Loading

12

“அப்புறம் எதுக்கு ஹாஸ்பிட்டல்ல பில் ஃபே பண்ணும் போது ஜானகிராமன்னு நேம் கொடுத்தீங்க?” என்ற கேள்வியில் ரகுநந்தன் எதுவும் பேசாமல் சுவற்றை வெறித்துக் கொண்டிருந்தான்.

அவன் பார்வையில் வலிகளா! துயரமா! சோகமா! என பிரித்தறிய முடியாத ஏதோ ஒன்று இருந்தது. நறுமுகைக்கு மட்டுமல்ல, சிரஞ்சீவிக்கும் குழப்பம் ஏற்பட்டது.

“யாருக்கு என்னாச்சு முகி, ஹாஸ்பிட்டலுக்கு ஏன் ரகு போன?” என இருவரிடமும் கேள்விகளை எழுப்பினான் சிரஞ்சீவி.

ஆனால் நறுமுகையோ ரகுநந்தனின் சட்டையை கொத்தாக பிடித்து இருந்தாள்.

“நீங்க யாரு? என் அக்காவுக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்? கிருஷ்ணா நீங்கனா எதுக்கு ரெஜிஸ்டர்ல ஜானகிராமன்னு பேரு கொடுத்தீங்க. அவளுக்கு ஒன்னுனா உங்க உயிர கூட கொடுக்க தயாரா இருக்கீங்க, ஏன்?” என அவனைப் போட்டு தன் கேள்விகளால் மட்டுமல்ல கோபத்திலும் உலுக்கினாள்.

“ப்ளீஸ், கண்ணம்மா. நான் பொறுமையா சொல்றேன்” எனும் போதே,

அவள் பத்ரகாளி ஆகி இருந்தாள். “என் அக்கா மட்டுமே கூப்பிடறத நீங்க எப்படி கூப்பிடலாம்?” என்றாள் கோபத்துடன்.

“அவ உயிர் என்கிட்ட இருக்கும் போது அவளோட கண்ணம்மா எனக்கும் கண்ணம்மா தான முகி” என்றான் ரகுநந்தன்.

‘இதே வார்த்தை. இதே வார்த்தையை தான் அவள் கூறினாள்’ என நினைத்தவளின் மனதில் மிதிலா கூறியது நிழற்படங்களாய் கண்முன் விரிந்தது.

‘என் உயிர் என்கிட்ட இருந்தா தான, அது இந்த உடல விட்டு போக முடியும். அது பத்திரமா இருக்க வேண்டியவங்க கிட்ட இருக்கு, அதுனால லூசுத் தனமா எதையும் நினைக்காத’ என்ற மிதிலாவின் குரல் அவள் காதுகளில் ஒலித்தது.

“நீங்க கிருஷ்ணானா ஏன் அங்க ராமன்னு கொடுக்கணும். எனக்கு ஒன்னுமே புரியல” என தலையை கையால் தாங்கியவள் அங்கிருந்த சோஃபாவில் அமர்ந்தாள்.

ரகுநந்தன் ஏதோ கூற வர, அந்த நேரம் பார்த்து அழைப்பு மணி அடித்தது.

“நான் யாருனு பார்க்கிறேன் டா…” என சிரஞ்சீவி கதவைத் திறக்க, அங்கு எதிர்வீட்டில் இருப்பவள் நின்றிருந்தாள்.

சிரஞ்சீவியோ அவளையும், ரகுநந்தனையும் திரும்பி திரும்பி பார்க்க, அவளோ வீட்டினுள் நுழைந்தாள்.

நறுமுகை சோஃபாவில் அமர்ந்திருக்க, ரகுநந்தன் அவள் அருகில் நின்றிருந்தான்.

சிரஞ்சீவியோ, “அடுத்து இவளா! கடவுளே ஏன் ப்பா என்னை இப்படி சோதிக்கிற” என நொந்து கொண்டிருந்தான்.

“இப்போ எதுக்கு வந்தாங்கனு கேளு டா” என தன் நண்பனை ஏவினான் ரகுநந்தன்.

