Loading

இளமாறன் வெளியில் சென்றதை செய்வதறியாது பார்த்திருந்த சித்ராக்ஷியின் எண்ணத்தை செல்வியின் குரல் கலைத்தது.

“என்னால உன் வாழ்க்கையில இவ்ளோ கஷ்டம்ல சித்ராம்மா…” என மனம் வருந்தி கண்கள் கலங்கி கேட்ட செல்வியை முறைத்தவள், “என்னக்கா பேசுற…? உன் சந்தோசம் என் சந்தோசம்ன்னு தனி தனியா இருக்கா. உனக்கு ஒரு அவமானம்ன்னா அது எனக்கும் தான…? என்னை பொறுத்தவரை நான் அன்னைக்கு எடுத்த முடிவு தான் சரி. காதல்ன்ற பேர்ல என்னால உன் வாழ்க்கை தான் கெட இருந்துச்சு…” என்றவளை மீண்டும் அணைத்து கொண்டவள் “முட்டாள்தனமா பேசாத. என்னால உன் வாழ்க்கை தான்…” என செல்வி பேச வரும் முன், “ஐயோ சரி…! உங்க ரெண்டு பேரால எங்க வாழ்க்கை தான் கெட்டுச்சு… போதுமா?” என்றான் முகுந்த் கடுப்பாகி.

சித்ராக்ஷியோ புரியாமல் “என்ன ஆச்சு மாமா?” எனப்பார்த்தாள் எதுவும் பிரச்சனையோ என்று பதறி. அதில் முகுந்த் தான், “பின்ன, ஒரு கல்யாணத்தை ஓராயிரம் தடவை நிறுத்தி வேடிக்கை பார்த்த உன் அக்காவை நானும் உன்னை என் தம்பியும் கல்யாணம் பண்ணா அப்போ அப்போ ஸ்பீட் பிரேக்கர்ல ஏறி இறங்குற மாதிரில படபடன்னு இருக்குல… என்றான் நக்கலாக.

அதில், சித்ராக்ஷி பக்கென சிரித்து விட, செல்வி தான் முகம் சுருங்கினாள். முகுந்த் அதனை கவனித்தவாறே, “சரி… அதான் உன் தங்கச்சி ஒரு தியாக செம்மல்ன்னு தெரிஞ்சுருச்சுல. நம்ம வீட்டுக்கு போயிட்டு மறுவீட்டுக்கு ரெடி ஆகி திரும்ப வரலாம் வா…!” என செல்வியை அழைத்து கொண்டு போனான்.

செல்வியும் “நான் கோவிலுக்கு போயிட்டு வரேன்னு சொல்லிட்டு வந்தேன் சித்ரா. திடீர்னு மாறன் போன் பண்ணவும் இங்க வந்துட்டோம். நான் போயிட்டு வரேன்…” என்றவள், அவளின் சித்தி சித்தப்பாவிடம் மட்டும் சொல்லி விட்டு அவளின் தாயை திரும்பி கூட பாராமல் கிளம்பி விட்டாள்.

நடராஜும், பார்வதியும் தான் “ஏன்டா எங்ககிட்ட இதை சொல்லல. இதுனால உனக்கு எவ்ளோ மனவருத்தம்?” என்று வெகுவாய் காயப்பட்டு போனார்கள். செல்வியின் தந்தை ராஜேந்திரன் தான் ஏற்கனவே முந்தைய நாள் இளமாறன் பேசியதில் நொந்து இருக்க, இப்பொழுது இதனை அறிந்து மீண்டும் நொறுங்கினார்.

சித்ராவின் தலையை வருடி விட்டு, “என்ன மன்னுச்சுடுமா…!” என ராஜேந்திரன் கூறும் முன், “பெரியப்பா… என்ன இது? செல்வி அக்காகிட்ட கோச்சுக்கிட்டு இப்படி தான் நீங்க மன்னிப்பு கேட்பீங்களா? ப்ளீஸ் பெரியப்பா என்னை தர்ம சங்கடத்துக்கு ஆளாக்காதீங்க…” என்றாள் விழி கலங்கி.

“இல்லம்மா… எனக்கு தான் தர்ம சங்கடம். அதுவும் உன்னை அவ்ளோ பேசிட்டு… உன்னை அவ்ளோ கஷ்டப்படுத்தி… ஆனால் உன் கல்யாணத்தை நிறுத்தணும்னு நான் நினைக்கவே இல்ல சித்ரா. நேத்து மாறன் தம்பி பேசுனதை கேட்டு நெஞ்சுலாம் பதறிருச்சு” என்றார் நீலாவை கடுமையாக முறைத்தபடி.

சித்ராக்ஷி தான், ‘ஆமா இளா கூட உன் பெரியம்மா எதுவும் சொல்லிருக்க வாய்ப்பில்லைன்னு சொன்னாரே என்ன ஆகி இருக்கும்…?’ என குழம்பியவள், “நேத்து என்ன ஆச்சு பெரியப்பா?” எனக் கேட்டாள் புரியாமல்.

அவரும் திருமணம் முடிந்து மறுவீட்டுக்கு செல்லும் போது நடந்த விஷத்தை கூறினார்.

மிகவும் தலைவலி என்று செல்வியிடம் கூறிய சித்ராக்ஷி, “எப்படியும் நாளைக்கு மறுவீட்டுக்கு வருவீல. அப்போ பார்ப்போம். நான் வீட்டுக்கு போறேன்” என்று சொல்லி விட்டு அவள் பதிலை எதிர்பாராமல் வீட்டிற்கு சென்றிருந்தாள்.

