Loading

நிறம் 1

அன்று காவல்துறை தலைமை இயக்குனரின் அலுவலகமே பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. அதன் காரணத்தை அனைவரும் அறியவில்லை என்றாலும், ஏதோ ரகசிய திட்டங்கள் தீட்டப்படுவதை அங்கிருந்தவர்கள் உணர்ந்து தான் இருந்தனர். இதோ முக்கிய காவலர்கள்  அனைவரும் ஒன்று கூடும் அன்றைய நாளின் மூன்றாவது கலந்துரையாடல் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

 

காவல்துறை தலைமை இயக்குனரின் அறை… அனைவரும் சற்று பதற்றமாகவே காணப்பட்டனர்.

 

நிழல் உலக தாதாவான விக்ரம் சிங் சென்னை வருவதாகப் பரிமாறப்பட்ட இரகசிய தகவலினால் தான் இந்த பதற்றம். மும்பையையே உலுக்கி வரும் விக்ரமின் இந்த வருகை எதற்காக என்று ஒரு பக்கம் குழப்பமாக இருக்க, மறுபக்கம் விக்ரமை கைது செய்ய வேண்டி ஆட்சியில் இருப்பவர்கள் கொடுத்துக் கொண்டிருக்கும் அழுத்தமும் இவர்களின் இரத்த அழுத்தத்தை உயர்த்திக் கொண்டிருந்தது.

 

“எல்லா இடங்களையும் உங்க கண்ட்ரோலுக்கு கொண்டு வாங்க. ஏர்-போர்ட், ரெயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்டுன்னு எல்லா இடங்களையும் தரோவா செக்  பண்ணுங்க. எல்லா செக்-போஸ்டுக்கும் தகவல் அனுப்பி அலர்ட் பண்ணுங்க.” என்று கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டவுடன் அந்த கலந்துரையாடல் முடிவிற்கு வந்தது.

 

அங்கிருந்து வெளிவந்த காவலர்கள் இருவர் தங்களுக்கு இடப்பட்ட பணியை எண்ணி புலம்பிக் கொண்டிருந்தனர்.

 

“இவ்ளோ ஏற்பாடு பண்ணிட்டு இருக்கோம். ஆனா, அவன் யாருக்கிட்டயும் சிக்காம ஓடி போயிடுவான். கடைசில, அவனைப் பிடிக்கக் கூட முடியலையான்னு நம்மள தான் நார் நாரா கிழிப்பானுங்க.”

 

“க்கும், அந்த விக்ரம் சிங் ரெண்டு மூணு வருஷமா இங்கிட்டு உலவிக்கிட்டு இருக்குறதா செய்தி வந்துட்டு தான் இருக்கு. இத்தனை வருஷமா விட்டுப்புட்டு, இப்போ மட்டும் என்னத்துக்கு அரெஸ்ட் பண்ணனும்னு சொல்லிட்டு இருக்காங்க?”

 

“இத்தனை வருஷமா அவன் உதவி ஆளுங்கட்சிக்கு தேவைப்பட்டிருக்கு. இப்போ ஏதோ விரிசல் போல. ஹ்ம்ம், இதெல்லாம் அரசியல்ல சகஜம் தான? வேணும்னா கொண்டாடுறது, வேண்டாம்னா அடியோட அழிக்கிறது. என்ன, இங்க ரெண்டுமே பெரிய இடம்!”

 

இன்னும் எவ்வளவு நேரம் இந்த விஷயத்தை இடம், பொருள், ஏவல் அறியாமல் அலசியிருப்பார்களோ, பின்னே கேட்ட பூட்ஸ் சத்தத்தில், சத்தம் வந்த திசை  நோக்க, அங்கு வந்து கொண்டிருந்தான் ஷ்யாம்சுந்தர்.

 

சிறுவயதிலேயே காவல்துறை கண்காணிப்பாளரானதில் எப்போதும் இருக்கும் கர்வம் இப்போதும் அவன் முகத்தில் பிரதிபலித்தது. அதைத் தவிர வேறெதையும் அவன் முகத்திலிருந்து கண்டுகொள்ள முடியவில்லை.

