
மரம் தேடும் மழைத்துளி 3
ரவி, ருக்மணியின் புகுந்த வீட்டுக்கு, தூக்குவாளியில் 10 கிலோ ஆட்டுக்கறியோடு வந்து சேர்ந்தான்.
அங்கே கோமதியும் பார்வதியும் ஆளுக்கொரு சுவற்றில் சாய்ந்த படி அமைதியாக அமர்ந்திருந்தார்கள்.
பார்வதியிடம் ரவி, “அத்தை சின்னமாவையும் ருக்குவையும் காணலையே எங்கே போயிருக்காங்க?”
பார்வதி பதில் சொல்ல தயங்கி இருக்க. கோமதி, “ருக்குவுக்கு வயிறு வலின்னு சொன்னா… தர்மாஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போயிட்டு. அப்படியே வீட்டுக்கு போறதா சொன்னாங்க.”
“வீட்டுக்கா? மாப்பிள கூட போயிருக்காரா?”
“அண்ணனுக்கு தெரியாது. ருக்கு வலியில ரொம்ப துடிச்சிட்டா. அதனால அவசரமா கூட்டிட்டு போயிருக்காங்க. அதான் அம்மா என்ன நடந்ததோ? ஏது நடந்ததோனு பயந்துகிட்டே இருக்கா.”
பார்வதியை பார்த்து ரவி, “அத்தை பயப்படாதீங்க. உங்க மருமகளுக்கு ஒன்னும் ஆகிருக்காது. கறியை சமைச்சு விருந்தாளிகளுக்கு சாப்பாடு போடுங்க. நான் போய் பாத்துட்டு, ரெண்டு பேத்தையும் கூட்டிட்டு வாரேன்.” என்று விகல்பம் தோன்றாமல் சொல்லிவிட்டு. தன்னுடைய சைக்கிளை எடுத்துக்கொண்டு கிளம்பி சென்றான்.
கோமதி கறி இருக்கும் வாளியை எடுத்துக்கொண்டு, “முதல்ல சமைக்கபாரு. மத்தியான சாப்பாட்டுக்கு ஆளுங்க வந்துருவாங்க.”
பார்வதி, “வந்தவங்க பொண்ணு எங்கன்னு கேட்டா… என்னடி பதில் சொல்ல?”
“இப்ப அவளோட அண்ணன்காரனுக்கு நான் என்ன பதில் சொன்னேன்னோ அதையே எல்லாருக்கும் சொல்லு. உன் மகனை நல்ல கேள்வியா, நாலு கேள்வி கேட்டு. அனுப்பி வைக்கிற வழியப்பாரு. வந்த மொதநாளே இவனை வேண்டாம்னு உதறிட்டு போற அளவுக்கு நடந்திருக்கான்னால், இவன் என்ன கொடூரமா நடந்துக்கிட்டானோ? இவனை பெத்ததுக்கு நீ அசிங்கப்படணும். முதல்ல அவனை கண்டிக்க பாரு. எந்திரி இப்ப உலைய கூட்டு.”
மகள் தன்னுடைய மாமியாரை போல எடுத்துச் சொல்லிய உடன், பார்வதி எழுந்து சமையல் கட்டிற்கு சென்று, சமையல் வேலையை செய்யத் தொடங்கினார். கோமதியும் உடன் இருந்து உதவி புரிந்து கொண்டிருந்தாள்.
காலையில் குளிக்கச் சென்ற முருகன், 11 மணி அளவில் குளித்து முடித்து வீடு திரும்பினான்.
பார்வதி, “கோமு… நீ, கொஞ்ச நேரம் அடுப்பை பார்த்துக்கோ. உனக்கு ஒத்தாசைக்கு சுந்தரியை கூப்பிட்டுக்கோ. என்று கோமதியிடம் சொல்லிவிட்டு. “முருகா நீ மாடிக்கு போடா.” என்று முருகனுக்கு கட்டளை இட்டார். முருகனுக்கு காரணம் விளங்காமல் மாடிப்படி ஏறிச் சென்றான். பின்னாலேயே பார்வதியும் ஏறி சென்றார்.
மாடியில் தனியறைக்கு சென்றதும்.
“என்ன ரகசியம் பேச கூட்டிட்டு வந்திருக்கிறே? எங்கே உன் தம்பி பொண்டாட்டியையும், நான் தாலி கட்டின பொண்டாட்டியையும் காணும்?”
