
நட்சத்திரம் 9
அன்றைய விடியல் அவளுக்கு வித்தியாசமாகவே இருந்தது வழி தெரியாமல் குழந்தையாய் நின்றவளுக்குக் கேட்ட அசரிரீயின் குரல்.
அதன் குரலைக் கேட்கும் ஆவல் மகிழினியின் அடி நெஞ்சை துளைத்தெடுக்க அதனிடமே சரணடைய முடிவெடுத்தாள்.
‘தீரன் கிட்டே சொன்னால் விடமாட்டார் தெரியாமல் போய் வருவதே நல்லது’ அவளின் சிந்தை முழுக்க நிறைந்திருந்தது அந்தத் தேக்கு மரக்காடு.
‘அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர் யாராக இருக்கும், என் கனவிற்கான அர்த்தத்தைச் சொல்வதாய்ச் சொன்னதே, என் நலம் விரும்பியாகத் தான்’ எனத் தனக்குள்ளே பேசிய படி வெளியே வர,
“அம்மாடி மகிழ், நம்ம வீட்டுக்கு போயிட்டு வரேன் மா, நிறையத் துணி தைச்சு வச்சது வச்சபடியே கிடக்கும் அதெல்லாம் கஸ்டமர்கிட்ட கொடுத்துட்டு அந்தி சாயுறதுக்குள்ள வந்தறேன்” என விஜயலட்சுமி சொல்ல,
“அம்மா நானும் உன் கூட வரேனே, சேர்ந்து போகலாம்”
“சரிடி மகிழ் , மாப்பிளைக்கிட்ட நான் பேசுறேன், நல்ல புடவையா ஒண்ணு கட்டிக்கிட்டுக் கிளம்பு போற வழியில கோவிலுக்குப் போய்ட்டு அப்படியே வீட்டுக்குப் போகலாம்.
தீரனிடமும் பேசி சம்மதம் வாங்கி மகிழினியை அழைத்துச் சென்றார் விஜயலட்சுமி, என்ன தான் மருமகனின் சம்மதத்தோடு அவளை அழைத்துச் சென்றாலும் மருமகன் அடிகோடிட்டு சொன்ன வார்த்தை ‘மஹிய தனியா எங்கயும் விடாதீங்க’ எனச் சொல்லி அனுப்பிய மருமகனின் அக்கறை நினைத்துச் சந்தோசம் கொள்வதா ? இல்லை இப்படி ஒரு மருமகன் கிடைத்தும் தன் மகளின் நிலை நினைத்து வருத்தம் கொள்வதா? புரியாமல் விழித்தார் விஜயலட்சுமி.
அவர்கள் வீடு வந்து சேர்ந்த போது வீடு திறந்திருந்தது வெளி வாசலிலே கூட்டி பெருக்கிக் கோலம் போடப்பட்டிருக்க,
“அம்மா நம்ம வீடு திறந்திருக்கு, யார் உள்ளே இருப்பாங்க..?” என மகிழினி கேட்க,
நெற்றியில் குங்குமமும், இதழில் புன்னகையும் தவழ வந்து நின்றாள் பவுணு.
“மஹி! இந்த அக்காகிட்ட சொல்லாமல் கல்யாணம் பண்ணிகிட்ட இருந்தாலும் பரவாயில்லை வாழ்த்துகள்டி” எனப் பேசிய பவுணை பார்த்து சிரித்து வைத்தாள் மகிழினி.
“விஜிக்கா நீயில்லைன்ன நான் தெருவுல தான் நின்றிருந்திருக்கணும் எதோ உன் வூட்ட கொடுத்து உதவி செஞ்சியே நன்றிக்கா” என விஜயலட்சுமியை அவள் கட்டியணைக்க,
“அட கூறுகெட்டவளே நீயும் என் பொண்ணு மாதிரி தான்டி வா உள்ள போய்ப் பேசலாம்” என மூவரும் உள்ளே சென்றனர்.
