2,758 views

 

 

கயலைப் பார்த்து தனக்குள் புன்னகைத்துக் கொண்ட ஜீவா, அவள் கட்டு போட்டு விட்ட கையையே சிறிது நேரம் பார்த்து விட்டு, பின், மீண்டும் உறங்கி விட்டான்.

கயல் நேராக கார்த்தியின் குடிலுக்கு சென்று, அவனைப் பார்க்க, கார்த்தி எழுந்திரிக்க முயற்சி செய்வதை கண்டதும், வேகமாக சென்று அவனை தூக்கி உட்கார வைத்து, குடிக்க தண்ணீரை கொடுத்தாள்.

கார்த்தி, “என்ன கயலு இவ்ளோ சீக்கிரம் எந்திரிச்சுட்ட… தூங்கலையா” என்று கேட்க,

“இல்ல கார்த்தி, தூக்கம் வரல அதான் எந்திரிச்சுட்டேன். உனக்கு எதாவது வேணுமா…” என்றாள்.

“ஹையோ அதெல்லாம் நிறைய வேணும்… நல்ல சாப்பாடு சாப்பிட்டு பல மாசம் ஆகுது. இங்க கஞ்சியையும் கிழங்கையும் குடுத்து சாவடிக்கிறாங்க” என்று புலம்ப,

அதில் சிரித்த கயல், “டேய், உன்னை காப்பாத்துனதே பெரிய விஷயம். இதுல உனக்கு விருந்து வேற குடுப்பாங்களா…” என்று லேசாய் தோளை தட்ட, அப்பொழுது தான் அவள் முகத்தை நன்றாக கவனித்த கார்த்தி பதறி,

“ஹே கயலு ஏன் உன் முகம்லாம் சிவந்துருக்கு…” என்று கேட்க, அவள் ஜீவா அடித்த கன்னத்தை மறைத்துக் கொண்டு, “அது அதுலாம் ஒன்னும் இல்லையே… நான் பூவரசி கோவில்ல இருந்து வந்துட்டாளான்னு பார்த்துட்டு வரேன்” என்று எழுந்திரிக்க போக, அவளை தடுத்து கன்னத்தில் இருந்த அவள் கையை எடுத்து விட்டு பார்க்க, அதில் கை ரேகை பதிந்திருப்பதை கண்டு அதிர்ந்தான்.

“கயல், வாசு அண்ணா உன்னை அடிச்சாரா?” என்று அவன் தவிப்புடன் கேட்க,

அவள் திணறி “இ இ இல்லையே…” என்று சமாளிக்க, அவளை ஆழமாய் பார்த்த கார்த்தி, “உண்மையை சொல்லு கயலு… அண்ணா உன்னை அடிச்சாரா. நான் நேத்தே உங்களை கவனிச்சுட்டு தான் இருந்தேன். ரெண்டு பேரும் சரியே இல்ல… என்னதான் கயல் நடந்துச்சு”என்று கெஞ்சலாய் கேட்க, அவனுக்கு ஜீவாவின் மேல் கோபத்தை விட, வருத்தமே மேலோங்கியது.

கயல் ஏதோ பேசவருவதற்குள், ஜீவா குரலை கனைக்கும் சத்தம் கேட்கவும், அவள் எதுவும் சொல்லாமல் அங்கிருந்து சென்று விட, ஜீவா அவனிடம் “உனக்கு என்ன தெரியணும்?” என்று கேட்க, அவன் கையில் அடிப்பட்டிருப்பதை பார்த்தவன், மற்றதை மறந்து “அண்ணா உங்க கைல என்ன ஆச்சு? எப்படி அடிப்பட்டுச்சு…” என்றான் பதற்றமாக.

ஜீவா, எதுவும் சொல்லாமல், ஒரு பாக்ஸை எடுத்து வைத்து “உனக்கு பெயின் கில்லர் டேப்லேட்ஸ் இதுல இருக்கு… நம்ம ஊருக்கு போனதும், உன்னை ஹாஸ்பிடல்ல ஒரு செக் அப் பண்ணிடலாம்.” என்றவன், சட்டென நிறுத்தி, “ஆமா கார்த்தி, நீ எப்படி மலைல இருந்து விழுந்த, உன்னை யாரு தள்ளி விட்டா? அவனை நீ பார்த்தியா” என்று கேள்விகளை அடுக்கினான்.

கார்த்தியோ, “அண்ணா என்னை யாரும் தள்ளி விடல. நானாத்தான் தடுக்கி விழுந்தேன்” என்று சொன்னதும், அதிர்ந்த ஜீவா, “வாட் நீயா விழுந்தியா…?” என்று கேட்க,

“ஆமா அண்ணா, மலைக்கிட்ட ஏதோ சத்தம் கேட்டுச்சுன்னு போனேன் அப்போ ஒரு கட்டை தடுக்கி அப்படியே விழுந்துட்டேன். அதுக்கு அப்பறம் என்ன ஆச்சுன்னு தெரியல. நான் முழிச்சு பார்க்கும் போது இங்கதான் இருந்தேன்…” என்று சொல்ல, ஜீவாவோ கடும் குழப்பத்தில் இருந்தான்.

