Loading

இந்தக் கதையின் நாயகியின் புறத்தோற்றத்தைப் பற்றி ஒரு இடத்தில் கூட கூறியிருக்கவில்லை‌‌. அதற்குக் காரணம், தான் சந்தித்த உருவக் கேலிகளைக் கதையின் போக்கில், அவளே சொல்லட்டும் என்று தான் விட்டு விட்டேன்… இதோ இப்போது தன் கணவனிடம் சொல்லப் போகிறாள்.

🌸🌸🌸

“இப்போ தான் நான் கொஞ்சம் வெயிட் அதிகமாக இருக்கேன்ங்க. ஆனால் ஸ்கூல் படிக்கும் போது எப்படி இருப்பேன் தெரியுமா?” என்று கேட்டவள், தன்னுடைய வாழ்வின் எதிர்மறையானப் பக்கங்களையும் மறைக்காமல் உரைக்கத் தொடங்கினாள் யக்ஷித்ரா.

இவளைப் பற்றி முதலிலேயே கூறியிருந்தோம், உணவுப் பழக்கவழக்கங்கள் திருப்திகரமாக இருந்ததில்லை என்று. ஆம், யக்ஷித்ரா போதிய உணவு எடுத்துக் கொள்ளாததால், எப்போதும் அடுத்தவர் பார்வைக்கு ஒல்லியாக, நோய்வாய்ப்பட்டவளாகத் தான் தெரிவாள். அதைக் கூட நரம்பு போல் இருக்கிறாள், ஊதினால் பறந்து விடுவாள், சுண்டு விரல் அளவிற்கு உள்ளாள் என்றெல்லாம் இவளை நக்கல் செய்திருக்கிறார்கள்.

அப்படி இருந்தவளைத் தான், உருட்டி மிரட்டித், தான் கொண்டு வந்த உணவையும் சேர்த்து உண்ண வைப்பாள் நிவேதிதா. அது மட்டுமின்றி, மறந்தும் யக்ஷித்ராவை உருவக்கேலி செய்யவே மாட்டாள் அவள். அதனாலேயே இருவரின் நட்பும் இன்று வரை தொடர்கிறது. 

“நீ ஏன் இப்படி இருக்கிற?” என்ற நிவேதிதாவின் கேள்விக்கு,

“எப்படி இருக்கேன் நிவி?” என்றாள் யக்ஷித்ரா.

“ஒழுங்காக சாப்பிட்றது இல்லை, ஸ்நாக்ஸைக் கூட, கேன்டீனில் ஆசையாக வாங்குறது இல்லை, என்ன தான் பிரச்சினை உனக்கு?” என்று வினவினாள்.

“எதுவுமே இல்லை நிவி. எனக்கு எதிலும் ஆசையே வர மாட்டேங்குது. சாப்பாட்டில் என்னோட ஃபேவரைட் என்னன்னு எனக்கே தெரியாது!” என்றாள்.

 “அதனால் தான் இப்படி துரும்பாக இருக்கிற. எல்லார் மாதிரியும் நான் பேசுறேன்னு நினைக்காத யக்ஷி! ஆனால், கேம்ஸ் பீரியட்ல வெயிட் செக் பண்ணும் போது உன்னோடதைக் கேட்டேன். என்ன வெயிட் இது? இப்படியே போனால், உனக்குத் தான் படிக்க முடியாது, எந்த வேலையும் செய்ய முடியாது!” என்று தோழிக்காக வருந்தினாள் நிவேதிதா.

“நான் என்னோட எல்லா வேலையும் செய்துட்டு தான் இருக்கேன் நிவி! எனக்கு டயர்ட் ஆகிறதே இல்லை” ஒன்னு மறுத்துப் பேசினாள் யக்ஷித்ரா.

“இப்போ ஓகே, ஆனால், ஸ்கூல் முடிச்சுக் காலேஜுக்குப் போகிற அப்போ தான் தெரியும்! எப்படின்னு” என்று அறிவுறுத்தினாள் அவளது தோழி.

