Loading

எஸ்டேட்டிற்கு வந்த அகவழகிக்கு வேலையில் கவனம் பதிவேனா என்றிருந்தது. கதிரவன் மட்டுமே அவளின் நினைவை அவளறியாது நிறைத்திருந்தான். அவன் காலையில் பேசியதெல்லாம் அவளுள் ரீங்காரமிட்ட வண்ணமிருக்க, அன்று முழுவதுமே அவனை மனதிற்குள் வறுத்தெடுத்துக் கொண்டிருந்தாள்.

“என்கூட குப்பைக் கொட்டுறது அவ்வளோ மோசமா என்ன? என்னவோ பரிதாப நிலைக்கு போவானாமே! அப்படி சொல்றவன் எதுக்கு என்னை தொல்லை பண்ணனும். அவன் சந்தோசமா குப்பைக் கொட்டி குடும்பம் நடத்த ஊருல பொண்ணுங்களுக்கா பஞ்சம். போக வேண்டியது தானே. ச்ச. இவன் கூட குப்பைக் கொட்றது தான் பரிதாபம். எப்படி அவன் என்னை பார்த்து அப்படி சொல்லலாம்?” என ஆரம்பித்து ஒரு கட்டத்தில் அவள் மனம்,

“என்கூட குப்பைக் கொட்டுனா அப்படி என்ன பரிதாப நிலை வந்துடும் அவனுக்குனு பார்க்கணும். அப்ப வச்சுக்குறேன் அவன!” என்று சிந்திக்க, தன் மனவோட்டத்தை எண்ணி திடுக்கிட்டாள்.

அவனுடன் சேர்ந்து வாழ ஆசைக்கொண்டாயா? என்று அவளின் இன்னொரு மனம் கேள்வி எழுப்ப, எஸ்டேட்டை சுற்றி பார்க்க வந்தவள் அங்கிருந்த பெரிய கல்லொன்றில் திடுக்கிட்டு அமர்ந்து விட்டாள்.

தன் மனம் போகும் போக்கு தன் விருப்பத்திற்கு மாறாக இருப்பதாக தோன்றியது. ஆனால் அவள் விருப்பம் யாதென எழுந்த கேள்விக்கு அவளிடம் பதில் இல்லை.

“உனக்கு விருப்பம்னு ஒன்னு இல்லவே இல்லையா அழகி?”

அவளது ஒரு மனம் எழுப்பிய கேள்விக்கு மறுமனம்,

“விருப்பம் முக்கியமா? உன் வைராக்கியம் முக்கியமா அழகி?” என கேள்வி எழுப்ப, அவள் தலையை பிடித்துக் கொண்டாள்.

அவன் ஒருவன் தன் வாழ்வில் வந்த பிறகு, தன் வாழ்வின் திசை மாறி விட்டதாக எண்ணினாள். தெளிந்த நீரோடையாய் இருந்தவளுக்குள் கல்லெறிந்து விட்டு நிம்மதியாய் அவன் மட்டும் சுற்றிக் கொண்டிருப்பதாக நினைத்தவளுக்கு அவன் மீது ஆத்திரம் தான் வந்தது.

“அடேய் கதிரவா!” என பல்லைக் கடித்து முணுமுணுத்துவளின் தோளை யாரோ தொடவும் திடுக்கிட்டு நிமிர்ந்தாள்.

“என்னாச்சு அழகி? ஏன் இங்க வந்து தலைய புடிச்சுட்டு உக்காந்துருக்க? தலை எதும் வலிக்குதா? இல்ல மயக்கம் கியக்கம் வருதா?” என அவள் பேசுவதற்கு இடமளிக்காது கேள்விகளை அடுக்கிய நிரஞ்சனை கண்டதும் எரிச்சல் வந்தது.

“ஐய்யோ ஒன்னும் இல்ல. இப்ப நீ கேப் விடாம கேள்வி கேக்குறது தான் தலைவலி வரும்போல இருக்கு.” என்று சற்றே எரிந்து விழுந்தாள்.

“நான் அப்படி என்ன தப்பா கேட்டுட்டேன்? இப்படி டீ செடிங்களுக்கு நடுவுல தலைய புடிச்சுட்டு உக்கார்ந்திருந்தியே. உனக்கு உடம்புக்கு ஏதாவது செய்யுதோனு பதறி போய் ஒரு அக்கறைல கேட்டது ஒரு குத்தமா? நிரஞ்சா உனக்கு தேவையாடா இது? நீ பாட்டுக்கு வந்த வேலைய பார்த்துட்டு போகாம பாரு வாயக்குடுத்து வாங்கிக் கட்டிக்கிட்டது தான் மிச்சம்.” என்று நிரஞ்சன் புலம்ப,

“ஐயா சாமி! அக்கறைல கேட்ட உன்கிட்ட எரிஞ்சு விழுந்தது என் தப்பு தான். பேசாம போ. நான் கொஞ்ச நேரம் தனியா இருக்கணும்னு தான் இப்படி வந்து உக்கார்ந்தேன். நீ தயவு செய்து உன் வேலைய பாரு போ.” என அதற்கும் அழகி எரிந்து விழ, நிரஞ்சன் நிலைதான் பாவமாகி போனது.

