Loading

அத்தியாயம் 4

சென்னை தங்களை அன்புடன் வரவேற்கிறது என்ற பெயர் பலகையை தாண்டி வெற்றி வந்த பேருந்து கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வந்து நின்றது. எங்கு பார்த்தாலும் மக்கள் சென்னைக்கு வந்திறங்கவும் சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் மக்கள் கூட்டமும் என கோயம்பேடு பேருந்து நிலையமே ஜே ஜேவென இருந்தது. புதிதாய் வருபவர்களுக்கு எந்த பக்கம் எந்த ஊர் பேருந்து நிற்கிறது என்று தேடவே அரை மணி நேரத்திற்கு மேலாகும். பின்ன ஆசியாவிலே இரண்டாவது மிகப்பெரிய பேருந்து நிலையம் என்றால் சும்மாவா. நாளொன்றுக்கு இரண்டாயிரம் பேருந்துகளையும் இரண்டு லட்சம் பயணிகளையும் கையாளும் திறன் கொண்ட பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் இருப்பதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை.

“என்னணே உள்ளூர் பஸ் எது வெளியூர் பஸ் எதுனு கண்டுபிடிக்கவே ஒரு நாளாகும் போல. இதுல எங்க போய் நாம போற இடத்துக்கு பஸ்ஸ தேடுறது?” என்றான் குமார்.

“இவ்வளவு பெரிய ஊருக்கு இவ்வளவு பெரிய பஸ் ஸ்டாண்டு இருந்தாலும் பத்தாதுடா. நம்மூர்ல இருந்தே எத்தனை சனம் இங்க வந்து வேலை பாக்குறாங்க. நல்லது பொல்லதுனா அங்கருந்து இங்க வர்றதும் இங்கருந்து அங்க போறதும்னு எத்தனை சனங்க. வா இங்க இருக்குற கன்டெக்டர் கிட்ட உள்ளூர் பஸ் எங்க இருக்கும்னு கேட்டா சொல்வாங்க வாடா, வாங்கப்பா” என்று இருவரையும் அழைத்துக் கொண்டு கன்டெக்டரிடம் பேருந்து விவரங்களை கேட்டறிந்து கொண்டான்.

பேருந்து நிலையம் அருகிலே ஒரு ரூம் எடுத்து குளித்து முடித்து விட்டு அங்கயே காலை உணவையும் முடித்துக் கொண்டு அவர்கள் போக வேண்டிய இடத்திற்கான பேருந்தில் ஏறி அமர்ந்து மெஷின் வாங்கும் இடத்திற்குச் சென்றனர். பல மெஷின்களை அலசி ஆராய்ந்து பாதி பணத்தைக் கட்டி விட்டு மீதி பணத்தை மெஷின் சப்ளை செய்யும் போது தருவதாக ஒப்பந்தமிட்டு அந்த இடத்தில் இருந்து வெளியே வந்தனர்.

“நல்ல வேளை வெற்றி வந்த வேலை இன்னைக்கே முடிஞ்சது. இல்லனா இங்க ரெண்டு நாள் சேர்ந்தாப்புல தங்குனா சாப்பாட்டு செலவே அதிகமாகும் போல. என்ன ரேட் வச்சுருக்கான் ஹோட்டல்ல” என்றார் சிவகுரு.

“ஆமா பெரியப்பா. சாப்பாடு நல்லா இருந்தா கூட பரவாயில்லை. நம்ம ஊர் அண்ணாச்சி கடையிலே சாப்பாடு நல்லா இருக்கும். எப்படி தான் வெளியே சாப்பிட்டு இங்க வேலை பாக்காங்களோ. நமக்குலாம் வயிறு வெந்து போகும் இதை தினமும் சாப்பிட்டா” என்றான் குமார்.

