Loading

       கூரையிலிருந்து வழிந்துக் கொண்டிருந்த மழை நீரை இமைக்காதுப் பார்த்திருந்தாள் அகவழகி. கதிரிடம் பேச வேண்டுமென தோன்றியதும் கூறிவிட்டாள் ஆனால் எப்படி துவங்குவது என்ற பெரும் தயக்கம் அவளை அமைதியாக்கி இருந்தது. கதிரவன் அவள் வாயிலிருந்து உதிரும் சொற்களை கேட்க ஆவலாக அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். முதன்முறையாக பேச வேண்டுமென்று அதுவும் கனிவாக கேட்டவள் அமைதியாக இருந்ததிலிருந்தே அவளது தயக்கத்தைப் புரிந்துக் கொண்டவன் தானே பேச்சை முன்னெடுக்க முடிவெடுத்தான்.

 

     “மழை எப்போதுமே அழகு தான் இல்ல அழகி!”

 

     “ம்ஹ்ம். இயற்கையோட படைப்புல எல்லாமே அழகு தான். ஆனா மனுஷனோட மனநிலை பொருத்து அது மாறிக்கிட்டே இருக்கும்.”

 

    “அதுவும் சரிதான்.”

 

    “கதிர்! உன்கிட்ட பேசணும். ஆனா எப்படி ஆரம்பிக்கிறதுனு தெரில.”

 

   “என்கிட்ட என்ன தயக்கம் அழகி! எதுவா இருந்தாலும் சொல்லு. ஏன் திட்டணும் அடிக்கணும்னா கூட அடிச்சுக்கோ. நீ எது கொடுத்தாலும் அதை நான் வாங்கிப்பேன்.” 

 

     மெல்லிய புன்னகை சிந்தியவனை காண முடியாது விழி திருப்பினாள். தன் மீது இத்துணை காதலும் அன்பும் கொண்டவனை ஏற்க முடியா தன் நிலையை விளக்கிடவே அவனிடம் பேச விழைந்தாள். ஆனால் அவனிடம் இரண்டு நிமிடம் பேசினால் கூட அனைத்தையும் உடைத்து உதறி அவனை ஏற்றிடுவாளோ என்கிற பயம் அவளுள் தோன்றிட, தொண்டை அடைத்தது. விழி மூடி விழுங்கியவள் நிமிடங்களில் தன்னை சரி செய்துக் கொண்டு அவனை பார்த்தாள்.

 

    “கதிர்! உன் எதிர்பார்ப்புக்கும் உனக்கும் பதில் சொல்றதுக்கு முன்னாடி நீ என்னை பத்தி முழுசா தெரிஞ்சுக்கணும்னு நினைக்கிறேன். என் வாழ்க்கைல நடந்தது என்ன, அதுக்கப்புறம் எனக்குள்ள நடந்த மாற்றங்கள், என் முடிவு இப்படி எல்லாமே நீ தெரிஞ்சுக்கணும்.” என்றவளை கதிர் குறுக்கிட்டான்.

 

    “உன் வாழ்க்கைல எது நடந்துருந்தாலும் அது எனக்கு….” என்றவனை கைக்காட்டி தடுத்தாள்.

 

   “கதிர் ப்ளீஸ். இன்னைக்கு நான் எல்லாமே பேசணும். நான் பேசி முடிக்கிற வரை கொஞ்சம் பொறுமையா இரு. என் மனசுல உள்ளத யார்க்கிட்டயும் நான் சொன்னது கிடையாது. ஆனா நீ தெரிஞ்சுக்கணும். அதுக்கப்புறமும் நீ என்னை நேசிச்சா நான் என் பதில சொல்றேன்.” என்றவளை மென்னகையோடு நோக்கிய கதிர் சொல் என்பது போல் பார்த்தான்.

 

    “கதிர்! அதிரனோட அப்பாவுக்கும் எனக்கும் என்ன உறவுனு தெரியுமா? அது ரொம்ப ஸ்பெஷலான உறவு. அதிக்கு அப்பாவ தாண்டி அவர் எனக்கு நல்ல வெல்விஷ்ஷர். அண்ணா மாதிரி ம்ஹூம் அப்பானு கூட சொல்லலாம்.” என்றவள் இடைவெளிவிட்டு அவனது புன்னகை மறைந்த முகத்தைக் கண்டு மெல்லிய புன்னகையோடு தொடர்ந்தாள்.

