Loading

 

Unknown 1

 

‘லப் டப்’ என்று ஒலிக்கும் இதயத்தின் ஓசை இன்று ‘திக் திக்’ என்று வேகமாக அடித்துக் கொள்வது போலிருந்தது அவனுக்கு.

 

காரணம், கரணம் தப்பினால் மரணம் என்னும் நிலையில், கட்டிடப்பணி நடந்து கொண்டிருக்கும் அந்த ஐந்து மாடிக் கட்டிடத்தின் முனையிலிருந்து தொங்கிக் கொண்டல்லவா இருக்கிறான்.

 

அவனை பெண்டுலமாக ஆட்டுவிப்பவளோ கீழே இருந்து அவன் தொங்குவதை தான் கண்டு கொண்டிருக்கிறாள்.

 

அவளின் முகம் நிர்மலமாக இருக்க, கண்களைக் கொண்டு பாவனையை அறியலாம் என்றால், அவற்றையும் கண்ணாடி கொண்டு மறைத்தல்லவா வைத்திருக்கிறாள்.

 

சில நிமிடங்களில், அவளே கண்களிலிருந்து கண்ணாடியை கழட்ட, இப்போது அவளின் விழிமொழியோ குழப்பத்தை கொண்டிருப்பது புலப்பட்டது.

 

இவளின் நிலை இப்படி இருக்க, அங்கொருவனோ ‘வாயை மட்டும் திறந்துடாத’ என்பதை ஜெபம் போல உருப்போட்டபடியே தொங்கிக் கொண்டிருந்தான்.

 

அவன் ஏதோ தவறு செய்து, அவன் மீது சந்தேகம் கொண்டு, அவன் வாயிலிருந்து உண்மையை வரவழைக்க இப்படி அந்தரத்தில் தொங்க விடப்பட்டிருக்கிறான் என்ற யூகத்திற்கு அதற்குள் வந்துவிடாதீர்கள்!

 

மேலே இருந்த தன் வேலையாளிடம் அவனை விடுமாறு சைகையால் கூறியவள், தன்னருகே நின்ற தன் பாதுகாவலனிடம், “உஃப், இவன்கிட்ட கொஞ்சியும் பார்த்தாச்சு, கெஞ்சியும் பார்த்தாச்சு, இப்போ மிரட்டியும் பார்த்தாச்சு. ஆனா, மசிய மாட்டிங்குறானே! வாயை திறந்து, மனசுல இருக்குறதை சொல்றானா பாரு!” என்று புலம்பினாள் அவள்.

 

அந்த பாதுகாவலனோ, “இருந்தா தான சொல்லுவான்!” என்று முணுமுணுக்க, “என்ன?” என்று கோபமானாள் அவள்.

 

“அதெல்லாம் சீக்கிரமே சொல்லிடுவான்னு சொன்னேன் மேம்.” என்று ஜகா வாங்கினான் அந்த பாதுகாவலன்.

 

“ஹ்ம்ம், அடுத்து என்ன பண்ணனும்னு வேற யோசிக்கணும்.” என்று அவள் கூறிக் கொண்டிருக்கும்போதே, அவன் கீழே ஓடி வருவதைக் கண்டவளின் விழிகள் ரசனையை தத்தெடுத்துக் கொண்டன.

 

“மய்யூ…ரன்…” என்று அவன் பெயரை ஜவ்வாக இழுத்து அவள் அழைக்க, ‘ஹையோ! இவங்க இன்னும் கிளம்பலையா?’ என்று அலறியது அவனின் மனம்.

 

அவளின் குரலுக்கு அத்தனை சக்தி இருந்தது போலும், அவன் அடுத்த அடி எடுத்து வைக்காமல் அங்கேயே தேங்கி நின்றான். மனம் மட்டும் அதன் போக்கில் புலம்பியபடி இருந்தது.

 

அவனருகே வந்தவளோ, “என்ன மய்யூ, ரன்னிங்கா? அதுவும், என்கிட்ட இருந்து?” என்றவள், அவன் கண்களை உற்று நோக்கியவாறு, “முடியுமா?” என்று சவாலாக கேட்டாள்.

 

‘க்கும், எங்க முடியுது? நானும் அதுக்காக டிரை பண்ணிட்டு தான் இருக்கேன். அப்பாவும் மகளும் அதுல ஒரு லாரி மண்ணள்ளி போட்டுட்டு தான் இருக்கீங்க!’ என்று மனதிற்குள்ளே தன் புலம்பலை தொடர்ந்தான்.