அந்த இடைவெளியை பயன்படுத்தி இளமாறன் நீலாவை பார்த்தபடி, அவன் தந்தை செந்திலிடம் “ப்பா, அதான் முகுந்த் கல்யாணம் முடிஞ்சுதே, இப்போ எங்க கல்யாண தேதியையும் குறிச்சுடுங்க” என்று கூறிட, அவர் அவனை முறைக்க தொடங்கினார். 

வித்யா தான், “இப்போவே எப்படி மாறா…?” என்று முணுமுணுக்க, “இல்லமா, அப்பறம் உன் சம்பந்தி மறுபடியும் ஏதாவது குட்டைய குழப்புவாங்க. அப்பறம் அவள் மறுபடியும் கல்யாணம் வேணாம்னு மலை ஏறுவா…? அப்பறமா நான் முதல்ல இருந்து அவளை சரி பண்ணனும்? இது தேவையா?” என்றான் வெகு நக்கலுடன்.

அதில் நீலாவிற்கு தான் படபடத்து விட்டது. சாரதாவோ “என்ன சொல்ற மாறா? நீ எந்த சம்பந்தியை பத்தி பேசுற?” என ஒன்றும் தெரியாதது போல் வினவ, அவன் தான், “அட, இப்போ உங்களுக்கு எத்தனை சம்பந்தி இருக்காங்க?” என்றான் நீலாவை ஆழமாக பார்த்து.

நடராஜனோ “என்ன மாப்பிள்ளை சொல்றீங்க எனக்கு புரியல…” என குழப்பமாக கேட்டதில், செந்திலும் “டேய், இப்போ என்ன தாண்டா சொல்ல வர்ற?” என கடுப்பானார்.

“நான் என்ன சொல்ல…? அவங்க கிட்டயே கேளுங்க என்ன பண்ணுனாங்கன்னு…!” என்று கோபத்துடன் அவர் செய்த செயலை சொல்லிக்காட்டியவன், நீலாவை வெறியாய் முறைத்து, “அது எப்படி எப்படி? அவளை பத்தி என்கிட்டயே தப்பா சொல்றீங்களா? நீங்க சொல்லிட்டா நான் உடனே நம்பிடுவேனா? இல்ல தெரியாம தான் கேக்குறேன் இந்த கல்யாணத்தை பண்ண கூடாதுன்னு அவளுக்கு உத்தரவு போடுற அதிகாரத்தை உங்களுக்கு யாரு குடுத்தது?” என சினத்துடன் சீறினான்.

நீலாவோ, “இந்த பாருங்க தம்பி. நான் அவளை உங்களை கல்யாணம் பண்ணிக்க கூடாதுனு சொன்னது உண்மை தான். என் பொண்ணு கல்யாணம் அவளால தான் நின்னுச்சு. அதோட அவளும் ஒன்னும் ஒழுக்கமானவள் கிடையாது… !” என்று சத்தமாக பேசியதில் இளமாறன் பொங்கி விட்டான்.

“ஹோ! ஒழுக்கம் இருக்கு இல்லைன்னு நீங்க எப்படி முடிவு பண்றீங்க? வீட்டுக்குள்ளேயே நாலு சுவத்துக்குள்ள இருக்குற பொண்ணுங்க ஒழுக்கமானவங்க. இதே, படிச்சு குடும்பத்தை காப்பாத்த நாயா வேலை பார்த்து, வெளிய இருக்குற வெறி நாய்ங்களை எல்லாம் சமாளிச்சு, களைச்சு போய் வீட்டுக்கு வர்ற பொண்ணுங்க ஒழுக்கமில்லாதவங்க இல்ல?

அந்த காலத்துல நிறைய வீட்டுல பொண்ணுங்க வெளியவே வரமாட்டாங்க. ஆனால் அப்படி பொத்தி பொத்தி வளர்த்த பொண்ணுங்களுக்கு கூட காதல் வந்துருக்கு. ஒரு சிலருக்கு அது நிறைவேறி இருக்கு. ஒரு சிலருக்கு அந்த காதல் வெறும் கனவாகவே ஆகியிருக்கு. அதுக்குன்னு அவங்க ஒழுக்கமில்லாதவங்கன்னு அர்த்தமா?

ஒரு பையனை தன்னோட இன்னொரு பாதின்னு நினைச்சு காதலிக்கிற பொண்ணுங்களுக்கு வெறும் ஏமாற்றத்தை மட்டும் குடுக்குற அந்த பசங்க தான் என்னை பொறுத்த வரை ஒழுக்கம் இல்லாதவங்க. இன்னொரு வார்த்தை அவளை பத்தி பேசுனீங்க… நான் மனுசனா இருக்க மாட்டேன்” என்று உறுமினான்.

அதில் அங்கு பெருத்த அமைதி நிலவியது. சாரதாவும் ஏதேதோ நினைவில் கரைந்து போக, நடராஜுக்கும் பார்வதிக்கும் தான் மனம் எங்கும் வேதனை அப்பியது. ராஜேந்திரனோ நீலாவை அறைந்தே இருந்தார். என்ன தான் அவள் மேல் கோபம் இருந்தாலும் அவளின் வாழ்க்கையை கெடுக்க வேண்டும் என்று எண்ணியதில்லையே… “இன்னொரு முறை அவளோட வாழ்க்கையில தலையிட்ட, அப்பறம் நீ வாழா வெட்டியா போய்ட வேண்டியது தான…” என்றார் கோபத்துடன். அதோடு அப்பொழுதே செந்தில் அடுத்த 10 நாட்களில் முகூர்த்த தேதியை குறித்து இருந்தார்.

இதனை கேட்ட சித்ராக்ஷிக்கு தான், இளமாறன் தனக்காக பேசிய வார்த்தைகள் மட்டுமே காதில் எதிரொலித்தது. மனம் எங்கும் சொல்ல முடியாத பரவசமும், நிம்மதியும் பரவ, உடனேயே அவனை காண வேண்டும் என மனம் துடித்தது.

