Loading

  

வாராய் என் தோழி வாராயோ
மணப்பந்தல் காண வாராயோ?
வாராய் என் தோழி வாராயோ
மணப்பந்தல் காண வாராயோ?
மணமேடை தன்னில் மணமே காணும் திருநாளைக் காண வாராயோ?
வாராய் என் தோழி வாராயோ
மணப்பந்தல் காண வாராயோ?

           அந்தி மயங்கும் வேளையில் அழகிய கதிரவன் நிலமகளிடம் ஊடல் கொண்டு செங்கதிர்களை வான்வெளியில் மறைத்து, ஜொலித்து கொண்டிருந்த அந்த ரம்மியமான பொழுதினில், அங்கு அன்றைய விழா நாயகியான மணப்பெண்ணை வாழ்த்தி அழைக்கும் வகையில் பாடல் ஒலிக்க பெண் அழைக்கும் வைபவம் சிறப்பாக நடந்து கொண்டிருந்தது.

அனைவரின் முகங்களும் ஆனந்தத்தில் திளைத்துக் கொண்டிருக்க, ஆசை மகளின் முகம் மட்டும் அனிச்ச மலராய் வாடியதை அறிந்திருந்தும் ஒன்றும் செய்ய முடியாமல் வேதனையுடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் கலைச்செல்வி. அதைக் கூட கவனியாமல் குனிந்த தலை நிமிராமல் நடந்து வந்தாள் அவள் ரதிதேவி.

கீழே நடக்கும் நிகழ்வுகளை மண்டபத்தின் மேல் இருந்து பார்த்துக் கொண்டிருந்தவனின் முகத்தில் இருந்து அவன் எண்ண ஓட்டத்தை கண்டறிய முடியாமல் நண்பர்கள் அவனை சுற்றி நின்றிருக்க, அவனோ மணமகளை பார்க்கும் எண்ணத்துடன் அவளையே நோக்க, எங்கே அவள் நிமிர்ந்தால்தானே!

“ஏன் ரத்னா? நிஜமாலுமே உனக்கு பிடிச்சு போய்தான் இந்த கல்யாணம் நடக்குதா?” என உடன் இருந்த ஒருவன் தாள முடியாமல் வாய் திறந்து மனதில் இருப்பதை கேட்டே விட்டான். “இதுல என்னடா சந்தேகம் உனக்கு? எனக்கு பிடிக்காத எதையும் நான் எப்பவும் என் பக்கத்துல நெருங்க கூட விட மாட்டேன்னு உனக்கு தெரியாதா?” என்றான் ரத்னா அழுத்தமாக.

“அது சரிதான்டா. ஆனா சாதாரணமா இப்பெல்லாம் கல்யாணத்துல நடக்கற எதுவுமே உனக்கு நடக்கலயா! அதான் கேட்டேன்.”  என அவன் பதில் கொடுக்க, “ஏன்டா? இப்ப கீழ என்ன நடந்துட்டு இருக்கு. அதை பார்த்தா உனக்கு கல்யாண சடங்கு மாதிரி தெரியலயா? இப்படித்தானே எல்லா ஊர்லயும் கல்யாணம் பண்றாங்க.” என திருப்பிக் கேட்டான் ரத்னா.

“அது இல்ல மச்சி. இப்பெல்லாம் பிரி வெட்டிங் ஃபோட்டோக்ஷூட் இல்லாம யாரும் பத்திரிக்கையே அடிக்கறது இல்ல. ஆனா நீ நைட் ரிசப்ஷன் கூட வேணாம்னு சொல்லிட்டியாமே. அதோட இப்ப வரை நீ சிஸ்டரை எங்கையும் வெளில கூட்டிட்டு போனது மாறியும் தெரியல. அதைத்தான் அவன் சொல்றான்.” என்றான் மற்றொரு நண்பன்.

“அது என்னவோ எனக்கு அதுல எல்லாம் பெருசா இண்ட்ரஸ்ட் இல்ல. அதோட என் வேலையை பத்தி உங்களுக்கு தெரியும் இல்ல. கல்யாணத்துக்கே பத்து நாள்தான் லீவு கிடைச்சது. இதுல எங்க ஃபோட்டோஷூட்லாம் பண்றது?” என ரத்னா அலுத்து கொள்ள, “அதுவும் சரிதான்டா. ஆனா ரிசப்ஷன் வைச்சு இருக்கலாம்ல. ” எனக் கேட்டான் மற்றொருவன்.

