Loading

கணி வந்த விண்கலம் செவ்வாய் வந்தடைந்தது. அதற்குள் ஒரு யுகமே கடந்துவிட்டதுபோல் உணர்வு அவனுக்கு. செவ்வாயில் கால் வைத்த பரவசம் நீர்க்குமிழியாய் உடைந்து போனது. அங்கிருந்த நிலையைக் கண்டு அனைவரும் திடுக்கிட்டனர். பூமியில் அவர்களுக்கு காட்டிய கட்டிடம் எங்கே என்று தேட வேண்டிய நிலை. அவ்வளவு அலங்கோலமாய் இருந்தது. இத்தனைக்கும் பாதி சரி செய்த நிலையில் இருந்தது கட்டிடம். காப்பியன் மற்றும் சிலர் அவர்களை அழைத்துச் செல்ல வந்திருந்தனர். விண்கலம் தரையிறங்கிய சற்று தூரத்தில் தான் அவர்களின் வசிப்பிடம் இருந்தது. வேறு கட்டிடங்களே செவ்வாயில் இல்லாததால் அவர்களால் தூரத்தில் இருந்தே நிலையை கொஞ்சம் அறிந்து கொள்ள முடிந்தது.

“என்ன ஆச்சு காப்பியன். ஏதும் ஆபத்தா?” என்று  வினவினான் அதி. கணி அமைதியாய் பார்வையில் அளந்து கொண்டிருந்தான். ஆனால் உள்ளுக்குள் எரிமலை வெடித்துக் கொண்டிருந்தது.

“ஒண்ணும் ஆகலை… எல்லாரும் நல்லா இருக்காங்க. அதனால் கவலை வேண்டாம். நீங்க வாங்க. அப்புறம் பேசலாம்” என்று அனைவரையும் அழைத்துச் சென்றான். கீர்த்தியும் அதியும் செவ்வாய் கிரகத்தை விசித்திரமாக பார்த்து வைத்தனர். அப்படி பரவசம் அடையும் அளவு அந்த கோள் செழிப்பாக இல்லையே. அவர்களுடன் இன்னும் சிலரும் வந்திருந்தனர். அனைவரின் மனதிலும் எண்ணங்கள் வலம் வந்த படியே இருந்தது. கட்டிடத்திற்குள் சென்றதும் மதுபல்லவியைத்தான் தேடியது கணியின் விழிகள். அவனைக் கண்டதும் அவளின் விழிகளும் குளம் கட்டியிருந்தது. வயிறு சற்று மேடிட்டிருந்தது. காப்பியனை முறைத்தான் கணி. மனைவியுடன் மகிழ்ச்சியாய் வாழும் காலத்தை இப்படி களவாடி விட்டீர்களே என்று அவனை குற்றம் சாட்டியது கணியின் விழிகள். அது அவனுக்கும் நன்றாகவே விளங்கியது. தலை குணிந்து கொண்டான். அவனைக் கண்டதும் அவள் ஓடி வர, அவன் பார்வையிலே அவளை நிறுத்தினான். அவளின் அருகில் சென்று, “பல்லவி..” என்று விளித்தவனுக்கு வேறு சொற்கள் வாயில் வரவில்லை.

“எப்படி இருக்கீங்க கணி.. உங்களைப் பாக்கணும் போலவே இருந்துச்சு. ரொம்ப கஷ்டப்பட்டிங்களா?” மது.

“ப்ஸ்ஸ்… இல்ல.. நீதான் ரொம்ப கஷ்டப்பட்டிருக்க. இந்த சென்னிய நான் சும்மா விடமாட்டேன்” என்றான் சற்றே கோபத்துடன்.

“சார்.. இந்த காப்பியனை மறந்துட்டீங்களே?” வேதன் எடுத்துக் கொடுத்தான்.

“டேய்… அவரு கேட்டாரா.. பேசாம இருக்க மாட்ட..” என்று காப்பியன் கூற, உள்ளேயிருந்து ஒருவர் வந்து தணிகை கண் விழித்து விட்டதாக கூறிச் சென்றார். அனைவரும் அவனை சென்று பார்த்தனர்.