“என்னாச்சுனு கேட்டது ஒரு குத்தமா? இந்த தாளிப்பு தாளிக்கிறா? ரைட்டு மாப்ள காலைலயே வேலையை காட்டிட்டான் போல. இவனுக்கு இதே வேலையா போச்சு. இவன் பண்றதுக்கெல்லாம் நான் சிக்கி சின்னா பின்னமாக வேண்டியிருக்கு. இவன..” என மனதில் நினைத்தவன் அவளை ஒரு மார்க்கமாக பார்த்துவிட்டு சற்று தள்ளி சென்று தன் கைப்பேசியில் யாருக்கோ அழைத்தான்.

அவன் சென்றால் போதுமென்றிருந்த அழகி மீண்டும் தலையை பிடித்துக் கொண்டு அமர, மறுபடியும் அவளது தோளை ஒரு கை தொடவும்,

“ப்ம்ச் என்னதான் வேணும் உனக்கு. தனியா இருக்கணும்னு சொன்னா போக மாட்டியா?” என்று கடுகடுத்த முகமாக நிமிர்ந்தவள் ராம்குமாரை கண்டதும் பதறி எழுந்து நின்றாள்.

“அண்ணா நீங்களா? நான் நிரஞ்சன்னு நினைச்சு… சாரி அண்ணா.” என்று தன் செயலுக்கு வருந்தினாள்.

“கூல் மா. இட்ஸ் ஓகே. ஏன் இவ்வளோ டென்ஷன் அழகி?” என்ற ராம்குமாருக்கு என்ன சொல்வதென்று தெரியாமல் அழகி தடுமாறினாள்.

கதிரவனை பற்றி கூறபோய் ராம்குமார் அதனை தவறாக எடுத்துக் கொண்டால், அவர்களது குடும்பத்தில் தன்னால் வீணான குழப்பம் உண்டாகுமென்று கதிரவனை பற்றி ஏதும் கூறாது இருந்தாள்.

“ஒன்னும் இல்ல அண்ணா. வேலை டென்ஷன். அதோட தலைவலி வேற. அதான்.” என்று சமாளித்தாள்.

ராம்குமாரோ அவளை உறுத்து பார்க்க, அவள் அவனது பார்வையை சந்திக்காது முகத்தை வேறுபுறம் திருப்பினாள்‌.

“இல்லையே. வேலைல என்ன டென்ஷன் இருந்தாலும் நீ இப்படி இருக்க மாட்டியே. வேற எதுவோ இருக்கு.” என்ற ராம்குமார்,

“கதிரவன் எதாவது வம்பு பண்ணானா?” என்று கேட்க, அழகி பதறி உடனே,

“இல்லை அண்ணா. அப்படிலாம் எதுவும் இல்லை. இராத்திரிலேர்ந்து தலைவலிக்குது அதான் கத்திட்டேன்.” என்றவளின் கூற்றை அவன் நம்பினானா இல்லையா என்பதனை அவனது முகத்திலிருந்து அறிய முடியவில்லை.

“சரி அழகி. நீ போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு அப்புறம் வேலைய பாரு.” என்று ராம்குமார் கூறவும் சரியென்று வேகமாக தலையாட்டிய அழகி விட்டால் போதுமென்று அவசரமாக அங்கிருந்து செல்ல, ராம்குமார் செல்லும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

“அழகி!” என்றவன் அழைக்கவும் பட்டென்று நின்ற அழகிக்குள் என்ன கேட்க போகிறானோ? என்கிற பதற்றம் தோன்றினாலும் வெளிக்காட்டாது திரும்பினாள்.

“சொல்லுங்க அண்ணா.”

“கதிர்கிட்ட பேசினியா?” என்று கேட்க,

“ம்ம் பேசினேன் அண்ணா.” என்று கூறினாள்.

“என்ன சொன்னான்?”

“பேசிற்கேன் அண்ணா. என்ன பண்ணுவான்னு தெரியல. இனிமே அதிகம் அவன் தொல்லை இருக்காதுனு நினைக்கிறேன்.” என்று மென்னகைக்க முயன்றாள்.

“நீ சொன்ன மாதிரி நடந்தா நல்லது தான் மா. இல்லைனா நான் பேச வேண்டி வரும்.” என்று ராம்குமார் கூறவும் அவள் முகத்தில் ஒரு கணம் வருத்தம் வந்து போனது.