“அடி செருப்பால நாயே! விரட்டி விட்டது நீயி. கேள்வி என்னைய கேக்குறியா? என்னடா செஞ்சே அந்த புள்ளைய?”
“என்னது நான் விரட்டிவிட்டேனா?
நான் கிட்ட வந்தாலே அருவருப்பா முகத்தை வச்சுக்கிட்டு பாக்குறா அவளை நான் விரட்டி விட்டேனா?”
“அருவருப்பா, சாக்கடையை குடிச்சிட்டு போயி அவ முன்னாடி நின்னேன்னா அப்படித்தான் முகத்த வச்சுப்பா.”
“என்னம்மா சொல்ற? நேத்து நான் ஒத்த பொட்டு குடிக்கல.”
“குடிக்கலன்னா, உன்னோட அப்பனை மாதிரி, அவளை ஆராய்ச்சி பண்ணி இருப்பே. முருகா நான் சொல்றேன்னு கோவிச்சுக்காதே. உனக்கு அப்பைக்கு அப்ப, உங்க அப்பன் புத்தி எட்டிப் பார்க்குது. அதை முதலில் தொடச்சி எறிய பாரு. அந்த காலத்தை மாதிரி கணவனே கண்கண்ட தெய்வம்னு எந்த பொம்பளையும், ஆம்பளைக்கு அடங்கிப் போக மாட்டா. போட நீயும் ஆச்சு, உன் பொழப்புமாச்சுன்னு போயிட்டே இருப்பா. அசிங்கம் உனக்குத்தான். ஒழுங்கா பொண்டாட்டிய வச்சு வாழ பாரு. இல்ல உங்க அப்பன மாதிரி கண்காணாம எங்கேயாவது போயிரு.” என்று சொன்ன பார்வதி கீழே இறங்கி சென்றார். அமைதியாய் நின்று கொண்டிருந்தான் முருகன்.
பார்வதி, தலக்குவை திருமணம் செய்து வந்து 30 ஆண்டுகளாகிறது. தற்போது தலக்கு உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பது கூட பார்வதியின் வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியாது. தலக்கு, முருகனுக்கு ஏழு வயது இருக்கும் போதே வீட்டை விட்டு வெளியேறி விட்டார். பார்வதி திருமணமாகி முதல் ஆண்டில், முதலில் முருகனைப் பெற்றார். அதன் பிறகு தலக்கு, பார்வதியை சந்தேகப்பட தொடங்கி இருந்தார். அப்போது கோமதியை (வயிற்றில்) முழுகாமல் இருந்தார். தலக்குவுக்கு இன்னும் பிள்ளைகள் வேண்டாம் என்று, அரசு மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்ய வந்திருந்தார். அதை கவனித்த தலக்கு, உன் கள்ளபுருசன் பிள்ளையை யாருக்கும் தெரியாமல் கலைக்க வந்திருக்கயா? என்று பிரச்சனை செய்துவிட்டார். அதனால் மருத்துவமனையில், பார்வதியை விரட்டிவிட்டார்கள். அதோடு தொடர்ந்து வந்த சச்சரவால், தலக்கு வெளியேறி சென்று விட்டார். மூத்தவன் முருகன் இவர்களது சண்டையை நேரில் பார்த்து வளர்ந்தான். பதிலுக்கு பதில் பேசும் பார்வதியை கண்டவன், பெண்கள் அடக்கம் இல்லாதவர்கள். அவர்களை ஆரம்பத்திலேயே அடக்கி வைக்க வேண்டும். என்ற முடிவுக்கு வந்துவிட்டான். அதனால் பெண்களை அடக்கிவைக்க வேண்டும் என்ற, அவன் மனதில் தோன்றிய எண்ணத்தின் அவலமே, தற்போதைய நடவடிக்கைள். அவனது தாய் சொல்லிவிட்டு சென்ற இறுதி வாக்கியம், இப்போதும் அவனது மனதை குடைந்து கொண்டு இருந்தது. ஒரு பெண், ஒரு ஆணை, நீ என்னுடைய வாழ்க்கைக்கு அவசியமற்றவன் என்று உதாசீனம் செய்து விட்டு செல்வது. பெண்களுக்கு அவமானம் இல்லை. ஆண்களுக்கு அது பெருத்த அவமானம். என்று அவன் மனது திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தது. அதனால் அவன் மனம், ருக்குவை சமாதானம் செய்து. வைத்து வாழ வேண்டும் என்று அறிவுரை செய்தது.
