Loading

மதுரகவி – 04

பணி முடிந்து தன்னுடைய இருசக்கர வாகனத்தில் வீடு நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தவனுடனே கரிய மேகங்களுக்கிடையே நிலவும் பின்தொடர, அவன் மனதினுள் இன்னமும் நிலானி தான் ஆக்கிரமித்திருந்தாள்.

புகைப்படத்தில் பார்த்தபோது உண்டாகி இருந்த ஈர்ப்பு தற்போது பிடித்தம் என்ற நிலைக்குத் தாவியிருந்தது.

இதனைக் காதல் என்ற வரையறைக்குள் அடைத்துவிட அவனின் வயதும் பக்குவமும் இடங்கொடுத்திடவில்லை. ஆனால் அவளைப் பிடித்திருக்கிறது என்று மட்டும் மனம் கூப்பாடு போட்டது. அவளை உன் வாழ்வில் இழந்துவிடாதே என கத்துவதுப் போல் தோன்றியது.

அவளின் நினைவுகளுடனே வீடு வந்து சேர்ந்தவன், போர்டிகோவில் வழக்கமாய் தான் வண்டி நிறுத்தும் இடத்தில் நிறுத்தியவனின் பார்வை அருகே வீற்றிருந்த தன் தந்தையின் காரின் மீது படிந்தது.

“இன்னிக்கு சீக்கிரமா அப்பா வந்துட்டாரு போல” என முணுமுணுத்தவாறே வீட்டினுள் நுழைந்தான். அவனின் வண்டி சப்தம் கேட்டு ஷோபாவில் அமர்ந்திருந்தவாறே வாயிலை எட்டிப் பார்த்திருந்த மருதமுத்துவின் பார்வையோ, அவனின் வருகையை எதிர்பார்த்தே அமர்ந்திருப்பது போல் தோன்றியது.

“ஹாய் ப்பா, என்ன சீக்கிரம் வந்துட்டீங்க போல!” என்றான் சற்றே ஆச்சரியமாய். வழக்கமாய் அவர் கம்பெனியில் வேலை முடிந்ததும் ஒன்பது மணிக்கு அவரே உடன் இருந்து கம்பெனியை மூடிவிட்டு வருவார். அதனாலயே தனக்கு முன்னான அவரின் வரவு ஆச்சரியத்தை அளித்தது.

இருபதுபேர் பக்கம் வேலை செய்தாலும் அவரது கண்பார்வையிலேயே தான் வேலைகள் நடக்கும். பணிநேரம் முடிந்து ஓவர் டைம் பார்ப்பவர்களும் உண்டு என்பதால் இரவு ஒன்பது, ஒன்பதரை ஆகிவிடும் கடையை மூட.

“இன்னிக்கு சாயந்திரம் தான் லோடு ஏத்துனோம் மதுரகவி. எல்லாரும் அப்பவே கிளம்பிட்டாங்க. தனியா அங்க நான் மட்டும் என்ன செய்ய, அதான் கிளம்பி வந்துட்டேன்” என்றார்.

தனது பெயரை முழுதாய் அழைப்பவரை புன்னகையோடு ஏறிட்டான். தமிழின் மீது கொண்ட பற்றால் தன் மகனுக்கு மதுரகவி என்று பெயர் வைத்திட, அவன் செல்லும் இடங்களில் எல்லாம் தனித்து அழைக்கப்படுவான். அவனது அம்மாவிற்கு ‘கண்ணா’. நெருங்கிய வட்டத்திற்கு, ‘கவி’. அவனது வகுப்புத் தோழிகளுக்கு, ‘மது’. ஆனால் அவனது தந்தைக்கு மட்டும் எப்பவுமே மதுரகவி தான். அவனுக்குமே முழுப்பெயராய் அழைப்பது பிடித்தம் என்பதால் தனது தந்தையின் அழைப்பை புன்னகையோடு ஏற்றுக் கொள்வான்.

“பத்தே நிமிஷத்துல குளியல் போட்டுட்டு வந்தறேன் ப்பா” என்றவாறே மாடிப்படிகளில் இரண்டு இரண்டு படிகளாய் தாவி ஏறினான்.