 

“யூஸ்லெஸ்! நீங்க உங்க இஷ்டத்துக்கு இப்படி இடம் தெரியாம கத்தி பேசுறதுக்கா உங்களுக்கு தனியா மீட்டிங் போட்டு இரகசிய தகவலை சொல்லிருக்காங்க. முக்கியமான பதவில இருக்கோம்ங்கிறது கொஞ்சமாச்சும் தெரிய வேணாம்.” என்று சத்தமே வராமல் இருவரையும் திட்டிக் கொண்டிருந்தான். மற்றவர்களுக்கு அதைப் பார்க்கும்போது, மூவரும் தீவிரமாக பேசுவது போல தான் இருக்கும்.

 

அந்த இருவரோ, ‘சின்ன பையன் கிட்ட எல்லாம் திட்டு வாங்க வேண்டியதா இருக்கே!’ என்று உள்ளே புலம்பியபடி நின்றிருந்தனர்.

 

“இனிமேலாவது உங்க பதவிக்கு ஏத்த மாதிரி நடந்துக்கோங்க.” என்றவன் தன் வேக நடையில் வெளியேறினான். அதன்பின்னரே இருவரும் இலகுவாகினர்.

 

அவர்கள் ஒருவரையொருவர் பாவமாக பார்த்துவிட்டு, வாய் திறந்து எதுவும் பேசிக் கொள்ளாமல், விடைபெற்று தங்களின் பணியைப் பார்க்கச் சென்றனர்.

 

சிறிது நேரத்திலேயே, அந்த அலுவலகத்தில் இருந்தவர்களுக்கு மீண்டும் பதற்றம் தொற்றிக் கொண்டது.  இத்தனை நேரம் அவர்கள் தீட்டிய திட்டத்தையும் மீறி, அந்த விக்ரம் சிங் சென்னைக்குள் நுழைந்து விட்டான் என்று கிடைத்த அடுத்த தகவல் தான் இந்த பதற்றத்திற்கான காரணம்.

 

அடுத்து என்ன செய்வது, எங்கு சென்று தேடுவது என்று தெரியாமல், அனைவரும் விழித்துக் கொண்டிருக்க, அவர்களுக்கான அடுத்த தகவலாக வந்தது, விக்ரம் இருக்கும் இடம்.

 

ஆடம்பர விடுதி, தன்னந்தனியாக இருக்கும் பிரம்மாண்ட வில்லா, உச்சபட்ச பாதுகாப்புடன் இயங்கும் பலமாடி கட்டிடங்கள் என்று அனைவரும் சந்தேகிக்கும் இடமாக அல்லாமல், சின்னஞ்சிறு சந்தில், இரு பெரிய கட்டிடங்களுக்கு இடையில் கிட்டத்தட்ட ஒடுங்கியிருந்த அந்த கட்டிடத்தில் தான் விக்ரம் இருக்கிறான் என்ற தகவல் வந்ததும் ஆச்சரியமா அதிர்ச்சியா என்று பிரித்தறிய முடியாத அளவிலேயே அங்கிருந்தவர்கள் தங்களின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவென்று ஆலோசித்தனர்.

 

ஷ்யாமிற்கு ஏதோ தவறாக தோன்றியது. இத்தனை நாட்களாக எவராலும் பிடிக்க முடியாதவனைப் பற்றிய தகவல்கள் இத்தனை எளிதாக கிடைக்கிறது என்றால், சந்தேகம் வரத்தானே செய்யும்!

 

ஆனால், இந்த சந்தேகம் எல்லாம் அவனிற்கு மட்டும் தான் போலும். மற்றவர்கள் தலைமையின் ஆணையை ஏற்று அதன்படி நடப்பது ஒன்றே கடமையென்று அந்த ஆலோசனை கூட்டத்தில் மூழ்கியிருந்தனர்.

 

ஷ்யாமாலும் அவனின் உயரதிகாரிகளிடம் இதைப் போன்ற கருத்துக்களை கூற முடிவதில்லை. ஏனெனில், பணியில் அதிவேக வளர்ச்சியின் காரணமாக பலரின் காழ்ப்புணர்ச்சிக்கு ஆளாகியிருந்தான்.

