Loading

இளங்கோவன் விஜயா தம்பதியர் தற்கொலை முயற்சி செய்ததாகச் சந்துருவிடமிருந்து தகவல் வர , ஜீவன் உடனேயே  தேவான்ஷி,  அனுகீர்த்திகா, இருவரையும் அழைத்துக் கொண்டு கிளம்பினான்.

இங்கே மணிமேகலையும், வேதாவும் ,  நர்த்தனாவைக் காண மருத்துவ மனைக்குச் சென்றனர்.

நர்த்தனா இன்னும் சுவற்றை வெறித்தபடி அமர்ந்திருக்க சண்முகம் உள்ளே வந்தான். 

“ப்ப்ச் நீ ஏன் இப்படி இருக்கத் தங்கச்சி.  இப்போ என்ன குழந்தை கலைஞ்சிடுச்சு , அவ்வளவு தானே !இதுக்குப் போய்க் கவலைப்பட்டுகிட்டு,  இன்னொன்னு பிறக்காமலா போய் விடும்…  நீ உடம்பை பார்த்துட்டு வா திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் பக்கத்துல ஒரு சாமியார் இருக்காராம்,  அவர் எது சொன்னாலும் அப்படியே அச்சுப் பிறழாமல் பலிக்குதாம்,  என் ஃப்ரெண்டு ஒருத்தன் போயிட்டு வந்தான்.  ஒரு தடவை தான் பார்த்துட்டு வந்திருப்பான் வந்ததும் அவனுக்கு ஒரு லட்சம் ரூபாய் லாட்டரி யில் பரிசு விழுந்திடுச்சு தெரியுமா நீ மட்டும் ஒரு அம்பதாயிரம் தேத்திட்டு வா,  அதை வச்சு அந்தச் சொத்துக்களுக்கு அதிபதியாக உன்னை நான் மாத்தி காட்டுறேன் ” என்று கண்கள் மின்ன கூறிய  சண்முகத்தைத் தலை தட்டாய் தட்டி கீழே தள்ளி விட்டு இருந்தான் வேதாந்த்.

“நீ தான் அவளுக்கு ஐடியா கொடுக்கறதா…!  ஆளையும் மொகரையும் பாரு,  இனிமே இந்த ஏரியாவில் உன்னை நான் பார்த்தேன் பொலி போட்டுடுவேன். போடா வெளியே” என மிரட்டல் விடுக்கவும் சண்முகம் எகிறிக் கொண்டு வந்தான்.

“நான் அவளுக்கு அண்ணன் என்னையே தள்ளி விடுறியா , நீ யாருடா அந்த மேனாமினுக்கிக்கு எடுப்பா…?” என்றது தான் தாமதம் சண்முகத்தின் மூக்கிலும் வாயிலும் ரத்தம் கொட்டோ கொட்டென்று கொட்டி தீர்த்தது. அடித்தது வேறு யாரும் அல்ல நம் கதிர் தான்.

“பிச்சிடுவேன் ராஸ்கல் .போடா வெளியே,  இனிமே உன்னை எங்கேயாவது பார்த்தேன் உரிச்சு உப்புக்கண்டம் போட்டுடுவேன் புரியுதா ?ஜாக்கிரதை ! போ கிளம்பு இடத்தைக் காலி பண்ணு” என்று கதிர் பல்லைக் கடித்ததும்,  கதிரின் முகத்தைப் பார்த்து பயந்தவனோ விட்டால் போதுமென்று ஓடி விட்டான் சண்முகம்.

நர்த்தனாவைப் பார்த்த கதிரோ,”  இதோப்பாருமா ! , நடந்தது நடந்து போச்சு . போன குழந்தை திரும்பி வரப் போறதில்லை. இனியாவது ஒழுங்கா வாழப் பழகு… இந்தச் சொத்துக்காகத் தானே இவ்வளவு பண்ணின,  அதை நான் எழுதி தந்திடுறேன் இனிமேலாவது என் தம்பியோடு ஒழுங்கா வாழு” என்றதும் ரமேஷ் இடைபுகுந்தான்.

“அண்ணா இதற்கு மேலும் இவளோடு வாழ்வதா அதற்கு வாய்ப்பே இல்லை இனி நானும் என் மகனும் மட்டும் தான் அவனுக்கு அம்மா இல்லை என்று நினைத்துக் கொள்கிறேன்” என்று வேதனையாகக் கூறியவனை மேகா முறைத்தார். நர்த்தனா கண்ணீர் விட்டபடி அமர்ந்திருந்தாள்.

