Loading

13 – வலுசாறு இடையினில் 

 

வர்மன் பெயர் கூறி அடுத்து நங்கையின் பெயர் கூறியதும் தோழிகள் இருவரும் அதிர்ந்து பார்த்தனர். 

 

“யாரு பெரியம்மா உங்க சொந்தமா ?”, என பூசாரி அர்ச்சனை தட்டை கொடுத்தபடி கேட்டார். 

 

“ஆமா பூசாரி .. நம்ம வரமனுக்கு பாத்து இருக்க பொண்ணு தான் இது”, என ஆச்சி கூறியதும் வினிதா திரு திருவென விழிக்க நங்கை ஆச்சியை முறைத்துக்கொண்டு இருந்தாள். 

 

“அப்படியா .. ரொம்ப சந்தோஷம்.. பொண்ணு ரொம்ப அழகா இருக்கா.. நம்ம குடும்பத்துக்கு ஏத்த பொண்ணா தான் தெரியுது.. எப்போ கல்யாணம் வைக்க போறீங்க?”

 

“பொண்ணு படிக்கறா .. படிப்பு முடிஞ்சி தான் வைக்கணும்-ண்ணு இருக்கேன்.. வரேன் பூசாரி”, என ஆச்சி கூறிவிட்டு உள் பிரகாரம் சுற்றி விட்டு வெளி பிரகாரம் சுற்ற ஆரம்பித்தார். 

 

பூசாரியிடம் அப்படி கூறியதும் நங்கை வெளியே வந்து அசரமர விநாயகர் இருந்த திட்டில் அமர்ந்து கொண்டாள். 

 

அவள் சொல்ல வந்த விஷயத்திற்கு எதிர்பதமாக ஆச்சி உள்ளே நடந்து கொண்டது நங்கையை மிகவும் கோபப்படுத்தி இருந்தது. எது நடக்க கூடாது என்று அவள் வந்தாளோ அதற்கு இறைவனிடம் அச்சாரம் போட்டது போல அவர்கள் இருவரின் பெயருக்கு ஒன்றாக அர்ச்சனை நடந்து விட்டது. 

 

வினிதாவும் நடப்பது புரிந்தும் புரியாமல் பதற்றமாக நின்று கொண்டு இருந்தாள். 

 

ஆச்சி பொறுமையாக எல்லா சாமியையும் கும்பிட்டுவிட்டு இவர்கள் இருக்கும் இடத்திற்கு வந்தார். 

 

“ஏன்டி இங்க வந்து இவருக்கு காவல் காத்துட்டு இருக்கீங்க? மத்த சாமி எல்லாம் கும்பிட்டு வரவேண்டியது தானே ?”, என விநாயகருக்கு ஒரு கும்பிடு போட்டு விட்டு பேச ஆரம்பித்தார். 

 

“அவரோட நாங்களும் சந்நியாசம் போகலாம்னு தான்”, நங்கை வெடுக்கென பதில் கூறினாள். 

 

“அவரு சந்நியாசின்னு யாரு சொன்னது? அவருக்கு ரெண்டு பொண்டாட்டி இருக்கு .. “, என ஆச்சியும் வெடுக்கென பதில் கொடுத்தார். 

 

இவர்கள் இருவரும் பேசும் விதம் கண்டு வினிதா தான் மனதிற்குள் நொந்து கொண்டு இருந்தாள். 

 

“இது எல்லாத்துக்கும் மேல பெரிய வில்லியா இருக்கும் போலவே .. நான் தானே இத பாத்து பேசி வர்மண்ணே கிட்ட பேசவைக்கலாம்-ன்னு சொன்னேன்.. போச்சி ..நங்க என்னைய சாவடிக்க போறா ..  நினைச்சேன் இன்னிக்கி  அந்த விளங்காதவன் ஃபோன்-ல நாள் விடியரப்போவே ஏதாவது வில்லங்கம் விடியும் ன்னு. ஆனா அது என் வாயா இருக்கும்ன்னு எனக்கு தெரியலியே ..”, இப்படியாக வினிதா மனதிற்குள் புலம்பிக்கொண்டு இருந்தாள். 

