அத்தியாயம்- 1
ஒளியோன் உயிர்களின் உறக்கம் கலைத்தக் காலை வேளை. இரைத்தேடி பறந்தப் புள்ளினங்களின் ஒலியை விஞ்சியிருந்தது அச்சாலையில் செல்லும் வாகனங்களின் சத்தம். நடைப் பயிற்சி மேற்கொண்டிருந்தவர்கள் தேநீர் கடையை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தனர். வேலைக்குச் செல்வோர் வண்டிகளில் பறந்துக் கொண்டிருந்தனர். ஊர் முழுதாய் விழிக்காத அக்காலையில் சிறகுகளை முடக்கிய முப்பது கிலோ பாரமும் கையில் காலைக்கு மதியத்திற்கு என்று அதுவொரு இரண்டு கிலோ பாரமும் சுமந்த வண்ணம் கட்டுப்பாடுகளால் கட்டப்பட்ட சிறார்கள் பள்ளிப் பேருந்திற்காகக் காத்திருந்தனர்.
காலைக் காட்சிகள் கண்களில் நிறைந்தாலும் வேண்டா வெறுப்பாய் அமர்ந்து வந்த தமிழ்செல்வியின் மனம் குமைந்துக் கொண்டிருந்தது.
“பாத்துப் பத்ரமாயிரு தமிழு… ரொம்ப முடிலனா அப்பாவுக்கு ஃபோன் பண்ணு அப்பா வந்து கூட்டிட்டு வந்துட்றேன். இல்லனா ஸ்டாப் ரூம்ல போய் படுத்துக்கோ.” என்று வண்டியோட்டிக் கொண்டே அறிவுறுத்திய தந்தையின் பேச்சு கிணற்றின் அடியாழத்திலிருந்து ஒலிப்பது போல் அவள் செவிக்குள் நுழைந்து மறுசெவியின் வழியே வெளியேறிக் கொண்டிருந்தது.
“ஆமா ஃபோன் பண்ணா உடனே வந்து கூப்ட்டு வந்துட்ற தூரத்துல இருக்குற காலேஜ்ல சேர்த்து விட்ருக்க பாரு. போ ப்பா. உன் பெரிய மவள மட்டும் கிட்டக்க இருபது நிமிஷத்துல இருக்குற காலேஜ்ல சேர்த்து விட்ட. உனக்கு உன் பெரிய மகனா ஒரு மாறி நான்னா ஒரு மாறி தானே.” என்று மனதிற்குள் பேசினாள்.
“ஏன்மா தமிழ்செல்வி அத கொஞ்சம் சத்தமா சொல்றது.” இது நானு.
“ஏன் ஸ்டாப் போய் இறங்குற வரை நான்ஸ்டாப்பா நடுரோடுனு கூட பாக்காம கிழி வாங்கவா. போமா அங்குட்டு. என்னைய வச்சு என்டர்டெய்ன்மன்ட் பண்ணாம ஒழுங்கா சீக்கிரம் இந்த ஊர்வலத்த முடிச்சுவுடு. உனக்கு புண்ணியமா போவும்.”
“இன்னும் கொஞ்ச நேரம் உனக்கு பில்டப் சீன் வைக்கலானு பார்த்தேன். நீ இப்பிடி சொல்ற. சரி உன்னை பார்த்தாலும் பாவமா தான் இருக்கு. சீக்கிரம் உன்னை வண்டிலேர்ந்து இறக்கி விட்றேன்.”
அவள் கல்லூரி பேருந்து வரும் நிறுத்தமான சத்திரம் பேருந்து நிலையத்திலிருக்கும் ஒரு பெரும் உணவகத்திற்கு முன் வண்டி வந்ததும் தமிழின் ஊரான தாளக்குடியில் தொடங்கிய ஊர்வலம் ஒருவழியாய் முடிவிற்கு வர, வேகமாகப் பையை தோளில் மாட்டிக் கொண்டு வண்டியை விட்டு இறங்கினாள் தமிழ்செல்வி. தமிழ்செல்வியின் தந்தை குமாரவேலன் வண்டியை நிறுத்திவிட்டு சட்டைப்பையில் கைவிட்டு ஒரு ஐம்பது ரூபாய் தாளை எடுத்து நீட்டினார்.
“இப்ப தானே ப்பா வீட்ல குடுத்த.”
