Loading

அத்தியாயம் 16..

 

 

 சீதாவின் மறுபக்கம் வந்து கட்டிலில் படுத்துக் கொண்டான் ராம்..

 

 

ஒரே கட்டிலில் இருவரும் படுத்தாலும் ஆளுக்கு ஒரு பக்கமாக திரும்பி படுத்துக் கொண்டார்கள்..

 

 

 சில நாட்களாக ராம் அவள் அருகில் உறங்கியது சீதாவிற்கு பழகிவிட்டது.. அதனால் அவள் அசௌகரியமாக உணரவில்லை..

 

 

 இருவரும் உடலால் மட்டுமே இணையவில்லை.. ஆனால் இருவரும் சரியாக சேர வேண்டிய இடத்தில் ஒருவருக்கு அருகே ஒருவர் சேர்ந்து இருந்தபடியால் அவர்கள் அறியாமலே சற்று நேரத்தில் உறங்கி விட்டார்கள்..

 

 

 அவள் காலையில் எழுந்து பார்க்கும் போது அருகே ராம் இல்லை..

 

 

 

 அவன் எப்படி அவள் எழும் நேரத்திற்கு அங்கே உறங்கிக் கொண்டிருப்பான்..

 

 

 அவள் தான் காலையில் 7.30 மணிக்கு எழுந்தாள்..

 

 

 எழுந்து பாத்ரூம் சென்று முகம் கழுவி விட்டு கீழே இறங்கி வந்தாள்..

 

 

 யசோதா மகளுக்கு காலையில் பெட் காஃபி கொடுத்து பழக்கி விட்டார்..

 

 

 அவர் காலையில் காபி கொடுத்தால் தான் அவள் எழுந்து கொள்வாள்..

 

 

 அப்படி பழக்கப்பட்ட அவளுக்கு காபி வராததால் தூக்கம் கெட்டு எழுந்து விட்டாள்..

 

 

 ஹால் சோபாவில் ராம் அமர்ந்து பத்திரிக்கை படித்துக் கொண்டிருந்தான்..

 

 

 அவன் எதிரே போய் நின்று “ எனக்கு ஒரு கப் காபி போட்டு தா..” என்றாள் அதிகாரமாக..

 

 

“ காபி போட்டு ஃபிளாஷ்க்ல ஊத்தி வச்சிருக்கேன் போய் எடுத்து குடி..” என்றான்..

 

 

‘ ஆமா துரை நாட்டு பிரதமர்.. அவர் நியூஸ் படிக்காட்டி இன்றைய நாள் இயங்கவே மாட்டுது.. காபி போட்டு வைத்தவருக்கு கப்ல ஊத்தி தர வருத்தம் போல..’ என்று அவன் காதுபடவே முனுமுனுத்து விட்டு சமையல் அறைக்கு சென்றாள்..

 

 

 

 நைட்டியில் தூங்கி எழுந்து அப்படியே வெளியே வந்து விட்டாள்..

 

 

அவள் போகும் போது திரும்பி பார்த்தவன்..

 

 

‘ மனுசனை நிம்மதியாவே இருக்க விடமாட்டா.. வெறுப்பேத்தி பார்க்கிறதே வேலையா வச்சுட்டு சுத்துறா..’ என்று அவள் அழகில் ஒரு நிமிடம் நிமிர்ந்து பார்த்துவிட்டு புலம்பினான்..

 

 

 அவளை முற்றும் முழுதாக அவன் ஏற்றுக் கொண்டான்..

 

 

 அதேபோல் அவளும் அவன் அனைத்தையும் ஏற்றுக் கொண்டால் அவள் சொர்க்கம் என்றால் என்னவென்று வாழும் வாழ்க்கையில் தெரிந்து கொள்வாள்..

 

 

 எளிமையான நிலையில் இருந்தாலும் அவனை நம்பி வரும் மனைவியை கையில் வைத்து தாங்கக்கூடிய பண்பும் உயர்ந்த குணமும் அவனிடம் அதிகமாகவே இருந்தது..

 

 

 

 வாழ்க்கைக்கு தேவையான நல்ல குணமும் மனைவியை மதிக்கும் பண்பும் கொண்டவனை அவனிடம் இல்லாத படிப்பு பணம் பதவியை காட்டி வெறுகிறாள் சீதா..

