Loading

உள்ளத்தில் எழுந்த வலி வதனத்தில் வெளிப்படாதவாறு அதரங்களில் புன்னகையை ஒட்டிக் கொண்டாள். அதிரனும் கவி பாப்பாவும் பரந்து விரிந்திருந்த புல்வெளியில் உருண்டு பிரண்டு சிரித்து விளையாடிக் கொண்டிருந்தனர். இருவரையும் கண்ட பெரியவர்களின் இதழ்களிலும் தானாக புன்னகை வந்து ஒட்டிக் கொண்டது.

சக்கரவர்த்திக்கு அருகில் அழகி அமர்ந்துக் கொள்ள, அவளருகில் மிருதுளா, ராம்குமார், நிரஞ்சன், கதிரவன் என அடுத்துடுத்து சுற்றி வட்டமாக அமர்ந்தனர். கதிரவனும் அழகியும் எதிரெதிராக அமர்ந்திருந்தாலும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளவில்லை. ராம்குமார் தான் அங்கு நிலவிய மௌனத்தை கலைத்தான்.

“இப்போ தலைவலி பரவால்லயா அழகி?”

“நேத்தே சரியாகிடுச்சு அண்ணா!”, மென்னகை புரிந்த அழகியை கண்டு மிருதுளா பதறினாள்.

“ஏன்? என்னாச்சு அழகி? ஏன் திடீர்னு தலைவலி?”

“பதறாதீங்க அண்ணி! எனக்கு ஒன்னுமில்ல. சாதாரண தலைவலி தான். சரியான தூக்கம் இல்லாததால வந்தது. நேத்து நல்லா தூங்கி எழுந்ததும் சரியாகிடுச்சு.”

“அப்ப சரி.” என்று மிருதுளா நிம்மதியாக, சக்கரவர்த்தி அழகியின் தலையை ஆதுரமாக வருடினார்.

“சரியான தூக்கமும் சாப்பாடும் தான் ஆரோக்கியத்துக்கு முக்கியம். என்ன கவலை என்ன கஷ்டம்னாலும் இது ரெண்டையும் ஓரளவாவது நாம சரியா கடைபிடிக்கணும் மா! நமக்காக இல்லனாலும் நம்மள நம்பி இருக்கிறவங்களுக்காகவாவது நம்மள நாம ஆரோக்கியமா வச்சுக்கணும். நீ சின்ன பொண்ணு மா! சொன்னது புரியும்னு நினைக்கிறேன்.”

அழகிக்கு சக்கரவர்த்தி உரைத்ததின் உட்பொருள் புரிய அவள் கண்கள் அனிச்சையாக அதிரனை தீண்டி விட்டு கதிரவனின் புறம் செல்ல எத்தனிக்கையில் சட்டென்று தலை தாழ்த்திக் கொண்டாள். கலங்கிய கண்ணீரை யாரும் கண்டுக்கொள்ளும் முன்னர் உள்ளிழுத்துக் கொண்டு வலிய மென்னகையை இதழ்களில் பொருத்திக் கொண்டு நிமிர்ந்து மீண்டும் அதிரனை நோக்கினாள்.

“ஒரு வாரமா உன் தம்பி எங்க போயிருந்தானாம்?” என ராம்குமார் மிருதுளாவை சீண்டினான்.

“ஏன் உங்களுக்கு எதிர்ல தானே இருக்கான்? நீங்களே அவன்ட்ட கேக்குறது?” என அவளும் சளைக்காது எதிர்கேள்வி எழுப்பினாள்.

“ரொம்ப சலிச்சுக்காத டி. நானே கேக்கறேன் அவன்ட்ட.” என்ற ராம்குமார் கதிரவனை பார்த்தான். கதிரவனும் அவனுக்கு பதிலுரைக்க தாயாராக அமர்ந்திருந்தான்.