உள்ளேயிருந்த இரட்டையர்கள் அவனை அடித்தனர்.

“டேய்.. ஏண்டா இப்படி எங்களை பயமுடித்துன?”

“ஆமா… நீ பாடு வந்து படுத்துட்ட. ரெண்டு நாளா எவ்ளோ கஷ்டம் தெரியுமா?”

“டேய்.. ரொம்ப வலிக்கிதா… நீ எழுந்து சின்சான்னு கூப்பட மாட்டியான்னு ஏங்கிட்டேன்” சித்திரன்.

“டேய்.. திருநல்லன் ஐயா எவ்ளோ முயற்சி செஞ்சாரு தெரியுமா. எப்படியோ நீ கண்ணு முழிச்சியே அதுவே போதும்” என்று ஆளாளுக்கு அவர்களின் மனத் தேக்கத்தை இறக்கினர்.

“மது அக்கா எப்படி இருக்காங்க. அவுங்களுக்கு ஒண்ணும் இல்லையே..” என்றான் தணிகை‌.

அங்கிருந்த ஒவ்வொருவரும் சதா சர்வ காலமும் அடித்துக் கொள்வதுபோல் இருந்தாலும் அனைவரும் நண்பர்களாகி விட்டனர். உறவுகளாகி விட்டனர் என்று கூறினாலும் மிகையாகாது. இரண்டு நாட்களாக இல்லாத நிம்மதி இப்பொழுது வந்திருந்தது அங்கு.

“மது அக்கா நல்லாருக்காங்க. அவுங்க புருஷனோட ஜாலியா இருக்காங்க” என்று இரட்டையர்கள் கூற, மது, கணி, அதி மற்றும் கீர்த்தி நால்வரும் உள்ளே வந்தனர்.

“அப்பா.. ஒரு வழியா வந்தாச்சா மாமா… ரொம்ப நல்லது. மாமா.. செவ்வாயில் ஏற்கனவே நிலா தேஞ்சு போன மாதிரிதான் இருக்கு. அக்கா உனக்கு தூது அனுப்பி அனுப்பி தேய் தேய்னு தேச்சிருச்சு. நல்ல வேளை. நீங்க நேர்ல வந்துட்டீங்க. இல்ல செவ்வாயின் பாவம் உங்களை சும்மா விடாது” என்று தணிகை கூற, அனைவரும் நகைத்தனர்.

“யாருடா.. இவன்.. டேய் கீர்த்தி உன்னைவிட அவன் மோசமா இருக்கான்” என்று அதி கூற, கீர்த்தி அவனை முறைத்தான்.

“டேய்.. நான் வாயைத் திறந்தே பல நாள் ஆயிடுச்சு..” கீர்த்தி.

“இங்க வந்துட்டீங்கல்ல… இனி திறந்த வாயை மூட முடியாது. பேசுறதைத் தவிற வேறு வேலையே இல்லை இங்க. சாப்பாடு கூட ஒழுங்கா போடுவதில்லை” என்று‌ வேதன் கூற, அந்த இடமே கலகலத்தது.

சூரியன் ஆர்பரிப்பின்றி திறந்த வெளியில் மறைந்தான். இரவு உணவுக்கான ஆயத்தங்கள் செய்தனர். இருந்த உணவை பகிர்ந்தளித்தான் காப்பியன்.

அனைவரும் உணவை உண்டு முடித்தபின் மயான அமைதி. நிகழ்ந்தவைகள் அனைத்தும் அசாத்தியமானவைகளாக இருக்க, அவைகளைப் பற்றி உரையாடவும் ஒரு தயக்கம். தயக்கம் என்பதை விட மனம் தர்க்கம் செய்தது என்றும் கூறலாம். ஏனெனில் ஒரு வினாவின் விடை மனதில் பயத்தை விதைத்திடுமோ என்று அனைவருமே அமைதி காத்தனர். கணி அந்த அமைதியை உடைத்தான்.

