Loading

திரையில் தெரிந்த தன் அன்னையின் பெயரை பார்த்த சமுத்ரா அழைப்பை ஏற்க மறுபுறம் தான் பஸ் ஏறிவிட்டதாகவும் வந்திறங்கியதும் அழைத்து செல்லுமாறு அமராவதி கூறிவிட்டு சமுத்ரா ஏதும் கூறும் முன் அழைப்பை துண்டித்துவிட்டார்.

சமுத்ராவிற்கு தன் அன்னை ஏதோ பிரச்சினை செய்துவிட்டு கிளம்பியிருக்கிறார் என்று புரிய தாமதிக்காது தன் மாமாவுக்கு அழைத்தாள்.

இரண்டே அழைப்பில் அழைப்பு ஏற்கப்பட

“மாமா.” என்று சமுத்ரா பேச ஆரம்பிக்க

“உன் அம்மா என்கூட கோவிச்சிக்கிட்டு கிளம்பிட்டா தங்கம்.” என்று வருத்தமான குரலில் பரசுராமன் கூற 

“என்னாச்சு மாமா?” என்று சமுத்ரா விசாரிக்க

“நீ தெரிஞ்சிக்கிட்ட விஷயத்தை உன் அம்மாகிட்ட சொன்னேன். அவ என்கிட்ட கோவிச்சிட்டு போயிட்டா.” என்று கூற சமுத்ராவிற்கு அனைத்தும் புரிந்துபோனது.

சமுத்ராவிற்கே ஷாத்விக்கின் காதல் பற்றி முதலில் தெரியும். அதுவும் ஷாத்விக்கின் தமக்கை பவதாரணி தான் அவளுக்கு இந்த விஷயத்தை தெரியப்படுத்தியிருந்தாள். ஆனால் பவதாரணிக்கு தன் காதல் பற்றி தெரியுமென்ற உண்மை ஷாத்விக்கிற்கு இதுவரை தெரியாது.

 

முதலில் இது தெரிந்த போது சமுத்ராவிற்கு ஏமாற்றமாக இருந்த போதிலும் ஷாத்விக்கின் விருப்பப்படி அவன் வாழ்வு அமையவேண்டுமென்பதற்காக இது பற்றி பரசுராமரிடம் பேசியதோடு அவர் மூலமாக அவர்களின் திருமணத்திற்கான ஆரம்பகட்ட பேச்சினையும் ஆரம்பித்து வைத்தது சமுத்ரா தான். ஆனால் இது பற்றி பரசுராமரையும் அவளையும் தவிர யாரும் அறிந்திருக்கவில்லை.

“அம்மா புரிஞ்சிப்பாங்க மாமா. நான் அவங்ககிட்ட பேசுறேன். நீங்க கவலைப்படாதீங்க.” என்று சமுத்ரா சமாதானம் கூற

“உங்க அத்தைக்கும் இந்த ஏற்பாட்டுல துளிகூட விருப்பமில்லை‌.” என்று பரசுராமர் சொல்ல 

“ஷாத்விக் மாமாவுக்கு முழு சம்மதமே மாமா. ” என்றவளின் குரலில் மறைக்க முயன்ற ஏமாற்றம் படர்ந்திருந்ததை உணர்ந்தார் பரசுராமர்.

“சமுத்ரா நாம அவசரப்படுறோமோனு தோணுதுடா.” என்ற பரசுராமரின் மனதிலும் வேறு எண்ணங்கள் இருந்தது.

அவருக்கும் சமுத்ராவை தன் வீட்டு பெண்ணாக அழைத்து வருவதில் முழு விருப்பம். என்னதான் ஷாத்விக்கை அது இதுவென்று குறை சொன்னாலும் அவருக்கு ஷாத்விக்கை பற்றி நன்றாகவே தெரியும். அவன் ஒரு விஷயத்தை பொறுப்பேற்றுவிட்டால் அதனை சரிவர செய்யவேண்டுமென்று போராடும் குணம் கொண்டவன். அது தொழிலானாலும் சரி உறவுகளானாலும் சரி. அதனால் நிச்சயம் சமுத்ராவை அவன் நன்றாக பார்த்துக்கொள்வானென்ற நம்பிக்கை அவருக்கு நிறையவே இருந்தது. அதனாலேயே இவர்களை இணைக்க ஏதாவது சந்தர்ப்பம் கிடைக்காதாவென்று ஏங்கிக் கொண்டிருந்தார் பரசுராமர்.