“அழகி! வா! நாம சாப்பாடு எடுத்து வைக்கலாம்.” என்று மிருதுளா அழைக்கவும் கதிரவனின் பதிலுக்காக ஆர்வமாக இருந்த அழகி காதை மட்டும் அவர்களின் உரையாடலில் கொடுத்துவிட்டு எழுந்து சென்று மிருதுளாவோடு உணவு பதார்த்தங்களை தட்டுகளில் எடுத்து வைக்கத் துவங்கினாள்.

“ஒரு வாரமா எங்க கதிர் போன? ஒரு ஃபோன் இல்ல மெசேஜ் இல்ல. நாங்க பண்ணினாலும் நாட் ரீச்சபிள்னே வந்தது.” என ராம்குமார் நேரடியாய் கதிரவனிடம் வினவினான்.

“அது சர்ப்ரைஸ் மாமா! இத்தனை நாள் நான் அடிக்கடி வார கணக்கா மாச கணக்கா எங்க போனேன் ஏன் போனேன்னு நிறைய முறை கேட்ருக்கீங்க. அதுக்கான பதில் ரெண்டு நாள்ல நான் சொல்ற அட்ரஸ்க்கு வாங்க தெரியும். இப்ப நான் போய்ட்டு வந்ததுக்கும் அங்க தான் பதில் இருக்கு.” என்றவனை ராம்குமார் விழியெடுக்காது பார்த்தான்.

கதிரவனின் பேச்சிலும் முகத்திலும் நம்பிக்கை நிறைந்திருந்தது. அவனது முகத்தில் வழக்கத்தை விட தெரிந்த அதிகப்படியான உற்சாகம் அவன் முக்கியமான காரியமொன்றை புரிந்திருக்கிறான் என்று கூறியது. அது என்னவென்று ராம்குமாரால் அனுமானிக்க இயலவில்லை. ஆனால் அது அவனது கனவாக இலடச்சியமாக இருக்கலாம் என்று மட்டும் உறுதியாக தோன்றியது.

“ரெண்டு நாள் தானே தெரிஞ்சுக்கலாம்.” என்று ராம்குமார் மென்னகையோடு உரைக்க, கதிரவன் அழகாக புன்னகைத்தான்.

சற்று தள்ளி இருந்தாலும் காதைத் தீட்டி கதிரவன் உரைத்ததை கேட்டிருந்த அழகிக்கு சிறிது ஏமாற்றமே மிஞ்சியது என்றாலும் அப்படி என்னவாக இருக்கும் என்ற ஆவல் ஆர்பரிக்க, அனிச்சையாக அவளது விழிகள் புன்னகைத் தவழும் அவனது முகத்தில் படிய, எதார்த்தமாக திரும்பிய கதிரவன் அவளை கவனித்து விடவும் சட்டென்று விழி தாழ்த்திக் கொண்டாள். கதிரவனோ அவளது செயலில் மெலிதாக இதழ் வளைத்த வண்ணம் எழுந்து விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளிடம் சென்றான்.

அழகி தன் செயலை எண்ணி தன்னைத் தானே கடிந்துக் கொண்டாள். மிருதுளா அனைவருக்கும் தட்டை எடுத்துக் கொண்டு போய் தரச் சொல்லவும் சரியென தலையாட்டி எஸ்டேட் விவரங்களை விதாதித்துக் கொண்டிருந்த ராம்குமார், நிரஞ்சன், சக்கரவர்த்தி மூவரிடமும் சாப்பாடை அளித்தவள் பெரும் தயக்கத்தோடு கதிரவன் முன் போய் நின்றாள்.

குழந்தைகளை கவனித்துக் கொண்டிருந்த கதிரவன் தன்முன் நிழாலடவும் நிமிர்ந்து நோக்கினான். அழகி கையில் சாப்பாட்டு தட்டோடு இருக்கவும் எதுவும் நடவாதது போல் மிக இயல்பாக தட்டை வாங்கியவன்

“வெல்லக்கட்டி! கவி செல்லம்! இங்க வாங்க!” என்று கூவி அழைத்தான்.