சொன்னபடியே பத்தே நிமிடத்தில் அவன் கீழிறங்கிவர, தன் கணவனிடம் மகனை கண்களால் ஜாடைக் காட்டிய கல்யாணி சமையலறைக்குள் நுழைந்துக் கொண்டார்.

அதனைக் கவனித்தும் கவனியாதது போல் தன் தந்தையின் அருகே ஷோபாவில் அமர்ந்துக் கொண்டவன் ரிமோட்டை எடுத்து தொலைக்காட்சியில் சேனலை மாற்றிக் கொண்டிருக்க, “பொண்ணு போட்டோ அனுப்பி இருந்தனே மதுரகவி. பார்த்தியா பா, பிடிச்சிருக்கா?” என்றார் மருதமுத்து.

தான் இன்னும் பார்க்கவில்லை என்பதை இந்நேரம் வாட்ஸ்அப்பில் ப்ளூ டிக் காட்டப்படாததிலே அவருக்கு பதில் தெரிந்திருந்தும் தன்னிடம் கேட்கிறார் என நினைத்தவன், “இன்னும் இல்ல ப்பா. இன்னிக்கு கேஸ் அதிகமா வந்ததால போட்டோ விசயம் மறந்துருச்சுங்க ப்பா” என்றான்.

அவனின் பதிலுக்காக சமையலறை வாசலிலே நின்றிருந்த கல்யாணியோ, “காலைல கூட அவன்கிட்ட கேட்டேங்க. இப்படியே தான் சாக்கு சொன்னான்” என்றிட,

“அதான் நான் கேட்டுட்டு இருக்கேன்ல கல்யாணி” என்ற கணவரின் வார்த்தைகளில் அவர் அமைதியாகிட, தன் மகனை நோக்கினார்.

“சரி, பரவாயில்லை மதுரகவி. சாப்பிட்டுட்டு போட்டோவ பாரு. விசாரிச்ச வரைக்கும் இந்த சம்பந்தம் நல்ல படியா அமையும்னு தோணுது. அவங்க பக்கமும் எல்லாம் ஓகேங்கிற மாதிரி சொன்னாங்க. உன்னோட பதிலுக்காக தான் காத்திருக்காங்க” என்றார் மருதமுத்து.

“ஒரு போட்டோவ பார்க்க எதுங்க காத்திருக்கணும், ஒத்த நிமிஷம் போதாதா! நீங்க என்னடான்னா சாகவாசமா பார்க்க சொல்றீங்க” என குறைபட்டார் கல்யாணி. மகன் இன்னும் இழுத்தடிக்கிறானே என்ற வருத்தத்தோடு கூடவே நிலானியின் வரன் பற்றி மகன் தன்னிடம் தூண்டி துருவிக் கேட்டவன் இந்த வரனைப் பற்றி இதுவரை ஒற்றை வார்த்தை கூட விசாரிக்காமல் இருப்பதில் மகனின் மேல் சிறு கோபமும் எழுந்திருந்தது.

“ப்ச், இதென்ன விளையாட்டு காரியமா கல்யாணி. ஒத்த நிமிஷத்துல தன் வாழ்க்கை துணைய தேர்ந்தெடுக்க சொல்றது எவ்வளவு பெரிய அபத்தம்! அவனுக்கும் யோசிக்க நம்ம டைம் கொடுக்கணும்” என்றவரின் பார்வை மனைவியின் மேல் கண்டனத்துடன் பதிந்தது.

“இதுல யோசிக்க என்ன இருக்குங்க? நல்ல இடம், பொண்ணும் பார்க்க லட்சணமா இருக்கா. அதுவும் இல்லாம அவங்க மகளுக்கு…” என மேற்கொண்டு பேச முயன்றவரை மதுரகவியின் வார்த்தைகள் தடுத்தது.

