Loading

முடிவில்லா காதல் நீயே! – அத்தியாயம் 28

இதமான தென்றல் காற்று வீச அதை ரசித்து கொண்டு நின்றாள் கயல். மனம் முழுக்க ஆதியே நிறைந்து இருந்தான். அவனின் காதல் புயலில் பெண்ணவள் என்றோ சிக்கி தொலைந்துவிட்டாள். அவனின் இதய துடிப்பின் சத்தம் கேட்க ஏங்கியவள், தன்னுடைய ஆசை கள்வன் எப்போது வருவான் என விழிகள் இரண்டும் தவம் இருக்க, அங்கு அவனோ நேரம் காலம் தெரியாமல் வேலையில் மூழ்கி போயிருந்தான். கயல் காத்திருந்து விட்டு கீழே சென்று விட அவளின் தொலைபேசி அழைக்க அதை எடுக்க அவள் தான் இல்லை.

ஆதிக்கும் தன்னவள் நியாபகமே… ஆனால் என்ன செய்வது வேலை அவனை பிடித்து கொண்டது… பேசியாவது காதல் வளர்க்கலாம் என போன் பண்ண அவனின் கண்ணம்மா எடுக்கவில்லை. ‘இவளை வெச்சுகிட்டு ஒன்னும் பண்ண முடியாது… கொஞ்சம் ஆச்சும் என் நியாபகம் இருக்கா… எப்போ பாரு அம்மா பின்னாடியே சுத்திட்டு இருக்கா… நான் இல்லாம கூட இருந்துருவா போல அவங்க இல்லாம இருக்க மாட்டேங்குறா… இருடி மனுஷனை தவிக்க விட்றியா… இதுக்கு எல்லாம் சேர்த்து வெச்சு பாத்துக்குறேன்…’ என தனக்குள் பேசிக்கொண்டே ஒரு குறுஞ்செய்தியை தட்டி விட்டான். கயல் வேலை எல்லாம் முடித்து மேலே வந்தபோது எதிர்ச்சியாக போன்-ஐ பார்க்க அதில் தவறவிட்ட தன்னவனின் அழைப்புகளும் ஒரு சில குறுஞ்செய்திகளும் இருக்க ஆர்வத்துடன் அதை பார்த்தாள்.

உன்னை பார்க்காத நிமிடங்கள் ஏக்கங்களாக தொடர…. இதற்கு தண்டனையாக….
இதய சிறையில் சிறை எடுத்த உன்னை, என் இதழிலும் சிறையெடுக்கிறேன் ஆயுள் கைதியாக…!!

தெவிட்டாத காதலை முத்தங்களாக நான் தர…. பதிலுக்கு உன் இதழ் ஓரத்தில் ஒளிந்து இருக்கும் வெட்கத்தை… கொஞ்சம் சிதறிவிட்டு போ… கொஞ்சேமெனும் பிழைத்துக்கொள்கிறேன்….!!

கண்ணில் என்ன கத்தி உள்ளதா….??
நீ கண் சிமிட்டும் போதெல்லாம்… என் இதயத்தின் ஓரத்தில் முத்த கீறல்கள்…..!!!

தன்னவனின் கவிதையை படிக்கும்போதே கயலின் முகத்தில் வெட்க பூக்கள் பூக்க தொடங்க, ஒரு வித மோனநிலையில் இருக்க திடீரென ஒரு கை அவளை பின்னிருந்து அணைக்க அவளுக்கு தெரியாதா அது தன்னவன் என. முகம் முழுக்க சிவக்க வெட்கத்தில் பேச்சு வராமல் நின்றவளை திருப்பி அவளின் முகம் பார்த்தவன் அவளின் வெட்கத்தை ரசித்துக்கொண்டே, “என்ன செல்லம்… மாமாவோட கவிதை எப்படி…” என கண்ணடித்து கேட்க, அதை கேட்டு இன்னும் சிவந்தவள் அவனின் மார்பில் அடைக்கலம் தேட, அவளை இறுக்கமாக அணைத்துக்கொண்டவன், அவளின் முகத்தை நிமிர்த்தி தன் காதல் சின்னங்களை பதிக்க தொடங்க பெண்ணவள் கிறங்கிப்போக, அவனின் முத்தத்தில் தொலைந்தே போனாள். இத்தனை நேரம் ஆடவனை தவிக்கவிட்ட பேதைக்கு தன் வழியில் தண்டனைகளை தர பெண்ணவளும் அதை சுகமாக ஏற்று கொள்ள அங்கே பேச்சிற்கு இடம் இல்லை. (மீ: நமக்கும் தான் வாங்க போயிருவோம்…)

