Loading

அழகி ஆவலாகச் சென்று கதவைத் திறக்க, அங்கு நிரஞ்சன் நின்றிருப்பதைக் கண்டு ஏமாற்றமடைந்தாள். கண நேரத்தில் தனது ஏமாற்றத்தை சரி செய்தவள் வலிய புன்னகையை வரவழைத்துக் கொண்டு நிரஞ்சனை உள்ளே அழைத்தாள்.

மலர்ந்த முகமாக கதவை திறந்தவள் தன்னை கண்டதும் முகம் வாடியதை நிரஞ்சனும் கவனிக்காமல் இல்லை. அவளின் முக வாட்டமே அவள் யாரையோ எதிர் பார்த்துக் காத்திருப்பதைத் தெளிவாக உணர்த்தியது. அந்த யாரோ யாரென்று தான் அவன் அறிவானே! நிரஞ்சன் ஏதும் கூறாது மென்னகை புரிந்த வண்ணம் வீட்டிற்குள் வந்தான்.

அவன் அமர்ந்ததும், “என்ன நிரஞ்சன் இவ்வளோ காலையில அதுவும் ஞாயித்துக்கிழமை அதுவுமா?” என்று அழகி கேட்க,

“நீ கேட்கிறத பார்த்தா ஏன்டா வந்தன்ற மாதிரி இருக்கே?” என நிரஞ்சன் வேண்டுமென்றே அவளை சீண்டினான்.

“அப்படி ஒன்னும் நான் கேட்கல. பொதுவா நீ சொல்லாம கொள்ளாம வரமாட்ட. அதுவும் ஞாயிறு அன்னைக்கு உனக்கு பத்து மணிக்கு தான் விடியும். அப்படி இருக்கையில என்னைக்கும் இல்லாத திருநாளா இவ்வளவு காலைல வந்துருக்கியேனு கேட்டேன்.” என அவனை முறைத்தாள்.

“நீ சொல்றது சரிதான் அழகி! ஆனா இன்னைக்கு என்ன? எங்க போறோம்? அப்புறம் சீக்கிரம் வர வேண்டாமா?” என்ற நிரஞ்சனை புரியாது பார்த்தாள்.

“ஆமா இன்னைக்கு என்ன?” என தன் குழப்பத்தை அவள் வாய்விட்டே கேட்டுவிட, அவளை அதிர்ந்து பார்த்தான் நிரஞ்சன்.

“என்ன அழகி என்னனு கேக்குற? மாசத்துல ஒருநாள் நாமெல்லாம் பிக்னிக் போறதுனு ப்ளான் பண்ணிருந்தோம்ல. இந்த மாசத்துக்கு அந்த ஒருநாள் இன்னைக்கு தான். மிருதுளா அண்ணி கூட ராத்திரி உனக்கு கால் பண்ணி நான் கூட்டுட்டு போக வருவேன்னு சொன்னாங்களாமே! இப்ப என்னனு கேக்குற?”

நிரஞ்சன் கூறவும் தான் அதன் நினைவே அவளுக்கு வந்தது. கதிரவன் பற்றிய யோசனையில் இதனை மறந்து விட்டோமே என மனதிற்குள் தன்னைத் தானே கடிந்துக் கொண்டாள்.

“ஆமால்ல! சாரி நிரஞ்சன். ஏதோ யோசனைல ராத்திரி தூங்க லேட்டாகிடுச்சு. எழுந்ததும் சட்டுனு நினைப்பு வரல. நீ காபி குடிச்சுட்டு இரு பத்து நிமிஷத்துல குளிச்சுட்டு ரெடியாகி வந்துட்றோம்.” என அழகி தான் மறந்ததற்கு வருத்தம் தெரிவித்தாள்.

“ஒன்னும் அவசரமில்ல அழகி. நான் வெயிட் பண்றேன். நீ பொறுமையா கிளம்பு.” என்றான்.