“அம்மா, ப்ளீஸ்” என்றவன், ஏற்கெனவே நிலானி தன் குடும்ப நிலையை காரணம் காட்டி மறுத்திருக்க, தன் அன்னையும் மீண்டும் அவர்கள் செய்யவிருப்பதாக கூறிய நகை, சீர் பற்றி பேச ஆரம்பிக்கும் போதே மனதில் வெறுப்பு மூண்டது.

“இப்போ அவங்க செய்யறதா சொன்ன நகையும் சீரும் தான் உங்களுக்கு பெருசா தெரியுது. என் வாழ்க்கைய பற்றிய கவலை இல்ல, அப்படிதான ம்மா!” என்றவனை கலக்கத்தோடு பார்த்தார் கல்யாணி.

“என்ன கண்ணா இப்படி சொல்லிட்ட! உன் வாழ்க்கைய விட எங்களுக்கு வேறென்ன பெருசா வேண்டிக் கெடக்கு. அது அவங்க செய்றதா சொன்னத மட்டும் தான் யா சொன்னேன். மத்தபடி…” என அவரால் மேற்கொண்டு பேச முடியாமல் நா தழுதழுக்க, தன் அன்னையின் நிலை உணர்ந்தவனுக்கும் மனதில் கனமேறியது.

அவரைக் காயப்படுத்தும் நோக்கில் அவன் பேசவில்லை என்றாலும் அவனின் வார்த்தைகள் அவரைக் கட்டாயம் காயப்படுத்தும் என்று உணர்ந்திருந்தான் தான்.

தன் மனைவியில் வார்த்தைகளில் மருதுமுத்துவின் முகமோ கோபத்தை அப்பட்டமாய் காட்டியது.

அவரின் கோப முகம் கண்டு, “அதுவந்து அவன் வாழ்க்கை நல்லா இருக்கும்னு தான்…” என மெலிதாக உரைத்தார்.

“நம்மகிட்ட இல்லாத வசதியா கல்யாணி! வரப்போற மருமக கொண்டு வந்து தான் நம்ம குடும்பம் வாழ வேண்டிய சூழ்நிலைல தான் உன்னை நான் வச்சுருக்கனா!” என்றவரின் வார்த்தைகளில் கடினத்தன்மை கூடியிருந்தது.

தன் குடும்பத்திற்காகத் தானே இன்றளவும் அவர் வேலையின் பின்னே ஓடிக் கொண்டிருக்கிறார்.

தான் சொல்லவந்ததை கணவரும், மகனும் தவறாய் புரிந்துக் கொண்டதை உணர்ந்தவருக்கு தன் மனதை விளக்கிட வார்த்தைகள் வெளிவராமல் போக, “நான் அந்த அர்த்தத்தில சொல்லலங்க…” திக்கித்திணறினார்.

அதன்பின் பேச நினைத்தாலும் கணவரின் பார்வைக்குப் பயந்து அமைதியானார் கல்யாணி. இதுவரை பெற்றோருக்கு நடுவே பார்வையாளனாய் இருந்தவன் இதற்கு தான் ஒரு முடிவு எடுத்தாக வேண்டும் என நினைத்தவாறே,

“எனக்கு யோசிக்க டைம் வேணும் ப்பா. ஒரு வாரம்…” என அவன் தந்தையை பார்க்க அவரும் தாடையில் கை வைத்து யோசித்தவாறே, “பொண்ணு வீட்டு சைடுல நான் பேசிக்கிறேன் மதுரகவி” என்றார்.

இரவுணவு அமைதியாய் நகர்ந்திட, கை கழுவியவாறே, “உமா எப்போ மா அவ வீட்டுக்கு போனா?” என்றான் கல்யாணியிடம்.

“நான் நகை, பணத்துக்காக தான் அந்த பொண்ண ஏத்துக்க சொன்னேன்னு நீயும் நினைக்கிறியா கண்ணா?” என்றவரின் குரல் உடைந்திருந்தது.

பெருமூச்சொன்றை இழுத்து விட்டவன் துவாலையில் கைகளை துடைத்துக் கொண்டே, “நான் அப்படி நினைக்கல ம்மா. ஆனாலும் எனக்கு இதுல விருப்பம் இல்ல” என்றவன், “அசதியா இருக்கு. படுக்கப் போறேன் ம்மா” என வேகமாய் மாடி ஏறினான்.

