Loading

“உன் அப்பா உனக்கு வேணும்ன்னா, நான் சொல்றதை நீ செய்யணும்” என்ற ஜிஷ்ணு தர்மனின் கூற்றில் அவனை விழி இடுங்க பார்த்தவள், “என் அப்பாவை என்ன பண்ணுன?” என்றாள் கடும் கோபத்துடன்.

அவனோ சிறிது யோசிப்பது போல பாவனை செய்து, “ம்ம்… இன்னும் உயிரோட தான் இருக்கான்னு நினைக்கிறேன் உன் அப்பன்… மொத்தமா சாகுறதுக்குள்ள நான் சொல்றதை எல்லாம் சமத்தா செஞ்சுடுவியாம்! சரியா வக்கீலு?” என நக்கலுடன் அவளை நோக்க, விரல்களை உள்ளங்கையினுள் அடக்கி இறுக்கி மூடி அவனை தீப்பார்வை பார்த்திருந்தாள் வசுந்தரா.

“என்ன வக்கீலு… உன் அப்பன்காரன் உனக்கு வேணாமா?” சேரில் அமர்ந்து கால் மேல் கால் போட்டு ஆட்டிக்கொண்டே கேட்டவனிடம், “என்ன பண்ணனும்?” என்றாள் எரிச்சலாக.

இதழோரம் இளக்கார நகை வீசியவன், “நல்லது… நீ என்ன பண்றன்னா, இன்னும் நான் ஒரு ரெண்டு மூணு கொலை பண்ண வேண்டியது இருக்கு. அந்த கொலை எல்லாம் பக்கத்துல இருந்து பார்த்து, ஏதாவது ஆதாரம் இருந்துச்சுன்னா, என் கண்ணு முன்னாடியே அதை அழிக்கணும்.

அப்பறம், கன்னிமனூர்ல இப்ப நடந்துட்டு இருக்குற வேலைக்கு தலைமை தாங்கி, ஒருவேளை நான் ஏதாவது ஆதாரத்தை தெரியாம விட்டுட்டேன்னு தெரிஞ்சா அதை உடனே அழிச்சுரணும். இதான் இப்போதைக்கு உன் டாஸ்க்.” என்றவன் நெட்டி முறித்துக்கொண்டான்.

வசுந்தரா தான் ஆத்திரத்துடன், “நீ செய்ற இந்த எச்சப் பொறுக்கித்தனத்துக்கு நான் துணைக்கு வரணுமா?” என முகத்தை சுருக்க,

“ஆமா வக்கீலு. எத்தனை நாளைக்கு தான் நான் உன் பின்னாடியே சுத்துறது. நீயும் என் பின்னாடி சுத்தி ஆதாரம் சேர்க்குறேன்ற பேர்ல, என்கிட்ட மாட்டி… ரொம்ப டைம் வேஸ்ட் ஆகுது பாரு. அதுக்கு நீ என் கூடவே இருந்துட்டன்னு வை. எனக்கும் வேலை ஈஸியா இருக்கும்.” என்றான் அசட்டையாக.

ஆனால் சட்டென, “மவளே… என்ன ஏமாத்தி, எனக்கு தெரியாம என்னை கோர்த்து விட்டுடலாம்ன்னு கனவு கண்டுட்டு வராத. அப்பறம் உன் அப்பன் பரலோகத்தில பாப்கார்ன் தான் சாப்பிடணும்.” என அழுத்தத்துடன் எச்சரிக்கவும் செய்தான்.