கார்த்திக் இன்னும் குறுஞ்செய்திலையே காதலை வளர்த்துக்கொண்டு இருந்தான்… அந்தோ பரிதாபம் அதற்கு பதிலுரைகள் தான் இன்னும் கிடைக்கவில்லை. அவனின் ஒவ்வொரு மெசேஜ்ற்கும் எப்போவாவது சில பதில்கள் அதுவும் திட்டியே இருக்கும். இருந்தும் அசராமல் தன்னுடைய கவிதைகளை தெளித்து கொண்டே இருப்பான் என்றாவது பூக்கள் பூக்காத என. ஆனால் அங்கு எப்போதோ பூக்கள் பூத்து குலுங்கி கொண்டு இருப்பதை இந்த மடையனுக்கு சொல்லத்தான் ஆள் இல்லை. சொல்ல வேண்டியவளோ இன்னும் இவனிடம் வெறுப்பை மட்டுமே வெளிப்படுத்திக்கொண்டு இருந்தாள். அது ஏன் என்று தான் இன்றுவரை புரியாத புதிராகவே இருக்கிறது.

ரோஹனின் நிலைமை இருக்க இருக்க படுமோசமாக இருந்தது. அவன் பேசிய ஒவ்வொரு வார்த்தைக்கும் இப்போது தண்டனை அனுபவித்து கொண்டு இருக்கிறான். ரோஹனை நேரில் பார்க்கும்போது எல்லாம் வார்த்தைகளால் அவனின் நெஞ்சை குத்தி கிழித்து கொண்டு இருக்க, அவனின் காயம்பட்ட இதயத்திற்கு ஆறுதல் தர யாருமில்லை. வெண்பாவிற்கும் புரிகிறது அவனின் நிலைமை இருந்தாலும் எளிதில் மன்னித்து ஏற்றுக்கொள்ள கூடிய தவறை அவன் செய்யவில்லை. பேசிய வார்த்தைகளின் ஆழம் அப்படி. அப்போது அனுபவித்தே ஆக வேண்டும் அல்லவா. வெண்பாவின் மனது இறங்குமா…? பொறுத்திருந்து பாப்போம்.

ஆதி, கயல் இருவரும் காதல் உலகில் மிதந்து கொண்டு இருந்தனர். கயலுக்கு தேர்வு நேரம் ஆதலால் அதிக நேரம் வீட்டிலையே இருந்தாள். ஆதியும் முடிந்த அளவுக்கு தன்னவளுடனான நேரத்தை செலவழித்தான். என்னதான் இருவருக்குள்ளும் ஆழமான காதல் இருந்தாலும் இருவரும் இன்னும் அடுத்த கட்டத்தை நோக்கி செல்லவில்லை. ஏதோ ஒன்று இருவரையும் தடுக்க என்னவென தெரியாமல் பேதையவள் திணறிப்போனது என்னமோ உண்மை தான். இருந்தாலும் ஒருவரை ஒருவர் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் காதலை திகட்ட திகட்ட மற்றவர்க்கு தந்தனர்.

நேரமும் நாட்களும் போட்டி போட்டு நகர, சில மக்களின் வாழ்க்கை முறை மட்டும் மாற்றம் இல்லாமலே இருந்தது. இரவு நேரம். ஆதி கயலை அவனின் ஹோட்டல்-க்கு அழைத்து வந்து இருந்தான். அவர்களுக்கு என தனியறை ஒதுக்கபட்டது. கயலுக்கு ஒன்றும் புரியவில்லை. “ஏன் ஆதி… இங்க வந்துருக்கோம்…?” என கேட்க “கண்ணம்மா இன்னைக்கு ஒரு நாள் இங்க தங்கலாம்… சரியா…” என சொல்ல அவளும் அதற்குமேல் மறுக்கவில்லை. அறை ஆடம்பரமாக அனைத்து வசதிகளுடனும் இருந்தது. கயல் அந்த அறையை சுற்றி பார்த்து கொண்டே இருக்க, இரவு உணவும் வர அதை இருவரும் உண்டு முடித்தனர். இருவரும் பேசிக்கொண்டே தூங்கிவிட்டனர்.