புதிய ஆடையை அணிந்து கொண்டு, மாடிப்படியை விட்டு இறங்கி வந்த முருகன். யாரிடத்திலும் எதுவும் சொல்லாமல், தன்னுடைய M80 பைக்கை எடுத்துக் கொண்டு ருக்குவின் வீட்டுக்கு சென்று விட்டான்.
ருக்மணியை அழைத்துச் சென்ற மாரியம்மா, “இப்பவாவது சொல்லுடி. என்ன செஞ்சான் அந்த பய? அவன் அப்பனை கணக்கா, எவன்கூடயும் சேர்த்து வச்சு பேசினானா? நான் ஒரு மதி கெட்ட சிரிக்கி, அவங்க அப்பனை போல குணம் இவனுக்கும் இருக்கும்னு எண்ணாம கெட்டி வச்சு தொலைச்சிட்டேன். இப்ப ஒன்னும் கெட்டு போகல. இந்தானைக்கு ஊரைக்கூட்டி பேசி முடிச்சு, பிரிஞ்சு வந்துருவோம். எந்த மகராசனும் கட்டிட்டு போனா போறான். இல்லாட்டி தாய்க்கு பிள்ளையா வீட்டுல இருந்துட்டு போ. ” என்று ஆத்திரமும், ஆதங்கமும், தான் செய்த தவறை எண்ணிய தவிப்புமாக மாரியம்மாள் பொறிந்து தள்ளினார்.
ருக்மணியின் மனதில், அவன் இதோடு வேண்டாம் என்று எண்ணம் தோன்றினாலும். இன்னொரு வாய்ப்பு கொடுத்து பார்க்காமல் விட்டு விட்டோமோ என்ற தவிப்பும், அவன் மேல் இருந்த காதலும், அவளை அமைதியாக்கியது.
மாரியம்மாள், ருக்மணியின் இரு தோள்களையும் பிடித்து உலுப்பி, “ஏன் இப்படி மௌனமா இருக்கே? என்ன செஞ்சான்? வாய் திறந்து சொல்லுடி. எனக்கு பயமா இருக்கு.” என்று அழத் தொடங்கினார்.
தாய் கலங்குவதை பார்த்த ருக்மணிக்கும், கண்ணீர் தேங்கி விட்டது.
“அவரு நேத்து நைட்டு, குடிச்சுப்புட்டு வந்தாரும்மா…” என்று மாரியம்மாவை கட்டி அழத் தொடங்கி விட்டாள்.
ருக்மணி சொன்ன வார்த்தையை கேட்ட பிறகுதான், மாரியம்மாளின் மனது சற்று அமைதி கொண்டது. “வேற எதுவும் சொன்னானா?” என்றார்.
ருக்மணி, இல்லை என்று தலையசைத்து விட்டு. “குடிச்சுப்புட்டு, எனக்கு முத்தம் கொடுத்தாரு. எனக்கு அந்த வாடை(வாசனை) ஒத்துக்கல.” என்று பொய்யுரை சொன்னாள்.
“சரி சரி இதுக்கு போய் அழுவாங்களா? நீ பேசுற விதமா பேசி, குடிக்காத மாமானு சொல்லி திருத்துப்பாரு. இது ஒரு காரணம்னு அங்க இருக்க மாட்டேன்னு அழுது அடம் பிடிச்சுட்டே. நான் என்னமோ ஏதோன் பயந்து போயிட்டேன்.”
“குடிக்கிறது தப்பு இல்லையா ம்மா…”
“தப்புதான், எந்த பையன் கேட்கிறான்? வேற பேச்சு எதுவும் தப்பா போகலையே? அடிச்சு கடிச்சு போட்டானா?” என்று மறுமுறை கேட்டுக்கொண்டார் மாரியம்மா.
“அதெல்லாம் இல்ல. எம்மோய் அவர பத்தி குறை சொல்லிட்டு வந்துட்டேம்னு, கோபப்பட்டு ஏதாவது செஞ்சுபுடுவாரா?”
“அதெல்லாம் ஒன்னும் செய்ய மாட்டான். பொண்டாட்டி மேல ஆசையும், பாசமும் இருந்தா, தேடி வருவான். வந்து கூட்டிட்டு போனால் போ… நம்மளா போய் அவனை ஏத்தி விட்டுடக்கூடாது.”
