வாரோ அப்டி தான் நானும் இப்போ செஞ்சிட்டு இருக்கேன்.. எங்களுக்கு, தம்பிக்கு பொண்ண ரொம்ப பிடிச்சி இருக்கு.. இதுக்கு மேல யாரும் எதுவும் பேசக்கூடாது “, என மாப்பிள்ளையின் சிற்றப்பா தங்கதுரை கறாராக பேசிவிட்டு பத்திரிக்கை வாசிக்க கூறினார். 

 

இன்னும் நான்கு தினத்தில் திருமணம் என்று பத்திரிக்கை படித்த பின் தான் ஏகாம்பரம் கூட அறிந்தார். அவர் இரத்தினத்தை பார்க்க அவரும் செங்கல்வராயனை பார்த்துவிட்டு அமைதியாக இருக்கும்படி செய்கை செய்தார். 

 

காமாட்சி இதுவரை நடந்த பேச்சுக்களில் இருந்து பயந்து கொண்டு இருந்தார். மகள் செல்லும் வீடு எப்படி பட்டது என்று இப்போது தான் அவர் யோசிக்க ஆரம்பித்தார். 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
9
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்