அழகான காலை பொழுதில் அந்த A.C அறையில் இன்னும் இழுத்து போர்த்தி தூங்கி கொண்டு இருக்க கயலை காலிங்பெல் தொந்தரவு செய்ய, “ஆதி… யாருனு பாருங்க…?” என பேசிக்கொண்டே முழித்து பார்க்க அறை காலியாகஇருந்தது… ‘என்ன இவரை காணோம்…? எங்கையாவது வெளிய போய்ட்டாரா…? அதுவும் சொல்லாம கூட…?’ என ஒரு வித சோகத்தில் கதவை திறக்க அங்கே சில பெண்கள் நின்று இருக்க இவளுக்கு ஒன்றும் புரியவில்லை. ஏன்? எதற்கு? என்ற கேள்விக்கு விடை எதுவும் தாராமலே அங்கே இருந்த பெண்கள் இவளை அலங்காரம் செய்ய துவங்கினர். சிவப்பு நிற பட்டுடுத்தி, அதற்கு ஏற்ற அணிகலன்கள் அளவான ஒப்பனை என அழகுக்கு இன்னும் அழகு சேர்த்தனர். கயலுக்கு ஒன்றும் புரியவில்லை. கேட்டதற்கு இது ஆதியின் உத்தரவு என சொல்லிவிட அவளுக்கும் அதற்கு மேல் என்ன சொல்வது என தெரியவில்லை.

தேவலோக கன்னியை போல அவளை தயார் செய்து அழைத்து அங்கே பூ அலங்காரங்களுடன் நிறுத்தி வைக்க பட்டு இருந்த காரில் அவளை ஏற்றி செல்ல ஒன்றும் புரியாமல் அவர்களுடன் சென்றாள். அந்த காரனது ஒரு பிரமாண்டமான மண்டபத்தின் முன்பு நிற்க அதில் இருந்து தயங்கி கொண்டே இறங்கியவளை வெண்பா, திவ்யா வந்து அழைத்து சென்றனர். அந்த மண்டபத்தின் வாயிலில்… “ஆதி வெட்ஸ் கயல்விழி” என அழகா மின்னி கொண்டு இருந்தது காதல் புறாக்களின் பெயர்கள். கயல் ஒரு நிமிடம் உறைந்து போய் அதையே பார்த்து கொண்டு இருந்தாள் கண்களில் கண்ணீரோடு. வாஞ்சையுடன் ஆதியை தேட அவன் இவளின் கண்களுக்கு சிக்காமல் ஆட்டம் கட்டிக்கொண்டு இருந்தான். திவ்யாவும், வெண்பாவும் அவளை நிகழ் உலகத்திற்கு கொண்டு வந்து உள்ளே அழைத்து செல்ல அவளும் அவர்கள் பின்னே பொம்மை போல சென்றாள்.

மண்டபம் எங்கும் தோரணம், அலங்காரம், சொந்தங்கள், பெரிய மனிதர்கள், நண்பர்கள் அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் என அனைவரும் வந்து இருக்க அந்த மண்டபம் நிரம்பி வழிந்தது. சீதா, வெங்கட், கார்த்திக், சிவா என எல்லோரும் ஓடி ஓடி வேலை செய்து கொண்டு இருந்தனர். வெற்றிமாறன், கதிர் கூட அழைக்கபட்டு இருந்தனர். வெற்றிக்கு மனம் முழுக்க நிம்மதி. கயலின் வாழ்க்கையை நினைத்து அவன் வருந்தாத நாள் இல்லை. ஆதி அனைத்தையும் சொல்லி புரியவைத்து இதோ தன்னவளுக்காக அனைத்தும் செய்து விட்டான். கயல் ஏற்கனவே தயாரானதால் அவளை மேடைக்கு அழைத்து வர அங்கே ஆதி, பட்டுவேஷ்டி சட்டையில், கம்பிரமாக அமர்ந்து மந்திரம் சொல்லிக்கொண்டே தன்னவளை பார்வையால் அபகரிக்க கயலுக்கு வார்த்தையே வரவில்லை.

