Loading

“சொல்லு யக்ஷூ?” என்று அவனது கரத்தை அவளது கன்னத்தில் இருந்து நீக்காமல் அப்படியே வைத்திருந்தான் இன்னமும்.

 

“என்னங்க!” என்று தவித்தாள் பெண்ணவள்.

 

கணவனின் இந்தக் காதல் ஸ்பரிசத்தை முதல்முறையாக இப்போது தான் உணர்ந்து கொண்டிருக்கிறாள் யக்ஷித்ரா.

 

“உன்னோட மொபைலில் சார்ஜ் இல்லைன்னு சொன்னியே? அப்போ எப்படி இருந்துச்சு தெரியுமா? அதைக் கவனிக்காமல் இருக்கியே? என்னைத் தவிக்க விட்றியேன்னு கோபம்? அதைவிட உனக்கு ஏதாவது ஆகிருச்சோன்னு உசிரைக் கையில் பிடிச்சிட்டு, பைக்கில் இருந்து விழுந்தேன் பாரு!” என்று விவரித்தவனை, விழியகலாமல் பார்த்தாள் யக்ஷித்ரா.

 

“ப்ளீஸ் ங்க!” என்று உணர்வுகளின் பிடியில் தத்தளித்தாள் அவள்.

 

அதையெல்லாம் உணரும் நிலையில் இல்லாத அற்புதன்,”சொல்லும் மா?” என்று அவளிடம் விண்ணப்பித்து நின்றான்.

 

“அன்னைக்கு உங்களோட பதட்டம் அவ்ளோவா எனக்குத் தெரியலைங்க! சாரி! இனிமேல் கவனமாக இருக்கேன்” என்று முனகினாள் யக்ஷித்ரா.

 

அவளது அவஸ்தையைப் புரிந்தவனாகத் தன் கரத்தை இழுத்துக் கொண்டவன், நெற்றி முத்தம் பதித்து விட்டு, மெத்தையில் சாய்ந்துப் படுத்தான் அற்புதன்.

 

அந்த இதழ் கதகதப்பில், கதையும் மறந்து போயிற்று, தூக்கமும் வருகிற மாதிரி இல்லை யக்ஷித்ராவிற்கு.

 

பெண்ணவளின் கணவனோ, “நேஹாவோட ஹஸ்பண்ட் கிட்ட எனக்குக் காயம் ஆழமாக வரலை. அதனால் பிரச்சினை இல்லைன்னு சொல்லிரு” என்று அவளைத் தன் பிடிக்குள் கொண்டு வந்தான்.

 

ஏற்கனவே மூச்சுத் திணறியவளுக்கு, இந்த அதிரடியான செயலில் நெளிந்தாள் அவனது மனையாள்.

 

அவளை விடுவித்தவன்,”தூங்குமா”

 

குறுஞ்சிரிப்பொலியுடன் அதற்கு மேல், மனைவியை அவஸ்தையில் ஆழ்த்தாமல், கண்ணை மூடி தூக்கத்தை மேற்கொண்டான் அற்புதன்.

 

மனதிலிருந்தப் பாரத்தை இறக்கி வைத்தப் பின்னர், உறக்கம் அதுவாகவே அவளை இழுத்துக் கொண்டது போலும்! 

 

“அவனோட பையை எடுத்துக்கிட்டு வந்துட்டான். நீ ஏன் இன்னும் தலையை வாரி முடிக்காமல் இருக்கிற யக்ஷி? சீக்கிரம் வா” என்று மகன் மற்றும் மருமகளை வேலைக்குக் கிளப்பிக் கொண்டிருந்தார் கீரவாஹினி.

 

“இதோ தலை வாரி முடிச்சிட்டேன் அத்தை” என்று அவரிடம் வந்தாள் யக்ஷித்ரா.

 

அவளது அலுவலக உபகரணங்களையும் எடுத்துக் கொடுத்தவர்,”காலையில் சரியாகச் சாப்பிடலை. மதியமும் அப்படியே பண்ணிட்டு வரக் கூடாது” என்று மிரட்டி அவளிடம் உணவுப் பையைத் தந்தார்.