“என்னடி உன் புள்ள தூங்குதா..?” என ஆடிக்கொண்டிருந்த தொட்டிலை பார்த்து விஜயலட்சுமி கேட்க,
அந்தத் தொட்டிலின் அசைவை பார்த்துக்கொண்டிருந்த,
மகிழினியின் விழியில் மருட்சியாய் காட்சிகள் விசாலமாய் விரிய அந்த ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருந்த பெண்ணவள் தனக்கு மேல் உள்ள ஆகாயத்தைப் பார்த்து சிரிக்க அந்த ஊஞ்சல் முடிவில்லா உயரத்தில் இருந்து தொங்கி கொண்டிருந்தது…, அவளின் புன்னகையும், ஆகாய நீல நிற விழிகளும் கன்னத்தில் அழகாய் விழுந்த குழியும் அந்தப் பெண் தன்னைப் போல் இருக்கிறாளே எனக் கனவில் மூழ்கியிருந்தவளை,
“மகிழ் இந்தா காப்பி, அண்ணார்ந்து விட்டத்தைப் பார்த்துக்கிட்டு இருக்க?” என மகிழினியின் தலையில் தட்டி காபியை கொடுத்தார் பவணு.
‘இது என்ன நான் முழிச்சுகிட்டே கனவு காண்றேனா? எனக்கு என்ன தான் ஆச்சு?’ என நினைத்தபடி தன் கைப்பையைத் திறந்து முடியவளின் மடியில் வந்து விழுந்தது அந்தப் புகைப்படம்.
விரைந்து மறுபடியும் கைப்பைக்குள் எடுத்து மறைத்தவளின் முகம் பதற்றத்தை தத்தெடுத்தது.
“அம்மா நான் என்னோட ரூம்ல போய்க் காபி குடிச்சிட்டு வரேன் “ எனச் சொல்லிவிட்டு கைப்பையும் காபியுமாக மாடிப் படிகளில் விறு விறுவென எறினாள் மகிழினி.
அவளின் அறை எப்படி விட்டு சென்றிருந்தாளோ அப்படியே இருந்தது அவளின் அறையைப் பவுண் சுத்தம் செய்வதோடு சரி அவளின் பொருள்களை யார் தொடுவதையும் அவள் விரும்பமாட்டாள் எனப் பவுண் அறிந்திருந்தார்.
தன் படுக்கையில் அமர்ந்தவள் அந்தப் புகைப்படங்களை எடுத்து ஒவ்வொன்றாய் தன் முன் வைத்தாள்.
அந்தப் புகைப்படங்களைப் பார்த்து மகிழினியின் கண்கள் அகல விரிந்தது அதில் ஷைனிங் ஸ்டார் லேக்கின் புகைப்படங்களும் அதைச் சுற்றியுள்ள இடங்களும் இருக்க,
அதில் நீர் நிரம்பியபடி முழு நிலவின் பிம்பம் நீரில் தெரிந்தபடி ஒரு புகைப்படமும்,
அம்மாவாசை இரவில் நட்சத்திரங்களின் பிம்பம் மட்டும் நீரில் தெரியும்படி அந்தப் புகைப்படம் இருக்க,
‘ தீரன் பௌர்ணமி அன்று மட்டும் தான் அதுல தண்ணி இருக்கும் சொன்னாரு இந்தப் போட்டோ பார்த்தா? அம்மாவாசை அப்போவும் இது நடக்கும் போல’ என யோசனையில் மூழ்கியிருந்தவளை,
“ஆமா அம்மாவாசை அன்றும் அங்கு நீர் நிரம்பி இருக்கும் ” என அசரீரி கேட்க புகைப்படத்தை விசிறியடித்த படி எழுந்து நின்றவளின் தேகம் நடுங்கியது.
“நக்ஷ்த்ரா.! ஐயம் கொள்ளாதே நான் தான் இருளின் ஒளி பேசுகிறேன்”
“நீ எப்படி .? எங்க வீட்டுக்கு வந்த.? அந்தக் காட்டை விட்டு உன்னால வெளிய வர முடியாதே..? அப்படித் தானே என்னிடம் சொன்ன”
“என்னை வர வைத்ததே நீ தானே நக்ஷ்த்ரா.” என அசரீரி குரல் கேட்டு திடுக்கிட்டாள்.