அவளோ அவனைப் பார்த்து, “ஏன் ண்ணா. என்கிட்டயே இந்த கேள்வியை கேட்கலாம் தான?” என்றாள்.

“இங்க பாரு நித்தி, இப்போ நான் உன்கிட்ட பேசற மூட்ல இல்ல. தயவுசெஞ்சு நீயா வெளிய போய்ரு” என்றான் ரகுநந்தன் அடக்கப்பட்ட கோபத்துடன்.

“நான் ஏன் அண்ணா போகணும், எனக்கு நீ பதில் சொன்னா நான் போய்றேன். அம்மா அங்க ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆகி இருக்கிறது தெரியும் தான. ஏன் ஒரு வார்த்தை, ஒரே வார்த்தை அவங்க எப்படி இருக்காங்கனு உன்னால போன் பண்ணி கேட்க முடியலல” என்றாள் நித்திலவள்ளி.

“அவங்க கிட்ட நான் ஏன் கேட்கணும்?” என்றான் ரகுநந்தன்.

“அவங்க உன்னை பெத்தவங்க அண்ணா. இத்தனை வருஷம் உங்கள வளர்த்து ஆளாக்கனவங்கள விட, எங்க இருக்கானு கூட தெரியாத உன் ஜானு தான் முக்கியமா போய்ட்டல்ல” என்றாள் நித்திலவள்ளி.

அப்பொழுது தான் நறுமுகை அவளைக் கவனித்தாள்.

“என் ஜானுவ பத்தி பேசற ரைட்ஸ் உங்க யாருக்குமே இல்ல. தயவுசெஞ்சு நீயா வெளிய போய்ரு, இல்லனா தங்கச்சினு கூட பார்க்க மாட்டேன்” என அவன் கோபப்பட, சிரஞ்சீவியின் நிலையோ கவலைக்கிடமானது.

இருவரில் யாரை அமைதிப்படுத்துவது எனத் தெரியாமல் குழம்பி போனான் அவன்.

“அவ இருக்காளா, செத்துட்டாளானு கூட தெரியல. ஆனா அவளுக்காக உயிரோட இருக்கிற அம்மாவ சாவடிக்கிறீல” என்றவளின் கன்னத்தில் அவனின் கரங்கள் பதிந்திருந்தது.

“என் ஜானுவ பத்தி பேசாதனு எத்தனை தடவை சொல்றேன். ஏன் அத புரிஞ்சுக்காம பேசற, எனக்கு அவ தான் உசுரு. அவள மறக்க சொன்ன நீயும் உன் அம்மாவும் என்னைப் பொறுத்தவரை என் மனசுல அன்னிக்கே என்னை கொன்னுட்டீங்க. கொன்னவனுக்காக உன் அம்மா ஒன்னும் அழுது உடம்ப கெடுத்துக்க வேண்டாம்” என்றான் அளவுக்கதிமான கோபத்துடன்.

அவனை சிரஞ்சீவி அமைதிப்படுத்த முயல, இன்னொருவள் உள்ளே வந்தாள்.

‘இந்த பொண்ணு தான நம்ம உள்ள வரும் போது முறைச்சு பார்த்தது’ என நறுமுகை நினைக்கும் போதே உள்ளே வந்தவள்,

“அண்ணி, ஏன் அத்தான கோபபடுத்துறீங்க. வாங்க முதல்ல” என அவளை இழுக்க,

“சும்மா இரு ஊர்மி, நாங்க தப்பு பண்ணோம் தான். நான் இல்லைனு சொல்லல, அண்ணாவோட சம்மதம் கேட்காம உனக்கும் அண்ணாக்கும் நிச்சயம் பண்ணது எங்க தப்பு தான். ஆனா அதுக்காக தான் எங்க கூட மூணு வருஷம் பேசாம கோபத்துல இருந்ததுல்ல. ஆனா இப்போ அம்மா முடியாம ஹாஸ்பிட்டல்ல இருக்காங்க. அப்போ கூட அவங்க கோபத்தை குறைச்சுக்க முடியல இல்ல, இப்பவும் அந்த ஜானுவ சொன்னா மட்டும் கோபம் வருது” என்றாள் நித்திலவள்ளி.