அடுத்த நொடி, வெளியில் சென்றிருந்தவள், வாசலில் போனை பார்த்தபடி இளமாறன் நிற்பதை கண்டாள். ஏனோ, இன்று அவனை வெகுவாக ரசிக்க வேண்டும் என எண்ணிய மனதை முயன்று அடக்கிக்கொண்டு அவனருகில் செல்ல, அவனோ அவளை பாராமல், “உன்னை வசந்த் தான் கடத்த முயற்சி பண்ணிருக்கான். போலீஸ்ல கம்பளைண்ட் குடுத்துருக்கேன்.  உன்னையும் வர சொல்றாங்க. வா…” என அவளின் பதிலை எதிர்பாராமல் வண்டியை கிளப்ப, அவனின் பாராமுகம் அவளுக்கு தான் சற்று வருத்தத்தை கொடுத்தது.

அதில் அவள் அப்படியே நிற்க, அவனோ கோபத்துடன் வண்டியை விட்டு இறங்கி விட்டு, தூரத்தில் நின்ற ஆட்டோ ஒன்றை பிடித்தான். “நீ இதுல ஏறி போலீஸ் ஸ்டேஷன் வந்துடு. நான் முன்னாடி போறேன்…” என்றவன் விருட்டென கிளம்பி விட்டான், ‘என்கூட பைக்ல வரக்கூட உனக்கு பிடிக்கலைல’ என்ற தாங்கலுடன்.

சித்ராக்ஷிக்கு தான் ஒன்றுமே புரியவில்லை. ஆனால் அவன் கடும்கோபத்தில் இருக்கிறான் என்று மட்டும் உணர, தன்னை நொந்து போலீஸ் ஸ்டேஷன் சென்று அடைந்தாள்.

அங்கு வாசலிலேயே இளமாறன் நின்றிருக்க, சித்ராக்ஷி வரவும் அவளை அழைத்து கொண்டு உள்ளே சென்றிட, அங்கு வசந்த் முகம் முழுதும் காயத்துடன் நிற்பதை கண்டு சித்ராக்ஷி அதிர்ந்தாள்.

இளமாறன் அவனை பார்வையால் எரித்தபடி, இன்ஸ்பெக்டரிடம் “சார் அவன் கடத்த ட்ரை பண்ணது இந்த பொண்ணை தான்…” என்று கூறிட, அந்த இன்ஸ்பெக்டர் சந்திரனும் “உட்காருங்க” என்றவன் மேலும் பேசும் முன், வக்கீலுடன் உள்ளே நுழைந்தார் ஜெயசீலன்.

முகத்தில் ரௌத்திரம் தெறிக்க, “இன்ஸ்பெக்டர், அவன் என் தம்பி பையன். எந்த ஆதாரமும் இல்லாம எப்படி நீங்க அவனை கூட்டிட்டு வரலாம். இதுல நீங்க அவனை அடிக்க வேற செஞ்சுருக்கீங்க…” என்று குரல் உரக்க கத்தினார்.

அதில் அமர்ந்திருந்த இளமாறன் சட்டென எழுந்து “அவனை அடிச்சது நான் தான்…” என்று திரும்பி பார்க்க, பார்த்தவன் அதிர்ந்து விட்டான்.

சில நொடிகள் பேச்சற்று அவரை வெறித்தவனை, சித்ராக்ஷி தான் “இளா, ப்ளீஸ்! பிரச்சனை வேண்டாம்…” என்று அவன் கரம் பிடித்து தடுக்க, அவனோ கோபத்தின் உச்சியில் இருந்தான். ஜெயசீலனும் அவனை அதிர்வுடன் பார்த்து விட்டு, பின் “இன்ஸ்பெக்டர் என் மேல இருக்குற முன் பகையிலை யாரோ இப்படி பொய் புகார் குடுத்துருக்காங்க…” என்றான் இருவரையும் முறைத்தபடி.

சந்திரன் தான், “இங்க பாருங்க மிஸ்டர் ஜெயசீலன், உங்க தம்பி பையன் தான் அவன் பிரெண்டு கிட்ட ஆட்டோ வாங்கிட்டு போய் இந்த பொண்ணை கடத்த முயற்சி பண்ணிருக்கான். அவங்க நல்ல நேரம், அங்க இருந்த சிசிடிவி ல, அந்த ஆட்டோ நம்பர் நல்லா பதிஞ்சுருக்கு. அது மட்டும் இல்ல. அந்த பொண்ணை அவன் கல்யாணம் பண்ணனும்னு சொல்லி டார்ச்சர் பண்ணிருக்கான். அதுக்கு நீங்களும் உடந்தைன்னு அவன் வாக்கு மூலமும் குடுத்துட்டான்… அதுக்கான வீடியோ ஆதாரம்” என்று ஜெயசீலனின் வக்கீலிடம் போனை நீட்ட, அவரோ “சார் அவனை அடிச்சு மிரட்டி நீங்க இதை வாங்கிருப்பீங்கன்னு எனக்கு டவுட் ஆ இருக்கு!” என்றார் சந்தேகமாக பார்த்தபடி.

இதில் இளமாறனோ நக்கலாக இதழ் விரித்து, “உங்களுக்கு சந்தேகமாக இருந்தா இப்போ கூட அவன் கிட்ட கேளுங்க…” என்று திமிராய் பதில் கூறி வசந்தை பார்த்து முறைத்த படி, கை சட்டையை ஏற்றி விட, வசந்த் தான் பொய் சொல்லி வெளியில் வந்தால், தன்னை அடித்தே கொன்று விடுவான் என அரண்டு, “ஆமா நான் சொன்னது உண்மை தான். நான் தான் சித்ராவை கடத்த நினைச்சேன்…” என்று உளறிட, சித்ராக்ஷிக்கு தான் மண்டை காய்ந்தது.