“இங்க அப்டி தான்டா. ஐடில வேலை பாக்குறான் சம்பளம் அதிகம் வாங்குறானு ஊர்ல பெருமையா சொல்றாங்க. ஆனால் இந்த மாதிரி கஷ்டங்களையும் அனுபவிக்கனும். அதுக்கு நாம சொந்த ஊர்லயே சந்தோஷமாவது இருக்கோமேனு நினைச்சுக்கனும். இனிமே அவன் ஐபோன் வச்சிருக்கான் இவன் கார் வாங்கிருக்கானு அடுத்தவங்களை பார்த்து கவலைப்படாம நம்ம வேலையை நம்ம சந்தோஷமா செய்யனும்டா”.

“நீ சொல்றது கரெக்ட்ணே. சொர்க்கமே என்றாலும் அது நம்மூரு போல வருமா” என்று இருவரும் பேசிக்கொண்டே நடந்தனர்.

“ஏலேய்.. ஏலேய் ரவி” என்று அவர்கள் நடந்ததிற்கு எதிர்ப்பக்கம் போலீஸ் ஜீப்பில் ஒரு பக்கமாக சாய்ந்து நின்று கொண்டு பேசிக் கொண்டிருந்தவரைப் பார்த்துக் கூப்பிட்டார் வெற்றியின் அப்பா. ஆனால் எதிர்ப்பக்கம் நின்றிருந்தவரோ பேசிக் கொண்டிருந்ததாலும் வாகன இரைச்சலாலும் எதுவும் கேட்கவில்லை அவருக்கு.

“அப்பா யாரு அது?. எதுக்கு கத்திட்டு இருக்கேங்க”.

“ரங்கமணி மாமா மகன் ரவிச்சந்திரன் மாதிரி இருக்குயா வெற்றி. அந்தப்பக்கம் திரும்பி இருக்குறதால சரியா அடையாளம் தெரியல. அவரு நம்மூர் தான். குல தெய்வம் கோயிலுக்கு அப்பப்ப வருவாரே. போலீஸ் ஆபிஸரா இருக்காரே. மறந்துட்டியா?”

“ஓஓ ஆமாப்பா ஞாபகம் இருக்கு. அவங்க அந்தப்பக்கம் திரும்பி பேசிக்கிட்டு இருக்குறதால கேட்காதுப்பா. இருங்க நான் அவரானு பாத்துட்டு வர்றேன். எல்லாரும் எதுக்கு ரோடு கிராஸ் பண்ணிட்டு தேவையில்லாம. குமார் நான் கூப்டா வாங்க” என்றான்.

“சரியா பாத்துட்டு வா அவன் கிளம்புறதுக்குள்ள. அவனைப் பாத்து பேசி ரொம்ப நாளாச்சு”.

“சரிப்பா” என்று அவரிடம் பேசிவிட்டு அவன் திரும்பவும் அவனை இடிப்பது போல் ஒரு வண்டி வந்து சடர்ன் பிரேக் போட்டு நிற்கவும் சரியாக இருந்தது.

“டேய் இடியட் கண்ணை எங்க வச்சுடா நடந்து வர்ற?. பட்டிக்காட்டான். நல்லா பட்டிக்காட்டான் மிட்டாய் கடைய பாத்த மாதிரி பல்லக் காட்டிட்டு நடந்து பரலோகம் போயிடாத. தள்ளி போடா அங்குட்டு” என்று பின்னால் திரும்பிப் பார்த்துக் கொண்டே முகத்தில் பதட்டத்துடன் வண்டியை எடுத்துச் சென்று விட்டாள் மதி.

‘அவன் இப்போ இங்க என்ன நடந்தது!’ என்று திருதிருவென முழித்துக் கொண்டிருந்தான். குமார் வந்து “அண்ணே?” என்று உலுக்கிய பிறகே தலையை உலுக்கி விட்டு “என்ன திமிரு?. சரியான ராங்கியா இருப்பா போல. அல்லிராணி இவளலாம் கட்டிக்க போறவன் என்ன பாடு படப்போறானோ” என்றான் வெற்றி.

“அண்ணே உங்களுக்கு இந்த மாதிரி பொண்ணு பாத்தா உங்க குணத்துக்கும் தைரியத்துக்கும் மேட்சா இருக்கும்ணே”.