கார்த்தியிடம், “கால் தடுக்கி விழுந்தன்னா, எனக்கு ஏன் தற்கொலை பண்ணிக்க போறேன்னு மெஸேஜ் அனுப்புன கார்த்தி” என்று புரியாமல் கேட்க,

“என்னது நானா… இல்லையே அண்ணா. நான் அப்படிலாம் எந்த மெஸேஜும் அனுப்பவே இல்லை” என்று சொல்லும்போதே, அதிகமாக பேசியதில் அவனுக்கு தொண்டை வலித்து இருமல் வர, ஜீவா “ஓகே ரிலாக்ஸ். நீ ஸ்ட்ரைன் பண்ணிக்காத… ஊர்ல போய் இதை பத்தி பேசிக்கலாம்” என்று விட்டு ஏதோ யோசனையில் எழுந்தான்.

கார்த்தி, ஜீவாவின் கையைப் பிடித்து, “வாசு அண்ணா நான் தான் கயல நீங்க கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு ஆசைப்பட்டேன். அவள் ரொம்ப நல்ல பொண்ணு அண்ணா. என்னோட பெஸ்ட் ஃபிரெண்டும் கூட. ஆனால் அவள் கொஞ்சம் பயந்த சுபாவம். கொஞ்சம் சத்தமா பேசுனா கூட கண்ணெல்லாம் கலங்கிடும் அவளுக்கு. அவளை அவங்க வீட்டுல கூட சத்தம் போட்டு பேசமாட்டாங்க.

அவகிட்ட கூட ஒருதடவை என் அண்ணாவை கல்யாணம் பண்ணிக்கிட்டா, உன்னை அண்ணா நல்லா பாத்துப்பாங்கன்னு சொல்லிருந்தேன். ஆனால் அவளுக்கு தான் உங்க கோபத்தை நினைச்சு பயம். அதனால அவள் நான் சொன்னதுக்கு ஒத்துக்கவே இல்லை. இப்போ என்ன நடந்துச்சு எப்படி நடந்துச்சுன்னு தெரியல… நான் ஆசைப்பட்ட மாதிரி அவள் இங்க உங்க கூட இருக்காள்.

ஆனா… இப்போ நடக்குறதை எல்லாம் பார்க்கும் போது, தேவை இல்லாமல் ஏதேதோ சொல்லி நானே அவள் வாழ்க்கையை கெடுத்துட்டேனோன்னு தோணிடுமோன்னு பயமா இருக்கு. அண்ணா… நீங்க என்கிட்ட, மத்தவங்ககிட்ட ரோபோ மாதிரி நடந்துக்குறது ஓகே ஆனா…. அவள் உங்களை நம்பி வந்த பொண்ணு அவளை..” என்று வார்த்தைகளை மென்று முழுங்கி சொல்லிமுடிக்கும் முன்,

ஜீவா, வந்த கோபத்தை முயன்று கட்டுப்படுத்தி, கையை இறுக மூடிக்கொண்டு “என் பொண்டாட்டியை எப்படி பார்த்துக்கணும்னு எனக்கு தெரியும். யு ஜஸ்ட் டூ யுவர் ஓன் பிசினெஸ்” என்று இறுகிய குரலில் சொல்லிவிட்டு, வெளியில் சென்றான்.

பச்சை பசேலென்று சுற்றி மரங்களும், பொழுது புலர்ந்த அந்த காலை நேரம், வானம் லேசாக வெளுக்கத் தொடங்கிய வேளை.

சற்று தள்ளி, குன்றுகளும், மலைகளும் ஓங்கி உயர்ந்திருக்க கோபமும், இயலாமையும் மனதைத் தாக்க, கால் போன போக்கில், நடந்து கொண்டிருந்தான் ஜீவா.

‘என்னை கல்யாணம் பண்ணுனனாள அவள் வாழ்க்கை கெட்டு போச்சா… அதெப்படி அவள் வாழ்க்கை கெட்டு போகும். அவளை என் உயிரா தான நான் நினைச்சுருக்கேன்.

அதெப்படி அவன் அப்படி சொல்லலாம்… அவள் அவள் வாழ்க்கையும் என்னால தான் கெட்டு போச்சா…’ என்று தவித்தவனின் நடை தளர, ஆறுதலளிக்க கூட யாரும் இல்லாமல், ஒரு கல்லில் அப்படியே அமர்ந்து, எங்கோ வெறிக்க, கண்ணில் இருந்து நீர் துளிகள் அந்த புல்லில் இருந்த பனித்துளிகளை நனைத்தது.