“இதெப்படி சாத்தியம், இங்க இருந்து போ..” எனத் தலையைப் பிடித்துக் கொண்டு கத்த ஆரம்பித்தாள் மகிழினி.
“இந்தப் புகைப்படத்தை நீ தொட்டதால் தான் என் குரல் உனக்குக் கேட்கிறது நக்ஷ்த்ரா” என்ற அசரீரியின் பதில் கேட்டு அதிர்ந்தவள்,
“நோ..” என பயத்தில் கத்தியவள் அந்தப் புகைப்படங்களைத் தீயிட்டு கொழுத்தினாள் , முகத்தில் வியர்வை வழிய பயந்து அமர்ந்திருந்தவளுக்கு மறுபடியும்,
“நக்ஷ்த்ரா நீ அனைத்து படங்களையும் கொளுத்தவில்லை,நான் சொல்வதை முதலில் கேள் ” என அசரீரி சொல்ல,
“நான் எதுக்கு நீ சொல்றதைக் கேட்கணும் ” எனப் பேசியவள் தவறிய புகைப்படத்தைத் தேட அது அவள் அமர்ந்திருந்த கட்டிலின் அடியில் இருந்தது.
வேகமாக அதை எடுத்துத் தரையில் போட்டவள் அதைக் கொளுத்த முற்பட,
“நக்ஷ்த்ரா.! உன் கனவுக்கான அர்த்தம் உனக்குத் தெரியப்படுத்தவே வந்தேன் “
“இல்லை உன்னை நான் நம்பத் தயாராக இல்லை, ஏற்கனவே குழப்பத்தில் இருக்கிறேன், என்னை விட்டுவிடு” என அவள் கெஞ்ச,
“சரி இதைச் சொன்னால் நம்புவாயா? துருவனை முதல் முறை கனவில் தானே பார்த்தாய்?”
“சரி நீ என்ன தான் என்னிடம் சொல்ல வர்ற சொல்லு?” என அவள் கேட்டாள்.
“இந்தப் புகைப்படத்தை ஆழ்ந்து பார் நான் சொல்ல வருவதை உன்னால் உணர முடியும்” எனச் சொல்ல அந்த மிஞ்சிய ஒரு புகைப்படத்தை மகிழினி உற்று பார்த்துக்கொண்டிருந்தாள்.
“என்னால் எதையும் உணர முடியலை நீயே சொல்லு , ஏன் வித்தியாசமான கனவுகள் என்னைத் தொல்லைச் செய்யுது?“ மகிழினி பதிலுக்காக காத்திருந்தாள்.
“உன்னால் என்னை அந்தப் புகைப்படத்தில் காண முடியவில்லையா?, மனதை ஒரு நிலை படுத்தி என்னைப் பார் நக்ஷத்ரா“ என அசரீரி சொல்ல,
“அய்யோ என்னால் உன்னை பார்க்க முடியலை, எதுக்காக என்னைத் தொந்தரவு செய்ற? சொல், இல்லைனா என்னை விட்டு விலகிச் போ, உன் அடையாளத்தை என்னிடம் காட்ட தைரியமில்லை. உன்னோட குரலை மட்டும் அடையாளமாகக் காட்டதே” எனத் திட்டியபடி அந்தப் புகைப்படத்தைக் கிழித்துப்போட அது தானாய் மறுபடியும் ஒட்டிய நொடியில் பதறியவள்,
கதவைத் திறந்துக்கொண்டு வெளியே வர வாசலில் தீரன் நிற்பதைப் பார்த்து நிம்மதியடைந்து பாய்ந்து அவன் மார்பில் அடைக்கலமாக, முற்பட வாக்கிங் ஸ்டிக்கை இடையில் வைத்து தடுத்தான்.