 

    “புரியலல! அதிரன் நான் சுமந்து பெத்த பையன் கிடையாது. ஆனா அவன் பிறந்ததிலேர்ந்தே எனக்கும் அவனுக்கும் பந்தம் உண்டு. அவன பெத்த அம்மா என்னோட காலேஜ் சீனியர். அவங்க அப்பாவும் என் சீனியர் தான். ரெண்டு பேரும் ஒரே டிப்பார்ட்மென்ட் ஒரே க்ளாஸ். ரெண்டு பேரும் லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. அவங்க லவ்வுக்கு நிறைய நாள் நான் தூது புறாவா இருந்துருக்கேன். ரொம்ப அழகான காதல் அவங்களோடது. பெத்தவங்க சம்மதில்லாம ப்ரண்ட்ஸ் நாங்க தான் கல்யாணம் பண்ணி வச்சோம். ரொம்ப சந்தோஷமா வாழ்ந்தாங்க. ரெண்டு பேருக்குள்ளயும் அவ்வளோ லவ். இந்த அன்யோன்யமான புருஷன் பொண்டாட்டினு சொல்வாங்களே அது மாதிரி வாழ்ந்தாங்க ரெண்டு பேரும். நானே பலவாட்டி அவங்கள பார்த்து லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கனும் ஆசைப்பட்ருக்கேன். ஆனா அதெல்லாம் நடக்கல. நான் காலேஜ் பைனல் எக்ஸாம் முடிச்சு வீட்டுக்கு வரும்போதே எங்க மாமா மாப்பிள்ளை வீட்டுக்காரங்கள வீட்டுக்கு வரசொல்லிட்டாங்க.”

 

   “எனக்கு அப்பா இல்ல. அப்பா நான் மூனாவது படிக்கும்போதே இறந்துட்டாங்க. அதுக்கப்புறம் மாமா தான் அம்மா, எனக்கு, தங்கச்சிக்கு எல்லாமுமா இருந்து பார்த்துக்கிட்டாங்க. அப்பா எங்க அம்மாவுக்கு தாய்மாமா தான். ஊர்ல ரெண்டு ஏக்கர் நிலம் இருந்தது. அத அப்பாவுக்கு அப்புறம் மாமாதான் பார்த்துக்கிட்டாங்க. நாங்க தனி வீட்ல இருந்தாலும் அத்தைக்கு மாமா எங்கள பார்த்துக்குறதுல அவ்வளோ உடன்பாடு இல்ல. படிக்க வைக்கிறதோட நிறுத்திக்கணும்னு அவங்க எண்ணம். ஆனா மாமாவுக்கு அக்கா ரெண்டு பொம்பள பிள்ளைங்கள வச்சுக்கிட்டு கஷ்டப்படுதுனு கவலை. அதனால நல்ல சம்மந்தம் வரும்போதே என் கல்யாணத்தை முடிச்சுடணும்னு மாமாவுக்கு ஆசை. தங்கச்சிய அவங்க பையனுக்கு கட்டிக்கணும்னு ஆசை. அத்தைக்கும் அந்த ஆசை இருந்ததால எனக்கு சீக்கிரம் கல்யாணம் பண்றதுல பிரச்சனை இல்லனு சொல்லிட்டாங்க. ஆனா சீர் செனத்தி அதிகம் கேட்காத மாப்பிள்ளையா பார்க்கணும்னு சொல்லிட்டாங்க. அது மாதிரி ஒரு மாப்பிள்ளை வரவும் நான் பைனல் இயர் முடிக்கவும் சரியா இருக்க உடனே கல்யாணம் பேச வர சொல்லிட்டாங்க.”

 

   “எனக்கு அது அப்போ அதிர்ச்சி தான். ஆனா சின்ன வயசுலேர்ந்து படிக்க வச்சு தேவையானத பார்த்து பார்த்து செஞ்ச மாமா பேச்சுக்கு மறுப்பேச்சு பேச முடியல. சரினு மனச தேத்திக்கிட்டு பொண்ணு பார்க்க ரெடியாகிட்டேன். மாப்பிள்ளைய பார்த்தும் உடனே பிடிக்கல ஆனா சின்ன ஈர்ப்பு இருந்தது. அப்புறம் மாப்பிள்ளைக்கும் அவங்க வீட்ல எல்லாருக்கும் என்னை புடிச்சுருக்குனு சொல்ல அடுத்தடுத்து பேச்சு வார்த்தைங்க நடந்து ரெண்டு மாசத்துல வந்த முகூர்த்தத்துல கல்யாணத்த வச்சுக்கலாம்னு முடிவு பண்ணாங்க. அப்புறம் அவரோட மெல்ல மெல்ல ஃபோன்ல பேச ஆரம்பிச்சேன். அவரோட அன்பான பேச்சு அக்கறை எல்லாமே பிடிச்சது. அவரையும் பிடிக்க ஆரம்பிச்சது. அப்புறம் எங்க கல்யாணம் நடந்தது.”