“ரமேஷ் வீட்டுக்குப் போய்ப் பேசலாம் இது ஹாஸ்பிடல்” என்று பல்லைக் கடித்தபடி கூறி விட்டு நர்த்தனாவை உறங்கும்படி கூறி விட்டு ரமேஷை வெளியே அழைத்துச் சென்றார்.

“அண்ணி என் மனசை மாத்த ட்ரை பண்ணாதீங்க,  நான் அவளை ஏத்துக்க மாட்டேன்” என்று விடாப்பிடியாகக் கூறிய ரமேஷை ஏகத்திற்கும் முறைத்தார் மேகா.

“அவ இப்படிப் போய் ஏமாந்துட்டு வந்ததுக்கு அவ மட்டுமா காரணம்…??” மேகா கேட்க

ரமேஷ்,  “வேற யார் காரணம் அண்ணி முழுக்க முழுக்க அவ தான் பொறுப்பு…!! “என்றான்.

மேகா  “இல்லவே இல்லை ரமேஷ் அவளுடைய பங்கு பாதி இருக்குன்னா மீதி பாதி நீ கதிர் எல்லோரும் தான் காரணம் …!!” என்று ரமேஷின் தவறை சுட்டிக் காட்ட

ரமேஷோ கோபமாக “நாங்க என்ன அண்ணி செய்தோம்…??” என்று கேட்டான்.

“அவளைக் கவனிக்காம விட்டது தான் உங்க தவறு… வேதா அன்னைக்குப் பார்த்து அந்த ஐந்து லட்சத்தை வாங்கிட்டு வந்ததால் போச்சு. இப்பவும் சாக வேண்டியவளை சந்துரு காப்பாத்தி இருக்கார். இல்லை என்றால் நீ பேச கூட அவ உயிரோடிருந்திருக்க மாட்டா புரியுதா…!!” மேகா, ரமேஷிற்கு புரிய வைக்க முயன்றார்.

“அண்ணி அது அவளா இழுத்துட்டு வந்த ரோதனை. அதுக்கு யார் என்ன செய்ய முடியும்..?” சலித்துக் கொண்டான் ரமேஷ்.

“இல்ல ரமேஷ் உன்னால் தான் அவ இப்படி ஆகிட்டா… பேராசையை அவள் மனதில் வளர விட்டது உன்னுடைய சோம்பேறித்தனம் நீ வேலைக்குப் போய்க் குடும்பத்தைக் கவனிச்சிருந்தா, அதில் குடும்பம் நடத்த அவளைப் பழக்கி இருந்தா ,இப்படி ஆகி இருக்காது நீயும் வேலைக்குப் போகவில்லை இந்தச் சொகுசு வாழ்க்கை என்னைக்கா இருந்தாலும் பறி போகும் அதனால தான் அவ சண்முகத்தோட பேச்சைக் கேட்டு இந்த மாதிரி இறங்கி இருக்கா… இதோப்பாரு ரமேஷ் உன்னைக் குற்றம் சொல்லவோ இல்லை அவளை நல்லவளா காட்டவோ நான் இதைச் சொல்லலை… தப்பு செய்யாதவங்க யாரும் கிடையாது. எல்லோரும் ஏதோ ஒரு வகையில் தப்பு செய்துட்டு தான் இருக்கோம்… ஆனால் அவ செஞ்ச தவறுக்கு குழந்தையை இழந்ததே மிகப் பெரிய தண்டனை… இதற்கு மேலும் அவளைத் தண்டிக்காதே…!!  நர்த்தனா நல்ல மனைவியா, மருமகளா,  இல்லாம இருந்திருக்கலாம் ஆனால் அவ ஒரு நல்ல அம்மா.  இதுவரைக்கும் அஸ்வினை அவ பார்த்துக்காம இருந்ததே இல்லை அவனுக்கு ஒவ்வொரு விஷயத்தையும் பெஸ்டா கொடுத்திருக்கா… நல்ல பழக்க வழக்கங்களைச் சொல்லி கொடுத்திருக்கா … அம்மா இல்லாத பசங்க எவ்வளவு கஷ்டப்படுவாங்கனு தெரியுமா உனக்கு… அதுக்கு ஜீவன் தான் உதாரணம் . ஆரம்பத்தில் அவ்வளவு முரட்டுத்தனமாக நடந்துக்கிட்டான்,  அவனை மாத்தவே எனக்கு வருடங்கள் ஆச்சு… ” என்றார் மேகா பெருமூச்செறிந்தபடி.