எதிரில் நிற்பவளின் முகத்தைக்கூட அவன் சரியாக கண்டானா என்பதே கேள்வியாக எழும் வண்ணம் அவன் அவளை திரும்பியும் காணாது அமர்ந்திருந்தான். அவனது பாராமுகத்தில் அப்பட்டமான அதிர்ச்சியை முகத்தில் காட்டி நின்றிருந்த அழகிக்கு மேலும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக இருந்தது அவன் அடுத்துக் கூறியது.

“குழந்தைங்களுக்கு நான் சாப்பாடு கொடுத்துக்குறேன். நீ போ!” என்றவன் அவனை நோக்கி ஓடி வந்த குழந்தைகளை தனது மடியில் இருபுறமும் அமர வைத்துக் கொண்டு அவர்களிடம் பேசியபடியே அவர்களுக்கு அவன் உணவூட்ட, அழகி தான் அவனை அதிர்ந்துப் பார்த்திருந்தாள்.

எப்பொழுதும் தன்னை விழியெடுக்காது பார்ப்பவன், எதேனும் கூறி சீண்டிக் கொண்டே இருப்பவன் திடீரென கண்டு காணாமலும் இருப்பது ஏனென்று அவளுக்கு புரியவில்லை. அவன் மீது ஆத்திரமாக வந்தது. அவனை முறைத்துத் தள்ளியவள் கடுகடுவென்ற முகத்தோடு திரும்பி அவனுக்கு கேட்கும் விதமாகவே “இம்சை” என்று முணுமுணுத்தபடி வேக எட்டுகள் வைத்து தனக்கான உணவை எடுத்து வைத்துக் கொண்டு அமர்ந்தாள்.

எள்ளும் கொள்ளும் வெடிக்கும் அவளை கண்டும் காணாதவாறு மிருதுளா உணவு உண்ண, அழகிக்கு உணவு உள்ளே இறங்குவேனா என்றிருந்தது. அவள் செய்த தக்காளி தொக்கு மிருதுளாவின் சப்பாத்தியோடு அலாதியாக இருக்கவும் அனைவரும் மீண்டும் மீண்டும் கேட்டு உண்டனர். கதிரவனும் குழந்தைகள் உண்டதும் தனக்கான உணவை எடுக்க வந்தவன் தக்காளி தொக்கை அள்ளி வைத்துக் கொண்டு செல்ல, அதனை கவனித்த அழகி உள்ளுக்குள் அவனை திட்டி தீர்த்தாள்.

“முகத்தை கூட பார்க்க மாட்டாராம். ஆனா நான் செஞ்ச தக்காளி தொக்கை மட்டும் அள்ளி வச்சு சாப்பிடுவாராம்.” என்று மனதிற்குள் திட்டியவள் அவன் இரசித்து உண்பதை கண்டபின் மெலிதாக இதழ் வளைத்து உணவை முழுதாக உண்டு முடித்தாள்.

உணவு முடிந்ததும் பிள்ளைகள் மீண்டும் விளையாட சென்றிட, பெரியவர்கள் பாட்டுக்கு பாட்டு விளையாடலாம் என்று அணி பிரித்தனர். நிரஞ்சன், கதிரவன், சக்கரவர்த்தி ஓர் அணியாகவும் அழகி, மிருதுளா, ராம்குமார் ஓர் அணியாகவும் பிரிந்து பாடி விளையாடத் தொடங்கினர்.

கதிரவனும் அழகியும் யாரும் அறியாது பாட்டின் மூலம் மனதில் உள்ளவற்றை பரிமாறிக் கொண்டாலும் இருவரும் ஒருவரையொருவர் கண்டு காணாமலும் இருந்தனர். ஒரு கட்டத்தில் அவ்விளையாட்டு சலித்துவிட, நிரஞ்சன் அனைவரும் இணைந்து புகைப்படம் எடுக்கலாம் என்று கூறவும் கதிரவன் விளையாடிக் கொண்டிருந்த அதிரனையும் கவி பாப்பாவையும் அழைத்து வர, அனைவரும் ஒன்றாக நின்று அங்கு வந்திருந்த ஒரு சுற்றுலாப் பயணிடம் கைப்பேசியை கொடுத்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