ஆதி தேர்வு செய்த புடவை கயலுக்கு அவ்வளவு அழகாக பாந்தமாக பொருந்தி இருந்தது. ஆதியால் கயலின் மேல் உள்ள கண்ணை எடுக்க முடியவில்லை. “மச்சான்… போதும் எல்லோரும் உன்னையே பாக்குறாங்க… சிஸ்டர் எங்கையும் போக மாட்டாங்க… மானத்தை வாங்காத டா…” என கார்த்திக் எவ்வளவு கதறியும் அதெல்லாம் ஆதியின் காதில் கேட்டால்தானே. அவன் தான் வேறு ஒரு உலகத்தில் இருக்கிறானே.
ஆண்மையின் இலக்கணமாக மணமேடையில் கம்பீரத்தின் அடையாளமாக இருந்தவனை தான் கயல் பார்த்து கொண்டே இருந்தாள். பல பெண்களின் கண்கள் ஆதியின் மேல் ஏக்கமாகவும், கயலின் மேல் பொறாமையாகவும் படுவதை யாரும் அறியவில்லை.

அனைவரின் பார்வையும் மணமக்கள் மேல தான். சீதா தன் மகளுக்கு திருஷ்டி சுத்தி போட்டு மேடையில் அமர வைக்க தன்னவனின் அருகில் முழு காதலுடனும் மகிழ்ச்சியுடனும் அமர்ந்தள். இந்த தருணத்தை எண்ணி ஆனந்த கண்ணீர் நிற்காமல் வழிய, ஆதி அவளின் கைகளில் அழுத்தம் கொடுக்க அவள் உடைந்தேவிட்டாள். ஆதி அவளை சமாதானம் செய்ய, அனைவரின் ஆசியுடன் தன் கண்ணம்மாவின் கழுத்தில் காதலுடன் மூன்று முடிச்சிட்டு முழுவதுமாக தன்னவளாக ஏற்று கொண்டான். காதல் மட்டுமே இருவரிடம் நிறைந்து இருக்க அங்கே பேச்சுக்கள் தேவை அற்றது ஆகிவிட்டது.

நல்லபடியாக திருமணம் முடிய சீதா, வெங்கட் மற்றும் செல்வா என எல்லோரிடமும் ஆசிர்வாதம் வாங்கினர். மனம் முழுக்க சந்தோசம் இருக்க ஆதி அவளை விட்டு இம்மி அளவும் பிரியவும் இல்லை, அவளை பிடித்த கையை விடவும் இல்லை. அனைத்து சடங்குகளும் முறைப்படி நடக்க அனைவரும் மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. கார்த்திக் மட்டும் கொஞ்சம் சோகத்தில் இருந்தான். ஆருத்ரா ஒரு கேஸ் விசயமாக வெளியில் இருந்ததால் வர முடியவில்லை…(உனக்கு உன் பிரச்சனை)

சடங்கு முடிந்து சாப்பிட அழைத்து செல்ல ஆதியே தன்னவளுக்கு ஊட்டினான். அனைவரும் அவர்களை ஓட்டி எடுத்து விட்டனர். அதற்கு எல்லாம் அசாரூபனா ஆதி… வேற யாரையும் பார்க்காமல் தன்னவளை மட்டுமே ரசித்துக்கொண்டு இருந்தான். கயலுக்கு தான் வெட்கமாக போய்விட்டது. சிவா, திவ்யா என எல்லோருக்கும் ஏக சந்தோசம்… சீதாவை கையிலே பிடிக்க முடியவில்லை. மகளுக்காக ஒவ்வென்றையும் பார்த்து பார்த்து செய்தார். சீதா கயலின் அன்னியோனியம் பலர்க்கு பொறாமை தீயை கிளறிவிட்டு இருந்தது.