இத்தனை நாளாக அமைதியாக இருந்த வசந்த், சரியாக சித்ராக்ஷியின் நிச்சயம் நடைபெற போவதை உணர்ந்து அவளை மிரட்ட ஆரம்பித்தான்.

அவளும் முதலில் அவனை கண்டுகொள்ளவில்லை. திமிராக பேசி தவிர்த்தாள். ஆனால் அவன் கை வைத்தது செல்வியின் வாழ்க்கையில். இப்போது அவள் திருமணம் செய்ய போகும் குடும்பத்திடம் அவளை பற்றி தவறாக கூறுவேன் என்று மிரட்டியதில் அவள் அதிர்ந்து விட்டாள்.

அதோடு, தான் காதலித்ததும் தெரிய வந்து, அதன் பிறகு அவளின் வாழ்க்கையே கேள்வி குறி ஆகுமே, என்று பரிதவித்தவளுக்கு நீலாவின் தொந்தரவும் இருக்க, இறுதியில் இளமாறன் மேல் தோன்றிய மெல்லிய நேசத்தை மறைத்து கொண்டு, அவனை விட்டு விலக ஆரம்பித்தாள்.

என்ன தான் முகுந்தும், அவன் குடும்பமும் நல்லவர்களாக இருந்தாலும் செல்வியின் வாழ்வில் ரிஸ்க் எடுக்க அவள் விரும்பவில்லை அதனாலேயே அவள் திருமணம் வரை காத்திருந்தவள், அதன் பிறகும், தான் இங்கு இருந்தால் இப்பிரச்சனை தொடர்ந்து கொண்டே இருக்கும் என்றெண்ணி ஊரை விட்டு கிளம்ப முடிவெடுத்து இருந்தாள்.

இப்போதோ , “என்ன தான் நடக்குது இங்க?” என்று குழம்பி போனவள், இளமாறனின் கையை இறுக்கி பற்றி கொள்ள, அவளை கண்ட ஜெயசீலன் தான், “சார், இந்தா நிக்கிறாளே இவள் தான் வேணும்னே பிளே பண்றாள். முதல்ல என் பையனை காதலிச்சு நல்லா சுத்திட்டு அவனை ஏமாத்தி விட்டுட்டு போயிட்டு இப்போ அவனுக்கு கல்யாணம் ஆகவும் மறுபடியும் பிரச்சனை பண்றா… வசந்த் இவள் அக்காவை கல்யாணம் பண்ணிக்காதது நால பழி வாங்குறா! இப்ப வேற ஒருத்தன் கூட உரசிகிட்டு நிக்கிறா” என்று வார்த்தைகளை வஞ்சமின்றி துப்ப, இளமாறன் அவனை அடிக்கவே சென்றதில், சித்ராக்ஷி தான் “இளா இளா வேணாம் இளா… பொறுமையா இருங்க…” என்று அவனை தடுக்கும் போதே சப்பென ஜெயசீலனின் கன்னத்தில் அறையும் சத்தம் கேட்டதில் இருவரும் திகைத்தனர்.

முகுந்தும் செல்வியும் வீட்டிற்கு வந்து விட, செல்விக்கு தான் மனதெல்லாம் பாரமாக இருந்தது. ஒன்று தங்கையின் நிலை எண்ணி மற்றொன்று, தன் கணவனின் பாராமுகம் கண்டு.

திருமணம் முடிந்த அன்று, அவன் அறைக்கு அவள் அனுப்பப்பட, அவளும் குனிந்த தலை நிமிராமல் தயங்கிய படி, பூக்களால் அலங்கரித்திருந்த அறைக்குள் நுழைந்தாள்.

வந்தவள், நடுங்கிய மனதுடன் அப்படியே நிற்க, “ஏன் இப்படி நின்னுட்டே இருக்க எலக்ஷன்ல நிக்க போறியா?” என கட்டிலில் அமர்ந்து கையை கட்டிக்கொண்டு கேட்டான் முகுந்த்.

அதில் “ம்ம்ஹும்…” என மறுப்பாக தலையசைத்தவள், இன்னும் அப்படியே நிற்க, அவன் தான் “உட்காருன்னு சொன்னேன்” என்றான் அழுத்தமாக. அதில் பட்டென அமர்ந்து விட்டவளை ரசனையாக பார்த்தவன், “கையில என்ன?” எனக் கேட்டான்.

“பா பால்…” என்று அவள் திக்கி திணறி பதிலளிக்க, அவளுக்கு தான் அந்த பூவின் மனமும், ஒரு ஆடவனின் அறையில் தனிமையில் இருக்கிறோம் என்ற எண்ணமும் சற்றே பயத்தை கொடுத்தது. “அதை எதுக்கு கையில வைச்சுருக்க… குடி!” என்று கட்டளையிட, “இல்ல அது… அத்தை உங்க உங்களுக்கு தான்…” என அவன் முன் நீட்டினாள்.

“ஓ…” என்றவன் எந்த மறுப்பும் இன்றி அதனை வாங்கி குடித்து விட்டு, “இதென்ன இவ்ளோ இருக்கு. எனக்கு போதும் நீ குடிச்சுடு” என மீதியை அவளிடம் கொடுக்க, அவள் தான் ஜிவ்வென சிவந்து விட்டாள்.