அவளோ கோப பெருமூச்சுக்கள் வாங்க, இதழ்கடை வளைவில் நக்கல் புன்னகை பூத்தவன், “நானும் எத்தனை தடவ சொன்னேன். என் வழில வராத வராதன்னு… இப்ப அனுபவி…” என்று முறைக்க,

“போடா டேய்… என் அப்பா ஊருக்காக உயிரை விட்டாருன்னு நினைச்சுக்கறேன்” என மனதை திடப்படுத்திக்கொண்டு அவள் கறாராக கூற, பக்கென புன்னகைத்த ஜிஷ்ணு,

“தெரியும்டி. நீ இதான் சொல்லுவன்னு எனக்கு தெரியும். ஆனா, நீ மறுக்க மறுக்க, இது உன் அப்பனோட நிக்காது. உன் சித்தப்பாக்காரன் எந்த ஊர்ல இருக்கான்?” என சந்தேகமாக கேட்டவன், அடுத்த என் இலக்கு அவன் தான் என்பது போல உறுதியாகப் பார்க்க, வசுந்தரா திகைத்து விட்டாள்.

“உன் குடும்பமே ஊருக்காக உயிரை விட்டுச்சுன்னு நினைக்கோ வக்கீலு…” என தோளைக் குலுக்கியவனை நோக்கி அனல் பார்வை வீசினாள் பெண்ணவள்.

கூடவே, அப்பார்வை குமரன் மீதும் தொடர, ஏற்கனவே ஜிஷ்ணுவின் பேச்சில் திகைத்திருந்த குமரனோ, எனக்கும் இதுக்கும் சம்பந்தமில்ல என்ற ரீதியில் அவளைப் பாவமாக பார்த்தான்.

அவளோ சில நொடிகளில் ஏதோ சிந்தித்து விட்டு, “என்னடா எமோஷனாலா அட்டாக் பண்றியா? சரி… உன் ஆசையை ஏன் கெடுப்பானேன். எனக்கும் கூட மறைஞ்சு மறைஞ்சு உன் பின்னாடி சுத்தி ரொம்ப போர் அடிக்கிது. ஓகே! உன் கூடவே இருந்து எவிடன்ஸ அழிக்கிறேன். ஆனா, அப்டி எல்லாத்தையும் அழிச்சுட்டு உன்னை விட்டு வரும் போது, நீயும் உயிரோட இருக்க மாட்ட. உன் குடும்பமும் ஊருக்காக உயிரை விட்டுச்சுன்னு நினைச்சுக்கோ.” என அதரங்களில் ஏளனப் புன்னகையை ஏந்தியபடி அவனை மடக்கினாள்.

கண்ணை சுருக்கி அவளை முறைத்து வைத்தவன், கோபத்துடன் தரதரவென இழுத்துக்கொண்டு ஒரு அறையில் வைத்து பூட்டி விட்டான். சற்றே திடுக்கிட்டாலும், அவள் கத்தவில்லை.

‘போடா என் டொமேட்டோ…’ என அசட்டையாக மெத்தை மீது அமர்ந்தவள், போனில் பரத்திற்கு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பி விட, அந்நேரம் அவளின் சித்தப்பா நகுலன் தான் போன் செய்தார்.

அவர் குரலில் பதற்றம் அப்பட்டமாக தெரிய, “தாராம்மா… அண்ணனுக்கு என்ன ஆச்சு? அண்ணி என்னென்னமோ சொல்றாங்க. நீ பாதுகாப்பா தான இருக்க.” என்று தவிக்க,

“கூல் டாடி. அப்பாவுக்கு என்ன ஆச்சுன்னு தெரியல. ஆனா, கண்டிப்பா எதுவும் ஆக விட மாட்டேன்.” என்றாள் தீர்மானமாக.

“எனக்கு என்னமோ மனசே சரி இல்லம்மா. நான் உடனே வரேன்” என்று கூற,

“வேணாம் டாடி. நீங்க இப்ப இங்க வர்றது சரி இல்ல. நான் பாத்துக்குறேன். ப்ளீஸ்…” என அழுத்தமாக கூறியும் அவர் மறுத்தார்.

பின் ஏதேதோ பேசி அவரை சமன் செய்தவளை கலைக்கும் வண்ணம், கதவை திறந்து கொண்டு ஜிஷ்ணு உள்ளே வர, வந்த வேகத்தில் போனையும் பிடுங்கி அணைத்து விட்டான்.