சமையலறையில் தன் வேலைகளை முடித்துக் கொண்டவர் கீழேயே இருக்கும் தங்கள் அறையினுள் நுழைந்தார் கல்யாணி.

மருதமுத்து கணக்கு வழக்கு நோட்டினுள் தலையை புகுத்திருக்க அமைதியாய் அவரருகே சென்று கட்டிலில் அமர்ந்துக் கொண்டவர், “அவனுக்கும் தனியா ஹாஸ்பிட்டல் கட்டணும்னு ஆசை இருக்குல்லங்க. அதான் இந்த சம்பந்தம் தணிச்சு வந்தா நாளபின்ன அவன் வளர்ச்சிக்கு அவங்க வீட்டு பக்கம் இருந்தும் உதவி கிடைக்குமேனு தான்…” என்றவரை நிமிர்ந்துப் பார்த்தார் மருதமுத்து.

“உங்கனால முடியாதுன்னு நினைச்சு இப்படி பேசலங்க. என்னதான் நம்ம வசதியா இருந்தாலும் ஹாஸ்பிட்டல் கட்ட அதிக பணம் தேவைப்படுமே. அவனோட கனவே அது தானங்க! அதான் நான்…” என தன்னிலை விளக்கம் கொடுக்க முற்பட,

அவனைப் புரிந்துக் கொண்டது அவ்வளவு தானா! என்ற ரீதியில் தன் மனையாளை நோக்கினார் மருதமுத்து.

அவர் இன்னும் அமைதியாய் இருந்திட கல்யாணிக்கோ இன்னுமே பதட்டம் அதிகரித்தது. “நான் தப்பா ஏதும்…” என்றவரை மேற்கொண்டு பேச விடாமல் கைநீட்டி தடுத்தார்.

“இன்னுமே நீ அவன புரிஞ்சுக்கலயா கல்யாணி? அவன் அவனோட சொந்த உழைப்பால முன்னேறி வரணும்னு எதிர்பார்க்கிறவன். உடனே நம்மனால ஹாஸ்பிட்டல் கட்ட முடியாது தான். ஆனா சின்னதா கிளீனிக் கட்ட வசதி இல்லாம இருந்திடலயே! இப்பலாம் எம்பிபிஎஸ் முடிச்சவங்களே தனியா கிளீனிக் ஆரம்பிச்சறாங்க. ஆனா, எம்எஸ் முடிச்சிட்டும் அவன் ஹாஸ்பிட்டலுக்கு வேலைக்கு போறான். அது ஏன்னு யோசிக்க மாட்டியா?

நானே கிளீனிக் வைக்க ஏற்பாடு பண்றேனு சொல்லியுமே வேண்டாம்னு தடுத்திட்டான். ஆனா, நீ வரப் போற மருமக அதக் கொண்டு வருவா, இதக் கொண்டு வருவானு சொன்னா அவனுக்கு எப்படி இருக்கும்?” என்றவரை பார்த்த கல்யாணிக்கு தன் தவறு புரிபட்டாலும் தன் மகனை இன்னுமும் தான் புரிந்துக் கொள்ளவில்லையோ என்ற குற்றவுணர்வும் உடன் எழுந்தது.

அதனை உணர்ந்தார் போல், “அவனுக்கு பொண்ணு பார்க்கிறதுக்கு முன்னாடி அவனுக்கு என்ன மாதிரியான பொண்ணு வேணுமுன்னு கேட்டுட்டு பாரு கல்யாணி. நானுமே இந்த சம்பந்தத்துக்கு சரினு சொன்னது பொண்ணு நல்ல மாதிரிங்கிறதால தான். மத்தபடி அவங்க கொடுக்கிறதா சொன்ன வரதட்சணைகாக இல்ல. ஆனா இனியும் இது சரிபட்டு வரும்னு தோணல” என்றவர் அத்தோடு பேச்சு முடிந்ததாய் மீண்டும் கணக்கு வழக்கு நோட்டினுள் தலையைப் புகுத்திக் கொள்ள கல்யாணியோ அமைதியாய் அமர்ந்திருந்தார்.