 

 

 

 அவள் எதிர்பார்க்கும் பணம், பதவி,படிப்பு அனைத்தும் கொண்ட ஓர் ஆண்மகனை திருமணம் செய்து கொள்ளும் பெண்கள் அனைவரிலும் விதிவிலக்காக ஒரு சிலரே நல்லபடியாக வாழ்வார்கள்..

 

 

 

 எளிமையான நிலையில் இருப்பவர்களிடமும் குறைகள் இருக்கும்..

 

 

வசதியான வீட்டில் இருப்பவர்களிடமும் குறைகள் இருக்கும்..

 

 

 ஆனால் ராம் கணவன் எனும் உறவிற்கு அனைத்து தகுதிகளும் அதிகமாகவே கொண்டவன்..

 

 

 

 அவள் தாய் வீட்டில் அனுபவித்த ஹய் சொசைட்டி வாழ்க்கை மட்டுமே அங்கே இருக்காது..

 

 

 ஆனால் அதைத் தவிர அனைத்தும் அங்கே பரிபூரணமாக கிடைக்கும்..

 

 

அதை சீதா உணர்ந்து கொண்டால் மட்டும் போதும் அவள் வாழ்க்கை வசந்தம் ஆகிவிடும்..

 

 

 

 கண்ணாடி கல்லுக்கும் வைர கல்லுக்கும் வித்தியாசம் தெரியாமல் சுற்றும் மடப் பெண்ணுக்கு யார் கூறுவது..

 

 

 

 ராம் சொக்க வைரம் என்று..

 

 

 அதை அவள் புரிந்து கொள்ளும் காலம் வெகு விரைவில்..

 

 

 சமையல் அறைக்கு சென்றவள் அவளுக்கு மட்டும் ஒரு கப் காபியை எடுத்துக்கொண்டு வந்தாள்..

 

 

காலேஜ் போவதற்கு நேரம் மிகவும் குறைவாக இருப்பதால் அவனுடன் வாய் தர்க்கம் பண்ணாமல் காபி குடித்துவிட்டு எழுந்து அவள் அறைக்கு சென்று குளித்து தயாராகி விட்டு மீண்டும் கீழே வந்தாள்..

 

 

 அவள் வருவதை பார்த்ததும் ராம் எழுந்து சென்று டைனிங் டேபிளில் அவளுக்கு உணவு எடுத்து வைத்தான்..

 

 

 அவளுக்கு காபி குடிக்கும் பழக்கம் அதிகம் இருப்பதால் கட்டாயம் அவள் காலையில் காபி குடிப்பாள்.. என்று தெரிந்து அவளைப் போய் எடுத்து குடிக்க சொன்னான்..

 

 

 

 அவளுக்கும் காபி தேவைப்பட்டது அதனால் எடுத்துக் குடித்தாள்..

 

 

 ஆனால் சாப்பாட்டு விஷயத்தில் அவன் எடுத்து சாப்பிடு என்று கூறினால் ‘ உன் சாப்பாடும் வேண்டாம்..நீயும் வேண்டாம்.. ’ என கூறிவிட்டு கட்டாயம் சாப்பிடாமல் வெளியே சென்று விடுவாள் என்று அவனுக்கு தெரியும்..

 

 அவளுக்கும் காலேஜுக்கு நேரம் போய்விட்டது அதனால் எதுவும் பேசி அவள் சாப்பிடாமல் போய் விடுவாள் என்பதால் எதுவும் பேசாமல் தட்டை எடுத்து வைத்து இரண்டு இட்லியும் சட்னியும் வைத்தான்..

 

 

 அவளும் சாப்பாடு மேசையில் இருப்பதை பார்த்துவிட்டு அங்கே அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தாள்..

 

 

 வேகமாக இரண்டு இட்லிகளையும் அவள் சாப்பிட்டதும் மேலும் தோசையை வைத்தான்..

 

 

 மறுத்து பேசாமல் அதையும் சாப்பிட்டாள்..

 

 

சாப்பிட்டதும் தட்டில் கை கழுவி வைத்து விட்டு கையை துடைத்து விட்டு காலேஜ் பையை எடுத்துக்கொண்டு வெளியே போவதற்கு தயாராகினாள்..

 

 

 

 நன்றாக வாய்க்கு ருசியாக சாப்பிட்டு விட்டு அவன் சாப்பிட்டானா?.. என்று எந்த கேள்வியும் இல்லாமல் சாப்பாடு எப்படி இருக்கிறது என்று கூட பகிர்ந்து கொள்ளாமல் கிளம்பி விட்டாள்..