கயல், கன்னத்தில் சிறிது பௌடரை அடித்து, சிவப்பு தெரியாத படி மறைத்துக் கொண்டு, பூவரசியை சென்று பார்க்க, அவள் ஏதோ வேலை செய்து கொண்டிருப்பதை வேடிக்கை பார்த்தவள், ஜீவா அந்த மலை மேல் ஏறுவதை கண்டாள்.

அவன் முகமும் நடையும் சரி இல்லை என்று உணர்ந்தவள், அவன் பின்னே செல்ல, அவன் ஒரு கல்லில் அமர்ந்திருப்பதைக் கண்டு அருகில் செல்வோமா வேண்டாமா என்று ஒரு நொடி யோசித்தவள், பின் மெதுவாக அவன் அருகில் சென்று அவன் கண்ணீரை கண்டு அதிர்ந்து விட்டாள்.

என்ன செய்வதென்று புரியாமல் திகைத்தவள், “என் என்ன ஆச்சு…” என்று கேட்க, ஜீவா அப்பொழுது தான் அவளையே பார்த்தான்.

அவளுக்கு முகம் காட்டாமல் திரும்பி, “ஒண்ணும் இல்லை” என்று சொல்ல, ஏனோ அவன் குரலில் எப்போதும் இருக்கும் கம்பீரம் குறைந்திருந்ததோ என்று தோன்றியது அவளுக்கு.

கயல் அவனை அப்படி காண முடியாமல், நன்றாக அவன் அருகில் சென்று “என்ன ஆச்சு ஜீவா. கை வலிக்குதா” என்று அவளுக்கே வலிப்பது போன்று குரலில் வலியுடன் கேட்க, ஏனோ அவனுக்கு மேலும் கண் கலங்கியது.

இப்படி தனக்கு தானே சுயபட்சதாபம் பார்ப்பதாலேயே தானே அவன் மற்றவர்களின் பரிதாபப் பேச்சுக்களை தவிர்த்து, கோப முகத்துடன் வளைய வந்தான்.

ஆனால் இப்பொழுது கயலின் அரவணைப்பு அவனுக்கு வேண்டும் போல் தோன்ற, அமர்ந்தபடியே, அவள் இடுப்பை கட்டிக்கொண்டு, அவள் வயிற்றில் முகத்தை புதைத்தான்.

அவனின் இந்த செயலில் சிலையானவள், சில நொடிகளிலேயே, அந்த அணைப்பில் கோபமும், காமமும் இல்லை என்று உணர்ந்து தன்னிச்சையாக அவன் தலையை கோதினாள்.

அவனின் கண்ணீர் அவள் வயிற்றை நனைக்க அவன் முகத்தை பார்க்க விழைந்தவளுக்கு, தன் முகத்தினை காட்டாமல் இடும்பு பிடியாய் இடுப்பை பிடித்துக்கொண்டான்.

கயலுக்கு தான், ஏதோ ஒரு பள்ளி செல்லும் சிறுவன், பள்ளிக்கு செல்ல மாட்டேன் என்று தாயின் வயிற்றை கட்டிக்கொண்டு அடம்பிடிப்பது போல் தான் இருந்தது.

சிறிது நேரம் அவன் அப்படியே இருந்து விட்டு, பிறகு, “நான் உன் வாழ்க்கையை கெடுத்துட்டேனா கயல்…” என்று கமறிய குரலில் கேட்க, அதில் அவளுக்கு தான் மனமெல்லாம் பிசைந்தது.

அவன் மேலும் தொடர்ந்து, “நேத்து நீ டிவோர்ஸ் பத்தி பேசுனனால தான் எனக்கு கோபம் வந்துடுச்சு. என்னையவே என்னால நேத்து கண்ட்ரோல் பண்ண முடியல. நான் உன்னை பொய்யா விரும்புனேனோ, இல்லை உண்மையா விரும்பி கல்யாணம் பண்ணிக்கிட்டேனோ எதுவா வேணா இருக்கட்டும், ஆனால் இப்போ நீ என் பொண்டாட்டி. உன்னை எதுக்கு நான் விட்டுக்குடுக்கணும். நீ என் கூட தான இருக்கணும். அப்பறம் எப்படி நீ என்னை விட்டு போறேன்னு சொல்லலாம்” என்று அவன் நிலையில் இருந்து விலகாமல் பேச, கயலுக்கோ அவனின் ஏங்கிய குரல் என்னவோ செய்தது.

அவன் மீண்டும், “நான் உன் வாழ்க்கையை கெடுத்துட்டேனா கயல்… என்னை கல்யாணம் பண்ணாம இருந்திருந்தா நீ சந்தோசமா இருந்துருப்பியா கயல்…” என்று கேட்க கயலுக்கு என்ன பதில் சொல்வது என்று கூட தெரியவில்லை.

அப்படியே அமைதியாய் அவள் நிற்க, ஜீவா, “சொல்லு கயல், என்னால உன் வாழ்க்கை கெட்டு போச்சா…” என்று மீண்டும் மீண்டும் கேட்க,

அவள் “ப்ச் யாரு உங்களுக்கு அப்படி சொன்னது” என்று சற்று கோபமாக கேட்டாள்.