சரியென தலையசைத்த அழகி அவனுக்கு குழம்பி தயாரிக்க அடுக்களைக்குச் செல்ல, செல்லும் அவளை ஒரு தினுசாக பார்த்த நிரஞ்சன் தலையை உலுக்கிக் கொண்டு அங்கிருந்த புத்தகத்தை எடுத்து படிக்கத் துவங்கினான்.

சில நிமிடங்களில் குழம்பிக் கோப்பையோடு அழகி வர, புத்தகத்தை வைத்துவிட்டு நிரஞ்சன் குழம்பியை அருந்தத் துவங்கினான்.

“அதிய வேற எழுப்பணும்.” என முணுமுணுத்தபடி அழகி அதிரன் உறங்கிக் கொண்டிருந்த அறை நோக்கி அடி எடுத்து வைக்க,

“அழகி!” என்ற நிரஞ்சனின் விளிப்பில் நின்று திரும்பி பார்த்தாள்.

“நீ ஓகே தானே?” என்ற நிரஞ்சனின் குரலில் அக்கறை நிறைந்திருந்தது.

“எனக்கென்ன நிரஞ்சன்? நான் நல்லா இருக்கேன்.” என அழகி மென்னகைப் பூக்க, நிரஞ்சன் மென்முறுவல் சிந்த, அழகி அதிரனை எழுப்பச் சென்றாள்.

அதிரனை எழுப்ப சென்றவளுக்கு அதிரன் எழுந்து குளித்து முடித்து சிறிய பையோடு தயாராகி நின்றது அதிர்ச்சியே அளித்தது.

“என்ன அதி இது? எப்போ எழுந்த?” என்று அழகி விழி விரித்தபடி அவனருகே சென்றாள்.

“நீ எழுந்தப்பவே எழுந்துட்டேன் அழகி! நீ பார்க்கலயா?” என்று அதிரன் வெள்ளந்தியாகக் கேட்க, குழந்தை எழுந்ததைக் கூட கவனிக்காது கதிரவன் யோசனையில் ஆழ்ந்திருந்தோமே என்று எண்ணியபோது அவள் மீதே அவளுக்கு கோபம் எழுந்தது.

“கவனிக்கல அதி குட்டி! சாரி!” என்று அழகி அதிரனிடம் மன்னிப்புக் கோரிட, அவனோ பெரிய மனித தோரணையில்,

“இட்ஸ் ஓகே அழகி! பிக்னிக் போகணும்ல சீக்கிரம் கிளம்பு நான் ஹால்ல வெயிட் பண்றேன். எனக்கு தேவையான ஸ்நாக்ஸ், ஸ்வெட்டர், வாட்டர் பாட்டில்லாம் நான் எடுத்துக்கிட்டேன். நீ உன் திங்க்ஸ் மட்டும் எடுத்துக்கோ.” என்றான்.

அவனுக்கு நெட்டி வழித்த அழகி, “பரவால்லயே அதி குட்டி வர வர அவன் வேலைய அவனே செஞ்சுக்குறானே!” என்றிட, “நீ தானே அழகி சொல்லீற்க! நான் பெரிய பாயா வளர வளர என் வேலைய நானே செய்ய பழகிக்கணும்னு. அதான் செய்யறேன்.” என்று குண்டு விழியை உருட்டி கூறியவனை அள்ளி அணைத்து முத்தமிட்டாள்.

“சரி போ. டார்லிங் வந்துருக்கார். நான் பத்து நிமிஷத்துல ரெடியாகி வரேன்.” என்று அவள் புன்னகையோடு உரைக்க, “ஹை டார்லிங்கா!” என்று விழி விரித்த அதிரன் நிரஞ்சனை காண தனது பையை மாட்டிக் கொண்டு ஓடிட, அவனை மென்னகையோடு பார்த்திருந்த அழகியின் முகம் சட்டென்று மாற்றம் கொண்டது.

அதிரன் எழுந்ததைக் கூட கவனிக்கவில்லையே என தன்னையே கடிந்துக் கொண்டவளுக்கு கோபம் அப்படியே கதிரவன் மீது திரும்பியது.