அதில் மேலும் வீழ்ந்தவன் புன்னகையை அடக்கி கொண்டு, “அட, பால தான குடிக்க சொன்னேன். இதுக்கு ஏன் நீ இவ்ளோ நெர்வஸ் ஆகுற… குடி!” என்று வலுக்கட்டாயமாக கொடுத்து குடிக்க வைத்தவன், “சரி, லைட் ஆப் பண்ணிட்டு தூங்கு. எனக்கும் செம்மயா தூக்கம் வருது. நாளைல இருந்து கல்யாண வேல இருக்கு…” என்று நெளிப்பு விட்டவன், மெத்தையில் படுத்து விட, அவளுக்கு தான் அவன் சாதாரணமாக பேசினாலும் என்மேல் கோபமாக இருக்கிறாரோ என்றே வருந்தினாள்.

ஆனால், எதுவும் கேட்காமல் அவன் கூறியது போல் அவளும் படுத்ததும் உறங்கியும் விட, முகுந்த் மெல்ல அவள் புறம் திரும்பி படுத்தான். ‘அடிப்பாவி, ஒரு பேச்சுக்கு தூங்குன்னு சொன்னா… உடனே எதை பத்தியும் யோசிக்காம தூங்கிட்டா… ம்ம்ஹும்… உன்னை நான் எப்போ கரெக்ட் பண்ணி என் மேல பீலிங்ஸ் வர வைச்சு… சப்பா…!’ என்று புலம்பிக்கொண்டவன், இதழோரம் உறைந்த குறு நகையுடன் உறங்கியும் விட்டான்.

மறுநாள், இளமாறன் அனுப்பிய குறுஞ்செய்தியில் தான், செல்வியை கோவிலுக்கு அழைத்து செல்கிறேன் என கூறி சித்ராக்ஷியின் வீட்டிற்கு அழைத்து வந்தான்.

செல்வி ஏதோ கேட்க வந்தாலும் கேட்காமல் தனக்குள் மருகுவதை கண்டவன், எதையும் கண்டுகொள்ளவில்லை.’ உனக்கு என்ன வேணுமோ அதை நீ தான் கேட்கணும்…’ என அவளிடம் அவன் கண்ணாமூச்சி விளையாட சாரதாவிடம் தான் நடந்ததை கூறினான்.

சாரதா தான் வருந்தி “நான் போய் சித்ராவை பார்த்துட்டு வரேன்…” என்று கிளம்ப போக, “மாறா போலீஸ் ஸ்டேஷன் போறதா சொன்னான் அத்தை” என்றான் முகுந்த். “சரி நான் அங்கேயே போய் பாக்குறேன்…” என்றவர், அடுத்த ஐந்து நிமிடத்தில் போலீஸ் ஸ்டேஷனுக்குள் நுழைந்து ஜெயசீலனை அறைந்திருந்தார்.

“நீ எல்லாம் ஒரு மனுஷன்… எப்போவுமே உன் நாக்குல நரம்பே இருக்காதுல. நீ தான் ஒரு பொண்ணை ஏமாத்துனீனா, உன் பையனை விட்டு ஊர்ல இருக்குற பொண்ணுங்களை எல்லாம் ஏமாத்தி உன் ஜாதி வெறியை திணிக்கிறியா…? நீ எல்லாம் ஏன்டா இன்னும் சாகாம இருக்க… ஆசைக்கு ஒன்னு ஆஸ்திக்கு ஒன்னுன்னு கல்யாணம் பண்ற உன் கேவலமான புத்தியை உன் குடும்பமே கடைபிடிக்குதோ…? இதுல என் வீட்டுக்கு வர போற பொண்ணை பத்தி தப்பா பேச உனக்கு எவ்ளோ தைரியம் இருக்கணும்…!” என்றவர்  மீண்டும் சப்பென அடித்தார்.

அதில் சித்ரா இளமாறனை விட்டு விட்டு, சாரதாவை தடுத்தாள். “ம்மா… விடுங்க! இவன் லாம் ஒரு சாக்கடை. இவன் கிட்ட என்ன பேசுனாலும் வேஸ்ட் தான்” என்று அவரை சமன்படுத்த முயன்றவளை, “இவனை எல்லாம் இப்படி விட்டு விட்டு தான் இப்போ இப்படி கொழுப்பு எடுத்து போய் திரியிறான். வயித்து பிள்ளையோட என்னை நடு ராத்திரியில வீட்டை விட்டு துரத்தி அதுனால என் கரு கலைஞ்சப்போவே இவனை எல்லாம் உள்ள தூக்கி போட்டுருக்கணும். கட்டிக்கிட்ட பாவத்துக்கும் குடும்ப மானத்தை யோசிச்சும் விட்டேன்ல அதான், இப்போ இன்னொரு பொண்ணோட வாழ்க்கையை அழிக்கிற அளவு வந்துருக்கு…” என்று விழி சிவந்து கடுகடுத்த கோபத்துடன் இத்தனை நாள் மனதில் இருந்த கோபத்தை எல்லாம் கொட்டி அவனை மீண்டும் அறைந்திருக்க, சித்ராக்ஷி வெகுவாய் அதிர்ந்து விட்டாள்.

அந்த அதிர்ச்சியுடனேயே அவள் இளமாறனை காண, அவனும் பெருமூச்சு விட்டான் சீறலாக. இங்கோ சாரதா தான், “இன்ஸ்பெக்டர் இவன் மேல நான் கேஸ் கொடுக்குறேன். இந்த வெறி புடிச்ச நாயை முதல்ல உள்ள தூக்கி போடுங்க. அவன் என்னை கல்யாணம் பண்ணி ஏமாத்துனத்துக்கும், என் குழந்தை அழிஞ்சதுக்கும், இப்போ வரை நான் எல்லா ஆதாரமும் வைச்சிருக்கேன்” என்று ஆவேசத்துடன் பேச, இளமாறன் தான் “அத்தை ரிலாக்ஸ்! நீ வா…!” என்று அவரை இழுத்தான்.