“என்னாது! இது மாதிரியா?. அதுக்கு நான் சன்னியாசம் போயிடுவேன். இவளலாம் கட்டிக்கிட்டு யாரு குடும்பம் நடத்த. போடா டேய்” என்று அவன் தலையில் தட்டி விட்டு நகன்றான் அங்கிருந்து. ஒருமுறை வண்டியில் சென்றவளை பின்னால் திரும்பியும் பார்த்துக் கொண்டான்.

எதிர்ப்பக்கம் சென்று பார்த்த பிறகு அவர் தன் தந்தையின் நண்பர் தான் என்று உறுதிப் படுத்திக் கொண்டான். போலீஸ் உடையில் தீவிரமாக எதையோ விவாதித்துக் கொண்டிருந்தார் அருகில் இருந்தவரிடம். இவன் தயக்கத்துடன் அவர் அருகில் சென்று “மாமா” என்று அழைத்தான்.

அவன் அழைப்பில் நிமிர்ந்தவர் யார் என்று அவர் யோசிப்பதற்குள்ளே “மாமா நான் வெற்றி சிவகுரு பையன். ஊர் வெற்றிலையூரணி” என்றான்.

“ஹே வெற்றி யங் மேன். நல்லா இருக்கியா?. சாரிப்பா சடர்னா ஞாபகம் வரல. எவ்வளவு வளந்துட்ட. ஆளே அடையாளம் தெரியல. படிச்சிட்டு விவசாயம் பண்றனு அப்பா சொன்னாரு. விவசாயம்லாம் நல்லா போகுதா. சிவம் எப்படி இருக்கான். என்ன இவ்வளவு தூரம்?” என்று ஊர்க்காரர்களை பார்த்த சந்தோஷத்தில் கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனார்.

“ம் விவசாயம்லாம் நல்லா போகுது மாமா. இங்க ஒரு மெஷின் வாங்குற வேலையா வந்தோம். அப்பாவும் வந்துருக்காங்க. அங்க தான் இருக்காங்க” என்றான் அவன் அப்பாவை கைகாட்டி. “அப்பா தான் உங்களைப் பார்த்துட்டு சொன்னாங்க”.

அவர் திரும்பி பார்த்து விட்டு “ஓ சிவமும் வந்துருக்கானா?” என்று விட்டு அங்கிருந்தே அவரைப் பார்த்து கைகாட்டினார். வெற்றியும் வரச்சொல்லி கைகாட்டினான்.

“பெரியப்பா அது உங்க பிரண்ட் தான் போல. அண்ணே வரச்சொல்றான் வாங்க போலாம்” என்று சிவகுருவை அழைத்துக் கொண்டு ரோடு கிராஸ் பண்ணி அந்த பக்கம் சென்றான் குமார்.

“ஏலே ரவி எப்படி இருக்க?. என்ன ஊர்ப்பக்கமே ஆளைக் காணோம்?” என்று அவரைக் கட்டிப்பிடித்து இரு நண்பர்களும் நலம் விசாரித்துக் கொண்டிருந்தனர்.

“என்ன பண்ணடா சிவம். ஊருக்கு வந்தாலும் நான் மட்டும் தான் வர வேண்டியது இருக்கு‌. என் பொண்ணு அங்கலாம் நான் வரல. டைம் பாஸ் ஆகாது அங்க ஒன்னுமே இருக்காதுங்குறா. அவளுக்குத் துணையா லதா இங்க இருக்க வேண்டியது இருக்கு. நான் மட்டும் வந்து என்ன‌ பண்றதுனு தான் இந்த மூனு வருஷமா நானும் வர்றதில்லை” என்றார் ரவிச்சந்திரன்.

“ஹாஹா.. நம்ம ஊரைப் பத்தி சொல்ல வேண்டியது தானடா. திருவிழாவுக்காவது வருஷத்துக்கு ஒரு தடவை கூப்டு வந்தா தான நம்மூர் அருமை தெரியும். எப்படி இருக்கா மதிக்குட்டி?”.