 

“அவருக்கு எத்தன பொண்டாட்டி வேணா இருந்துட்டு போகட்டும் நான் உங்க பேரனுக்கு பொண்டாட்டி ஆகமாட்டேன் “

 

“ஹாஹாஹா .. இப்போ தெரியுது .. ஏன் என் பேரனுக்கு உன்ன பிடிச்சதுன்னு .. “, என ஆச்சி சிரித்து அவளை கடுப்பு ஏற்றி கொண்டு இருந்தார். 

 

“உங்க பேரனுக்கு என்னைய பிடிச்சா என்ன பிடிக்காலன்னா என்ன? ஏற்கனவே உங்க பேரன் அளவுக்கு மீறி போயிக்கிட்டு இருக்கான். எனக்கு இருக்கற ஆயிரம் பிரச்சனை போதும்.. இவன் பண்ற பிரச்சனைல என் வாழ்க்கை போயிடும் போல.. உங்க பேரன் கிட்ட சொல்லி என் விஷயத்துல இனிமே நுழைய கூடாதுன்னு சொல்லுங்க.. எனக்கு உங்க பேரன சுத்தமா பிடிக்காது”, நங்கை பட்டாசாக வெடித்து கொண்டு இருந்தாள். 

 

“எனக்கு உன்ன பிடிச்சி இருக்கு கண்ணு.. நீ மட்டும் வீட்டுக்கு வந்தா போதும் .. சண்டியர் கணக்கா சுத்தறவன பொட்டி பாம்பா அடக்கிடலாம்”, என ஆச்சி அவள் தாடையை பிடித்து பேசினார். 

 

“பொட்டி-ல அடைக்க பாம்பாட்டிய கூப்பிடுங்க .. என்னைய விற்றுங்க ..”

 

“உங்க அப்பா கிட்ட நான் பேசறேன் கண்ணு.. “

 

“அய்யோ பாட்டி.. நான் சொல்றது உங்களுக்கு புரியுதா இல்லையா? ஏன் இப்படி என்னை இம்சை பண்றீங்க? உங்களுக்கு மட்டும் விருப்பம் இருந்தா போதுமா ? எனக்கு மனசு இல்லயா ? அதுல விருப்பு வெறுப்பு இருக்காதா? அவன் தான் ஆம்பல அவன் இஷ்டத்துக்கு இருக்கான். உங்களுக்கு கூடவா புரியல ?”

 

“நங்க”, என வினிதா சத்தம் கொடுக்கவும் நங்கை சுற்றும் முற்றும் பார்த்து குரலை தழைத்து பேச ஆரம்பித்தாள். 

 

“இப்போ சொன்னியே அவன் ஆம்பள-ன்னு .. அந்த திமிர நீ அடக்கணும்னா அவன கட்டிக்க.. அவன் ஆம்பல திமிர மட்டும் இல்ல சுத்து பட்டு ஊர்ல இருக்க அத்தனை ஆம்பல ஆணவத்தையும் அடக்கிறலாம்.. உனக்கு துணையா நான் இருப்பேன்.. அதுக்கு நீ அமைதியா யோசி.. உனக்கு அவன பிடிக்குதா இல்லையா ணு நான் கேக்கல.. இன்னிக்கி உனக்கு விருப்பம் இல்லாத விஷயத்த செய்யறான், நாளைக்கு நீ விரும்பர விஷயத்த செஞ்சா உன் மனசு மாறலாம்.. உன் பிரச்சன, அவன் குணம் , உன் குணம் , உன் பொறந்த வீட்டு ஆளுங்க, இது எல்லாத்தாயும் ஒரு பக்கம் வச்சிட்டு, அவன கட்டிக்கர சூழ்நிலை வந்தா நீ சரின்னு சொல்வியா மாட்டேன் ன்னு சொல்வியா ன்னு யோசி.. உன் அப்பன் இவன தான் கட்டணும்ன்னு சொன்னா உன்னால மறுத்து எதிர்க்க முடியுமா? “

 

நங்கை ஆச்சி பேசுவதையே கவனித்து கொண்டு இருந்தாள். 