“எல்லாம் அவனால தான். அவன் வர்ற வரைக்கும் எல்லாமே சரியா இருந்தது. இப்போ எல்லாமே வேற மாதிரி இருக்கு.” என மனதிற்குள் புலம்பினாள்.

அவளின் மனசாட்சியோ “எல்லாமே அவனாலனு எப்படி சொல்ற? நீ தான் கொண்ட கொள்கையில உறுதியானவளாச்சே! பின்ன ஏன் அவன குத்தம் சொல்ற. அவன் உன் பின்னாடி வந்தாலும் நீ உறுதியா இருக்கணும்ல.” என்றிட, ஒரு விநாடி விக்கித்து பொத்தென்று மெத்தையில் அமர்ந்தவளின் மனம் மீண்டும் முரண்டு பிடித்தது.

“ம்ஹூம் இல்ல. இப்பவும் நான் உறுதியா தான் இருக்கேன். ஆனா அவன் தொல்லை தான் தாங்கல.” என மீண்டும் அவன் மீதே பொருளற்ற கோபமெழுந்திட, விருட்டென்று எழுந்தவள் மாற்றுடை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் புகுந்தாள்.

“எத்தனை நாளைக்கு எனக்கு பதில் சொல்லாம உன்னை நீயே ஏமாத்தி கோப முகமூடியோட சுத்தப் போற. சீக்கிரமே முகமூடி கழண்டு விழும் அழகி.” என்று அவளின் மனசாட்சியோ அவளை பார்த்து சிரித்தது.

அவளோ அதனை பொருட்படுத்தாது தண்ணீரை தலையில் ஊற்றிக் கொண்டே நின்றாள். சில நிமிடங்கள் அப்படியே சிந்தனையில் நின்றவள் தலையை சிலுப்பி மளமளவென குளித்து உடை மாற்றி வெளி வந்தாள். மளமளவென தனக்கு தேவையானவற்றை எடுத்து பையில் வைத்தவள் அவசரமாக அடுக்களைக்கு விரைந்து குழம்பி தயாரித்து வந்து நிரஞ்சனோடு விளையாடிக் கொண்டிருந்த அதிரனிடம் தந்தாள்.

பின் இரவே தயாரித்த வைத்திருந்த தக்காளி தொக்கை சூடு செய்து ஒரு டப்பாவில் அடைத்தவள் ஈரமான கூந்தலில் உச்சி சடை மட்டும் இட்டு கூடத்திற்கு வந்தாள்.

“கிளம்பலாம் நிரஞ்சன்.” என்ற அழகியின் குரலில் விளையாடிக் கொண்டிருந்த நிரஞ்சனும் அதிரனும் நிமிர்ந்து அவளை பார்க்க, மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க நின்றிருந்தவளை கண்டு இருவரும் மென்முறுவல் பூத்தனர்.

“ரிலாக்ஸ் அழகி!” என்ற நிரஞ்சன் அவளை அமர வைத்து நீர் அருந்த தந்தான். நீர் அருந்தியதும் சற்றே ஆசுவாசமடைந்த அழகி,

“இப்ப கிளம்பலாம்.” என்று நிதானமாக கூறவும் மூவரும் வீட்டைப் பூட்டிக் கொண்டு வெளியே வந்தனர்.

“அழகி! உன் வண்டி வேண்டாம். அண்ணி என் கார்லயே மூனு பேரையும் வர சொன்னாங்க.” என்று நிரஞ்சன் கூறவும் மறுக்காது சரியென்ற அழகி அதிரனை அழைத்துக் கொண்டு அவனது மகிழுந்தில் ஏறி அமர்ந்தாள்.

நிரஞ்சனும் மகிழுந்தில் ஏறி அதனை இயக்கி மன்னவனூர் நோக்கி செலுத்தினான். மன்னவனூரில் தான் அவர்கள் அன்றைய பொழுதைக் கழிக்க திட்டமிட்டிருந்தனர். மகிழுந்துப் புறப்பட்ட சில நிமிடங்கள் வரை அமைதியாக வந்த அழகி,

“ஏன் நிரஞ்சன் எல்லாரும் வந்துருப்பாங்களா?” என்று கேட்டாள்.

