Loading

அத்தியாயம் 15:

சில நிமிடங்கள், வான்மதியின் கரங்களை இறுக்கிப் பற்றி, நெற்றியோடு ஒட்டிக்கொண்டவனின் பிடியின் அழுத்தம் மெல்ல மெல்ல அதிகரிக்க, அவளுக்கோ கை மரத்தே விட்டது. ஆனாலும் விலக்கவில்லை. முகத்திலும் வலியைக் காட்டாமல் அமர்ந்திருந்தவளின் நிலையை சில நொடிகள் கழித்தே புரிந்தவன், சட்டென பிடியைத் தளர்த்தி, “வலிக்குதா? சாரி.” என்றபடி, மெதுவாக நீவி விட்டான்.

ஏனோ, மனதின் அழுத்தம் பாதியாக குறைந்தது போன்றதொரு உணர்வு ஆரவிற்கு. அவன் தன்னிலை பெற்றதும், “இல்ல. வலிக்கல” என்றவள், தலை குனிந்தபடியே, “கையை எடுத்துக்கவா?” எனக் கேட்டாள் தவிப்பாக.

அவன் அழுத்தத்தோடு, வலியுடன் பிடித்த போது, அவனின் வலியை சரி செய்ய வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருக்க, இப்போது அவன் மென்மையுடன் வருடியதில் ஒரு மாதிரியாக இருந்தது.

அதில் அவனே, அவள் கையை அவளின் மடியில் வைத்து விட்டு எழுந்து, “நான் போய் இஷுவ கூட்டிட்டு வரேன்.” என்று வெளியில் சென்று விட்டான்.

காரில் ஏறி சீறிப் பாய்ந்தவனுக்கு, அவனின் கடந்த காலம் எதுவும் நினைவில் இல்லை. மனமுழுதும் மதியை பற்றிய எண்ணமே சுற்றி வந்தது. மனம் ரணமாக கொதித்தது. நேராக அலுவலகம் சென்றவன், உறங்கி இருந்த இஷாந்தை தோளில் போட்டுத் தட்டிக்கொண்டிருந்த கவினின் முன் நின்றான்.

பாறையாக இறுகி தன் முன் நின்றவனை புரியாமல் பார்த்தவனிடம், “பைக் கீ குடு” எனக் கேட்க, அவனோ திகைத்து, “இப்ப எதுக்குடா? உன் முகமே சரி இல்ல என்ன ஆச்சு? வான்மதிக்கு முடியலைன்னு சொன்ன. நல்லா தான இருக்கா. ப்ராப்லம் இல்லைல.” எனப் பதற்றத்துடன் கேட்டவனுக்கு, என்னமோ ஏதோ என்று பயம் வந்து விட்டது.

“ம்ம். பைக் கீ.” என கையை நீட்டிக்கொண்டே இருந்தவனைக் கண்டு வெளிறியவன், “வேணாம் மச்சான். நீ ஒரு மாதிரி டிஸ்டர்ப் – ஆ இருக்க. ப்ளீஸ்” எனக் கூறும் போதே, டேபிளில் அவன் வைத்திருந்த சாவியை விருட்டென எடுத்துக்கொண்டு வெளியில் சென்றான்.

“டேய் டேய்” என ஹேமா ஆரவை பார்த்துக் கத்தி விட்டு, கவினை நோக்கி, “பரதேசி. இந்த வண்டியை வித்து தொலைன்னு எத்தனை தடவ சொல்றது. ராயல் என்ஃபீல்டு வேணும்ன்னு அந்த சனியனை வாங்கி வைச்சுக்கிட்டு உயிரை வாங்குற.” என காட்டு கத்தாக கத்தியவள், “முதல்ல போய் அவனை நிறுத்து” என்றாள் இஷாந்தை வாங்கி கொண்டு.

தன்விக்கும், கிளையண்ட் காலில் இருக்க, அவனை விட்டு விட்டு, பதறிய நெஞ்சத்துடன் அலுவலகம் விட்டு வெளியில் வந்தான் கவின்.

ஆரவிற்கு இருக்கும் கெட்ட பழக்கத்தில் ஒன்று. அதீத மன அழுத்தம் என்றால், வண்டியை எடுத்துக்கொண்டு அதீத வேகத்தில் கண் முன் தெரியாமல் வண்டியை ஓட்டுவான். இறுதியாக மிருணா ஏமாற்றியபோது, இப்படி தான் வண்டியை ஓட்டி லாரிக்கு அடியில் விட்டு விட்டான். நல்லவேளையாக வண்டி மட்டுமே லாரிக்கு கீழ் சென்றது அவன் மறுபுறம் விழுந்து விட்டான்.

ஆனால், மறுநாளே கவினுக்கு வண்டி வந்து விடும். அந்த முறை தான் அவனே மிரண்டு, “எனக்கு வண்டியே வேணாம் டா. நான் குடுக்க போறேன்.” என்று சண்டை இட்டான்.

ஆரவ் “சரி நானே வேற வாங்கிக்கிறேன்.” என தோளை குலுக்கிட, அதில் வாயை மூடிக்கொண்டான்.

பின்னே, அவன் வண்டியை வாங்கி தங்களுக்கு தெரியாமல் எங்கயாவது ஓட்டி விழுந்து வைத்தால்… அதற்காகவே இன்னும் அவன் வண்டியை விற்காமல் வைத்திருக்கிறான்.

அப்போது தான் நண்பர்களை காண அங்கு வந்த லயா, அவளைக் கவனியாமல் வண்டியில் பறந்த ஆரவை யோசனையாக பார்த்து விட்டு, கவினிடம், “இவன் எங்கடா போறான் இவ்ளோ வேகமா…?” எனப் புரியாமல் கேட்க,

“ஆமா என்கிட்ட சொல்லிட்டு தான் அவன் போறான் பாரு.” என வேகமாக காரை எடுக்க, அவளும் வந்து அமர்ந்து கொண்டாள்.

“சீக்கிரம் போ!” என அவள் அவசரப்படுத்த, “இன்னும் ஒரு 10 மினிட்ஸ் தான் வண்டி ஓடும். இவனுக்கு பயந்து நான் டேங்க் ஃபுல் பண்றதே இல்ல. ஆனா இந்த 10 மினிட்ஸ் இடைல எந்த லாரியும் வராம இருக்கணும்டி.” என மிரட்சியுடன் கூறி விட்டு அவனை பின் தொடர,

உட்சபட்ச வேகத்தில் பைக்கில் சீறிய ஆரவ், “ஆஆஆஆ…” எனக் கத்தினான். மனவலைகள் அடங்கவில்லை இன்னும். மேலும் மேலும் கத்தினான்.

“எனக்கு எய்ட்ஸ் வந்துடுமா ஆரவ்?”

“அவன் என்னை ஆசையா தொடைல. என்னை தினமும் ரேப் பண்றான்னு நான் எப்படி புரிய வைப்பேன்…” இன்னும் அவள் பேசிய வார்த்தைகள் காதோரம் மீண்டும் மீண்டும் ஒலிக்க, தொண்டை கிழிய கத்தினான்.

பெட்ரோல் காலி ஆகியதில் வண்டியின் வேகம் சற்று குறைய, அதனை உணர்ந்தவன் அதே வேகத்தை கட்டுப்படுத்தாமல், எதிரில் இருந்த மரத்தில் சடாரென மோதி கீழே விழுந்தான். நெற்றியிலும் காலிலும், கைகளிலும் உரசல் ஏற்பட்டிருக்க, இன்னும் கீழே விழுந்த வண்டியின் சக்கரம் சுற்றிக்கொண்டு தான் இருந்தது. அவனின் எண்ணங்களைப் போல…

இங்கு வான்மதி அவன் சென்று பல நிமிடங்கள் ஆகியும் அதே இடத்தில் தான் அமர்ந்திருந்தாள். விழிகள் எங்கோ வெறித்திருக்க, இப்போது அவளுக்கு அவளின் காயங்கள் சுத்தமாக மறந்திருந்தது.

மெல்ல எழுந்தவள், குளியலறைக்குள் புகுந்து பாத் டப்பில் தண்ணீரை நிரப்பி, அதனுள் மொத்தமாக சென்று அமிழ்ந்து கொண்டாள். நீருக்கு அடியில் மூச்சை இழுத்துப் பிடித்தவளுக்கு அப்படியே உள்ளே மூழ்கிப் போக வேண்டும் என்று வெறி வந்தது.