“இப்ப நீ என் கஸ்டடில இருக்க…!” எச்சரிக்கையாக கூறி விட்டு, போனையும் எடுத்துக்கொண்டு வெளியில் செல்ல, குமரன் தயங்கி தயங்கி அங்கு வந்தான்.

அவனை முறைத்து வைத்தவளிடம், “வசு… நான் உங்கிட்ட ஒரு அஞ்சு நிமிஷம் பேசணும் ப்ளீஸ்” என்று கிட்டத்தட்ட கெஞ்ச, அவளிடம் பதிலில்லை.

அதில் பெருமூச்சு விட்டவன், “நான் சத்தியமா ராதியை லவ் பண்ணல வசு. அவள் சாகுற அன்னைக்கு மதியம் காலேஜ்ல இருந்து வந்துட்டு இருந்தா. அப்போ எப்பவும் பேசுற மாதிரி நின்னு ரெண்டு வார்த்தை பேசுனேன் அவ்ளோ தான். அன்னைக்குன்னு பார்த்து அவள் அப்பா அதை பார்த்து அவளை அங்கேயே திட்டிட்டாரு. நானும் அங்க இருந்து போய்ட்டேன். அதுக்கு அப்பறம் என்ன ஆச்சுன்னு எனக்கு நிஜமாவே தெரியல.” என்றவனின் வார்த்தைகளில் என்னை நம்பேன் என்ற ஏக்கமே மிகுந்தது.

“சோ… உனக்கும் அவள் சாவுக்கும் சம்பந்தம் இல்ல. சரி… அப்ப உன் தோஸ்த்துக்கும் அவள் சாவுக்கும் சம்பந்தம் இருக்கு அப்படி தான?” அவள் இளக்காரமாக கேட்க, அவன் மௌனம் காத்தான்.

“எனக்கு தெரியல வசு. என்ன சொல்றதுன்னு எனக்கு தெரியல. என்ன நடக்குதுன்னு ஒன்னும் புரியல. உனக்கு தர்மாவை ரெண்டு வருஷமா தான் தெரியும். எனக்கு அவன் பிறந்ததுல இருந்து தெரியும். அவன் ஒண்ணு நினைச்சா அதை அடமென்ட்டா செஞ்சு முடிப்பான். சுயநலவாதி தான் நான் ஒத்துக்குறேன். ஆனா, ராதியை நீ எப்படி பார்த்தியோ அப்படி தான் நாங்களும் பாக்குறோம்” என்றவனின் குரலில் வலி அப்பட்டமாக தெரிய,

“நீங்க பார்த்த லட்சணத்தை தான் நான் பாத்தேனே. விட்டா அவள் பாடிய தோண்டி எடுத்து பிரச்சாரத்துக்கு கூட கூட்டிட்டு போயிருப்பீங்க” என அருவருத்தவள், “உன் போனை குடு” என்றாள் முறைத்தபடி.

அவள் கூற்றில் மனம் காயப்பட்டாலும், கண்ணீரை அடக்கிக்கொண்டு “எதுக்கு” என வெளிறியபடி கேட்க,

“ம்ம்… செல்பி எடுக்க” என்றவள், அவன் அசந்த நேரம் அவனின் கையில் இருந்த போனை தன் கையில் வாங்கிக்கொண்டு, “போ வெளிய!” என்று கண்ணைக் காட்ட, குமரனோ மிரண்டான்.

“போனை குடுத்துடு வசு. தர்மாக்கு தெரிஞ்சா என்னை கொன்றுவான்…” என விழிக்க,

“சாவு!” என்ற வசுந்தரா பார்வையால் பஸ்பமாக்கியே அவனை வெளியில் அனுப்பி விட்டு, போனை பார்க்க, அதன் முகப்பு பக்கத்தில் அவர்கள் நால்வரும் எடுத்த செல்ஃபி தான் இருந்தது.