“சரி அண்ணி நீங்க சொல்றது எல்லாம் நான் ஏத்துக்கிறேன்… ஆனால் மறுபடியும் வேற ஒரு  சாமியாரை நம்பி போக மாட்டாள் னு என்ன நிச்சயம்…?? இவ எங்கே போறா வர்றானு வேவு பார்க்கிறதா நம்ம வேலை” என்று அலுத்துக் கொண்டான் ரமேஷ்.

“அப்படியில்லை ரமேஷ் அவளுக்குப் பேசி புரிய வை. கண்டிப்பாகப் புரிந்து கொள்வாள் , இப்போது அவளுடைய இழப்பும் அதிகம் நிச்சயம் புரிந்து கொள்வாள் … அவளை உடனே மன்னிக்கச் சொல்லலை ஆனால் ஒதுக்கியும் வைக்காதே… மாற்றங்களை எதிர்பார்ப்போம் மாறவில்லை என்றால் விலகி கொள்ளலாம்” என ரமேஷை சமாதானம் செய்து ஒரு வழியாக அவனை நர்த்தனாவுடன் பேச வைத்து விட்டார் மணிமேகலை.

நர்த்தனாவிற்கு உணவை ஊட்டி விட மேகா செல்ல ,”அவளோ நான் கொலைகாரி தானே மணி… நானே கொன்னுட்டேன் , என் குழந்தையைக் கொன்னுட்டேன் நானே… நான் நல்லவ இல்ல நான் நல்ல அம்மா இல்ல…”கதறினாள்.

“ப்ப்ச் அதெல்லாம் எதுவும் கிடையாது நீ பாட்டுக்கு உளறாதே , இப்படியே அழுது உடம்பை கெடுத்துக்கிட்டா உன் பையன் அஸ்வின் இருக்கான் அவனை யார் பார்த்துப்பா … ??, எதையும் நினைக்காதே நல்லா ஓய்வெடு,  இன்னும் இரண்டு நாட்களில் வீட்டுக்குப் போகலாம்… ஒரு வாரம் கழித்துச் சொத்துக்களை அவன் பேரில் எழுதினா போதுமா …!!”என்று பேச்சினூடே ஒரு குட்டு வைத்தார் மேகா.

சட்டென நிமிர்ந்தவளோ,” வேணாம் எனக்கு எதுவும் வேண்டாம்… நான் கொலைகாரி.  கொலைகாரிக்கு சொத்து வேணாம் என் புருஷன் , பிள்ளை எல்லோருக்கும் நான் துரோகம் செஞ்சுட்டேன். நான் வாழ விரும்பலை “என்று நெஞ்சில் அடித்துக் கொண்டு அழ, மேகா அவள் உடல்நிலையையும் கணக்கில் கொள்ளாமல் அடித்து விட்டார்.

“வாயை மூடிட்டு இருக்க வேண்டும் ஏதாவது பேசுன அடி வெளுத்து விட்டுடுவேன்… சும்மா சும்மா அழுதுட்டு, சொல்லிட்டே இருக்கேன் இல்ல , அழுகையை நிறுத்து… முதல்ல அந்தச் சாமியார் கிட்ட எவ்வளவு பணம் கொடுத்த …? , அதுக்கு மேலே அவன் என்ன பூஜை பண்ணான், நீ என்ன செலவு செஞ்ச … னு வாக்குமூலமாக எழுதி ஜீவன் கிட்ட கொடு , அவன் மற்ற விபரங்களைப் பார்த்துப்பான்… கொலைகாரியாம்,  மூஞ்சியைப் பாரு… உன் பையன் இருக்கும் போது இப்படிப் பேசி வைக்காதே…!! ,  விபரம் தெரியாதவன் உன்னை அப்புறம் தவறா நினைச்சுடப் போறான் சாப்பிட்டு முடி நான் ஈவ்னிங் வரேன் “என மிரட்டல் விடுத்து விட்டு கிளம்பினார் மேகா.