 

   “அன்னைக்கு புது வாழ்க்கைக்குள்ள போற பயத்தையும் தாண்டி அவரோட வாழப்போறோம்னு மனசுக்குள்ள ரொம்ப சந்தோஷமா இருந்தேன். அவரோட அப்பா, அம்மா, தம்பினு எல்லாருமே என் மேல ரொம்ப பாசமா இருந்தாங்க. ரொம்ப சந்தோஷமா எங்க வாழ்க்கை ஆரம்பிச்சது. அவர் திருச்சில வேலை பார்த்தார். அவரோட ஊர் லால்குடி தாண்டி புஞ்சை சங்கேந்தினு சின்ன கிராமம். அங்கேர்ந்து டெய்லி விராலிமலை ரோட்ல இருக்குற அவர் வேலை பார்த்த கம்பெனிக்கு போய்ட்டு வர சிரமமா இருக்குனு டவுன் பக்கம் தனியா வீடு எடுத்து போகலாம்னு சொன்னார். எனக்கு சம்மதமில்லனாலும் அவரோட சௌகரியத்துக்காக ஒத்துக்கிட்டேன். அவங்க வீட்லயும் தனி குடித்தனம் போக ஒத்துக்கிட்டாங்க. அப்புறம் நாங்க மன்னார்புரம் பக்கம் குடி வந்தோம். தனியா குடி வர்ற வரைக்கும் ஆறு மாசம் சந்தோஷமா இருந்த எங்களுக்குள்ள ஏதோ இடைவெளி வந்த மாதிரி பீலாச்சு எனக்கு. முன்ன போல என்கிட்ட அதிகமா பேசாம போனாரு. அப்புறம் நைட் லேட்டா வர ஆரமிச்சாரு. சில நாள் சீக்கிரம் வந்தாலும் ஃபோன்ல யார்கிட்டயாவது பேசிட்டே இருப்பார். இப்படியே ஆறு மாசம் போச்சு.”

 

   “அதுக்குமேல என்னால பொறுக்க முடியல. நான் அவர எவ்வளோ மிஸ் பண்றேன்னு புரிய வச்சேன். சிவில் இன்ஞ்சினியரிங் படிச்சுட்டு அவர் வேலைக்கு போன பின்னாடி வீட்ல சும்மா ஏன் இருக்கணும்னு வேலைக்கு போக பர்மிஷன் கேட்டேன். அவரும் சரினு சொல்ல ஒரு கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனில வேலைக்கு ஜாயின்ட் பண்ணேன். அதுக்கப்புறம் எந்த பிரச்சனையும் இல்லாம நாலு மாசம் ரொம்ப நல்லாவே போச்சு. ரெண்டு பேருக்கும் லீவ் இருக்குறப்போ கோவில், சினிமா, ஷாப்பிங்னு நிறைய வெளில போனோம். அவர் வீட்டுக்கும் என் வீட்டுக்கும் அடிக்கடி போய்ட்டு வந்தோம். அவங்களும் நாங்க சந்தோஷமா இருந்தத பார்த்துட்டு ரொம்ப சந்தோஷமா இருந்தாங்க. என் மாமியார் கல்யாணம் ஆகி ஒரு வருஷமாச்சுனு குழந்தைக்கு கேக்க ஆரம்பிச்சுட்டாங்க. நாங்களும் அதுக்கப்புறம் தான் அத பத்தி யோசிச்சோம். சில சமயம் அதபத்தி நான் கவலைப்படும் போது நமக்கு இன்னும் வயசு இருக்கு குழந்தை பிறக்கும்னு சமாதான படுத்துவார். அப்புறம் அத மறந்துட்டு எப்பவும் போல இருப்பேன்.”

 