“அதை ஏன்டா கேட்கற. இன்னைக்கு பொண்ணு வீட்டு முறைப்படி லேட்டாதான் பொண்ணை அனுப்புவாங்களாம். பாரு இப்பதான் வந்து சேர்ந்திருக்காங்க. இதுக்கு அப்பறம் எப்ப ரெடியாகி போய் ரிசப்ஷன்ல நின்னு, இன்னொன்னு தெரியுமா? நாளைக்கு விடியற்காலைல முகூர்த்தம் வைச்சு இருக்காங்க. அப்பறம் கல்யாணத்துல தூங்கி வழியனும்.” என்றான் ரத்னா.

“காலைல ஆறரை மணி உனக்கு விடிகாலையாடா? உனக்கெல்லாம் பிரம்ம முகூர்த்தம் ஃபிக்ஸ் பண்ணி இருக்கனும்.” என முணுமுணுத்தவாறே, “ஆமா யாரோ இங்க கல்யாணம் பண்ணிக்க ரொம்ப கஷ்டப்படற மாதிரியே இருக்கே. எதுக்கும் இன்னொரு முறை யோசிக்க சொல்லி சிஸ்டர் கிட்ட சொல்லவா?” என சத்தமாக கேட்டபடியே அங்கு வந்தான் ரத்னாவின் ஆருயிர் நண்பன் ரித்விக்.

அவனைக் கண்டதும், “டேய் அந்த ஓரமா கிடக்கிற கட்டையை எடு.” என்றபடியே அவன் அருகில் வந்தான் ரத்னா. “நோ மோர் வைலன்ஸ் டா. மீ பாவம்‌.” என பயந்தவனை போல ரித்விக் பாவ்லா காட்ட, “யாரு நீ? உன்னை இப்ப யார் இங்க கூப்பிட்டா? எதுக்கு இப்ப நீ இங்க வந்த? நாளைக்கு நைட்டு வர வேண்டியது தானே.” என விரட்டினான் ரத்னா.

“டேய் நான் உன் உயிர் நண்பன்டா. உன் கல்யாணத்துக்கு வந்து இருக்கேன். ஓ இப்ப புரியது. நாளைக்கு நைட் வந்தா உன் ஃபர்ஸ்ட் நைட்டுக்கு பூ அலங்காரம் பண்ண ஆள் கிடைச்ச மாதிரி இருக்கும்னு நினைச்சியா? அதுக்கு வேற ஆளை பாரு.” என கிண்டல் செய்தான் ரித்விக். “அந்த ஆளே நீதான்டா. வா.” என அவனது தோளில் கைபோட்டபடி தனது அறையை நோக்கி நடைபோட்டான் ரத்னா.

“ஏன்டா உன்னை எப்ப வர சொன்னா நீ எப்ப வந்திருக்க?” என ரத்னா கேட்க, “சாரி மச்சி. எல்லாம் அந்த மேனேஜர்னால வந்தது. நீ இல்லாம இருக்கவும், திடீர்னு அந்த கார்மென்ட் அக்கவுண்டை என்கிட்ட குடுத்துட்டான். அதுல கொஞ்சம் இஷ்யூ ஆகிடுச்சு அதான்.” என ரித்விக் விளக்கம் கொடுக்க அங்கு சற்று நேரம் அலுவல் பேச்சு ஓடியது.

பிறகு ரித்விக், “சரி வாடா. சிஸ்டரை இண்டர்டியூஸ் பண்ணு.” எனக் கேட்க, “அடப்போடா. இன்னும் அவகிட்ட நானே பேசினது இல்ல. எல்லாம் நாளைக்கு மேரேஜ் முடிஞ்சதும் பண்ணிக்கலாம்ுஅ” என ரத்னா கூறியதை கேட்டதும், அவன் முகத்தில் குழப்ப ரேகை சூழ்ந்தது.

             இவர்கள் இங்கு மகிழ்ச்சியாக நாளை நடக்கப் போவதை பற்றி பேசிக் கொண்டிருக்க, கீழே ரதியோ நடக்கும் நிகழ்வுகளுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்ற ரீதியில் ஏதோ யோசனையில் இருந்தாள். அவளது மனதில் என்ன ஓடுகிறது என்பதை அவளின் தாயால் கூட அறிந்து கொள்ள முடியவில்லை.