ஜீவா, மேலும் அவள் வயிற்றில் புதைந்து, “எல்லாரும் என்னை அப்படிதான் சொன்னாங்க… என்னால என் அம்மா வாழ்க்கை கெட்டு போச்சுன்னு என் அம்மா சொன்னாங்க. அப்பறம் என்னால என் தம்பி வாழ்க்கை கெட்டு போச்சுன்னு என் அப்பா சொன்னாங்க. இப்போ என்னால உன் வாழ்க்கை கெட்டு போச்சுன்னு என் தம்பியே சொல்றான். நீயும் அதே தான் சொல்லுவியா ஸ்வீட் ஹார்ட்” என்று உடைந்த குரலில், அப்படி சொல்லி விடாதே என்ற ரீதியில் குரலில் மொத்த தவிப்பையும் தேக்கி கேட்க, அவள் உறைந்து விட்டாள்.

அவன் சொன்னதை ஜீரணிக்கவே அவளுக்கு சில நிமிடம் பிடித்தது அவன் தலை முடியை அழுந்த வருடி விட்டு, மெதுவாக, “உங்க அப்பா அம்மா ஏன் அப்படி சொன்னாங்க” என்று கேட்க, அப்பொழுது தான் தன் சுயநினைவிற்கே வந்தவன் வெடுக்கென, அவளை விட்டு விலகி எழுந்து திரும்பி நின்று “ஒண்ணும் இல்ல” என்று சொல்லி, அங்கிருந்து நகர கயலுக்கோ ஒன்றுமே புரியவில்லை.

ஆனால் அவன் பேசியது மட்டும், மனதில் அப்படியே பதிய கார்த்தி தான் இப்படி சொல்லி இருக்கிறான் என்று புரிந்து கொண்டவள் விறு விறு வென, கார்த்தியின் குடிலுக்கு சென்றாள்..

அங்கு பூவரசி, எதையோ அரைத்து, அவன் காலில் மருந்தாக போட்டு விட, இது எதையும் உணராமல், கயலை பற்றியே நினைத்து கொண்டிருந்தான் கார்த்தி. எப்போதும், மருந்தை கொண்டு போனாலே வலிக்குதுன்னு கத்துவான் இன்னைக்கு இம்புட்டு அமைதியா இருக்கான் என்று நினைத்துவிட்டு, பூவரசி, “யோவ் இன்னைக்கு உனக்கு வலிக்கலையா…” என்று கேட்க, அவள் குரலில் நிகழ்வுக்கு வந்தவன், இல்ல என்று தலையாட்ட, அவள் “அப்போ காயம்லாம் கொஞ்சம் ஆறிருச்சு போல”, என்று சொல்லிக்கொண்டிருக்கையில், புயலென உள்ளே நுழைந்த, கயல், கார்த்தியிடம்,

“அவர்கிட்ட என்ன சொன்ன” என்று கேட்க, கார்த்தி புரியாமல் “யார்கிட்ட” என்று கேட்க, அவள் “ஜீவாகிட்ட என்ன சொன்ன” என்று பல்லைக்கடித்து கொண்டு கேட்டாள்.

அவள் வாசுவை ஜீவா என்று அழைப்பதை உணர்ந்து வியந்தவன், பின், “இல்ல கயல், அண்ணா உன்னை அடிச்சுட்டாருல்ல… என்னால தான” என்று சொல்ல போக,

அவளோ, “இங்க பாரு கார்த்தி, எனக்கும் என் புருஷனுக்கும் இடைல ஆயிரம் இருக்கும்… அதெல்லாம் உன்கிட்ட சொல்ல வேண்டிய அவசியம் இல்ல. அதெப்படி நீ அவர்கிட்ட அப்படி சொல்லலாம்… அவரால என் வாழ்க்கை கெட்டுடுச்சுன்னு. நான் உங்கிட்ட சொன்னேனா… ஹான்” என்று கடுங்கோபத்தில் கேட்டவளுக்கு ஜீவாவின் கண்ணீர் மனதை வெகுவாய் தாக்கியது.

“புருஷன் பொண்டாட்டி பிரச்சனைல மூணாவது மனுஷங்க நுழைய கூடாது… இனிமே எங்க விஷயத்துல நீ தலையிடாத. உன் வேலை எதுவோ அதை மட்டும் பாரு…” என்று எச்சரித்து விட்டு செல்ல, கார்த்தி தான், ‘நான் மூணாவது மனுஷனா…’ என்று அவள் சொன்ன வாக்கியத்தில் திகைத்து அப்படியே அமர்ந்திருந்தான்.

கார்த்தியின் கசங்கிய முகத்தை கண்ட, பூவரசிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.