   “இப்படி நல்லா போய்ட்ருந்தப்ப தான் அவர்கிட்ட நிறைய மாறுதல்கள் திடீர்னு வந்துச்சு. லேட் நைட் வர ஆரம்பிச்சார். அத கேட்டா என்கிட்ட நிறைய சண்டை போட ஆரம்பிச்சார். என்கிட்ட பேசுறத குறைச்சார். ஒருகட்டத்துல சுத்தமா எல்லா விதத்துலயும் என்னை அவாய்ட் பண்ணார். வேலை பிரஷ்ஷரா இருக்கும்னு நானும் அவர டிஸ்டர்ப் பண்ணல. எல்லாம் ஒருநாள் சரியாகும்ன்ற நம்பிக்கைல அமைதியா இருந்தேன். அவர் என்கூட ஊருக்கு வர்றதையும் அம்மா வீட்டுக்கு வர்றதையும் தவிர்த்தார். நான் மட்டும் அவங்கள போய் பார்த்துட்டு வந்துட்டு இருந்தேன். அவங்க வீட்டுக்கு வந்தாலும் வேலை இருக்குனு சீக்கிரமா கிளம்பி போய்டுவார். இப்படியே போய்ட்ருந்தப்ப எனக்கு அம்மா வீட்ல ரெண்டு நாள் தங்கிட்டு வரலாம்னு தோனுச்சு. அவர்ட்ட கேட்டப்ப உன் இஷ்டம்னு சொல்லிட்டு போய்ட்டார். நானும் கிளம்பி அம்மா வீட்டுக்கு வந்தேன். அம்மா வீட்ல இருக்கேனேனு ஒரு கால் இல்ல மெசேஜ் இல்ல நான் பண்ணாலும் வேலையா இருக்கேன்னு வச்சுடுவாரு. ரெண்டு நாள் தங்க போன நான் அம்மாவுக்கு கொஞ்சம் உடம்பு முடியாம போகவும் அங்க ஒரு வாரம் தங்க வேண்டியது மாதிரி ஆகிடுச்சு. ஒரு வாரத்துக்கு அப்புறம் அவரே எனக்கு கால் பண்ணார். என்னை மிஸ் பண்றதா சொல்லி சீக்கிரம் வர சொன்னார். என் பர்த்டேக்கு நாலு நாள் இருந்தது. அன்னைக்கு நாம சேர்ந்து வெளில போலாம் அதுக்குள்ள நீ வானு சொல்லிட்டு ஃபோன வச்சார். ரொம்ப நாள் கழிச்சு அவர் குரல்ல அன்பும் பாசமும் தெரிஞ்சது. எனக்கு ரொம்ப சந்தோஷமாகிடுச்சு. எனக்கு அந்த ஒரு ராத்திரியே அம்மா வீட்ல இருக்க முடியல. காலைல ரொம்ப சந்தோஷமா என் புருஷன் வர சொல்றாருனு அம்மா ரெண்டு நாள் தங்கிட்டு போக சொல்லியும் கேட்காம அங்கேர்ந்து கிளம்பி எங்க வீட்டுக்கு வந்தேன். அவருக்கு சர்ப்ரைஸா இருக்கட்டும்னு அவருக்கு ஃபோன் பண்ணாம கிளம்பி போனேன்.” 

   

    “நான் அவர் முன்னாடி போய் நின்னா அவர் முகத்துல வர்ற சந்தோஷத்த பார்க்கணும்னு ஆசையா வந்தா வீடு பூட்டி இருந்தது. அதுக்குள்ள அவரு வேலைக்கு கிளம்பி போய்ட்டார் போலனு கொஞ்சம் ஏமாற்றமா இருந்தது. சரி திரும்பி வீட்டுக்கு வரும்போது என்னை வீட்ல அவர் எதிர்பார்க்க மாட்டாருலனு மனச தேத்திக்கிட்டு பக்கத்து வீட்ல இருந்த ஹவுஸ் ஓனர் வீட்டுக்கு சாவி வாங்க போனேன். எப்பவும் நாங்க வேலைக்கு போகும் போதும் சரி வெளில போனாலும் சரி அவங்கக்கிட்ட சாவி கொடுத்துட்டு போறது வழக்கம். அதனால சாவி வாங்கலாம்னு அங்க போனேன். அவங்க வீட்டு கதவு சாத்தியிருந்தது. சரினு பெல் அடிச்சுட்டு வெயிட் பண்ணேன். கதவு திறக்குற சத்தம் கேட்டு திரும்பினா… நான் நினைக்கவே கூடாதுன்னு நினைக்கிற நாளும் அதுதான் மறக்க முடியாம தவிக்கிற நாளும் அதுதான். அங்க நான் பார்த்த ஆள் மொத்தமா நான் எதிர்பார்க்காத ஆள்.” என்று நிறுத்திய அழகி கொட்டிக் கொண்டிருந்த மழையை வெறித்தாள்.

 

    அவளது முகம் உணர்வுகளற்று இறுகிக் கிடந்தது. மழையை வெறித்த விழிகளில் ஆறாத ஆத்திரமும் வைராக்கியமும் நிறைந்திருந்தது. அழகியை பார்த்துக் கொண்டிருந்த கதிருக்கு இதயம் படபடென்று அடித்தது. மனதில் பெரும் பாரம் ஏறியது போன்றதொரு கனம் அவனிடம். அங்கு நிலவிய மௌனம் அவனுக்கு மிகவும் கனத்தது. அம்மௌனம் அவளது வலியின் சாயலாகவே அவனுக்குத் தோன்றிட, அவள் அடுத்து கூறப்போவதைக் கேட்க கவலையோடு அவளைப் பார்த்திருந்தான்.

வருவாள்….

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்