“காப்பியன்.. நீங்க ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிரா இதை பயன்படுத்தியது நல்லதுதான். ஆனா இதனால் நன்மை விளையும்னு நீங்க நினைக்கிறீங்களா?” கணி.

“சார்… இந்த செவ்வாயில் குடியேற்றம் எப்படியும் நிகழும். அது இந்த நூற்றாண்டில் நிகழப் போவது உறுதி. அதனால் அதை கொஞ்சம் பயன்படுத்திக்க முயற்சி செஞ்சோம். எத்தனை போராட்டம். ஆனா எதுவும் உதவல. திராவிடன் கிராமத்தில், ஒரு விவசாயி உண்மையாவே தற்கொலை செஞ்சுக்கிட்டான். எத்தனை நாளைக்கு இது தொடரும் சார். திராவிடன், சென்னி, நான் எல்லாரும் ஒண்ணாவே படிச்சவுங்க. சென்னியும் நானும்தான் இந்த செவ்வாய்க்கு வரும் விண்கலத்தை வடிவமைத்தது. இந்த திட்டங்களை பூமியில் சாத்தியப்படுத்தினோம். இந்த ஐடியா முழுக்க முழுக்க எங்களோடது‌. இதை பெரிய நிலையில் அமலுக்குக் கொண்டு வர, ஒரு நிறுவனத்திடம் ஒப்பந்தம் போட்டிருக்கோம். அந்த நிறுவனம் மூலதனம் மட்டும்தான் போட்டிருக்கு. எங்க மூளையோட மூலதனம் கொடுத்து விவசாயத்துக்கு எதிர்காலம் வேணும்னு ஒப்பந்தம் போட்டிருக்கோம்.”

“எல்லாம் சரிதான். ஆனா பூமியில் இருக்கவுங்க மனதில் எப்படி மாற்றம் வரும்னு எதிர்பார்க்குறீங்க. நியூஸ்ல செண்சேஷன் க்ரியேட் பண்ணா நீங்க நினைச்சது நடக்குமா?” அதி.

“இல்ல சார்.. அப்படி இல்லை. இப்போ செவ்வாயில் நெல் விளையாது‌. அதை விளைய வைக்க, ஆட்களுக்கு போதிய அறிவைக் கொடுத்து இங்க கூட்டிட்டு வந்தா அவனுக்கு எவ்ளோ சம்பளம் கொடுக்கணும்னு தெரியுமா? ஆனா இதே ஒரு விவசாயி இங்க வந்தா அவருக்கு எவ்ளோ கொடுக்கணும். இந்த பேரத்தில்தான் விவசாயத்தோட எதிர்காலம் இருக்கு.”

“அது தப்பில்லையா? நீங்க விவசாயிகளை குறைந்த விலைக்கு விக்கிற மாதிரி ஆகாதா?”