“இல்லை மாமா. இது எந்த விதத்துலயும் அவசரமான முடிவில்லை. மாமா விருப்பம் அதுவாக இருக்கும் போது நாம அதை செய்றது தான் அவரோட வாழ்க்கைக்கு நல்லது.”என்று தன் முடிவை சமுத்ரா மீண்டும் உறுதிப்படுத்த இந்திராணி கூறியதை மீண்டும் நினைவு படுத்திய பரசுராமர்

“இதுவரைக்கும் நீ சொன்னபடி தான் நான் எல்லாமே செய்தேன். அந்த பொண்ணோட முடிவை சரியாக கேட்ட பிறகு தான் கல்யாணத்துக்கு தேதி குறிப்பேன்.” என்று பரசுராமர் பூடகமாக சொல்ல

“நிச்சயமா மாமா. ஆனா அதை நினைச்சு நீங்க தயங்க வேண்டிய அவசியம் இருக்காது.” என்று உலகின் இன்னொரு மூலையில் என்ன நடக்கிறதென்று தெரியாமல் சமுத்ரா நம்பிக்கையோடு சொல்ல பரசுராமருக்கு தான் சலிப்பாக இருந்தது.

அவர் அறியாத விஷயம் சமுத்ரா ஷாத்விக்கை விரும்பியது தான். அமராவதியும் விஷயத்தை தெளிவாக சொல்லிவிட்டு செல்லாததால் அவருக்கு சமுத்ராவின் வெளிப்படுத்தப்படாத காதல் பற்றி சிறு செய்தி கூட தெரியவில்லை. ஒருவேளை தெரிந்திருந்தால் ஷாத்விக்கை கட்டாயப்படுத்தியாவது ஷாத்விக்- சமுத்ரா திருமணத்தை நடாத்தியிருப்பார்.

“சரிம்மா நீ வேலையை பாரு. அம்மா வந்து சேர்ந்ததும் தகவல் சொல்லு.” என்றவர் அழைப்பை துண்டித்திட சமுத்ராவிற்கு தான் சோர்வாக இருந்தது.

அவள் வேண்டாமென்று மறுக்க நினைக்கும் சில உணர்வுகளை சுற்றி உள்ளவர்கள் கிளறிவிடுவதோடு மறந்திருந்த வடுவை வலுக்கட்டாயமாக ஆழம் பார்ப்பது போல் அவளின் உணர்வுகளின் அடிதடி விளையாட்டினை ஆரம்பித்துவைத்து அவளை சோர்வடையச்செய்கின்றனர்.

இதுவரை அவள் தன்னுடைய தனிப்பட்ட ஆசைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காதபோதிலும் அந்த ஆசைகளின் வருகை அவளுக்கு சிறு உற்சாகத்தை கொடுத்ததென்பதே உண்மை. அதுவும் குறிப்பாக ஷாத்விக் மீதான அவளின் உணர்வுகள் பல சந்தர்ப்பங்களில் ஆறுதலாகவே இருந்திருக்கிறது.

இரும்பு ராடென்று அவளை அனைவரும் நினைத்திருந்த போதிலும் அந்த இரும்பு ராடின் வலிமையை குறைக்கக்கூடிய தண்ணீர் ஷாத்விக் மட்டுமே. அது அவள் மட்டுமே அறிந்த உண்மை. 

அவனுடன் கழித்த சந்தர்ப்பங்கள் சொற்பமென்ற போதிலும் அவை அவளுக்கு சொர்க்கமாக போற்றப்படவேண்டிய புதையல்களே.

ஆனால் இன்னும் சில நாட்களில் அதற்கும் வழியில்லாமல் போய்விடுமென்ற உண்மை அவளை பலவகையில் வருத்தத்தான் செய்தது. ஆனால் தான் விரும்பியவனுக்காக செய்யக்கூடிய ஒரு நல்லது இது மட்டுமே என்றவளது மனம் சுயநலமாகவும் யோசிக்க பழகு என்று அறிவுறுத்தவும் தயங்கவில்லை.

நிச்சயம் சந்தர்ப்ப சூழ்நிலை அவளுக்கு சாதகமாக இருந்திருந்தால் சமுத்ரா சுயநலமாக யோசித்திருப்பாள். ஆனால் அது தான் அவளுக்கு அமையவில்லையே.

இவ்வாறு யோசனையிலேயே உழன்றவளுக்கு அதற்கு மேல் வேலை செய்யும் எண்ணம் இல்லாமல் போக இதயாவிடம் சொல்லிவிட்டு வீட்டிற்கு கிளம்பினாள்.

மறுபுறம் காலேஜில் மஹதியும் வினயாஸ்ரீயும் கேன்டினில் அமர்ந்து ஸ்நேக்ஸை கொறித்துக்கொண்டிருந்தனர்.