“நடக்கிறது நடக்கட்டும் நிவி” என்று அசிரத்தையாக கூறினாள்.

“என்ன இப்படி சொல்ற? நான் விட மாட்டேன். இந்த வருஷம் உன்னைக் கவனிக்கிறது, சாப்பிட வைக்கிறது தான் என்னோட முதல் பொறுப்பு” என அதிரடியாக உரைத்தாள் நிவேதிதா.

“ஏன் இப்படி செய்ற? எனக்குத் தான் இன்ட்ரெஸ்ட் இல்லையே? விடு நிவி” என்று பிடிவாதம் பிடித்தாள் யக்ஷித்ரா.

“விட முடியாது!” என்றவள், அடுத்த நாளிலிருந்து, தோழியின் சாப்பாட்டு முறையைக் கண்காணித்தாள் நிவேதிதா.

அதில் கூடக் குறைய இருப்பவற்றைத் தெரிந்து கொண்டு, யக்ஷித்ரா அதிகம் உண்ணும் உணவைத், தன் வீட்டில் சமைக்கும் நாட்களிலும் எடுத்து வந்து அவளுக்குக் கொடுத்தாள்.

அப்போது தான் அவளது பிடித்தப், பிடிக்காத உணவுகளைத் தெரிந்து கொண்டாள் யக்ஷித்ரா.

அவர்களது பள்ளிக்கு என்று பிரத்தியேகமாக சீருடைகள் கொடுத்திருப்பர் அல்லவா? அதைத் தான் உடுத்திக் கொண்டு வருவார்கள் அனைவரும். அந்தச் சீருடையை நேர்த்தியாகத் தைத்துப் போட்டு வருவாள் யக்ஷித்ரா. அந்த மட்டும் அவளை மெச்சிக் கொள்வாள் நிவேதிதா.

மாநிறத்தவளை நிறக்கேலி செய்யவும் மறக்கவில்லை மற்றவர்கள். சிறிதளவு கருப்பு நிறத்தில் இருந்தாலும், அவர்களைக் கிண்டல் செய்து பாடாய்ப் படுத்தி எடுப்பர் ஒரு சிலர்.

அமைதியான வதனம் கொண்ட இளங்கொடியிவளைத், திமிர் பிடித்தவள் என்று தவறாக கணித்து விட்டார்கள் சக மாணவியர். அதையெல்லாம் துடைத்தெறிந்து விட்டு விடுவாள் யக்ஷித்ரா.

அவளை வெள்ளையாக மாற்றுகிறேன் பேர்வழி என்று நிவேதிதா எதுவுமே செய்ய யத்தனிக்கவில்லை. உடல்நலம் மட்டுமே முக்கியம். புறத்தோற்றத்தைப் பார்த்துக் கேலி செய்பவர்களை மதிக்கத் தேவையில்லை என்று நினைத்தாள் அவள்.

தோழிக்கும் அதே போதனையைத் தந்தவள், அவளை அவளாகவே நடமாடச் செய்தாள் நிவேதிதா.

“சூப்பர் ஃப்ரண்ட்ஷிப் – ல? அதனால் தான் இப்போ வரைக்கும் நீ அவங்க கூட மட்டும் ஃப்ரண்ட்ஷிப்பை மெயின்டெய்ன் செய்றியா?” என்று கேட்டான் அற்புதன்.

அவனிடம் தன்னுடைய கருப்புப் பக்கங்களையும் சொல்லியவளுக்கு, அதைக் கருத்தில் கொள்ளாமல் இருக்கிறான் என்ற எண்ணம் துளியும் இல்லை யக்ஷித்ராவிற்கு. தானே அதை நினைத்துக் கவலை கொள்ளாத போது, முடிந்ததை துருவி எடுத்துப் பேசி, வருத்தம் கொள்ள வேண்டியதில்லை என்று முடிவெடுத்தாள்.