பின் அனைவரும் தனி தனியாகவும் இருவர் மூவராக சேர்ந்து நின்றும் புகைப்படம் எடுக்க, ராம்குமார், மிருதுளா, கவி பாப்பா மூவரும் தனியாக ஓர் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அதனை கண்ட அழகி அதிரனோடு தனியே புகைப்படம் எடுக்க ஆசை வர, அவள் ஆசையை நிரஞ்சன் நிறைவேற்றிட, பின் அவனோடும் இணைந்து சில புகைப்படங்களை எடுத்து தனது கைப்பேசியில் சேமித்துக் கொண்டாள்.

புகைப்படம் எடுப்பதில் நேரம் போனதை கவனிக்கத் தவறிய பெரியவர்கள் குழந்தைகள் பசிக்கிறது என்று கேட்கவும் தான் மணி இரண்டாகி இருந்ததை உணர்ந்து முதலில் அவர்களை உண்ண வைத்து தாங்களும் உண்டனர்.

உண்ட பின் தனி தனியாக அனைவரும் இயற்கையை இரசிக்கத் தொடங்க, குழந்தைகளும் சக்கரவர்த்திரும் உண்ட களைப்பில் கீழே விரித்திருந்த விரிப்பில் படுத்து உறங்கி விட்டனர்.

கதிரவன் இயற்கைக் காட்சிகளை தன் கைப்பேசியில் புகைப்படங்களாக மாற்றிக் கொண்டிருக்க, நிரஞ்சன் அங்கு வந்திருந்த சுற்றுலா பயணிகளை வேடிக்கைப் பார்த்தபடி கதிரவனோடு நடந்துக் கொண்டிருந்தான். ராம்குமாரும் மிருதுளாவும் மனம்விட்டு பேசி சிரித்துக் கொண்டிருக்க, தொலைவே இருந்து அவர்களை கண்ட அழகிக்கு அக்காட்சி மகிழ்ச்சி நல்கினாலும் ஏக்கத்தையும் அளித்ததில் அவளறியாது பெருமூச்சு வெளியேறியது. பின் அவள் அவர்களை காணாது இயற்கையில் தன்னைத் தொலைக்க, இயற்கை அவளை அரவணைத்துக் கொண்டது.

இப்படியே அன்றைய பொழுது கழிய, குழந்தைகளும் சக்கரவர்த்தியும் உறக்கம் கலைந்து எழுந்ததும் நான்கு மணியானதை சுட்டிய ராம்குமார் கிளம்பலாம் என்று கூறினான்.

“ஒரு நிமிஷம் மாமா!” என்ற கதிரவன் மகிழுந்தை நோக்கிச் சென்றான்.

அனைவரும் புரியாமல் அவனை நோக்க, மகிழுந்திலிருந்து நிறைய பைகளை எடுத்தவன் அவர்களை நோக்கி வந்தான்.

“இதுல எல்லாருக்கும் ட்ரெஸ் இருக்கு. இதை போட்டுக்கிட்டு நாளை மறுநாள் நான் சொல்ற இடத்துக்கு எல்லாரும் கண்டிப்பா வரணும்.” என்று அழுத்திக் கூற, காரணம் தெரியாவிட்டாலும் அனைவரும் புன்னகையோடு சரியென்று தலையசைத்தனர்.

அழகி மட்டும் அமைதியாக நின்றிருந்தாள். அவரவர்க்கான உடை அடங்கிய பைகளை தந்தவன் அழகியிடம் அவளுக்கும் அதிரனுக்குமான உடைகள் அடங்கிய பையை தந்தான். அழகி அமைதியாக அதனை பெற்றுக் கொள்ள,

“நீயும் வெல்லக்கட்டியும் கண்டிப்பா வரணும் அழகி!” என்று அவள் முகம் பார்க்க, நிமிர்ந்து அவனை கண்ட அழகிக்கு ஏனோ விழிகள் கலங்க, அவனது விழிகளை சந்திக்க முடியாது சட்டென்று தலைத் தாழ்த்திய அழகி சரியென்று தலையசைத்து அதிரனை தூக்கிக் கொண்டு நிரஞ்சனின் மகிழுந்தை நோக்கி நடந்தாள்.