 

 

 

 இப்படித்தான் ஒரு மனைவி சமைத்து வைத்து கணவனை பார்த்து பார்த்து கவனித்தும் அவன் எதுவும் உணவை பற்றி கூறாமல் விட்டால் மனம் சுணங்கி போவாள்..

 

 

 ராம் அதற்கு விதிவிலக்கு.. அவனே சமைக்க கற்றுக் கொண்டதால் சமையலில் வந்த ஒவ்வொரு பிழைகளையும் அவனே திருத்திக் கொண்டு பார்த்து பார்த்து சமைக்க கற்றுக் கொண்டான்..

 

 

 போகப் போக அவன் சமையல் மிகவும் ருசியாக இருந்தது..

 

 

 அவன் சமைத்த உணவை சாப்பிட்டால் யாரும் பாராட்டாமல் இருக்க மாட்டார்கள்..

 

 

 அதனால் அவள் பாராட்டவில்லை என்பது அவனுக்கு பெரிய விடயமாக தெரியவில்லை..

 

 

 அவளை காலேஜ் அழைத்து சென்று விடுவதற்கு உரிய எந்த ஒரு ஆயத்தமும் இல்லாமல் லுங்கி கட்டிக்கொண்டு ஆம் கட் பெனியன் ஒன்று போட்டு அதன் மேல் கழுத்தை சுற்றி ஒரு துண்டை போட்டிருந்தான்..

 

இதுதான் அவன் வீட்டில் அவன் வேலை செய்யும் தோற்றம்..

 

 அவனுக்கு வசதியும் கூட வேலை செய்வதற்கு.. 

 

 

 அவள் சாப்பிட்டதும் ராம் மீண்டும் வந்து விட்ட குறையை படிப்பதற்காக கையில் பத்திரிக்கையை எடுத்தான்..

 

 

 அவன் இருக்கும் தோரணையை பார்த்து அவளை அழைத்து செல்லமாட்டான். என்பதை புரிந்து கொண்டு அவனிடம் எதுவும் கூறிக்கொள்ளாமல் வெளியே சென்று காரை எடுத்துக் கொண்டு சென்று விட்டாள்..

 

‘ வர வர துரை கொஞ்சம் ஓவராத்தான் போறார்.. ஆளுக்கு முதல் முந்திரிக்கொட்டை மாதிரி முந்திக்கிட்டு கார்ல டிரைவர் சீட்ல வந்து இருக்க வேண்டியது.. நான் வேண்டாம்னு எவ்வளவு சொன்னாலும் கேட்கிறதே இல்லை.. இன்னைக்கு துரைக்கு என்ன வந்துதோ..! பெரிய இவர் மாதிரி போஸ் குடுத்துட்டு இருக்கார்..’ என்று போகும் வழியெல்லாம் கணவனைப் பற்றியே நினைத்துக் கொண்டு போனாள் சீதா..

 

 

 அவள் காலேஜில் போய் இறங்கியதுமே அவள் தோழிகள் அவளை சூழ்ந்து கொண்டார்கள்..

 

 

“ ஹேய் வாங்க புது பொண்ணு.. பொய் சொல்ல வேண்டியது தான்.. அதுக்காக முழு பூசணிக்காய் சோத்துல மறைச்ச மாதிரி இவ்வளவு பெரிய பொய்யா?.. அன்னைக்கு அந்த ஹேண்ட்சம் பாய் யாருன்னு நான் கேட்டதுக்கு ஊர்ல இருந்து வந்திருக்காங்கன்னு சொன்னியேடி.. எனக்கு எவ்வளவு கதை அளந்துவிட்ட.. அன்னைக்கு நீ என்கிட்ட சொன்ன கதை எல்லாம் இன்னைக்கு உனக்கு செட் ஆகுமா என்ன?.. ஏண்டி நீ கல்யாணம் பண்ணிக்கிட்டதை எங்ககிட்ட இருந்து மறச்ச?..” என்று ஒவ்வொருவராக அவளை சூழ்ந்து கொண்டு கேள்வியாக கேட்டார்கள்..

 

 

 

“ ஹலோ வெயிட் வெயிட்.. உனக்கு பொறாமைடி.. நீ அன்னைக்கு அவனை வச்ச கண் வாங்காமல் பார்த்தது அவனை பற்றி சீதா கிட்ட விசாரித்தது எல்லாத்தையும் நானும் பார்த்தேன்.. உனக்கு அவன் கிடைக்கலைன்னு சொல்லி பொறாமையில தானே இப்படி பொங்குற?..” என்றான் கரண்..

