Loading

நிரண்யாவை அறையில் சென்று பார்த்தான் கீதன். இரவு முழுக்க அவனும் உறங்கவில்லை. அவளின் அன்னையும் உறங்கவில்லை.

 

விடிந்துவிட்டது. அப்படித்தான் கூற வேண்டும். ஏனெனில் கூடத்தில் மாட்டியிருந்த கடிகாரம் ஆறு மணி என்று உலகுக்கு பறைசாற்றியது. அவளிடம் சிறிது அரவம்.‌ மற்ற இருவருக்கும் மனதில் மெல்லிய நடுக்கம். அவள் அவளாக இருக்கிறாளா இல்லை வேறொருத்தியாக இருக்கிறாளா என்று. 

 

எப்பொழுதும் ஆழ்ந்த உறக்கம்‌ மனதிற்கு நிம்மதியளிக்கும். மனதின் ஆழத்தில் புதைந்திருக்கும் அமைதியை அகழ்ந்தெடுக்கும். ஆம்.. நிம்மதியும் அமைதியும் புற உலகில் தேடி நாம் அலைகிறோம். ஆனால் உண்மையில் இவை இரண்டும்‌ நம்மிடமே இருக்கிறது என்பதுதான் உண்மை. அண்டத்தின் எல்லைவரை சென்று தேடினாலும் கிடைக்காத அமைதி, ஆழ்நிலை உறக்கத்தில் கிட்டும். நிரண்யாவும் தெளிந்த மனதுடன் எழுந்தாள். 

 

எழுந்ததும் அருகில் கீதனைத் தேடினாள். படுத்திருந்தபடியே‌ கைகளால் துழாவ, படுக்கை வெறுமையாக இருந்தது. கண்களைக் கசக்கிக்கொண்டே எழுந்தாள். தலை சுற்றியது. உட்கொண்ட மருந்தின் வீரியம் தாளாமல், மீண்டும் கட்டிலில் அமர்ந்தாள். கீதன் ஓடி வந்து‌ அவளைத் தாங்கிக்கொண்டான். 

 

உடல் தனக்கு ஒத்துழைக்கவில்லை என்றதும் நிரண்யா துவண்டு விட்டாள். உடலும் மனமும் ஒன்றுடன் ஒன்று பிணைக்கப்பட்டது. ஒன்று சரியில்லை என்றாலும் மற்றது துவண்டு விடும். 

 

“என்னாச்சு நிரண்யா?” கீதன். 

 

“என்னால முடியல கீதன். என்னமோ செய்யிது. மனசு பாரமா இருக்கு. இல்ல.. இல்ல. எனக்கு சரியா சொல்லத் தெரியல. ஆனா என்னமோ செய்யிது” என்று‌ பாவமாகக் கூற, அவனும் தவித்து விட்டான். 

 

அவள் உட்கொள்ளும் ஆண்டி டிப்ரெஸ்ஸண்ட் ட்ரக்கின்(மனப்பிறழ்வின் மருந்து) பக்க விளைவுகள் ஏராளம். முந்தய தினம் அவைகளை இணையத்தில் ஆராய்ந்தவனுக்கு‌ அதிர்ச்சி.

 

“நிரண்யா, உனக்கு ஒண்ணும் இல்லை. கொஞ்சம் டயர்டா இருக்க. அவ்ளோதான்.”

 

“அப்புறம் ஏன் எனக்கு எதுவுமே ஞாபகம் இல்லை.”

 

“உளராத நிரு.. அதெல்லாம் உனக்கு எல்லாமே ஞாபகம் இருக்கு. சரி.. வா.. ரொம்ப முடியலைனா நாம டாக்டர்கிட்ட போகலாம்” என்று‌ கூறி அவளை அழைத்தான். 

 

இருவரும் மகிழுந்தில் பயணம் செய்தனர். மயான அமைதி அங்கே. கீதன் அவளைக் காயப்படுத்தாமல் இருக்கவும், அவளிடம் உளறி விடாமல் இருக்கவும் மௌனம் மொழிந்தான். என்ன நிகழ்கிறது ‌என்று சிந்தனை செய்து விடையறிய முடியாது மௌனம் காத்தாள் அவள். மௌனத்தை பிறப்பித்த இருவரும் உள்ளுக்குள் மௌனமாய் இருந்தனரா என்றால் இருநூறு சதம் இல்லை எனலாம். நாம் அமைதியாய் வலம் வரும் பல நேரங்களில், மனம் சலசலத்து, சுற்றித் திரியும். அதே நிலைதான் அவர்கள் இருவருக்கும். கீதன் நிரண்யாவை நன்றாக கவனித்துக் கொள்கிறான். ஆனால் அவனின் மனம் என்ன‌ நினைக்கிறது. அவளின் இந்த நிலைகண்டு தவித்துப் போனது வெளிமனமாக இருந்தாலும், உள் மனம் ஆயிரம் வினா எழுப்பியிருக்கும். இதை‌ ஏன் நீ செய்ய வேண்டும். இந்த பாரத்தை நீ ஏன் சுமக்க வேண்டும் என்று‌‌ வலுக்கட்டாயமாக அவனுக்கு ஆலோசனைகள் வழங்கியிருக்கும். ஆனால் அதை‌ அடக்கி, வெளிமனதில் தோன்றிய எண்ணங்களுக்கு உயிர் அளிக்கிறான். தன் மனதின்‌ மறைத்து வைத்த பாகம் வெளி வர வேண்டாம் என்பதற்காக இந்த மௌனம். 