ஆனால், மனைவி கூறிய ஒவ்வொரு விஷயமும், வார்த்தையும் அவனுக்குள் பொறித்து வைக்கப்பட்டு இருந்ததை யக்ஷித்ரா அறிய மாட்டாள். அவள் சொன்னவற்றைக் கேட்டு விட்டு,’அச்சச்சோ! இப்படி ஆகிடுச்சே! அவங்களைச் சும்மாவா விட்ட?’ என்று நரம்பு புடைக்க அவளிடம் விசாரிக்க நினையாமல், இனி வரும் நாட்களில், அவளைக் கண்ணுங் கருத்துமாகப் பார்த்துக் கொள்வதே தன்னுடைய முதல் வேலை என்று உறுதி எடுத்துக் கொண்டான் அற்புதன்.

இத்தனைக் கேலிகளையும் தாண்டி வந்து, இப்போது தன் படிப்பிற்குத் தகுதியான வேலையைப் பார்க்கும் யக்ஷித்ராவின் தன்னம்பிக்கையே அவளைக் கூடுதல் அழகாக காட்சியளிக்க வைக்கப் போதுமானதாக இருந்தது.

அதுவே, அவளுடைய கணவனான அவனுக்குப் போதும்!

அவளையே இமைக்காமல் பார்த்தவனிடம், “நான் இவ்ளோ சொல்லியும் என் முகத்தில் அப்படியென்ன அழகு இருக்குன்னு, இப்படி பார்க்குறீங்க?” என்று தன் கணவனிடம் வினவினாள் யக்ஷித்ரா.

“அவங்களுக்கு அழகுன்றது வெறும் கலர் மட்டும் தான். அதுவும் அந்த ஏஜ் – ல இப்படி ஒரு சிலர், இம்மெச்சூர்ட் ஆகப் பேசி, உன்னைக் கிண்டல் செய்தாங்க. அதையே என்னோட பார்வையும் சொல்லும்னு நீ நினைக்கிறது தப்பு யக்ஷூ!” என்று கண்டனம் தெரிவித்தான் அற்புதன்.

கணவனோ, மனைவியோ அவரவர் கண்களுக்கு அவர்கள் அழகு தானே? அது பொதுவான கருத்து, ஆனால், தன்னவனுடைய விழிகளுக்குத் தான் எப்படி தெரிகிறோம்? என்று ஒவ்வொரு பெண்ணும் தெரிந்து கொள்ள ஆசைப்படுவாள் தானே? அது சிறியதாக யக்ஷித்ராவின் மனதிலும் இருந்தது. கேட்க மட்டும் கூச்சம் அவ்வளவு தான்! அவனிடம் கேட்டும் உரிமை தனக்கு இன்னும் வரவில்லை என்ற தயக்கம்.

“எப்போ வரைக்கும் இந்த கிண்டல் தொடர்ந்துச்சு?” என்றவன் கேட்டதும், 

தன் சிந்தனையிலிருந்து வெளி வந்தவள்,”லெவன்த் முடியிற வரை இருந்துச்சு. அப்பறம் பன்னிரண்டாவது வந்துட்டதால், எல்லாரும் படிக்கிறது, மார்க் வாங்குறது, டியூஷன்னு பிஸி! அதில் நான் எங்கே அவங்க கண்ணுக்குத் தெரிவேன்” எனப் பதில் சொன்னாள் யக்ஷித்ரா.

“ம்ம். அதையெல்லாம் உதறித் தள்ளு. இப்போ இருக்கிற நிகழ்காலத்தை வாழ ஆரம்பி யக்ஷூ” என அவளுக்கு உரிமையாக அறிவுறுத்தினான் அற்புதன்.

அவன் எதற்காக  இவ்வாறு சொல்கிறான்? என்னைக் கணவனாக ஏற்று வாழ்! என்று எனக்கு அறிவுறுத்துகிறானா? என்பது போல் குழப்பிக் கொண்டாள் யக்ஷித்ரா.

“பையன் சரியாகிடுவான். அவனுக்கு நைட் ஷிஃப்ட்ன்னு சொன்னானே! அதுக்கு என்னென்ன செய்யனும்?” என்று கணவனுடன் உரையாடினார் கீரவாஹினி.