“அண்ணி அத்தான் மனச புரிஞ்சுக்காம பேசாதீங்க. அப்புறம் பேசிக்கலாம், முதல்ல நீங்க வாங்க” என அவளை ஒரு வழியாக இழுத்துச் செல்ல,

நித்திலவள்ளியோ, “பெத்த அம்மாவ விட, கூட பொறந்த தங்கச்சிய விட எவளோ ஒருத்தி பெருசா போய்ட்டாள்ள” என்றவளை ஊர்மிளா வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றாள்.

“ஏன் டா இப்படி நித்தி மேல கோபப்படற? அவ, அம்மா உடம்பு சரியில்லனு தான பேச வந்தா. அதுக்கு எதுக்கு என்ன என்னமோ பேசற” என்றான் சிரிஞ்சீவி.

“விடு டா…” என அவன் கைகளை உதறியவன், “என் மனச என்னிக்கு டா புரிஞ்சுக்கிட்டாங்க அவங்க. அவங்க கிட்ட எவ்ளோ கெஞ்சுனேன். என் ஜானுவ தவிர வேற யாரையும் என்னால கனவுல கூட நினைக்க முடியாதுனு. ஆனா அன்னிக்கு ஊர்மி கூட எனக்கு நிச்சயம் பண்ணும் போது செத்துட்டேன் டா, என் அம்மாவால எப்படி என்னால உயிரோட கொல்ல முடிஞ்சுதுனு தெரியல” என்றவனின் வார்த்தைகளே அவனின் ஜானுவின் மேல் உள்ள காதலை புரிந்து கொள்ள முடிந்தது நறுமுகையால்.

“உனக்கு ஒரு கல்யாணம் பண்ணி பார்க்கணும்னு ஆசைல அவங்க பண்ணிட்டாங்க டா. அதுக்காக அவங்க இப்போ முடியாம ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆகி இருக்கும் போது அவங்கள போய் பார்க்காம இருக்கிறது நல்லாவா இருக்கும்” என்றான் சிரஞ்சீவி.

“அவங்க இப்போ நார்மலா தான் இருக்காங்க டா. கொஞ்சம் பிரஷர் அதிகமாகிருச்சு, நான் டாக்டர்கிட்ட பேசிட்டேன் டா. துகிலனும் பேசுனான், அவன கூட இருக்க சொல்லி இருக்கேன்” என்றவன் அவனின் அறைக்குள் செல்ல, நறுமுகை தான் அடுத்து என்ன செய்வது எனத் தெரியாமல் அங்கேயே அமர்ந்திருந்தாள்.

அவளைக் கண்ட சிரஞ்சீவிக்கு ஏனோ மனம் வலித்தது. தன் நண்பனைப் பற்றி தனக்கே பாதி தெரியாத நிலையில் இவள் வேறு இல்லாத மூளையை போட்டு குழப்பிக் கொள்கிறாள் என நினைத்தவன்,

“முகி, நீ வீட்டுக்கு கிளம்பு. இன்னொரு நாள் இதப் பத்தி பேசிக்கலாம்” என்க,

அவளோ மறுபேச்சு பேசாமல் எழுந்து கதவருகே செல்ல, “முகி…” என்றான் சிரஞ்சீவி.

“ம்…” என அவள் திரும்ப அவள் அருகில் வந்தவன், “கண்டதையும் யோசிச்சு இல்லாத மூளைக்கு வேலைக் குடுக்காம போய் நிம்மதியா தூங்கு. அப்பறம் கிளாஸ்ல வந்து தூங்கி வழிவ. உன்னை நார்மலாவே பார்க்க முடியல, அப்புறம் தூங்கி வழிஞ்சா சுத்தமா பார்க்க சகிக்காது” என அவளை வம்பிழுக்க, அவளோ உஷ்ணப் பார்வைப் பார்த்தாள்.