 

அவன் தன் கருத்துக்களை கூற வரும்போது, கிட்டியது நல்ல தருணம் என்று தங்களின் பதவியைக் கொண்டு அவனை அடக்கிவிடுவர். இதன் காரணமாகவே இப்போதெல்லாம் இது போன்ற ஆலோசனை கூட்டங்களில் அவன் தன் கருத்துக்களை வெளியில் சொல்வதில்லை. ஆனால், இவர்களின் கவனத்திற்கு கொண்டு வராமலேயே சில காரியங்களை செய்வதிலும் வல்லவன் தான் ஷ்யாம்.

 

ஆலோசனையின் முடிவில் விக்ரமை அந்த கட்டிடத்திலேயே கைது செய்யலாம் என்ற முடிவிற்கு வந்தனர் தலைமை பொறுப்பில் இருப்பவர்கள். இந்த பொறுப்பை ஷ்யாமிடம் ஒப்படைத்தனர்.

 

ஷ்யாமோ வாய் திறந்து எதுவும் கூறாமல், இறுகிய முகத்துடன் அவர்களிடம் விடைபெற்றான். மனதிற்குள் புழுங்கியவன், வெளியில் அதைக் காட்டிக்கொள்ளாமல் மற்ற காவலர்களுக்கான பணிகளை வரையறுத்தான். அந்த இடம் தற்போது ஆளரவமின்றி இருப்பது ஒன்று தான் அந்த காவலர்களுக்கு சாதகமாகிப் போனது.  

 

ஏனெனில், அவர்கள் பிடிக்கச் செல்வது, எதற்கும் அஞ்சாமல், கொலை, கொள்ளை என்று அனைத்து பாதகங்களையும் செய்யும் அரக்கனைப் பிடிப்பதற்கு அல்லவா! எதற்கும் துணிந்தவன், தன்னைக் காக்க பொதுமக்களை பணயமாக்கிக் கொள்ள தயங்க மாட்டான் என்பதையும் நன்கறிந்திருந்தான் ஷ்யாம்.

 

உத்தரவு பிறப்பிக்கப்பட்டதும் தங்களின் வாகனத்தை உயிர்ப்பித்து அந்த அரக்கன் இருக்கும் இடம் நோக்கி கிளம்பினர். பாதுகாப்பிற்காக கூடுதல் காவல் படையையும் அழைத்துச் சென்றனர்.

 

அரக்கனைப் பிடிப்பார்களா இந்த காவல் தேவர்கள்?

 

*****

 

‘புயலுக்கு முன்னே அமைதி’ என்பதைப் போல மயான அமைதியுடன் இருந்தது அந்த இடம். விக்ரம் இங்கு இருக்கிறான் என்ற தகவல் கிடைத்திராவிட்டால், இங்கு இருக்கலாம் என்று சந்தேகப்பட்டிருக்கக் கூட மாட்டார்கள். அந்த அளவிற்கு நடமாட்டம் இல்லாத இடமாக சாதாரணமாகவே இருந்தது.

 

அந்த அமைதியை சிறிது சிதைத்தபடி கேட்ட பூட்ஸ் சத்தத்தில், சத்தம் வந்த திசை நோக்கி முறைத்தான் ஷ்யாம்.

 

“உஃப், இவங்களை வச்சுக்கிட்டு சீக்ரெட் மிஷன் பண்ணனும்னு நினைச்சது தான் பெரிய தப்பு!” என்று அவன் முணுமுணுப்பதைக் கேட்ட, அவன் அருகிலிருந்த காவலர்களுக்கு அவன் கோபத்தின் அளவு தெரிந்தே இருந்தது.

 

‘இன்னைக்கு எத்தனை பேர் திட்டு வாங்க போறாங்களோ?’ என்பதே அவர்களின் மனம் மொழிப்பெயர்த்த பாஷையாக இருந்தது.

 

மெல்ல மெல்ல அந்த கட்டிடத்தை நோக்கி சிறு குழுக்களாக பிரிந்து சென்றனர். அப்படி செல்லும்போது, அந்த கட்டிடத்தில் காவலுக்கு இருந்த ஒருவன் பார்த்துவிட, அதன்பிறகு ஆரம்பித்தது காவலர்களுக்கும் அடியாட்களுக்குமான பரபரப்பான சண்டை.