“இல்லை அண்ணா. அதுக்கு அவசியம் வராது.” என்று எதையோ நினைத்து கூறியவளின் வார்த்தைகளில் அத்துணை அழுத்தம் இருந்தது.

“சரி மா. நீ போய் ரெஸ்ட் எடு.” என்ற ராம்குமாருக்கு தலையசைத்துவிட்டு அழகி திரும்பிச் செல்ல, ராம்குமார் அவள் விழி விட்டு மறையும் வரை அவளையே கூர்மையான பார்வையால் துளைத்துக் கொண்டிருந்தான்.

கைப்பேசியை அணைத்துவிட்டு திரும்பிய நிரஞ்சன் இருவரையும் கண்டும் காணாதவாறு தேயிலை செடிகளை நோட்டமிட்டுக் கொண்டிருந்தான். ராம்குமார் பெருமூச்சுவிட்டு திரும்பி வர, நிரஞ்சனும் அவனும் தேயிலை தோட்டத்தையும் அங்கும் நடக்கும் பணிகளையும் மேற்பார்வையிடுவதை தொடர்ந்தனர்.

ராம்குமாரை சமாளித்துவிட்டு அலுவலக அறைக்கு வந்த அகவழகி பெருங்குழப்பத்தில் ஆழ்ந்திருந்தாள். அவளின் செயலும் எண்ணமும் அவளுக்கே புரிபடாத நிலையில் இருந்ததால் விளைந்த குழப்பம் அது. கதிரவன் காலையில் கூறியதற்கு தான் ஏன் கோப பட வேண்டுமென்று ஒரு மனமும் ஏன் கோப படக்கூடாதென்று ஒரு மனமும் எதிரெதிராய் நின்று செய்த விவாதம் எதனை பற்றியும் சிந்திக்க விடாமல் செய்ய, ஒரு கட்டத்தில் அயர்ந்து போனாள். தற்காலிகமாக கதிரவனின் நினைப்பை தள்ளி வைத்துவிட்டு வேலையில் கவனம் பதிக்க, அவள் தலை விண் விண்ணென்று தெறித்தது. தன்னிடமிருந்த மாத்திரையை விழுங்கிவிட்டு காலையிலிருந்து தேங்கியிருந்த வேலைகளை பார்க்கத் தொடங்கியவள் மதியம் உணவு உண்ணவும் மறந்துப் போயிருந்தாள். பசியிருந்தால் தானே உண்ண வேண்டுமென்று தோன்றும்.

கதிரவனின் நினைவை என்னதான் அவள் ஒத்தி வைத்திருந்தாலும் ஓர் ஓரமாக ஒரு ஏக்கம் தோன்றி அவனை நினைவுறுத்திக் கொண்டிருந்தது. மூன்று மணிக்கெல்லாம் தன் வேலையை முடித்தவள் நிரஞ்சனிடம் உடல்நிலை சரியில்லை என்று கூறிக்கொண்டு இல்லத்திற்கு கிளம்பியிருந்தாள்.

சரியில்லாதது உள்ளமா? உடலா? என்னும் கேள்வியை அவளது மனசாட்சி எழுப்பி சிரிக்க, மௌனமாய் அதிரனின் பள்ளிக்கு சென்று அவனையும் அழைத்துக் கொண்டு இல்லம் வந்திருந்தாள்.

அவனுக்கு சாப்பிட பலகாரம் செய்து கொடுத்து படிக்க செய்தவள் இரவு உணவு செய்து ஊட்டி விட்டு உறங்க வைத்துவிட்டு உண்ண வந்தாள். தொண்டைக்குழிக்குள் உணவு இறங்குவேனா என சண்டித்தனம் செய்ய, பெயருக்கு உண்டுவிட்டு எழுந்து வந்து படுக்கையில் விழுந்தவளின் நினைப்பில் கதிரவனே நிறைந்திருந்தான்.

என்னதான் தன் முடிவில் தான் உறுதியாக இருந்தாலும் அவன் நினைவு வரும் லேளைகளில் மனம் தடுமாறுவதை அவளால் மறுக்க முடியவில்லை. இரவெல்லாம் உறக்கமின்றி தவித்தாள். விடியலில் சிறிது நேரம் உறங்கி எழுந்தவள் மீண்டும் தன் காலை வேலைகளை இயந்திரமாக தொடர, முதல் நாள் கதிரவன் வீட்டிற்கு வந்தது நினைவு வர, அவள் எதிர்பார்ப்பாய் வாசல் கதவை பார்த்தாள்.