“இப்போ தான் பச்ச மிளகா வெளிய வருது…” என அவன் கிண்டல் பண்ண, அவன் தன்னை நார்மலாக்க முயல்கிறான் என்பது புரிந்தும் “நான் கேவலமா இருந்தா உங்களுக்கு என்ன சார் பிரச்சனை. போய் உங்க வேலைய பாருங்க” என்றவள் அங்கிருந்து விறுவிறுவென்று நடந்தாள்.

அவன் இதழ்களோ புன்னகையை சுமந்து நின்றது.

படுக்கையில் புரண்டு புரண்டு படுத்தவள், பின் எழுந்து அமர அவள் அருகில் வந்த நறுமுகை, “என்ன டி ஆச்சு குட்டச்சி” என்றாள்.

“ஒன்னுமில்ல. நீ தூங்கு, நான் கீழ கொஞ்சம் நேரம் பார்க்ல வாக் போய்ட்டு வரேன்” என்றவள் எழுந்து வெளியே கிளம்ப,

“சரி” என்றவள் படுத்துக் கொண்டாள்.

ரகுநந்தனிடம் சண்டையிட்டு கொண்டிருந்தான் சிரஞ்சீவி.

“டேய் நீ சாப்பிடல சரி, என் வயிற ஏன் டா காயப் போடற?” என்றான்.

“டேய், போய் ஏதாவது செஞ்சு சாப்பிடு டா” என்றவன் படுக்கையில் படுக்க, சிரஞ்சீவியோ கிட்சனுக்குள் சென்று எதையோ ஆராய்ந்து கொண்டிருக்க அழைப்பு மணி அடித்தது.

“இப்போ யாரு டா” என்றவாறே சென்று கதவைத் திறந்தவன் எதிரே நின்றவளைக் கண்டு அதிர்ந்தான் சிரஞ்சீவி.

அவளோ, “சாப்பிட்டீங்களா சார்?” என்க, இவன் இல்லை எனத் தலையாட்டினான்.

அவளோ எதுவும் பேசாமல் உள்ளே நுழைந்தவள் கிட்சனுக்குள் புகுந்தாள் மிதிலா.

இவனோ, “ஒரு நாளைக்கு ஒரு ஷாக் குடுங்க டா. வரிசையா ஷாக் குடுத்துக்கிட்டே இருந்தா இந்த பச்சப் புள்ள எப்படி டா தாங்குவான்” எனப் புலம்பிக் கொண்டிருந்தான்.

கிட்சனுக்குள் நுழைந்தவள் பத்து நிமிடங்களில் சட்னி அரைத்து, பிரிட்ஜில் இருந்த தோசை மாவை எடுத்து தோசை ஊற்றத் தொடங்கினாள்.

சிறிது நேரத்திலே மணமணக்க நெய் தோசையுடன் வந்த மிதிலா, “ஜீவி சார் வந்து சாப்பிடுங்க” என அழைக்க,

“என்னையவா மா கூப்பிட்ட. நீ நல்லா இருப்ப மா” என்றவாறே அவள் ஊற்றிக் கொடுத்த தோசைகளை வயிற்றினுள் அடக்கினான் சிரஞ்சீவி.

அவனுக்கு ஊற்றிய பின் இன்னொரு தட்டில் தோசைகளை எடுத்துக் கொண்டு ரகுநந்தனின் அறைக்குள் நுழைந்தாள் மிதிலா.

“இனி நமக்கு வேலை இல்ல. நம்ம போய் தூங்குவோம்” என்றவாறே பக்கத்து அறையினுள் புகுந்து கொண்டான் சிரஞ்சீவி.

ரகுநந்தனோ தலையணையில் சாய்ந்த வண்ணம் அமர்ந்திருக்க, அவன் அருகில் சென்று அமர்ந்தாள் மிதிலா.

அவளை அவன் எதிர்ப்பார்க்கவில்லை என்பது அவனின் அதிர்ச்சியிலே தெரிந்தது.

அவளின் கண்களோ அவனின் கரங்களை ஆராய்ந்தது.

அவள் பார்வை செல்லும் இடத்தைப் பார்த்தவன், “சின்ன சிராய்ப்பு தான்” என பதிலளித்தான்.