 

 

“ விடு கரண். அவ கோவம் சரிதானே.. பிரண்ட்ஸ் நமக்குள்ள ஒளிவு மறைவு இருக்கக் கூடாது.. ஆனா நான் அந்த ரூல்ஸ் ஃபாலோ பண்ணல.. கல்யாணத்துக்கு சொல்லக்கூடாதுனு இல்லை.. திடீர்னு நானே எதிர் பார்க்காத விதமா நடந்தது.. அதனால சொல்ல முடியாத சூழ்நிலை.. நாளைக்கு லாஸ்ட் எக்ஸாம் முடிஞ்சதும் எல்லாரும் கேட்ட மாதிரியே உங்க கோவம் குறைக்க ட்ரீட் உண்டு. சரியா இப்ப எல்லாரும் ஹாப்பியா?.. வாங்க எல்லாரும் கிளாஸ் ரூம் போவோம்..” என்று கூறி அவர்களை அழைத்துக் கொண்டு சென்றாள்..

 

 

 

 அவர்களும் அவர்களது மகிழ்ச்சியை ‘ ஹேய் ஜாலி ஜாலி..’ என்று கூச்சலிட்டு தெரிவித்தார்கள்..

 

 

 

 சீதா காலேஜ் சென்ற பின் அவள் சாப்பிட்ட தட்டை கழுவி வைத்து குளித்துவிட்டு வந்து அவனும் காலை உணவை சாப்பிட்டு விட்டு சென்னை வந்ததில் ஒரு ஆட்டோ நண்பரை பழக்கம் பிடித்து வைத்திருந்தான்.. அவருக்கு அழைத்து வீட்டிற்கு வரும்படி கூறி அவர் வந்ததும் வெளியே சென்று விட்டான்..

 

 

 

 மீண்டும் சீதா அன்றய நாள் காலேஜ் முடிந்து வீட்டிற்கு வந்ததும் அவனும் வந்துவிட்டான்..

 

 

 

ராம் வீட்டிற்கு வரும்போது மட்டன் வாங்கிக்கொண்டு வந்திருந்தான்..

 

 சீதா வந்து குளித்துவிட்டு வந்ததும் அவளுக்கு காபி கொடுத்தான்..

 

 

 காபியை கையில் வாங்கியதும் “ ஏன் மார்னிங் வரல..” என்றாள் சீதா..

 

 

காபி கொடுத்துவிட்டு பிரியாணி சமைப்பதற்காக கிச்சனுக்கு சென்றவனிடம் அவள் கேட்டது காதில் விழுந்தது.. ஆனால் அவள் தன்னிடம் கேட்டாளா?.. இல்லை கைபேசியில் பேசினாளா?.. என்று தெரியாமல் தொடர்ந்து நடந்தான்..

 

 

“ ஹலோ முத்து. உன்கிட்டதான் கேட்டேன்.. ஏன் மார்னிங் என்னை கூட்டிட்டுப்போக வரல?..” என்றாள் மீண்டும்..

 

 

 

 முத்து என்று பெயர் சொல்லி அழைத்ததும் திரும்பிப் பார்த்தான்..

 

“ சும்மாதான் வெளிய வேற ஒரு வேலை இருந்துச்சு.. நான் வருவது உனக்கு பிடிக்காது.. அதனால நான் வரல.. ஏன் என்னாச்சு ஏதும் பிரச்சனையா?..” என்றான்..

 

 

“ இல்ல சும்மாதான் கேட்டேன்.. எனக்கு என்ன பிரச்சனை வரப்போகுது..” என்று கேட்டுவிட்டு “ ஆமா அப்படி எங்க என்ன வேலையா போன?..” என்றாள்..

 

 

 

“ இந்த சென்னையில் எனக்கு யாரை தெரியும்?. நான் என்ன வேலையா போக போறேன்… சும்மா நீயும் இல்லையா. வீட்ல தனியா இருக்கேன்.. அதனால சுத்தி பார்க்கலாமேன்னு வெளியே போனேன்..” என்று கூறிவிட்டு மீண்டும் சென்றான்..

 

 

 அவன் திரும்பி சென்றதும். ‘ இவர் பெரிய இவரு.. கொஞ்ச நேரம் நின்னு பேச மாட்டாரு துரை..’ என்று அவனை மனதிற்குள் திட்டி விட்டு 

 

 அவளும் எழுந்து சமையல் அறைக்குள் சென்றாள்..

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
4
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்