 

இருபுறமும் துப்பாக்கியிலிருந்து தோட்டாக்கள் தெறிக்க, தயவுதாட்சண்யமின்றி இரு பக்கத்திலிருந்தவர்களுக்கும் காயங்கள் ஏற்பட்டன. சிறிது நேரத்தில் அந்த இடமே போர்களமாக காட்சியளிக்க, முன்னிரவு வேளையினால் வெளிச்சமும் குறைவாகிப் போக, எதிரில் இருப்பவர்களைக் காண சிரமமாகிப் போனது.

 

ஒரு வழியாக, எதிர்பக்கமிருந்து துப்பாக்கிகளின் சத்தம் குறைய ஆரம்பிக்க, மற்றவர்களை முன்னோக்கி நகர பணித்தான் ஷ்யாம்.

 

கீழே விழுந்திருந்த அடியாள் ஒருவனை தூக்கி அவனிடமிருந்து உள்ளே எத்தனை நபர்கள் இருக்கிறார்கள் போன்ற தகவல்களை சேகரிக்கும் முயற்சிலிருந்தான் ஷ்யாம்.

 

ஆனால், அவனை அந்த வேலையை செய்ய விடாமல், எதிர்பக்கமிருந்து வந்த தோட்டா அந்த அடியாளின் உயிரைப் பறித்திருந்தது.

 

“ஷிட்” என்று முணங்கியவன், வேகமாக எதிர்புறம் நோக்கி துப்பாக்கியை அழுத்தினான்.  அதன்பிறகு எந்த சத்தமும் இன்றிப் போக, மேலும் தாமதிக்காமல், ஷ்யாமே அவர்களை வழிநடத்திச் சென்றான்.

 

அந்த கட்டிடத்திற்குள் நுழைந்தவர்கள் கவனமாக, உள்ளே நுழைந்தனர். ஆங்காங்கே அடிபட்டு வீழ்ந்திருந்தவர்களை சிறையெடுத்துக் கொண்டனர் மற்றவர்கள். மேலும், சிலரின் தாக்குதலைத் தடுக்க, அவர்களின் அங்கத்தை தங்களின் தோட்டாக்கள் மூலம் துளைக்கவும் செய்தனர்.

 

ஒருவழியாக அந்த கட்டிடத்தின் நடுகூடத்திற்கு வந்தனர். ஆனால், அவர்கள் தேடி வந்த விக்ரமோ அங்கிருந்து ஏற்கனவே தப்பித்து விட்டான். இதையறிந்த ஷ்யாமின் முகமோ இறுகிப் போனது.

 

இத்தனை வருட வேலையில் முதல் தோல்வி அல்லவா! இல்லை, திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டான் என்று கூற வேண்டுமோ?

 

சாதாரண நாட்களிலேயே அவனிடம் பேச பயப்படும் காவலர்கள் இப்போது அவனிருக்கும் நிலை கண்டு அருகில் செல்லக் கூட பயம் கொண்டனர். இருப்பினும் அந்த தகவலை அவனிடம் சேர்க்க வேண்டும் அல்லவா?

 

அவனின் உதவியாளர்களில் ஒருவன் மெல்ல அவனருகே வந்து, “சார்” என்று அழைத்தான்.

 

‘என் பார்வையே உனக்கான மறுமொழி’ என்பது போல, தன் கூர்விழிகளை உயர்த்தி அவன் பார்க்க, எச்சிலை விழுங்கிக் கொண்ட உதவியாளன், “அங்க ஓரத்துல… ஒரு பொண்ணு… மயங்கியிருக்கு…” என்று திக்கித் திணறியபடி கூறி முடித்தான்.

 

எப்போதுமே எந்தவொரு விஷயத்திற்கும் பெரிதான எதிர்வினை அவனிடம் இருக்காது. அதே போல தான் அந்த காவலர் சொன்னதைக் கேட்டதும் புருவம் சுருக்கியவன், அவன் சுட்டிக் காட்டிய இடத்தை நோக்கி நடந்தான்.