“என்கூட இருந்த நேரமாச்சு அவ எனக்கு உண்மையா இருந்துருக்கலாம்ல கண்ணம்மா…”

“உடம்பெல்லாம் எரியுது. பீல் லைக் ஐ வாஸ் ரேப்ட்…” என்ற அவனின் வாசகங்கள் இன்னும் உயிர் பெற்று அவளையே சுற்ற, சட்டென நீரில் இருந்து முகத்தை நிமிர்த்தியவள், மூச்சு விட முடியாமல் மேலும் கீழும் மூச்சிரைத்தாள்.

நீரை கையால் ‘சடார் சடார்’ என அடித்து, “ஆஆஆ” வெனக் கத்தி தீர்த்தவளுக்கு இன்னும் நெஞ்சத்தின் அழுத்தம் விலகவில்லை. சுருள் சுருளாக நீரும் சுருண்டிருக்க, அதனையே வெறித்தவளின் எண்ணங்களும் அவனுடனே பயணித்தது.

இருவரும் வெளியில் கூறியது அவரவர்களின் காயங்களை மட்டும் தான். இன்னும் இருவரும் இருவரிடமும் சொல்லப்படாத புதுக்கவிதை ஒன்று இருந்தது. இனியும் அதனை பகிரும் எண்ணம் இருவருக்கும் இல்லை…

இரு வருடங்களுக்கு முன்பு…

“எங்க வீட்ல என்னை படிக்க டெல்லிக்கு போக சொல்லி டார்ச்சர் பண்றாங்கடா. என்னை காப்பாத்துங்கடா.” என கதறிக் கொண்டிருந்தாள் லயா.

அதனை நால்வருமே காதில் வாங்காமல், வெளியூர் செல்வதற்காக அவள் அளித்த உணவு ட்ரீட்டான, பீசாவை ரசித்து ருசித்து உண்டு கொண்டிருக்க,

“நான் போறேன்னு கொஞ்சமாச்சு ஃபீல் இருக்காடா பன்னாடைங்களா உங்களுக்கு. என்னை விட பீசா தான் முக்கியமா?” என உதட்டைப் பிதுக்கியவளிடம்,

கவின், “அதான் நீ கிளம்ப இன்னும் 10 நாள் இருக்குல்ல. அப்பறம் ஏன் இப்பவே ஒப்பாரி வைக்கிற” என்றான் முறைப்பாக.

ஆரவ் தான், “விடு கவி. அவள் ஆர்டர் பண்ணுன பீசா இன்னும் வரல. அதான் அது வரை சென்டியா பேசி நம்மள சாப்பிட விடாம பண்றா” என்றான் நமுட்டு சிரிப்புடன்.

அவளோ முகத்தை சுருக்கி, “போடா எரும. உன்னை போய் லவ் பண்ணேன் பாரு. என்னை சொல்லனும். கொஞ்சமாச்சு ஃபீல் இருக்கா உனக்கு.” என மூச்சிரைக்க,

“நீ லவ் பண்ணதுக்கு நான் ஏண்டி ஃபீல் பண்ணனும் பைத்தியமே.” என்றான் அவனும்.

ஹேமாவோ, “ஹே! ஒரு ஐடியா?” என ஆரம்பிக்க,

தன்விக், “என்ன இன்னொரு பீசா வேணுமா?” எனக் கேட்டான் சந்தேகமாக.

“ப்ச், அது இல்லடா. நம்மளும் நெக்ஸ்ட் வீக்ல இருந்து பெரிய ப்ராஜக்ட்ல பிசி ஆகிடுவோம். லயாவும் டெல்லி போய்டுவா. ஒரு ஒன் வீக்குக்கு எங்கயாவது ட்ரிப் போனா என்ன?” என ஆர்வமாகக் கேட்க, லயா “வாவ். செம்ம ஐடியா!” என்றாள் வேகமாக.       

ஆரவோ “ஒன் வீக்கா? நோ வே! ஒரு வாரமும் எல்லாரும் போய்ட்டா ஆபிச யாரு பாக்குறது?” என்று மறுக்க,

கவின், “ஒன் வீக் பெரிய கமிட்மென்ட் எதுவும் இல்லைல மச்சான். மேனேஜர், மத்த டீம் லீட்கிட்ட ஒப்படைச்சுட்டு போலாம். ஒன் வீக் தான” என்றவனுக்கும் ஆசை வந்தது.

தன்விக், “ஆமா மச்சான். நம்ம காலேஜ் படிக்கும் போது ட்ரிப் போனது. கிட்ட தட்ட ஆறு வருஷம் ஆச்சு நம்ம வெளிய போயே. உனக்கும் ஒரு ரிலாக்ஷேசன் வேணும்ல.” என அவனை கரைக்க, இறுதியில் மெஜாரிட்டியே வென்றது.

ஒரு வாரத்திற்கு தேவையான அளவு அலுவலகத்தை செட் செய்தவனுக்கு, கிளம்பவே மனம் வரவில்லை தான். பின்னே, பார்த்து பார்த்து உருவாக்கிய அவனின் மொத்த உழைப்பையும் ஒரு நாள் கூட பிரிந்திராதவன். முழுக்க முழுக்க அவனின் திறமையால் மட்டுமே உருவான அலுவலகம் இது. இப்போது தான், கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து கொண்டிருக்கிறான். அதனை ஒரு வாரம் விட்டுவிட்டு எப்படி செல்வது என மருகினான் தான்.

“நீ இல்லைன்னா, ஆபிஸை ஒன்னும் காக்கா தூக்கிட்டு போய்டாது” என நால்வரும் அவனை குண்டு காட்டாக தூக்கி சென்றனர், இயற்கையே அழகாய் கண் முன் விரியும் உதகமண்டலத்திற்கு.

“போடா எரும மாடு. பிசாசே. எப்போ பாரு உனக்கு வேல தான் முக்கியம். நீ இல்லாம நான் போய் என்ன பண்ண. நான் எங்கயும் போகல.” என்று தமையனை வறுத்துக் கொண்டிருந்தாள் வான்மதி.

சுதாகரோ பாவமாக, “நான் என்ன வண்டு பண்ணுவேன். ஒரு வாரம் யார்கிட்டயாச்சு ஒப்படைச்சுட்டு வரலாம் தான். ஆனா நம்ம வீட்டு பெருசுங்க, நான் இல்லைன்னா, கடையை யாரோ பாம் வைச்சு தரைமட்டமாக்கிடுவாங்கன்ற ரேஞ்சுக்கு, என்னை பாடா படுத்துதுங்க. எனக்கும் உன்கூட ஊட்டி வரணும்ன்னு ஆச தான். ஆனா சித்தப்பா தான் வரவேணாம்ன்னு சொல்றாரே.” என வராத கண்ணீரைத் துடைத்துக் கொண்டான்.

பின்னே, குடும்பம் மொத்தமும் ஒரு வாரம் உதகைக்கு செல்ல திட்டமிட்டிருக்க, இவனை மட்டும் வியாபாரத்தை பார்த்துக்கொள்ள சொல்லி விட்டனர்.

வான்மதிக்கோ, சுதாகர் இல்லாமல் பொழுதும் போகாது. அனைவரை விடவும் மிகவும் சிறியவள். அக்காக்களிடமோ அந்த அளவு உரிமையாக, விளையாட்டாக பேசிக்கொள்ள இயலாது. அவளை விட வயது மூத்தவன் என்றாலும், நெருங்கிய நண்பன் போல தான் அவளுக்கு சுதாகர்.

இருவரும் பேசிக்கொள்ளாத விஷயமே இல்லை எனலாம். இப்போதோ அவன் வரவில்லை என்றதும் அவளுக்கு உற்சாகமே அமிழ்ந்து விட்டது. பேசவும், அரட்டை அடிக்கவும், கிண்டல் செய்யவும் ஆளில்லாமல் அங்கு போய் என்ன செய்வது…?

பின், தமக்கை மற்றும் அண்ணன் குழந்தைகளை வைத்து நேரத்தை கடத்தி விட வேண்டியது தான் என தன்னைத் தானே சமாதானம் செய்து கொண்டவள், குடும்பத்துடன் உதகைக்கு பயணப்பட்டாள்.

அங்கு அவர்களுக்கு எஸ்டேட்டோடு ஒட்டிய பங்களாவும் இருந்தது. அதில் தான், பெரியப்பா குடும்பம், இரு அக்காக்களின் குடும்பம் என அனைவரும் தங்கினர். வான்மதியின் அறை மாடியில் ஒரு மூலையில் இருக்க, அவளுக்கும் அது தான் பிடித்து இருந்தது. அவளின் அறையிலேயே பால்கனியும் இருக்க, அதனை திறந்து பார்த்தவள் விழி விரித்தாள்.

வெள்ளிப் பனி மூட்டங்கள், கண்ணுக்கு விருந்தாக, தூசியற்ற குளிர் ஈரக்காற்றை கண்ணை மூடி மூச்சை இழுத்து சுவாசித்தாள்.