“ மஹி என்னோட கப் போர்டை எதுக்காக ஓப்பன் பண்ணின?” கேட்ட தீரன் முகத்தில் கோப அனல் தெறிக்க,
“ஆமாம், நான் எடுத்தேன் தீரன், இதிலிருந்து எனக்கு எதோ குரல் கேட்கிறது பயமா இருக்கு” எனச் சொல்லியவள் வாக்கிங் ஸ்டிக்கை கீழே தள்ளிவிட்டு அவனை இறுக அணைத்து அவன் மார்பில் ஒளிந்துக்கொண்டவளின் இதயத்தின் படபடப்பு தீரனின் செவிகளை எட்ட, மார்பில் புதைந்திருந்தவள் தன்னவன் முகத்தை அண்ணார்ந்துப் பார்த்து,
“துருவன்” என அவள் சொன்ன மாத்திரம் மிஞ்சியிருந்த புகைப்படமும் சுக்குநூறாய்ப் போக அவளின் சக்தி வெளிப்பட்டதை உணர்ந்தவனாய்,
“மஹி ஆர் யூ ஒகே” அவள் கன்னம் அவன் தட்ட,
“துருவன் மகிழினியை அதனிடமிருந்து தள்ளி வையுங்கள் ஆபத்து” என அவள் சொல்லி தன்னவனின் விழி பார்த்தாள்
“யார் நக்ஷத்ரா இந்தக் குரல் நீயா..?” எனக் கேட்டவனின் மடியில் கண் அயர்ந்தவளின் நீல நிற நயனங்கள் கருவிழியாய் மாறச் சிறிது நேரம் கழித்து மெல்ல கண் விழித்தாள் மகிழினி.
—
“தீரன் அந்தப் போட்டோஸ்ல “ என அவள் படுக்கையில் படுத்தபடி திணற,
“உனக்குக் கேட்ட குரல் உன்கிட்ட என்ன சொல்லுச்சு மஹி கொஞ்சம் தெளிவா சொல்லு” பொறுமையாய் அவன் கேட்க நடந்தவற்றை அவள் சொல்லவும்,
“மஹி நான் சொல்ற எதையும் நீ கேட்கவே மாட்டியா.? என்னோட கப்போர்ட டச் பண்ணாதேன்னு சொல்லியிருந்தேன்ல அப்பறம் ஏன் இப்படிப் பண்ணின, இப்போ உன்னால முக்கியமான மீட்டிங்கை விட்டுட்டு வந்து நிக்குறேன்” என அவன் கோபத்தில் கத்த,
“தீரன் நான் போட்டோஸ் உங்களைக் கேட்காம எடுத்தது தப்பு தான், மன்னிச்சிருங்க, இனி நான் உங்களுக்குத் தொந்தரவா இருக்கமாட்டேன் தீரன் உங்க முக்கியமான வேலையெல்லாம் இனி எனக்காக விட்டுட்டு வர தேவையில்லை” எனப் பேசியவளின் கண்களில் உவர் நீர் பெருக்கெடுக்க,
“ஏய் மஹி நான் அப்படி மீன் பண்ணலை” என அவன் பக்க நியாயத்தைச் சொல்ல வந்தவனைக் கரம் காட்டி தடுத்தவள்,
“தீரன்..! எனக்குத் தெரியாத எதோ ஒரு மர்மம் உங்களுக்குத் தெரிஞ்சிருக்கு, அதை எதுக்காக என்கிட்ட நீங்க மறைக்குறீங்கனு எனக்குத் தெரியலை ஆனால் என் ஒட்டுமொத்த குழப்பத்திற்கும் ஒரே பதில் நீங்க தான், அதை நான் கண்டுபிடிக்குறேன்” என்றவள் வீட்டின் வெளியே வந்து யாருக்கோ அழைப்பு விடுத்தபடி அவளின் ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்து புறப்பட்டாள்.
“மஹி ஜஸ்ட் லிசன், நான் சொல்றதைக் கொஞ்சம் கேளு”
“ப்ளீஸ் தீரன் ஜெஸ்ட் லிவ் மீ அலோன், எனக்குத் தனிமை வேணும்” எனச் சொல்லிய படி வேகமாகக் கிளம்பியிருந்தாள்.