பின் அவனிடம், “நான் கோவிலுக்கு போறேன் அங்க பூஜை இருக்கு. நீயும் வரியா” என்று கேட்க, அவன் வரவில்லை என்று தலையசைக்க,

அவள் “ம்ம், அங்க பக்கத்துல, ஒரு ஆத்து இருக்கு. அங்க இன்னைக்கு மீன் வரத்து நிறையா இருக்கும். நம்ம மீன் பிடிச்சுட்டு வரலாம் வா.” என்று அழைக்க,

அவன் “ப்ச் நீ போறியா… முதல்ல” என்று கடுப்படிக்க, அவளுக்கு தான் அவனை அப்படியே விட்டுட்டு போக மனமே இல்லை.

அவனை வம்படியாக வீல் சேரில் அமர வைத்து, தள்ளி கொண்டு போக, இவள் இம்சை தாங்க முடியல.. என்று புலம்பி கொண்டு, அவளுடன் கோவிலுக்கு சென்றவன் அங்கு நடக்கும் பூஜையையே பார்க்க, அங்கு அன்று இரவு தீ மிதிப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவதை கண்டான்.

அந்த நேரம் என்று பார்க்க, அவனுக்கு கவுண்டமணி காமெடி நியாபகம் வர, ‘பூ மிதிக்கணும்னு சொல்லி நம்மளை உள்ள தள்ளி விட்ருவாங்களோ…’ என்று தீவிர சிந்தனையில் இருந்தவனின் அருகில் வந்தாள் பூவரசி.

“இன்னைக்கு காப்பு கட்டிருக்குற, பொம்பளைங்க எல்லாம் தீ மிதிக்கணும்” என்று சொல்ல,

அவன் ‘ஹப்பா ஒன்லி லேடீஸ் தான்… நம்ம எஸ்கேப். காந்த கண்ணழகி, டினுக்கு டினுக்கு டினுக்கு’ என்று அவனின் மைண்ட் வாய்ஸ் அந்த டோனை பாடிக்கொண்டிருக்க, அவள், அவனை ஆத்தங்கரைக்கு அழைத்து சென்று, தூண்டிலை போட்டு மீனை பிடித்து கொண்டிருந்தாள்.

கார்த்தி, மீண்டும் கயல் பேசியதை பற்றி யோசிக்க, பூவரசி “ரொம்ப யோசிக்காதைய்யா. அக்கா சொன்னதுல என்ன தப்பு இருக்கு. புருஷன் பொஞ்சாதி பிரச்சனைல நம்ம தலையிட கூடாது. சின்ன வயசுல, என் ஐயா என் அம்மையை அடிச்சுட்டாக. எனக்கு ரொம்ப கோபம் வந்து, ஐயா கிட்ட நான் பேசவே இல்லை.

அப்பறம், நான் பேசலைன்னு ஐயா ரொம்ப வருத்தப் பட்டுருப்பாக போல. என் அம்மை என்னை என் ஐயா கிட்ட நான் எப்படி பேசாம இருக்கலாம்னு ஒரே திட்டு… அப்பறம் தான் நான் யோசிச்சேன். இனிமே இந்த புருஷன் பொஞ்சாதி பிரச்சினைல நம்ம தலையிடவே கூடாதுன்னு. ரெண்டு பேரும் எப்போ அடிச்சுக்குவாக. எப்போ சேருவாகன்னே தெரியாது..” என்று சலித்தாள்.

அதில் லேசாய் சிரித்த கார்த்தி, ‘அப்போ ரெண்டு பேரும் அவ்ளோ அன்னியோன்யமா இருக்காங்களா. இந்த கயலு என்னையாவே மூணாவது மனுஷன்னு சொல்லிட்டாலே’ என்று நினைத்தவனுக்கு
இப்போது வருத்தம் இல்லை. அவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து வைத்திருக்கிறார்கள் என்ற மகிழ்ச்சியே இருந்தது.

அவன் முகத்தில் தெளிவை கண்டதும் பூவரசியும் நிம்மதியான மனதை உணராமல் மீனை பிடித்துக் கொண்டு, குடிலுக்கு செல்கையில் திடீரென “அய்யயோ” என்று சட்டென்று நின்றாள்.

அதில் அவனின் வீல் சேரும் நின்று விட “எதுக்கு இப்படி கத்துற” என்று புரியாமல் கேட்டான்.

பூவரசி, “இல்ல இங்க காப்பு கட்டிருக்குற எல்லாரும் தீ மிதிக்கனும். அப்போ கயலு அக்காவும் இதை பண்ணனும்” என்று முழிக்க,

கார்த்தி “வாட்… அவள் எதுக்கு பண்ணனும்பூவரசி. இதுல எல்லாம் அவளை இழுக்காதீங்க” என்று சொன்னவன்,

“இதை போய் வாசு அண்ணாகிட்ட சொல்லிகிட்டு இருக்காத. உன்னை தோளை உரிச்சு தொங்க விட்டுருவாரு.” என்று சொல்ல, அதில் சற்று பயந்த விழிகளோடு அவனைப் பார்த்தவள்,

“யோவ்… நீ வேற ஏன்யா பயமுறுத்தற.” என்று யோசித்துக் கொண்டே அவனை குடிலில் விட்டு விட்டு, அவள் இடத்திற்கு செல்ல, அங்கு அவளின் அம்மாவோ இன்று கயலும் இந்த சடங்கை செய்ய வேண்டும் என அவளிடம் சொல்லும் படி சொல்லி அனுப்பினார்.