ரிசப்ஷன் இல்லாததால் சிறிது நேரத்திலேயே பெண் அழைக்கும் வைபவத்தை முடித்துவிட்டு ரதியை அவளது அறைக்கு அனுப்பி விட்டனர். உள்ளே வந்தவள் மூச்சை இழுத்துவிட்டபடி அங்கிருந்த நாற்காலியில் அமர, பின்னாலேயே வந்த கலைச்செல்வி, “எனக்கு உன் நிலைமை புரியுதுடி. ஆனா…” என இழுத்தார்.

ரதி, “ஆனா என்னம்மா. இனிமேல் இதுதான் உன் வாழ்க்கை. உனக்கு விதிச்சதை ஏத்துக்கிட்டு வாழ  பழகுன்னு சொல்ல போற. அதானே.” என கோபமாக கேட்க, “அப்படி இல்லடி. இந்த மாப்பிள்ளைக்கு என்ன குறை. நல்ல படிப்பு, நல்ல வேலை எல்லாத்துக்கும் மேல அவங்க குடும்பமே அவ்வளவு நல்ல குணமா தெரியறாங்க.” என்றார் கலை.

“அம்மா. ப்ளீஸ். இப்ப நான் என்ன அவங்க எல்லாரும் கொடுமைக்காரங்கன்னு சொன்னேனா? உண்மையை சொல்ல போனா நீங்கதான் ரொம்ப கொடுமைக்காரங்க. கெட்டவங்க.” என அவள் பொரிய ஆரம்பிக்க, “என்னவாம் உன் பொண்ணுக்கு? என்றபடியே உள்ளே நுழைந்தார் அவளின் தந்தை.

உடனே இருவரின் வாயும் தானாக மூடிக் கொள்ள, அவரின் கேள்வியான பார்வைக்கு பதில் கொடுத்த கலை, “அது ஒன்னும் இல்லைங்க. புடவை ரொம்ப கனமா இருக்குன்னு சொல்லிட்டு இருந்தா.” என சமாதானமாக பேச, “இருக்கும் இருக்கும். அது என்ன சாதாரண சேலையா? காஞ்சிபுரத்துல சொல்லி இவளுக்குன்னு தனியா நெஞ்சதாச்சே.” என்றார் அவர் பெருமையாக.

“ஆமா இந்த பெருமைக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல.” என அவள் முணுமுணுத்தது, கலை காதுகளில் நன்றாகவே விழுந்தது. “சரி சரி. பேசிட்டே இருக்காம நேரமா படுத்து நல்லா தூங்கி எழுந்திருங்க. காலையில சீக்கிரமா கிளம்பனும்ல.” என்றுவிட்டு அவர் வெளியில் சென்று விட்டார்.

“உங்கப்பா சொன்னதை கேட்டல்ல. இதுக்கு மேல பண்றதுக்கு எதுவும் இல்ல. ஒழுங்கா மனசை மாத்திட்டு கல்யாணம் பண்ணிக்கற வழியை பாரு. புரியுதா?” என கலை கூற, “அம்மா.” என்றாள் ரதி அழுத்தமாக ஒரு பார்வை பார்த்தபடி.

“என்னடி அம்மா. நாங்க கெட்டவங்களாவே இருந்துட்டு போறோம். நீயே தானே சொன்ன இல்ல. அவங்க ரொம்ப நல்லவங்கன்னு. அதனால கல்யாணம் பண்ணி போய் அவங்க கூடவே இருந்துக்கோ.” என்றார் கலையும் அவளைப் போலவே.

அதற்கு எந்த மறுமொழியும் கூறாமல், குளியலறைக்கு சென்று உடையை மாற்றியவள், வந்து பேசாமல் படுத்துக் கொண்டாள். அதற்கு மேல் கலையும் அவளிடம் வாதாடாமல் அருகில் படுத்துக் கொண்டாலும் உறக்கம் வருவேனா என அடம்பிடித்தது கலைக்கு. மகள் எந்த நேரத்தில் என்ன செய்து வைப்பாளோ என்ற எண்ணத்தில்தான்.