ஜிஷ்ணு வசுந்தராவின் கழுத்தைக் கட்டியபடி இருக்க, ராதிகாவும் குமரனும் அவர்கள் பின்னால் கொம்பு வைத்தபடி நின்றிருந்தனர். நால்வரின் இதழ்களிலும் நிறைவான புன்னகை. மீண்டும் வாழ்வில் கிடைக்காதவொரு புன்னகை. சில நிமிடங்கள் அதையே பார்த்திருந்தவளுக்கு, விழிகள் அவள் பேச்சை மீறி கண்ணீரை சுரக்க, கண்ணை சிமிட்டி நிகழ்வுக்கு வந்தவள், முதல் வேலையாக அந்த முகப்பு புகைப்படத்தை மாற்றி வைத்தாள்.

கௌரவ் தான், வசுந்தரா இருந்த அறையையே பார்த்திருந்தான். சுந்தர் பேசியதில் இருந்து, ஜிஷ்ணுவிற்கும் அவளுக்கும் ஏற்கனவே பழக்கம் இருந்து இருக்கிறது என்று உணர்ந்தவனுக்கு, எரிச்சலாக இருந்தது.

என்னவோ அவளின் கம்பீரம் மீது, அவனுக்கு ஒரு ஈர்ப்பு என்றே சொல்ல வேண்டும். இப்போதோ, அது பொறாமையாக மாறி இருந்தது.

இங்கோ குமரனின் அலைபேசி வைத்தே சில வேலைகளை செய்து முடித்த வசுந்தரா வெற்றிப் புன்னகை வீசினாள்.

சில மணித் துளிகளில், புயலாக வசுந்தராவின் அறைக்குள் நுழைந்திருந்தான் ஜிஷ்ணு. வந்த வேகத்தில் முரட்டுக் கோபத்துடன் அவள் கழுத்தைப் பிடித்திருக்க, அதனை சட்டையே செய்யவில்லை அவள்.

“இந்த இடத்துக்கு வர்றதுக்கு நிறைய பேரை பழி குடுத்து இருக்கேன் வக்கீலு. அதுல நீயும் ஒரு ஆளா இருந்துடாத.” என கர்ஜித்தவனின், கையை எடுக்க முயன்றவளால் அது முடியாது போக, அவனோ “என்னை அசிங்கப்படுத்துறேன்னு உன்னை நீயே ஏண்டி அசிங்கப்படுத்திக்கிற?” என்று இன்னும் பிடியை இறுக்கினான்.

அதற்கு மேல் தாள இயலாமல் அவனை தள்ளி விட்டவள், மூச்சு விட முடியாமல் லொக்கு லொக்கு என இருமி, அவனை புரியாமல் பார்த்தாள்.

“என்னை ஏண்டா நான் அசிங்கப்படுத்திக்கணும்?” எனக் கேட்டவளுக்கு காற்று தான் வந்தது.

அவனோ, “இது என்னதுடி? எதுக்குடி இப்படி நியூஸ் குடுத்த?” என்று போனில் செய்தியைக் காட்ட, அதிலோ, ஜிஷ்ணு தர்மனுக்கும், வசுந்தராவிற்கும் இடையில் லிவ் இன் ரிலேஷன்ஷிப் இருப்பதாகவும், அந்த உறவில் விரிசல் வந்த காரணத்தினால், வசுந்தராவின் தந்தையை  ஜிஷ்ணுவே கொலை செய்து விட்டதாகவும், தற்போது மீண்டும் இருவரும் தகாத உறவு வைத்திருப்பதாகவும் ஒளிபரப்பிக் கொண்டிருக்க, ஒரு நொடி அதனை அசைவின்றி பார்த்தாள் வசுந்தரா.

ஆனால் ஒரே நொடி தான். அதற்கு மேல் முடியாமல் வயிற்றைப் பிடித்து சிரித்து விட்டாள்.

“ஹா… ஹா… செம்ம டாபிக். சே… இப்படி ஒரு ஐடியா எனக்கு வராம போச்சே அடியாளே. இதை வைச்சே, உன் இமேஜை டேமேஜ் பண்ணிருக்கலாம். நான் தான் தேவை இல்லாம, கிடைக்காத ஆதாரத்தை தேடி ஓடி டைம் வேஸ்ட் பண்ணிட்டேன்.” எனப் போலியாய் வருந்தியவள், சிரிப்பை மட்டும் நிறுத்தவில்லை.

“என்ன ஒன்னு நான் பண்ணிருந்தா, நியூஸ் இன்னும் லெந்த் – ஆ குடுத்து இருப்பேன். ப்ச்… நான் வேற நம்ம பழைய போட்டோஸ் எல்லாம் டெலிட் பண்ணிட்டேன். உங்கிட்ட ஏதாவது இருக்கா…? நம்ம கிஸ் பண்ணிக்கிற மாதிரி, ஹக் பண்ணிக்கிற மாதிரி…” என யோசனையுடன் கேட்டவளை உறுத்து விழித்திருந்தான் ஜிஷ்ணு.

“நீயும் டெலிட் பண்ணிட்டியா? சரி விடு… அது போனா என்ன… வா இப்ப எடுக்கலாம்” என குமரன் போனை வைத்தே, அவனருகில் உரசி அவனுக்கு முத்தமிடுவது போல அருகில் வந்து போட்டோ எடுக்க முனைந்தவள், அவன் இன்னும் முறைப்பதை கண்டு,

“என்னடா முறைக்கிற. சென்சேஷனல் நியூஸ்க்கு ஹாட்டா ஒரு போட்டோ கூட இல்லைன்னா எப்படி பேமஸ் ஆகுறது. ஆனா என்ன… இந்நேரம் உன் பேர் தான் கொஞ்சம் நாறிருக்கும். பாவம் எலக்ஷன் வேற பக்கத்துல வருது. பட் நீ ஒண்ணும் கவலைப்படாத… நான் வேணும்ன்னா, நம்ம கொஞ்ச நேரம் தான் ஜாலியா இருந்தோம். மத்தபடி நீ ரொம்ப நல்லவன்னு நியூஸ் கொடுக்குறேன். ஓகே வா…?” என்று அவனின் கோபத்தை மேலும் அதிகப்படுத்தினாள்.

அவனுக்கு அமைச்சரிடம் இருந்து போன் மேல் போன் வர, அவள் கையில் இருந்த குமரனின் போனை வாங்கி தூக்கி எறிந்து உடைத்தவன், பளாரென அவள் கன்னத்தில் ஒரு அறை கொடுத்து விட்டே வெளியில் சென்றான்.

நீலகண்டனோ, “என்ன தர்மா நியூஸ்ல உன் பேரை தாறுமாறா கிழிச்சுட்டு இருக்காங்க. நீ என்ன பண்ணிட்டு இருக்க? இதுக்கு தான் அப்பவே சொன்னேன். நமக்கு குறுக்க வரும் போதே, அந்த பொண்ணை போட்டு தள்ளிடுன்னு. உன்னால முடியலைன்னா சொல்லு, நான் ஆள் வச்சு அவளை தீர்த்துடுறேன். அவள் அப்பனை போட்ட மாதிரி…!” என்று கடுகடுக்க,

“இதை நான் பாத்துக்குறேன் தலைவரே. இப்போதைக்கு அவள் நமக்கு வேணும். அதுவும் இந்த நேரத்துல அவளை ஏதாவது செஞ்சா, அந்த பழியும் என்மேல தான் வரும். கன்னிமனூர்ல நடக்குற வேலைக்கும் தடங்கல் வரும்.” என்றான் உணர்வுகள் சிறிதும் இன்றி.

“சரி… பாத்துக்க.” என கடுப்புடனே அவர் போனை வைத்திட, ‘இவள் பண்ணலைன்னா, வேற யாரு இப்படி நியூஸ் குடுத்து இருப்பா’ என்ற யோசனையில் இருந்தான் ஜிஷ்ணு.

முதலில் இதற்கு ஒரு முடிவு கொண்டு வர எண்ணியவன், விறுவிறுவென அவள் அறைக்கு செல்ல, அங்கோ அவள் கன்னத்தை தேய்த்தபடி உடைந்த அலைபேசியை வெறித்துக் கொண்டிருந்தாள்.