 

“ப்ச், நானும் எவ்ளோ தான் இறங்கி வரது? ஏன், நீ கொஞ்சம் பக்கத்துல வந்தா தான் என்ன?” என்றவளின் வார்த்தைகளுக்கு மாறாக அவள் தான் அவனை நெருங்கிக் கொண்டிருந்தாள்.

 

அவளின் நெருக்கம் கூட கூட, அவன் தான் தவித்து போனான்.

 

ஒன்றுமே செய்யாமலேயே வியர்வை பெருக்கெடுத்து ஓட, “மே… மே…ம் இத்…து ஆ…பி…ஸ்…” என்று அவன் திக்கித் திணற, அவளோ வெகு சுவாரசியமாக, “அப்போ வீடா இருந்தா ஓகேவா?” என்று கண்ணடித்தாள்.

 

‘ஹ்ம்ம், உன்கிட்ட தனியா சிக்கக்கூடாதுன்னு தான, தனி வீடா இல்லாம, நாலு பேரோட ஷேரிங்ல தங்கியிருக்கேன்.’ என்று வழக்கம் போல மனதிற்குள் சரளமாக பேசினாலும், வெளியே அதே தந்தியடிக்கும் குரலில், “மே…ம் பி…ளீ…ஸ் இத்…தெல்லாம் நல்லா இல்ல…” என்றான்.

 

“ஆமா, நல்லா இல்ல தான்! நான் பண்றதெல்லாம் நீ பண்ண வேண்டியது, நீ பண்றதெல்லாம் நான் பண்ண வேண்டியது! மாத்தி பண்ணா எப்படி நல்லா இருக்கும்? நல்லா பண்ணனும்னா உன் கோ-ஆப்பரேஷன் வேணுமே!” என்றாள்.

 

‘இவக்கிட்ட வாயை குடுறதுக்கு, நல்ல ஸ்டிரங்கான சுவரைப் பார்த்து மோதிக்கலாம்!’ என்று எண்ணியவன், இப்போது அமைதியாகி விட, “க்கும், உடனே மௌனச் சாமியார் அவதாரம் எடுத்துடுவியே!” என்று சலித்துக் கொண்டவளை அலைபேசி அழைப்பு திசை திருப்ப, கிட்டியது சந்தர்ப்பம் என்று அங்கிருந்து ஓடினான் அவளின் மய்யூ…ரன்!

 

“ச்சே, ஓடிட்டானே! எல்லாம் இந்த அப்பாவால!” என்றவள், அழைப்பை ஏற்க, மறுமுனையில் இருந்த அவளின் தந்தையோ, “துவா, சைட்ல உனக்கென்ன வேலை?” என்று தான் கேட்டார்.

 

“ஹான், சைட்டடிக்கிற வேலை!” என்றவாறே மகிழுந்தில் ஏறினாள் துவா. உடன், அவளின் பாதுகாவலன் ருத்ரனும் ஏறிக் கொண்டான்.

 

“எவ்ளோ தைரியம் இருந்தா அப்பா கிட்டயே சைட்டடிக்கிறேன்னு சொல்லுவ?” என்று அவளின் தந்தை கோபிநாத் கேட்க, “நமக்கு தான் சீரியஸா பேச வரலையே கோபி, அப்பறம் எதுக்கு வீணா டிரை பண்ணிக்கிட்டு?” என்று தந்தையின் காலையே வாரினாள் மகள்.

 

“அவ்ளோ அப்பட்டமாவா தெரியுது? சரி, இன்னைக்காவது பையன் ஒத்துக்கிட்டானா?’ என்று அவர் வினவ, “ஹ்ம்ம் எங்க? நானும் இன்னும் எத்தனை ஐடியா யோசிக்கணுமோ தெரியல!” என்று புலம்பியவள், திடீரென்று ஞாபகம் வந்தவளாக, “ப்பா, எனக்கு இந்த மாசத்துக்குள்ள கல்யாணம் நடந்தே தீரும்னு சொன்னாரே, அந்த ஜோசியர் அட்ரஸ் குடுங்க. வீடு தேடி போய் ஏதாவது பெருசா கிஃப்ட் குடுக்கணும்.” என்றாள் பல்லைக் கடித்துக் கொண்டே.

 

“அதெல்லாம் ஒன்னும் வேணாம். முதல்ல, ஆஃபிஸ் வர வழியை பாரு.” என்று கோபிநாத் கூற, “ப்பா, அங்க வந்து நான் என்ன செய்ய? நான் வீட்டுக்கு போறேன்.” என்றாள்.