“மஹி , அம்மா அக்காவோட மேரேஜை பத்தி பேச தான் ஊருக்கு போயிருக்காங்களோ?”என்று தன் சந்தேகத்தை கேட்க

“அதுக்கு தான் போயிருக்கனும். இல்லைனா இவ்வளவு அவசரமா போறதுக்கு வேற என்ன காரணம் இருக்கமுடியும்?” என்று வினயாஸ்ரீயும் சொல்ல

“ஆமா நாம ஏன் இத பத்தி இவ்வளவு சீரியஸாக டிஸ்கஸ் பண்றோம்?”என்று மஹதி கேட்க

“நாம இல்ல‌. நீ… நீ கேட்ட நான் பதில் சொன்னேன்.” என்று வினயாஸ்ரீ கூற

“ஓ அப்படி. அப்போ நீங்க இன்டர்ஸ்ட் காமிக்கல. ரைட்டு ரைட்டு. எனக்கும் சம்பவம் பண்ண நேரம் வரும்ல. அப்போ பார்த்துக்கிறேன்.”என்று மஹதியும் நேரடியாகவே எச்சரிக்கை கொடுக்க

“வரும்போது பார்த்துக்கலாம். பவன் அண்ணா கொஞ்ச நாளா நம்ம வீட்டுக்கு அடிக்கடி விசிட் அடிக்கிறதை நோட் பண்ணியா?”என்று வினயாஸ்ரீ கேட்க மஹதியும் அதை கவனித்தே இருந்தாள்.

 

குறிப்பாக அவன் வீட்டிற்கு வரும் போதெல்லாம் சமுத்ரா வீட்டில்தான் இருப்பாள். அதோடு இருவரும் உரையாடும் போது பவனின் பார்வையில் ஒருவித குறுகுறுப்பும் ரசனையும் இருப்பதை மஹதி கவனித்திருக்கிறாள்.

“ஆமா வினி. யோசிச்சு பார்த்தா அங்க ஒரு தனி ட்ராக் ஓடுது போலயே”என்று மஹதி கூற

“ஆமா அதுவும் வன்சைடா.”என்று வினயாஸ்ரீயும் விளக்க

“அப்போ இன்னும் நம்ம வீட்டு மேடமுக்கு விஷயம் தெரியாது போலயே.”என்று மஹதி யோசனையுடனேயே கூற

“அப்படினு தான் நெனைக்கிறேன். ஆனாலும் பவன் அண்ணாவுக்கு தில்லு ஜாஸ்தி தான்‌. அவங்க அம்மாவை பத்தி தெரிஞ்சும் மதினிக்கு லைன் விடுறாருனா ஏதோ ஒரு முடிவுல தான் இருக்காரு‌.” என்று வினயாஸ்ரீ கூற

“இதுல க்ளைமேக்ஸே அக்காவோட பதில் தான். அது தெரிஞ்சா தான் என்டிங் எப்படின்னு தெரிஞ்சிக்க முடியும்”என்று மஹதியும் சொல்ல அப்போது அவர்களருகே வந்து அமர்ந்தான் அவர்களது வகுப்பு தோழன் மாதேஷ்.

“எந்த என்டிங் தெரியனும் உங்க இரண்டு பேருக்கும்?” என்று கேட்டபடியே அமர்ந்தவன் தண்ணீர் போத்தலை எடுத்து அருந்தத்தொடங்கினான்.

 

“அதெல்லாம் உனக்கு சொன்னா புரியாது. எதுக்கு எங்களை தேடிட்டு இங்க வந்த?”என்று கேட்க

“கல்ச்சரல்ஸ்க்கு ஸ்பான்சர்ஷிப் பத்தி விசாரிக்க போறோம். நீயும் வர்றீயான்னு கேட்க தான் தேடினேன்.” என்று மாதேஷ் கேட்க

“இன்னைக்கு நான் சீக்கிரம் வீட்டுக்கு போகனும். நீங்க போயிட்டு வாங்க.”என்று மஹதி கூற சரியென்று மாதேஷூம் கிளம்பிவிட்டான்.

மாதேஷ் கிளம்பியதும்

“எப்படியெல்லாம் காரணம் சொல்லிட்டு உன்னை தேடிட்டு வரத்தொடங்கிட்டான் பாரு.” என்று வினாயாஸ்ரீ போகும் மாதேஷையே பார்த்தபடி சொல்ல

“அவனை கண்டுக்காத விடு. என்னை இம்ப்ரெஸ் பண்ணுறதா நெனச்சு காலேஜிற்கு எடுபுடி வேலே செஞ்சிட்டு இருக்கான். பல்ப் வாங்கும் போது இவ்வளவு செஞ்சிருக்காங்கிற நல்ல பெயராவது மிஞ்சட்டும்” என்ற மஹதியின் சீரியஸான கேலி பதிலில் சிரித்துவிட்டாள் வினயாஸ்ரீ.