“பரவால்ல மா வச்சுக்க. அம்புட்டு தூரம் போறில்ல. சாய்ந்திரம் வரேல பசிச்சா எதாவது வாங்கி சாப்ட்டுக்க.” என்றவரை தமிழ்செல்வி பார்த்துக் கொண்டே நிற்க, அவரும் தாளை நீட்டிக் கொண்டே நிற்க, போவார் வருவோர் அவர்களை விநோதமாகப் பார்த்துச் செல்ல,
“இதுக்கு ஒன்னும் குறைச்சலில்ல. தூரமா கொண்டு போய் காட்டுக்குள்ள இருக்குற காலேஜ்ல சேர்த்துவிட்டு அக்கறைய பாரு. யோவ் மாமா எல்லாம் உன்னால தான். நம்ம வீட்ல எல்லாரும் இன்ஞ்சினியரிங் நீ ஆர்ட்ஸ் சேர்ந்தினா ப்ரஸ்டீஜியஸ் இஷ்ஷு ஆகும்னு சொல்லி அப்ளிகேஷன் வாங்கிட்டு வரலாம்னு கூட்டிட்டு போய் அட்மிஷன் போட்டுட்டு பெங்களூர்லயா போய் உக்காந்துருக்க. ஊரு பக்கம் வாடி உனக்கு ராஜ மரியாதை பண்றேன். சரி இவரு வேற ரொம்ப நேரமா காச நீட்டிட்டே இருக்காரு. வாங்கி வைப்போம் பருத்தி மூட்ட குடோன்லயே இருந்துருக்கலாம்ன்ற கதையா மறுபடியும் அவருதான் காசுருந்தா குடுனு புடுங்கிக்க போறாரு.” என்று புலம்பியபடியே ஐம்பது ரூபாயை வாங்கி பைக்குள் போட்டாள்.
“இங்க பாரு மா. ஏதாவதுனா அப்பாவுக்கு ஃபோன் பண்ணு…” என்று குமாரவேலன் அதே பல்லவியை மறுபடியும் தொடங்க,
“ஹே தமிழ்செல்வி ஏன் ஒருவாரமா காலேஜ்க்கு வரல.” என்றபடி அவள் பக்கத்தில் வந்து நின்ற முகில் அவளுக்கு காக்கும் தெய்வமாகவேக் காட்சியளித்தாள்.
“உடம்பு சரியில்ல முகில்.”
“அச்சோ என்னாச்சு. இப்ப பரவால்லயா.” என்று முகில் வினவ,
“வைரல் பீவர் மாறி வந்துருச்சு முகில். இப்போ நல்லாருக்கேன்.” என்றாலும் தமிழ்செல்வியின் குரல் களைப்பாகவே ஒலித்தது.
“டாக்டர்ட்ட போனியா. ஊசி போட்டியா? மாத்திரை சாப்ட்டியா?” என்று வினவினாள் முகில்.
“ம்ம். மூனு நாள் தொடர்ந்து ஊசி போட்டேன். மாத்திரை ஒரு செட் பேக்ல வச்சுருக்கேன்.” என்றாள் தமிழ்செல்வி.
“ம்ம் சரி. ஆமா லீவ் போட்டியே உன் க்ளாஸ் மென்டருக்கு இன்பார்ம் பண்ணியா?”, முகில்.
“இல்ல.”
“சரி போனவோடனே லீவ் ஃபார்ம் ஃபில் பண்ணி குடுத்துரு.” என்ற முகிலுக்கு,
“அத வேற பில் பண்ணி குடுக்கணுமா. முன்னாடியே இன்பார்ம் பண்ணாததுக்கு என்ன சொல்வாங்களோ?” என்று உள்ளுக்குள் புலம்பிப் பயந்தாலும் வெளியேத் தலையை மட்டும் ஆட்டினாள்.
மெல்ல மெல்ல ஏறிக் கொண்டிருந்த வெயிலால் அவளுக்கு மயக்கம் வரும் போல் இருந்தது. காய்ச்சல் கண்ட உடம்பாதலால் ஊன்றி நிற்க முடியாமல் கால் நடுங்கிற்று. எங்கே விழுந்துவிடுவோமோ என்று நின்று கொண்டிருந்தவளை முகிலின் தொடர் கேள்விகள் வேறு அயர்ச்சி அடையச் செய்தன.