—
சென்னை நகரின் பெரிய காபி ஷாப்பில் தலையில் கை வைத்து அமர்ந்திருந்தவள் “ஒன் கோல்ட் காபி ப்ளீஸ்” எனச் சொல்லிவிட்டு தலைக்கவிழ்ந்து தன் செல்ப்பேசியை ஆராய்ந்துக் கொண்டிருந்தாள்.
“மகிழ்” என்ற குரல் வந்த திசை நோக்கி திரும்பியவள் தன் கல்லூரி தோழி தாரிகாவை பார்த்து ஓடி அணைத்துக் கொண்டாள்.
“தாரி எப்படி இருக்க, உன்கிட்ட பேசணும் போல இருந்துச்சுடி அதான் கால் பண்ணிணேன்.”
“நான் இருக்குறதெல்லாம் இருக்கட்டும் மகிழ் உனக்கு என்னடி ஆச்சு, நான் அந்த நீயூஸ் சேனல்ல வந்த வீடியோ பார்த்து உனக்கு எத்தனை தடவ கால் பண்ணினேன் தெரியுமா, ஸ்விட்ச் ஆப்னு வந்தது ” என்ற தாரிகா பேசியபடி மகிழினி எதிரே அமர்ந்தாள்.
தாரிகா மகிழினியின் கல்லூரித் தோழி, அவளிடம் ஆலோசனை செய்யாமல் எந்தச் செயலிலும் இறங்கமாட்டாள் மகிழினி, மகிழினியைப் பற்றி முழுவதும் அறிந்த இன்னொரு ஜீவன் தாரிகா.
“தாரி அது வந்து” என வார்த்தைகளை உள்ளிழுத்தாள் மகிழினி.
“மகிழ் நான் உன்னை சந்தேகப் படலைடி, உன்னை பத்தி எனக்குத் தெரியாதா? காலேஜ்லையே நீ அமைதியான பொண்ணு, யார்கிட்டையும் பேசவே மாட்ட, எல்லா விசயத்துலையும் தயங்குறவ இப்படி ஒரு சூழ்நிலைல இருப்பன்னு, எதிர்பாக்கலைடி, உன்னோட ட்ரீம் ஆர்ஜே ஆகுறது தானே?, உன்ன அதுல டைவர்ட் பண்ணியிருந்திருக்காலமேடி “ எனத் தாரிகா பேச,
“எல்லாத்துக்கும் தொடக்கப் புள்ளி அந்த ஆர்ஜே ஆகுறதுல தான்டி ஸ்டார்ட் ஆச்சு, என் கனவுல மட்டும் வந்திட்டு இருந்தவரை அன்னக்கி தான் ப்ர்ஸ்ட் டைம் பார்த்தேன்டி, அதிலிருந்து தான் என் வாழ்க்கைப் பாதையே மாற ஆரம்பிச்சிருச்சு” என விரக்தியாய் மகிழினி சொல்ல,
“அதுதான் அவரையே கல்யாணம் பண்ணிக்கிட்ட, உனக்கு இந்தக் கல்யாணம் பிடிக்கலை தெளிவா தெரியுது ஆனா உனக்குப் பிடிச்ச மாதிரி மாத்த ட்ரை பண்ணாலமே மகிழ்” அவளின் நலம் விரும்பியாகத் தாரிகா சொன்னாள்.
“தாரி கல்யாணத்துக்கு அப்பறம் தான் பெரிய பிரச்சனையே ஸ்டார்ட் ஆச்சு, இதைச் சொன்ன நீ நம்புவியா எனக்குத் தெரியலைடி, ஆனா எனக்கு இப்போதைக்கு இருக்குற ஒரேயொரு ஹோப் நீ தான்”
“நான் உன்ன நம்புறேன்டி, உனக்கு என்னால உதவி பண்ண முடியுமா ட்ரை பண்ணுறேன்டி சொல்லு” எனப் பேசியவள் அவளுக்கான ஆர்டரை செய்தாள்.
“தாரி என்னாலேயே இதை நம்ப முடியல, சென்னைல யாருக்கும் தெரியாமல் ஒரு லேக் இருக்குடி, இது தான் அந்த லேக் “ எனக் கூகுள் மேப் எடுத்து காட்டினாள்.