“இன்னைக்கு கடைசி பீரியட் ஃப்ரீ. நாம வீட்டுக்கு கிளம்பலாம்.”என்று இருவரும் தம் பைகளை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு கிளம்பினர்.

சமுத்ராவும் இன்று வழமையான நேரத்திற்கு முன்னதாகவே வீட்டிற்கு வந்திட மாலதி ஏதோ வாங்குவதற்காக கதவை பூட்டிவிட்டு அருகிலிருந்த கடைக்கு சென்றிருந்தார்.

வீட்டிற்கு வந்த சமுத்ரா வீடு பூட்டியிருப்பதை பார்த்துவிட்டு வீட்டு திண்ணையிலிருந்த தூணில் சாய்ந்தபடி மாலதிக்காக காத்திருந்தாள்.

மதியச்சூரியனின் சூடு மட்டுப்படத்தொடங்கியிருந்த நேரமென்பதால் இரவின் சாயலுக்காய் மெல்லிய தென்றல் தன் இருப்பை வெளிக்காட்டத்தொடங்கியிருந்தது. ஏற்கனவே தலைவலியோடு வந்திருந்தவளுக்கு முகத்தில் மோதிச் சென்ற இளந்தென்றல் இதமாக இருக்க அது தந்த சுகத்தில் மெதுவாக கண்மூடியவள் தான் உணராமலேயே அயர்ந்த உறக்கத்திற்கு சென்றிருந்தாள்.

அப்போது வினயாஸ்ரீயும் மஹதியும் வந்திட வாசலில் கண்மூடி அமர்ந்திருந்த சமுத்ராவை பார்த்து குழம்பினர்.

“இந்த நேரத்துல மதினி எப்படி? அம்மா எங்க போனாங்கனு தெரியலயே”என்று பூட்டியிருந்த வீட்டை பார்த்தபடியே வினயாஸ்ரீ கூற

“அத்தை பக்கத்துல எங்கையாவது தான் போயிருப்பாங்க. என்கிட்ட அம்மாவோட ஸ்பெயார் கீ இருக்கு. வா உள்ள போகலாம்.” என்ற மஹதி சமுத்ராவின் உறக்கம் கலையாதவாறு வீட்டு கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றாள்.

சமுத்ராவும் அயர்ந்த உறக்கத்தில் இருந்ததால் எந்த அசைவையும் உணரவில்லை.

“அக்காவை எழுப்புவோமா?”என்று அயர்ந்து உறங்குபவளை தூர நின்று பார்த்தபடியே மஹதி கேட்க

“அசந்து தூங்குறாங்க. அம்மா வந்ததும் எழுப்புவோம்.”என்று வினயாஸ்ரீ கூற மஹதிக்கும் அதுவே சரியென்று பட்டது.

சற்று நேரத்தில் மாலதியும் வந்திட அவரும் வாசலில் அமர்ந்து தூணில் சாய்ந்து உறங்கிக்கொண்டிருந்த சமுத்ராவின் உறக்கத்தை கலைத்துவிடாது உள்ளே வந்தவர்

“வினி சமுத்ரா எப்போ வந்தா?”என்று விசாரிக்க நடந்ததை சொன்னாள் வினயாஸ்ரீ.

“அசதியில தூங்கிட்டா போல. இப்போ எழுப்புனா தூக்கம் கலைஞ்சிடும். இன்னும் கொஞ்ச நேரத்துல எழுப்பலாம்.”என்றவர் தன் வேலைகளை கவனிக்க சென்றார்.

சற்று நேரத்திற்கு பின் கண்விழித்த சமுத்ரா வீடு திறந்திருப்பதை கண்டு தன் உடைமைகளோடு வீட்டுற்குள் வந்தாள்.

அமராவதி வீடு திரும்புவதை பற்றி மாலதிக்கு தெரிவித்துவிட்டு நாளை நடைபெறவிருக்கும் வழக்கு பற்றியும் மாலதிக்கு நினைவுபடுத்தினாள் சமுத்ரா.

“நாளைக்கு இயரிங் எப்படியும் நமக்கு சாதகமாக தான் முடியும் அத்தை. இனியும் அந்த குடும்பத்தால உங்களுக்கும் வினிக்கும் எந்த பிரச்சினையும் வராது‌.” என்று சமுத்ரா உறுதி கூற மாலதிக்கு தான் கண் கலங்கிவிட்டது.