“நீ சித்ராவை கூட்டிக்கிட்டு போ மாறா…! இன்னைக்கு நான் இதை பண்ணலைன்னா என் மனசே ஆறாது. நீ போ!” என்று அவனை வெளியில் அனுப்ப முயல, “அவனுக்கு கண்டிப்பா தண்டனை வாங்கி தரலாம் அத்த. ஆனால் நான் பாத்துக்குறேன். நீ எமோஷன் ஆகுவ.” என்று கூறுகையிலேயே சாரதா, தன்னை சமன் செய்து “நான் நல்லா தான் இருக்கேன்…” என்றார் உறுதியாக.

அவரின் உறுதியையே பார்த்துக்கொண்டிருந்த சித்ராக்ஷி தான், “இளா… நம்ம வெளிய இருக்கலாம்!” என்று அவனை இழுத்து கொண்டு வெளியில் செல்ல, இன்ஸ்பெக்டர் சாரதாவிடம் விசாரித்து கொண்டிருந்தார். ஜெயசீலன் தான் அவளின் பேச்சிலும் அடியிலும் உறைந்து, கோபத்துடன் நின்றிருந்தார்.

சாரதாவை ஆசைப்பட்டு திருமணம் செய்தவர் பின், சொந்தங்களின் பேச்சிலும், இயல்பாக அவருக்குள் ஊறிய ஜாதி என்ற பேய், அவரை கொடுமை படுத்த வைத்தது. அதிலும் வேற்று ஜாதிப்பெண்ணை திருமணம் செய்ததில் சில சொந்தங்கள் அவனை தள்ளி வைத்ததில் சிறிது சிறிதாய் அவனுக்குள் ஒரு சாத்தான் ஏறிட, இறுதியில் மூன்று மாத வயிற்றுடன் அவரை வெளியில் அனுப்பி விட்டார். கணவனையும், குழந்தையையும் இழந்து நிராதரவாக நின்றவருக்கு அண்ணனின் குடும்பமே உலகம் என்றானது.

அதன் பிறகு, ஜெயசீலன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதில் தான் ரோஹித் பிறந்தான்.

இங்கோ இளமாறன் தான், “ப்ச்… இந்த அத்தை சொல்லு பேச்சை கேட்க மாட்றாங்கன்னு பார்த்தா நீ ஏன் என்னை வெளிய இழுத்துட்டு வந்த” என கேட்டான் அதட்டலாக. சித்ராக்ஷி, “இளா… அவங்க அவனை தனியா தண்டிக்கணும்னு நினைக்கிறாங்க.நீங்க அங்க இருந்தா அவங்க கொஞ்சம் எமோஷனல் ஆவோம்னு பீல் பண்றங்க போல. அதான் உங்களை வெளியே போக சொல்றாங்க. அவங்க நினைச்சதை பண்ணட்டுமே. அவங்க மனசுல இருக்குற பாரமும் குறையும்…!” என்றவள் அவர் கூறியதை வைத்தே நடந்ததை ஊகித்து கொண்டாள்.

தன்னையே அவ்வளவு பேசியவர், அவரின் மனைவியை எவ்வளவு துன்பப்படுத்தி இருப்பார் என கேட்க தேவையற்று போக, அவள் மனமும் தன்னிச்சையாக சாரதாவிற்காக வருந்தியது. ஆனால், மாறனுக்கு தான் உள்ளே செல்ல வேண்டும் என பரபரத்தது.

அவனின் வலியை கண்களில் உணர்ந்தவள், “வசந்தை எப்படி புடிச்சீங்க?” எனக் கேட்டாள் மெல்லிய குரலில்.

அவனோ அவளை முறைத்து பார்த்து விட்டு, அ”ந்த ஆட்டோ நம்பரை வைச்சு, அவன் யாருன்னு புடிச்சேன். புடிச்சு அடி வெளுத்து கேட்டதுல அவன் எல்லாத்தையும் உளறிட்டான். அவன் சொன்ன எல்லாத்தையும் வீடியோ எடுத்து, போலீஸ் ஸ்டேஷனில கொடுத்துட்டேன். அங்க போயும் பொய் சொல்லி வெளிய வரணும்னு நினைச்சா சாவடி அடிப்பேன்னு மிரட்டினதுல தான உண்மைய ஒத்துக்கிட்டான். அதுக்கு அப்பறம் தான் நான் உங்கிட்ட கேட்டேன்” என்றான் அவளை பாராமல்.

அவளோ விழி விரித்து, “அப்போ நான் சொல்றதுக்கு முன்னாடியே உங்களுக்கு எல்லாம் தெரியுமா?” என்று வியப்பாய் கேட்க, “ம்ம், அது எல்லாருக்கும் உன் வாயாலேயே தெரியணும்னு தான் அவங்களையும் வர வச்சேன்…” என்றவனை ரசனையாக பார்த்தவளுக்கு ஒரு வாய்ஸ் மெஸேஜ் வந்திருந்தது ரோஹித்திடம் இருந்து.

அதனை புருவம் சுருக்கி ஓபன் செய்தவளுக்கு, ரோஹித்தின் குரல் ஒலித்தது.

“சாரி சித்ரா. உங்கிட்ட சாரி கேட்க கூட எனக்கு தகுதி இல்லைன்னு தெரியும். பட் ஐ ஆம் எக்ஸ்ட்ரீம்லி சாரி. என் அப்பா பேச்சை கேட்டுகிட்டு நான் உன்னையும் செல்வியையும் ரொம்பவே தப்பா பேசிட்டேன். வசந்த் சொன்னதை உண்மைன்னு நம்பி…” என்றவன் சிறிது இடைவெளி விட்டு,

“இன்னைக்கு வசந்த் உண்மையை சொன்ன வீடியோவை பார்த்து எனக்கு என் மேலயே ரொம்ப கோபம் வந்துருச்சு. சத்தியமா உன்னை கடத்த பார்த்ததும், அவன் உன்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லி மிரட்டுனதும் எனக்கு தெரியாது சித்ரா…!