மற்றவர்கள் இருவரையும் பெருமூச்சோடு பார்த்திருந்துவிட்டு மகிழுந்தில் ஏற, கதிரவன் மட்டும் வேலையிருப்பதாகக் கூறி ராம்குமாரின் மகிழுந்தில் ஏறாது நிரஞ்சனின் மகிழுந்தை நோக்கி செல்ல, ராம்குமாரின் மகிழுந்து அவர்களின் இல்லம் நோக்கி பயணித்தது.

நிரஞ்சனின் மகிழுந்தை நோக்கிச் சென்ற கதிரவனின் கையில் ஓர் பை மீதமிருந்தது. மகிழுந்தை இயக்கிய நிரஞ்சன், கதிரவன் அவர்களை நோக்கி வரவும் மகிழுந்தை செலுத்தாது இருக்க, கதிரவன் கதவை திறந்து முன்னிருக்கையில் அமர்ந்து,

“போலாம் டா!” என்றிட, நிரஞ்சன் திரும்பி அழகியை பார்க்க, அவளோ அவனை முறைக்க, நிரஞ்சன் அவளிடம் எனக்கு தெரியாது என்று சமிக்ஞையில் கூறிக் கொண்டிருக்க, அவனது தலையில் தட்டிய கதிர்,

“உன்னை போக சொன்னேன் டா!” என்று அழுத்தமாகக் கூறவும் அழகியிடம் விழிகளால் மன்னிப்பு வேண்டியவன் அவளின் இல்லம் நோக்கி மகிழுந்தை செலுத்தத் துவங்கினான்.

அழகியோ கதிரவனை முறைத்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு அவன் அவர்களோடு வருவது கோபமல்ல, காலையிலிருந்து தன்னிடம் அவன் எப்படி பாராமுகம் காட்டலாம் என்பதே கோபம். அதனை கதிரும் அறிந்தே தான் இருந்தான். கதிர் அவளை திரும்பி பார்க்க, அவளோ இதழ் சுழித்து விழித் திருப்பிட, அவனது இதழ்கடையில் மென்னகை அரும்பியது.

இல்லம் சென்று சேரும்வரை அதிரன் மட்டுமே மூவரோடும் உரையாடிக் கொண்டு வந்தான். அழகி கதவை திறந்து உள்ளே செல்லும் வரை அமைதியாகக் காத்திருந்த கதிர், அவள் கதவை திறந்ததும் அவள் பின்னேயே சென்றவன்.

“அழகி!” என அழைக்க, அழகி அசையாது அப்படியே நின்றாள். அவள் விழிகளில் நீர் கோர்த்தது. அவர்களுக்கு பின்னே அதிரனை அழைத்துக் கொண்டு வந்த நிரஞ்சன் இருவரின் முகங்களையும் கண்டு அதிரனை உள்ளே அழைத்துச் சென்றுவிட, அவன் செல்லும் வரை காத்திருந்த கதிர், அழகியின் கைப்பிடித்து அவளை தன்புறம் திருப்பினான்.

அழகியின் விழிகளிலிருந்து பொலபொலவென்று கண்ணீர் வழிந்தது. அழகிக்கே ஏன் அழுகின்றோம் என்று தெரியவில்லை‌. ஆனால் கதிருக்கு அவளது கண்ணீரின் காரணம் புரிந்தது. அதனால் அவன் விழிகளும் கலங்கியது. அவளை நெருங்கி இருகைகளாலும் அவளது கன்னத்தைத் தாங்கியவன் அவளது விழி நீரை துடைத்திட, அழகி அவனையே விழியெடுக்காதுப் பார்த்தாள்‌.

 

வருவாள்….

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்