 

அங்கு, அந்த காவலர் கூறியதைப் போலவே பிறை நெற்றியில் செந்நிற இரத்தம் வழிய மயங்கியிருந்தாள் பெண்ணவள்.

 

சிங்கத்தை வேட்டையாட வந்தவர்களுக்கு இந்த புள்ளிமான் தான் கையில் அகப்பட்டது!

 

****

 

அந்த மருத்துவமனை வளாகத்தை முற்றுகையிட முயன்று கொண்டிருந்தது ஊடகவியலாளர்களின் கூட்டம். என்ன தான் இரகசியமாக திட்டம் தீட்டி, மறைத்து மறைத்து செய்திருந்தாலும், நடந்த சண்டைக் காட்சி, ஊடகத்தின் பிடியில் சிக்காமல் போகுமா?

 

அடிபட்டவர்கள் இங்கு தான் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர் என்பதை அறிந்ததும், தங்களுக்கு ஏதேனும் செய்திகள் கிட்டாதா என்பதற்காகவே அந்த மருத்துவமனை வாயிலில் காத்துக் கொண்டிருக்கின்றனர் அவர்கள்.

 

மேலும், சிக்கியவர்கள் நிழல் உலக தாதாவான விக்ரம் சிங்கின் ஆட்கள் என்ற செய்தியும் வெளியே கசிய, அதை வைத்து அவர்களாகவே கதைகளை சொல்ல ஆரம்பித்தனர்.

 

அப்போது அங்கு வந்த ஷ்யாமைக் கண்டதும், வேகமாக அவனிடம் சென்றவர்கள் ஆளுக்கொரு கேள்வியைக் கேட்க ஆரம்பித்தனர்.

 

“சார், இன்னைக்கு ஒரு என்கவுண்டர் நடந்ததா சொல்றாங்களே, அது எவ்வளவு தூரம் உண்மை?”

 

“சார், பிடிப்பட்டவங்க விக்ரம் சிங்கோட ஆளுங்களாமே!”

 

“சார், நீங்க விக்ரம் சிங்குக்கு போட்ட பிளான் ஒர்க் அவுட் ஆகலையாமே. அவன் அங்க இல்லவே இல்லன்னு சொல்றாங்களே.”

 

ஏற்கனவே, கடுப்பில் இருந்தவனிற்கு இந்த கேள்விகள் மேலும் கோபத்தை கூட்ட, அவர்களை திட்ட வரும் சமயம்,  வந்த கேள்வி அத்தனை கோபத்திலும் அவன் புருவங்களை உயர்த்த தான் செய்தது.

 

“இத்தனை வருஷம் இல்லாம, இப்போ விக்ரம் சிங்குக்கு எதிரான உங்க நடவடிக்கைக்கு என்ன காரணம்? இதுவும் அரசியல் லாபத்துக்காக தானோ? ஆளுங்கட்சியோட தலையீடு இருக்குறதாவும் சொல்றாங்களே, இதுல எதெல்லாம் உண்மை?” என்று ஒலிவாங்கியை தன் முன் நீட்டியவளை மேலிருந்து கீழாக நொடி நேரத்தில் ஆராய்ந்து விட்டான் அந்த காவலன்.

 

பின் குரலை செருமியபடி, “உங்க அனுமானத்துக்கு எல்லாம் எங்களால பதில் சொல்ல முடியாது. அஃபிசியல் பிரெஸ் மீட் வைக்கிற வரைக்கும் காத்திட்டு இருங்க.” என்றவன் நிற்காமல் சென்று விட்டான்.

 

அவனுடன் வந்த காவலர்கள் தான், அவனின் பொறுமையான பதிலில் ஆச்சரியமாக செல்லும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

 

*****

 

அடிப்பட்டவர்களுக்கு நடந்து வரும் சிகிச்சைகளை மேற்பார்வையிட்டு வந்தவனிற்கு மனம் கொந்தளித்துக் கொண்டிருந்தது.

 

‘இவனுங்களுக்கு ட்ரீட்மெண்ட் ஒன்னு தான் கேடு!’’ என்று நினைத்தாலும், என்கவுண்டரில் போட்டுத் தள்ள முடியாதவாறு தன் கைகளைக் கட்டிப் போட்ட அந்த நபரை மனதிற்குள் திட்டிக் கொண்டிருந்தான்.