“ஈவ்னிங் தான் கிளம்பற மாதிரி இருக்கும், சோ, வயிறைப் படுத்தாத மாதிரி, இலகுவான சாப்பாட்டைச் செய்துக் கொடுக்கனும். காலையில் வந்ததும், வெறும் வயித்துல தூங்க விடாமல், குடிக்க ஏதாவது கொடுத்து, அரை மணி நேரம் கழிச்சுத் தூங்க விடனும் அவனை!” என்றார் அகத்தினியன்.

“ம்ம். சரிங்க. ஆனால், நம்ம மருமக காலையில் கிளம்பி போவாள், சாயந்தரம் வந்துருவா, இவன் கிளம்பறதே அப்போ தான்! இதெல்லாம் எப்படிங்க?” என்று தயங்கியபடி அவரிடம் கேட்டார் மனைவி.

“அவனோட அந்த ஷிஃப்ட் வேலையால்,  தினசரி பழக்கங்களைப்  பாதிக்காமல் வைக்கிறது நம்மக் கையில் தான் இருக்கு வாஹி! மருமகளும் இதைப் பத்தி யோசிச்சு, நல்ல முடிவு எடுப்பா பாரு” என்று மனைவிக்கு ஆறுதல் அளித்தார் அகத்தினியன்.

மாலை நேரம் ஆனதும், யக்ஷித்ராவின் கைப்பேசி ஒலியெழுப்பியது. 

அவளது தங்கை தான் அழைத்திருந்தாள்.

“ஹலோ யாது!” என்று இவள் பேசவும், அவளுக்குத் தனிமை கொடுத்து விட்டு, வெளியே வந்தான் அற்புதன்.

“இப்போ தான் முகமே தெளிஞ்சிருக்கு” என்று, மகனுக்குக் குடிக்கச் சூடானப் பானத்தைக் கொண்டு வந்து கொடுத்தார் கீரவாஹினி.

“யக்ஷி எங்கேடா?”

“யாதவிகிட்டப் பேசிட்டு இருக்கா அப்பா” எனப் பதில் தந்தான் மகன்.

அறையினுள் தங்கையிடம் அளவளாவிக் கொண்டு இருந்த யக்ஷித்ரா,”என்னடி திடீர்னுக் கால் செய்திருக்க? அதுவும் இப்போ தான் காலேஜ் விட்டு வந்திருப்ப?” என்று அவளிடம் வினவினாள்.

அதற்கு அவளுடைய தங்கை யாதவியோ,”ம்ம்.. உன்னோட சைக்கிளைப் பாத்தேன். ஞாபகம் வந்திருச்சு. உனக்குக் கூப்பிட்டுப் பேசறேன்” என்றாள்.

“உன்னோடது எங்க?” என்று கேட்டாள் யக்ஷித்ரா.

“அதுவும் உன்னோட சைக்கிள் பக்கத்தில் தான் க்கா இருக்கு. அதனால் தான், உன்னோட நினைப்பு வந்துச்சு” என்று பதிலளித்தாள் யாதவி.

“அம்மாவைத் தொந்தரவு செய்யாமல் இருக்கியா?” என்று மூத்தவளாகப் பொறுப்புடன் விசாரித்தாள் யக்ஷித்ரா.

“இருக்கேனே! சந்தேகமிருந்தால், நீ நேரில் வந்துப் பாரு அக்கா” என அவளைத் தாயைப் பார்க்க வருமாறு மறைமுகமாக அழைத்தாள் தங்கை.

“அவரையும் கூப்பிட்டுக்கிட்டு வர்றேன்” என்று வாக்கு கொடுத்தாள்.

அங்கே சென்றதும்,அப்படியே அற்புதனுக்கு, மாலை நேரத்தில், வேலை மாற்றம் செய்யப்பட்டுள்ளதையும், அறிவித்து விட்டு வரலாம் என்ற திட்டத்துடன் இருந்தாள் யக்ஷித்ரா.

  • தொடரும் 
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்