“இந்த லேக்கும் உனக்கும் என்னடி சம்மந்தம், சென்னைல எத்தனையோ லேக் இருக்கு அதுல இதுவும் ஒண்ணு தானே மகிழ்?”
“இல்ல தாரி இந்த லேக்கிற்குத் தீரன் தான் என்னைக் கூட்டிட்டு போனாங்க, அவர் கூட்டிட்டு போன அன்றைக்கு அந்த லேக் நிரம்பி இருந்துச்சுப் போட்டிங் கூடப் போனோம், பட் மூணு நாளைக்கு அப்பறம் அதே லேக்கிற்குப் போனேன், அங்க ஒரு ட்ராப் தண்ணீர் கூட இல்லை, சொல்ல போனால் அங்க தண்ணி இருந்ததுக்கான அடையாளமே இல்லைடி” எனச் சொன்னவளின் கண்களில் குழப்பம் அப்பட்டமாகத் தெரிய,
“ஹே மகிழ், ஆர் யூ ஜோக்கிங்”
“நான் தான் சொன்னேன்ல தாரி நீ நம்ப மாட்டன்னு..”
“இல்ல மகிழ் அதெப்படி இது சாத்தியம், எப்படி த்ரீ டேஸ்ல தண்ணி இல்லாமல் போகும்?” தாரிகா சொல்லவும்,
“எனக்கும் அதே சந்தேகம் தான், தீரன்கிட்ட கேட்டதுக்குப் பௌர்ணமி அன்னைக்கு மட்டும் தான் அதுல தண்ணி வரும்னு சென்னாங்க”
“வாவ் இன்ட்டிரஸ்டிங், என்னையும் அங்கே கூட்டிட்டு போறியா நானும் பாக்கணும்.”
“இல்லை வேண்டாம்டி, அந்த இடமே அமானுஷ்யமா இருக்கு, அந்த லேக்கிட்ட எனக்கு மட்டும் ஒரு குரல் கேட்குது அந்தக் குரல் தீரன் எடுத்து வச்சிருந்த போட்டோஸ்லையும் கேட்குது.”
“எந்தப் போட்டோஸ், என்ன குரல் “ எனப் புரியாது விழித்தாள் தாரிகா பின் நடந்தவற்றைச் சொல்லி மகிழினி தெளிவுப்படுத்தினாள்.
“அம்மாவாசை அன்னக்கி நம்ம ரெண்டு பேரும் அந்த லேக் போறோம் அங்க நடக்குற அமானுஷ்யத்தைக் கண்டு பிடிக்குறோம்” எனத் தாரிகா உற்சாகமாய் சொன்னாள்.
“எனக்கு இந்த விசயத்துல ரெண்டு மனசவே இருக்குடி என்ன தான் நான் தீரனை வெறுத்தாலும், மனசு என்னமோ அவரை நம்பச் சொல்லுதுடி” என வருந்தியவளை பார்த்து கலங்கினாள் தாரிகா.
“மகிழ் எதாவது ப்ராப்ளம்னா தீரன்கிட்ட சொல்லிக்கலாம், நீ அம்மாவாசை அன்றைக்கு ரெடியா இரு நானும் வரேன்” என்றவள் தோழியைக் கட்டியணைத்து விடைபெற்றாள்.
விதியின் கரங்கள் வரைந்த கோட்டில்,
முன் பிறவித் தேடலில் காரிகையவள் தொலைந்து நிற்க…
கனவெனும் மாய வலையில் சிக்கி,
தனியாய் தவிக்கும் விழிநீரைத் துடைத்து..
அறியாத குரலின் அமானுஷ்யப் பாதையில்,
அவள் தடம்மாறித் தடுமாறும் வேளையில்…
இருள் சூழ்ந்த அந்த மர்மக் காட்டின் வழியே,
கரம்பற்றி மீட்டெடுப்பானா அவளின் தீரன்?!
முன் ஜென்ம தேடலில்
காரிகையிவள் தொலைய
மீட்டெடுப்பானா..?
மஹியின் தீரன்