 

அனைவரையும் பார்வையிட்டு மருத்துவரிடமும் அவர்களின் நிலை குறித்து உரையாடினான்.

 

“டாக்டர், அந்த பொண்ணுக்கு இப்போ எப்படி இருக்கு?” என்று ஷ்யாம் வினவ, “தலையில லேசா தான் அடிபட்டிருக்கு. அதுக்கு ட்ரெஸ்ஸிங் பண்ணியாச்சு. ஆனா, இன்னும் அந்த பொண்ணுக்கு மயக்கம் தெளியல. நடந்த சம்பவங்கள் தந்த அதிர்ச்சில தான் மயங்கியிருக்காங்க. இன்னும் கொஞ்ச நேரத்துல கண்ணு முழிச்சுடுவாங்க.” என்றார் அந்த மருத்துவர்.

 

அவளிருந்த அறைக்குள் சென்று பார்த்தான். தலையில் கட்டு போடப்பட்டிருக்க, ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பதைப் போன்று படுத்திருந்தாள். சில நிமிடங்கள் அவளின் முகத்தையே பார்த்திருந்தான் ஷ்யாம்.

 

அவனருகே வந்த அவனின் உதவியாளன், “சார், இந்த பொண்ணைப் பத்தி எந்த தகவலும் இப்போதைக்கு கிடைக்கல. பக்கத்துல இருக்க ஏரியால இந்த பொண்ணோட போட்டோ காட்டி விசாரிச்சுட்டு இருக்காங்க சார். மேபி பணயத்துக்காக இந்த பொண்ண கடத்தியிருப்பாங்கன்னு தோணுது.” என்றான்.

 

“ஹுஹும், ஒரே ஒரு பொண்ணை பணயம் வச்சு என்ன யூஸ்? இந்த பொண்ணுக்கும் அவங்களுக்கும் கண்டிப்பா ஏதோ சம்பந்தம் இருக்கு. மேபி இந்த பொண்ணு விக்ரம் கூட வந்திருக்கலாம், இல்லைனா அவன் பார்க்க வந்தவனோட இருந்திருக்கலாம். அந்த இடம் யாருக்கு சொந்தம்னு விசாரிக்க சொன்னேனே, அது என்ன ஆச்சு?” என்று வினவினான்.

 

“இன்னும் சரிவர தெரியல சார். ஆனா யாரோ பெரிய ஆளோட பினாமி பேர்ல இருக்கலாம்னு சொல்லிக்கிறாங்க. அது பத்தின தகவல் வந்ததும் சொல்றேன் சார்.” என்று அவனிடமிருந்து விடைபெற்றான்.

 

மீண்டும் ஒருமுறை அப்பெண்ணின் முகத்தை பார்த்துவிட்டு ஷ்யாமும் வெளியேறினான். சுற்றி நடப்பது எதையும் உணராமல், இந்த நொடியில் தன் வாழ்க்கைப் பயணத்தை மாற்ற ஒருவன் முடிவு செய்து விட்டான் என்பதும் தெரியாமல் துயில் கொண்டிருந்தாள் அவள்.

 

*****

“இப்போ நீ அங்க போறது ரிஸ்க்னு புரியலையா டா உனக்கு?”

“….”

“ப்ச் இப்படி எதுவும் பேசாம கிளம்பிட்டு இருந்தா என்ன அர்த்தம்?”

“இது பத்தி பேச விரும்பலைன்னு அர்த்தம்!”

“இங்க பாரு, இப்போ நீ பண்ண போறது, எந்த பக்கம் தெரிஞ்சாலும் நமக்கு தான் ஆபத்து. விஷயம் நம்ம மூலமா வெளிவராம இருக்க, நம்மள போட்டுட்டு போயிட்டே இருப்பாங்க. சொன்னா கேளு.” என்று முதலாமவன் கெஞ்சிக் கொண்டிருக்க, அதையெல்லாம் பொருட்டாகக் கூட மதிக்காமல், இரண்டாமவன் கிளம்புவதில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தான்.