“ரமேஷ் …!!”என்று சத்தமிட , அவனும் உள்ளே வந்தான்.

“பார்த்துக்க , அவளை எதுவும் சொல்ல வேண்டாம் சரியா..!!” என்று அவனையும் மிரட்டி விட்டு தான் கிளம்பினர் கதிரும்,  மேகாவும் . ரமேஷின் தலை தன்னிச்சையாக சரி என்று அசைந்தது.

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

இங்கே இளங்கோவன் , விஜயா இருவரும் மருத்துவமனையில் இருக்கத் தேவான்ஷி , அனுகீர்த்திகா இருவரையும் அழைத்து வந்தான் ஜீவன்.

“தேவ் , அனு அந்த ரூம் …”என்று ஒரு அறையைக் காட்டிட,  தேவான்ஷி இறுக்கமாக நின்றாள். அனுவின் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது.

“அனு ரிலாக்ஸ் அவங்க பொழைச்சுட்டாங்க “ஜீவன் சமாதானம் செய்ய,  தேவாவோ,” அது எங்களுக்குத் தேவை இல்லாதது ஜீவ்.  இப்போ நான் வந்தது ஒரே ஒரு கேள்வி கேட்க தான்…” என்றவள் விறுவிறுவென உள்ளே சென்றாள்.

இளங்கோவன் தேவான்ஷியைக் கண்டதும் படபடவென்று எழுந்து “தங்கம் “என்றழைத்தார்.

கையை நீட்டி வேண்டாம் என்று மறுத்தவளோ , “உங்களைப் பார்த்து நலம் விசாரித்துப் போக வரவில்லை… என் கேள்விக்குப் பதில் சொல்லுங்க…? ஏன் எங்களைக் கொல்ல நினைச்சீங்க பணத்துக்காகவா …??”

“இல்லை நாங்க அது வந்து…” தடுமாறிப் போனார்  இளங்கோவன்.

“ஆம்பளை பிள்ளை வேணும் இல்லையா…!!,  நீங்க வசதியா வாழ நாங்க தடை. அதுக்காகக் கொல்ல நினைச்சீங்க இல்லை…” அமைதியாகக் கேட்டாலும் அதில் அத்தனை அழுத்தம் நிறைந்திருந்தது.

“உங்களை மாதிரி ஆட்கள் இருப்பதால் தான் மூடநம்பிக்கை னு ஒரு விஷயம் இன்னமும் நாட்டில் இருக்கு. அதுவும் படிச்ச நீங்களே இப்படி ஒரு மடத்தனமான நம்பிக்கையை வளர்த்திருப்பீங்கனு நினைக்கவே இல்லை… நீங்களா உங்க இஷ்டத்திற்குப் பெத்துப்பீங்க… அந்தப் பிறப்பில் கூட உங்க பங்கு தானே அதிகம்… பிறக்கப் போறது ஆணா பெண்ணா என்று நிர்ணயம் செய்வது கூட ஒரு ஆணோட ஜீன்கள் தான்.  பெண்ணுக்கு அந்த உரிமை கூட இல்லை.. அப்படி இருக்கும் போது பெண்ணா பிறந்தது எங்கள் தவறா… !! சரி கொல்ல நினைச்சீங்க அதை நாங்க பிறந்தப்பவே செய்திருக்கலாம்… உயிருக்குயிரா வளர்த்து ரத்தமும் சதையும் சேர்ந்த ஒரு உணர்வுள்ள ஜீவனா வளர்ந்த பிறகு,  கொல்ல வேண்டிய அவசியம் வந்திடுச்சு இல்ல,  பிறந்த போது கொன்று இருந்தா கேள்வி கேட்க நான் இங்கே நின்றுக்க மாட்டேன் இப்போ உணர்வுகளுடன் இருக்கேனே…!!  அதான் கேட்க வாய் வந்திடுச்சு… என்றாவது ஒரு நாளில் உங்களை எதிர்த்து பேசி இருப்போமா…!!  இல்லை உங்களுக்கு எதிராகத் தான் நடந்திருப்போமா…?, நீங்க ரெண்டு பேரும் செத்துப் போங்கனு ஒரு வார்த்தை சொல்லி இருந்தா அந்த நிமிடம் அப்பா , அம்மா கேட்டாங்கனு சந்தோஷமா செத்துப் போயிருப்போம் . ஆனால் நீங்க தேர்ந்தெடுத்த வழி இருக்கே…!! ,  அவன் எங்களைக் கடத்தி விபச்சார விடுதியில் விற்க உங்களை நரபலி ன்ற பேர்ல பயன்படுத்திக்கிட்டான். என்னைக் காப்பாற்ற இரண்டு நல்ல உள்ளங்கள் இருந்தது. ஆனால் எல்லாப் பொண்ணுங்களுக்கும் அந்த அதிர்ஷ்டம் கிடைக்கவில்லை. விபச்சார விடுதியில் போய்ச் சிக்கிட்டாங்க … இறப்பு கூட ஒரு நிமிட வலி தான்.  இறந்து போன பிறகு எதுவும் தெரியாது ஆனால் விலைமாதுவின் வலி ஒவ்வொரு நொடிப்பொழுதிலும் இறப்பு வரும் மனசு ரணமாகும். அந்த வலியை தர நினைச்சுட்டீங்களே… “என்று கண்ணீர் சிந்தியவள்,  கண்களை அழுந்த துடைத்துக் கொண்டு,” என் கிட்ட மன்னிப்பு கேட்க வரச் சொல்லி இருந்தால் ஐம் சாரி யாரென்று தெரியாத நபர்களை மன்னிக்கும் அளவிற்கு நான் பெரிய ஆள் இல்லை. ஏதோ ஒரு இடத்தில் அநாதையாக வளர்ந்தோம் என்று நினைத்துக் கொள்கிறோம் இனி ஒரு முறை உங்களை என் வாழ்க்கையில் பார்க்கவே கூடாது…” என்று அங்கிருந்து நகர்ந்தாள்.