அவன் தான் ஒரு வாரம் தன் தொல்லை இல்லை என்று சொல்லி சென்றிருக்கிறானே என்று பெருமூச்சு விட்டவள் கடமையே என்று வேலையை செய்து அதிரனை பள்ளிக்குக் கிளப்பி விட்டு தானும் பணிக்குச் சென்றாள். அங்கும் அவள் யோசனையாகவே வலம் வந்தாள். அவள் முகம் தெளிவற்று காணப்பட்டது.

நான்கு நாட்கள் இப்படியே கழிந்த நிலையில், அவளுக்கு கதிரவனின் நினைவு அதிகமானது போல் தோன்றியது. எப்பொழுதும் தன்னை வம்பு செய்பவன் திடீரென்று காணாமல் போய்விட்டானே என்கிற எண்ணம் அவளுக்கு வாட்டத்தை தந்திருந்தது. நேரில் வராவிட்டாலும் கைப்பேசியில் அழைத்தாவது வம்பு பேசுபவன் ஒரு அழைப்பும் விடுக்காதிருக்க, அவ்வப்போது கைப்பேசியை பார்ப்பதும் பின் ஏக்க பெருமூச்சு விடுவதுமாக இருந்தாள்.

நிரஞ்சனும் அவளை கவனித்து கொண்டுதான் இருந்தான். அவளின் இந்த மாற்றம் அவனுக்கு சிறு நம்பிக்கையை தந்திருந்தது. அவளை கவனித்தாலும் முதல் நாள் கேட்டதுபோல் அதன்பின் அவளிடம் எதுவும் கேட்கவில்லை. அவளும் அவனிடம் பணியை தாண்டி எதனையும் பேசவில்லை.

சிலர் இருந்தாலும் இம்சை இல்லாவிட்டாலும் இம்சை. கதிரவன் இருந்தபோது அவன் மீது எரிந்து விழுந்தவளுக்கு அவன் இல்லாத நாட்கள் முன்பைவிட இம்சையாக இருந்தது.

அவன் இல்லாத ஒரு வாரமும் அதிரனை நேரத்திற்கு உண்ண வைத்து உறங்க வைத்தவள் தான் சரியாக உண்ணாது உறங்காதிருந்தாள். அதிரனிடம் கூட கதிரவன் அவனிடம் பேசினானா என்று வாய்விட்டு கேட்டுவிட்டாள். அதற்கு அதிரன்,

“இல்லை அழகி. அவர் ஒரு வாரம் ரொம்ப பிஸி. பேச முடியாது. சமத்தா உனக்கு தொந்தரவு தராம குட் பாயா இருக்கணும்னு சொல்லிட்டு தான் போனாரு. நான் குட் பாயா இருக்கனா அழகி?” என்று கதிரவன் கூறியதாய் கூறிவிட்டு கேட்கவும் ஏமாற்றமாய் உணர்ந்த அழகி முயன்று வரவழைத்த சிரிப்புடன்,

“என் அதிகுட்டி எப்பவும் குட் பாய் தான்.” என அவனது கன்னத்தில் முத்தமிட்டாள்.

அன்று இரவு தான் அவளின் மனங்குழப்பங்களுக்கெல்லாம் ஒரு தீர்வை கண்டுபிடித்தாள் அகவழகி. அதன்பின் தான் நன்றாக உண்டு உறங்கினாள்.

அன்றைய மறுநாள் அவள் முகத்தில் குழப்பம் தொலைந்து தெளிவை கண்ட நிரஞ்சன் அவள் முகத்திலிருக்கும் வாட்டம் மட்டும் மாறாதிருப்பதை குறித்துக் கொண்டான். அவளாலும் எவ்வளவு முயன்றும் அவளது முகவாட்டத்தை மறைக்க முடியவில்லை.

கதிரவன் சொல்லிச் சென்ற ஒரு வாரம் கடந்திருந்தது.

காலையில் கண்விழித்து எழுந்த அழகிக்குள் உற்சாகம் பீறிக்கொண்டு வந்தது. அவளுள் ஆவல் பொங்கியது. பொங்கும் ஆவலோடு தன் காலை வேலைகளை முடித்தவள் தனக்கு காபி கலந்துக் கொண்டு கூடத்தில் வந்து அமர்ந்தாள். ஒரு வாரம் கழித்து நிம்மதியாக உணர்ந்ததால் நாவின் சுவை மொட்டுக்கலெல்லாம் காபியின் நறுமணத்தில் விழித்துக் கொள்ள, அன்று ஞாயிற்றுக்கிழமை ஆதலாலும் மிக நிதானமாக காபியை சுவைத்து அருந்தினாள்.

அவள் சுவையில் இலயித்திருந்த நேரம் வாசலிலிருந்த அழைப்பு மணி அடிக்க, அரக்க பரக்க எழுந்துச் சென்று ஆவலாக கதவைத் திறந்தாள்.

 

வருவாள்….

 

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்