அவள் எதுவும் பேசாமல் சப்பாட்டு தட்டை அவன்புறம் நீட்ட, அவன் அமைதியாக அதனை வாங்கிக் கொண்டு தோசையை பிய்த்து வாய் அருகே கொண்டு செல்லும் போது அவன் கரங்களில் இருந்த காயம் வலியைக் கொடுக்க அவன் முகம் வலியில் சுருங்கியது.

அதனைக் கவனித்தவள், அவனிடமிருந்து தட்டை வாங்கி அவனுக்கு ஊட்டிவிட அவன் மறுப்பேதும் கூறாமல் உண்டான்.

அவன் உண்டு முடித்தப்பின், அவன் கரங்களுக்கு மருந்திட்டவள் தான் கொண்டு வந்திருந்த மாத்திரைகளையும் கொடுத்து அவனைப் போட வைத்தவள், தட்டுகளை எடுத்துக் கொண்டு கிட்சனுக்குள் சென்றாள்.

செல்லும் அவளையேப் பார்த்துக் கொண்டிருந்தான். ‘ஒரு வார்த்தை என் கூட பேச மாட்டியா ஜானு’ என அவன் மனம் கூப்பாடு போட்டது.

அவள் பாத்திரங்களை கழுவி வைத்து விட்டு திரும்ப, அவளின் மிக அருகாமையில் நின்றிருந்தான் ரகுநந்தன்.

அவள் ஒரு நிமிடம் அதிர்ந்து, அவனைத் தாண்டி செல்ல முற்பட, “ஜானு…” என்ற அழைப்பு அவள் நடையை தடை செய்தது.

“மிதிலா…” என அவள் பெயரை அவனுக்கு ஞாபகப்படுத்தினாள் அவள்.

“எனக்கு ஜானு தான்” என அவன் உறுதியாய் கூற, “என் ராம்க்கு மட்டும் தான் நான் அவனோட ஜானு. கண்டவங்களுக்கும் இல்ல” என்றவளின் பார்வை எங்கோ வெறித்துக் கொண்டிருந்தது.

“அப்போ நான்…?” என்றான் ரகுநந்தன்.

“ப்ளீஸ், வழிய விடுங்க” என்றாள் மிதிலா. “அப்புறம் ஏன் நான் சாப்பிடலைனு தெரிஞ்சு எனக்கு சாப்பாடு ஊட்டி விட்ட?” என்ற கேள்வியை எழுப்ப,

“மனிதாபிமான அடிப்படைல” என படக்கென பதில் வந்தது.

“ஓ… மேடம் இப்படி தான் மனிதாபிமான அடிப்படைல ரெண்டு பேச்சுலர்ஸ் தங்கி இருக்கிற வீட்டுக்கு நைட் அதுவும் ஒன்பது மணிக்கு வந்து சமைச்சு கொடுத்தது மட்டுமில்லாம, எனக்கு ஊட்டி வேற விட்டீங்களா மிஸ். மிதிலாசுந்தரேசன்” என்றான் ஒற்றை புருவம் உயர்த்தி.

எதிரே கைக் கட்டி, புருவம் உயர்த்தி கேள்வி கேட்பவனைக் கண்டு முறைத்தவள்,

“உங்க கைல அடிப்பட்டு இருந்ததால தான் நான் வந்து… ஊ…ட்..டி விட்டேன்” என்றவளின் வார்த்தைகள் திக்கி திணறி வந்தன.

“என் கைல அடிபட்டா எனக்கு ஊட்டி விடறது என் அம்மாவா இருக்கணும், இல்லைனா என் பொண்டாட்டியா இருக்கணும். இதுல நீ எந்த வகை?” என்றவனின் கண்கள் ரகசியமாய் சிமிட்ட,

“ப்ளீஸ், வழிய முதல்ல விடுங்க. அப்பா இன்னும் தூங்கல, ரொம்ப நேரம் ஆச்சுனா அப்பா என்னைத் தேடி வந்துருவாரு” என்றாள் கம்மிய குரலில்.

“சரி, ஒரே ஒரு தடவை…” என அவன் இழுக்க, அவளோ மிரண்ட பார்வைப் பார்த்தாள்.