ஒரு கணம் சுருக்கென இருந்தாலும், அதனை அலட்சியப்படுத்தி விட்டு, அவளை வலுக்கட்டாயமாக இழுத்துக்கொண்டு அவ்வூரில் இருக்கும் ஒரு கோவிலுக்கு சென்றான்.

கூடவே, ஒரு மஞ்சள் கயிறையும் வாங்கியவன், அவளை உள்ளே இழுத்து சென்று அதனை கட்ட வர, இப்போது அறை வாங்கும் முறை அவனது ஆனது.

“எனக்கு என் இமேஜ் ரொம்ப முக்கியம் வக்கீலு. இப்ப நானே, உனக்கு தாலி கட்டி உனக்கு வாழ்க்கை தந்துட்டதா டாபிக்கை மாத்திடுவேன்” என்று கண்ணடித்தவன், நெருப்பாய் நின்றிருந்தவளின் அருகில் செல்ல, அவள் ஒற்றை வார்த்தையில் “எனக்கு பிடிக்கல…” என்றாள்.

அவ்வார்த்தையில் ஒரு கணம் நின்றவன், அவள் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த மஞ்சள் கயிறை அவள் மார்போடு தொங்க விட்டான். ஆனால் முடிச்சு இடவில்லை. பின்னால் கயிறை இழுத்து பிடித்துக் கொண்டவன், அதே நிலையில் அவளுடன் புகைப்படம் ஒன்றை எடுத்துக் கொள்ள, அவள் அசையாமல் நின்றிருந்தாள்.

பின், மஞ்சள் கயிறை எடுத்து தூக்கி வீசியவன், “இந்த ஊரை பொறுத்தவரை நமக்கு கல்யாணம் ஆகிடுச்சுன்னு சொல்ல இந்த ஒரு போட்டோ போதும்.” என்று அந்த புகைப்படத்தை அனுப்ப வேண்டியவர்களுக்கு அனுப்பி விட்டு கூலாக விசில் அடிக்க, அவன் வாயிலேயே குத்த வேண்டும் போல இருந்தது அவளுக்கு.

“சரி வா… நம்ம ஊருக்குள்ள போய் வேல ஒழுங்கா நடக்குதான்னு பாக்கலாம்…!” என்று சாவகாசமாக நடக்க, அவளும் இப்படி ஒரு சம்பவம் நிகழாதது போல “என் அப்பாவை என்ன பண்ணுன?” எனக் கேட்டாள் விழி உயர்த்தி.

“ம்ம்… என்ன பண்ணிருப்பேன்னு நினைக்கிற வக்கீலு. அப்படியே காருக்கு பின் பக்கம் பாரு” என கண்ணைக் காட்ட, அவளும் பின் இருக்கையில் பார்வையால் துழாவினாள்.

அங்கு ராஜசேகரின் உதிரம் படிந்த வேட்டியைக் கண்டவளுக்கு, உடல் அதிர, இருப்பினும் அதனை அவனிடம் காட்டாது திமிராக முன்னிருக்கையில் சென்று அமர்ந்தாள்.

அவளது அமைதி கண்டு வெற்றிப் புன்னகை பூத்தவன், நேராக கன்னிமனூருக்கு செல்ல, அங்கு வேலைகள் அதன்படி நடைபெற்றுக் கொண்டிருந்தது.

சில நிமிடங்கள் மேலும் சில வேலைகளை ஏவியவன், வசுந்தராவின் காதோரம் குனிந்து, “மலை ஏறுவோமா?” எனக் கேட்டான் நக்கலுடன்.

அவனை நெருப்பாக சுட்டு வைத்தவள், “ஓ… போலாமே!” என அசட்டையுடன் மலை நோக்கி செல்ல, ஜிஷ்ணுவிற்கு தான் அபாய மணி அடித்தது.

‘எங்கயோ தப்பா இருக்கே…!’ என சிந்தித்தபடி, அவளுடன் மலையில் ஏறிட, சற்று நேரத்திலேயே சலசலவென ஏதோ சத்தம் கேட்டது. அதில் நின்றவன், இடுங்கிய விழிகளுடன் சுற்றி பார்க்க, ஏதோ உறுத்தியது.