விட்டத்தைப் பார்த்தவாறே படுத்திருந்தவனின் மனமோ குழம்பிக் கிடந்தது. நிலானி அவள் முடிவில் உறுதியாய் இருப்பது புரிந்தாலும் அவனின் மனமோ அவளையே நினைக்க, அடுத்து என்ன செய்வது எனப் புரிபடாமல் படுத்திருந்தான்.

அவனின் அலைப்பேசி சிணுங்கலில் தன் குழப்பங்களை ஒத்தி வைத்துவிட்டு அதனை எடுத்துப் பார்த்தவன், திரையில் தெரிந்த பெயரைக் கண்டு இதழ்களில் புன்னகை விரிய அழைப்பை ஏற்று, “என்ன மாம்ஸ் பூஜை நேரத்துல எனக்கு கால் பண்றீங்க?” என்றான் கேலி இழையோட.

“டேய், டேய் பார்த்துப் பேசு டா. நான் உன் மாமன் டா” என மறுமுனையில் இருந்தவன் அலற, “மாமன்ங்கிறதால தான் இப்படி கேட்கிறேன் மாம்ஸ்” என்றவனின் குரலில் ஏகத்திற்கும் நக்கல் வழிந்தோடியது.

“அடேய், அக்காவும் தம்பியுமா சேர்ந்து என்னை ஏன்டா படுத்தி எடுக்குறீங்க! சிலநேரம் அவளக் கட்டிருக்கனா இல்ல உன்னை கட்டிருக்கனானே சந்தேகம் வந்திருது டா” என அலுத்துக் கொண்டவனை, “மாம்ஸ் பக்கத்துல யாரும் இல்லயே, அப்புறம் என்னை தப்பா நினைச்சுறப் போறாங்க! நான் வேற இன்னும் கன்னிப் பையனாவே இருக்கேன் மாம்ஸ். இந்த விசயம்லாம் கேள்விப்பட்டா யாரும் எனக்கு பொண்ணு கொடுக்க மாட்டாங்க” என்றான் சீரியஸ்ஸாக.

“டேய்” என பற்கள் அரைபடும் சப்தத்தோடு அவன் தலையில் அடித்துக்கொள்ளும் பாவனையையும் மனதினுள் ஓட்டிப் பார்த்தவன், “ப்ச், மாம்ஸ். இருந்தாலும் என் டேஸ்ட்க்கு நீங்கலாம் வொர்த் இல்ல” என்க, மறுமுனையில் இருந்தவனோ உச்சஸ்தாணியில் கத்தி இருந்தான்.

“ஏன்டா, ஏன்… உனக்கும் உன் அக்காளுக்கும் என்ன பாவம் டா நான் பண்ணேன். அவ என்னடான்னா மைனா படத்துல வர்ற போலீஸ்காரர் பொண்டாட்டி மாதிரியே ஒரே கேள்வியவே திருப்பித் திருப்பிக் கேட்கிறா. நீ ஒருபக்கம்… முடியல டா சாமி. உங்க ரெண்டு பேரையும் டிவோர்ஸ் பண்ணிட்டு நான் காசி, ராமேஸ்வரம்னு நிம்மதிய தேடிப் போக போறேன்” என்றிட, அப்பொழுது தான் தன் மகளை மாமியாருடன் படுக்க வைத்துவிட்டு தங்களின் அறைக்குள் நுழைந்த உமையாளின் காதில் தன் கணவனின் சாமியார் பயணம் பற்றிய பேச்சு விழுந்தது.

“ஓ… எத்தன நாள் பிளான் இது!” என தன்னருகே ஒலித்த குரலில் பதறிப் போய் திரும்பினான் அரவிந்த்.