“நாம போகவும் அவங்க வரவும் சரியா இருக்கும் அழகி! ராம்குமார் சார் நாம கிளம்புறத்துக்கு அஞ்சு நிமிஷம் முன்னாடி தான் கூப்பிட்ருந்தாரு கிளம்பிட்டோம்னு சொல்ல.”

“ஓஓ” என்றவள் தயங்கி தயங்கி, “எல்லாருமே வராங்களா நிரஞ்சன்?” என்று கேட்டாள்.

“ஆமா அழகி எல்லாருமே தான்!” என்று அவனும் இயல்பாக பதிலுரைத்தான்.

“எல்லாருமேவா?” என்று அவள் மீண்டும் வினவ, புரிந்தும் புரியாதது போன்று முகத்தை வைத்துக் கொண்ட நிரஞ்சன்,

“எல்லாருமே தான் அழகி! ஏன் கேக்குற? யாரையாவது எதிர்பார்க்குறியா?” என்று பதில் கேள்வி எழுப்பினான்.

“இல்லயே. நான் யாரை எதிர்பார்க்க போறேன். சக்கரவர்த்தி அப்பாவும் வராறானு தெரிஞ்சுக்க கேட்டேன்.” என்று சமாளித்தவளின் குரலில் இருந்த தடுமாற்றத்தை மட்டும் அவளால் மறைக்க இயலவில்லை.

அதனை கவனித்தாலும் நிரஞ்சன் அவளை சீண்டாது “சரி அழகி!” என்று மகிழுந்தை இயக்குவதில் கவனமாக, பெருமூச்சுவிட்ட அகவழகி கண்களை மூடி இருக்கையில் சாய்ந்துக் கொண்டாள்.

விழி மூடியவள் எப்பொழுது உறங்கினாலென்று அவளே அறியவில்லை. மீண்டும் கண் விழிக்கையில் பச்சை புற்கள் போர்த்திய சிறு சிறு குன்றுகளே அவளின் விழிகளுக்கு விருந்தாகி மன்னவனூர் வந்தடைந்ததை உறுதி செய்தது.

அவ்விடத்தை பார்த்ததும் அவளின் மன சஞ்சலங்கள் எல்லாம் மறைந்து அமைதி பிறந்தது. மென்முறுவலோடு வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்தாள். அதிரனும் அவ்விடத்தின் எழிலை இரசித்தபடி கண்ணாடியை இறக்கி தலையை வெளியே நீட்டி ஊஊவென்று கத்திவிட்டு மீண்டும் ஒழுங்காக அமர, நிரஞ்சனும் அழகியும் மென்முறுவல் புரிந்தனர்.

சில நிமிடங்களில் மகிழுந்து அவர்கள் இறங்க வேண்டிய இடத்தில் நிற்க, ராம்குமாரின் மகிழுந்திலிருந்து ராம்குமாரும் மிருதுளாவும் கொண்டு வந்த பொருட்களை இறக்கிக் கொண்டிருப்பது தெரிந்தது. சக்கரவர்த்தி ஓர் நாற்காலியில் அமர்ந்திருந்தார். மகிழுந்தின் கதவைத் திறந்துக் கொண்டு வேகமாக இறங்கிய அதிரனை கண்டு மென்னகைப் புரிந்தவாரே மற்ற இருவரும் இறங்கினர்.

இறங்கிய அதிரன் வேகமாக ஓர் திசையில் ஓட, அழகி எங்கு ஓடுகிறான் என்று பார்க்க, அங்கு கதிரவன் கவி பாப்பாவை தூக்கி வைத்துக் கொண்டு வேடிக்கைக் காட்டிக் கொண்டிருந்தான்.

ஒரு வாரம் கழித்து அவனின் முகம் கண்டதும் முகம் மலர்ந்த அழகி அடுத்த கணமே முகம் இறுகினாள். அவளுள் அவன்மீதான கோபம் மீண்டும் மேலெழுந்தது.