“ம்மா. கொஞ்சம் தமிழ பார்த்துக்க மா. ஒரு வாரமா உடம்பு முடில. காலேஜ்ல அப்பப்ப அத கவனிச்சுக்க மா.” என்று குமாரவேலன் முகிலிடம் விண்ணப்பம் வைத்துக் கொண்டிருக்க,
“நா பார்த்துக்கறேன் ப்பா. நீங்க கவலைப்படாதீங்க.” என்று முகில் நம்பிக்கைத் தர,
“சரி மா. ஆமா மா அப்பா என்ன பண்றாங்க? சொந்த ஊரே திருவானைக்கோவில் தானா?” என்று குமாரவேலன் வினா தொடுக்க, முகில் அதற்கு விடையளிக்க,
“அப்பாடா. பஸ் வர்ற வரையும் நிம்மதியா இருக்கலாம்.” என்று பெருமூச்சுவிட்ட தமிழ்செல்வி வெயிலிலிருந்துத் தப்பிக்கத் துப்பட்டாவால் அரைமுகத்தை மறைத்தபடி பேருந்து வரும் வழியைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஐந்து நிமிடத்தில் பேருந்தும் வந்துவிட, மீண்டும் அதே அறிவுரை, அறிவுறுத்தலைக் கேட்டு தலையை நன்கு ஆட்டிவிட்டு தமிழ்செல்வி முன்னால் பேருந்தில் ஏற, பின்னே முகிலும் ஏறினாள். ஏறியதும் படிகளுக்கு எதிரேயிருந்த இருக்கையில் தமிழ்செல்வி அமர்ந்துவிட, முகில் அதற்கு பின்னிருக்கையில் அமர்ந்திருந்த பெண்ணோடு பேசியபடி அமர்ந்தாள். ஒரு வாரம் தான் வராத இடைவெளியில் கிடைத்த புதிய தோழி போலும் என்றெண்ணிய தமிழ்செல்வி இருவரையும் சில நிமிடங்கள் பார்த்துவிட்டு திரும்பி அமர்ந்துக் கொண்டாள். அவள் மனதில் சிறிதாய் பொறாமை எட்டிப் பார்த்தது.
ஆம் முகில் தான் அந்த புதியக் கல்லூரியில் அவளுக்குக் கிடைத்த முதல் தோழி. முகில் தேர்ந்தெடுத்திருப்பது கணினி பொறியியல். கல்லூரியின் தொடக்கவிழா அன்று தான் அவளைப் பார்த்தாள். பார்த்ததும் தோழமையான உணர்வுத் தோன்றிற்று. ஒரே பேருந்து நிறுத்தம் வேறு அவளை இயல்பாக தோழியாக ஏற்க வைத்தது. கல்லூரி திறந்து இரண்டு வாரங்களே ஆகியிருந்தது. அதில் ஒரு வாரம் தமிழுக்கு உடம்பு முடியாமல் விடுமுறை எடுக்கும்படியானது.
புள்ளைக்கு உடம்புக்கு ஒன்னுமில்லங்க. அதுக்கு தொல்லியல் படிக்கணுனு ஆசை அத வீட்ல வாயத் தொறந்துக்கூட சொல்ல முடியாது. ஏன்னா அம்புட்டு ஸ்ட்ரிக்ட் அவ அப்பா. சரி அடுத்து புடிச்ச அறிவியல் சம்மந்தமா எதாவது படிப்போம்னு தாவரவியல் இல்லனா விலங்கியல் படிக்கிறேன்னு வீட்ல சொல்ல, படிச்சா இன்ஞ்சினியரிங் தான் படிக்கணும்னு நினைக்கிற குடும்பத்துல பொறந்ததுனால சயின்ஸ் சம்மந்தமா உயிரிதொழில்நுட்பம் இருக்குற காலேஜ் எதுனு தேடுனதுல அவங்க வீட்லேர்ந்து ஒன்றரை மணி நேர பயணத்துல இருக்குற காலேஜ்ல இருக்குறது தெரிஞ்சு அங்க சேர்த்து விட்டாங்க. சேர்ந்ததுக்கு அப்றம் தான் அப்படி ஒரு துறை இருக்குறதும் படிப்பிருக்குறதும் தமிழுக்கு தெரியும். அதுதான் புள்ளைக்கு கடுப்பு, லாங் ட்ராவல் பண்ணாத புள்ள ஒரு வாரமா தூரம் போகவும் அலுப்புல வந்த காய்ச்சலோட மன உளைச்சலும் சேர்ந்து படுத்தியெடுத்துருச்சு. சயின்ஸ் சம்மந்தமா படிக்கணுனு நினைச்சது ஒரு குத்தமாயானு நொந்தபடி காலேஜ் போகுது தமிழ்செல்வி. அவ்ளோ தான் தமிழ பத்தின அறிமுகப்படலம்.