 

“நீயும் தான்” என மகனுக்கும் மற்றொரு பையை அளித்தார் கீரவாஹினி.

 

“நான் டிராப் பண்ணவா?” என்று மனைவியிடம் வந்தான் அற்புதன்.

 

அவனுக்குப் பதில் சொல்வதற்கு முன் கைக்கடிகாரத்தில் கண்ணைப் பதித்தாள் யக்ஷித்ரா.

 

இன்னும் அலுவலகத்தை அடைய வேண்டிய நேரம் தாராளமாகவே உள்ளது. அரக்கப் பரக்க ஓடத் தேவையில்லை.

 

எனவே, “ம்ம். வர்றேன் ங்க” என்று சம்மதித்தாள்.

 

இந்தப் பரபரப்பில் தான் எங்கனம் இவர்களுக்குப் பேச்சுக் கொடுக்க முடியும் என்று சோஃபாவில் அமர்ந்தவாறு மகனையும், மருமகளையும் கவனித்தார் அகத்தினியன்.

 

“போயிட்டு வர்றோம் ப்பா, ம்மா” என இருவரும் விடைபெற்றுக் கொண்ட பிறகு, உணவு மேஜைக்கருகில் இருந்த இருக்கையில் அமர்ந்த மனையாளிடம்,

 

“ஊரிலிருந்து வந்ததுக்கு அப்பறம், நாம் சம்பந்தி கிட்ட பேசவே இல்லை வாஹி. நீயாவது என்னன்னுக் கேட்டு விசாரி” என்று நினைவு கூர்ந்தார் அகத்தினியன்.

 

அற்புதனோ, பிரத்தியேகமாக எதையும் எதிர்பார்த்து மனைவியைத் தன்னுடன் பயணம் செய்ய அழைத்து வரவில்லை. அன்றைய  நாளின் தாக்கம், இன்று முன்னெச்சரிக்கையாக யோசிக்க வைத்தது அவனை.

 

“இப்படியே டிராப், பிக்கப் தினமும் கிடைக்குமா என்னங்க?” என்று பின்னிருந்து குரல் தந்தாள் யக்ஷித்ரா.

 

அவளும் கணவனுடைய எண்ணத்தை அறிந்து கொண்டாள் போலும்!

 

 “எனக்கு ஓகே!” என்று வாகனத்தின் வேகத்தைக் குறைத்து, திரும்பி அவளைப் பார்த்தான் அற்புதன்.

 

“நான் சும்மா தான் கேட்டேன் ங்க. ஆஃபீஸூக்குப் போங்க” என அவசரப்படுத்தவும், வண்டியைக் கிளப்பினான் கணவன்.

 

அங்கே வாயிலிலேயே நேஹா நிற்கவும், தம்பதிகளைப் பார்த்ததும்,”ஹாய் யக்ஷி, ஹாய் ப்ரோ! எப்படி இருக்கீங்க?” என்று அமரிக்கையாகப் பேசினாள் அற்புதனிடம்.

 

அவனும்,”நல்லா இருக்கேன் ம்மா. உன் ஹஸ்பண்ட் ஸ்ரீஹரி என்னோட ஹெல்த்தைப் பத்திக் கேட்டிருந்தாராம், ஒன்னும் பலமான அடியோ, காயமோ இல்லை. நான் பர்ஃபெக்ட்லி ஆல்ரைட்னு சொல்லிடுங்க” என்றான்.

 

“ஓகே ப்ரோ” எனவும்,

 

“எனக்கு டைம் ஆச்சு. நான் கிளம்பறேன் யக்ஷி” என மனைவியிடம் சொன்னவன், “பை ம்மா”என்று நேஹாவிடம் கூறி விட்டுத் தன் வண்டியை முடுக்கினான் அற்புதன்.