மாலதி அவ்வீட்டில் இருந்து வெளியெறிய பின் எழுந்த அனைத்து பிரச்சினைகளையும் சமுத்ராவே முன் நின்று எதிர்கொண்டாள். இப்போதும் கூட அக்குடும்பத்திலிருந்து யாரும் வினயாஸ்ரீயையும் மாலதியையும் அணுக அவள் சந்தர்ப்பம் கொடுக்கவில்லை. சமுத்ரா கொடுத்திருந்த அடைக்கலத்திற்கு மாலதியும் வினயாஸ்ரீயும் என்றும் கடமைபட்டவர்கள். 

“எல்லாம் நல்லதா நடந்தா சரிதான்மா.”என்று மாலதி கூற

“அத்தை எல்லாம் நமக்கு சாதகமாக இருக்கிறதால நிச்சயம் அவங்க சைட்ல இருந்து ஏதாவது குழப்பத்தை உண்டுபண்ண முடியுமானு தான் பார்ப்பாங்க. ஆனா நாம அதுக்கு எந்தவகையிலயும் இடம்கொடுக்கக்கூடாது. நாளைக்கு கேஸ் நமக்கு சாதகமாக முடியும் வரைக்கும் நீங்களும் வினியும் எந்த காரணத்தை கொண்டு அந்த வீட்டாளுங்களோட பேசக்கூடாது.”என்று சமுத்ரா உறுதியான குரலில் சொல்ல மாலதியோ அமைதியாக தலையாட்ட இதனையெல்லாம் துரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்த வினயாஸ்ரீக்கு தான் மனதுக்கு கஷ்டமாக இருந்தது‌.

இதுவரை காலமும் அவளின் தந்தை குடும்பம் பற்றிய எந்த உண்மையும் அவளிடம் பகிரப்படவில்லை. இதுவும் கூட சமுத்ராவின் யோசனை தான். சொத்துக்காக நடைபெறும் இந்த சண்டையில் வினயாஸ்ரீ தன் தந்தை வழி உறவுகளை வெறுக்கக்கூடாதென்பதற்காகவே வினயாஸ்ரீக்கு மாலதியின் கடந்தகாலம் பற்றி தெரியப்படுத்தவேண்டாமென்று கூறியிருந்தாள் சமுத்ரா.

ஆனால் வினயாஸ்ரீயோ இந்த விஷயத்தில் சமுத்ராவையே தவறாக நினைத்திருந்தாள். சமுத்ராவோ அவளையும் தன் அன்னையையும் தன் தந்தைவழி உறவுகளோடு சேர அனுமதிக்கவில்லையென்பது வினயாஸ்ரீயின் எண்ணம்.

அதற்கு வினயாஸ்ரீயின் தந்தை வழி அத்தை ஒருவரின் பேச்சும் ஒரு வழியில் காரணம்.

ஒருமுறை வினயாஸ்ரீயை தனியே சந்தித்த அவளின் தந்தை வழி அத்தை சமுத்ராவே அவர்கள் இணைய தடையாக இருக்கிறாள். அதற்கு காரணம் சொத்து பிரச்சினை என்று கூறியிருக்க வினயாஸ்ரீக்கு பணத்திற்காக சமுத்ரா இப்படி செய்யமாட்டாளென்று முழு நம்பிக்கை இருந்த போதிலும் சமுத்ரா தான் ஏதோ ஒரு காரணத்திற்காக தன்னையும் தன் அன்னையையும் அவர்களோடு சேரவிடாது தடுக்கின்றாளென்று உறுதியாக நம்பினாள். 

இதனை மறைமுகமாக தன் அன்னையிடம் கேட்டு தெளிவுபடுத்திட அவள் முனைந்த போதிலும் மாலதியோ அதற்கு பதிலளிக்க முனையவில்லை. இதனால் வினயாஸ்ரீயின் மனதிலிருந்த எண்ணம் இன்னும் வலுக்கத்தொடங்கியிருந்தது.

ஒருவேளை ஆரம்பத்திலேயே வினயாஸ்ரீயிடம் மாலதி அனைத்தையும் கூறியிருந்தால் பின்னால் வரப்போகும் பிரச்சினைகளை தடுத்திருக்கலாம்.

 

நாளை இந்த வழக்கு முடியும் வரை பொறுமையாக இருக்கவேண்டுமென்று எண்ணிய வினயாஸ்ரீ தன்னறைக்கு திரும்பினாள்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
3
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்