 

“அவனுக்கு பொண்டாட்டியா நீ வந்தா உனக்கு எல்லா உரிமையும் கிடைக்கும். பஸ்-ல வரப்போ சொல்லிட்டு வந்தியே சுயமரியாதை, பொண்ணுங்களுக்கு நிலையான வீடு, இன்னும் என்ன என்னவோ.. அதுலாம் என்னன்னு உனக்கு நான் காட்டறேன்.. நான் உன்ன கட்டாயப்படுத்தல,  ஆனா என் பேரன் உன்ன கட்டாயப்படுத்தி உன் கழுத்துல தாலி கட்டுவான். அதுக்கு நீ உன் மனச தயார் படுத்திக்க..”, என கூறிவிட்டு எழுந்து நடந்தார். 

 

“பொம்பள நினைச்சா ஆக்கவும் முடியும் அழிக்கவும் முடியும்.. அந்த சக்திய எங்க எப்போ உபயோகிக்கணும்ன்னு தெரியணும்.. உனக்கான உரிமையும், உனக்கான கனவையும் பிடிக்க நீ தான் ஓடணும், நீ ஓடறப்ப நீ உருவாக்குன வீட்ட கவனிக்க உன் சரிபாதிய தயார் பண்றது உன் சாமர்த்தியம் .. சீக்கிரமே என் வீட்டு மருமகளா உன்ன பாக்கறேன் கண்ணு.. என் பேரன் பாசத்துக்காக தான் கொலை பண்ணான்.. மத்தபடி கொஞ்சம் மொரடன் ஆனா நல்லவன்.. இப்போ நீ கொழப்பத்துல இருக்க.. உன் மனசுல யாரும் இல்ல.. அவனுக்கு தான் எடம் குடுத்து பாரு .. கண்டிப்பா தரிசா போக விடமாட்டான்”, என நின்று கூறிவிட்டு சென்றார் ஆச்சி. 

 

அதற்கு பின் இருவரும் கல்லூரி வந்து மாலை வீட்டிற்கு செல்ல பேருந்து நிறுத்தம் வந்து நிற்கும் வரையிலும் நங்கை ஒரு வார்த்தை கூட பேசவில்லை. 

 

“ஏய் நங்க.. நங்க “, வினிதா பொறுத்தது போதும் என அவளை அழைத்தாள். 

 

‘என்ன?’ என்பது போல நங்கை அவளை பார்த்தாள். 

 

“ஏன் டி இப்படி அமைதியா இருக்க ? ஏதாவது பேசு நங்க “

 

“காலைல தான் என்னை கூட்டிட்டு போய் நல்லா செஞ்சிடியே இன்னும் என்ன நான் பேசணும் ?”, என நங்கை கூறியதும் வினிதா பதறி, “ ஏய் நங்க.. நான் என்ன டி பண்னேன்?”, என கேட்டாள். 

 

“சும்மா இருந்த சங்க ஊதி கெடுத்த கதையா தானே டி பண்ணி வச்சி இருக்க.. அந்த மொரடன் கிட்ட கூட தப்பிக்கலாம் போல இந்த கெழவி கிட்ட தப்பிக்க முடியாது ங்க மாறி ல அது இருக்கு.. நானா போய் இன்னிக்கி கோவில்ல தலைய குடுத்து ரெண்டு பேர் பேருக்கும் அர்ச்சனை பண்ணிட்டு வந்து இருக்கேன். இது கிட்ட சொன்னா அவன கண்டிக்கும்-ன்னு பாத்தா இதுவே அவனுக்கு ஐடியா சொல்லி அனுப்பும் போல டி .. எங்க இருந்து தான் வந்து எனக்குன்னு இப்படி வாய்க்குத்துங்களோ? “, மனதில் இருக்கும் குமுறல் வார்த்தை வழியாக வெளியே வந்து கொண்டு இருந்தது. 

 

“நான் நல்ல விதமா நினைச்சி தான் சொன்னேன்.. அதுவும் ஃபோன் ல நேர்ல வாங்க பேசலாம் ன்னு சொல்லிச்சி.. சரி வீட்ல எப்போ வேணா அந்த அண்ணே வரும்ன்னு கோவில்ல பாக்கலாம் ன்னு சொன்னேன்.. இப்படி ஆகும்ன்னு எனக்கு மட்டும் எப்படி டி தெரியும்?”, வினிதா தன் பாக்க நியாயத்தை கூறினாள். 

 

“நேத்து வீட்ல என்ன நடந்தது தெரியுமா?”, என நங்கை கண் கலங்கினாள். 