“அவளுக்கென்ன ரொம்ப நல்லா இருக்கா‌‌. படிச்சிட்டு வேலைக்கு போறா. கொஞ்சம் பிடிவாதம் ஜாஸ்தியா போச்சுடா” என்று நடந்த பிரச்சனையை நினைத்து வருத்தம் கொண்டார்.

“அதெல்லாம் கல்யாணம் ஆச்சுனா போகப்போக சரியாகப் போயிடும் டா”.

“ம் அவளைக் கட்டிக்க போறவனுக்கு பொறுமை அதிகம் வேனும் இல்லை தைரியம் அதிகம் வேனும். இது ரெண்டும் இல்லனா அவளை மேய்க்குறது கஷ்டம்” என்று சிரித்தார்.

அவர் சொன்னதைக் கேட்டு ரெட்டை ஜடைப்பின்னலில் மல்லிகை சரம் வைத்திருந்த ஒரு பக்கம் ஜடை முன்னால் தோளில் ஆட வாயைக் கொணட்டி விட்டு செல்லும் பருவ மங்கை நினைவில் வந்து வெற்றியும் உதடு பிரியாமல் சிறு புன்னகை செய்தான்.

“ஏன்டா புள்ளைய போய் இப்படி சொல்லிக்கிட்டு இருக்க. என் மருமக அழகுக்கேத்த மகராசன் கிடைப்பான்”.

“ம்ம் பார்க்கலாம் பார்க்கலாம்” என்று அவர் சிரித்து விட்டு “சரி வாங்க வீட்டுக்கு போலாம். ரோட்லே நின்னு பேசிட்டு இருக்கோம்”.

“இல்லடா இன்னைக்கே டிக்கெட் போட்டாச்சு. நாங்க போயே ஆகனும். அங்க வேலைலாம் அப்படியே கிடக்கு”.

“நைட் தான பஸ். வீட்டுக்கு வந்துட்டு தான் போனும்” என்று வற்புறுத்தி வீட்டுக்கு அழைத்தேச் சென்று விட்டார்.

அவர்கள் வருவதை முன்கூட்டியே சொன்னதால் லதா அவர்களுக்கான உணவைத் தயாரித்து வைத்திருந்தார்.

“அண்ணே வாங்க நல்லா இருக்குறேங்களா?” என்று பொது நல விசாரிப்புகள் முடிந்து லதாவும் மகளின் அருமை பெருமைகளை அவரிடம் பாட்டாக பாடினார்.

“என்னணே இவங்க சொல்றத பார்த்தா சரியான அடங்காத புள்ளையா இருக்கும் போலயே”.

“ஏய் கம்முனு இருடா. அவங்க காதுல விழுந்தா தப்பா நினைக்க போறாங்க”.

“அவங்களே அப்டி தானே சொல்றாங்க. அந்த புள்ளையைக் கண்ணுல காண்பிச்சா நாமளும் எப்படி தான் இருக்குனு பாக்கலாம். பார்த்தா ஆளவேக் காணும்”.

“நாம என்ன பொண்ணா பார்க்க வந்திருக்கோம் பொண்ண கூப்டு வந்துக் காண்பிக்க. நாம விருந்தாளி. வந்தோமா சாப்டோமா போனோமானு இருக்கனும்”.

“இந்த ஐடியா கூட நல்லா இருக்கேணே. அவரு சொன்ன மாதிரி நீ கூட தைரியமான ஆளுதான். உனக்கே பொண்ணு கேட்கலாம் போலயே. நாம போறதுக்குள்ள பார்த்து நல்லா பொண்ணா இருந்துச்சுனா உனக்கே பெரியப்பா கிட்ட சொல்லி பேசி முடிச்சிடலாம்”.

“பொண்ணெல்லாம் நல்லா தான் இருப்பா” என்று முனுமுனுத்தான்.

“என்னாது நல்லா இருக்குமா?. நீ எப்போ பார்த்த” என்றான் சந்தேகமாக.

