Loading

காரையூரின் பெரிய பிள்ளையார் கோவில் இன்று வெள்ளிக்கிழமை என்பதை ஒலி பெருக்கியில், டி. எம்.எஸையும் எஸ்.பி.பி யையும் ஒலிக்க விட்டு அறிவித்துக் கொண்டிருந்தது. 

 

கோவிலுக்கு வந்த அபர்ணா, பிரசன்னா இருவரும் அவசர அவசரமாக கால் கழுவி விட்டு கோவில் உள்ளே நேரே கொடி மரத்துக்கு கீழே வீற்றிருந்த பிள்ளையாரிடம் சென்று மெல்லிய குரலில் பேசினர். 

 

“பிள்ளையாரப்பா! இண்டைக்கு நாங்க கொஞ்சம் லேட். வெள்ளிக்கிழம தானே! நாலு வீடு ஏறி இறங்கி..” 

 

“என்னக்கா! பிச்சை எடுக்க போன மாதிரி சொல்றா?” 

 

“ஷ்ஷூ… எல்லாரும் இருந்த பூவ ஆஞ்சதால நாங்க நாலு வீடு ஏறி இறங்கி தேடி அலய வேண்டி ஆகிட்டு தானே? அதச் சொன்னன்!”

 

“ஆஹ்!” 

 

“பிரசன்னா கொஞ்சம் சோம்பல் பட்டதால காலைல எழுப்பவும் லேட் “

 

“அக்கா! நான் சோம்பல் பட்டா இன்டைக்கு ஸ்கூல் லீவு தானே எண்டு இன்னும் கொஞ்சம் நித்திர கொன்றுப்பன். காலைல நேரத்துக்கு எழும்பி உன்னோட வந்து பூ ஆய ஹெல்ப் பண்ணிருக்க மாட்டன். இதே ஐஸ்வர்யா அக்கா செய்வாளா?”

 

“சரி சரி.. இவ்ளோ பூவையும் ம‌திய பூசைக்கு முதல் கோர்த்து கட்டி முடிக்கனும்”

 

“ஏற்கனவே லேட், கதச்சிட்டு இருக்காம வேலைய தொடங்குவம்”

என்று வசந்த மண்டபத்தில் நவக்கிரகங்களுக்கு எதிரே பூ மாலை கட்டுவதற்காக பறித்து வந்த பூ, தட்டு, நூல் சகிதம் அக்கா தம்பி இருவரும் அமர்தனர். தினமும் ஒன்பது மணிக்கு முதல் பூசைக்கு மாலை சரம் தொடுத்து முடித்து விடுவது வழமை. இன்று இப்பவே நேரம் ஒன்பது முப்பது.. இனி உச்சிக்கால பூசையில் தான் அலங்கரிக்க சரியாக இருக்கும். 

 

அபர்ணா மாலை கோர்க்க பிரசன்னா பூக்களை களர் வாரியாக தெரிந்து எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தான். 

 

வெள்ளிக்கிழமை என்பதால் கோவிலில் கூட்டம் இருந்தது. சனங்கள் இயந்திரத் தனமாக கன்னத்தில் போட்டு, கோவிலை சுற்றி வந்து,  சூடம் கொளுத்தி வணங்கிச் சென்றனர். 

 

“அபர்ணாக்கா!” 

 

குரல் கேட்டு இருவரும் திரும்ப, பக்கத்து வீட்டு கீர்த்தி ஓடி வந்தாள். 

 

“ஏய் கீச்சு! கோவில்ல சத்தம் போட கூடா எண்டு தெரியாதா?” பிரசன்னா மிரட்டும் குரலில் சொல்ல, 

 

ஓட்டமாக வந்த கீர்த்தி பிரசன்னாவை கடந்து, அபர்ணாவை நெருங்கி அருகில் முட்டிக் கால் போட்டு அமர்ந்து, மிக முக்கியமான விஷயம் ஒன்றை சொல்லும் ஆயத்தத்தோடு  கை இரண்டையும் வாயில் குவித்து காதிற்காக குனிந்தாள். 

 

அவளுக்கு ஏற்றா போல அபர்ணாவும் குனிந்து காதைக் கொடுக்க, கிசுகிசுத்தாள் கீர்த்தி. 

 

தலையை நிமிர்த்தி அவளைப் பார்த்த அபர்ணா, ” உண்மையாவா” என்று உதட்டு அசைவில் கேட்க, 

 

“உண் மை யா” என்று அவளைப் போலவே உதட்டை அழுத்தமாக அசைத்து தலையை ஆட்டினாள். 

 

பார்த்திருந்த பிரசன்னா, “அக்கா! என்னவாம்?” என்றான்.

 

அபர்ணா பதில் சொல்லாமல் பாதியில் நின்ற சரத்தை சிரத்தையுடன் தொடுக்க ஆரம்பிக்க, 

 

“என்ன கீர்த்தி?” என்று கீர்த்தியை பார்த்து கேட்டான். 

 

“அபர்ணாக்காவ பொண் பாக்க வந்திருக்காங்க கார்ல” என்று ரகசியமாக சொல்லி சத்தமாக சிரித்தாள் கீர்த்தி. 