அவன் நின்று விட்டதில், அவளும் நின்று என்னவென பார்க்க, “என்ன போட்டுத்தள்ள கூலிப்படை ரெடி பண்ணிட்டியாடி…?” என்றான் முறைப்பாக.

அவளோ அவனை ஒரு மாதிரியாக பார்த்து வைத்து, “உன்ன கொல்ல எதுக்கு கூலிப்படை. நானே கொல்லுவேன். ஆனா, இன்னைக்கு நல்ல நல்ல ஐடியாவே கிடைக்குதே. நாளைக்கு முதல் வேலையா இதை எக்சிகியூட் பண்ணிடுறேன். ம்ம்?” என நல்ல பெண்ணாக தலையாட்டியவளை யோசனையுடன் பார்த்தவன், அவள் கையை பிடித்து நிறுத்தினான்.

“ப்ச்…” என வசுந்தரா கையை உதறும் போதே, கையில் கத்தியுடன் ஐவர் கொண்ட கும்பல் அவர்களை சுற்றி வளைக்க, ஜிஷ்ணு லேசாக பின்னால் நகர்ந்தபடி, அவன் பாக்கெட்டினுள் இருந்த கத்தியை தேடினான். அது காணாமல் போனதில் சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த போனை துழாவ அதுவும் கைக்கு கிடைக்காமல் போனதில் குழம்பினான்.

“என்னடா அரசியல்வாதி அடியாளு… ஒரு கத்தியையும் போனையும் கூட ஒழுங்கா வச்சுக்க மாட்டியா? அதுவும் கூட என்னை கூட்டிட்டு வரோம்ன்னு பயம் இருக்கா உனக்கு.” என எக்களித்தவள்,

“போய் அவனுங்க கையாலேயே சாவு…” என்றாள் அசட்டையாக.

காரில் ஏறியவள், அவன் அசந்த நேரத்தில் அனைத்தையும் சுருட்டி இருந்தாள். இப்போதோ, ஜிஷ்ணு அவளை பார்வையாலேயே எரித்து, “நீயும் சேர்ந்து தான் சாவ.” என்றதில்,

“அதெப்படி, அவனுங்க உன்ன குத்தி போட்டதுமே நான் ஓடிடுவேனே…” என கண்ணடித்தவள், ஜிஷ்ணுவை தாக்க தயாராக நின்றிருந்த ஒருவனை ஏறிட்டு, “என்ன கொலைகாரர் சார்! உங்க டார்கெட் எம். எல். ஏ மட்டும் தான? இவனை இங்கயே போட்டு தள்ளுங்க. உங்க மேல கொலை பழி விழாம கேஸை நானே ஹேண்டில் பண்றேன்.” என்று அவனுக்கு ஆஃபரும் கொடுக்க, அவர்களோ ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

ஜிஷ்ணு தான், நரம்பு புடைக்க அவளை வெறித்தனமாக முறைத்திருந்தான். மேலும் அவன் யோசிக்க அவகாசம் கொடுக்காமல், ஐவரும் அவனை சுற்றி தாக்க வர, பேயாய் அடித்து துவைத்தான் ஐவரையும்.

“ப்ச்… என்ன இவனுங்க! கையில கத்தியை வச்சுட்டு குத்த மாட்டுறானுங்க.” என எரிச்சலடைந்தவள், ‘பேசாம நம்மளே வில்லியா மாறி, போட்டு தள்ளிடுவோமா?’ என்ற தீவிர சிந்தனையில் இருக்க, அவளை மேலும் யோசிக்க விடாமல், ஒருவன் ஜிஷ்ணுவின் இடுப்பில் கத்தியை சொருகினான்.

ஆழமாக கத்தி இறங்குவதற்கு முன்பே அவன் கையைப் பிடித்து விட்ட ஜிஷ்ணு, மீண்டும் அவர்களை அடித்து நொறுக்கிட, அவர்களோ ஒரு கட்டத்தில் தப்பித்து ஓடி விட்டனர்.