மாரியம்மாளின் பேச்சைக் கேட்டு சரி என்று தலையசைத்துக் கொண்டாள். வந்து வீட்டில் உட்காரக் கூட இல்லை பக்கத்து வீட்டு ஈஸ்வரி வந்துவிட்டார்.
“என்ன மாரிமாக்கா… என்ற படியே வீட்டுக்குள் நுழைந்து விட்டார். காலையில வெரசா போய், புது பொண்ண கையோட கூட்டிட்டு வந்து இருக்கீங்க?”
மாரியம்மாள் திகைத்துப்போனார். என்ன பதில் சொல்லவென்று ஏதும் விளங்கவில்லை. “அது வந்து” என்று தடுமாறிக் கொண்டு இருந்தவரை நிறுத்திய ருக்மணி.
“வயிறு வலி வந்துடுச்சு. அங்க வச்சு என்ன செய்ய? ஏது செய்யன்னு எதுவும் எனக்கு விளங்கல. அதான் அம்மா வந்ததும், வீட்டுக்கு வந்து தலைக்கு குளிச்சிட்டு போகலாம்னு வந்திருக்கிறேன் க்கா.”
“அது சரி. புது இடம். புது மனுசங்க. சொந்தக்காரங்களா இருந்தாலும், கேட்க, கொள்ள ஒரு மாதிரி கூச்சமா இருக்கும். சரி சரி வெரிசையாக குளிச்சிட்டு உட்காரு என்றவர். பேச்சை முடிக்கும் முன்பு, வாசலில் பைக் வந்து நிற்கும் சத்தம் கேட்டது.
முருகன், வாசலில் நின்றபடி. “ருக்கு” என்று அழைத்துக் கொண்டு உள்ளே வந்தான்.
மாரியம்மாளும் ஈஷ்வரியும் ஒரு சேர “வாங்கய்யா…” என்று முருகனை வரவேற்றுவார்கள்.
ருக்குவுக்கு மீண்டும் பதற்றம் ஒட்டிக்கொண்டது. இரு கைகளையும் பிசைந்தபடி நின்று கொண்டிருந்தாள்.
பக்கத்து வீட்டு ஈஸ்வரி, “நான் வரேன் க்கா…” என்று சொல்லிவிட்டு வெளியேற.
மாரியம்மாளும், “ஈஸ்வரி நானும் கடைக்கு போகணும். மருமகனுக்கு காபி வாங்கணும். இரு.” என்று தூக்குவாளியை கையில் எடுத்துக் கொண்டு ஈஸ்வரியோடு சேர்ந்து வெளியேறினார்.
முருகன், வெளியேறி செல்லும் மாரியம்மாளை தடுத்து நிறுத்தவோ. மற்றவர்களிடம் நலம் விசாரிக்கவோ தோன்றாமல், ருக்குவின் முகத்தை பாவமாக பார்த்துக் கொண்டு நின்றான்.
மாரியம்மாள், வாசற்படியை கடந்ததை உறுதி செய்த முருகன், “என்னை மன்னிச்சிடு ருக்கு.” என்று கெஞ்சுதலாக அதே நேரத்தில் சத்தமாக சொன்ன வார்த்தை. மாரியம்மாளின் காதுகளை எட்ட. மகிழ்வோடு சிரித்தபடி டீக்கடைக்கு சென்றார்.
ருக்கு, முருகனை மிரண்டு போய் பார்த்துக் கொண்டு. ஒத்தையிலே விட்டுட்டு எங்க போறம்மா?” என்று மனதிற்குள் மாரியம்மாளை திட்டிக்கொண்டு நின்றாள்
“உன் மேல எனக்கு கொள்ள ஆசை ருக்கு. அதை எப்படி உன்கிட்ட சொல்லணும்னு எனக்கு தெரியல. அதனால நான் அப்படி முரட்டுத்தனமா நடந்துகிட்டேன். இனிமே உன்னோட சம்மதம் இல்லாம உன் பக்கத்துல நான் வரமாட்டேன். என்ன மன்னிச்சிடு ருக்கு.” என்று வீட்டுக்குள் நிற்கிறோம் என்ற தைரியத்தில் ருக்குவின் கால்களில் படார் என்று விழுந்து மன்னிப்பு கேட்டான்.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


அவன் விட்ட உதாருக்கு இப்படி பொசுக்குனு கால்ல விழுந்துட்டான் 😆😆
நாடகம். நன்றி சகோ மிக்க மகிழ்ச்சி