 

“என்னாச்சி நங்க?”, நங்கை கண்கள் கலங்குவது கண்டு வினிதா அவளை தனியே அழைத்து சென்றாள். 

 

ராஜன் கூறிய பொய்யான காரணம் கேட்டு ஏகாம்பரம் வர்மன் கடைக்கு சென்று சண்டையிட்டது முதல் கூற ஆரம்பித்தாள். 

 

“இந்த சனியன தலை முழுகலாம்ன்னு ஒவ்வொரு பிரச்சனையா புதுசு புதுசா கெளம்புது.. அந்த ஜோசியக்காரன் சொன்ன மாறி தான் நடக்குது.. இவள வீட்ல வச்சிட்டு இருக்க இருக்க எனக்கு நெஞ்சுவலி வந்துரும் போல காமாட்சி.. இவள உன் அப்பன் வீட்டுக்கு அனுப்பி விடு.. நம்ம கல்யாணம் எல்லாம் பேசிட்டு தாலி கற்றபோ மண்டபத்துக்கு கூட்டிட்டு போயிக்கலாம்.. இனிமே இவ ஒரு நிமிஷம் கூட இந்த வீட்ல இருக்க கூடாது”, என ஏகாம்பரம் வெறி பிடித்தவர் போல கத்த ஆரம்பித்தார். 

 

“அவ எங்கங்க போவா ? அங்க என் அண்ணன் மகன் இருக்கான்.. குடிகாரன் ங்க.. குணமும் சரி இல்லாதவன்.. நம்ம பொண்ணுக்கு ஏதாவது ஆகித்த என்ன பண்றது.. இன்னும் ரெண்டு மாசம் தான்.. இவளுக்கு தான் ரெண்டு மாசம் முடியரப்போ கல்யாணம் முடிஞ்சய் இருக்கும்னு சொல்லி இருக்காங்கல்ல.. கொஞ்சம் பொறுமையா இருங்க”, என காமாட்சி அவரிடம் கெஞ்சினார். 

 

“அப்போ நீயும் உன் மகளோட போ.. எனக்கு என் பையன் போதும்.. தனி வீடு எடுத்து தரேன்.. இனிமே இவ என் கண்ணுல படக்கூடாது “

 

“நான் எங்கங்க போவேன்?”, காமாட்சி பதறினார். 

 

“எங்கயோ போய் தொலைங்க எல்லாரும்.. பண பிரச்சனைல நான் படர கஷ்டம் என்னனு உங்க ரெண்டு பேருக்கும் தெரியுமா? இதுல ராஜனுக்கு வேற பிரச்சனை வருது. இவ ராசி தான் எங்கள இவ்வளவு படுத்துது.. இனிமே இவ இங்க இருக்க கூடாது”

 

“உங்க பையன் குடிக்கறது சிகரெட் பிடிக்காரத்துக்கும் நான் தான் காரணம்.. என் நேரம் தான் காரணம் .. அப்படி தானே ப்பா?”, நங்கை மனம் தாளாமல் வாய் திறந்தாள். 

 

“என்ன டி அப்பா கிட்ட எதிர்த்து பேசற.. வாய மூடு.. நீ உள்ள போ”, என காமாட்சி அவளை அடக்கினார். 

 

“அவர் தான் நம்மல வெளிய போக சொல்லிட்டாரே ம்மா ..”

 

“காலேஜ் போய் படிக்கற திமிரு தான் உன்ன என் முன்னாடி பேசவைக்குதா?”, ஏகாம்பரம் மகள் அவரின் முன் பேசுவது பிடிக்காமல் இன்னும் கோபம் கொண்டு பேச ஆரம்பித்தார். 

 

“நானும் மனுஷி தான் ப்பா.. எனக்கும் மனசு இருக்கு. வலி இருக்கு.. சின்ன வயசுல இருந்து உங்ககிட்ட பேசணும்ன்னு ரொம்ப ஆசை இருந்தது.. நீங்க என்னை கண்டாலே மூஞ்ச திருப்பிட்டு போயிறுவீங்க.. அன்பு பாசம் எல்லாம் அப்பத்தா இருந்த வரைக்கும் தான் அனுபவிச்சேன். அவங்க போனதுக்கு அப்பறம் வெறும் ஜடம் மாதிரி தான் ப்பா இங்க இருக்கேன்.. ஏன் ப்பா? ஏன் இப்படி பிரிச்சி பாக்கறீங்க? உங்க பையனுக்கு காட்டுற பாசத்துல கொஞ்சம் எனக்கும் காட்டலாம் ல? பொண்ணா பொறந்தது என் தப்பு இல்ல.. ஆனா நான் பொறந்துட்டேன் .. ஒரு மனுஷியா கூட நீங்க என்னை நினைக்க மாட்டீங்களா?”