 

அவனின் நிலையை இப்படிக் கூறுவதால், அவன் நாயகனின் தன்மையில் இருந்து விலகி நிற்பதுபோல் தோன்றலாம். உண்மையில் நாயகன் இயல்பான மனிதனாக இருக்கும் பட்சத்தில், இதுதான் நிதர்சனமான நிலை. இப்படித்தான் இருக்கும் மனிதனின் மனநிலையும். இதிலிருந்து வழுவியிருந்தால், அது தேவநிலை என்று கூறலாம். ஆனால் அப்படி மனிதன் இருப்பதற்கு சாத்தியமில்லை. 

 

மனித மனம் விசித்திரமானது. அது எத்தகையது என்று விளக்கவும் முடியாது. விளங்கிக் கொள்ளவும் முடியாது. இந்த அண்டம் எப்படி உருவானது. இந்த விரி(வெளி) எப்படி உருவானது. பெரு வெடிப்பு மூலமாக உருவாகியது அண்டம் என்று அறிவியலாளர்கள் பதில் கூறினாலும், அந்த பெருவெடிப்பு ஏன் நிகழ்ந்தது, அதற்கு முன் அண்டம் எப்படி இருந்தது என்று எவராவது விரையறுத்துக் கூற இயலுமா? ஒரு காலத்தில் அண்டம் குறுக்கி நெருக்கி அடைந்துகிடந்ததாம். இடப்பட்டாற்றாக்குறை, நேரப்பற்றாக்குறை காரணமாக வெடிப்பு வந்ததாம். கற்பனை செய்ய முடிகிறதா. இதுவும் ஒரு அனுமானமே. நாளுக்கு நாள் விரியும் அண்டத்தின் இயல்புநிலைதான் என்ன. அதில் பொதிந்து கிடக்கும் பொருள்தான் என்ன. அண்டத்தில் சிதறிக் கிடக்கும் நட்சத்திரங்கிள் அனைத்தையும் எது பிணைத்திருக்கிறது. ஒரு பத்து நபரை தலைமை வகிப்பதே நமக்கு சிரம்மாய் இருக்கும் பட்சத்தில், கோடானுகோடி உறுப்புகளை அண்டம் எங்கனம் கையாள்கிறது. அதற்கென பாதைகள் வகுத்தளிப்பதற்கும், அதன் இயக்கங்களுக்கு ஆற்றல் பிரித்தலிப்பதற்கும், பேராற்றல் ஒன்று இயங்கிக் கொண்டிருக்கிறது. 

 

அப்படித்தான் மனதும். இந்த உலகத்தில் நல்லவன் தீயவன் என்று இரு பிரிவுகள் இருப்பதாக பொதுப்படையாகக் கூறலாம். ஆனால் உண்மையில் அப்படி இரு பிரிவுகள் இல்லை. மனம் வகைவகையான உணர்வுகளை சுமக்கும். அதில் வக்கிரமும் ஒன்று. இவன் அடுத்தவனுக்கு கெடுதல் நினைக்கவே மாட்டான் என்று கூறுவது முழுதும் பொய்யான கூற்று. அவன் நினைப்பதை வெளிப்படுத்தவில்லை என்று கூறலாம். மொத்தத்தில் இரண்டு வகை. மனதின் எண்ணங்கள் வெளிப்படுத்தும் ஒருவன். மனதின் எண்ணங்கள் வெளிப்படுத்தாமல் இரகசியம் காக்கும் ஒருவன். மனதின் வக்கிரங்கள் அவன் வளர்ந்த சூழ்நிலையைப் பொறுத்தது. அதீத வக்கிரம் இருப்பவன் மனம் பிறழ்ந்தவன் என்று ஒருவகையாக வைத்துவிட்டோம். இப்படி மனதின் அரிச்சுவடிகளை அகழ்ந்தெடுத்துவிட்டதாக நாம் நினைத்தாலும், அது உண்மையல்ல. 

 

உண்மையில் மனதின் இடம், பொருள் மற்றும் ஏவல் அனைத்தும் உரியவனே உணர முடியாது என்பதுதான் உண்மை.