சடங்கு முடிந்து அனைவரும் வீடு திரும்ப, அங்கே இருவருக்கும் பால், பழம் என கொடுக்க மற்ற சடங்கு முடிந்து ஓய்வு எடுக்க சொல்ல, ஆதி கயலை அவர்களின் அறைக்கு அழைத்து செல்ல கயலுக்கு தர்ம சங்கடமாக போக, அதை எல்லாம் அவன் கண்டு கொண்டால் தானே. “ஆதி, ஏன் இப்படி எல்லோர் முன்னாடியும் கூட்டிட்டு வரீங்க… எல்லோரும் என்ன நினைப்பாங்க… அதுக்குன்னு ஒரு நேரம் இருக்கு தெரியாதா…!!” என கோவமாக ஆரம்பித்து குழைவாக முடிக்க ஆதி கையை கட்டிக்கொண்டு அவளையே துளைக்கும் பார்வை பார்த்து வைத்தான்.

“மேடம்… நாம இப்போ வெளிய கிளம்புறோம் ஒரு வாரம்… அதுக்கு தேவையான திங்ஸ் எல்லாம் பேக் பண்ணு… அதுக்கு தான் கூட்டிட்டு வந்தேன்… ஆனா மேடம் வேற ஏதோ நினைப்புல இருப்பிங்க போல…” என ஒரு மாதிரியாக பார்த்து கொண்டே கிட்ட வர, “ஈ…ஈ அதெல்லாம் எதுவும் இல்லையே… நான் சும்மா சொன்னேன்… இப்போ என்ன திங்ஸ் எடுத்து வைக்கணுமா… இதோ போய்ட்டேன்…” என ஓடியே விட்டாள். ஆதிக்கு சிரிப்பை அடக்க தான் பெரும்பாடு ஆகிவிட்டது.

இருவரும் ஒருவழியாக தயாராகி கீழே வர, சீதா மற்றும் வெங்கட், செல்வா என எல்லோரிடமும் ஆசி வாங்கி கொண்டு புறப்பட்டனர். கயல் சீதாவை கட்டிக்கொண்டு ஏதோ மாமியார் வீட்டிற்கு போகும் மருமகள் போல ஒரே அழுகை. அவருக்கும் மகளை பிரிந்து இருக்கனும் என்ற சோகம்… ஆனால் ஒரு வாரம் தானே என எப்படியோ சமாளித்து அனுப்பி வைத்தார். கயலின் எங்கே போறோம்… என்ற கேள்விக்கு சர்ப்ரைஸ் என ஒரே வார்த்தையில் முடித்துவிட்டான். கார்த்திக் அவர்களை அழைத்து சென்று ஏர்போட்-ல் விட இருவரும் விமானம் ஏறி கொச்சின் வந்து இறங்கினர்.

அங்கே காத்திருந்த காரனது இவர்களை ஏற்றி கொண்டு சிலமணி நேரம் பயணத்திற்கு பின்பு ஒரு இடத்தில் அவர்களை விட்டு பின்வாங்கிவிட்டது. கயல் ஆதியின் கையை இறுக்கமாக பிடித்து கொள்ள ஆதி அவளை பத்திரமாக அங்கே அழைத்து செல்ல, அது ஒரு போட் ஹவுஸ்… முழு நிலவு… இரவின் ஆதிக்கத்தில் தண்ணீர் யாவும் வெள்ளி போல மின்ன, இரவு வெளிச்சத்தில் அலங்கரிக்க பட்ட படகு வீட்டில் ஏறி கொள்ள சிறிது தூரம் அதில் பயணம் செய்து நடு ஆற்றில் நிறுத்திவிட்டு அவர்கள் சென்று விட இந்த குளுமையான நேரத்தை இருவருமே அனுபவித்தனர். அந்த இரவு நேர தனிமை, அந்த இடம் வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒன்று… கயலுக்கு தன்னவனுடனான தனிமை மிகவும் பிடிக்க அவனுடன் ஒன்றி போனாள்.

இரவு உணவு தயாராக இருக்க அதை உண்டுவிட்டு ஆதி குளிக்க செல்ல, இந்த நிலவு அந்த முழு நிலவை ரசித்து கொண்டு இருந்தது. தன் வாழ்க்கை புத்தகத்தை புரட்ட அதனால் ஏற்பட்ட வலி வேதனை, எல்லாம் மறைந்து இப்போது இருக்கும் நிம்மதி, சந்தோசம் என சோகத்தில் ஆரம்பித்த வாழ்க்கை இப்போது நிறைவாக இருப்பதாக ஒரு எண்ணம்.. எல்லாவற்றையும் யோசித்து கொண்டு இருக்கும்போதே ஆதி அழைக்க, நினைவுகளை ஓரம் கட்டிவைத்துவிட்டு அங்கே செல்ல ஆதி அவளை தயாராக சொல்லவிட்டு வெளியில் சென்றுவிட ஒரு வித பயத்திலும், தடுமாற்றத்திலும் குளிக்க சென்றுவிட்டாள்.