“தேவா… எங்களுக்குத் தண்டனை கொடுத்திடுமா…!!” என்று கதறிய விஜயாவை ஏளனப் புன்னகையுடன் நோக்கியவள்., ” அந்த முத்தரசனைக் கூட ஆவியா நடிச்சு ஏமாத்தி பயமுறுத்தி அவன் வாழ்க்கையைப் பயந்தே வாழ வச்சேன்.  அவனுக்குக் கொடூரமான இறப்பை கொடுக்க நினைச்சேன் . ஆனால் உங்களைப் பார்க்க கூட நான் விரும்பவில்லை ஏன் தெரியுமா… ஏன்னா உங்களைப் பயம் காட்டுவதற்காகக் கூடப் பார்க்க விரும்பவில்லை . அவன் முன்ன பின்ன தெரியாத ஒரு மனுசன். நீங்க இனிமேல் முன்பின் தெரியாத நபர்களா மாறிட்டீங்க எங்க லைஃப் ல… பிறகு உங்களுக்குத் தண்டனை கொடுக்க நாங்க யார்…?? மன்னிக்க தான் நாங்க யார்…?, குட்பாய்” என்று அங்கிருந்து திரும்பியும் பாராமல் சென்று விட்டாள் தேவான்ஷி.

இளங்கோவன், விஜயா இருவரும் தளர்ந்து போய்க் கிடந்தனர்.

ஜீவன் உள்ளே வந்தவன்.,” இனி ஒரு முறை தற்கொலைக்கு முயற்சி செய்யாதீங்க செய்தால் “என்று நிறுத்தினான்.

“தம்பி நீங்களே எங்களை ஏதாவது செய்துடுங்க…!!”

“உங்களுக்குத் தண்டனை தர சட்டம் இருக்கு.  கண்டிப்பாக அதன் கடமையைச் செய்யும் ஆனால் தண்டனையிலிருந்து தப்பிக்கிறேன் பேர் வழியாக மீண்டும் தற்கொலை முயற்சி செய்தால் மீண்டும் மீண்டும் காப்பாத்தி வாழ வைப்பேன் . நீங்க,  அந்த வனஜா எல்லோரும் வாழணும்,  பந்த பாசம் எதுவுமில்லாமல் கடைசிக் காலத்தில் உங்களைப் பாதுகாக்க கூட ஆள் இல்லாமல் அநாதையாக வாழ வேண்டும்… பிள்ளைகளைப் பெற்று வளர்த்துத் தண்டனை கொடுத்த நீங்க வாழ்ந்து வாழும் போதே எல்லாத் துன்பத்தையும் அனுபவித்து வாழ வேண்டும்… இந்தச் சாவு எப்போ வரும் னு காத்திருந்து நொந்து சாகணும்…!! ” என்றான் கோபத்துடன்.