“டேய்ய்ய்…” என கத்தியவனின் கர்ஜனை மலைப்பகுதியில் எதிரொலிக்க, இடுப்பில் வழிந்த உதிரத்தை பிடித்தபடி அங்கிருந்த பெரிய கல்லில் அமர்ந்தான்.

வசுந்தராவோ பெரியதாக எந்தவொரு உணர்வையும் காட்டாமல், “என்னடா இவனுங்க. மொத்தமா முடிப்பானுங்கன்னு பார்த்தா… இப்படி பாதில விட்டுட்டு போயிருக்கானுங்க. லூசுப்பசங்க…” என அலுத்துக்கொள்ள,

“ஏய்… நான் உயிரோட இருந்தா தான் உன் அப்பன் எங்க இருக்கான்னே உன்னால கண்டுபிடிக்க முடியும். இல்லன்னா, அவன் செத்தாலும் பாடி உனக்கு கிடைக்காது. ஞாபகம் இருக்கட்டும்…” என்று கண்கள் சிவக்க எச்சரித்தவனுக்கு வலியில் முகம் சுருங்கியது.

“சாகுற நிலைமைலயும் திமிரு குறையல அடியாளே உனக்கு?” என கேலியாய் புன்னகைத்தவள், சில நொடிகள் அவனையே பார்க்க, அவனும் அவளை தான் பார்த்திருந்தான்.

பின் கண்ணை சிமிட்டி பார்வையை திருப்பியவள் மெல்ல அவனருகில் வந்து அவனைப் பாராமல் அவன் எழுவதற்கு கையைக் கொடுக்க, அவளை மட்டுமே அளந்து கொண்டிருந்தவனோ, “என்ன… அப்டியே தூக்கி மலைல இருந்து தள்ளி விடலாம்ன்னு பிளான் பண்றியா?” என்றான் அந்நிலையிலும்.

“அப்டி தள்ளி விடணும்ன்னா, ராதி சாவை வச்சு அரசியல் பேசுனப்பவே உன்னை தள்ளி விட்டுருக்கணும். இப்பவும் என் அப்பா என்ன ஆனாருன்னு எனக்கு தெரியணும். ஒருவேளை செத்துருந்தா கூட ஏன் செத்தாருன்னு எனக்கு தெரியணும்ல. அதுவரை உயிரோட இருந்துக்கோ…” என பாவம் போல பேசியவளின் கரம் இன்னும் அவன் முன்னே நீட்டப்பட்டிருக்க,

“ஓ…” என உதட்டைக் குவித்தவன், முகத்தில் கேலி படர்ந்தது. அக்கேலி நகையுடனே, அவளின் கையை பிடித்துக்கொண்டவன், மெல்ல காலை ஊண்டி எழுந்து கொள்ள, இன்னும் இரத்தம் நிற்காமல் வந்தது.

அதில், அவளின் துப்பட்டாவை பறித்தவன், அதனை இடுப்பில் இறுக்கிக் கட்டிக்கொள்ள, “டேய்… துப்பட்டாவை எல்லாம் பாவம் பார்த்து நானா தரணும். நீயா எடுக்க கூடாது” என அவள் முறைத்தாள்.

“எப்படியும் நீ தரமாட்ட. அதான் நானே எடுத்துக்கிட்டேன்” என அர்த்தத்துடன் பார்த்தவனின் வாசகத்தில் வேறு அர்த்தம் இருந்ததோ என்ற யோசனை வந்தாலும், இப்போது இங்கிருந்து நகர்வதே உசிதம் என உணர்ந்த பெண்ணவள், அவனை அழைத்துக் கொண்டு நடக்க, அவனும் பாதையை பாராமல் வந்ததில் இருவரும் வழியை தவறவிட்டனர்.

தீயோ தென்றலோ அவள்(ன்)
மேகா

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
19
+1
82
+1
2
+1
5

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்