ஒருவழியாக அதிகாலை நேரம் லேசாக கண்ணயர்ந்து விட, அந்த நேரம் பார்த்து அவர்களின் அறைக்கதவு தட்டப்பட்டது. பதறி அடித்து எழுந்து பார்த்தால் அருகில் ரதியை காணவில்லை. அதைக் கண்டதும் பதட்டத்தில் அவருக்கு நெஞ்சு வலியே வந்துவிட்டது.

மயங்கி சரிய போனவர் குளியலறையில் இருந்து ரதி வெளியில் வந்ததை பார்த்ததும் சட்டென நின்று விட்டார். அவளை கண்டதும் தான்  போன உயிர் திரும்பி வந்தது அவருக்கு. “அம்மா. யாரோ கதவை தட்டறாங்க பாரு. எதுக்கு இப்படி சிலை மாதிரி நிக்கற.” என்றபடியே போய் கதவை திறந்தால் உறவுக்கார பெண்கள் இருவர் வெளியே நின்று கொண்டிருந்தனர்.

“ரதி. நீயே எழுந்துட்டியா? நலுங்கு வைக்க கூட்டிட்டு வர சொன்னாங்க. அதான் எழுப்பலாம்னு வந்தோம். வா.” என அழைக்க, “சரிக்கா. நீங்க போங்க. நான் இதோ வரேன்.” என்றவள் அவர்களை அனுப்பிவிட்டு, தன் அன்னையிடம், “என்னம்மா. அப்படியே திகைச்சு போய் நிக்கற. ஓ நான் இங்க இல்லன்னதும் ஓடி போயிட்டேன்னு நினைச்சியா?” எனக் கேட்டாள்.

அதில் திகைத்தாலும் அவள் முன்பு காட்டிக் கொள்ளாமல், “நான் ஏன் அப்படி நினைக்க போறேன். அதெல்லாம் ஒன்னுமில்ல. நீ தள்ளு. எனக்கு எவ்வளவு வேலை இருக்கு.” என நகர, “நில்லும்மா. நான் சொல்றதை கேட்டுட்டு அப்பறமா வெளியில போ. நீ நினைக்கிற மாதிரி நான் எங்கேயும் போக மாட்டேன்.” என கூறவும் கலையின் முகம் லேசாக மலர்ந்தது.

“உடனே நான் மனசு மாறீட்டேனு நினைச்சு ரொம்ப சந்தோஷப்படாத. இந்த கல்யாணம் கண்டிப்பா நடக்காது.” என்ற ரதி வெளியில் சென்றுவிட, அவள் பேச்சில் இருந்து எதையும் புரிந்து கொள்ள முடியாமல் அப்படியே அமர்ந்துவிட்டார் கலை. அந்த நேரம் பார்த்து அவரை தேடி வந்த ரதியின் தந்தை மாணிக்கம் இவரின் தோற்றத்தை கண்டு என்னவென்று விசாரித்தார்.

“நான் எத்தனை தடவை சொன்னேன். நீங்க கேட்டீங்களா? அவளோட பிடிவாதத்தை பத்தி நமக்கு தெரியாதா என்ன? இப்ப இந்த கல்யாணம் நடக்காதுன்னு சொல்லிட்டு போறா.” என அவரிடம் கலை புலம்பித் தீர்க்க, “அவ சொன்னா, அப்படியே நடந்திடுமா. அவளுக்கு இருக்கறதை விட அவ அப்பன் எனக்கு அதிகமா இருக்கு. நான் பார்த்துக்கறேன். நீ வா.” என்றார் மாணிக்கம்.

“என்னவோ போங்க. உங்க ரெண்டு பேரையும் விட எனக்கு மாப்பிள்ளை வீட்டுக்காரங்களை நினைச்சா தான் இன்னும் பயமா இருக்கு. எங்க போய் இதெல்லாம் முடிய போகுதோ.” என புலம்பிக் கொண்டே அவருடன் சென்ற கலை கல்யாண வேலைகளை கவனிக்க ஆரம்பித்தார்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் அந்த திருமண மண்டபம் உறவினர்களின் வருகையால் நிரம்பி வழிய, ஐயர் மந்திரம் ஓதி திருமண சடங்குகளை நடத்த ஆரம்பிக்க, கலையின் பயத்திற்கும், மாணிக்கத்தின் பிடிவாதத்திற்கும் அர்த்தமே இல்லாமல் போக ரதியின் கழுத்தில் தாலி கட்டினான் மணமகன் ரத்னா.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
6
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment