“அத்தை வீட்டிலிருந்து நான் கிளம்பிட்டேன் மா. யக்ஷி அங்கே தான் இருக்கா” என்று தாயிடம் தகவல் தெரிவித்தான் அற்புதன்.
“ம்… ஓகே டா” என்றார் கீரவாஹினி.
அன்று ஞாயிற்றுக்கிழமை இல்லை ஆதலால், அவன் மற்றும் யக்ஷித்ரா மட்டுமே விடுப்பு எடுத்திருப்பதாலும், நண்பர்களுடனும் நாளைச் செலவிட இயலாமல் போனது அற்புதனுக்கு.
அதனால், தன்னுடைய வீட்டிற்கு வந்து விட்டான்.
“அங்கே சாப்பிட்டுட்டேன் மா. இனி, ஆறு மணியைப் போல, யக்ஷிக்குக் கூப்பிட்டுப் பேசனும் வர்றதாக இருந்தால், போய் அழைச்சுட்டு வந்துட்றேன்” என்று தெரிவித்தான் அற்புதன்.
“நாளைக்கு லீவ் எடுக்கிறதாக எதுவும் சொன்னாளா?” என்று மகனிடம் வினவினார் கீரவாஹினி.
“சொல்லலை ம்மா” என்றான் அவரது மகன்.
“அப்போ சாயந்தரம் கால் செய்து கேளு” என்று கூறினார் அன்னை.
அறைக்குள் அடைந்து கொண்ட அற்புதனால், மனைவியின் ஞாபகங்களை நெட்டித் தள்ள முடியவில்லை.
இதுநாள் வரை, அவர்களிருவருடைய திருமண வாழ்வு, ஏனோ தானோ என்று இருந்தது
ஆனால், இப்போது, யக்ஷித்ராவைப் பற்றி, அறிய ஆரம்பித்ததும், புதிதாக ஒரு பரிமாணத்தைக் காட்டினாள் அவனுக்கு.
தங்களிடையே,பட்டும் படாமல், இருந்தப் பந்தம் உடைந்து போகப் போகிறது என்ற உண்மையை அறிந்தவன், இன்றைய நாள் மட்டும் யக்ஷித்ரா, அவளுடைய இல்லத்தில் தங்கி விட்டால், தன் நிலை தான் மோசமாகி விடும் என்பதையும் புரிந்து கொண்டான் அற்புதன்.
“நைட் இங்கேயே தங்குறேன் மா” என அன்னையிடம் அனுமதி வேண்டினாள் யக்ஷித்ரா.
“மாப்பிள்ளைக் கிட்டக் கேட்டியா?” என்றக் கேள்வியை முன் வைத்தார் மீனா.
“இல்லை ம்மா. நீங்க ஓகே சொன்னால், அவர்கிட்டக் கேட்பேன்” என்றாள் மகள்.
“உன் அத்தை, மாமா?” என்றவரை இடைநிறுத்தி,
“எவ்ளோ நாள் வேணும்னாலும், இங்கே நான் தங்கப் பர்மிஷன் கொடுத்துட்டாங்க அம்மா!” என்று அவரிடம் கூறினாள் யக்ஷித்ரா.
தாயின் சம்மத்ததைத் தான் எதிர்பார்த்துக் கொண்டு இருந்தாள் யாதவி.
உடனே,”தங்கிட்டு நாளைக்குக் கிளம்பு யக்ஷி” என்று அவளது கோரிக்கைக்கு அனுமதி தந்தார் மீனா.
கணவனின் எண்ணத்தை, ஏக்கத்தை அறியாமல் அவனுக்கு அலைபேசியில் அழைத்தாள் யக்ஷித்ரா.
ஒருவேளை, வீட்டிற்கு வந்து அழைத்துச் செல்லக் கூப்பிடுகிறாள் என்ற ஆவலுடன், மனைவியின் அழைப்பை ஏற்றுக் காதில் வைத்தான் அற்புதன்.
“ஹலோ யக்ஷூ!” என்றவனது பரிமறிப்பு, இவளைச் துணுக்குறச் செய்யப் போதுமானதாக இருந்தது.
அதைச் சட்டைச் செய்யாதவள்,”என்னங்க! நான் இன்னைக்கு இங்கேயே தங்கப் போறேன். உங்களுக்கும், அத்தை, மாமாவுக்கும் இன்ஃபார்ம் செய்யக் கால் பண்ணேன்” என்றாள் அவனது ஆசை மனைவி.
ஆனால், அதைக் கேட்டவனுடைய,
முகமோ, அநியாயத்திற்குப் பரிதாபத்தைச் சூடிக் கொண்டது.
“ஹலோ!” என்று மறுமுறை அவனை உரத்து அழைக்கவும்,
“ஹாங்! நான் இங்கே சொல்லிக்கிறேன் யக்ஷூ. நீ அங்கத் தங்கிட்டு வா” என்று அவளுக்கு ஒப்புதல் அளித்தான் அற்புதன்.
“சரிங்க” என்று குறுகுறுப்புடன் அழைப்பைத் துண்டித்தாள் யக்ஷித்ரா.
அவளது வதனத்தைக் கண்ட மீனா,”மாப்பிள்ளை என்ன சொன்னார் யக்ஷி?” என்று மகளிடம் கேட்டார்.
“ஓகே சொல்லிட்டார் ம்மா” என்றாள்.
ஏன் இப்படி பேசினான்? என்று புரியவில்லை அவளுக்கு.
அன்னையிடம் இருந்து விலகிச் சென்ற யக்ஷித்ரா, தனது அழைப்பை, மகிழ்வுடன் ஏற்கும் அளவிற்கு, அவனுக்கு என்ன ஆனது?
தன்னிடம் கதைக் கேட்டும் ஆர்வமா? அதனால் தான், தனது வரவிற்காக ஆவலுடன் காத்திருக்கிறானா? தான் கூறும் கதையில், அப்படி என்ன, சுவாரசியம் உள்ளது? அல்லது தன்னிடம் பேச எழுந்த ஆசையா? ஒன்றும் விளங்கவில்லை யக்ஷித்ராவிற்கு.
ஆனால், அவனிடம் ஏதோ மாற்றம் தெரிகிறது என்பதை அறிந்தாள். அந்த மாற்றம் இவளுக்கும் தோன்றப் போகும் நாள் வெகு தூரமில்லை.
அன்னை மற்றும் தங்கையுடன் அளவளாவத் தொடங்கியவள், இரவு உணவையும் உண்டு விட்டு, யாதவியின் அறையில் நிம்மதியாக உறங்கி விட்டாள் யக்ஷித்ரா.
மனைவி இங்கில்லை என்ற ஏமாற்றத்தை விழுங்கிக் கொண்டு, தன்னறைக் கட்டிலில் கவிழ்ந்து படுத்து விட்டான் அற்புதன்.
தாய் வீட்டில் தங்கி விட்டுத், தங்கையுடன் அழகானப் பொழுதுகளைச் செலவிட்டு, இப்போது தன் புகுந்த வீட்டிற்குச் செல்லத் தயாரானவள்,
“அம்மா! யாது! பார்த்துப் பத்திரமாக இருங்க. இதே போல, நான் இங்கே வந்து போவேன்” என்று தைரியம் சொல்லி விட்டு ஆட்டோவில் ஏறினாள் யக்ஷித்ரா.
அதிகாலை நேரத்தில், கணவனது உறக்கத்தைக் கலைக்கத் தோன்றாமல், ஆட்டோவில் வந்து விடுவதாக, இரவு குறுஞ்செய்தி அனுப்பி வைத்திருந்தாள்.இனால், அவள் செய்த செயலால், தூக்கம் தொலைந்து, வருந்திக் கொண்டிருந்தான் அற்புதன்.
மறுநாளும் கூட, அதை விடாமல்,
“நான் தானே பைக்கில் கூப்பிட்டு வர்றதாகச் சொன்னேன். அப்பறம் ஆட்டோவில் வர்றேன்னா என்ன அர்த்தம்?” என்று பெற்றோரிடம் புகார் செய்தான் அற்புதன்.
அகத்தினியனோ,”உன்னைக் காலங்கார்த்தால எழுப்பி டிஸ்டர்ப் பண்ணக் கூடாதுன்னு தான் டா” என்று மகனிடம் கூறினார்.
“ப்ச்! போங்க அப்பா” என அவரிடம் சடைத்துக் கொள்ள,
“அவ தான் உனக்கு இன்ஃபார்ம் பண்ணிட்டு வர்றா தான?” என்றார் கீரவாஹினி.
“அதெல்லாம் என்னால் ஏத்துக்க முடியாது ம்மா!” என்றவன்,
வாயிலில், ஆட்டோவில் இருந்து, இறங்கியவளைப் பார்த்தவனால், கோபத்தை, இழுத்துப் பிடித்து,
வைக்க முடியவில்லை.
தவிப்பு நிறைந்த விழிகளில் அவளைக் கொய்தான் அற்புதன்.
ஹாலில் நின்று, தன்னைக் குறுகுறுவென்று பார்க்கும் கணவனின் உடல்மொழியைக் கண்டு திகைத்து நின்றாள் யக்ஷித்ரா.
“வா டா! அம்மா, யாதவி எப்படி இருக்காங்க?” என்று கீரவாஹினி விசாரிப்புக்களுக்குப் பதில் கொடுத்த போதும் கூட, கணவனின் பார்வை மாறவில்லை.
“க்கும்! நீங்க ஆஃபீஸூக்குக் கிளம்பலையா?” என்று அற்புதனிடம் இயல்பாக கேட்கத் தொடங்கினாள் யக்ஷித்ரா.
“போகனும். உன்னைப் பார்த்துட்டுக் கிளம்பலாம்னு தான்” என்று வாயாரப் புன்னகைத்தான் அவளது கணவன்.
மகனது நடவடிக்கைகளை ‘ஆ’வெனப் பார்த்துக் கொண்டு இருந்தார் அற்புதனுடையை தந்தை.
இவ்வளவு நேரம், கோபத்தில் குதித்துக் கொண்டு இருந்தவன், மனைவியைக் கண்டதும், குறுநகை உதிர்க்கிறானே! என்ற ஆச்சரியம் தான் அவருக்கு. கீரவாஹினியிடமும் ஜாடையாக இதைக் காட்டினார் அகத்தினியன்.
அவரும் புன்னகையுடன்,”போய்க் குளி அற்புதா” என மகனை அனுப்பினார் கீரவாஹினி.
“அங்கேயே ரெடி ஆகிட்டு வந்துட்டியா?” என்று கேட்டுக் கொண்டே, அவளுக்கு உணவுப் பரிமாறக் கேட்க,
“சாப்பிட்டும் வந்துட்டேன் அத்தை” என்று குற்ற உணர்வில் கூறினாள் யக்ஷித்ரா.
“அதுக்கு ஏன் இப்படி தலையைக் குனியுற? உன் அம்மா வீட்டில் தங்கிட்டு, சாப்பிட்டு வந்திருக்கிற! அவ்வளவு தான்” என்றார் கீரவாஹினி.
ஒரு நாள் கழித்து, அற்புதனுக்கு மாலை நேரம் அலுவலகம் தொடங்கி விடும்.
எனவே, இன்றைய நாள் மட்டும், காலையில் வேலைக்குச் செல்லத் தயாராகி வந்தான்.
அவனைத் தாண்டி, விடுவிடுவென்று அறைக்குள் நுழைந்து, தன் கைப்பையை எடுத்துக் கொண்டு வந்தாள் யக்ஷித்ரா.
“உஃப்!” என உர்ரென்ற முகத்துடன், அனைவரிடமும் விடைபெற்று, வெளியேறினான் அற்புதன்.
“கேப் வந்துருச்சு” என்று மருமகளும் நிற்காமல் செல்ல,
“அம்மா வீட்டுக்குப், போய் வந்ததும், யக்ஷித்ராவுக்கு, ஒரு தெம்பு வந்திருக்கு ங்க” என்றார் கீரவாஹினி.
“ம்ஹ்ம்… அந்தப் பொண்ணை வாராவாரம் அவங்க வீட்டுக்கு அனுப்பி வைக்கனும் வாஹி ம்மா” என்று கூறினார் அகத்தினியன்.
“ஆமாம். இவனுக்கும் நைட் ஷிஃப்ட் தான ங்க? பகல் நேரம் வீட்டிலேயே இருக்க மாட்டான்” என்று மொழிந்தார் அவரது மனைவி.
“ஹாய் அற்புதன்!” என்று அலுவலகத்தில் வேறு இவனை வெறுப்பேற்றுவதாக வந்து பேசியவர்களுக்கு, நிலை தவறாமல், பதில் அளித்தான்.
மீண்டுமொரு முறை, அவனது கோபத்தைக் கிளறிப் பார்க்க எண்ணியவர்களுக்குத் தக்க அவமானமாகி விட்டது.
“என்ன முகம் ஜொலிக்குது? அம்மாவையும், தங்கச்சியையும் பார்த்துட்டு வந்ததாலா?” என்றாள் நேஹா.
தான் விடுப்பு எடுக்கும் போது, தோழியிடமும் சொல்லி இருந்தாளே?
“யெஸ்” என்று முகிழ்நகையுடன் கூறினாள் யக்ஷித்ரா.
“சூப்பர்! யக்ஷி! நான் உன்கிட்ட ஒரு சோகக் கதையைச் சொல்லப் போறேன்” என்றாள் நேஹா.
“கதையா?” எனக் கேட்டவளுக்கு, இவளது வாழ்விலும் தன்னுடையதைப் போல ஏதாவது நடந்து விட்டதோ? என்று எண்ணித் தோழியைப் பார்க்க,
அவளோ,”என் ஹஸ்பண்ட்டுக்கும் நைட் ஷிஃப்ட் தான்” என வெதும்பினாள்.
*அடடா! ப்ரோவும் பாவம் தான்!” என்று பரிதாபப்பட்டவள்,”எல்லா ஆஃபீஸிலும் இந்த ப்ரொசீஜரைக் கொண்டு வந்துட்டாங்க போலவே?” என்றாள் யக்ஷித்ரா.
“ம்ம்… இருக்கலாம். குழந்தையை வச்சிட்டு எப்படி சமாளிக்கப் போறோமோ?” என அவளது கவலையைச் சொன்னாள் நேஹா.
அப்படியானால், தனக்கும், அற்புதனுக்கும் குழந்தை பிறந்தால் அதை யார் பார்த்துக் கொள்ள வேண்டும்? என்ற எண்ணம் தோன்றியது யக்ஷித்ராவிற்கு.
- தொடரும்