“ச்சே ச்சே… நீ நினைக்கிற மாதிரிலாம் இல்ல. நான் குணத்துல ராமன், என் பொண்டாட்டி ஜானுவ தவிர வேற யார்கிட்டயும் எதுவும் தப்பா கேட்வும் மாட்டேன். உரிமை எடுத்துக்கவும் மாட்டேன் மிஸ். மிதிலா” எனும் போது தான் அவள் நார்மலாக,

மைக்ரோ விநாடியில் அவளை இழுத்து தன்னுள் அணைத்தவன், “ஆனா, என் ஜானுகிட்ட நான் பெர்மிசன் கேட்க மாட்டேன்… ஏன்னா அவ தான் என்னோட உயிர், அவளுக்கும் பெர்மிசன் கேட்கிறது பிடிக்காது” என அவள் காதருகில் கிசுகிசுத்தவன், அவளை இறுக்கி அணைத்து விடுவித்தான்.

தண்ணீர் பாட்டில் எடுக்க வந்திருந்த சிரஞ்சீவியோ அதிர்ந்து நிற்க, அவனை விட அதிர்ச்சியில் இருந்தாள் மிதிலா.

அதே அதிர்ச்சியுடனே அவள் கால்கள் தன்னால் கதவை நோக்கி நகர, சிரஞ்சீவியைக் கண்ட ரகுநந்தனோ கள்ளப் புன்னகையை படர விட்டு அறைக்குள் நுழைந்து கொண்டான்.

மிதிலாவோ ஒரு வழியாக தங்கள் வீட்டிற்கு வந்து சேர்ந்தாள். ஹாலில் புத்தகத்தில் மூழ்கி இருந்த சுந்தரேசன், “ஏன் ம்மா. இன்னும் தலைவலி சரியாகலயா?” என்றார்.

“இப்போ பரவாயில்ல ப்பா” என அவள் வாய் தன்னால் முணுமுணுத்துக் கொண்டிருக்க அவளின் அறைக்குள் நுழைந்தாள்.

அலைப்பேசியில் மூழ்கி இருந்த நறுமுகை தன் தலையை எட்டிப் பார்த்து, “என்ன குட்டச்சி, அதுக்குள்ள வாக் முடிஞ்சுதா பார்க்ல” என்றாள்.

“ம்…” என்றவள், படுக்கையில் விழ அவளோ, தன் அலைப்பேசியில் மூழ்கினாள்.

மிதிலாவின் நினைவுகள் பின்னோக்கி நகர்ந்தன.

“என்கிட்ட எப்பவும் நீ பெர்மிசன் கேட்க கூடாது ராம். பெர்மிசன் கேட்டா எனக்கு பொல்லாத கோபம் வரும்” என அவனை முறைத்துக் கொண்டு நின்றிருந்தாள் ஒன்பதே வயதான மிதிலா.

“சரி வா…” என அவளை அணைத்துக் கொண்டவன், “இன்னிக்கு ரொம்ப சந்தோசமா இருக்கேன் ஜானு. அதான் இந்த ஹக்” என்றான் அவனின் ராமன்.

“அப்படியா, எனக்கு சாக்லேட்” என்றவளுக்கு தன் பாக்கெட்டில் வைத்திருந்த சாக்லேட்டை எடுத்துக் கொடுத்தவன்,

“இன்னிக்கு குவார்ட்டலி பேப்பர் கொடுத்தாங்க ஜானு. பயலாஜி சப்ஜக்ட்ல சென்டம்” என்றான் சந்தோசத்துடன்.

“என் ராம் எப்பவும் பிரிலியண்ட்…” என்றவாறே அவனை அணைத்துக் கொண்டாள் குட்டி மிதிலா.

அவளின் ராமனுக்கு உயிரியல் பாடம் என்றால் மிகவும் பிடிக்கும். இவளுக்கோ வேதியியல் பிடிக்கும்.

இப்பொழுதோ தங்களின் பிடித்தமானவர்களுக்கு பிடித்த பாடத்தை தங்களின் பாடமாக இருவரும் மாற்றி மாற்றி எடுத்திருந்தனர்.

_தொடரும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
11
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்