 

அடுத்த நாள் நற்பவி கூறியிருந்த மருத்துவரிடம் செல்ல வேண்டியிருந்தது. வீட்டிற்குள் இருக்கவே பிடிக்கவில்லை அவனுக்கு. அவன் மனதின் மெல்லிய பாகங்கள் உடைக்கப் பட்டிருந்தது இந்த சில தினங்களில். 

 

மறுநாள் மருத்துவமனைக்குச் செல்ல தயாராகினர். நிரண்யா எதற்காக மருத்துவமனை செல்ல வேண்டும் என்று கீதனிடம் வினவ, “உனக்கு அடிக்கடி தலைவலி வருது நிரு. அதான் போய் என்னனு பாத்துட்டு வரலாம்” என்றான்.

 

“அதெல்லாம் ஒண்ணும் இல்லையே. நான் நல்லாவே இருக்கேன். நாம் போக வேண்டாம்” என்றாள் அவள் திடமாக. அவளின் வேண்டாம் என்ற சொல்லில் ஒரு அழுத்தம் இருந்தது. கீதனின் பார்வை அவளைக் கூராய, அவள் அலட்சியமாய் அறைக்குள் சென்றாள். 

 

அவள் உட்கொள்ள வேண்டிய மாத்திரையை எடுத்துக்கொண்டு உள்ளே சென்றான் கீதன். மாத்திரை, தண்ணீர் மற்றும் கீதனை மாரி மாரி பார்த்தாள் நிரண்யா. 

 

“நிரு.. இந்தா மாத்திரை சாப்பிடு..” கீதன்.

 

“எனக்கு ஒண்ணும் இல்லை கீதன். நான் எதுக்கு மாத்திரை சாப்பிடணும்” என்றாள் அவன் விழிகளைப் பார்த்து. அவனை அச்சுறுத்தியது அவளின் பார்வை.

 

“அது… நீ கொஞ்சம் வீக்கா இருக்கியாம். அதான் அடிக்கடி தலைவலி வருது. அதுக்குத்தான் மாத்திரை” என்று வாயில் வந்ததை உளறி வைத்தான்.

 

“இல்ல கீதன். நான் நல்லா இருக்கேன். நீங்க ஏதோ மறைக்கிறீங்க.”

 

“அட.. உங்கிட்ட மறைக்க என்ன இருக்கு. வா.. நிரண்யா.. நீ சாப்பிட்டு வா. நாம வெளில போகலாம். அன்னைக்கு உன்னை வெளியில் கூட்டிட்டு போனேன். நீ படுத்தி எடுத்துட்ட. ஒரே தலைவலின்னு..”

 

“என்னைக்கு..” என்றாள் தெளிவாக.

 

“ப்ளீஸ்.. எனக்காக எந்த கேள்வியும் கேட்காம சாப்பிடேன்” என்று கெஞ்ச, அவள் சரியென்று தலையசைத்தாள்.

 

அவனிடம் மாத்திரையையும் தண்ணீர் குவளையையும் வாங்கி மாத்திரையை உட்கொண்டாள். மாத்திரையை உட்கொண்ட சற்று நேரத்தில் அவளுக்கு தலை சுற்றுவதுபோல் இருந்தது. அவளால் எதையும் திடமாக சிந்தனை செய்ய முடியவில்லை. அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான். 

 

அங்கு அவளுக்கு துயிலூட்டு(ஹிப்னாஸிஸ்) சிகிச்சை அளிக்கப்பட்டது. அறையின் வெளியில் காத்துக் கிடந்தான் கீதன். சற்று நேரத்தில் உள்ளே அழைத்த மருத்துவர், அவளின் நிலைபற்றி விளக்க, அதிர்ந்தான் கீதன்.

 

“நிரண்யா எப்போலேந்து இப்படி இருக்காங்க கீதன்?”

 

“அது ஒரு நாலு நாளா..”

 

“வாய்ப்பே இல்லை. ரொம்ப நாளா ஏதோ ஒரு அழுத்தம் அவுங்க மனசில் இருந்திருக்கு.  ஏதோ ஒரு கட்டத்தில் அது வெடிச்சு வெளில வந்திருக்கு. பொதுவா இந்த மாதிரி மனநிலை பாதிக்கப்பட்டவுங்களை ஆழ்நிலை கொண்டு போய், அவுங்க நிலைக்கான மூலம் அறிவது வழக்கம். அதே சமயம், ஆழ்நிலையில் சில கருத்துக்களையும் அவுங்களுக்கு சொல்லுவோம். நாங்க சொல்ற கருத்துக்கள் ஆழ்மனதில் பதியும் போது, அவுங்க மன அழுத்தத்தில் இருந்து வெளில வருவாங்க. ஆனா உங்க மனைவியின் விஷயத்தில் என்னால் அவுங்களை ஆழ்நிலைக்குக் கொண்டு போக முடியலை..” என்று கூற, அவன் பதறிவிட்டான்.

 

திகையாதே மனமே!

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்