 

“அப்படியா? சரி நீ போ. நம்ம மயூரன் சைட்ல இருந்து இங்க தான் வரதா இருந்தது…” என்று அவர் முடிக்கும் முன்பே, “ச்சு, எல்லா வேலையும் நீங்களே எப்படி ப்பா பார்ப்பீங்க? நான் எதுக்கு இருக்கேன்? இதோ, உங்களுக்காக, உங்களுக்கு ஹெல்ப் பண்றதுக்காகவே தான் வந்துட்டே இருக்கேன்.” என்றாள்.

 

“எது? நீ இப்போ இங்க வரது, எனக்கு ஹெல்ப் பண்ண?” என்று கோபிநாத் கேட்க, “அஃப்கோர்ஸ் ப்பா. எனக்கு ஒரு நல்ல பையனா தேடி, கல்யாணம் பண்ணி வைக்கிறது எவ்ளோ பெரிய வேலை? அதுக்கு தான் ஹெல்ப் பண்றேனு சொன்னேன்.” என்று சிரிக்காமல் அவள் கூற, “வாயாடி!” என்று சிரித்தவாறே அழைப்பை துண்டித்தார் கோபிநாத்.

 

துவாரகா – கோபிநாத்தின் ஒரே செல்ல மகள்!

 

கோபிநாத் – துவாரகாவிற்கென்று தற்போது இருக்கும் ஒரே உறவு!

 

நினைவு தெரிந்ததிலிருந்து அன்னையை புகைப்படத்தில் மட்டுமே கண்டிருக்கிறாள் துவாரகா.

 

ஆனால், இப்போது மயூரனுக்கு காதல் தொல்லை தருவது வரை, அவள் வாழ்வில் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளை அன்னையிடம் சொல்லி விடுவாள் பெண். இதற்கு முன்னோடியும் அவளின் தந்தை தான்.

 

தாயில்லாத பெண் என்று செல்லத்தை மட்டுமல்ல, நட்பையும் ஊட்டியே வளர்த்தவர் கோபிநாத். அதன் காரணமாகவே, சைட்டடிப்பதை எல்லாம் சர்வ சாதாரணமாக அவரிடம் கூறிக் கொண்டிருக்கிறாள்.

 

மயூரன், கோபிநாத்தின் ‘துவாரகா கன்ஸ்டிரக்ஷன்’னில் ‘சீஃப் ஆர்கிடெக்ட்’டாக பணிபுரிபவன்.

 

அவனின் திறமை கண்டு வியந்து தான் பணியில் சேர்த்திருந்தார் கோபிநாத். மயூரனுக்கும், இத்தனை பெரிய நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தது மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருந்தது.

 

அனைத்தும் அவளை அங்கு காணும் வரை மட்டுமே!

 

எப்போதும் அலுவலகப் பக்கமே எட்டிப் பாராதவள், அன்று அதிசயத்திலும் அதிசயமாக வந்திருந்தாள். அவளின் வருங்காலத்தோடு சேர்த்து வைக்க, விதி தான் அனுப்பியதோ?

 

கோபிநாத்தின் அறையிலிருந்து வேலை கிடைத்த மகிழ்ச்சியில் மயூரன் வெளியே வருவதற்காக கதவை திறக்க, அதே சமயம் தந்தையை பார்ப்பதற்காக துவாரகாவும் அவசரமாக உள்ளே நுழைய,. கதவும் விதிக்கு உதவியாக சதி செய்ய, துவாரகா மயூரனின் மீது விழுந்து விட்டாள், காதலிலும்!

 

பார்த்தவுடன் வருவது ஈர்ப்பு என்றால், அந்நொடி துவாரகவுக்கு மயூரனின் மீதிருந்தது ஈர்ப்பு தான்.

 

ஆனால், அவனின் செயல்களும், அதைத் தொடர்ந்து தந்தை அவனுக்கு கொடுத்த பாராட்டு பத்திரமும் தான் அன்றே அவன் மீது காதலில் விழக் காரணமானது.

 

தலைகால் புரியாத மகிழ்ச்சியில் கதவை திறந்த மயூரனுக்கோ, சட்டென்று தன்மீது யாரோ மோதி, அவர்களுடன் அவனும் சேர்ந்து விழுந்ததும், முதலில் ஒன்றும் புரியவில்லை.

 

மிக நெருக்கமாக அவன் உணர்ந்த நறுமணமும், தன் தேகம் உணர்ந்த ஸ்பரிசமும் தான் அந்நபர் பெண் என்பதை கூறியது. உடனே பதறி எழுந்தவன், நூறு முறையாவது மன்னிப்பு கூறியிருப்பான்.