இத்தோடு ஹேமா நான்கு முறை வாந்தி எடுத்து விட்டாள். மலைப்பிரதேசத்திற்கு வேண்டாம் என்று அவள் எவ்வளவோ சொல்லியும், மூவரும் ஊட்டி தான் செல்ல வேண்டும் என்று பிடிவாதம் பிடித்து விட்டனர்.

அவளுக்கு தான் மலை ஏறும் போதே குடலைப் பிரட்டத் தொடங்க, காரை நிறுத்தி நிறுத்தி ஒருவழியாக அவர்கள் பிடித்த காட்டேஜிற்கு வந்து சேர்ந்தனர்.

ஹேமா கீழே இறங்கிறதும், ஓரமாக சென்று மீண்டும் வாந்தி எடுக்கத் தொடங்க, அவளை பிடித்து பிடித்தே சோர்வான மூவரும் “கொய்யால. ஓடிப்போய்டு.” என்று கடுப்பாகி காட்டேஜினுள் சென்று விட்டனர்.

ஆரவ் தான் வேகமாக எலுமிச்சையையும் தண்ணீரையும் எடுத்து வந்து, அவளின் தலையை பிடித்தான்.

“இவ்ளோ கஷ்டப்பட்டு நீ ட்ரிப் வரணுமா. அதான் உனக்கு டிராவல் ஒத்துக்காதுல.” என அதட்டியபடியே அவளுக்கு வேண்டியதை செய்தவனிடம், “நான் ட்ரிப்ன்னு தான் சொன்னேன், இந்த எருமைங்க தான் இங்க கூட்டிட்டு வந்துடுச்சுங்க.” என்றாள் மூச்சு வாங்க.

அதில் சிரிப்பை அடக்கியவன், “இன்னைக்கு ஒரு நாள் ரெஸ்ட் எடு. நாளைக்கு ஊர் சுத்தலாம்” என்றதில் தெளிவானவள், “நோ நோ. இருக்கிறதே ஒரு வாரம் தான். டைம் வேஸ்ட் பண்ண கூடாது இப்போவே போலாம்.” என வேகமாக உள்ளே செல்ல எத்தனிக்கும் போதே தலையை சுற்றியது.

சட்டென அவளைப் பிடித்துக் கொண்டவன், “நிக்கவே தெம்பு இல்லையாம். இதுல ஊர் சுத்த வந்துட்டா. வாடி உள்ள” என திட்டியபடி அவளை உள்ளே அழைத்து சென்றதை ஒரு ஜோடி விழிகள் எதார்த்தமாக பார்த்தது.

வான்மதி தான். அவர்களின் கார் தங்களுடைய பங்களாவிற்கு அருகில் வந்ததில் இருந்தே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறாள்.

பிறகே, தங்களுக்கு எதிரில் இருக்கும் காட்டேஜிற்கு வந்திருக்கிறார்கள் போல என்றெண்ணிக்கொண்டவள், ஆரவையும் அவன் ஹேமாவை தாங்குவதையும் பார்த்து விட்டு, ‘வைஃபா இருக்குமோ. பட் செம்மயா தாங்குறாங்க…’ என்று அவனை ஒரு கணம் பார்த்து விட்டு உள்ளே சென்றாள்.

வரும் வழியில் அவளின் அக்காவிற்கும் இதே போல தான் வாந்தியாக இருந்தது. ஆனால், அவரின் கணவர் அவரை திட்டி தீர்த்து விட்டார். அதனைக் கேட்டு விட்டு, இவனைக் காண அவளுக்கு சற்று விசித்திரமாக தான் இருந்தது.

“சித்தி… எனக்கு கதை வேணும்.” என அவள் அருகில் வந்து நின்றாள் ஐந்து வயது நிரம்பிய ரியா. அதில் அவளை தூக்கிக் கொண்டவள், “என்ன கதை வேணும் உங்களுக்கு…” என கேட்டபடி மீண்டும் பால்கனிக்கு வந்தவள், வானத்தை மூடி இருக்கும் மேகத்தை ஒரு நொடி ரசனையுடன் பார்த்து விட்டு, “அங்க பார்த்தீங்களா? க்ளவுட்ஸ் அழகா இருக்குல்ல.” என்று காட்ட,

அப்போது தான், காட்டேஜை முழுதும் சுற்றி பார்த்தவன், மாடியில் மட்டும் தனியாக ஒரு அறை இருந்ததில், அதில் இருக்கும் சிறிய பால்கனியை திறந்து வந்து, சில்லென்ற குளிர்நிலையைக் கையை கட்டிக்கொண்டு தாங்கி கொள்ள, அந்நேரம் தான் வான்மதி பேசியது கேட்டது.

சுற்றிலும் கடும் அமைதி தான். சுற்று வட்டாரத்தில் இவர்களை தவிர யாரும் இல்லாததால் மெதுவாக பேசினாலும் நன்றாகவே கேட்டது.

அவளை ஒரு கணம் பார்வையால் அளந்தவன், நிமிர்ந்து அவள் காட்டிய வெண்மேகத்தைக் காண,
ரியாவும் அங்கு பார்த்து, “அங்க என்ன இருக்கு சித்தி?” எனக் கேட்டாள்.

“அந்த க்ளவுட்ஸ்ல இருந்து ஏஞ்சல்ஸ் வருவாங்க.” என விழிகளை உருட்ட, “ஏஞ்சல்ஸ் வந்து என்ன பண்ணுவாங்க?” எனக் கேட்டது குழந்தை.

“நம்மளை யாராவது கஷ்டப்படுத்துனா, திட்டுனா, அடிச்சா, அந்த ஏஞ்சல்ஸ் நம்மளை சுத்தி வந்து, நமக்கு ஹெல்ப் பண்ணுவாங்க. நம்ம குட் கேர்ள் – ஆ இருந்தா நமக்கு நிறைய கிஃப்ட் குடுப்பாங்க.” என ஐந்து வயதாகவே மாறி விட்டவளிடம் ரியா,

“அப்போ என்ன எங்க அம்மா தான் அடிக்கிறாங்க. அவங்ககிட்ட இருந்து ஏஞ்சல் என்னை காப்பாத்துமா?” எனக் கேட்டு வைக்க, அவள் திருதிருவென விழித்தாள் பாவம்.

ஆரவ் தான், ‘என்னது மேகத்துல இருந்து ஏஞ்சல் வருமா?’ என விழி உயர்த்தி அவளை லூசாவெனப் பார்த்தவன், இப்போதோ ரியா கேட்ட கேள்வியிலும் அதற்கு அவளளித்த பாவனையிலும் சிரிப்பை அடக்க முடியாமல் உள்ளே சென்று சிரித்து விட்டான்.

ஆனால், அதற்கு அவள் என்ன பதிலளித்தாள் என்ற ஆர்வம் மேலோங்க, மீண்டும் அங்கு வந்து பார்த்தவனை வெறும் பால்கனி தான் வரவேற்றது.

மனமோ, ‘ஏஞ்சல்ஸ் வரமாட்டாங்க ஸ்டுப்பிட் கேர்ள். நம்மளை நம்ம தான் காப்பாத்திக்கணும்.’ என அவளிடம் கூற வேண்டும் போல இருக்க, விழிகள் அவளைத் தேடியது.

ஆனால், அவள் அதன் பிறகு அவன் கண்ணிற்கு தட்டுப்படாமல் போக, அவனும் நண்பர்களுடன் ஐக்கியமானான்.

மறுநாள், வான்மதியின் வீட்டினர் ‘லேக்’ கிற்கு செல்ல கிளம்பினர். அங்கு தான் ஆரவின் குழுவும் அன்று குழுமி இருக்க, “போட்டிங் போலாம்டா” என லயா கேட்டதில், ஹேமா “அய்யயோ வாந்தி வந்துடும்” என்று மிரண்டாள்.

கவின் “வாந்திக்கு பிறந்தவளே. உன்ன எல்லாம் உன் ஃபியூச்சர் ஹஸ்பண்ட் எப்படிடி ஹனி மூன் கூட்டிட்டு வருவான். ஹனி மூன் கூட்டிட்டு வந்த இடத்துல பெரிய மலையா பார்த்து தள்ளி விட போறான் பாரு.” என்றான் முறைப்புடன்.

“அவன் தள்ளி விடுறதுக்கு முன்னாடி அவன் மூஞ்சில வாந்தி எடுத்துட்டு தான் சாவேன்” என அவளும் சபதம் எடுக்க, ஸ்டைலாக கோக் குடித்துக் கொண்டிருந்த தன்விக் தான், முகத்தை சுளித்து, “சனியங்களா. உங்களால எனக்கு இப்ப வாந்தி வந்துடும் போல” என உமட்டியதில், அங்கு சிரிப்பலை பரவியது.

அவர்களுக்கு அருகில் நின்று தான், லேக்கில் செல்லும் படகை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் வான்மதி. அவர்கள் பேசிக்கொண்டதில் அவளுக்கே வாந்தி வரும் போல இருக்க, கூடவே சிரிப்பும் வந்தது.

‘ஓ! எல்லாரும் ப்ரெண்ட்ஸ் ஆ. நம்ம கூட அவரோட வைஃப்ன்னு நினைச்சுட்டோம்’ என தலையில் அடித்துக்கொண்டவள் ஓரக்கண்ணில் ஆரவை நோட்டமிட, அவனோ இயற்கையை ரசித்திருந்தான்.

பின் அவர்கள் நகன்று விட, படகில் செல்லும் பொருட்டு அவளின் தமக்கைகள் அழைத்ததில், அவளும் தட்டு தடுமாறி ஏறி அமர்ந்தாள். உள்ளுக்குள் ஒரு பயப்பந்து உருள, திருதிருவென விழித்தவளை அப்போது தான் ஆரவ் கவனித்தான்.

அவளின் பயந்த முகம் அவனுக்குப் புன்னகையை கொடுக்க, அவளோ, அப்போது தான் பிறந்து எட்டு மாதமான சிறிய தமக்கை இலக்கியாவின் குழந்தையை மடியில் வைத்து இறுக்கி பிடித்துக்கொண்டாள்.

இலக்கியா, “ஏய். நீயே பயந்து போய் இருக்க. அவளை ஏண்டி கைல வச்சு இருக்க குடு.” எனக் கேட்க,

“ம்ம்ஹும் மாட்டேன். பேபி என்கிட்ட இருக்கட்டும். அப்ப தான் எனக்கு பயம் இல்லாம இருக்கும்.” என தமக்கையிடம் மல்லுக்கட்டி, குழந்தையை இறுக்கிப் பிடித்த அக்குழந்தை முகம் அவன் மனதில் பதிந்து விட, “சோ ஸ்வீட்…” என வசீகரமாக இதழ் விரித்துக் கொண்டான்.

படகு ஆடியும் சாய்ந்துமாக சென்றதில், பயம் இருந்தாலும் நேரம் ஆக ஆக, நடு ஏரியில் கத்த வேண்டும் போல இருந்தது.

கத்த வாய் எடுக்கும் போதே, அவளின் தந்தையை கண்டு வாயை மூடிக் கொண்டாள். ‘பொம்பளைப்பிள்ளை… இப்படி எல்லாம் கத்த கூடாது’ என்று பாடம் எடுத்து விடுவார் என்று அவளுக்கும் தெரியும். கூடவே மாமன்கள் வேறு இருக்க, அடக்க ஒடுக்கமாக இருந்து விட்டாள்.

சுதாகரும் இருந்திருந்தால், செம்மயா என்ஜாய் பண்ணிருக்கலாம். மற்றவர் கண்ணில் மண்ணை தூவி விட்டு அவனுடன் தனியாக படகில் சென்று ஆட்டம் போட்டிருப்பாள்.

இவ்வாறாக கடமையே என படகில் அமர்ந்திருக்க அவர்களுக்கு பக்கவாட்டில் படகில் ஆரவும் அவனின் நண்பர்களும் காது கிழிய கத்திக் கொண்டே சென்றனர்.

“ப்பா. எல்லாம் அவுத்து விட்ட மாதிரி அலையுதுங்க. வீட்ல இதுங்கள எல்லாம் தேடுவாங்களா மாட்டாங்களா?” என ஸ்ரீதேவி அவர்களை திட்டிட, வான்மதிக்கு தான் கோபமாக வந்தது. அதென்ன, ஒருவரைப் பற்றி தெரியாமல் தவறாக பேசுவது… ஆனால், வாய் திறந்து கூற முடியாமல் பல்லைக்கடித்து அமர்ந்து விட்டாள்.

குழந்தைகள் மீண்டும் ஒரு முறை படகில் செல்ல வேண்டும் என அடம்பிக்க, தமக்கைகளை மட்டும் அனுப்பி விட்டு, அவள் ஒரு ஸ்டோன் பெஞ்சில் சென்று அமர்ந்து விட்டாள்.

அவளுக்கு பின்புறம் இருந்த ஸ்டோன் பெஞ்சில் தான், ஆரவும் லயாவும் அமர்ந்து தேநீர் அருந்திக்கொண்டிருக்க, மற்ற மூவரும் தின்பண்டம் வாங்குவதற்காக சென்று விட்டனர்.

லயா, எப்போதும் போல, “நம்மளும் கல்யாணத்துக்கு அப்பறம் இங்க ஹனி மூன் வருவோமா?” எனக் கண்ணடிக்க, ஆரவ் அவளை முறைத்து வைத்தான்.

வான்மதிக்கு அவர்கள் பேசுவது நன்றாக கேட்க, ஒரு மாதிரியாக இருந்ததில் எழுந்து விடத்தான் நினைத்தாள். ஆனால், ஆரவின் குரலில் அமர்ந்து விட்டாள்.

“என்கிட்ட செருப்படி வாங்க போற…” என ஆரவ் விரல் நீட்டி எச்சரிக்க,

“ப்ச் இல்லடா. இந்த ஜென்மத்துல தான் நீ ஓகே சொல்லல. அட்லீஸ்ட் அடுத்த ஜென்மத்துக்கு நான் இப்போவே சீட் போட்டு வைக்கிறேன்” என்றாள் குறும்பாக.

அவனோ மெல்லப் புன்னகைத்து, “சாரி லயா. ஒவ்வொரு ஜென்மத்துக்கும் என்னால ஒரு ஒரு பொண்ண மாத்த முடியாது. எல்லா ஜென்மத்துலயும் ஒரே பொண்ணு தான்.” என்றவனுக்கு ஏனென்று அறியாமல் வான்மதியின் முகம் ஒரு நொடி கண்ணில் வந்து போனது.

அவளோ கடுப்பாகி, “என்னடா நீயி. இந்த ஜென்மத்துலயும் லவ் பண்ண விட மாட்டுற. அடுத்த ஜென்மத்துக்கும் சீட் தர மாட்டுற. மவனே கொன்னுடுவேன். நான் ப்ரீ புக்கிங் பண்ணிட்டேன். ஒழுங்கா அடுத்த ஜென்மத்துல எனக்கு வெய்ட் பண்ணு.” என்னும் போதே அவளுக்கு சிரிப்பு வந்து விட, அவனும் சிரித்தபடி “வாய்ப்பில்லடி.” என்றான் தலையை ஆட்டி.

ஏனோ அவனின் கூற்று வான்மதிக்கு அழகாய் ஒரு புன்னகையைத் தர, “பாருடா. எல்லா ஜென்மத்துலயும் ஒரே பொண்ணா. அவ்ளோ ஜென்மத்துலயும் லவ் பண்ண முடியுமா என்ன?” என அதி முக்கிய கேள்வி தோன்றினாலும் மனமோ சில்லென இருந்தது.

அதன் பிறகு எதேச்சையாகவோ அல்லது விதியின் செயலோ இருவரும் அடிக்கடி வெளியில் பார்த்துக்கொள்ள நேர்ந்தது. அதில் ஒரு முறை கூட, வான்மதி அவனை பார்க்கும் போது ஆரவ் கவனித்தது இல்லை. ஆரவ் அவளை ரசிக்கும் போது அவள் கவனித்தது இல்லை.

இப்படியே நான்கு நாட்களும் கடக்க, அன்று ஷாப்பிங் செல்லலாம் என்று ஐவரும் கிளம்பினர்.

அவர்கள் சென்ற கடைக்கு கீழே உணவகம் இருக்க, அங்கு அவனவள் தான் ரசித்து ருசித்து ஐஸ்க்ரீமை சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.

அவளைக் கண்டதும் அவன் கால்கள் தானாக நின்று விட, “கொஞ்சம் தலைவலிக்குது. நீங்க போங்க. ஒரு காபி குடுச்சுட்டு வரேன்.” என நண்பர்களை அனுப்பி விட்டு, அவன் அவளை கவனிக்கலானான்.

ரோகிணி, “வெள்ளை கலர் ட்ரெஸ் போட்டு இருக்க. மேல கொட்டிடாம சாப்பிடு.” என எச்சரித்து திரும்பும் போதே உடையில் சிந்தி விட்டாள்.

அதில் அவன் இதழ்கள், “அச்சச்சோ. திட்டு வாங்க போறா…” என பாவப்படும் போதே, வேகமாக டிஸ்ஸியூ கொண்டு அதனைத் துடைத்தவள், நல்ல பிள்ளையாக அமர்ந்து அவளின் தாயைப் பார்த்து சிரித்து வைக்க, அவருக்கோ “என்னடி உன் சிரிப்பே சரி இல்ல. கொட்டிட்டியா” என்றார் முறைப்பாக.

“இல்லையே…” என தோளைக்குலுக்கியவளின் செய்கையிலேயே தன் மகளை கண்டுகொண்டவர், “ஒரு ஐஸ்க்ரீம ஒழுங்கா சாப்பிட தெரியுதா. நாளைக்கு உன்ன கட்டிக்க போறவன் வந்து குமட்டுலயே குத்துவான் வாங்கிக்க…” என்றபடி, அவரே சிந்திய ஐஸ்க்ரீமை நன்றாக துடைத்து விட,

அதில் சிலுப்பியவள், “அய்ய. அதெல்லாம் அவனே வந்து எனக்கு ஊட்டி விடுவான் சிந்தாம.” என்றதில், அவர்
மேலும் முறைத்தார்.

நாக்கை துருக்கி அழகு காட்டியவள், ஐஸ்க்ரீம் உண்ட கையோடு உறங்கிக் கொண்டிருந்த தமக்கை குழந்தையை கையில் அள்ளி முத்தமிட, ரோகிணி அவளின் தலையில் கொட்டினார்,

“தூங்குற குழந்தையை கொஞ்சாதன்னு எத்தனை வாட்டி சொல்லி இருக்கேன்…” என்று.

அதற்கும் ஒரு சிலுப்பலை மட்டுமே பதிலாக தந்தவளின் ஒவ்வொரு அசைவும் அவனுக்கு மட்டும் ஏதோ ஒரு புது வித உணர்வை ஊட்டியது.

அத்தியாயம் 16:

கவின் போன் செய்த பிறகே, வெகு நேரம் ஒரே இடத்தில் நிற்கிறோம் என்றே உணர்ந்தவன், வேகமாக ஆடை கடைக்குள் நுழைந்தான்.

அங்கு, பெண்கள் தான் ஆண்களுடன் சண்டையிட்டு கொண்டிருக்க, “என்னடா ஆச்சு” என்று ஆரவ் புரியாமல் பார்த்தான்.

லயா, “பாருடா இவனுங்கள. இவ்ளோ நேரம் அவனுங்க மட்டும் ஷாப்பிங் பண்ணிட்டு, நாங்க ட்ரெஸ் எடுக்க போகைல, சீக்கிரம் எடு சீக்கிரம் எடுன்னு இம்ச பண்ணுறானுங்க.” என்று கவினை முறைக்க,

அவனோ, “பின்ன என்னடா, நம்ம எடுத்தா ஒரு சட்டை மட்டும் தான் எடுப்போம். இவளுங்க, டாப்ஸ் தனியா, பேண்ட் தனியா, துப்பட்டா தனியா எடுக்குறதும் இல்லாம, அதுக்கு ஆர்னமெண்ட்ஸ் வேற…” என்று கடுப்பாக,

ஆரவ் தான், “சரி விடுங்கடா.” என அவர்களை அமைதி படுத்தி விட்டு, “நீங்க வாங்க நானே செலக்ட் பண்ணி தரேன்.” என ஹேமாவையும் லயாவையும் பெண்கள் பிரிவிற்கு அழைத்து சென்றான்.

அப்போது தான், உடை எடுக்க அங்கு நுழைந்த வான்மதி ஆரவைக் கண்டு விழி விரித்தாள்.

அத்தோடு அவள் ஆடை வாங்குவதை விட்டு விட்டு, அவனை கண்ணில் நிரப்பத் தொடங்கினாள்.

இருவரும் ஒவ்வொரு டாப்ஸையும் எடுத்து வந்து அவனிடம் காட்ட, அவனோ நல்லாவே இல்லை என திருப்பி அனுப்பினான். அதில் அவர்களே ஒரு கட்டத்தில் கடுப்பாகி, “டேய். இதுக்கு நாங்களே செலக்ட் பண்ணிடுவோம் டா” என முறைக்க, அவன் சிரிப்பை அடக்கிக்கொண்டான்.

பின், லயா வேகமாக “டேய். இங்க பாரேன் இது நல்லா இருக்குல்ல” என ஆங்காங்கே கிழிக்கப்பட்ட ஒரு டாப்ஸை கொண்டு வந்து காட்ட, அதை சுற்றி சுற்றி பார்த்தவன்,

“ஏய். இது டேமேஜ் பீஸ் போலடி. போய் கம்ப்ளெயிண்ட் பண்ணு” என கைப்பகுதி சட்டையை தூக்கி கோபப்பட, அவளோ வெறியாக முறைத்தாள்.

இங்கு வான்மதி தான், வாயைப் பொத்திக்கொண்டு சிரிப்பை அடக்க அரும்பாடுபட்டாள்.

“ஐயோ. சோ கியூட்.” என அவளறியாமல் அவனை மனதில் கொஞ்சிக் கொள்ள, அவன் பார்வை அங்கு ஒரு பொம்மைக்கு அணிவிக்கப்பட்டிருந்த புடவையின் மீது நிலைத்தது.

“அந்த சேரி அழகா இருக்குல்ல…?” என லயாவிடம் காட்ட, அவள் அவனை ஒரு மாதிரியாக பார்த்து விட்டு, ‘நம்மளை என்ன இவன் பொம்பளைப்பிள்ளையா மாத்திடுவான் போல.’ என புலம்பியபடி நகர்ந்திட, வான்மதியின் பார்வையும் அப்புடவையில் நிலைத்தது.

லாவண்டர் நிறத்தில் பூக்களால் எம்ப்ராய்டரி செய்யப்பட்ட புடவையின் பார்டர் தங்க நிறத்தில் நெய்யப்பட்டிருக்க, ஏனோ அவனுக்கு வான்மதியின் முகம் கண் முன் தோன்றியது. அவளுக்கும் அப்புடவை அத்தனை பிடித்தது. சிறிது நேரத்தில் அவர்கள் கிளம்பி விட, வான்மதி அப்புடவையையே வாங்கிக் கொண்டு கிளம்பினாள்.

சிறிது நேரத்தில், மீண்டும் அக்கடைக்கு வந்தவன், அந்த பொம்மைக்கு வேறு புடவை அணியப்பட்டிருப்பதை கண்டு, “இதுக்கு முன்னாடி ஒரு சேரி இருந்துச்சுல்ல.” எனக் கேட்டான் விற்பனை பெண்ணிடம்.

“அது சேல் ஆகிடுச்சு சார்.” என்றதில் முகம் வாடியவன்,

“வேற பீஸ் இருக்கா?” எனக் கேட்க, “சாரி சார். அது ஷோ கேஸ் பீஸ். ஒன்னு தான் இருந்துச்சு.” என்றாள்.

“ஓ. ஓகே” என அங்கிருந்து நகர்ந்தவன், ‘ப்ச், முதல்லயே வாங்கி இருக்கலாம்’ என தன்னை திட்டிக்கொண்டான்.

இதற்கு முன் எல்லாம், புடவை வாங்கி பழக்கம் இல்லை அவனுக்கு. அத்தையுடன் அவ்வப்பொழுது செல்வான் என்றாலும், வருங்கால மனைவிக்கு என்றெல்லாம் எந்த கனவும் இருந்தது இல்லை. இப்போதோ அவனின் செயல்கள் எல்லாம் அவனை மீறி வெளிவந்து கொண்டிருந்தன.

இன்னும் இரு நாட்களில் இருவருக்குமே பயணம் முடியும் தருவாயில் இருக்க, வான்மதிக்கு அவனிடம் ஒரு ‘ஹாய்’ ஆவது சொல்ல வேண்டும் போல இருந்தது.

“சே, சுத்தி இருந்திருந்தா, இந்நேரம் அவங்களை பிரெண்டு புடிச்சு இருக்கலாம்.” என சலித்தவள், “ஆனா, அவங்க கூட தான் ரெண்டு பொண்ணு இருக்காங்களே. என்னை விட சீனியர்ஸ் தான் போல. ஆனாலும் ரொம்ப ஜோவியல் – ஆ இருக்காங்க. பேசாம அவங்ககிட்ட பிரெண்ட் ஆகி அப்படியே அவருக்கும் ஒரு ஹாய் சொல்லணும்.”

இங்கு ஆரவின் நிலையும் அது தான்.

“அந்த பொண்ணுகிட்ட ஒரு ஹலோ கூட சொல்லல. ஆனா, யாருன்னே தெரியாம எப்படி பேசுறது. லயாகிட்ட சொல்லி அப்ரோச் பண்ண சொல்லலாம்ன்னா, அவள் சாமி ஆடுவா. பேசாம நம்மளே பேசி, ப்ரெண்ட் ஆகிடலாமா? ஆனா, தப்பா எதுவும் நினைச்சுக்குவாளோ? ப்ச், நான் என்ன ப்ரொபோஸ் – ஆ பண்ண போறேன். ஜஸ்ட் ஒரு ப்ரெண்ட்லி டாக் இங்க இருந்து போறதுக்குள்ள… அவ்ளோ தான்” என தனக்குத் தானே பேசிக்கொண்டான்.

இருவரும் ஒன்றும் ஒருவரை ஒருவர் இல்லாமல் வாழ இயலாது என்ற அளவு காதல் கடலில் எல்லாம் மூழ்கவில்லை. ஆனால், இருவருக்குமே இருவரையும் பிடித்தது.

அந்தி மாலை வேளையில், குளிர்க் காற்று வீசும் போது, லேசாக மென்சாரல் மேனியை தழுவுகையில், கையில் இருக்கும் காபி கோப்பையில் இருந்து துளி துளியாய் உறிஞ்சுகையில் எப்படி ஒரு இதமான உணர்வு எழுமோ அப்படித் தான் இருவருக்கும்.

மறுநாள் கண்டிப்பாக பேசி விட வேண்டும் என்று இருவரும் முடிவெடுத்திருக்க, வான்மதி கூந்தலை சரி பார்த்துக் கொண்டு, பால்கனியில் சென்று எட்டிப் பார்த்தாள். இன்றும் அவர்கள் எங்கோ வெளியில் கிளம்பிக் கொண்டிருக்க, எப்படி பேசுவது என சிந்தித்துக் கொண்டிருந்தவள் சற்று திகைத்தாள்.

அது கொஞ்சம் சாய்வான பகுதி ஆதலால், ஆரவிற்கு பக்கத்து காட்டேஜில் அப்போது தான் நிறுத்தப்பட்ட கார் ஒன்று, ஹேண்ட் பிரேக் போடாமல் இருந்ததால், நிமிட நேரத்தில் பின்னால் சறுக்க, அப்போது தான் ஹேமாவிடம் ஏதோ பேசியபடி நடு ரோட்டில் நின்றிருந்த தன்விக்கின் மீது மோத வந்தது.

அதில், வான்மதி “அண்ணா தள்ளுங்க.” என கத்தும் போதே, அவன் காரை பார்த்து விட்டு நகர போகையில் அவனின் காலில் பலமாக அடிபட்டு விட்டது. அதில் அனைவரும் அவனருகில் பதறி வந்து விட, ஆரவ் அந்த கார்காரனிடம் சண்டைக்கு சென்று விட்டான்.

லயா, “ப்ச் சண்டை போட நேரம் இல்லடா. நல்லா அடிபட்டுருக்கு ஹாஸ்பிடல் போலாம்” என்றபடி அவனை காரினுள் போட்டு, அனைவரும் ஏறிக்கொள்ள, ‘நம்ம கீழ போய் பாக்கலாம்’ என வேகமாக வான்மதி கீழே இறங்க, அப்போது தான் ஒரு நொடி ஆரவின் விழிகள் வெறுமையாக இருந்த பால்கனியில் ஒரு நொடி படிந்து மீண்டது.

ஒருமுறையாவது இருவரின் விழிகள் ஒருவரை ஒருவர் தீண்டி இருந்தால் கூட அது பல கதைகள் கூறி இருக்கும். ஆனால், அதற்கான சந்தர்ப்பமே கிடைக்காது போக, அவன் கிளம்பி இருந்தான்.

சரியாக அவன் கிளம்பியதும் தான் மூச்சு வாங்க வாசலில் வந்து நின்றவளுக்கு, காரின் பின் பகுதி மட்டுமே தெரிந்ததில் மனதில் சிறியதொரு ஏமாற்றம்.

அதன் பிறகு, அவனை அவள் பார்க்கவே இல்லை. அவனும் அவளை பார்க்கவில்லை. மற்றவர்களின் பெயர் கூட அறிந்திருக்கவில்லை.

சில நேரம், ஊட்டியை பற்றி நினைக்கையில் அழைப்பு இல்லாமலேயே அவளின் நினைவு வந்து விடும் அவனுக்கு. அவளுக்கும் அப்படி தான்.

இந்த சம்பவம் நிகழ்ந்து மூன்று மாதத்திலேயே, வான்மதிக்கு வரன் பார்க்க ஆரம்பித்தனர். அப்போது சென்னையில் புது கிளை திறப்பதற்காக குடும்பத்துடன் சில நாட்கள் சென்னையில் தங்க முடிவெடுத்து கூடவே மாப்பிள்ளையும் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அவளுக்குத் தான் மனம் ஒரு நிலையில் இல்லை. அதற்காக முன்னே பின்னே தெரியாத, இதுவரை பேசி கூட இருக்காத ஒருவனின் மேல் கடும் காதல் என்றெல்லாம் பிதற்றும் அளவு அவள் முதிர்ச்சியற்றவளும் இல்லை. அவன் எப்போதும் அவளுக்கு ஒரு பரவச நிலை. எப்போது நினைத்தாலும் ஒரு மகிழ்வு கொடுக்கும் அவனின் நினைவு.

அவனுக்கும் அவள் சாரல் மழை. எப்போது நினைத்தாலும் மனதில் ஒரு மலர்ச்சி கொடுக்கும் அவளின் நினைவு.

இப்படிப்பட்ட நிலையில் தான், அவனின் அத்தை வனிதா, அவனை திருமணம் செய்து கொள்ள சொல்லி அடம்பிடித்தார். அவனோ, “எனக்கு கல்யாணம் பண்ண இன்டரஸ்ட் இல்ல” என்று தவிர்த்து வர,

அவரோ, “இங்க பாரு ஆரவ். எவ்ளோ நாள் உன் ப்ரெண்ட்ஸ் உன் கூட இருப்பாங்க. நாளைக்கு அவங்களுக்குன்னு ஒரு குடும்பம் வந்துட்டா, நீ தனியாள் ஆகிடுவ. உன்னை என்ன நான் உடனேவா கல்யாணம் பண்ண சொல்றேன். ஜஸ்ட் ப்ரோக்கர்கிட்ட உன் டீடெய்ல் மட்டும் குடுத்து வைக்கிறேன். வர்ற பொண்ணுல உனக்கு பிடிச்ச பொண்ணை செலக்ட் பண்ணு.” என்றிட, அவனோ முற்றிலும் மறுத்து விட்டான்.

“என் போட்டோ எல்லாம் தர முடியாது அத்தை. எனக்கு பிடிக்கல” என்றதில், ஹேமா தான், “அத்தை அவன் போட்டோ நான் பிரிண்ட் போட்டு தரேன்.” என கிசுகிசுத்தாள்.

அதில் அவனுக்கு தெரியாமலேயே போட்டோவையும், அவனை பற்றிய சிறு விவரங்களையும் ப்ரோக்கரிடம் கொடுத்து வைக்க, இங்கோ வான்மதி அவள் தாயிடம் மன்றாடினாள்.

“ம்மா ப்ளீஸ் மா. நீங்க மாப்ள பாருங்க ஓகே. ஆனா என் போட்டோவை குடுக்க எனக்கு பிடிக்கல.” என்றதில், “போட்டோ குடுக்காம எப்பிடி மதி?” என அவர் முறைத்தார்.

சிறிது சிந்தித்தவள், “இப்ப இருக்கற போட்டோ வேணாம். வேற போட்டோ தரேன்” என அவள் பள்ளி படிக்கையில் எடுத்த போட்டோவை கொடுத்து விட்டாள். அப்போது தலை நிறைய எண்ணெய் தடவி, பார்க்க அடையாளம் தெரியாத அளவு இருப்பாள். முதன் முறை பார்ப்பவருக்கு கண்டிப்பாக பிடிக்காது. அப்படியே சிறிது நாள் சமாளிக்கலாம் என பல திட்டம் தீட்டிட, அப்புகைப்படம் நேராக ஆரவிற்கும், அவனின் புகைப்படம் நேராக வான்மதிக்கும் தான் வந்தது.

ஒரு கணம் அவள் கண்ணை அவளாலேயே நம்ப இயலவில்லை.

‘ஐயோ! இது என்ன கோ – இன்சிடென்ட் ஆ? வாவ்!’ என ஹாலில் அமர்ந்து துள்ளி குதிக்க இயலாமல், மனத்தினுள்ளே மானசீகமாக குத்தாட்டம் ஆடிக் கொண்டிருந்தாள்.