சற்று நிதானித்து கொண்டவன்,”  ஏன் நீங்க பெற்ற மகள்களையே நரபலி கொடுக்க நினைச்சீங்க…  ?”என்று கேட்டான்.

“ஆண் வாரிசுக்காக தான் தம்பி. அந்த சாமியார்  நரபலி கொடுத்தப் பிறகு என் மகள்கள் மறுபடியும் உயிர் பெற்று வருவாங்கனு சொன்னார் , நாற்பத்து எட்டு நாட்கள் கழித்து யாகம் வளர்த்து,  உயிரோடு வரவழைக்கிறதாக உறுதி கொடுத்தார்.  அது மட்டுமில்லாமல் எங்களுக்கு அப்போது தான் ஆண் வாரிசு வருமென்றும்  , ஆண் குழந்தை பிறக்க தடையாக இத்தனை வருடங்கள் தேவான்ஷியின் கிரக பலன்கள் தான் இருக்கிறதாக கூறினார்.  அவளை ஒரு முறை நரபலி கொடுத்து விட்டு உயிர் பெற வைத்தால் கிரகாச்சாரம் மாறி  மறுபடியும் புதிய பெண்ணாக பிறப்பாள்  அப்படி பிறக்கும் போது உங்கள் வாரிசை நீங்க சுமப்பீங்கனு சொன்னார்.  அவளை நரபலி கொடுத்தப் பிறகு  எங்களுக்கு கோடி கோடியாக பணம் வரும் என்று சொன்னார் . அது போலவே எங்களுக்கு  நூறு கோடி தர ஒப்புக் கொண்டார் அந்த பரந்தாமன்.  வெறும் பேங்க் மேனேஜருக்கு நூறு கோடி என்பது கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத பணம். அதனால சம்மதிச்சேன்.  எப்படியும் என் மகள் திரும்பி வந்திடுவான்னு நம்பிக்கை இருந்தது.  பழைய காலத்தில் நரபலி கொடுத்திருக்காங்க அது மூலம் பல செல்வங்களை அவங்க அடைஞ்சிருக்காங்கனு ஆதாரம் காட்டினார் சாமியார் அதான் நம்பி நரபலிக்கு ஏற்பாடு செய்தோம். ” என்றார் இளங்கோவன்.

“நீங்க படிச்சவங்க தானே…!!,  அந்த முட்டாள் ஏமாத்துறான் னு கூடவா தெரியலை.  இறந்து போன ஒரு உயிரை மறுபடியும் வரவழைக்க முடியாது.  அப்படி இறந்தவங்க எல்லாம் மீண்டும் இங்கே வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டு இருந்தால் இந்த பூமி தாங்கி இருக்குமா…!!, எவ்வளவு பெரிய மூடத்தனம் உங்களுடைய எண்ணங்கள் என்று நீங்களே யோசித்துப் பாருங்க  அவன் உங்க கிட்ட பொண்ணை நரபலி கொடுக்கிறதாக சொல்லிட்டு  அவளை மும்பையில் விற்க ஏற்பாடு செய்து இருந்தான்…  “என்றதும் இருவரின் முகமும் திகிலடித்தாற் போல மாறியது.

 

“தம்பி நாங்கள் இப்படி இருக்கும் என்று நினைக்கவில்லை” என்றார் விஜயா  தழுதழுத்த குரலில்.

“சரி நரபலி கொடுக்கப் போறாங்க பொண்ணை எதற்காக கல்யாணம் பேசி முடிச்சீங்க  …?”அடுத்த கேள்வியைக் கேட்டான் ஜீவன்.

“அது வந்து  வனஜா தான் கேட்கும்படி சொன்னாங்க.  திருமணம் என்று சொல்லும் போது தேவான்ஷி சரினு சொல்வா  திருமண அலங்காரத்தில் தான் நரபலி கொடுக்க அழைச்சுட்டு வர வேண்டும் “என்று சாமியார் சொன்னார். என்றார்  இளங்கோவன்.

“அந்த அம்மா சொன்னா நீங்க ஏன் கேட்க வேண்டும் ?அதுவுமில்லாமல் அவங்களை ஏத்துக்கிட்டா தான் கல்யாணம் னு சொல்லி இருக்கீங்க இதற்கு என்ன காரணம் ?”என்று பல்லைக் கடித்துக் கொண்டு கேட்டான்.