 

ஆடவனின் பதற்றமும் மன்னிப்புகளும் பெண்ணவளுக்கு ஆச்சரியத்தை கொடுக்க, முடிவில், ‘எப்பா சாமி, போதும்பா உன் சாரி!’ என்று நொந்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டாள்.

 

கோபிநாத்தும் நடந்ததை கண்டவராக, “அட போதும் மயூரன். இட் வாஸ் ஜஸ்ட் ஆன் ஆக்சிடெண்ட். எதுக்கு இவ்ளோ டென்ஷன்?” என்று அவனை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார்.

 

செல்லும் அவனையே பார்த்துக் கொண்டிருந்த துவாரகாவோ, “யாரு ப்பா இந்த அரிய வகை உயிரினம்?” என்று வினவ, “துவா ம்மா, எப்பவும் விளையாட்டு தானா? இவரு தான் புதுசா ஜாயின் பண்ணிருக்க சீஃப் ஆர்கிடெக்ட், பேரு மயூரன்.” என்றார்.

 

‘மய்யூ…ரன்…’ என்று மனதிற்குள் சொல்லிப் பார்த்தவளுக்கு தித்திக்க தான் செய்தது.

 

“ஹீ இஸ் சச் அ டேலண்டட் கை.” என்று அடுத்து கோபிநாத் கூறிய அனைத்தும் ஒருபக்கம் செவிக்குள் நுழைந்தாலும், மனம் முழுவதும் மன்னவனின் செயல்கள் தான் நிறைந்திருந்தன.

 

சிறிது நேரத்திற்கு பின்பே, தன் பேச்சுக்கு எவ்வித எதிர்வினையும் மகளிடமிருந்து இல்லை என்பதை உணர்ந்த கோபிநாத், “துவா, என்னமா? அப்பா போரடிக்கிறேனா?” என்று வினவ, அவளோ அதைக் கண்டு கொள்ளாமல், “ப்பா, ஐ திங்க் ஐ லவ் ஹிம்.” என்று கூறினாள்.

 

“எது?” என்று கோபிநாத் திகைக்க, “ஆமா கோபி, உங்க பொண்ணு காதல் கடல்ல தொப்புக்கடீர்னு விழுந்துட்டா.” என்று உற்சாகமாக கூவினாள் துவாரகா.

 

“ஹ்ம்ம், பாவம் அந்த பையன், இன்னைக்கு தான் வேலைக்கு ஜாயின் பண்ணான். நல்ல திறமையான பையன் வேற. உன் கொரங்கு சேட்டை எல்லாம் காமிச்சு ஒரே நாள்ல அவனை ஓட வச்சுடாத துவா ம்மா. திரும்ப ஒரு ஆர்க்கிடெக்ட் எல்லாம் தேடுறது கஷ்டம் டா.” என்று கோபிநாத் கூற, “ப்பா, நான் எவ்ளோ ஆசையா என் காதல் கதையை சொல்றேன், நீங்க என்னன்னா ஆர்க்கிடெக்ட் கிடைக்குறது கஷ்டம்னு புலம்பிட்டு இருக்கீங்க!” என்று திட்டினாள்.

 

பின், சிறிது யோசித்தவள், “ஹ்ம்ம், அவன் ரொம்ப ரிசர்வ்ட் டைப்பா தெரியுறான். நான் என் லவ் மொத்தத்தையும் சொன்னா தாங்க மாட்டான். உடனே, இங்கிருந்து எஸ்கேப்பாக கூட சான்ஸ் இருக்கு. சோ, நீங்க என்ன பண்றீங்க, அவன் வேலையை விட்டு போகாத மாதிரி செய்றீங்க, டீல்?” என்றவள், அவரின் பதிலுக்கு கூட காத்திராமல் வெளியே சென்று விட, கோபிநாத் தான், “இதெல்லாம் எங்க போய் முடிய போகுதோ!” என்று புலம்பியபடி இருந்தார்.

 

தந்தையின் அறையை விட்டு வெளியே வந்தவள், மயூரன் எங்கே என்று தேட, அவனோ கோபிநாத்தின் உதவியாளருடன் பேசிக் கொண்டிருந்தான்.

 

வழியிலிருந்த கண்ணாடியில் தன் முகத்தை சரி பார்த்துக் கொண்டவள், நேராக அவ்விருவர் அருகே செல்ல, அவர்களோ தீவிர சம்பாஷணையில் இருந்ததால், அவளைக் கவனிக்கவில்லை.