ஏனோ முகில் மற்றொரு பெண்ணுடன் இணக்கமாகியது அவளுக்கு பொறாமையளித்தது என்பதைவிட ஏக்கத்தைத் தந்தது. ஏனெனில் அவள் எளிதாக யாரிடமும் பழகும் சுபாவம் கொண்டவளல்ல. கூச்சமும் பயமும் அதிகம். அதுவும் முகில் பேசிய பெண் கலகலவென்று பேசிக் கொண்டு வந்தது, தானும் அவளுடன் நட்பானால் என்ன என்று எண்ண வைத்தாலும் அவளின் கூச்சம் அவளை அதற்கான அடி எடுத்து வைக்க விடாமல் அணைப்போட்டது. அதோடு தமிழுக்கு தான் அழிகில்லையென்ற தாழ்வுணர்வு அதிகம் அதனாலும் யாருடனும் அதிகம் பழகமாட்டாள். ஏனெனில் பள்ளி நாட்களில் அவள் சந்தித்த கேலிகளும் கிண்டல்களும் அவமானங்களும் அவளை கூட்டுக்குள் ஒடுங்கியிருக்க வைத்துவிட்டது. தமிழ் பக்கா கிராமத்து பெண். முகில் நம் பக்கத்து விட்டு எதிர்த்தவீட்டு பெண் போல் இருப்பதனால் தயக்கமின்றி அவளிடம் பழகிவிட்டாள். ஆனால் முகிலிடம் உறையாடும் பெண்ணோ அழகாகயிருந்தாள். அதுவே அவள் நம்மிடம் பேசுவாளா என்று தமிழுக்கு தயக்கத்தைத் தந்திருந்தது.
தமிழ் அவர்களை திரும்பிப் பார்க்காவிட்டாலும் பேச்சை காதில் வாங்கிக் கொண்டு தான் அமர்ந்திருந்தாள்.
“தமிழ்செல்வி” என்று பின்னிருந்து வந்தக் குரல் யாருடையதென்று அறிந்தவள் தயங்கிக் கொண்டேத் திரும்பினாள்.
“ஏன் ஒருவாரமா வரல?” என்று கேட்கவும்,
“பீவர் அதான் வரல.” என்றாள்.
தமிழின் முகத்தில் முகாமிட்டிருந்த தயக்கமும் கேள்வியும் புரிந்துக் கொண்ட முகில்,
“தமிழ் இது நிலா.” என்று புதியத் தோழியை அறிமுகம் செய்வித்தாள்.
“நா தமிழ்செல்வி.” என்று சிநேகமாகப் புன்னகைத்தாள்.
“தெரியும் முகில் சொன்னா.” என்று நிலாவும் புன்னகைத்தாள்.
“எந்த டிபார்ட்மெண்ட்?” என்று தமிழ் வினவ,
“ஐடி. நீ எந்த டிபார்ட்மெண்ட்?” என்று நிலாவும் வினவினாள்.
“ஓஓ… நா பயோடெக்.”
“தமிழ். நிலா இன்ஞ்சினியரிங் நம்ம காலேஜ் இல்ல.” என்று முகில் கூற, நிலா புன்னகைக்க, தமிழ் “ஓஓஓ” என்றாள்.
ஒரே கல்லூரி வளாகத்திற்குள் இரு கல்லூரிகள் இருந்தன. அதில் ஒன்றிற்கு ×××× பொறியியல் கல்லூரி என்றும் இன்னொன்றிற்கு ×××× பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி என்றும் பெயர். நிலா பொறியியலிலும் தமிழும் முகிலும் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியிலும் பயிலுகின்றனர். இரு கல்லூரிகளும் பத்தாண்டுகளாக செயல்பட்டுக் கொண்டிருந்தாலும் நிலாவின் கல்லூரியில் மட்டும் தனி பல்கலைக்கழக அந்தஸ்து வாங்குவதற்காக ஆண், பெண் இருபாலரும் பேசிக் கொள்ளலாம், கைப்பேசி உபயோகிக்கலாம், ஆண்கள் வாரத்தில் ஒருநாள் வெள்ளிக்கிழமை மட்டும் ஜீன்ஸ் அணியலாம், போன்ற சிலத் தளர்வுகள் இருந்தன. தமிழும் முகிலும் பயிலும் கல்லூரியில் இந்தத் தளர்வுகள் இல்லை. ஆண், பெண் பேசிக் கொண்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொடக்க விழாவின் போதே கூறப்பட்டிருந்ததால் இருவரும் ஆண்கள் பக்கம் திரும்புவதேயில்லை.