அதுக்கு அப்பறம் நான் என் அப்பா கிட்டயே சண்டை போட்டேன். ஆனால், அவரு நான் சொன்னதை கேட்கவே இல்லை. அதுனால, நான் என் வைஃபை கூட்டிக்கிட்டு கொச்சின் போறேன். இதை பத்தி மாறன் கிட்டயும் நான் சொல்லிட்டேன். கரெக்ட் டைம்ல அவரு தான் எனக்கு வீடியோ அனுப்பி புரிய வைச்சாரு. உங்கிட்ட நேரா சொல்லிட்டு போகணும்னு தான் நினைச்சேன்.

ஆனால் எனக்கு உன்னை பேஸ் பண்ற தைரியம் இல்ல சித்ரா. ரியலி உன்னை ரொம்ப மிஸ் பண்ணிட்டேன். என் லைஃப் ல உன்னை இழந்தது மிகப்பெரிய இழப்பு சித்ரா. பட் நீ மாறனை மிஸ் பண்ணிடாத. என்னைக்காவது உனக்கு என்னை மன்னிக்கனும்னு தோணுனா… கீப் இன் டச்… அட்லீஸ்ட் ஒரு மெஸேஜ் ல… ஒரு லவரா நான் உன்னை இழந்துட்டேன். ஆனால் ஒரு பிரெண்டா கண்டிப்பா உன்னை இழக்க மாட்டேன்னு நம்புறேன். பை… உன் வெட்டிங் இன்விடேஷன்காக வெய்ட் பண்ணுறேன்” என்று பேசி முடித்திருக்க, சித்ராக்ஷிக்கு தான் தான் எப்படி உணர்கிறோம் என்றே புரியவில்லை.

அன்று அவன் பேசியது என்ன, இன்று பேசுவது என்ன…? மனித மனம் தான் ஒவ்வொரு நாளிலும் எப்படிப்பட்ட மாற்றங்களை கொண்டுள்ளது. சில மாற்றங்கள் மனதிற்கு இனிமையாகவும் இருக்க, அந்த குறுஞ்செய்திக்கு பதிலளிக்காமலேயே சிறிதாய் ஒரு புன்னகை பூத்தாள்.

இளமாறன் தான் அவளின் பாவனையை சலனமின்றி பார்த்து விட்டு வேறு புறம் திரும்பி கொள்ள, அந்நேரம் சாரதா வெளியில் வந்தார். அவர் முகத்தில் ஒரு தெளிவு. ஏனோ இத்தனை வருடம் மனதில் நெருஞ்சி முள்ளாய் குத்திக்கொண்டிருந்த உணர்வு தற்போது இல்லை. பாரமும் காற்றோடு காற்றாய் பறந்திருந்தது.

ஆனால், இளமாறனை கண்டதும், அவன் தோளில் சாய்ந்து அழ ஆரம்பித்து விட்டார். அவனும் அவரை ஆதரவாக அணைத்துக் கொண்டு, “இதுக்கு தான் உன்னை வெளிய வான்னு சொன்னேன்… அழாத அத்தை ப்ளீஸ்…” என கோபத்துடன் ஆரம்பித்து கெஞ்சலாக முடித்திருந்தான்.

அவரோ “இல்ல மாறா… இப்போ என் மனசு ரொம்ப நிம்மதியா இருக்கு. அந்த ஆளை தண்டிக்க கடவுளே எனக்கு ஒரு வாய்ப்பு குடுப்பாருன்னு தான் இது நாள் வரை அமைதியா இருந்தேன். அது இன்னைக்கு நடந்துருச்சு… உன்ன பார்த்தா நான் எமோஷன் ஆகிடுவேன் டா அதான் வெளிய போக சொன்னேன்… அத்தை மேல கோபமா?” என அவர் பாவமாக கேட்டிட, அவன் ஒரு நொடி சித்ராக்ஷியை வியப்பாக பார்த்து விட்டு, பின், “ஆமா கோபம் தான்…” என்றான் கடுகடுப்பாக.

அதில் அவர் முகம் சுருங்கிட, “பின்ன என்ன, என் லைட் கலர் சட்டையில் அழுவுறேன்னு கரையாக்கி வைச்சுட்ட… இனிமே இந்த கரை வேற போகாது. ஒழுங்கா வீட்டுக்கு போய் துவைச்சு  குடுத்துடு…” என்றான் கண்ணை சுருக்கி.

அவனின் எண்ணம் புரிந்தவர், இயல்பாகி, “நான் எதுக்குடா துவைச்சு குடுக்கணும். அதான் அதுக்குன்னு ஒரு ஆளை செட் பண்ணிருக்குல, அவங்க கிட்ட சொல்லு” என்றார் சித்ராவை கண் காட்டி.

அவள் ஏற்கனவே இங்க என்ன பிரச்சனை போகுது. நீங்க மொக்கை போடுறீங்க என்பது போல் முறைத்திருந்தவள் இப்போது சிவந்து விட்டாள்.

உதட்டை கடித்து எழும்பிய வெட்கத்தை கட்டுப்படுத்திக்கொண்டவளை ஓரக்கண்ணில் கண்ட இளமாறன், “ஒன்னும் தேவை இல்ல. கடைசி வரை நான் சிங்கிள் ஆ இருந்து என் துணியை நானே துவைச்சுப்பேன்…” என்றான் சிலுப்பிக்கொண்டு.