அப்படியே மெல்ல எட்டி தந்தையின் கையில் இருந்த அவனின் பயோ – டேட்டாவை மேய்ந்தவள், அவனின் பெயர் ஆரவ் முகிலன் என்றறிந்ததும்,

‘அட… முகில்… பேர் நல்லா இருக்கே. என் பேர்ல வானம், அவரு பேருல மேகம்… வான்மேகம்… வாவ்! ஐயோ இப்ப நான் என்ன பண்ணுவேன். பேர் கூட செம்ம பொருத்தமா இருக்கே.’ என மகிழ்ச்சியில் திக்குமுக்காடினாள்.

வீட்டினருக்கும் அவனைப் பிடித்து இருப்பதை காதில் கேட்டு வைத்துக் கொண்டவளுக்கு இன்னும் மகிழ்ச்சி தாளவில்லை. நைசாக அவனின் முகப்புத்தக ஐடியை மட்டும் கண்ணால் சுட்டு விட்டு, வேகமாக அவளறைக்குள் சென்று மடிக்கணினியை திறந்தாள்.

அவசரமாக அவனின் ஐடியை தேடிட, அதில் பளிச்சென புன்னகைத்தபடி இருந்த அவனின் புகைப்படத்தைக் கண்டதும் அவளின் இதழ்கள் தானாகப் புன்னகைத்துக் கொண்டது.

அந்நேரம் ஆரவ், “அத்தை… என்னை ஜெயில்ல தள்ளலாம்ன்னு பிளான் பண்ணிருக்கீங்களா?  ஸ்கூல் படிக்கிற பொண்ணை எல்லாம் பார்த்து இருக்கீங்க…” என அவன் பதற,

அவரோ அப்போது தான் அதனை கவனித்து, “அட ஆமா, ஆனா, ரெயின்போ டெக்ஸ்டைல் ஓனர் பொண்ணு டா. இப்போ தான் படிப்பை முடிச்சுச்சு. போட்டோ மாத்தி கொடுத்துட்டாங்க போல. கொஞ்ச நேரம் முன்னாடி தான் அந்த பொண்ணு அப்பா கால் பண்ணி உன்ன பிடிச்சு இருக்கு. நாளைக்கு கோவில்ல பார்க்கலாமான்னு கேட்டாரு.” என்றதில்,

அவன் “என் போட்டோ எப்படி அவங்களுக்கு போச்சு?” என்றான் கண்ணை சுருக்கி.

“அது… அது… அதுவா இப்ப முக்கியம். நீ நாளைக்கு போய் அவங்களை பார்த்துடு. நானும் வரணும்ன்னு ஆசை தான். ஆனா உன் மாமா வீட்டுல இருப்பாரு. அதனால உன் நம்பரை குடுத்து இருக்கேன். எதுனாலும் உங்கிட்ட பேச சொல்லிருக்கேன்.” என்றவர் கிளம்பி விட, அவன் தலையில் அடித்துக் கொண்டான்.

சில நொடிகள் கழித்து மீண்டும் அப்புகைப்படத்தை பார்த்தவனுக்கு ஏதோ நெருட, அவளின் பயோடேட்டாவில் இருந்த மெயில் ஐடி கொண்டு அவளின் முகப் புத்தக ஐடியை தேடினான்.

“வான்மதி” என்ற பெயர் அவன் மனதோடு ஒட்டிக்கொண்டு, ஊட்டியில் பார்த்த பெண்ணையே நினைவு படுத்த, சரியாக வான்மதியின் சிறு சிரிப்பை ஏந்திய புகைப்படத்தோடு அவளின் புகப்புத்தக ஐடியும் கண்ணில் தெரிந்தது.

அவசரமாக, பயோ – டேட்டாவில் இருந்த விவரத்தையும் அதில் அவள் கொடுத்திருந்த விவரத்தையும் சரி பார்த்தவனுக்கு, நம்பவே இயலவில்லை.

“அட நம்ம ஆளு. இவள் பேர் வான்மதியா. சோ ஸ்வீட். ஆனா, எப்படி இது…? ஐ காண்ட் பிலீவ் திஸ்” என வாய்விட்டே கத்தி விட்டவனின் விழிகள் அவளிடமே தங்கியது.

ஒரு புகைப்படத்தில் கூந்தல் முகத்தை மறைக்க அவள் போஸ் கொடுத்திருக்க, புகைப்படம் என்பதை மறந்து, அக்கூந்தலை விலக்க எத்தனித்த கரங்களை எண்ணி இதழோரம் நகை பிறந்தது அவனுக்கு.

‘ஃப்ரெண்ட் ரெகுவெஸ்ட் குடுப்போமா?’ என சிந்தித்தவன், ‘ப்ச், வேணாம். நாளைக்கு நம்மள நேர்லயே பார்க்கட்டும்.’ என மர்மமாக சிரித்துக் கொண்டான்.

அங்கோ, வான்மதி ‘ஃப்ரெண்ட் ரெகுவெஸ்ட் குடுப்போமா’ என தயக்கத்துடன் சிந்தித்து விட்டு, கொடுத்தும் விட்டவள், அடுத்த நொடி அதனை நீக்கி விட்டாள்.

‘வேணாம் வேணாம். நாளைக்கு நம்மள நேர்லயே பாக்கட்டும்’ என்று.

ஆனால், நொடி நேரத்தில் அவள் அனுப்பிய ரெகுவெஸ்ட்டை அவன் கண்டுகொண்டிருந்தான்.

அதில் சத்தமாகவே சிரித்து விட்டவன், ‘மேடமும் என்னை மாதிரியே குழப்பத்துல இருக்காங்க போல. ம்ம். ஸ்கூல் போட்டோ குடுத்து ஏமாத்துறியா. நாளைக்கு இருக்கு உனக்கு.’ என செல்லமாக திட்டிக்கொண்டவனுக்கு, தெரியாது அவளுக்கும் அவனைத் தெரியும் என்று.

இப்போது புகைப்படத்தை பார்த்ததை வைத்தே, ‘ரெகுவெஸ்ட்’ கொடுத்தாள் என்று இன்றளவும் நம்பிக் கொண்டிருக்கிறான்.

அவளுக்கும் தெரியாது. கோவிலில் வைத்து தான் தன்னை முதன்முறை பார்க்க போகிறான் என்றே நம்பிக் கொண்டிருந்தவள், மறுநாள் பரபரப்பாகக் கிளம்பினாள்.

‘அவரை பார்க்கும் போது எனக்கு வந்த ஒரு சில் ஃபீல் அவருக்கும் என்னை பார்த்து வருமா?’ என்ற சந்தேகத்துடன், அவனுக்கு பிடித்ததால் வாங்கிய புடவையையே அணிந்து கொண்டாள்.

‘இதை பார்த்து ஷாக் ஆவாரா?’ என கற்பனை செய்து பார்த்து புன்னகைத்துக் கொண்டவள், “எப்படியும் போட்டோல என்னை அடையாளம் தெரியாது. சோ, முதல் முறை நேர்ல பாக்கும் போதே அப்படியே ஃப்ளாட் ஆகிடனும் மதி.” என கண்ணாடி பார்த்து தனக்கு தானே பேசிக் கொண்டாள்.

‘இந்த ஷர்ட் நல்லாவே இல்ல… அவள் என்னை ஃபர்ஸ்ட் டைம் நேர்ல பார்க்கும் போதே, என்னை பார்த்து பட்டாம்பூச்சி பறக்கணும்.’ என பேராசை கொண்டான்.

‘ஆனா இது உனக்கே கொஞ்சம் ஓவரா இல்ல’ என்று தன்னையே அறைந்து கொண்டவன், அத்துடன் பத்து சட்டை மாற்றி இருந்தான். 

இந்த கலவரம் எதையும் நண்பர்களிடமும் கூறவில்லை அவன்.

“சே, அன்னைக்கு மட்டும் அந்த சேரியை வாங்கி இருந்தா, இன்னைக்கு அவளை ஃபர்ஸ்ட் டைம் பாக்கும் போதே குடுத்து இம்ப்ரெஸ் பண்ணிருக்கலாம். சொதப்பிட்டியே ஆரவ்.” என முகத்தை சுருக்கிக்கொண்டவன், தன்னை எண்ணி சிரித்தும் கொண்டான்.

சரியாக அறையை விட்டு வெளியில் வரும் போதே, வான்மதியின் தந்தை பரணி போன் செய்திருந்தார்.