 

“உள்ளே வாங்க மேடம்” எனச் சொல்லித் தோழியை அலுவலகத்திற்குள் அழைத்துச் சென்றாள் நேஹா.

 

இங்கே தன் அலுவலகத்தை அடைந்தவன், மனைவியுடன் பயணம் செய்து வந்ததால், உற்சாகம் பீறிட, புன்னகைத் ததும்பும் முகத்துடன் வேலையைப் பார்த்தான் அற்புதன்.

 

🌸🌸🌸

 

“ஹலோ சம்பந்தி”

 

“ஹலோ வாஹி சம்பந்தி! நல்லா இருக்கீங்களா?” 

 

“ஆங் ! நல்லா இருக்கோம் ங்க. நீங்களும், யாதவியும் சௌக்கியமா?” என்று வினவினார் கீரவாஹினி.

 

“நல்லா சௌக்கியம் தான் சம்பந்தி.யக்ஷியும், மாப்பிள்ளையும்?” என மீனாக் கேட்டவுடனேயே,

 

“கொஞ்சம் முந்தி தான் கிளம்பிப் போனாங்க” என்றார் கீரவாஹினி.

 

“சரிங்க” 

 

“நான் அவசரப்பட்டு உங்ககிட்ட எதையும் கேட்க மாட்டேன் சமபந்தி‌. என் கூட இயல்பாகப் பேசுங்க போதும்!” என்று புரிந்துணர்வுடன் கூறினார்.

 

“யாதவிகிட்டப் பேசுறீங்களா?” என்று கேட்டார் மீனா.

 

“வேண்டாம் சம்பந்தி.காலேஜூக்குப் போகத் தயாராகிட்டு இருப்பாங்கள்ல? இன்னொரு நாள் பேசிக்கிறேன்” என்று அழைப்பை வைத்தார் கீரவாஹினி.

 

🌸🌸🌸

 

“அவர் சொன்னது கேட்ட தான? உன் ஹஸ்பண்ட் கிட்ட சொல்லிடு நேஹா” என்று கூறியவாறு கணினியை ஆராய்ந்தாள் யக்ஷித்ரா.

 

“ஷ்யூர்” எனத் தன்னுடைய வேலையைக் கவனித்தாள் நேஹா.

 

இருவர் ஒரே ப்ராஜெக்ட்டில் இணைந்து உள்ளதால், பேச நிறைய வாய்ப்புகள் கிடைத்தது. அதைப் பயன்படுத்திக் கொண்டு, மன இறுக்கத்திலிருந்து விடுபட முயன்றனர்.

 

அற்புதனுடையை அலுவலகத்தில் அவனுக்கு வேலை செய்யும் நேரமானது மாலை என்று மாற்றப்பட உள்ளதாக ஒரு பேச்சு அடிபட்டுக் கொண்டு இருக்கிறது. அதற்குத் தயாராக இருக்க வேண்டுமாறு உத்தரவிட்டு இருந்தார் அலுவலக மேலதிகாரி.

 

“அப்போ தூக்கம்,சாப்பாடு, டிராவல் டைமிங் எல்லாமே மாறுமே! எப்படி சமாளிக்கப் போறோம்?” என்று முணுமுணுத்துக் கொண்டனர் அற்புதனுடையை சக ஊழியர்கள்.

 

அவனுக்கும் அதே எண்ணம் தான்! இனிமேல் மனைவியுடன் இரு சக்கர வாகனப் பயணம் விடுமுறை நாட்களில் மட்டுமே சாத்தியமாகும் என்று தொய்ந்து போனான் அற்புதன்.

 

மாலையில் இவன் குளித்துக் கிளம்பி, வேலைக்குச் செல்கையில், தன் அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு வந்து விடுவாள் யக்ஷித்ரா. 

 

அவளிடம் மனம் விட்டுப் பேசி முடித்ததும் இதைச் சொல்வோம் என்று முடிவெடுத்துக் கொண்டான் அற்புதன்.

 

  • தொடரும் 
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்