 

***

கனடா தலைநகர் ஒட்டாவாவில் வாகன உதிரிப்பாக ஏற்றுமதி நிறுவன மேலாளர்களில் ஒருவனான இலங்கையை சேர்ந்த இருபத்தெட்டு வயது திருக்குமரன் சிவராசா தன் தங்கை அனுப்பிய வாட்ஸ் ஆப் செய்தியை பார்த்து புன்னகைத்தான்!

 

‘அண்ணா! இந்த வருசம் நீ தப்பவே ஏலாது.

நாங்க உனக்குரிய ராணிய தேடி போறம்’ எ‌ன்று இருந்தது அந்த செய்தி! 

 

***

 

வந்திருந்தவர்கள் முன் டீபோவில்  டீ மற்றும் பிஸ்கட் ரேயை வைத்து “எடுங்க!” என்று புன்னகைத்து அம்மா பக்கத்தில் போய் நின்றாள் ஐஸ்வர்யா. 

 

சற்குணம் மனைவி வசந்தாவை ஏறிட்டார். 

 

“வேற பலகாரம் ஏதும் இல்லையா வசந்தா?” 

 

“இல்ல, அதெல்லாம் ஒண்டும் வேண்டாம். நாங்க வந்த விஷயத்த கதைப்‌பமே முதல்” புதியவர் இடையிட்டார். 

 

சரி என்பதாய் சற்குணம் அமைதியாக, அவர் மனைவி மகளும் ஆர்வமாக பார்த்தனர். 

 

“என்ர பேர் சிவராசா. இது வைஃப் ரஜனி, மகள் காருண்யா” என்று சுய அறிமுகம் செய்தவர், தொடர்ந்து 

 

“நான் றிடயட் மெத்ஸ் ரீச்சர். எங்கட ஒரே மகன்ட கல்யாண விஷயமா நாலு இடத்துல சொல்லி வச்சிருந்த நாங்கள், உங்கள பற்றி ரவி கதச்சவர்”

 

“ரவி….” என்று சற்குணம் இழுக்க இடைப் புகுந்த வசந்தா, 

 

“எங்கட நிர்மலாட மனுசன்.. அவரும் டீச்சர் உத்தியோகம்தானே” என்றார். 

 

“ஓம்.. மாஸ்டர் ரவி தான். ஜோக்ரபி படிப்பிகிறார் சிவானந்தா ஸ்கூல்ல”

 

“ஓம் ஓம்.. ரவி என்ர ஒண்டு விட்ட தங்கச்சி நிர்மலாட மாப்பிள” எ‌ன்ற வசந்தா சிவராசாக்கு சொல்வது போல கணவருக்கு விளக்கினார். புரிந்ததாய் தனக்கு தானே தலை ஆட்டிக் கொண்டார் சற்குணம். 

 

“என்ன எண்டால், மகன் கனடால இருக்கிறார். அவருக்கு இந்த வருசத்துக்கு உள்ள கல்யாணத்த முடிக்கணும் எண்டு விரும்பிறம். அவர் வார மாசம் நாட்டுக்கு மூண்டு மாச லீவுல வாரார். வெகேஷனுக்குள்ள கல்யாணம் செய்ற மாதிரி நல்ல பிள்ளையா பாத்து பேசி முடிச்சி வைக்க நினைக்கிறம். உங்கட பிள்ளைய பத்தி ரவி நல்ல விதமா கதைச்சவர். ஏன் காலத்த கடத்துவான் இண்டைக்கு நாங்கள் கோவிலுக்கு வெளிக்கிட்ட கையோட  உங்களை வந்து பாத்துட்டு போவம் எண்டு வைஃப் ஆசப்பட்டா. முருகன் கோவில் போய் வார வழியில இங்க வந்த நாங்கள்” என்று நீண்ட விளக்கம் கொடுத்தார் சிவராசா. 

 

“எங்கட சொந்த இடம், பூர்வீகம் எல்லாம் மட்டக்களப்பு தான். இவர் கல்முன. இப்ப ஒரு ஆறு மாசமா மகனுக்கு தீவிரமா பெண் பாக்குறம். நல்ல குடும்பமா பண்பாடான பிள்ளயா இருக்கனும் எண்டு பாத்து பாத்து, வார சம்பந்தங்கள் திருப்தியா அமையாம தட்டிப் போச்சுது. காசு பணத்தில எ‌ன்ன இருக்கு, நல்ல பிள்ளையா நல்ல குடும்பமா இருக்கணும். அது தானே முக்கியம். விசாரிச்சதுல உங்க குடும்பம் பத்தி மிச்சம் நல்ல மாதிரி சொன்னாங்கள், இப்ப இங்க வந்து பாத்ததில எனக்கு உங்கட மகள பாத்த உடனே பிடிச்சிட்டுது” என்று வாய் நிறைய பல்லாக பேசிய ரஜனி கண்கள் ஆர்வமாக, வசந்தா தோளின் பின்னால் பாதி மறைந்த மாதிரி பாவாடை சட்டையில் நின்றவளைப் பார்க்க,

‘ஓம்! எனக்கும்’ என்பது போல அவர்கள் மகள் காருண்யாவும்  ஐஸ்வர்யாவை பார்த்து சிரித்தாள். 

 

 

தொடரும்….

ஆதுரியாழ் ❤️ 

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்