அவள் தான் ‘காளியாத்தா என்னை காப்பாத்து…’ என்று தயங்கிக் கொண்டு கயலின் குடிலுக்கு செல்ல, அப்பொழுது தான் அந்த சுவர் உடைந்திருந்ததையே கண்டாள்.

ஜீவாவின் கையில் அடிபட்டு இருப்பதையும், அவன் உடைந்த சுவற்றை கல்லை வைத்து அடைத்து கொண்டிருப்பதையும், கயல் அங்கிருந்த ஒரு சிறுமியிடம் ஏதோ பேசிக் கொண்டிருப்பதையும் கண்டவள் மெல்ல அருகில் சென்று கயலிடம் இந்த விஷயத்தை சொல்ல இதனை கேட்ட ஜீவாவோ வானத்துக்கும் பூமிக்கும் குதித்தான்.

“அவள் எங்கேயும் வரமாட்டா… அப்படி அவள் அதை பண்ணனும்ன் னு அடம்பிடிச்சா நான் இப்போவே இவளை கூட்டிகிட்டு கிளம்பிடுவேன்.” என்று மிரட்ட,

கயல், “பூவரசி நான் என்ன சடங்கோ அதை பண்றேன்…” என்று சொல்ல,

ஜீவா, “நீ வாயை மூடுறியா” என்று திட்ட வர, கயல் அதனை கண்டு கொள்ளாமல், “நான் வரேன் பூவரசி என்ன பண்ணனும்னு மட்டும் சொல்லு” என்றாள் வீம்பாக.

ஜீவா “நோ அவள் எங்கேயும் வரமாட்டாள்… நீ போ” என்று கூற, பூவரசி தான் பேந்த பேந்த முழித்துக் கொண்டிருந்தாள்.

பின், இவங்களா பேசி முடிவுக்கு வரட்டும் என்று அவள் சென்று விட ஜீவா கயலை முறைத்தான்.

“உன்னை யாரு என்னை கேட்காம வரேன்னு சொல்ல சொன்னது. நீ எங்கேயும் போக கூடாது.” என்று அதட்ட,

அவள், “அவங்க தான் ஏதோ சடங்குன்னு சொல்றாங்களே.” என்று கூற,

“என்ன தீ மிதிக்கிறதெல்லாம் ஒரு சடங்கா…” என்றவன், ‘நேத்து மாதிரி கிக்கா ஏதாவது சடங்கு செய்வானுங்கண்ணு பார்த்தா… என் வாழ்க்கையோட விளையாடுரானுங்க…’ என்று மனதில் புலம்பியவன், எவ்வளவு தடுத்தும் கயல் கேட்கவே இல்லை.

ஜீவா பரிதாபமாக “கயல் வலிக்கும் கயல்… கால் எரியும். சொல்றதை கேளு…” என்று கெஞ்ச, அவள் வீம்பாக இருப்பதை கண்டதும், ‘பாவி என்னை பழி வாங்குறா..’ என்று நினைத்தவன்,

“உனக்கு என் மேல கோபம்ன்னா அதை என்கிட்ட காட்டு. அதுக்காக, என்னை கஷ்டபடுத்த இப்படி பண்ணாத.” என்று எச்சரிக்க,

அவளோ, “நீங்க என் மேல இருக்குற கோபத்துல  சுவத்தை உடைச்சு உங்களை கஷ்டபடுத்திக்கலாம். அதையே நான் பண்ணக்கூடாதா…” என்று சாதாரணமாக கேட்க, அவன் தான் திகைத்து விட்டான்.

கோபமாக “கயல் நான் சொல்றதை கேட்க முடியுமா முடியாதா” என்று கேட்க,

அவள் அழுத்தமாக “முடியாது” என்று விட்டு, பூவரசியின் அம்மாவிடம் சென்று அமர்ந்து கொண்டாள்.

அதில் கோபமானவன், அவள் சென்ற இடத்திற்கு சென்று அவளை முறைத்து ‘ஒழுங்கா இங்க வா…’ என்று பார்வையாலேயே மிரட்டி பல்லைக் கடிக்க,

அவள் ‘எதுக்கு நான் வந்தா நீங்க என்னை கத்தி பயமுறுத்தி திட்றதுக்கா. போய்யா நான் வரமாட்டேன்’ என்று அவனை கண்டு கொள்ளாமல் அங்கிருக்கும் பெண்களிடம் எதையோ பேசுவது போல் பாவ்லா செய்ய, சிறிது நேரம் அங்கேயே நின்ற ஜீவா,

இன்னைக்கு இருக்குடி உனக்கு… என்று அவளை தீயாக முறைத்து விட்டு சென்றவன் அன்று முழுதும் அவள் கண்ணில் படவே இல்லை.