குளித்து முடித்து வெளியே பார்க்க அவளுக்காக ஒரு உடை தயாராக இருக்க அதை பார்த்தவளுக்கு வெட்கம் பிடுங்கி தின்றது. தேனிலவுக்கு என்றே தயாரிக்க பட்ட உடை போல கொஞ்சம் தாராளமாக இருக்க என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்துடன் அமர்ந்துவிட்டாள். சிறிது நேரத்தில் கதவு திறக்கும் ஓசை கேட்க ஆர்வத்துடன் திரும்பி பார்த்த ஆதிக்கு சட்டு என்று ஒரு ஏமாற்றம். புடைவையில் அழகு மங்கையாக நின்றாள் கயல். தன்னவனின் முகத்தை பார்த்தே தெரிந்து கொண்ட கயல் அருகில் வந்து, “ஆதி… அந்த டிரஸ் ஒரு மாதிரி இருக்கு… இன்னொரு நாள் கண்டிப்பா போட்டு காட்றேன்…” என எத்தனை சமாதானம் செய்தும் அவன் ஒன்றும் சொல்லாமல் இருக்க…” ஒருவழியாக இவள் தான் இறங்கிவர வேண்டி இருந்தது. “இங்க இருந்து போறதுக்குள்ள அந்த ட்ரெஸ்ஸ போட்றேன்…” என சத்தியம் செய்யாத குறையாக கெஞ்ச ஆடவன் மனமிரங்கி விட்டான்… “சரியான ஆளு ஆதி நீங்க…” என செல்லமாக முறைத்து வைக்க, ஆதியின் பார்வை பெண்ணவளை நிலைகுலைய செய்ய தப்பித்து ஓட பார்க்க முடியுமா அந்த கள்வனிடம் வசமாக சிக்கி கொள்ள அப்படியே அவளை கையில் ஏந்திக்கொண்டான்.

கயலுக்கு அவன் முகத்தை பார்க்க கூட முடியவில்லை. வெட்கத்தில் முகத்தை இரு கையாலும் மூடிக்கொள்ள அலங்கரிக்கபட்ட அறையில் அவளை விட்டவன், முத்த போரை தொடங்க, பெண்ணவளின் பேச்சுக்கள் எல்லாம் ஓரம்கட்டி வைக்க பட்டது. கண்களிலேயே அவளிடம் சம்மதம் கேட்க பெண்ணவள் முத்தத்தின் மூலமாக பதில் அளிக்க, இதோ தேடலை தொடங்கிவிட்டான் கள்வன். தெரிந்தும், தெரியாமலும் மறைத்துவைக்கப்பட்ட அனைத்தையும் அவனின் கண்களும், கைகளும் ஆராய்ச்சி செய்ய தொடங்கின. அவளின் பயத்தை போக்கி மென்மையானவனாக அவளை ஆட்கொள்ள மொத்தமாக அவனுள் அடங்கிவிட்டால் பெண்ணவள்.

அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு இதற்கே அங்கே வேலை இல்லாமல் போக ஆடைகளுக்கு மட்டும் இடம் உண்டோ… அனைத்தும் அவர்களை விட்டு ஓடிவிட, நிலவுமகள் வெட்கத்தில் மேகத்தில் ஒளிந்துகொண்டது. ஆதியின் தேடல் என்றும் முற்று பெறாத தொடக்கமாக தொடர பெண்ணவளின் ஊன் முதல் உயிர் வரை தன்னவனுக்கே தந்துவிட்டால் கள்வனின் கண்ணம்மா. முடியாத இரவாக தொடரட்டும் காதல் யுத்தம்…

காதல் தொடரும்.
மீயாழ் நிலா
தங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கபடுகிறது.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
8
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்