அதில் சாரதா தான், “அடேய்… இன்னும் பத்து நாள்ல கல்யாணம் டா” என்று முறைக்க, அவனோ அசட்டையாக “வேணாம். இந்த கல்யாணம் பிடிக்கல. மேரேஜை கேன்சல் பண்ணிடுங்க!” என தோளை குலுக்கி கூறினான்.

அக்கூற்று சித்ராவின் மனதை தான் ரணம் செய்ய, கருவிழிகள் நீரை ஏற்று அவனை பார்த்தது. சாரதாவோ “உங்களால கல்யாணத்துக்கு உண்டான மரியாதையே போயிருச்சுடா…” என தலையில் அடித்து கொண்டவர் “என்னமோ பண்ணுங்க, நான் வீட்டுக்கு போறேன்…” என்று வந்த ஆட்டோவிலேயே ஏற போனவர், சித்ராக்ஷியின் காதில் “பையன் நடிக்கிறான் கல்யாணம் வேணாம்னு… அவன் கோபத்த சரி பண்ணு” என ஓதி விட்டு சென்றார்.

அதனை கேட்டு அவள் தான் கண்ணீரை துடைத்து கொண்டு நம்மளால ஏற்பட்ட கோபத்தை நம்மளே சரி பண்ணுவோம் என்று முடிவெடுத்து நிமிர, அவன் பைக்கில் ஏறி அமர்ந்து ஆக்சிலேட்டரை முறுக்கினான்.

அவள் சட்டென பின்னால் ஏறி அமர்ந்திட, அவனோ “ஹெலோ… நீங்க ஆட்டோல போறீங்களா? நான் அம்மா, அத்தை, வைஃப் தவிர வேற யாரையும் என் வண்டியில ஏத்த மாட்டேன்…” என்றான் கண்டிப்பாக.

சித்ராக்ஷி தான், கண்ணாடி வழியே அவனின் கோப முகத்தை ரசித்து விட்டு, “பரவாயில்ல கடுகடு கேட்சிங் ஃபயர் ஐஸ்க்ரீம்… உங்க வைஃப் எதுவும் சொல்ல மாட்டாங்க. நான் பேசிக்கிறேன்…” என்றாள் குறும்பாக.

அவள் பேச்சில் புரியாமல் கண்ணாடி வழி அவளை பார்த்தவன், “என்னது கேட்சிங் ஃபயர் ஐஸ் க்ரீமா?” என்று விழிக்க, அவளோ மேலும் கீழும் தலையாட்டி, “ஆமா கேட்சிங் ஃபயர்ங்கிறது ஒரு அமெரிக்கா ஐஸ் க்ரீம் பிளேவர். ரொம்ப வித்தியாசமானதும் கூட. இப்போ நீங்க கடுகடுன்னு இருக்குற மாதிரி” என்றாள் விழி விரித்து.

அதில் சுவாரஸ்யமானவன், “ஹோ… அப்படி என்ன வித்தியாசம் அதுல…?” என சற்றே எகத்தாளமாக வினவ, சித்ராக்ஷி தான், அவளின் நாடியை அவன் தோளில் பதித்து, “அதுவா…” என ஹஸ்கி வாய்சியில் கேட்க, அவனும் இன்னும் கண்ணாடியை அவள் முகம் தெரியும் படி சரி செய்து, “ஹ்ம்ம்…” என்றான் அதே ஹஸ்கி குரலில். இதழ் மட்டும் புன்னகைக்க துடித்திருந்தது.

“அது… ஒரு கோன்ல ஆரஞ்சு, மேங்கோ, ஸ்டராபெரி ஸ்கூப் வைச்சுருப்பாங்க. அதோட உயிரோட ஒரு தேளையும் அந்த கோன் மேல வைச்சு குடுப்பாங்க… இவ்ளோ நாள் நீங்க கூலா இருந்ததுக்கு, இப்போ தேள் மாதிரி முறைக்கிறீங்கல்ல, அதான் அந்த பேர் சொன்னேன்” என்று கண் சிமிட்டினாள்.

அவனோ உள்ளுக்குள் எழுந்த ஏதேதோ உணர்வை அடக்கி கொண்டு, “என்னை பார்த்தா தேள் மாதிரி இருக்கா உனக்கு?” என்றான் முறைப்பாக.

“ப்ச், இவ்ளோ நாள் நீங்க பேர் வைச்சீங்க. நான் ஏதாவது கேட்டேனா? அப்போ நீங்களும் கேட்க கூடாது…” என கடுப்பானவள், ‘செல்ல பேர் சொன்னா அனுபவிப்பாங்களா அதை விட்டு அலசு ஆராயிறது..’ என்று முணுமுணுத்து கொண்டவள், பின்னால் நகர்ந்து அமர்ந்து கொண்டாள்.

அவளின் முனகலை கேட்டவன் தான், தனக்குள் சிரித்துக்கொண்டு, “ஆனால் நீ ஒரு விஷயத்தை தப்பா சொல்லிட்ட சித்ரா” என்றான் குற்றம் சுமத்துவது போல். “என்ன சொன்னேன்” என அவள் புரியாது நோக்க, “ம்ம்… தேளு முறைக்காது, கொட்ட தான் செய்யும்” என பின்னால் திரும்பாமலேயே அவள் தலையில் நறுக்கென கொட்டியவன் வண்டியில் சீறி பாய்ந்திட, “ஆஆ…” என்று தலையை தேய்த்து அவனை முறைத்த படி வந்தாள் இளாவின் கேண்டி.

கிட்கேட் உருகும்
மேகா

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
39
+1
5
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்