கார்த்திக்கு சாப்பாடு கொடுக்க மட்டும் சென்றவள், எதுவும் பேசாமல், அவனுக்கு தேவையானதை மட்டும் செய்து விட்டு, வந்து விட, கார்த்தியும் அவளிடம் எதுவும் பேசவில்லை.

இப்படியே இரவும் வர, அந்த இடமே தீ ஜுவாலையாக ஜொலித்துக் கொண்டிருந்தது. கயலுக்கு வேறு பயத்தில் அடிவயிறு கலங்கியது.

ஜீவாவை வேறு காலையில் இருந்து காணாததால் என்னவோ போல் இருக்க, முகத்தை உம்மென்று வைத்திருந்தவளுக்கு, பூவரசி, அவளின் உடை ஒன்றை கொடுத்து அதை போட சொல்ல,

முட்டிக்கு மேல் இருக்கும் பாவாடையும், அதற்கு மேட்சாக பாசிமணிகளை கொண்ட சிறிய சட்டையும், லேசான தாவணியையும் கண்டு திருதிருவென விழித்தாள்.

“இதெல்லாம் நான் போடமாட்டேன். நான் என் சுடிதாரையே போட்டுக்குறேன்” என்று சொல்ல, பூவரசி, ‘இதை தான் போடணும்’ என்று வற்புறுத்தி போட வைக்க, அவளுக்கு தான் ஐயோ வென்று இருந்தது.

பின் வேறு வழி இல்லாமல் அதனை உடுத்தியவள், தயங்கி கொண்டே வெளியில் வர, அப்பொழுது தான் அங்கு ஜீவா வந்து சேர்ந்தான்.

வந்தவன், கயலை கண்டு மேலிருந்து கீழ் வரை ஆராய, அதில் அவளுக்கு தான் வெட்கம் பிடுங்கி தின்றது.

ஜீவாவை பாராமல், தலையை குனிந்து கொண்டு, அவனை தாண்டி செல்ல போக, ஜீவாவின் பார்வை மட்டும் அவளை விட்டு நகரவே இல்லை.

ஜீவா ‘கடைசியா சொல்றேன் ஒழுங்கா வந்துடு… அப்பறம் நான் பொறுப்பு இல்லை’ என்று கண்ணாலேயே மிரட்ட, அவள், ‘என்ன ஆனாலும் நான் தீ மிதிக்காம வரமாட்டேன்…’ பிடிவாதமாய் நிற்க, ஒவ்வொருவராய் சென்று தீ மிதித்தனர்.

கார்த்தி தான் அண்ணா எப்படி சும்மா இருக்காரு என்று யோசித்து கொண்டிருக்க, சரியாக கயல் அருகில் போகையில் சோ வென மழை பெய்ய ஆரம்பித்தது.

கயல் ஒன்றும் புரியாமல் நிமிர்ந்து பார்த்து விட்டு, ஜீவாவை பார்க்க, அவனோ கயலையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

திடீரென மழை பெய்ததில் தீ கங்குகள் எல்லாம் அணைந்து விட, அந்த சடங்கை தொடர முடியாமல், காளியாத்தாவின் கருணை என்று நினைத்தனர் அந்த மலை வாசிகள்.

ஆனால் கார்த்தியும், கயலும் மட்டும் அதனை நம்பவில்லை. அதெப்படி சரியா மழை வரும் என்று குழம்ப, ஜீவா, ‘இப்போ நீ வந்து தான ஆகணும்… என்னடி பண்ணுவ…’ என்று விழி உயர்த்தி கேட்க, அவள், ‘இந்த வில்லன் தான் ஏதோ வில்லத்தனம் பண்ணிருக்கான். ஆனால் மழை எப்படி வந்துச்சு…’ என்று நகத்தை கடித்துக் கொண்டு யோசித்தாள்.

ஜீவா அவள் அருகில் வந்து, அவள் விரலை வாயில் இருந்து எடுத்து விட்டு, “போய் ட்ரெஸ் சேன்ஜ் பண்ணிட்டு, குடிலுக்கு வா…” என்று கட்டளையாக சொல்ல, அவளோ, ‘இன்னைக்கு என்ன பண்ணபோறாரோ தெரியலையே…’ என்று அவளின் சுடிதாரை போட்டு கொண்டு, மெல்ல குடிலுக்குள் வர,

ஜீவா தான், “வாங்க ஜான்சி ராணி… தீயை கூட பூ மாதிரி நினைச்சு அதுல காலை வைக்க போன, பரதேவதை” என்று நக்கலடித்தாலும், கண்கள் அவளையே கூர்மையாக பார்க்க, கயல் பயத்தில் திணறிக்கொண்டிருந்தாள்.