 

“பாத்தீங்களா ப்பா.. இவள நம்ம மதிக்கணுமாம்.. இதுக்கு தான் இவளா காலேஜ் அனுப்பாதீங்க-ன்னு சொன்னேன்.. உங்களயே எதிர்த்து பேசறா பாருங்க”, என பேசியபடி ராஜன் தந்தை அருகில் வந்து தனது போனை கொடுத்து விட்டு  நின்றான்.

 

“நீ வாய மூடு ராஜா..  ஸ்கூல் படிக்கற வயசுல தண்ணி அடிச்சிக்கிட்டு இருக்க நீ.. உன் ரேங்க் கார்ட் எங்க கொண்டு வா.. ஒரு சப்ஜெக்ட் ல கூட இந்த தடவ நீ பாஸ் பண்ணல… தப்பான வழியில நீ போயிக்கிட்டு இருக்க.. உன் வீடியோ பாத்தேன்.. படிக்கற புக் வச்சி சாராயம் வாங்கற அளவுக்கு வந்துட்டல்ல நீ.. “, நங்கை அவனை கண்டிக்க ஆரம்பித்ததும் அவன் தந்தையை பார்த்தான். 

 

“வாய மூடு டி .. அந்த வர்மனுக்கும் உனக்கும் என்ன டி சம்பந்தம்? நீ தானே அவன்கிட்ட சொல்லி இவனா அசிங்க பட வச்ச?”, என ஏகாம்பரம் கெட்டதும் நங்கை ஒன்றும் புரியாமல் நின்றாள். 

 

“அவனுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல ப்பா”

 

“அப்போ இது என்ன?”, என அன்று வர்மன் அவள் கை பிடித்து இழுத்து பேசுவது படமாக ஓடியது. 

 

ராஜன் வில்லத்தனமான பார்வையுடன் இப்போது நங்கையை பார்த்து சிரித்தான். 

 

“இது .. இது ..” என அவள் யோசிகக்கும் நேரத்தில் ஏகாம்பரம் அவள் கன்னத்தில் சில அடிகளை இறக்கி இருந்தார். 

 

“சொல்லு டி .. நீயும் அவனும் என்ன பண்றீங்க? நடுரோடுன்னு கூட பாக்காம கைய பிடிச்சிட்டு பேசற அளவுக்கு பழக்கம் இருக்கா? அவனோட என்ன டி உறவு உனக்கு?”, என வரம்பு மீறிய வார்த்தைகளால் அவளை குத்தினார் ஏகாம்பரம். 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
8
+1
0
+1
0

  உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

  3 Comments

  1. Archana

   பிபி ஏறுதே😶😶😶😶😶 டேய் விஷ பூச்சி உன்னையே எல்லாம் கல்லி பால் குடுத்து கொன்னுருக்கனும் பெரிய வில்லன் ரேஞ்ச்சுக்கு அசிங்க படுத்துற😡😡😡😡😡

  2. Janu Croos

   இந்தாளு இந்த ஜென்மத்துல திருந்தாது போலயே….அடேய் விஷக்கிருமி…வில்லத்தனமாவா சிரிக்குற..உனக்கு இருக்குடி…குடிகார நாயி…நீ நங்கைய பாத்து சிரிக்குறியா…
   வரம்னே விடாடாலும் ஆச்சி விடாது போலயே….நங்கை உனக்கு வர்மன் தான்…வேற வழியே இல்ல.

  3. இந்த ஏகாம்பரத்த கொஞ்ச நாள் வாய் பேசாத அளவு எதாவது பண்ணிவிடுங்களேன்.அவன் நங்கைய திட்றத கூட போனா போகுதுன்னு பொறுத்துக்கலாம். ஆனா ஆம்பள பையன்னு ராஜன் பண்ற தப்புக்குலாம் சப்போர்ட் பண்றத தான் தாங்க முடியல