“ஏய் நீ இப்போ கம்முனு இருக்கியா இல்ல வாய்லே ரெண்டு போடவாடா. பட்டணத்து பொண்ணுங்க எல்லாம் நமக்கு செட்டாகாது. நீ வாயை மூடிட்டு இரு”.

குமார் அவனை மேலும் கீழும் பார்த்து விட்டு “உன் பேச்சைப் பார்த்தா சந்தேகமா இருக்கே?” என்றான்.

“ஓ அப்டிங்களா சார். அப்டி ஓரமா வந்தா நான் உங்க சந்தேகத்தை தீர்த்து வைக்குறேன்” என்று சட்டைக்கையை மடித்து விட்டான்.

“இல்லணே எனக்கு ஒரு சந்தேகமும் இல்லை” என்று கப்சிப் என்று வாயை மூடிக் கொண்டான் அதன் பிறகு.

“என்ன வெற்றி அண்ணனும் தம்பியும் ரொம்ப நேரமா தனியா பேசிட்டு இருக்கேங்க” என்றார் ரவி.

“அதெல்லாம் ஒன்னுமில்லை மாமா. அப்பாவுக்கு எப்படி இவர் பிரண்டுனு கேட்டான். அதான் சொல்லிட்டு இருந்தேன்” என்று சமாளித்தான்.

“ஓ அப்டியா. நானும் இவனும் ஸ்கூல் ஒன்னா தான் படிச்சோம். நான் அதுக்கப்புறம் மேலே படிச்சு போலீஸ் வேலைக்கு வந்துட்டேன்” என்று தன் வரலாறைக் கூறினார்.

‘போலீஸ்காரரு கரெக்டா எல்லாத்தையும் நோட் பண்றாரு’ என்று நினைத்து விட்டு “ஓ அப்டியா சார்” என்று விட்டு சரி ஆனது ஆகட்டும் என்று “உங்களுக்கு பொண்ணு இருக்குறதா சொன்னேங்க ஆளயேக் காணும்” என்றான் குமார்.

அவன் கேட்கவும் வெற்றி அவனை முறைத்தான்.

‘ஆத்தாடி இவன் வேற முறைக்குறானே’ என்று விட்டு அந்த பக்கம் திரும்பவே கூடாது என்று நினைத்துக் கொண்டான்.

“லதா மதி எங்க?. கூப்டு” என்றார் ரவி.

“அது வந்துங்க அவ வெளில கடை வரைக்கும் போயிருக்கா…” என்று இழுத்தார்.

‘அவளை எங்கயும் வெளில அனுப்ப வேண்டாம்னு சொன்னேன்ல’ என்று அவர் பார்வையிலே முறைத்தார்.

அப்போது தான் “அம்மா” என்றபடி உள்ளே வந்தாள் மதிவதனி. அவளைப் பார்த்த அங்கு உள்ளவர்களின் கண்கள் எல்லாம் அவள் மேல் இருந்தது.

“மதி வா வந்து உட்காரு. வெளில போனியா. இது சிவம் மாமா. உனக்கு ஞாபகம் இருக்கா. அப்பா அடிக்கடி சொல்வேனே”.

“ம்ப்பா ஹாய் அங்கிள்” என்றாள்.

“ஏய் அங்கிள் என்ன?. மாமானு சொல்லுடி” என்றார் லதா.

“சாரி மாமா” என்றாள் சிரித்துக் கொண்டே.

“அதுனால என்ன?. உனக்கு எப்டி தோனுதோ அப்டி கூப்டுமா” என்றார் சிவகுரு.

வெற்றியோ முகத்தில் எந்த உணர்வும் காட்டாமல் அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான். அவளும் பேச்சு வெற்றியின் அப்பாவின் இடம் இருந்தாலும் ‘சே இந்தக் காட்டான் எதுக்கு நம்மள இப்டி பார்க்குறான்’ என்று மனதில் வறுத்தெடுத்துக் கொண்டிருந்தாள் அவனை.