ஏனோ அவளிடம் பகலில் இருக்கும் தைரியம் இரவில் மட்டும் இருப்பதே இல்லை.

அவன் அவளை நெருங்கி, “நான் சொல்லிகிட்டே இருக்கேன். நீ அதை கேட்காம திமிரெடுத்து போய் தீ மிதிக்க போற… ஹ்ம்ம்?” என்று கேட்டுக்கொண்டே வந்து, அவளை சுவரோடு நெருக்கி, இரு பக்கமும் கை வைத்து அணை கட்டி நிற்க, அவன் குரலில் கோபம் இருக்கிறதா இல்லையா என்று கூட அவளுக்கு புரியவில்லை பாவம்.

விட்டால் அழுது விடுவேன் என்று கண்களில் கண்ணீர் ரெடியாக நிற்க, ஜீவா, “காலைல என்ன சொன்ன, நான் உன் மேல இருக்குற கோபத்துல, என்னை கஷ்டப்படுத்திகிட்டனால, நீ என் மேல இருக்குற கோபத்துல உன்னை கஷ்டப்படுத்திக்க போற அப்படித்தான” என்று கேட்க, அவள் முதலில் ஆம் என்று தலையாட்டி விட்டு பின், ம்ஹும் என்று மறுப்பாய் தலையாட்டினாள்.

ஜீவா மேலும் அவளை நெருங்கி, “என்னை நான் கஷ்டப்படுத்திகிட்டா உனக்கு வலிக்குதா ஸ்வீட் ஹார்ட்…” என்று மென்மையாய் கேட்க, அந்த மென்மையில் கரைந்தவள் பதில் சொல்ல கூட தோன்றாமல் அப்படியே நிற்க,

“இனிமே நான் அப்படி பண்ணமாட்டேன் ஸ்வீட் ஹார்ட். என்ன கோபமா இருந்தாலும் இனிமே நீயும் அப்படி யோசிக்க கூடாது. உன்னை காயப்படுத்திக்கணும்னு நினைக்கக் கூடாது புரிஞ்சுதா” என்று மென்மையும், கட்டளையுமாக சொல்ல, அவளோ ஜீவா தான் இப்படி பேசுகிறானா… என்று விழி விரித்து அவனையே பார்த்தாள்.

ஜீவா குறுஞ்சிரிப்புடன், “ஏன்னா.. நீ சிரிச்சாலும், அழுதாலும் அதுக்கு காரணம் நான் மட்டுமா தான் இருக்கணும். அதே மாதிரி உன்னை காயப்படுத்துறதை கூட நான் மட்டும் தான் பண்ணனும். உயிரில்லாத பொருளுக்கு கூட அதுக்கு உரிமையில்லை.”என்று கண்ணில் தீவிரத்துடன் சொன்னான்.

அதனை கேட்ட கயல் ‘இவன் எனக்கு வில்லனா ஹீரோவா’ என்று நினைத்து பே வென அவனை பார்க்க,

ஜீவா, அவள் பார்வையில் “ஹே நான் காயப்படுத்துறதுன்னா… கிஸ் குடுத்து காயப்படுத்துறதை சொன்னேன்…” என்று அவள் உதட்டினை வருடியவன்,

அவள் நெற்றியில் முட்டி, “கண்டிப்பா நான் உனக்கு வில்லன் தான் அதுல சந்தேகமே இல்ல” என்று குறும்பாய் கூற, ஏற்கனவே அவன் பேச்சிலும் செயலிலும் சிவந்து நின்றவள் இப்போது அதிர்ந்து, ‘மனசுல தான நினைச்சோம் அப்பறம் எப்படி இவருக்கு தெரிஞ்சுச்சு’ என்று முழிக்க,

அவன் அதையும் கண்டு கொண்டு, “ம்ம் உன் மனசு வந்து என்கிட்ட சொல்லுச்சு…” என்று நக்கலாக சொல்லி விட்டு அவன் சென்று படுத்து விட்டான்.

கயல் தான் அவனின் இந்த அவதாரத்தில் நகரக்கூட தோன்றாமல் அதே இடத்தில கல்லாக சமைந்து விட்டாள்.
ஆனால் ஜீவா குதூகலமாக இருந்தான்..

காலையில் கார்த்தியிடம் “என் புருஷன்” என்று அவள் பேசியதை கேட்டவன், கூடிய சீக்கிரம் அதை என்கிட்ட உன்னை சொல்ல வைக்கிறேன் என்று சபதம் எடுத்து, அவள் அதிர்ந்து நிற்பதையே கைகளை தலைக்கு குடுத்து கால் மேல் கால் போட்டு படுத்து கொண்டு குறுகுறுவென பார்த்திருந்தான்

நேசம் தொடரும்..
-மேகா

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
24
+1
70
+1
2
+1
3

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்