“அவங்க பக்தி மார்க்கத்தில் போய் விட்டதாகவும், அதனால உங்கப்பா அவங்களை ஒதுக்கி வச்சுட்டதாகவும் சொன்னாங்க மறுபடியும் குடும்பத்துடன் சேர ஆசை இருப்பதாகவும் இந்த திருமணம் மூலமாக குடும்பத்துடன் இணையப் போவதாகவும் சொல்லி எங்களை உதவி செய்ய கேட்டாங்க நாங்களும் ஒப்புக் கொண்டதால தான் பரந்தாமனிடம் இருந்து பணத்தை வாங்கித் தர உதவி செய்ய ஒத்துக்கிட்டாங்க” என்றார் விஜயா.

தன் கைபேசியில் அனைத்தையும் பதிவு செய்தவன்,  அவர்களிடம் எதுவும் கூறாமலேயே கிளம்பி வெளியே வந்தான்.

பின்னர்,  அவர்களுக்கு காவலாக,  மேலும் இரண்டு காவலர்களைப் பணிக்கு வைத்து விட்டுச் சென்றான் ஜீவன் .

அக்கா தங்கை இருவரும் அங்கேயே அழுது தீர்த்து விட்டு வெளியே வந்தனர்.

“ஜீவா நாங்க தப்பு செஞ்சுட்டோமா ? அவங்களை மன்னிச்சு ஏத்துக்க முடியலை ஜீவா… எங்களால் முடியாது “பிதற்றினாள் தேவா.

“தேவ் விட்டுடு… உங்களைப் பொறுத்தவரை அவங்க உங்களை நரபலி கொடுக்க நினைச்சப்பவே இறந்து போயிட்டாங்க. இதற்கு மேலும் அதைப் பற்றிப் பேசாதே…!!” என்றவன் வீட்டில் அவர்களை விட்டு விட்டு மீண்டும் முத்தரசனை விசாரிக்கக் கிளம்பினான்.

வேதாந்த் அனுவின் வரவிற்காகவே காத்திருந்தது போல அவளை அணைத்துக் கொண்டான்.

தேவான்ஷி எந்த உணர்வையும் வெளிக்காட்டாமல் அறைக்குள் முடங்கிக் கொண்டாள்.

வீட்டில் இறுக்கமான சூழல் குடி கொள்ள,  மணிமேகலை வந்து அதட்டி உருட்டி மிரட்டி அனைவரையும் சாப்பிட வைத்தார். 

விழியும் தன் கணவனோடு வந்து விட்டாள்.

“அத்தை அண்ணன் நிஜமாகவே சாமியாரை நம்பலையா …?, அவன் போலீஸா…!! நிஜமாவா…!!” ஆச்சரியம் தாளாமல் கேட்ட விழியை அணைத்தபடி,” நிஜமா தான் விழி .உன் அண்ணனுக்கு பைத்தியம் தான் பிடிச்சிருச்சு போல னு நினைச்சேன்…  ஆனால் எவ்வளவு பெரிய விஷயம் செய்து இருக்கான் பாரு” என்று சிலாகித்தார் மணிமேகலை.

அதற்குள் ஜீவன் வீட்டிற்கு வந்திருந்தான்.

விழி ஓடிச் சென்று அவனை அணைத்துக் கொண்டு,” நிஜமாகவே நீ அந்த சாமியார் பேச்சை கேட்டு ஏமாறுறீயோ னு நினைச்சேன் அண்ணா ஆனால் நல்ல வேளை எதுவும் ஆகவில்லை” என்றவள் சட்டென அவனை அறைந்து விட்டாள்.

எல்லோரும் அதிர்ச்சியாக விழியைப் பார்க்க ,அவளோ கோபத்துடன்,” நீ சாமியாரை கைது செய்ய , அப்பாவுடைய மரணம் தான் உனக்கு கிடைச்சதா…? இது தான் அவர் பாசத்திற்கு நீ தரும் வெகுமதியா …?”என்று கேட்டாள்.

ஜீவன் கண் கலங்கியவன்,” சாரி மா ஆனால் எனக்கு வேறு வழி தெரியவில்லை ” என்றபடி அங்கிருந்து போய் விட்டான்.

…. தொடரும்

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
9
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்