குமாரோ ‘ஆத்தாடி இது ரோட்ல பார்த்த அந்த புள்ளேயில’ என்று ஆச்சர்யத்தில் அவளையே ஆவெனப் பார்த்துக் கொண்டிருந்தான்.

“நாலு ஈ வாய்க்குள்ள போய்ட்டு வந்துருச்சு. வாயை மூடு” என்றான் வெற்றி.

‘அந்த அளவுக்கா வாயைப் பொளந்து பாத்துட்டு இருந்தோம் சே’ என்று வாயை மூடி விட்டு “அண்ணே இந்த பொண்ண பார்த்து நீ ஷாக்கான மாதிரியே இல்லயே” என்றான் அவனை சந்தேகப் பார்வை பார்த்துக் கொண்டே. “நாம காலைல பார்த்த அதே  பொண்ணு தான. பொண்ணு சூப்பர்ல ணே. முறையும் கரெக்ட்டா இருக்கு. உனக்கு ஓகேவானு பாத்து சொல்லு”.

“இல்ல நீ எங்கிட்ட அடி வாங்காம பேசாம இருக்க மாட்டேனு நிறைக்கிறேன்” என்று பல்லைக் கடித்துக் கொண்டு சட்டையை மடித்து விட்டான்.

“அத எதுக்குணே ஆ ஊனா மடிச்சு விட்டுக்கிட்டு?. விடுணே விடுணே உன்னை நான் நம்பிட்டேன்”.

பின் சிறிது நேரம் பேசிவிட்டு “சரி ரவி ஊருக்கு திருவிழாவுக்காது கண்டிப்பாக வாங்க” என்று சொல்லி விட்டு அவர்களிடம் இருந்து விடைபெற்றுக் கிளம்பினர். அவர்களிடம் சொல்லி விட்டு வெளியே வரவும் மனதில் ஏதோ தோன்ற சுற்றும் முற்றும் பார்த்து விட்டு  மேலேப் பார்த்தான் வெற்றி. மதி மாடியில் நின்று அவர்களைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள். இல்லை இல்லை முறைத்துக் கொண்டிருந்தாள்.

அவன் மீசையை முறுக்கி விட்டுக் கொண்டே இரு புருவம் உயர்த்தி என்ன என்று கேட்டான். அவளோ காட்டான் என்று வாயைக் கொணட்டி விட்டு அங்கிருந்து நகன்றாள்.

அல்லிராணி என்று மனதில் நினைத்துக் கொண்டு உதட்டுக்குள் சிரித்துக் கொண்டு நடந்தான்.

“அண்ணே இங்க ஏதோ நடந்த மாதிரி இருந்துச்சு. ஆனா சத்தியமா நான் பார்க்கலணே. உனக்கும் எதுவுமே தெரியாது இல்லணே” என்று நக்கலாக இழுத்தான் குமார்.

“டேய் ஒழுங்கா வாடா” என்று அவன் கழுத்தில் கைபோட்டு அவனை இழுத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான்.

தொடரும்..

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
11
+1
1
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    4 Comments

    1. Sangusakkara vedi

      Super epi sis…. Hero ku already heroine mela crush irukum polaye …. Whatsoever heroine tiruvizha ku poga pora pola…. Waiting for next ud…. Sekaram potrunga…

    2. மிக அருமை 👌👌👌கதையின் நாயகன் நாயகி சந்திப்பு சிறப்பு 👍👍👍

    3. மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். காதல் உணர்வுகளை உணர்த்திய தங்களின் எழுத்து நடையும், வசனமும் மிகவும் அசத்தல். இனிமையாக அதே நேரம் அழுத்தமாக அமைந்தது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    4. கதை மாந்தர்கள் மனதை கொள்ளை கொண்டு விட்டனர். மனதிற்கு பிடித்தமான காதல் கதைக்களம். சிறப்பான எழுத்து நடை. மேலும் படைப்புகளை தொடர வாழ்த்துகள்.