 

‘உஃப், ஆரம்பமே பல்பா இருக்கே!’ என்று மனதிற்குள் புலம்பியவள், தன் வருகையை செருமலில் ஜாடையாக உணர்த்தினாள்.

 

அப்போது தான் அந்த இருவரும் அவளைக் கவனித்தனர்.

 

“அட துவா மா, நீயா? நீ என்ன…” என்று கேட்க வந்தவரை அவசரமாக தடுத்தவள், “அங்கிள், அப்பா உங்களை கூப்பிட்டாரு.” என்று அவரை அங்கிருந்து கிளப்பும் முயற்சியில் ஈடுபட்டாள்.

 

பின்னே, “நீ இங்க என்ன பண்ற?” என்று அவளை கேட்டு அவளின் இமேஜை டேமேஜ் செய்து விடுவாரோ என்ற பயம் தான்!

 

“அச்சோ, அப்படியா? மயூரன் கிட்ட பேசிட்டு, உள்ள போக மறந்துட்டேன் பாரேன்!” என்றவர், மயூரனிடம் திரும்பி, “சரி மயூரன், இன்னும் ஏதாவது டவுட்ஸ் இருந்தா, மிஸ்டர், ரவிக்குமார் கிட்ட கேளுங்க.” என்று கூறி அங்கிருந்து விடைபெற்றார்.

 

அவர் சென்றதும் மயூரனும் கிளம்ப எத்தனிக்க, “ஹலோ மிஸ்டர். மய்யூ…ரன்…” என்று விளித்து அவனை தேங்கச் செய்தாள் துவாரகா.

 

அவள் கோபிநாத்தின் அறையில் சொல்லாமல் கொள்ளாமல் நுழைந்ததிலிருந்து, இப்போது அவரின் உதவியாளரிடம் பேசியது வரை வைத்து அவள் யாராக இருக்கக் கூடும் என்ற கணிப்புக்கு ஏற்கனவே வந்திருந்தான் மயூரன்.

 

எங்கு அங்கு நின்றால், சற்று முன் நிகழ்ந்த சம்பவத்தை பற்றி பேசக் கூடுமோ என்ற தயக்கத்தினாலேயே அங்கிருந்து செல்ல முற்பட்டான்.

 

ஆனால், அவளே அழைக்கும்போது, அவனால் போக முடியுமா என்ன? முதலாளியாகிற்றே!

 

“என்ன மய்யூ…ரன், பேச மாட்டிங்களா? கர்டஸிக்காக ஒரு விஷ் கூட இல்லயா?’ என்று பேச்சை வளர்த்தாள் துவாரகா.

 

மயூரனோ, நெளிந்து கொண்டே தான் அவளுக்கு ஒரு ‘ஹாய்’ கூறினான்.

 

“அத்தனை முறை சாரி சொல்ல மட்டும் தெரியுது, ஒரே ஒரு ஹாய் மட்டும் தான் சொல்வீங்களா?” என்று அவள் வம்பிழுக்க, ‘இதென்னடா வம்பா போச்சு? ‘ஹாய்’யை எத்தனை முறை சொல்லுவாங்க?’ என்று அப்போது மனதிற்குள் பேச ஆரம்பித்தவன் தான், இப்போது வரை மனதிற்குள் மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறான்!

 

அவனின் திணறலை பார்த்து பாவப்பட்டாளோ என்னவோ, “ஓகே மய்யூ…ரன், நாளைக்கு பார்ப்போம்.” என்று அங்கிருந்து நகர முற்பட, ‘ஹப்பாடா’ என்று மூச்சைக் கூட வெளியே விட்டிருக்க மாட்டான், அதற்குள் திரும்பி, “அச்சோ, சொல்ல வந்ததை சொல்ல மறந்துட்டேனே!” என்றவளை பயத்துடன் தான் பார்த்தான் மயூரன்.

 

“மய்யூ…ரன், நீங்க சிங்கிள் தான?” என்று அவள் வினவ, பேச்சு வில்லங்கமான பாதையில் செல்வதை உணர்ந்தாலும், அவளின் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டி தலையை மட்டும் ‘ஆம்’ என்று அசைத்தான்.

 

“எப்போ நாம மிங்கில் ஆகலாம் மய்யூ…ரன்?” என்று அவள் கண்ணடிக்க, அவனோ அதிர்ச்சி மொத்தத்தையும் குத்தகைக்கு எடுத்தவனாக திகைப்புடன் நின்றிருந்தான்.

 

தொடரும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
9
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்