அவனைப் பிடித்து நிறுத்தியவனை புருவம் சுருக்கி பார்த்தவன், “என்கூட எவ்ளோ வருஷமா இருக்க?” என்று வினவினான்.

“ப்ச், இப்போ எதுக்கு தேவையில்லாத கேள்வி கேட்டுட்டு இருக்க?” என்று எரிச்சலாக பேசினான் முதலாமவன்.

“காரணமா தான் கேட்குறேன். சொல்லு என்கூட எவ்ளோ வருஷமா இருக்க?” என்று மீண்டும் அதே கேள்வியை அழுத்திக் கேட்க, ஒரு பெருமூச்சுடன், “ஏழு வருஷமா இருக்கேன்.” என்று பதில் கூறியபோதே அவன் கேள்விக்கான அர்த்தம் புரிந்துவிட, அவனின் வாயிலிருந்தே வரட்டும் என்று அமைதியாக இருந்தான்.

“ஏழு வருஷம் இருந்தும், என்னோட குணாதிசயம் தெரியலையா? ஒரு முடிவெடுத்துட்டா, அதை மாத்திக்குற பழக்கம் இப்போ வரைக்கும் என்கிட்ட இல்ல.” என்று கூறியவன் அவன் நினைத்ததை செயலாற்ற கிளம்பி விட்டான்.

 

*****

 

எல்லோரும் உறங்கிக் கொண்டிருந்த அந்த நள்ளிரவு வேளையில் தான் விழிப்பு தட்டியது அவளிற்கு.

 

கண்களைத் திறந்து பார்த்தவளிற்கு முதலில் தான் எங்கிருக்கிறோம் என்பதே புரியவில்லை. அவளிருந்த அறையையே சுற்றிப் பார்த்துக் கொண்டிருக்க, அவளிற்கு நினைவு திரும்பியதைக் கண்ட செவிலி, மருத்துவரை அழைக்கச் சென்றாள்.

 

மருத்துவர் வர எடுத்துக் கொண்ட இடைவெளியில் நடந்த சம்பவங்கள் அனைத்தும் நினைவிற்கு வர, அவர் உள்ளே நுழையவும் இவள் தள்ளாடியபடி எழவும் சரியாக இருந்தது.

 

அவருடன் வந்த ஷ்யாமும் அவனின் உதவியாளனும் கூட சில நொடிகள் திகைத்திருந்தனர்.

 

“ஷ் ரிலாக்ஸ், ஒண்ணுமில்ல.” என்று கூறி அவளை சமாதானப்படுத்தினார் அந்த மருத்துவர்.

 

அதன்பின்பே சூழலை உணர்ந்து அமைதியானாள் அந்த அனாமிகா!

 

மெல்ல மெல்ல அவளை இயல்பு நிலைக்கு கொண்டு வந்த மருத்துவர் அவளின் பெயரைக் கேட்டார்.

 

மருண்ட பார்வையுடன் திக்கியபடி “ஷீதல்” என்று மென்குரலில் கூறினாள்.

 

இவையனைத்தையும் தன் கூர்ப்பார்வையால் கவனித்துக் கொண்டிருந்தான் ஷ்யாம்.

 

மேலும் சில சாதாரண கேள்வியைக் கேட்டவர், ஓரக்கண்ணில் ஷ்யாமைக் காண, அவனோ கண்ணசைத்து அடுத்த கேள்வியைக் கேட்க சொன்னான்.

 

“நீங்க எப்படி அந்த இடத்துல… அந்த இடத்துக்கு போனீங்க?” என்று அந்த மருத்துவரும் வினவ, சில நிமிடங்கள் மெளனமாக இருந்தவள், ஒரு பெருமூச்சுடன், “அப்பாவை பார்க்க போனேன்.” என்றாள்.

 

“ஓஹ், உங்க அப்பாவை பார்க்க போன இடத்துல கடத்திட்டாங்களா?” என்று மேலும் அந்த மருத்துவர் கேட்க, விரக்தி சிரிப்பொன்றை வெளியிட்டவள், “விக்ரம் சிங்… அவரு தான் என்னோட அப்பா!” என்று கூற, அவ்வறையில் இருந்த அனைவரும் அதிர்ந்து தான் போயினர்.

 

தொடரும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
5
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்