“நா உன்னை ஒரு வாரமா பார்த்தேன். ஏன் நீ முகில தவிர யாரோடையும் பேசுறதில்லை? ரொம்ப அமைதியா இருக்க?” என்று நிலாவின் வினாவிற்கு,
“என்ன இவ நம்மள ஒருவாரம் கவனிச்சுருக்கா. ஆனா நாம இவள பார்க்கவேயில்ல. அதுசரி நமக்குதான் கவலைப்படவே நேரம் சரியாயிருக்கே. ஆட்டிட்யூட் காமிப்பானு நினைச்சேன் ஆனா இவ அப்டியில்ல நல்லா பேசுறா, பழகுறா.” என்று உள்ளுக்குள் ஆச்சர்யப்பட்டாலும் வெளியே மெல்லிய புன்னகை சிந்திய தமிழ்,
“டக்குனு எனக்கு யாரோடையும் பழக வராது. ஆனா பழகிட்டனா நல்லா பேசுவேன்.” என்றாள்.
“அப்போ நாம இன்னிலேர்ந்து ப்ரண்ட்ஸ்.” என்று நிலா கைநீட்ட, தமிழ் மென்னகையோடு கைக் கொடுக்கையில் அவளும் அறிந்திருக்கவில்லை நிலாவும் அறிந்திருக்கவில்லை ஏன் அவர்களை அறிமுகம் செய்து வைத்த முகிலும் அறியவில்லை இருவரும் நெருங்கியத் தோழிகளாக மாறப் போகிறார்களென்று. முகிலும் அவர்கள் கரத்தோடு தன் கரம் சேரக்க, மூவரது விழிகளும் சந்தித்து இதழ்களில் புன்னகையைத் துளிர்க்கச் செய்தது.
பேருந்து மார்க்கெட் நிறுத்தத்தில் நிற்க, அங்கு தென்றலும் துளசியும் ஏறினர். துளசி முகிலின் வகுப்பு தான் ஆதலால் தமிழுக்கு முன்பே அறிமுகமாகயிருந்தாள். தென்றல் இசிஇ அதாவது மின்னணு தகவல் தொடர்பு பொறியியல் துறையைச் சார்ந்தவள். தென்றலும் துளசியின் நிறுத்தம் என்பதாலும் இருவரும் பள்ளியிலிருந்தே தோழிகள் என்பதாலும் தமிழுக்கும் தென்றல் துளசியின் தோழியாய் அறிமுகமாகியிருந்தாள். தென்றலும் துளசியும் தமிழின் நலன் விசாரிக்க, அவர்களுக்கும் பதிலுரைத்தாள் தமிழ். பின் ஐவரிடையே பேச்சு கல்லூரி தாண்டி அவர்களின் குடும்பம், பயின்ற பள்ளி பற்றி பயணப்பட, பேருந்து மார்க்கெட்டைத் தாண்டி பைபாஸில் பயணப்படத் துவங்கியது.
பின் பேச்சு மீண்டும் கல்லூரி பற்றி வர, தமிழ் களைப்பாக உணர்ந்ததால் சிறிது நேரம் உறங்குகிறேன் என்று ஜன்னல் கண்ணாடியில் தலைசாய்த்துக் கண்மூட, பின்னிருந்து பெரிய சத்தம். திடுக்கிட்டெழுந்து தமிழ் திரும்பிப் பார்க்க, பேருந்தே பின்னால் தான் பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்து தமிழும் என்னவென்று எக்கிப் பார்த்தவள் விழி விரித்தாள்.
“ஹீரோ இன்ட்ரோவோனு அங்க பார்க்குறது இருக்கட்டும் இங்க பாருங்க. எங்க கதைல ஹீரோ, ஹீரோயின் யாரும் கிடையாது. ஆனா கல்லூரில வர்ற நட்பு, காதல்னு எல்லாம் இருக்கும். எங்கள்ல ஒருத்தர்ல நீங்க கல்லூரி நாட்கள்ல இருந்த உங்கள பார்க்கலாம். அங்க என்ன ஏதுனு அடுத்த எபிலதான் சொல்வாங்க. அவ்ளோ தான்ங்க இப்ப நீங்களும் என்ன அங்க சத்தம்னு பாருங்க.”
“ஏம்மா தமிழு. எல்லாம் சொன்ன ஆனா லுக் மட்டும் பின்னாடியே இருக்கே.”
“அதான் தெரியுதுல அப்புறம் என்ன கேள்வி. கரடி.”, தமிழ்.
“எது கரடியா?! தேவைதான் எனக்கு.”
தமிழ் மட்டுமல்ல, முகில், தென்றல், துளசி, நிலா அனைவரும் பின்னே தான் விழி விரித்தப் பார்த்துக் கொண்டிருந்தனர். நிலாவின் இதழ்களில் மட்டும் மெல்லியக் கீற்றாய்ப் புன்னகை ஓடியபடியிருந்தது.