“நிச்சயம் இல்லை. பூமியைப் போல் செவ்வாய் செழிப்பாக இருக்கணும்னா பணக்கார வர்க்கம் இங்க வரக்கூடாது. விவசாய வர்க்கம் வரணும். கொஞ்சம் யோசிச்சு பாருங்க. விவசாயிகள் நிறைய இங்க வந்து செவ்வாய் செழிப்பாக மாறினால், என் நிறுவனத்திற்கு லாபம். பின் இந்த செவ்வாய் செழிப்பாகவே இருக்க, குறைந்த பட்சம் விவசாயம் தெரிஞ்சா தான் இங்க வர முடியும்னு ஒரு செக் வைக்கணும். இதெல்லாம் எங்க திட்டத்தில் இருக்கு. இதற்கெல்லாம் ஓத்துக்கிட்டு தான் இந்த நிறுவனம் எங்க திட்டத்தை வாங்கியிருக்காங்க. இங்க முதலில் விவசாயம் தெரிஞ்சவுங்களை மட்டும் கொண்டு வருவோம். ஒருவேளை இங்க விவசாயிகள் வந்தா பண்டம் மாற்று கலாச்சாரம் கொண்டு வந்தா எப்படி இருக்கும்னு தெரிஞ்சுக்கதான் அந்த கிராமத்தில் அப்படி ஒரு வழிமுறையைக் கொண்டு வந்தோம். திராவிடனும் அந்த ஊர் பெரியவரும் இதுக்கு உதவி செஞ்சாங்க. திருநல்லன் ஐயா ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து போராட்டம் செஞ்சவர். அதனால் அவரை கடைசி நிமிடத்தில் தேர்ந்தெடுத்தோம். இது திராவிடனுக்கே தெரியாது. ரொம்ப லேட்டா தான் சொன்னோம். அந்த கிராமத்தில் யாரும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கொண்டு வராம இருக்கத்தான் அந்த நெல் மரபணு மாற்றப் பட்ட பயிர் நாடகம். பேய்ன்னு ஒரு கட்டுக்கதைக் கட்டி யாரையும் உள்ள விடாம செஞ்சோம். அது மட்டுமில்லாமல் அந்த கிராமத்தைத் தனித்து செயல்படவும் வச்சோம். எல்லாமே எங்க நிறுவனத்தின் பெயரில் செஞ்சோம். இப்போ எங்களுக்கு இன்னும் ஆதரவான நிலைதான் தெரியுமா?” என்று காப்பியன் வினவ, அனைவரும் அவனை விசித்திரமாகப் பார்த்தனர்.

செவ்வாயில் இப்படி ஒரு புயல் வந்துச்சுன்னு சொன்னா மக்கள் மத்தியில் பேச்சு எல்லாம் செவ்வாய் பத்தியே தான் இருக்கும். இன்னும் இரண்டு வருஷம் நாம இங்க வாழப் போற வாழ்க்கை ரொம்பவே கடினமா இருக்கும். அதையெல்லாம் அப்படியே ஊடகங்கள் மக்களுக்கு தெரியப்படுத்துவாங்க. கொஞ்சம் மிகைப்படுத்தி சொல்லவும் வாய்ப்பு இருக்கு. அப்படி சொன்னா, செவ்வாய் கிரகத்தில் என்ன நடக்குதுன்னு மக்கள் மத்தியில் தினமும் ஒரு கேள்வி இருக்கும். இங்க பயிர் செய்தல் எவ்வளவு கஷ்டம்னு தெரிஞ்சுக்குவாங்க. விவசாயம் நல்லா படிச்சா செவ்வாய்க்குப் போகலாம்னு இளைஞர்களுக்கு எண்ணம் வரும். அதைப் பழக்க, பூமியில் விளை நிலங்கள் உழப்படும். இனி ஹைட்ரோ கார்பன் போல எந்த திட்டத்தையும் அரசால் செயல் படுத்த முடியாது” என்று நீண்ட விளக்கவுரை அளித்தான் காப்பியன். அவன் மூலம் முன்பே அறிந்த ஒன்றுதான் என்றாலும் அனைவரும் மீண்டும் மலைத்தனர். சென்னியும் காப்பியனும் மனதில் சூல் கொண்ட எண்ணம் மீப்பெரியது. அதை எப்படி அவர்கள் பிசிரில்லாமல் நிலைநாட்ட முடியும் என்று திகைத்தனர்.

ஆரல் தொடரும்..

அடுத்த பகுதியில் கதை முடிந்துவிடும். ரொம்ப கேப் விட்டு எழுதினதால, கதை எப்படி வந்திருக்குன்னு எனக்கு ஒரு டவுட் இருந்துட்டே இருக்கு. ஒரு திருப்தியே இல்லை. கதை களமும் புதியது. தகவல் நிறைய. சில கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் இல்லாமல் போயிருக்கலாம். ஆனால் நான் சொல்ல நினைத்த கருத்தை சொல்லிவிட்டேன் என்றுதான் நினைக்கிறேன்.. அடுத்த பகுதி எப்படி வருதுன்னு பார்க்கலாம். அடுத்த பகுதில நனியிதழை கூட்டிட்டு வந்து கதையை முடிக்கலாம்…

நன்றி..

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்