அங்கு உமையாளோ, பத்ரகாளியின் மறுஅவதாரம் தானென நிரூபிக்க முயன்றிருந்தாள். தனது அக்காளின் கோப வார்த்தைகள் அலைப்பேசி வழி கேட்டிட,

“மாம்ஸ் பூஜை ஆரம்பிச்சிருச்சுப் போலயே! நான் எதுக்கு இடைல கரடி மாதிரி. நீங்க பூஜைய கண்டினியூ பண்ணுங்க. ஆல் தி பெஸ்ட் மாம்ஸ்” என கத்தியவாறே அழைப்பைத் துண்டித்திருந்தான்.

ஆனால் இங்கு அரவிந்தின் நிலையோ படுபாதாளத்திற்கு இறங்கி இருந்தது. “என்ன பிளான் மா” என அவன் இதழ்கள் தந்தியடிக்க, மனமோ, ‘ஊருக்குள்ள அவன்அவன் தப்பு பண்ண நினைச்சாலே என்னை நினைச்சு உச்சா போய்ருவானுங்க. ஆனா இங்க, கடவுளே!’ என அவன் ஆண்டவனைத் துணைக்கு அழைக்க, அவரோ தான் தற்போது பிஸியாக இருப்பதாக கழண்டுக் கொண்டார்.

“அதான் சார் டிவோர்ஸ் பண்றதா சொல்லிட்டு இருந்தீங்களே, எத்தன நாள் பிளான் இது! அதான் நான் அம்மா வீட்டுக்கு போனா ‘போனா போடி’னு விட்றதா! எங்க என் சக்காளத்தி? இனிதான் தேடப் போறீங்களா, இல்ல ஏற்கெனவே இருக்காளா?” என்றவாறே புடவையை இடுப்பில் தூக்கிச் சொருக, சாஷ்டாங்கமாய் காலில் விழுந்திருந்தான் அரவிந்த்.

அதன்பின் கெஞ்சலும் கொஞ்சலும் தொடர்ந்திட ஒருவழியாய் அவளை சமாதானப்படுத்தி இருந்தான். அவனது நெஞ்சத்தில் தலைசாய்த்து ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவளின் கேசத்தை வருடிவிட்டான் அரவிந்த். சற்றுமுன் அவள் ஆடிய ஆட்டமென்ன! தற்போது குழந்தையை போல் உறங்குபவளைக் கண்டு அவளது நெற்றியில் தனது இதழ்களைப் பதித்திட அதில் சற்று சிணுங்கியவாறே மேலும் அவனுள் புதைந்துக் கொண்டாள் உமையாள்.

வீட்டினர் பார்த்து முடித்து வைத்த திருமணம் தான். ஆனால் கடந்த ஏழு வருடங்களில் அவர்களுக்குள் எவ்வளவுக்கு எவ்வளவு அன்னியோன்யம் வளர்ந்ததோ அதே அளவு சண்டைகளும் வளர்ந்திருந்தது.

C1 காட்டூர் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றவியல் பிரிவில் காவல் ஆய்வாளராக பணிபுரிகிறான். அவனது பணிநேரம் இன்னதென வரையறுக்க முடியாத சூழல். ஆதலால் மனைவியோடோ குடும்பத்தினோடோ அவன் நேரம் செலவழிப்பது என்பது மிக அபூர்வமானது.

அவனின் பணிச்சுமையை அறிந்தவள் தான். ஆனாலும் சிலநேரம் கோபம் எரிமலையாய் வெடித்துச் சிதறிவிடும். கோபித்துக் கொண்டு அம்மா வீட்டிற்குச் சென்று விடுவாள். அவன் இதுவரை அவளை சமாதானப்படுத்தி அழைத்து வந்ததாக சரித்திரத்தில் இடம்பெறவில்லை. அதனை அவளும் எதிர்பார்த்ததாக தெரியவில்லை. அவளாக சென்றது போல் மீண்டும் அவளே திரும்பி வந்துவிடுவாள்.

அதனாலயே மனைவியின் மீது இன்னுமின்னும் காதல் அதிகரித்தது. இடையில் அவளில்லாத ஒருநாள் உறக்கம் காவு வாங்கப்பட்டிருக்க இன்று அவளின் அருகாமையில் அவனைத் தூக்கம் தானாய் தழுவிக் கொண்டது.

_தொடரும்

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்