“ஹீரோ!” என்று அதிரன் கத்திட, திரும்பி அவனை கண்ட கதிரவன் முகம் மலர்ந்து “வெல்லக்கட்டி!” என்றபடி ஓடி வந்து அவனை இன்னொரு கையில் தூக்கிக் கொண்டான்.

கவி பாப்பாவையும் அதிரனும் இருபுறமும் தூக்கி வைத்துக் கொண்டு வந்த கதிரவன் பொருட்கள் எடுத்து வைத்திருந்த இடத்திற்கருகில் அவர்களை இறக்கி விட்டு சமத்தாக விளையாட கூறி செல்லக் கட்டளையும் இட்டுவிட்டு ராம்குமாருக்கும் மிருதுளாவிற்கும் உதவி புரியத் தொடங்கினான்.

அவனை முறைத்துக் கொண்டே அங்கு வந்தாள் அழகி. அழகியை கண்டதும் ராம்குமாரும் மிருதுளாவும் முகம் மலர்ந்து அவளை வாவென்று அழைக்க, அவளும் புன்னகைத்து அவர்களுக்கு உதவி புரிந்தாள்.

கீழே அமர்ந்திட பெரிய துணி விரித்து உண்ணும் பொருட்கள் அடங்கிய பாத்திரங்களையும் பழக்கூடையையும் ஓரமாக வைத்தவள் கதிரவனை பார்க்க, அவனோ தண்ணீர் கேனை தூக்கி வந்து அவளருகில் வைத்துவிட்டு கண்டுக் கொள்ளாமல் செல்ல, அவளுக்கு ஆத்திரமாக வந்தது.

அவனின் பாராமுகம் அவளுக்கு ஒருபுறம் எரிச்சலையும் ஆத்திரத்தையும் விளைவித்தாலும் மறுபுறம் அவன் ஏன் தன்னை கண்டுகொள்ளவில்லை என்ற வருத்தத்தையும் ஏமாற்றத்தையும் வாரி வழங்கியது. அவளின் முகம் கடுகடுவென்று இருந்தாலும் அவளது கண்களில் இருந்த ஏமாற்றம் அவளையும் கதிரவனையும் கவனித்துக் கொண்டிருந்த நிரஞ்சனை மென்முறுவல் புரிய வைத்தது. நிரஞ்சன் அல்லாது மிருதுளாவும் சக்கரவர்த்தியும் கூட அழகியிடம் புதிதாக தென்பட்ட மாற்றித்தினை கண்டும் காணாதவாறு இருந்தனர்.

அனைத்தையும் எடுத்து வைத்து விட்டு அனைவரும் சுற்றி கீழே அமர, சக்கரவர்த்தி மட்டும் நாற்காலியில் அமர்ந்திருந்தார். அழகிக்கும் கதிரவனுக்கும் இடையே அதிரன் அமர்ந்திருக்க, அவனது தலையை வருடும் வண்ணம் அழகி கதிரவனை பார்க்க, அவனோ கவி பாப்பாவோடு விளையாடுவதில் கவனமாக இருக்க, அவனை முறைத்து தள்ளிய அழகி பட்டென்று முகத்தைத் திருப்பிக் கொண்டு மிருதுளாவிடம் பேச ஆரம்பித்தாள்.

அவள் மனதில் கதிரவனாக தன்னை காணும் வரை தன்னோடு பேசும்வரை அவனை காணக்கூடாது பேசக்கூடாது என்ற முடிவு எழுந்திருந்தாலும் அவன் தன்னை ஒருமுறை பார்க்க மாட்டானா ஒருமுறை அழகி என்று தன்னை அழைக்க மாட்டானா என்கிற ஏக்கம் தவிப்பைத் தந்திருந்தது. முதன்முறையாக அவனின் பாராமுகம் அவளுள் சிறு வலியையும் ஏற்படுத்தியிருந்தது‌. அவ்வலியை அழகி தாள முடியாது தவித்தது அவளுக்கே ஆச்சர்யமாக இருந்தது.

 

வருவாள்….

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்