சற்று நேரம் முன்பு தான் கஜேந்திரனுடன் பேசிக் கொண்டிருந்தவர்,

“என்ன இந்த பையனுக்கு குடும்பம் எதுவும் இல்ல போல. அதான் யோசனையா இருக்கு” என்று தாடையைத் தடவ,

ரோகிணி, “குடும்பம் இல்லையா? அப்பறம் ஏங்க இன்னைக்கு பார்க்கலாம்ன்னு சொன்னீங்க. எனக்கும் வயசாகிட்டே வருது. நாளைக்கு அவளுக்கு பிள்ளை பேறு எல்லாம் பார்க்க எனக்கு உடம்பு ஒத்துழைக்குமோ என்னவோ. போற இடத்துல குடும்பமா இருந்தா தான, அவளுக்கும் ஒத்தாசையா இருக்கும்.” என்று தன் எண்ணத்தை கூற,

“பையன் நல்லா இருக்கான். சொந்தமா தொழில் பண்றான். ஆனா, என்ன வசதி நம்மள விட கம்மி தான். ஆனா நல்ல பையன்னு கேள்வி பட்டேன். இப்பதான் கொஞ்சம் உறுத்தலா இருக்கு.” என்று சிந்திக்க, கஜேந்திரன் என்னவென பார்த்தார்.

“இல்ல. குடும்பமும் இல்ல. தொழிலும் இப்ப தான் கொஞ்ச கொஞ்சமா கை குடுக்குது போல. இதுல ப்ரெண்ட்ஸ் அது இதுன்னு சுத்துற பையன் போல. எப்போ பார்த்தாலும் கூட ரெண்டு பொம்பளபிள்ளை இருக்குன்னு தரகர் சொன்னாரு. அவசரப்பட்டு வர சொல்லிட்டோமோன்னு இருக்கு.” என்றார் யோசனையாக.

கஜேந்திரன், “ம்ம்ஹும். இது சரிவராது பரணி. நீ போனை போட்டு சொல்லிடு. எதுக்கு தேவை இல்லாம இதை இழுத்துக்கிட்டு.” என்றதில் அவருக்கு அதுவே சரியென தோன்ற, ஆரவிற்கு போன் செய்து, இதனை அச்சு பிசகாமல் கூறி இருந்தார்.

முதலில் குடும்பம் இல்லை எனக் கூறியதில் சுருக்கென வலித்தாலும், “நான் அவளை நல்லா பார்த்துக்குவேன்” என்றான்.

“தொழில்ல இப்ப தான் கால் ஊண்டிட்டு வர்றீங்க” என்றிட, அதற்கும் “நான் அவளை உங்களை விட வசதியா வைச்சுக்குவேன்” என்றான்.

பின், இறுதியாக ‘கூட இரு பெண்களுடன் சுற்றுவது எங்கள் குடும்பத்திற்கு சரியாக வராது. எங்களுக்கு குடும்பத்துடன் இருக்கும் பையன் தான் வேணும்’ என்று விட, அதற்கு அவன் ஒன்றும் கூறவில்லை.

‘அப்போ உங்க பொண்ணுக்கு வேற பையன் பார்த்துக்கோங்க’ என்ற பதிலுடன் போனை வைத்து விட்டவனுக்கு, மெல்ல மெல்ல ஒரு வித வலி மனமெங்கும் சூழ்ந்தது.

இதனை அறியாத வான்மதி, குதூகலமாக கிளம்பி ஹாலுக்கு வர, அங்கோ நிகழ்ந்ததை அறிந்து உறைந்து விட்டாள். ஏமாற்றம் வலித்தது. அதிலும் அவர்கள் கூறிய காரணம் ஒன்றைக் கூட அவளால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. அதிலும் இறுதியாக கூறியதை முற்றிலும் ஏற்றுக்கொள்ள இயலவில்லை.

‘அவங்க எல்லாரும் ரொம்ப நல்லவங்க’ என வாய் வரை வந்தாலும் சொல்ல முடியவில்லை. எப்படி சொல்வது? எனக்கு எப்படித் தெரியும் என்று கேட்டால் என்னவென்று சொல்வது? முதலில் அவன் மீது இருக்கும் உணர்வை எப்படி விளக்குவது?

விளக்கமுடியா உணர்வல்லவா அவன்… அவளுள் வேரூன்றி விட்ட மரமல்லவா அவன். ஒன்றும் புரியவில்லை அவளுக்கு.

லேசாக கண்ணில் நீர் திரள்வது போல இருக்க, இதென்ன முட்டாள்தனம் என தன்னை திட்டிக்கொண்டு, “அப்பா… என்கிட்ட சொன்ன காரணத்தை அவருகிட்ட சொல்லிடாதீங்கப்பா. பாவம் வருத்தப்படுவாரு.” என மெல்லிய குரலில் கூறி விட்டு அவர் பேச வருவதை கேளாமல் அறை நோக்கி சென்று விட்டாள்.

அவனுக்காக அவள் வாங்கிய புடவை அவளை ஏளனமாய் பார்ப்பது போல இருக்க, முதலில் அதனை கழற்றி எறிந்தாள்.

சுடிதாரை போட்டுக்கொண்டு உணர்ச்சி துடைத்த முகத்துடன் பால்கனியில் வந்து நின்றவளுக்கு, அன்றும் சில்லென குளிர் காற்று, லேசான மென்சாரல் அடிக்க, அவளுள் ஒரு வித வலி கனன்று கொண்டிருந்தது.

பின் நிமிர்ந்து மேகத்தை பார்த்தவள், “பேர்ல மட்டும் க்ளவ்ட்  இல்ல. என் வாழ்க்கையிலயும் நீங்க பாசிங் க்ளவ்ட் தான் முகில். இப்படி ஒருத்தி உங்களை நினைச்சு ஃபீல் பண்றது கூட உங்களுக்கு தெரியாதுல. ப்ச். தெரிய வேணாம். இது எனக்கே எனக்கான ஃபீல். இத்தோட இந்த ஃபீலை அழிச்சுடுவேன்.” என்று கண்ணை மூடி ஒரு கணம் நிதானித்தவள், துளியாய் வெளிவந்த கண்ணீரை அழுந்தி துடைத்துக் கொண்டாள்.

ஆரவ் போனை தூக்கி எறிந்திருந்தான். “குடும்பம் இல்லாதது என் தப்பா? உழைச்சு முன்னுக்கு வர்றது என்ன அவ்ளோ பெரிய பாவமா? என் ப்ரெண்ட்ஸ பத்தி பேச அவருக்கு என்ன ரைட்ஸ் இருக்கு.” என பல்லைக்கடித்தவனின் கண்ணிற்குள் வான்மதியின் முகமே வந்தது.

ஆதங்கம் தாளாமல் பால்கனிக்கு சென்றவன், துளியாய் தூறிக்கொண்டிருந்த வானத்தை வெறித்தான்.

“என் வானத்தோட மதி நீ இல்லையா கண்ணம்மா. உன்ன லவ் பண்ணலாம் இல்ல. ஆனா, ஒரு மாதிரி வலிக்குது. இது என்ன மாதிரி பெயின்னு எனக்கே தெரியல. என்னை உனக்கு யாருன்னு கூட தெரியாது. ஆனா, உன்னால நான் இங்க வானத்தை பார்த்து உளறிட்டு இருக்கேன். அது உனக்கு தெரியவே போறது இல்லைல.” என பெருமூச்சு விட்டவன்,

“இப்பவும் நீ எனக்குள்ள அதே ஃபீலை தான் குடுக்குற கண்ணம்மா. இப்போ இல்லை எப்பவும் இந்த ஃபீல் மாறாது. ஆனா, இனிமே உன்ன நினைக்க மாட்டேன்.” என்றவன், “ஊஃப்… ஊஃப்” என பெரிய பெரிய மூச்சுக்களை இழுத்து விட்டு, அவளின் நினைவுகளை அடியாழத்திற்கு அனுப்பத் தொடங்கினான்.

முத்து மழையே
முத்து மழையே
மண்ணை தொடும் முன்
மறைந்தது என்ன

வெள்ளி மழையே
வெள்ளி மழையே
துள்ளி வந்து
தொலைந்தது என்ன

தாவணி மின்னல்
சிதறி அடிக்க
மன்மத இடிகள்
மனதில் இடிக்க

இளமை வயலில்
காதல் முளைக்க
மறுமுறை மறுமுறை
ஒரு முறை வருவாயா

நீ வரும்போது
நான் மறைவேனா
நீ வரும்போது
நான் மறைவேனா 
  
தேன் தூவும்!
மேகா

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
52
+1
201
+1
5
+1
3

  உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

  2 Comments

  1. மிகவும் அழகான நாவல். படித்து முடிக்கும் வரையிலும் கதையினை விட்டு நகர இயலாதவாறு வெகு சுவாரஸ்யமாக அமைந்தது கதையின் போக்கு. எழுத்தாளருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

  2. priyakutty.sw6

   Oh…

   Apo munnave therium..orutharukoruthara…

   Alaga irundhuchu dr
   ..andha scens lam…❤️

   Apdiye…oru nallavanuku kati koduthutaanga…aarav ah korai solla…😒